BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inவிமர்சனம் மௌனங்களின் நிழற்குடை   - இசாக் Button10

 

 விமர்சனம் மௌனங்களின் நிழற்குடை - இசாக்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

விமர்சனம் மௌனங்களின் நிழற்குடை   - இசாக் Empty
PostSubject: விமர்சனம் மௌனங்களின் நிழற்குடை - இசாக்   விமர்சனம் மௌனங்களின் நிழற்குடை   - இசாக் Icon_minitimeSun Mar 28, 2010 4:51 am

துபாய் நகரத்தில் துளிர்விட்டுத் தழைத்துக் கடல்கடந்த நாடுகளும் தன்னைக் கண்
உயர்த்திக் காணவைத்திருக்கும் அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை - மூன்று காரியங்களை
முனைப்புடன் செய்திருக்கிறது. ஒன்று - கவிஞர்களை நண்பர்களாக்கியிருக்கிறது.
இன்னொன்று - நண்பர்களைக் கவிஞர்களாக்கியிருக்கிறது. மற்றொன்று - கவிஞர்களையும்
நண்பர்களையும் சாதி மத பேதமற்ற, சமதர்மவேட்கையுள்ள சமுதாயச் சிந்தனைகளோடு
சங்கமமாக்கியிருக்கிறது.



தலைவர் அப்துல் கதீம், செயலாளர் இசாக் இருவரும் பவளவிழாவில் ஆனந்த விகடனால்
பாராட்டப்பட்டவர்கள். இருவருடைய கவிதைகளையும்
'முத்திரைக் கவிதைகள்' என்று
வெளியிட்டு ஆனந்த விகடன் முத்தம் கொடுத்திருக்கிறது.



கவிஞர் பேரவையின் தலைவர் அப்துல் கதீம் - தண்ணீரைப் போல அனைவரையும்
தழுவிக்கொள்பவர். கவிதையில் சொற்செருக்கு இருந்தாலும், வாழ்க்கையில் தற்செருக்கு
சிறிதுமிலாத் தகைமையாளர். அதனால் தான் - பாட்டெழுதி நீட்டுகிற பாட்டாளிகளை
எல்லாம் கவிஞர் பேரவையின் கூட்டாளிகளாக்கிக் குலவ வைத்திருக்கிறார். உரிமையோடு
ஒவ்வொரு கவிஞரையும் உலவ வைத்திருக்கிறார். தமிழ்க் கவிஞர் பேரவையின் செயலாளர் -
தம்பி இசாக்! எளிமையும் இனிமையும் இணைந்தவர். நட்பிலும் அன்பிலும் நனைந்தவர்.
இவர்களுடன் - பட்டணம் மணி, கவிமதி, தமிழன்பு, சாஜஹான், முத்துகுமரன்
உள்ளிட்ட கவிஞர்கள் லியாக்கத் அலி, பாரத், முத்தமிழ்வளவன், ஹபீப் போன்ற கவிதை
ஆர்வலர்கள் என்று இந்தக் கவிஞர் படையின் அணித்தலைவர் வரிசை நீள்கிறது...
அமீரகத்தில், இவர்களால் தமிழ்க் கவிதை வாழ்கிறது.



தம்பி இசாக் - ஏற்கனவே தன் கவிதை நூல்களால் வாசகர்களின் இதயங்களில் வலம்
வருபவர். தமிழுக்கு நலம் தருபவர். தற்போது தன் காதல் கவிதைத் தொகுதியினால்
தமிழர்தம் கை விரல்களுக்கெல்லாம் கணையாழி சூட்டியிருக்கிறார்.



மௌனங்களின் நிழற்குடை - காதலர்களின் வெண்கொற்றக்குடை!
'இசாக்'கின் எழுதுகோல்
நம் இதயத்தில் நடக்கும் நடைஉண்மைக் காதலர்களின் உள்ளம் உடுத்திக்கொள்ளும் உடை!
இது - பகட்டான காதலை எதிர்த்து - எளிமையான காதல் இதயங்கள் முழங்கும் பறை
முழக்கம்! உள்ளன்பு பூத்த உண்மைக் காதலின் உரை விளக்கம்!



இக்கவிதைத் தொகுதியில் - கிராமத்து தேவதை ஒருத்தி தன் கிரீடத்தோடு
தரிசனம் காட்டுகிறாள். ஜன்னலைத் திறந்தால், கண்களைப் பறிக்கும் மின்னலாய் -
எதிர்வீட்டில் ராஜ பரிபாலனம் செய்தபடி இசாக்கைப் பார்த்து இளநகை செய்கிறாள்.
வானத்திலிருந்து நட்சத்திரப் படிக்கட்டுகளில் பூமிக்கு இறங்கி வந்து, 'வரம்...
வரம் வேண்டுமா? வரம்...' என்று நம் கவிஞரை வம்புக்கு இழுக்கிறாள்...
'கனவு மெய்ப்பட வேண்டும்' என்ற பாரதியின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவள் போல -
கட்டிப்பிடித்து இசாக்கைக் காதலோடு அனைத்துக் கன்னத்தில் முத்தமிட்டுக்
களிவெறியூட்டுகிறாள். தம்பி இசாக்கின் மீது, தவிர்க்கவே முடியாத பொறாமை நமக்குள்
புறப்படுகிறது.



பாரிஜாதப் பூவின் பார்வை படுவதற்காக - ஆரம்ப நாட்களில், தம்பி இசாக்
தமிழ்த்தவம் செய்திருப்பார் போலும் -

'கண்ணாமூச்சி
விளையாட்டு காட்டுகிறது
இந்த காதல்
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
ஒளித்து வைத்துக்கொண்டு.'
'நவீன ஓவியத்தை போல
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு பொருளை உணர்த்துகிறது
உன் புன்னகை.'
'சாலையின்
ஒரு பகுதியில் நீ
மறுபகுதியில் நான்
ஊர்திகளின் நெரிசலில் சிக்கி
பாவம்
இந்த காதல்.'

என்று - எல்லாக் காதல்களையும் போலவே புலம்பலோடுதான் ஆரம்பிக்கிறது இவரது காதலும்.
ஆனால் - அரும்பிய காதல் மொட்டாகிவிட்டதென்பதை -

'உன்
பொய்க் கோபம் பற்றி
எனக்குத் தெரியாதா..
கிள்ளியவனென்பதற்காக
மணம்
வீசவா மறுக்கும் மல்லிகை?'

என்ற காதலனின் கேள்வி காட்டிக் கொடுத்து விடுகிறது.



தூரதேசப் பயணத்தைப் பற்றித் தன் ஆசைகளின் அரசகுமாரியிடம் சொல்லிக்கொள்ளச்
செல்கிறான் காதலன். அப்போது எதிர்பாராத இன்பப் பரிசொன்று காதலனுக்குக்
கிடைக்கிறது. அது - கைமேல் கிடைத்த பரிசல்ல - கன்னத்தின் மேல் கிடைத்த பரிசு.
மொட்டான காதல் மலராகிவிட்டது. ஆளரவமற்ற தனிமை - அந்த அன்புப் பரிசை அள்ளித்தந்து
விட்டது. ஆனாலும் காதலன் பின்னர் கடிதத்தில் கேட்கிறான்:

'அமைதியாக பார்த்து கொண்டிருந்த
கிளி
பிறகெதாவது சொன்னதா.?'

இந்தக் கேள்வியில் - காதலன் சிறந்த கவிஞனாகி விடுகிறான்.



காதலி காதலை ஏற்றுக்கொள்ளும் வரைக்கும்தான் காதலன் பலவீனமானவனாய்க்
காட்சியளிக்கிறான். காதலை ஏற்றுக் கொண்டபிறகோ - காதலி - பித்துப் பிடித்துப்
பேதலித்துவிடுகிறாள்.

'ஏன்
இப்போதெல்லாம் கோபமாக பேசுவதில்லை
என் மீது
கோபமா?'

என்று அப்பாவித்தனமாகப் பேசுகிறாள் அந்தப் பேதை.

'புதிதாக எடுத்ததாக
புகைப்படமொன்றை அனுப்பினாய்
அதை
பார்த்து இரசிக்க
என்னை
எப்போது அனுப்பி வைப்பாய்!'

என்று உள்ளத்தை மறைக்கத் தெரியாமல் அவள் உளறத் தொடங்கிவிடுகிறாள்.

'எண்ணெய் தேசத்தில்
பணியாற்றுவதென்னவோ நீ
என்ன
கொடுமை
அணைக்க முடியா நெருப்பாய்
கொளுந்து விட்டு
எரிந்து கொண்டிருக்கிறேன் நான்..!
-
இதுதான்
எல்லை தாண்டிய
பயங்கரவாதமோ?'

என்று அந்த அபலை கேட்கும் கேள்வியை 'உண்மைதான்' என்று தலையசைத்து நாமும் ஒப்புக்
கொள்கிறோம்.



காதல் - மனதை மென்மைப் படுத்துகிறது. மானுடத்தை மேன்மைப்படுத்துகிறது.
அதனால்தான் காதலர் இருவரும் கருணையோடு சொல்கிறார்கள்:

'எல்லோருக்கும் ரசிப்புக்குரியதுதான்
புல்லாங்குழலொலி
நமக்கு மட்டும்
அதில்
மூங்கில் காடுகளின்
சோக கீதமாக கேட்கிறதே..'

இதுதான் கதலின் விந்தை! மனசுகளைப் பேசவைக்கும் மந்திரம்தான் காதல்! தம்பி
இசாக்கின் காதலர்கள் ஈராக்கில் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்களோ?...



அணுகுண்டை வீசப் போகிறவனைக்கூட அரைநொடியாவது - தன் கடுஞ்செயலுக்காக கண்ணீர்
வடிக்கச் செய்யும் அகவலிமை காதலுக்கு உண்டு. விலங்குகளை மனிதர்களாகவும் -
மனிதர்களை மாமனிதர்களாய் உயர்த்தவும் -காதலால் முடியும்! அதனால்தான்
கவிஞர்களெல்லாம் கசிந்துருகிக் கண்ணீர் மல்கிக் கரைந்து கரைந்து காதலைப்
பாடுகிறார்கள்!



தம்பி இசாக் எழுதியுள்ள காதல் கவிதைகள் - நம் கண்ணெதிரே - சில ஓரங்க
நாடகங்களை நடத்திக் காட்டுகின்றன. நம் உள்ளங்களைத் தம் வசம் கடத்திக்
காட்டுகின்றன. மேடையாய் நம் இதயம் மிதக்கத் தொடங்குகிறது!



கற்பனைச் சொற்களால் இக்காதல் மாளிகை கட்டப்படவில்லை. ஒப்பனை நினைவுகளாலும்
உருவாக்கப்படவில்லை. விழி வழி நுழைந்து இதயத்தைப் பிழிந்த மொழி இங்கே ஒளி
வீசுகிறது. உள்ளங்களை உருக்கும் சொற்கள் கருக்கொள்கின்றன. தம்பி இசாக்கின் இந்த
உயிர்ச் சித்திரங்களோடு நாமும் உலவி வரலாமா?
Back to top Go down
 
விமர்சனம் மௌனங்களின் நிழற்குடை - இசாக்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» விமர்சனம் --துவிதம்
» விமர்சனம்-- முத்தத்தின் நிறைகுடம்
» விமர்சனம்-- இசை பிழியப்பட்ட வீணை
» விமர்சனம் -- (கத்துக்குட்டி கவிதைகள் )
» { விமர்சனம் } போராளியின் பயணம்---

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: