
சிவன் கோவிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கு, அணையும் நிலையில் இருந்த போது, கருவறையில் துள்ளித் குதித்து விளையாடிக் கொண்டிருந்த எலி, அந்த விளக்குத் திரி மேல் விழ, அது தூண்டப்பட்டு நன்றாக எரிந்தது. இதன் பலனாக, அந்த எலி, மறு பிறவியில், மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. மகாபலி, அசுரகுலத்தில் பிறந்தாலும், தர்ம நெறி தவறாமல் நல்லாட்சி நடத்தி வந்தார். அதனால், யாருக்கும் கிடைக்காத அரிய பலனாக, திருமாலின் திருவடி ஸ்பரிசம் பெறும் பேற்றை அடைந்தார்.
மகாபலி சக்கரவர்த்தி தேவர்களையும், தேவதைகளையும் ஒடுக்கி வைத்திருந்தார். இதனால், தேவதைகள் அவரைக் கொன்று விட்டனர்.
ஒருவனுக்கு, குரு அருள் இருந்தால், எத்தகைய சூழலிலும் விடுபட்டு விடுவான் என்கிறது சாஸ்திரம். மகாபலியின் குருவான சுக்ராச்சாரியார் அதீத சக்தி படைத்தவர். இறந்தவர்களை எழ வைக்கும், "ம்ருத ஸஞ்ஜீவினி' என்ற, மந்திரம் கற்றவர். இம்மந்திரத்தை கற்பது எளிதான காரியம் அல்ல. பத்தாயிரம் கோடி தடவை, <திரும்பத் திரும்ப, மூச்சு விடாமல், உச்சரிக்க வேண்டும். சுக்ராச்சாரியார், அதைக் கற்க வேண்டுமென, வைராக்கியம் கொண்டு, இம்மந்திரத்தை கற்றுத் தேர்ந்தார்.
இக்கதை மூலம், மாணவர்கள் அறிய வேண்டியது, என்னவென்றால், "நீங்கள் உங்கள் பாடங்களைக் கஷ்டம் என நினைத்தால், அது கஷ்டமாகத்தான் இருக்கும். எவ்வளவு சிரமமான பாடமாயினும், அதைக் கற்றே ஆகவேண்டும் என, வைராக்கியம் எடுத்து விட்டால், அது சுலபமாகி விடும்' என்பதை, நினைவில் வைக்க வேண்டும்.
சுக்ராச்சாரியார் தன் மந்திர சக்தியால், தன் மாணவனான மகாபலியை திரும்பவும் எழுப்பி விட்டார். இந்த மந்திர சக்தியால் திரும்பவும் எழுப்பப்படுபவர்கள், அதீத சக்தி பெறுவார்கள். தேவகுருவான பிரகஸ்பதிக்கே கூட இந்த மந்திரம் தெரியாது. அவர் தேவர்களிடம், "ஒருவன் தன் குருவை மதித்து நடந்து, அவரது அருளாசியைப் பெற்று விட்டால், அவனை முறியடிக்க உலகில் எந்த சக்தியாலும் முடியாது. எனவே, மகாபலியை வெல்லுவதற்கான காலம் வரும் வரை பொறுத்திருங்கள்' என்று, சொல்லி விட்டார்.
தேவர்களின் தாயான அதிதி, தன் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவலத்தை போக்க, விஷ்ணுவை நினைத்து, "பயோ விரதம்' என்ற நோன்பை துவக்கினாள். இவ்விரதம், துவிதியை திதி முதல் ஏகாதசி திதி வரை பத்து நாட்கள் அனுஷ்டிப்பர். குழந்தை இல்லாதோர் இவ்விரதத்தை கடைபிடித்து, விஷ்ணுவிற்கு பால் சாதம் நிவேதனம் செய்தால், நற் குழந்தைகள் பிறப்பர் என்பது ஐதீகம்.
அதிதியின் விரதத்தை ஏற்ற திருமால், திருவோண நட்சத்திரமும், துவாதசி திதியும் கூடிய நன்னாளில், அவளுக்கு மகனாகப் பிறந்தார்.
"குறள்' வடிவெடுத்த திருமால், மகாபலி, உலகை ஆளும் எண்ணத்தில், யாகம் நடத்திய நர்மதை நதிக்கரைக்குச் சென்றார். குறள் என்றால், குறுகியது. இதனால் தான் வள்ளுவர் தன் நூலுக்கு, திருக்குறள் என்று பெயர் வைத்தார். திருமாலுக்கு, "திருக்குறளப்பன்' என்ற பெயரும் உண்டு.
சுக்ராச்சாரியார், திருமாலை அடையாளம் கண்டு கொண்டார். அதனால், மகாபலியிடம், திருமால் கேட்ட, மூன்றடி நிலத்தைக் கொடுக்க வேண்டாம் என்று, எச்சரித்தார். "விநாச காலே விபரீத புத்தி' என்பர்.
ஒருவனுக்கு கெட்ட நேரம் வந்து விட்டால், புத்தி பேதலித்துப் போகும். மகாபலி, குருவின் சொல்லை மறுத்து, திருமால் கேட்ட வரத்தை கொடுத்து விட்டார். குருவின் சொல்லை மதிக்காததால், அவர் நினைத்தது நடக்காமல் போனது. ஆனால், அவரது நற்செயல்களின் பலன் அவரைக் காப்பாற்றின. திருமாலால் ஆட்கொள்ளப்பட்டு, பாதாள லோகம் சென்றார்.
வாமன அவதாரம் மிக உயர்ந்த அவதாரம். "ஏலாப்பொய்கள் உரைப்பானை' என்று, கிருஷ்ணனைக் குறித்து பாடிய ஆண்டாள், வாமனரை, "ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று, பாடினாள். ஏனெனில், மற்ற அவதாரங்களில் பெருமாள் அசுரர்களையும், தர்மம் தவறியவர்களையும் கொன்றார். வாமன அவதாரத்தில் அவர் மகாபலியைக் கொல்லவில்லை, மாறாக ஆட்கொண்டார். அதனால், அவரை, <உத்தமன் என பாராட்டுகிறாள்.
ஆம்...பகைவர்களாக இருந்தாலும், அவர்களையும் வாழ்த்தும் உயர்ந்த உள்ளத்தை, திருவோணத் திருநாளில், மகாவிஷ்ணுவிடம் கேட்டுப் பெறுவோம்.
***
தி. செல்லப்பா