BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 சுப்பிரமணிய பாரதி

Go down 
AuthorMessage
Fathima

avatar

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 33
Location : srilanka

PostSubject: சுப்பிரமணிய பாரதி   Fri Mar 26, 2010 1:35 pm

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.


வேறு பெயர்(கள்): பாரதியார்
பிறப்பு: டிசம்பர் 11 1882
பிறந்த இடம்: எட்டயபுரம், மதராஸ், இந்தியா
இறப்பு: செப்டம்பர் 11 1921 (அகவை 38)
இறந்த இடம்: மதராஸ், இந்தியா


வாழ்க்கைக் குறிப்பு
***************

1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

இலக்கியப் பணி
************

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி
தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுணைந்த கவிஞாயிறு. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
பாஞ்சாலி சபதம்
ஆகியன அவர் படைப்புகளில் சில.


பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்
***************************************

பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார் .


தேசிய கவி
*********

விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கினைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்
******************

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.


பெண்ணுரிமைப் போராளி
*******************

தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகாகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.


பாஞ்சாலி சபதம்
*************

இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின்
பாஞ்சாலி சப
தம் விளங்குகிறதுTHANKS:


WIKIPIDIA


Last edited by Fathima on Sun May 30, 2010 8:50 am; edited 1 time in total
Back to top Go down
View user profile
Fathima

avatar

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 33
Location : srilanka

PostSubject: பாரதி பாடிய மூன்று காதல் பாடல்   Sat Apr 17, 2010 4:12 pm

பாரதியார் பாடிய சக்திப் பாடல்கள் காலத்தால் அழியாதவை. சக்தியின் புகழை, பெருமையைப் பேசுபவை! அவர் பாடிய மூன்று காதல் பாடல் பிறந்த கதையையும், நவராத்திரி பற்றிய அவரது அற்புதமான கருத்துக்களையும் இங்கே காணலாம்:

சர் ஜான் உட்ராபின் சக்தி பற்றிய வியப்பு

சக்தி பற்றியும் சாக்தம் பற்றியும் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதிய சர் ஜான் உட்ராப் வியந்த வார்த்தையே சக்திதான்!

"ஆழ்ந்த பொருள் படைத்த இந்த சமஸ்கிருத வார்த்தையை விட வேறொரு வார்த்தை எந்த மொழியிலும் இல்லை" (There is no word of a wider content in any language than this Sanskrit term, meaning “Power”) என்று கூறி வியந்தார் அவர்.

பாரதியாரின் கடற்கரை சந்திப்பு

ஆங்கிலேய அரசுக்கு எதிராக விடுதலை கோஷம் எழுப்பிய தேசபக்தர்கள் அடைக்கலமாக புதுச்சேரி வந்து குடியேறிய போது நடந்த ஒரு சம்பவத்தை தேசபக்தர் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் புதல்வியார் யதுகிரி அம்மாள் தனது 'பாரதி நினைவுகள்' என்ற நூலில் குறிப்பிடுகிறார். அது பாரதியின் மூவர் காதல் பாடல் தோன்றிய வரலாறு!

புதுச்சேரியில் வியாழக்கிழமை தோறும் கடற்கரையில் துய்ப்ளேக்ஸ் சிலை முன் பாண்டு வாத்தியம் வாசிப்பது வழக்கம். இதைக் கேட்ட பாரதியாரின் புதல்வி தங்கம்மாள் "இப்படி நாம் பாடினால் நன்றாக இருக்குமா?" என்று பாரதியாரிடம் கேட்டார். பாரதியார் "பாடும் வகையில் பாடினால் நன்றாக இருக்கும்" என்றார்.

மூன்று வேண்டுகோள்கள்

பின்னர் நடந்த உரையாடலை யதுகிரி அம்மாள் விவரிக்கிறார்:

தங்கம்மாள் : நாளைக்கு ஸரஸ்வதி பண்டிகை. ஸரஸ்வதியின் மேல் இந்த மெட்டில் ஒரு பாட்டுப் பாடு அப்பா!

பாரதி : ஆகட்டும்!

பாண்டுக்காரர்கள் முதல் பாட்டு முடிந்து வேறு பாட்டு எடுத்தார்கள்.

யதுகிரி : இந்த மெட்டில் லக்ஷிமியைப் பாடினால் நன்றாக இருக்கும்.

பாரதி : யதுகிரி, நீ சொன்னபடி இந்த மெட்டில் லக்ஷ்மியின் மேல் பாடுகிறேன்.

செல்லம்மாள் : கல்கத்தா, காசி அங்கெல்லாம் துர் கா பூஜை செய்கிறார்கள். சக்தியின் மேல் பாடினால் நம் கஷ்டம் விடியும்.

அப்பொழுது கீழ் ஸ்தாயியில் நான்கடி, மேல் ஸ்தாயியில் நான்கடியாகப் பாண்டு வாசித்தார்கள்.

பாரதி : செல்லம்மா, நீ சொன்னதும் சரி. தங்கம்மா ஸரஸ்வதியின் மேல் பாட்டுக் கேட்டாள். யதுகிரி லக்ஷ்மியின் மேல் கேட்டாள். நீ காளியின் மேல் கேட்டாய். இங்கு மூன்று பாட்டு பாடியிருக்கிறார்கள். நாளைக்கு மூன்று பேர் பேரிலும் பாடிக் காண்பிக்கிறேன்.

தங்கம்மா: மூன்று மெட்டுகளையும் எப்படி அப்பா பாடுவாய்?

பாரதி : முதலில் ஸரஸ்வதி, இரண்டாவது லக்ஷ்மி, மூன்றாவது காளி.. மூன்று பெயர்களையும் மூன்று ராகங்களில் பாடுவது.

தங்கம்மா : நீ பாடி இருப்பதெல்லாம் நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, ஆனந்தக் களிப்பு முதலிய ஆண்டிகள் பாடும் மெட்டில் பாடியிருக்கிறாய். பாட்டு ஒரே மெட்டில் வேண்டியதில்லை.

பாரதி : உங்களுக்கு எந்த மெட்டு வேண்டுமோ அந்த மெட்டில் பாடிக் கொடுக்கிறேன்.

தங்கம்மா : இந்த பாண்டு மெட்டுகள் எங்களுக்குப் பிடித்ததால் கேட்கிறோம்.

மறுநாள் மூல நட்சத்திரம். ஸரஸ்வதி பண்டிகையைச் சிலர் மூல நட்சத்திரத்திலும் சிலர் மகா நவமியிலும் செய்வது வழக்கம். எங்களுக்கு மகா நவமி. சாஸ்திரத்திற்கு இரண்டு பொம்மைகளைக் கொலுவாக வைத்திருந்தோம். என் தங்கைகளும் நானும் பாட்டுப் பாடி ஹாரதி எடுக்கும் சமயம் பாரதியார் வந்தார்.

"யதுகிரி, உன் கொலுவுக்கு நான் புதிய பாட்டுப் பாடுகிறேன். அப்புறம் உன் சாஸ்திரம் நடக்கட்டும்" என்றார்.

எல்லோரும் வரிசையாக உட்கார்ந்தோம். பாரதியார் முதல் நாள் சொன்னபடி ஸரஸ்வதி, லக்ஷ்மி, காளி மூவர் பேரிலும் பாடிய 'பிள்ளைப் பிராயத்திலே' என்று தொடங்கும் மூன்று காதல் என்கிற பாட்டை ஸரஸ்வதி மனோஹரி, ஸ்ரீராகம், புன்னாகவராளி ஆகிய மூன்று ராகங்களில் பாடினார். எங்களுக்கு மெய் சிலிர்த்தது.

இந்தப் பாட்டில் பாரதி தன் வாழ்க்கையையும் சிறிது சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.

நலம் தரும் பக்திப் பாடல்

தங்கம்மாள், யதுகிரி, செல்லம்மாள் பாரதி ஆகிய மூவரின் வேண்டுகோளால் தமிழுக்குக் கிடைத்த அற்புதமான நவராத்திரிப் பாடல் ஆழ்ந்த பொருளைக் கொண்டுள்ளது.

"அன்னை வடிவமடா! -இவள்
ஆதி பராசக்தி தேவியடா! - இவள்
இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
யாவும் உலகினில் வசப்பட்டு போமடா!

செல்வங்கள் பொங்கி வரும் - நல்ல
தெள்ளறிவெய்தி நலம் பல சார்ந்திடும்" என்று பாடி

"அத்தனை கோடிப் பொருளின் உள்ளே இருந்து வில்லை அசைப்பவளின்" பெருமையை உலகிற்கு அறிவித்தார்!

பாரதியாரின் சக்தி பற்றிய பாடல்கள் நவராத்திரிக்காக அனைவருக்கும் - குறிப்பாகப் பெண்களுக்குக் கிடைத்த பெரும் பரிசுகள்!

கும்பகோணம் சங்கர மடத்திலிருந்து நவராத்திரி பற்றி விரிவாக வந்த செய்தியை இரு கட்டுரைகளில் அலசிய பாரதியார், முத்தாய்ப்பாக, "விக்ரமாதித்யன் வணங்கிய தெய்வம்; காளிதாஸனுக்குக் கவிதை காட்டிய தெய்வம்; பாரத நாட்டு மஹாஜனங்கள் இன்னும் தலைமையாகக் கொண்டாடும் தெய்வம்; ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷ்மி தேவதை; சிவபிரானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி; பிரம்மதேவன் தலைவியாகிய ஸரஸ்வதி, மூன்று மூர்த்திகள்; மூன்று வடிவங்கள்; பொருள் ஒன்று; அதன் சக்தி ஒன்று; பொருளும் அதன் சக்தியும் ஒன்றே. இங்ஙனம் ஒன்றாக விளங்கும் சக்தி என்ற தெய்வத்தை ஹிந்துக்கள் உபாஸனை செய்வதற்கு விசேஷ பருவமாக இந்த நவராத்திரியின் காலத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறி அதன் காரணத்தையும் விளக்குகிறார்.

சக்தி என்ன தருவாள்?

சக்தியை தியானத்தில் நிறுத்துவதால், நாவிலே புகழ்வதால், செய்கையில் பின்பற்றுவதால் என்ன கிடைக்கும்?

பாரதியாரே இந்தக் கேள்விக்கான விடையைக் கூறுகிறார்:

"நமது மதி தெய்வ மதியாகின்றது. நமது நாவு புதிய வலிமையும் மஹிமையும் பெறுகின்றது. நமது செய்வினை தர்மமாகின்றது. ஒரே வார்த்தையாகச் சொன்னால், சக்தியை வேண்டினால் சக்தி கிடைக்கும்."

"நம்பினோர் கெடுவதில்லை நான்குமறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்"
- மகாகவி பாரதியார்[b]
Back to top Go down
View user profile
Fathima

avatar

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 33
Location : srilanka

PostSubject: பாரதி கையில் விலங்கு!   Sat Apr 17, 2010 4:14 pm

”என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?”

பாரதியின் இந்த வரிகள் அவருடைய மன வேதனையையும், ஆதங்கத்தையும், எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கின்றன.
அன்னை கை விலங்குகள் எப்படி, எப்பொழுது போனது என்பது சரித்திரம்!

பாரதி கையில் விலங்கா? எப்பொழுது?ஏன்?

ஆங்கிலேயர்கள் கையில் அக்காலத்து விடுதலை இயக்கப் போராட்ட வீரர்கள் கிடைத்துவிட்டால், எந்த அளவுக்குக் கொடுமைப் படுத்தி, ஏளனப்படுத்தி, வேதனைப் படுத்தி மகிழ்வடைந்தனர் என்பதைக் கண்டவர்கள் கூறியும், அனுபவித்தவர்கள் விளக்கியும், புத்தகங்களில் படித்தும் நாம் அறிந்திருக்கிறோம்.

மகாகவி பாரதி சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆற்றிய தொண்டை, நாடு நன்கறியும்.

1918ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20ஆம் நாள் கடலூர் வந்த அன்று கைது செய்யப்பட்டு, டிசம்பர் 14ஆம் நாள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப் பட்டார் என்பது அவர்தம் வரலாற்றில் காண்கிறோம். அப்பொழுது பாரதி அவர்களின் கையில் விலங்கிட்டுக் கைது செய்தார்களா இல்லையா என்பதை நாம் அறியோம்.அப்படியெனில் இந்தக் கட்டுரையின் தலைப்பு எதைக் குறிக்கிறது என்று வியப்பு ஏற்படுத்துகிறது அல்லவா!

பாரதி கையில் விலங்கா? ஆம் அவர் கையில் பிடித்த பேனாவில் எந்த அளவிற்கு விலங்கினங்கள் கையாளப் பட்டன என்பதைக் கண்டு தெளிதலே இக்கட்டுரையின் நோக்கம்! பாரதியின் கதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை, பேச்சுக்களை அவர்தம் ஒவ்வொரு தாசரும், சீடரும், மாணவரும், வெவ்வேறு கோணத்தில் கண்டு, ஆராய்ந்து, அனுபவித்து, எழுதி,பேசி, விவாதித்து வருகின்றனர் என்பதைக் கண்டு வருகிறோம். அந்தக் கவியரசனின் உயிர்ப்பறவை சிறகு விரித்து 88 ஆண்டுகள் கழிந்தும் அவரது தாக்கத்தை இன்றும் உணர்ந்து வருகிறோம். ஏனெனில் அவரது படைப்புக்கள் சாகா வரம் பெற்றன. அவரது எழுத்துக்கு என்றும் உயிர் உண்டு. அவர்தம் கருத்துக்கள் அமரத்துவம் பெற்றவை. எக்காலும் உண்மை என்று உணரப் பட்டவை!

பாரதியை மகாகவியாகத்தான் பலர் அறிவார்கள். கவிதை இலக்கியத்தில் புதுப்பாதைகளை வகுத்தவர் என்பதைப் பலர் அனுபவித்ததுண்டு. அத்தகு மேதை கட்டுரை இலக்கியத்திலும், கதைப் படைப்பிலும் வியப்பூட்டும் சாதனைகளைப் படைத்தவர் என்பது பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாகும்.

பாரதி கவிதைகளை தேசிய கீதங்கள், தோத்திரப் பாடல்கள், ஞானப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள், சுயசரிதை, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, வசன கவிதைகள் என வகுத்திருப்பதைப் போன்றே, அவரது கட்டுரை களையும் தேசியம், தத்துவம், பெரியோர்கள், பெண்ணியம், கல்வி, சாதியம், கலையும் கவிதையும், தமிழும் தமிழ் நாடும், பொருளும் தொழிலும், மலையாள மொழியும், மலையாளிகளும், சிந்தனைச் சித்திரங்கள் என்று பகுத்து திருமிகு ஜயகாந்தன், சிற்பி பாலசுப்பிரமணியன் ஆகியவர்கள் மதிப்பு மிகு செல்வத்தை நமக்கு வழங்கியுள்ளனர்.அவற்றை ஆவலோடு படிப்பவர்கள் பாரதியின் பல்நோக்குப் பரிமாணங்களையும், சிந்தனைகளையும் தேனென எண்ணிப் பருகித் துய்ப்பவர்கள்!

பாரதிப் பெருமகனார் இயற்கையை அணு அணுவாகச் சுவைத்தவர். கவிதையைக் கட்டுரை வடிவில் வடித்தவர். யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்ற நினைவில் நமக்கெல்லாம் மலை மலையாய் விட்டுச் சென்றவர்.

”எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்
மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி”!

என்று தன்னைச் சித்தராக அறிமுகப் படுத்திக் கொண்ட பாரதி இயற்கையின் படைப்புக்கள் அனைத்திலும் இறைவனைக் கண்டார். மனிதன், மிருகம், பறவை, புல், பூண்டு , காற்று, மழை, வெய்யில் அனைத்திலும் இறைவன் பெருமையைக் கண்டார்!

”இனி” என்ற ஒரு கட்டுரையில் இவ்வாறு எழுதினார்:
“கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.”

“உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்”

எனவே, பாரதியார் இயற்கையை ரசித்தார்; இறைவனைத் துதித்தார்; விலங்கினத்தை நேசித்தார்; தமது கவிதைகளிலும், கட்டுரைகளிலும் நூற்றுக் கணக்கில் விலங்கினத்தையும் பறவையினத்தையும் கையாண்டார்.

பறவைகளின் வாழ்க்கையையும், விலங்குகளின் குணங்களையும், நடப்புகளையும் கூர்ந்து நோக்கினார்; அவற்றையெல்லாம் நம் கண்முன்னர் கொண்டு வந்து நிறுத்தினார். அவர் இரசித்த இயற்கையை நம்மையும் இரசிக்கச் செய்தார்!. கவிதைகளிலும், கட்டுரைகளிலும் விலங்கினத்தைத் தனியாகவும், கூட்டாகவும் நம் கற்பனையில் நிழலாடச் செய்தார்! அவற்றின் களி நடனங்களை நம்மையும் களிக்கச் செய்தார்!

நாமறிந்த பாரதியின் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களில் 237 முறை விலங்கு, பறவைகளைத் தனிதனியாகக் குறிப்பிடுகிறார்; 38 இடங்களில் பொதுவாகக் கூட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்! அவற்றின் உருவத்தை விவரிக்கின்றார்! அவற்றின் குணநலன்களைத் தக்க இடத்தில், தக்க தருணத்தில், தக்க முறையில் நம் கண் முன்னர் நிறுத்துகிறார்! நம்மை வியக்கவைக்கிறார்!

அவர் குறிக்கும் பறவை, விலங்குகளின் பட்டியலை இங்கே பாருங்களேன்:

அணில், அன்னம்
ஆடு, ஆமை, ஆந்தை,
எருமை
ஏறு
கட்டெறும்பு, கரடி,கலைமான், கழுதை, களிறு
காக்கை
கிளி,
குதிரை, குயில், குரங்கு, குருவி
கூகை
கோழி
சிங்கம், சிட்டுக் குருவி, சிற்றெறும்பு
சேவல்
தவளை
திமிங்கிலம்
தேள்
நரி,
நாகம், நாய்
பசு, பரி, பருந்து, பன்றி
பாம்பு
புலி, புளிமான்
பூனை
மயில், மாடு, மான்
மீன்
முதலை, முயல்
யானை
வண்டு

கூட்டம் கூட்டமாகக் குறிப்பிடப்படுவன:

ஊர்வன
பறவைகள்
புட்கள், புள், புள்ளினம்
பூச்சிகள்
மிருகங்கள்
விலங்குகள்!

இவற்றுள் காக்கை, கிளி, குயில், சிங்கம், நாய், பாம்பு, மாடு, யானை ஆகியவை பாரதிக்கு மிகவும் நெருங்கிய பறவைகள், மிருகங்கள் போலும்!

எப்படி? இவை ஒவ்வொன்றையும் பத்து இடங்களுக்கு மேல் அவரது கவிதைகளில் பயன்படுத்தியுள்ளார்! அதிகமாக 19 முறை கிளி,பாம்பு ஆகியவற்றையும் , குறைந்த அளவில் 11 முறை காக்கை, மாடு இவற்றையும் பயன்படுத்தியுள்ளார்! மற்றவற்றை ஒன்று முதல் ஒன்பது முறை குறிப்பிட்டுள்ளார்!

விலங்குகள் என்று 10 முறையும் பறவைகள் என்று 13 முறையும் பொதுவாகப் பயன் படுத்தியுள்ளார்! ஊர்வன, புட்கள், புழு,புள், புள்ளினம், பூச்சிகள், மிருகங்கள் என்று பொதுவாக ஒன்று முதல் 5 முறையும் குறிப்பிட்டுள்ளார்!

கிளிவிடு தூது, கிளிப்பாட்டு, விடுதலை சிட்டுக் குருவி, குயில், குயிலின் பாட்டு, குயிலின் காதற்கதை, குயிலும் குரங்கும், குயிலும் மாடும், குயிலின் பூர்வ ஜன்மக் கதை என்று பாடல் தலைப்புக்களில் கவிதை இயற்றியுள்ளது நோக்கற்குறியது!

“சிட்டுக்குருவி” பாரதியைக் கவர்ந்த பறவைகளுள் தனியிடம் பெற்றுள்ளது!. இத்தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகளைப் படித்தால் அப்பறவையை எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளார் என்பதும், அதிலிருந்து எவ்வாறு சில தத்துவங்களை விரித்துரைக்கிறார் என்பதும் தெளிவாகும். இதில் அவர் இயற்றிய கவிதையினின்றும் சில கருத்துக்களைக் கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

”மகாகவி பாரதியார் கட்டுரைகள்” என்ற புத்தகத்தின் தொகுப்பாசிரியர்களான திரு ஜயகாந்தன், சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் எவ்வளவு சிறப்பாக இக்கட்டுரைக்கு அறிமுகம் தருகிறார்கள் பாருங்கள்!

“சிட்டுக்குருவி குறித்த பாரதியாரின் கட்டுரை பல காரணங்களுக்காகவும் பாராட்டுப் பெற்ற ஒன்று. பாரதியாரின் உணர்ச்சித் துணுக்குகளாகத் திகழும் தமிழ் வாக்கியங்களின் உன்னதமான அழகை இந்தக் கட்டுரையில் காணலாம். அவர் கவிதையைக் கூட வெல்லுகின்றன இந்த உரைநடை மின்னல் துண்டுகள்.

’சிறிய தானியம்போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகியப் பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்......இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம்.’

விந்தை அழகு கொஞ்சும் இந்த அருமையான கட்டுரையின் அடுத்த சிறப்பு, குருவியின் வாழ்வில் காணப்படும் சுதந்தரத்தையும், மனிதத் துயரங்களையும் ஒப்பிடுகிற சமுதாயப் பார்வை.

மூன்றாவதாகப் பாரதியாரின் புதுமை செழித்த உள்ளம் சிட்டுக்குருவியிடம் காணுகிறது ஆத்மதத்துவம். விடு, விடு என்று விடுதலையை, ஆன்ம விடுதலையை நினைவூட்டுகிறதாம் சிட்டுக்குருவி. அழகும் அறிவும் ஒன்றையொன்று தழுவிக் கொள்கிறபோது பட்டுத்தெறிக்கிறது பாரதியாரின் தத்துவச் சிந்தனை. சிட்டுக் குருவியைப் போலவே சிறிய கட்டுரை. ஆனால் அது பறக்கிற வானம் போலப் பெரிய தத்துவம்!”

”விட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியை”ப் போல தாமும், விடுதலையாகி வாழவேண்டும் என்று விரும்புகிறார். இந்த நாடும் தானே!

”சிட்டுக் குருவி பறந்து செல்வதைப் பார்த்து எனக்கு அடிக்கடி பொறாமையுண்டாகும்” என்கிறார்! தெய்வத்தினிடம் வேண்டுகிறார்: “தெய்வமே! எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்கமாட்டாயா? பாழ்பட்ட மனிதர் கூட்டத்தையும், அதன் கட்டுகளையும், நோய்களையும், துன்பங்களையும், பொய்களையும் உதறி எறிந்து விட்டு, நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா?ஆஹா! எத்தனை தேசங்கள் பார்க்கலாம்! எத்தனை நாடுகள், எத்தனை பூக்கள்! எத்தனை மலைகள், எத்தனை சுனைகள், எத்தனை அருவிகள், எத்தனை, எத்தனை கடல் வெளிகள்! வெயில், மழை, காற்று, பனி இவையெல்லாம் என் உடம்புக்கு நன்றாய் வழக்கப்பட்டு இவற்றால் நோய்கள் உண்டாகாமல் எப்போதும் இன்ப உணர்ச்சிகளே உண்டாகும் இந்த நிலை எனக்கு அருள் புரியலாகாதா? குருவிக்குப் பேசத் தெரியும்; பொய் சொல்லத்தெரியாது. குருவியிலே ஆண் பெண் உண்டு; தீராத கொடுமைகள் இல்லை; குருவிக்கு வீடு உண்டு, தீர்வை கிடையாது. நாயகனில்லை; சேவகமில்லை!”

எப்படியிருக்கிறது பாரதியின் பேராசை!

”இந்தக் குருவி என்ன சொல்கிறது?” என்று ஒரு கேள்வியை எழுப்பி, பதிலையும் சொல்லும் பாங்கைப் பாருங்கள்!

”விடு” “விடு” “விடு” என்று கத்துகிறது. இஃது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போலிருக்கிறது. விடு, விடு, விடு- தொழிலை விடாதே, உணவை விடாதே, பேட்டை விடாதே, குஞ்சை விடாதே. உள்ளக் கட்டை அவிழ்த்து விடு. வீண் யோசனையை விடு, துன்பத்தை விடு”.

விலங்குகளும் பறவைகளும் பாரதியாருக்கு என்றும் இனியவையாக விளங்குவன.

”காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்”

என்று ஆன்மநேயம் பாராட்டிய கவிஞர் அவர். இந்த விரிந்த இதயத்தின் எல்லையற்ற விரிவைக் கட்டுரைகளில் காணமுடிகிறது.
அந்த ஆன்ம நேயத்தைக் குழந்தைப் பருவத்திலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடுதானே ”பாப்பாப் பாட்டில்” சின்னஞ் சிறு குருவி, வண்ணப் பறவைகள், கோழி, காக்காய், பசு, நாய், குதிரை, மாடு, ஆடு அனைத்தையும் பாப்பாவின் கண்களில் நிறுத்தி அறிவுரை தருகிறார்1

பாரதி ஒரு மனோரஞ்சிதப் பூ! யார் யார் எந்த எந்த வாசனையை நினைத்து அப் பூவை நுகர்ந்து பார்க்கிரார்களோ, அந்த அந்த வாசனையை அவரவர்க்கு வழங்கும் வல்லமை படைத்தது அந்தப் பூ! அதைப் போன்று பாரதிப் பெருமகனாரை எவரெவர் எப்படி எப்படிப் பார்க்க விழைகின்றார்களோ அவரவர்க்கு அப்படி அப்படியெல்லாம் காண வழிவகுப்பவர்!

பாரதி கையில் விலங்கைப் பார்த்தீர்களா?

”எமதன்னை கை விலங்குகள் போய்” 62 ஆண்டுகள் ஆயின. பாரதி கையினால் வர்ணம் தீட்டப்பட்ட பறவைகளும், விலங்குகளும் என்றென்றும் பொலிவொடு விளங்கும்! என்றென்றும் படிப்பவர் மனத்திற்குப் பரவசம் அளிக்கும்!.
[b]
Back to top Go down
View user profile
Fathima

avatar

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 33
Location : srilanka

PostSubject: பாரதியும் பாப்பாவும்!   Thu Apr 29, 2010 3:04 pm

குழந்தைச் செல்வத்திற்கு வேறு எந்த செல்வமும் நிகரில்லை என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கூற்றாகும். ஏனெனில் இன்றைய குழந்தைகளே நாளைய உலகம்! வருங்காலம் இன்றைய குழந்தைகள் கையில் அல்லவா? என்றும் இன்பத்தைத் தருபவர்கள் குழந்தைகள்; சரியாக வளர்க்கப்பட்ட குழந்தைகள் நாளைய தலைவர்கள், விஞ்ஞானிகள், கணித மேதைகள், இலக்கியவாதிகள், பொறியியல் வல்லுனர்கள், தலைசிறந்த மருத்துவ மேதைகள் இன்னும் எவ்வளவோ! எனவேதான் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து, கல்வி அளித்து, நாட்டின் நல்ல குடிமகன்களாக மாற்றுவதில் பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும், ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், மதத் தலைவர்களுக்கும் உள்ள பெரும் பொறுப்பாகும்.

திருவள்ளுவப் பெருந்தகை ''மக்கட் பேறு'' என்ற ஓர் அதிகாரத்தையே இயற்றியுள்ளார்! அவர் சொல்கிறார்:

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை; அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.(குறள் 61)

அதாவது, ஒருவன் பெறும் பொருள்களுள் அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல். அல்லது பிற பொருள்களை யாம் மதிப்பதில்லை.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.(குறள் 62)

பிறரால் பழித்தற்கு இடமில்லாத நல்ல பண்புள்ள மக்களைப் பெறுவாராயின், அவர்க்கு ஏழு பிறப்பிலும் துன்பங்கள் வராது.

தம் பொருள் என்பதம் மக்கள்; அவர் பொருள்
தம் தம் வினையான் வரும் (குறள் 63)

மாந்தர் தம் மக்களைத் தம் பொருள் என்று சொல்லுவர். அம்மக்கள் செய்த பொருள் அவர் நல்வினையால் தம்மிடத்து வந்து சேரும்.

தமக்குக் கிடைத்த அந்த அரிய மழலைச் செல்வத்தை நல்ல முறையில் வளர்க்க வேண்டியது மாந்தர் தம் முக்கியக் கடமை அல்லவா? அக்கடமையினின்று நாம் வழுவுவதாலேயே சமுதாயத்தில் நடைபெறும் சீர்கேடுகளைச் சந்திக்கிறோம். இதைத் தடுக்கும் முறையையும், வழியையும் பாரதியார் 90 ஆண்டுகட்கு முன்னரே விளக்கியுள்ளார் என்பதைப் பார்க்கும்பொழுது அவரது தீர்க்க தரிசனத்தைக் கண்டு வியக்கிறோம்.

குழந்தைச் செல்வம் எப்படி வளர வேண்டும் என்று தனது ''பாப்பா பாட்டி''ல் பாப்பாவுக்கே நேராக அறிவுரை அளிக்கிறார் பாரதி. அதைச் சற்றே இங்கு பார்ப்போம்.

குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாகவும், வளமோடும் அமைய வேண்டுமென்றால்

ஓடி விளையாட வேண்டும்
ஓய்ந்திருக்கக் கூடாது
பொய் சொல்லக்கூடாது
புறஞ் சொல்லலாகாது
சோம்பல் மிகக் கெடுதி என்று உணர்ந்து, சோம்பலை
நீக்கிவிட வேண்டும்
சொன்ன சொல்லைத் தட்டக் கூடாது
வயிரமுடைய நெஞ்சு வேண்டும்

இறைவனும், இயற்கையும் படைத்த அனைத்து உயிர்களையும் ஒன்றாக ஏற்று, எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும். அதற்கு முதற்படியாக பாரதி பாப்பாவுக்குக் கூறும் அறிவுரை:

வண்ணப் பறவைகளைக் கண்டு மனத்தில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
சின்னஞ்சிறு குருவி போல திரிந்து, பறந்து வர வேண்டும்.
கொத்தித் திரியும் கோழியுடன் கூடி விளையாட வேண்டும்.
எத்தித் திருடும் காக்கைக்காக இரக்கப்பட வேண்டும்.
பாலைப் பொழிந்து தரும் பசு மிக நல்லதென்று உணர்ந்து
அதைக் காப்பாற்ற வேண்டும்
வாலைக் குழைத்துவரும் நாயை, தனக்குத் தோழனென
நினைக்க வேண்டும்
வண்டி இழுக்கும் நல்ல குதிரை, நெல் வயலில் உழும் மாடு, நம்மை அண்டிப் பிழைக்கும் ஆடு - இவற்றை ஆதரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்
எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்.

எனவே சிறு வயது முதற்கொண்டே சில நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டு தவறாது கடைப்பிடிக்க வேண்டும். அந்தப் பழக்கங்கள் என்னென்ன..? இதோ பாரதியே சொல்கிறார்......

அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். அதாவது கதிரவன்
உதிக்கு முன்னர் படுக்கை விட்டு எழுந்திருப்பதே சிறப்பு.
கனிவு கொடுக்கும் நல்ல பாடல்களைக் கற்றுக் கொள்ள
வேண்டும். நல்ல பாடல்கள் அமைதியை அள்ளித் தரும்;
நல்ல பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்; வாழ்க்கையை
அனுபவிப்பதற்கு நல்ல ஊடகம், நல்ல பாடல்கள்.
மாலையில் விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும். நல்ல திறந்த வெளி விளையாட்டு உடல்
நலத்தையும், உள நலத்தையும் காக்கப் பெரிதும் உதவும்
கருவி.

வாழ்க்கையில் நல்லவர், தீயவர் அனைவரோடும் தொடர்பு ஏற்படும். ''துஷ்டனைக் கண்டால் தூர விலகு'' என்பது நமது நாட்டு முதுமொழி. அதை ஏற்காத பாரதியார் கூறுவார்:

பாதகஞ் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளாமல்,
அவரைத் தைரியத்தோடு, மோதி மிதித்துவிட வேண்டும்!
முகத்தில் உமிழ்ந்து விட வேண்டும்!!

இன்பமும் துன்பமும் வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் என்று உணர்ந்து, துன்பம் நெருங்கி வந்தபோது நாம் சோர்ந்து விடக்கூடாது. அன்பு மிகுந்த தெய்வம் துன்பம் அத்தனையையும் போக்கிவிடும் என்று உணர்ந்து தளரா நம்பிக்கையோடு பணியாற்ற வேண்டும்.

தேம்பி அழும் நொண்டிக் குழந்தைக்காக திடங்கொண்டு
போராட வேண்டும்.

நமது நாடு, நமது மொழி, நமது மக்கள் என்று எப்பொழுதும் பெருமைப்பட வேண்டும்; அப்பெருமையை என்றும் கட்டிக் காத்திட வேண்டும். அதற்கு,

தமிழ்த்திரு நாட்டை தன்னைப் பெற்ற தாய் என்று கும்பிட
வேண்டும்.
நம் ஆன்றோர்கள் நாட்டை அமிழ்தினும் இனியதாகக் கருத
வேண்டும்.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்; எனவே அதைத் தொழுது
படிக்க வேண்டும்.
செல்வம் நிறைந்த நமது பாரத நாடு என உணர்ந்து,
தினமும் புகழ்ந்திட வேண்டும்.


குழந்தைப் பருவ முதல் நமது நாட்டின் எல்லைகளைத்
தெரிந்து கொண்டு, பின்னர் அவற்றைக் காத்திட
வேண்டும்:
வடக்கில் இமயமலை; தெற்கில் குமரிமுனை; கிழக்கிலும்
மேற்கிலும் கிடக்கும் பெரிய கடல்.. அவற்றைக் காப்பது
நமது கடமை என்று உணர வேண்டும்.

இந்திய நாடு வேதமுடையது; நல்ல வீரர் பிறந்தது; சேதமில்லாதது என்பதை மனத்தில் உணர்த்தி இதைத் தெய்வம் என்று கும்பிட வேண்டும்!

அக்காலந்தொட்டே, சாதி சமயப் பிணக்குகள் இருப்பதைக் கண்டு மனம் புழுங்கிய பாரதியார், இந்நோய், குழந்தைகளையும் பற்றிவிடக் கூடாதே என்று,

''சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்!

உயிர்களிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா!

என்று வலியுறுத்தினார்.

குழந்தைகளுக்கு இவற்றையெல்லாம் யார் சொல்லிக் கொடுக்க முடியும்? பாரதியார் வழி காட்டினார். இவற்றைச் சிறு வயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை; ஆசிரியர்களின் தலையாய கடமை; கல்வி நிலையங்களின் பொறுப்பு. இதைச் செய்யத் தவறாது நமது எதிர்காலத்தைச் சிறந்த முறையில் உருவாக்குவோம்!
Back to top Go down
View user profile
Sponsored content
PostSubject: Re: சுப்பிரமணிய பாரதி   

Back to top Go down
 
சுப்பிரமணிய பாரதி
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: