BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 நட்சத்திரம் கொழுத்த ஆகாயம் - சிறுகதை -

Go down 
AuthorMessage
Fathima

avatar

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 33
Location : srilanka

PostSubject: நட்சத்திரம் கொழுத்த ஆகாயம் - சிறுகதை -   Sat Mar 27, 2010 1:28 pm

அடர்மிகு கானகத்தின் மாய இருளில் முடியாது விட்டு வந்த பணிகளை எண்ணியவாறு நடந்து வருகிறார். மணல், பாறை, சில்லிட்ட நீரோடையை பாதம் கடந்தது. எண்ணிக்கைக்கு இயன்றவாறு விரல் உயர்ந்தது. மரமோ தொங்குகிற விழுதோ, புதரில் ஒளிரும் பச்சை பூச்சியோ விழியில் இல்லை. அனைத்தையும் முடித்தே தீர்ப்பதாய் இருக்கிற ராட்சசனின் உடல்வாகுடன் கத்தியாய் நீள்கிற கீற்றையும் கிளையையும் மோதியவாறு விசையான நடை, கெண்டைக்கால் ரோமத்தின் முடிவிலும் பணிகள், திட்டங்கள், கால அட்டவணைகள், விரல் முடிந்த பின்னும் எண்ணிக்கை ஓயவில்லை.

உச்சாணிக் காகக்கூட்டிலிருந்து பிரிந்த நாரொன்று காற்றில் நெளிந்து; கீழே இறுதிவிரலை மடக்கியவாறு விரைகிறவரின் கேசம் தொட்டு காது மடலில் கவிழ்ந்தது. சின்ன வருடல், முதுகு வடத்தில் பனித்துண்டு பட்ட சிலிர்ப்பு, சட்டென நின்றார். எண்ணிக்கையை உதறிவிட்டு சிரத்தையாய் விரல் செலுத்தி நாரை எடுத்தார். நீண்டு, சன்னமாய், மிருதுவாய், அவளின் முடி போலவே, இதழிடுக்குகளில் கள்ளம் ஒடியது. முந்தைய இரவுகளில் அகலிகை தன் கேசத்தால் மடலிடுக்கில் குறுகுறுத்த போது எம்பியது போல உடல் எம்பியது.

பல இரவுகள், கூடலின் ஒரு கனத்தில் “எலும்பு முறிய இறுகத் தழுவுங்கள்” எனச் சொல்வதற்காக உறக்கம் துறந்து அவள் காத்திருந்ததும், மார்பு முழுவதும் நகக்குறி வேண்டி இவர் நகம் நினைத்து வீற்றிருந்ததும், ஞாபகம் வந்தது. என்றைக்கும் போல் இன்றைக்கும் காத்திருப்பாள். நெய் விளக்கொளியில் பிம்பங்கள் ஜோடித்தவாறு காத்திருப்பாள் எனப்பட்டது. அகலிகை நாடி நரம்பெல்லாம் பரவி, நகர எத்தனித்த போது காகமொன்று தோள் தட்டி மேல் எழும்பி கிளை அமர்ந்து வானம் கண்டது. நட்சத்திரம் கொழுத்த வானம். அலகு திருப்பி இவர் விழியை மோதி மீண்டும் வானம் பார்த்தது.

“எதன் பொருட்டு இது”?. குழம்பி காகத்தின் கண்களைப் பார்க்க, அதில் மாறி மாறி நட்சத்திரம் ஒளிர்ந்த வண்ணம் இருந்தது. ஆகாயம் நிரம்பிய நட்சத்திரம் எண்ணுகிறதோ? அலகு திரும்பி மீண்டும் ஒர் பார்வை. அலட்சியப்பார்வை. என்னிடம் ஏன் இப்படி? தேகத்தில் அனல் கொட்டியது.

”ஏ காகமே! உன்னால் முடியாமல் போகலாம், நான் கெளதமன், முனிவன், ரிஷி. எண்ண இயலாதது என்று எதுவும் இல்லை எனக்கு. என்னிடம் 99 சீடர்கள் இருக்கிறார்கள். அழகான அன்பான அகலிகை இருக்கிறாள். எனக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்பது அவர்களுக்கு தெரியும். என் அகக்கண்ணிற்கு அகப்படாதது அறவே இல்லை. நான் அறிவின் உருவம். நட்சத்திரம் தாண்டி சஞ்சரிக்கிற கடவுள்கள் எனக்கு அத்துபடி, நான் கெளதமன், நான் ரிஷி, பிரம்மரிஷி.”

பறவை பொருட்படுத்தவில்லை. கிளை தட்டாமல் நெளிந்து, வளைந்து மர இடுக்கில் வித்தை காட்டியது. மிடுக்கான வித்தை. சரீர் என சாட்டையாய், நாயின் வாய் தைக்க தேர்ந்த வில்லாவி விட்ட குறுக்கும் நெருக்குமான அம்பாய், சித்திரம் வரைந்தது லாகவ ரெக்கை.


ஆழ்ந்த உள்விழுந்த மூச்சு, உஷ்ணத்தின் உச்சம், வாய் பிளந்தது. நாக்கின் தாண்டவம். சாபம்

“பொசுங்கிப் போ”

கெளதமரின் தலைக்குமேல் பறவை கருகியது. கேசம், முகம் எல்லம் சாம்பல்.

வலப்புறப் பாதை கிடுகிடுவென இறக்கம், சருகுப் பள்ளத்தில் தன்னை விட்டார். வண்டல் அப்ப உருண்டு போய் ஆற்றில் விழுந்தார். இரண்டு மூன்று நீர்வட்டம், பின் அமைதியான ஓட்டம், சாம்பலும் மண்ணும் கரைந்து போனது. உஷ்ணம் மாறி நீர் சொட்ட நீருள் நீண்ட மரத்தின் கிளை பற்றி மேல் அமர்ந்தார். துதிக்கை நுனியில் சின்ன கவலமாய் கெளதமன் ஆற்றையே பார்த்தவாறு இருந்தார். மீன் தவ்வி குமிழிகள் காட்டியது. நிலவு குமிழிகள், நட்சத்திரம், நட்சத்திரம் அலையின் மடிப்புகளில் ஒளிர்ந்து கொண்டே இருந்தது. பதட்டம், அச்சம், அசதியும் துயரமும் அப்பிய தேகம் வெடவெடுத்தது. கண் மூடினார். நட்சத்திரம் கொழுத்த ஆகாயம். மந்திரம் சொன்னார், பூரண அமைதி. இப்போது நட்சத்திரம் கொழுத்த ஆறு. துணுக்குற்றது மனம். ஆழ்ந்த தியானத்திற்குள் புகுந்தார்.

மனம் விடுபட்டு ஒடுகிறது. ஒரு கன்றுகுட்டியின் முதல் ஓட்டம். உற்சாகம் தெறிக்க ஓடுகிறது. அவரின் குடில். அகலிகை உறங்கிக் கொண்டிருக்கிறாள். தொடை இடுக்கில் கரம் சொறுகி முகவாய் தாழ நல்ல உறக்கம். பணிகளின் நிமித்தமாய் அகலிகையுடன் உறங்கி நாள் பல ஆகிவிட்டது. கரை ஏறி சிவனார் தோட்டம் தாண்டினால் அரை நாளிகையில் போய்விடலாம். போகலாமா?. வருகிறேன் என எழுப்பி சொல்வோமா?, வேண்டாம். நல்ல உறக்கம். மெல்ல சிரிக்கிறாள். பாதம் தொட்டு செல்லும் நீரை போன்றதொறு சிரிப்பு. ஓடிக்கொண்டே இருக்கிறது சிரிப்பு. சிரிப்பே உறங்குவது போன்ற தோற்றம்.

அணைக்காமல் விட்ட நெய்விளக்கு. இல்லை, அணைக்காமல் எனக் கூறுவதை அவள் விரும்பியது இல்லை. வளர்க்காமல் விட்ட நெய் விளக்கு சருமமெங்கும் மஞ்சள் பூசுகிறது. முழங்கைப் பூனை முடிகள் சிலிர்த்தசைகின்றன. இதழிடுக்கில், கழுத்து மடலில், இடுப்பு வளைவில் ரகசியமாய் நிழல் கோடுகள். சூட்சமம் நிரம்பிய அந்நிழலின் நேர்த்தியில் குதியாட்டம் போட்டது மனது. கெண்டை எலும்பில் நீரின் விளிம்பு அமைதி பூசியது. ஒழுங்கான நீரோட்டம். மேகம் சூழ்ந்த கன்னங்கரேர் இருள். கிளையில் நீள்வாக்கில் படுத்தார். மரத்தோடுகள் முதுகுத் தசை நெளிவுகளை கவ்விப் பிடித்தன. தலையின் அடிப்புறத்தில் ஆற்றின் தீராத ஓசை.

அகலிகை புரண்டுறங்கும் அரவம். குடிலில் தொங்கிய கீற்றின் ஒட்டியவாறு மனசு ஆடியது. இன்னும் தொடையிடுக்கில் கரம் உள் செல்ல உடல் குருகி படுத்திருந்தாள். மேல் நெற்றியின் பசும் நரம்பு குழைந்து வளைந்தது. ஏதோ அரற்றினாள். கனவு.

“உள் நுழைந்து பார்ப்போமா”?

“வேண்டாம். தவறு. அவள் கனவை எப்படி நீ பார்க்கக்கூடும்”.

“என் அன்பிற்குரிய மனைவியாயிற்றே அவள்..

எனக்குத் தெரியாமல் அவளிடம் என்ன இருக்க முடியும்.?

மேலும் நான் கெளதமன் .எனக்குத் தெரியாமல் எது முடியும்.?”

“தெரியாதது ஒன்றுமில்லையெனில் பார்த்தறிய என்ன இருக்கிறது.?”

“அவளை, அவள் சிரிப்பை, குழலை, இடையை, கெண்டைக்கால் சதையை, ரசிப்பதை போல் கனவை ரசித்தல் ரம்மியமானதல்லவா?”

“அவளின் அனுமதி கொண்டு பார்“

”கேடுகெட்ட மூடனே, எழுப்பிக் கேட்டால் கனவு கலையும்.”

பெருத்தப் பூட்டின் மையத்தளத்தில் தட்டிக் கழட்டும் கள்ளனின் மாய விரலை ஒத்த கெளதமனின் விழிகள் கனவை திறந்தன.

மணல் கொட்டிய பெருவெளி. மழை போல் மணலை காற்று வீசியடிக்கிறது. கலங்கிய நிலவின் வெளிச்சம் தரை முழுக்க பரவி வழிகிறது. எதுவும் இல்லை. மணல் அடங்கிய சமயத்தில் தூரத்தில் புள்ளியாய் ஒரு அசைவு. அகலிகை விரிப்பிலிருந்து தரைக்கு மாறி இருந்தாள். மேலெல்லாம் சாணம் பூசிய மண். பல் தெரிய சிரிக்கிறாள். கவர்ச்சி மிகு ஈரின் இடையில் உமிழ்நீர் பரவி குமிழியது.

அடிவயிறு முழுக்க மண் தெறிக்க நான்கு கால்களின் சக்தியை பிரயோகித்து முன் வரும் பாய்ச்சல் மிகு புரவியாய் அசைவு உருக்கொள்கிறது. புரவியின் மேல் தெளிவில்லாத உருவம். ஓட்டத்திற்கேற்ற உடல் அசைவு. வெகு கிட்டத்தில் வயிறு. அப்புறம் மார்பு மேல் எழும்பி முடி மண்டிக்கிடக்கிறது. ஆண். நிச்சயமாக ஆண்.

திடும்மென எழுந்து அமர்ந்தார். கைகளால் தன் மார்பை தடவி பார்த்தார், முடி இருந்தது. மெல்ல மயிர் கால்களை வருடியவாறு புரவிக்காரனின் முடியின் சுருளையும், நெருக்கத்தையும் யோசித்து பார்த்தார். குழப்பம் மிகுந்தது. நெஞ்சு படபடத்தது. கண்ணியை யோசித்து கால் நகர்த்த அஞ்சும் முயலாய் பயம், பார்ப்போமா?. வேண்டாமா?. என்னால் முடியாதது என எது இருக்கிறது. இந்த உலகம், புல், பூண்டு, அசுரர், தேவர் எவர் என்னை வெல்ல முடியும். யார் அவன்.? . ஒருவேளை நானோ?. அத்தனை தேகப்பலத்துடன் புரவியில் எப்படி கூடும். அகலிகையின் கனவில் அப்படித்தான் நான் வரும்படியாக இருக்கும். ஆனால் அந்த மண்டியமுடி , அந்த இருகிய அடிவயிறு.

குப்புறப்படுத்தார். கைகள் நீரை அலம்பியவாறு இருந்தது. சருகு விரல் தொடும், ஒரு கொடி சுற்றும், பூ தட்டும், அலம்பியவாறே இருந்தார். சொரசொரப்பான மரத்தோலை வாயில் கவ்வி உடைத்தெடுத்தார்.

அகலிகை முகம் சின்ன சின்ன மணல் துகளாய் வேர்த்திருந்தது. தொடையிடுக்கில் கைவிசையுடன் இயங்கி நின்றது.

கனவில் நுழை புரவிக்காரனை பின் தொடர்.

மலையிலிருந்து கீழிறங்கும் பாதை, செடியும் கொடியும் வெட்டி நகர்கிறது. லாகவமாய் பள்ளந்தோறும் குதிரை இறங்கும் அடையாளம். வேக வேகமாய் குதிரையின் கால், தொங்கிய அடிவயிறு, ஒரு அகன்ற இலை அப்புறம் அதேஇலை, அப்புறமும் அதே இலை. இலை முழுக்க எச்சம் ஓடிய அடையாளம். வெகுநேரத்திற்கு எச்சம் படர்ந்த இலை மட்டும் மெல்ல மெல்ல கரைந்து இலை இருளான பின்னும் எச்சம் இருந்தது.

பசும் நரம்பு நெளிவை விட்டு இயல்பானது ஆழ்ந்த உறக்கம். அகலிகையின் அவ்வுறக்கத்தில் புரவிக்காரனைப் பற்றிய எந்தத் துப்பும் துலங்குவதாய் இல்லை.

மழை அறைந்தவாறு இருந்தது. அதன் தொடக்கம் தெரியாதது போலவே கெளதமன் உறக்கம் கொண்டதும், இடி பேரிரைச்சல் மிக்க உறக்கம். முழித்த போது அதிகாலை. குளிரில் மிகுந்த பற்கடிப்பு.

காற்றின் விரலசைவில் தன்னை தந்த இலைகளும், ரெக்கைத்துணுக்குகளும் பறந்தவாறு இருக்க தெப்பமாய் நனைந்த மேலுடன் போனார். விளக்கு அணைந்திருந்தது. பிசகிய வெளிச்சம் கவிழ்ந்த குடில். அகலிகை சுவர் திரும்பி படுத்திருந்தாள். எதிர்புறத்தில் சாய்ந்தவாறு நோக்கினாள், நேரான விழிகள், அகலிகை மட்டுமே தெரிந்தாள். இன்னும் தாளாத பற்கடிப்பு.

பதறி எழுந்தாள், “என்ன புரவியின் ஓசை? “.

கெளதமன் பதில் வைக்கவில்லை. நேரான அவரின் பளபளத்த முழிகள் அவளுக்கு நடுக்கம் தந்தன.

ஓ! உங்கள் பற்களின் ஓசையா? தன் விழிபெயர்த்து சமாளித்து கலைந்த உடுப்பை நேர்படுத்த அதிக சிரத்தை எடுத்தாள். வழக்கத்துக்கு மாறாக அதிக நேரம் நடுக்கம் குறைத்து மேல் எழுந்து கெளதமனின் திசை தவிர்த்து.

”எப்போது வந்தீர்கள்?”. இரவு முழுக்க பனியா?. மழை முடிந்ததும் வந்திருக்கலாமே?.” என உள் நகர்ந்தாள்.

கெளதமனிடம் கலையாத தீவிர மெளனம். அவளைத் தொடர்ந்தன விழிகள். உள் அறை. அகலிகை பார்த்தபோது அதே குத்தும் விழிகள். கண்ணில் நீர் மண்ட வெகுளியான குழந்தையானாள்.

என்னாயிற்று இவருக்கு?. ஏன் இத்தனை கொடூரமான மெளனம். ஒரு வேளைக் கனவை பார்த்திருப்பாரோ?. அத்தகைய செயல் புரிபவர் அல்ல. ஒரு வேளை……

நீரில் தன் தேகம் பார்த்தாள். அப்படி ஒன்றும் இல்லை. தூக்கத்தின் சாயல் தான் உள்ளது. இல்லை, பணியில் கோளாறு வந்திருக்குமா? . எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் இப்படி இருந்ததே இல்லை. அழுகை முகமெல்லாம் படர்ந்து சேற்றில் விழுந்தது.

மீண்டும் முன் அறைக்கு வந்தாள். இன்னும் கூறான விழிகள். அவரின் நெற்றி முழுதும் நரம்புகள் புடைத்திருந்தன. புறங்கையால் விழிகளை ஒத்தியவாறு என்ன பேசுவது எனத் தெரியாமல்,

”ஸ்நானத்திற்கு செல்லட்டுமா” என்றாள்.

ஆழ்ந்து உள் இழுத்த மூச்சின் சப்தம். எலியொன்று கெளதமனின் முதுகில் பட்டு கவிழ்ந்து ஓடியது. கேசத்தில் இருந்து நீர் இன்னும் வழிந்த வண்ணம் இருக்கிறது.

”நான் செல்கிறேன்”

எனச்சொல்லி புறவாசல் வழியாக உடைகளை முகத்தில் துடைத்தவாறு இறங்கினாள்.

கெளதமன் அவள் எழுந்து சென்றுவிட்டாளா என உள் அறைய பார்த்தார். புற வாசல் விளிம்பில் நின்ற போது அவள் ஒற்றை பாதையில் நடந்து செல்வது தெரிந்தது. பாவமான குறுநடை, உடல் குலுங்குவது அழுகையின் தீவிரத்தை காட்டியது. அக்காலையின் முதல் ஒளியில் கெளதமனுக்கு அவளை நோக்க இரக்கமும், அன்பும் சட்டென தோன்றி மறைந்தன. திரும்பி பாத்தாள். ”உடன் வருகிறிர்களா?” என கூவினாள். கெளதமன் செவி விழாது போல் கழுத்தை உயர்த்தினார். நான்கு அடி ஓடி வந்த அழுகையின் கரகரப்பினூடே,

“உடன் வருகிறீர்களா? “

என உரக்கக் கத்தியதில் வந்துவிடுவார் என்ற நம்பிக்கை தொனித்தது. கேசம் காற்றில் ஆடியது. குரல்வளை எழுந்து எழுந்து தாழ்ந்தது. கெஞ்சும் விழிகள்.

கெளதமன் குடிலுக்குள் வெடுக்கென திரும்பினார். அகலிகை சென்றுவிட்டாளா என்பதில் கவனமில்லை. துண்டெடுத்து நனைந்த தலையையும் தேகம் முழுவதும் துடைத்தார். விளக்கின் திரியை நிமிண்டி ஒளி சேர்த்தார். நான் அவ்வாறு நடந்திருக்க கூடாது. குழந்தை அவள். கெஞ்சியவாறு நின்ற தோற்றம் உருகொண்டது. என் பாழாய்ப் போன சினம் அவள் கனவில் நான் அல்லாமல் பின் எவர் இயலும்?. எல்லாம் அறிந்த என்னை அவள் எதற்காக உதாசீனப் படுத்த வேண்டும். மிகக் கொடூரமாய் தாக்கிவிட்டேன். பேசி இருக்கலாம். ஏதாவது வந்ததும் பேச வேண்டும். காலைக்கு என்ன ஆகாரம்?. பூண்டுத் துவையல் வை. உன் விரல் பட்டால் பூண்டில் விசேஷம் தளைத்து விடுகிறது. அடுப்பில் கரி அள்ளி கன்னத்தில் பூசலாம். வேண்டாம். அவள் கூந்தல் காய அகில் புகை வளர்க்கலாம். நான்கு சந்தன பிசுருகளையும் சேர்த்தால் வாசம் கலங்கடிக்கும். மெல்ல வந்து சேர் அகலிகை. குடிலே புகையாய் இருக்கும் நறுமணப் புகை.

பிழிந்த உடுப்பை தோளில் இட்டவாறு நீர் சொட்டும் கொண்டையிட்டு கரையை அடைந்தாள். சொல்லிவிடுவோம். பின் குழப்பம் இருக்காது. என் கனவிற்கு நான் பொறுப்பல்ல என புரியும் அறிவுள்ளவர் தான் அவர். இந்த மனக்குறளியின் சேஷ்டையிலிருந்து தப்புவதற்கு அவரிடம் மட்டுமே மருந்து இருக்கிறது.

குடிலின் இடுக்கு வழியாக புகை கோடு கோடாக சூரிய ஒளியில் மேல் வருவது தெரிந்தது. நல்ல நறுமணம். கெளதமன் காத்துகிடக்கிறார். அகலிகையின் தேகம் முழுவதும் மகிழ்ச்சி தட்டியது.

வாசலுக்கு முதுகு காட்டி குத்தவைத்தவாறு விறகினிடையே ஊதிக் கொண்டிருந்தார். சப்தமற்ற பாதம் கொண்டு அவர் முதுகில் ஐந்து விரலையும் பதித்தாள். ஈரப்பசை, ஜில்லிட்ட விரல்கள், முதுகுத் தசைத்துடிப்புத் தளர்ந்தது.

திரும்பிய கெளதமரின் முகம் கண்டு பதறி பின் நகர்ந்தாள். விரல்களை நோக்கினார். விரல்கள், தொடையிடுக்கில் ஊர்ந்து சென்ற விரல்கள், “ விரல்களை நெருப்பில் வை”. நல்ல வேளை மனம் சொன்னதை வாய் திறக்கவில்லை. அவருக்கு ஓ! என இரைய வேண்டுமாய் இருந்தது. விடு விடுவென முற்றம் கடந்து, கரம் இரண்டும் வளைந்து தலையை அழுத்த இலக்கு இல்லாமல் போனார்.

மாலை கவிழும் வரை காத்திருக்கிறாள். மதியத்திற்கு செய்த பதார்த்தம் இனி கள்ளப்பூனைக்கே ஆகும். இரவு வரும் போது நீர் சொட்டும் தாமரையோடு கெளதமன் வருவார் என நினைத்தாள். நீர் ஆடியில் நின்றவாறு தன் கோலம் கண்டாள். ஜோடித்தாள். அவருக்கு விருப்பமான மதர்த்த மார்பை பார்த்து சிரித்தாள். வந்து விடுவார். சீக்கிரம் வந்து விடுவார். உடல் விரிந்து சிலிர்த்தது.

கெளதமர் அதே கிளையில் நிமிர்ந்து படுத்திருக்கிறார். சலனமற்ற ஆறு, மூடிய இமை, கட்டெறும்பு வயிற்றின் மயிர் இடுக்கில் ஏறி இறங்கியது. கெளதமா ! புறப்படு ! . அகலிகை பாவம். தெரித்துவிழும் வார்த்தைகள் தீர்ந்து போனாற் போல் இருந்தது. ஆனால் ஒரு வேளை வந்துவிட்டால், வேண்டாம். சினம் துளியும் இல்லாமல் ஆகட்டும், போகலாம். இருப்போம். அதுவரை இருப்போம்.

சாத்திய விழியின் அடியில் அகலிகை காத்து நிற்கிறாள். உறங்க முயலும் தோற்றம். மெலிந்த ஒலிக்கும் வாசல் பார்க்கிறாள். தலைக்கடியில் இரண்டு கரமும் தொடை இடுக்குவரை கழண்டு வருகிறது. பதறி மீண்டும் சிரசின் அடியில் இருகவைத்தாள். விலங்கிடுவதற்கான அசுர முயற்சி தோற்றுப்போனாள். முழங்காலில் இருந்து மேல் எழும்பி சிக்கி நின்றது கரங்கள். பசும் நரம்பு குழைந்து வளைந்தது.

கெளதமன் நீருள் பாய்ந்து அடியில் நீந்தினார். வேண்டாம், அதை காண என்னால் சகிக்காது. மூச்சு முட்டும் வரை பிரம்ம பிரயத்தனம். மடை உடைத்த நீராய் ஆறு துளைத்த சிதர மேல் வந்தார்.


”கெளதமா, உனக்கு சகிக்க இயலாதது எதுவுமில்லை.”

“அது நீயாகத்தான் இருக்க முடியும். நீ பார்க்காமலோ, அறியாமலோ எதுவுமே இருக்க முடியாது.”

அகலிகையில் மகிழ்வும் வருத்தமும் ஒரு சேர இருந்தது.,

”நீ வந்துவிடக்கூடாது என்பதற்காக எவ்வளவோ முயற்சித்தேன்”. அது உன்னால் முடியாது அகலிகை. செவியிடுக்கில் வெப்பமூச்சை ஊதியவாறு அவன் சொன்னான். மூலை நரம்பெங்கும் அம்மூச்சு பீடிக்க போதை தோனியில் ”ஏன்?” என்றாள்.

கழுத்தில் எச்சில் பூசியவாறு,” ஏன் எனில், நான் இந்திரன். நீ எம்மாத்திரம் !. கலைமகள், திருமகள் என அனைவருமே கனவில் காத்துகிடக்கிறார்கள். அகலிகை மேல் படர்ந்து ,

”மிகக் கனமாய் இருக்கிறேனோ?”. என அவன் விழி முத்தினாள்.

இல்லை, புறாவின் சிறகை போல் இருகத்தழுவினான்.

”ஏன் இப்படி எல்லோரும் உன்னையே நினைக்கிறார்கள்”

“அதை அவர்களிடம் கேட்க வேண்டும்”

“ஓகோ, உனக்குத் தெரியாமல் ஏதாவது இருக்குமோ”

“சத்திமாய் இதைத்தவிர வேறு பணிகள் கிடையாது, தெரியவும் தெரியாது.”

”எதைத்தவிர”

”இதைத்தவிர”

பிணைந்த கால்களும் கழண்டு விடாத கரமும்.

”சரி, நீ ஏன் என்னை நினைத்தாய்.”

ஏனெனில், ஏனெனில் ….. !

மூச்சு வாங்கிய குரல், நீரின் மேல் மிதந்து கிடந்தார் அகலிகையின் பதிலுக்காய் கெளதமர்.

”ம்,சொல்லு அகலிகை”

“ஏனெனில் உன்னிடம் வெள்ளை யானை இருக்கிறது”

”இந்திரன் சிரித்தான். சிரிப்புக்குத் தக்கவாறு அகலிகையின் உடல் ஆடியது.

“ஏன், ஏன் சிரிக்கிறாய்”

“விசேஷமான காரணமில்லை”

”ஏன்”

“பலர் சொல்லியது தான். இனி வரப்போகும் சீதைகூட இதைத்தான் சொல்வாள்.”

முத்து முத்தாக உடல் முழுக்க வேர்த்த அகலிகை,

இது தவறில்லையா?

” இல்லை, அகலிகை, இது உலக இயற்கை”

உண்மையாகவா?”

”உண்மை”.

”நான் கிளம்பட்டுமா”

“ம்”, என்னையும் அழைத்துச் செல் உன்னோடு, கூடி புரவியில் ஒரு உலா போக வேண்டும்.

இவ்வளவு தானே. புரவி விரைந்தது. அகலிகையை அணைத்தவாறு கடிவாளத்தை பிடித்திருந்தான். மார்பும், முதுகும் பொருந்தி அதிர்ந்தது. கன்னம் உரசினான், ஆற்றின் ஓரமாய் இயல்பான ஓட்டம், நீரில் நகரும் மெல்லிய நிழலில் இந்திரனை பார்த்தவாறு இருந்தாள். ஆற்றின் மேல் ஏதோ ஒன்று மிதக்கிறது. அது அது கெளதமன். சலனமில்லாத ஆற்றின் மேல் கட்டையாய் இருக்கிறார். முகம் அகலிகையை பார்த்தவாறு, பூடகம் நிரம்பி வளர்கிறது. புரவியிலிருந்து கீழே விழுகிறாள். அது ஆறு கூடும் புதர். கெளதமர் புதரை நோக்கி நீந்தத் தொடங்குகிறார். வாளாய் நீர் வெட்டி கரம் வேகம் கொள்கிறது. அவலம் தைத்து செடியும் தளையும் ஒட்டியவாறு பார்க்கிறாள். கருத்த பன்றி கால் பிணைக்கப்பட்டு துள்ளி ஓலமிடுகிறது. துள்ளல், நிற்காத துள்ளல், புதர் மொத்தமும் துள்ளல்.

உறக்கம் அறுபட துள்ளி எழுந்தாள். அங்கு இருப்பாரோ? வெளிவந்தாள். பழக்கப்பட்டப் பாதையில் கலங்கியவாறு கால்கள் போனது.

அதே கிளை. காலை குறுக்கக்கட்டி முகம் புதைத்து இருக்கிறார். அகலிகை வருவது தெரிகிறது. அவளை என்ன செய்ய?. அக்கனவு அவளின் பொறுப்பா? இல்லையா? மன்னிக்கத்தக்கதா? இல்லையா? தர்க்கங்களும் , ஸ்லோகங்களும் ஓடி ஓடி மறைந்தன. கரை எங்கும் தேடி முன்வரும் அவள். குரல் கொடுப்போமா?. வேண்டாம். வரட்டும். புதை சேற்றில் தவறி விழுகிறாள். “ ஐய்யோ” என எழுந்தார். கால்கள் முன்னகரவில்லை. வரட்டும், வேசி மகள், என்ன பேச, அவள் பேசட்டும், அழட்டும், அரட்டட்டும். நான் பேசமாட்டேன். அகலிகை இனி நான் பேசப்போவதில்லை. வா, என் மெளனத்தை பார். என் நிஜத்தை நீ கண்டதில்லை. நான் கெளதமன் .ரிஷி.

கிளை காற்றில் ஆடியது. பொய்க்குதிரையேற்றம் போல் இருந்தது கெளதமருக்கு. அவள் என்ன என் விரோதியா?. என் அன்பான மனைவியாயிற்றே. நான் மன்னிப்பேன். எனக்குச் செய்த அனைத்துப் பணிவிடையிலும் அவள் உள்ளம் இருந்ததை நான் கண்டிருக்கிறேன். அவளை நிச்சயமாக நான் மன்னிப்பேன். ஏனெனில் என் ஹிருதயம் முழுக்க அவளிருக்கிறாள். ஆனால் ஆனால் அவள். வேண்டாம். அவள் அருமையானவள். எந்தச் சொல்லையும் பிரயோகிக்காதே. வா, அகலிகை, வா! நான் உன்னை என்றைக்கும் விட இன்று மிகவும் நேசிக்கின்றேன். உன்னைக் கேளாமல் வந்த கனவு விளைந்த துயரமெல்லாம் கலைய நானிருக்கின்றேன். உனக்காக என்றைக்குமாக நானிருக்கின்றேன்.

ஓடும் நீரில் காலிழுத்தவாறு கிளை பற்றி நின்றாள். அவளின் நெடி அவரை இம்சித்தது. முகம். புரவியில் ஏறியிறங்கிய முகம், முதுகுக்கு பின்னால் ஈட்டியைச் சொருகும் முகம். முத்து முத்தாக வேர்த்த முகம். வெறுப்பும் அசிங்கமும் அவரைச் சூழ்ந்தது, இறுக இமை சாத்தினார்.

“தயவு செய்து என்னை பாருங்கள்.”,என்னை மீறுயது அது. நான் தோற்றுப் போய் நிற்கிறேன்.”

கரகரத்த குரல், பிசிறு சிதறுகிறது. கரம் தொட்டாள். விர்ரென உதறி கிளையின் மறுபுறம் இறங்கினார். இருவர் இடையேயும் பெருத்தகிளை ஒரு பாம்பாய் நெளிந்து வளைந்து ஆறுள் சென்றது.

”என்னை வெறுப்பது என்பது தாங்க முடியாத தண்டனை.”

கெளதமரின் உதடு நகன்றது. எலும்பில் இறுகிய தசைகள் அவிழ்ந்து படர்ந்தது. கருணை மிகு முகம். அகலிகைக்குள் பட்சி கத்தியது. கிளை மேல் நீண்டிருந்த விரல் பற்றினார். அதிர்ந்த அவள் விரல் சூடுமென்றது.

தொண்டை இறுகி அவர் சொல் விழாமல் விக்கித்து தலை சிலுப்பிய பாவனை” ஏன், ஏன் இப்படி அகலிகை” என்றது. அவள் விரல்களை எடுத்து கன்னத்தில் அப்பிக்கொண்டாள். விரல் முழுவதும் நீர் ஓடியது.

“ நான் அப்படி அல்ல”

கெளதமன் சிரித்தார். கேசத்தினிடையே விரல்களை மேயவிட்டார். இதமான கோதுதல்.

“எனக்குத் தெரியாமல் நடந்தது. நான் அப்படி அல்ல ….” மேலும் இலகுவாய் பேசு என்பதைப் போல் அவர் விரல்கள் கேசத்தில் இயங்கின.

“ ஆனால் அது உலக இயற்கை”

முரட்டுத்தனமாய் கைகளை பின் இழுத்தார். பாதி கேசம் கரத்தில் இருந்தது. நெறிந்த வளைந்த மண்புழுக்கள் விரல் சுற்றியதை போன்ற ஆசூயை வீசி எறிந்தார். காற்றில் கேசம் ஆடி ஆடி ஆறோடு போனது. நக இடுக்கில் பிணைந்திருந்த ஒன்றிரண்டு கேசத்தை நகத்துணுக்கோடு பிய்த்து உமிழ்ந்தார்.

” யார், யார் சொன்னது இது ”

“ நான் , நான் தான்”

“ இல்லை எனக்குத் தெரியும்” , விடுபட்டு சொற்கள் விழுந்தன.

“ உனக்கு என்ன தெரியும்? என் குடிலில், எனக்கருகில், எவனோடோ புரண்ட உனக்கு என்ன தெரியும்? “

அகலிகை மரத்துப் போனாள். அசைவற்ற மரப்பட்டை போன்ற தோற்றம். மார்பு விம்மி முறுங்கியது.

“ எனக்குத் தெரியும், பசும் புதர்களிடையே அண்டியவாறு வேட்டுவச்சியின் திறந்த மார்பை புணர்ந்த உங்கள் விழிகளை தெரியும்.”

“ எனக்குச் சொல்கிறாய். நான் கெளதமன். ரிஷி. அனைத்தும் அறிந்தவன். சகல உலகமும் கரைத்துக் குடித்தவன். நான், நான், நான்.”

” நீங்கள் என்னுடைய வெறும் புருஷன்”.

“ நிறுத்து அகலிகை வேண்டாம். போ. முடிவில்லாத தொலைவுக்கு அப்பால் போ. பேசாதே. சகிக்க இயலாதவளாய் இருக்கிறாய். தாங்க இயலாத துர்நாற்றம் சுழற்றி வீசுகிறது. நீ போ. போய்விடு, தயவு கூர்ந்து என்றைக்குமாக போய் விடு.”

அகலிகையின் கண்னில் வருத்தம் உருண்டது. “ஆனால், உண்மையில்…….

பேசத்தலைப்பட்டாள்.

விழிகள் கோபமாய் உருண்டன, போய்விடு. போ. அவள் நகரவில்லை. நான் எங்கு போவேன் என பாவமாய் நின்றாள். உன்னைத் தவிர வேறு எவரைத் தெரியும் என்பதாய்ப் பார்த்தாள். அவர்கிளுக்கிடையில் அக்கிளையின் மேலாக இலை தட்டிவாறு காகம் ஒன்று பறந்தது. அதே லாவக ரெக்கை.

உஷ்ணத்தின் உச்சம். நாக்கின் தாண்டவம். சாபம். “ கல்லாய் போ”. அவர் கரம் வாயை அடைப்பதற்குள் விழுந்துவிட்டது. வெறும் வாயை பொத்தி நின்றார். அகலிகை முகம் வெறுமையானது. வெளுத்த தோல். சிகப்பு ரேகை கிளைத்த கண். வாடிய உதடு.

பொத்திய கை இறங்கவில்லை. “ என் அருமை அகலிகையே” என முணுமுணுத்தார். மெல்லக் கல்லானாள். கல், இடுப்பு, தோல் எல்லாம் முடிந்து முகம் மட்டும்.” என் பிரிய அகலிகையே நான் இப்படி சொல்லவில்லை. இதுவாக நினைத்து நான் சொல்லவில்லை. கன்னம் ஏந்தினார். விரலிடுக்குகளில் சதை அமுங்கியது. பேசு. அகலிகை. எதாவது சொல்லிவிடு. வெறுமையான முகத்தில் ஒரு சிரிப்பு ஓடியது. உதட்டில் சின்னச் சுழிப்பு தெரிந்தது. விரலிடுக்கில் சொர சொரப்பான கல் சொருகியது. கை பிரித்தார். நீருள் விழுந்தது உருண்டையான கல். இரண்டு மூன்று நீர் வட்டம். “ அந்தச் சிரிப்பு, அதன் பொருள். அந்தச் சுழிப்பின் நேர்த்தி, என்ன அது,” ஆற்றின் தலையில் கல் உருண்டு போனது.

அடி நீச்சல், கெளதமன் இயங்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு கல்லாய் அகற்றி அகற்றி இதில் எது அவள், எது என்னுடைய பிரியமான அவள். தீராத நீச்சல். மேலே நட்சத்திரம் கொழுத்த ஆகாயம். கீழெ நட்சத்திரம் கொழுத்த ஆறு.
Back to top Go down
View user profile
 
நட்சத்திரம் கொழுத்த ஆகாயம் - சிறுகதை -
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: