BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 மனிதன் மாறவில்லை

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 36

PostSubject: மனிதன் மாறவில்லை   Sun Mar 28, 2010 5:11 am

மனிதன் மாறவில்லை
சிறுகதை

"யார் வேணும்?"

"சுசீலாங்கறது...."

"நான் தான். நீங்க...?"

திவாகர் ஒரு கணம் தயங்கி விட்டுச் சொன்னான். "என்னை உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. உங்க கணவர் சோமநாதன் என்னை இங்கே அனுப்பினார்"

கணவரின் பெயரைக் கேட்டவுடன் அந்தம்மாள் முகம் இறுகியது. கண்களில் தீப்பந்தங்கள் எரிந்தன. எல்லாம் ஒரு கணம் தான். மறு கணம் முக இறுக்கம் தளர்ந்து இயல்பான நிலைக்கு வந்தாள். ஆனாலும் வாசற்படியை விட்டு நகர்ந்து அவனை உள்ளே அழைக்கவில்லை. அவனை ஊடுருவிப் பார்த்தபடி கேட்டாள். "உங்களுக்கு அவர் எப்படிப் பழக்கமானார்?"

"கோயமுத்தூரில் ஒரு ஆஸ்பத்திரியில் அவர் இருக்கார். என் சினேகிதன் ஒருவனைப் பார்க்க அங்கே போனப்ப பக்கத்து பெட்டில் இருந்த அவர் பழக்கமானார்."

"சரி சொல்லுங்க, என்ன விஷயம்?"

கண்கள் கலங்க அந்தக் கிழவர் சொல்லியிருந்தார். "எனக்கு டாக்டர் இன்னும் கொங்சம் காலம் தான் கெடு கொடுத்திருக்கார்னு அவளுக்கு நீ தெரிவிக்கணும். நடந்ததுக்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லணும். அவளையும் குழந்தைகளையும் என்னை ஒரு தடவை வந்து பார்க்கச் சொல்லுப்பா. நீ என் மகன் மாதிரி. எனக்காக இந்த ஒரு உபகாரம் செய்யிப்பா"

அவர் சொல்லச் சொன்னதை சொல்லி அதற்காக தான் ஈரோடு வந்ததைத் தெரிவித்தான். சுசீலாம்மாவின் முகத்தில் அதிர்ச்சியோ, துக்கமோ, இரக்கமோ தெரியவில்லை. ஆனால் வாசற்படியில் இருந்து நகர்ந்தாள். "உள்ளே வாங்க"

திவாகர் உள்ளே போனான். வீடு சிறியதாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது.

"உட்காருங்க"

இருந்த இரண்டு நாற்காலிகளில் ஒன்றில் திவாகர் உட்கார்ந்தான்.

"என்ன சாப்பிடறீங்க?"

"எதுவும் வேண்டாங்க. இப்ப தான் சாப்பிட்டு விட்டு வந்தேன்"

இன்னொரு நாற்காலியில் அவளும் அமர்ந்தாள். அமைதியாக அவனையே பார்த்தபடி இருந்தாள்.

அவனே பேசினான். "இப்ப அவர் ரொம்பவே கஷ்டப்படறாருங்க. மத்தவங்க உதவியில்லாம அவரால் இருக்க முடியாதுங்க. என் சினேகிதனும் நேத்து டிஸ்சார்ஜ் ஆயிட்டான். அதனால ஆஸ்பத்திரியில் அவர் கூட துணைக்கு இப்ப என் மனைவியைத் தான் விட்டுட்டு வந்திருக்கேன். பாவங்க அவர்"

அவள் ஒரு கணம் நிதானித்து அமைதியாக அழுத்தம் திருத்தமாக சொன்னாள். "நீங்க அவர் அறுவடை செய்யறப்ப பார்க்கிறீங்க தம்பி. அதனால் அப்படி சொல்றீங்க. அவர் விதைக்கறப்ப நீங்க பார்த்ததில்லை. அதிருக்கட்டும். நடந்ததுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டதா சொன்னாரே, நடந்தது என்னன்னு உங்க கிட்ட சொன்னாரா?"

"ரொம்ப நாளுக்கு முன்னால் உங்களையும் உங்க குழந்தைகளையும் விட்டு ஓடிப் போயிட்டதாய் சொன்னார்"

அவள் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை தவழ்ந்தது. "இந்த மாதிரி ஆள்களோட புத்திசாலித்தனமே தங்களோட தப்பை ரொம்பவும் பொதுவாய் சொல்றது தான். கேட்கறவங்களுக்கும் என்ன இவ்வளவு தானே, மன்னிச்சு விட்டுடக் கூடாதான்னு தோணும். ஒரு பத்திரிக்கையில் மணமகள் தேவைங்கற விளம்பரம் பார்த்து ஆன கல்யாணம் என்னோடது தம்பி. ஏதோ பெரிய உத்தியோகத்தில் இருப்பதாய் பொய் சொல்லி அந்த ஆள் என்னையும் எங்கப்பாவையும் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார். பிறகு தான் உண்மை தெரிஞ்சது. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறக்கிற வரை கூட இருந்தார். இருந்த வரைக்கும் சில நாள் வேலைக்குப் போவார். பல நாள் வீட்டில் சும்மா இருந்து பொழுதைப் போக்குவார். ஆனால் எங்கப்பா வேலையில் இருந்ததால் அவர் சம்பளத்தில் எங்கள் குடும்பம் நடந்தது..."

சொல்லும் போது அந்தம்மாள் அந்த நாட்களுக்கே போய் விட்ட மாதிரி திவாகருக்குத் தோன்றியது. அவள் முகத்தில் துக்கம் தேங்கி நின்றது.

"ஒரு நாள் அப்பாவும் ரிடையர் ஆனார். அவருக்கு சொந்த வீடு வாங்கணும்னு ரொம்ப நாளாய் ஒரு கனவு தம்பி. ஒரு வீட்டைப் பார்த்து பேசியும் முடிச்சுட்டார். கிரயம் செய்யறதுக்கு முந்தின நாள் ரிடையர் ஆகிக் கிடைச்ச பணம், இது வரை சேர்த்து வெச்ச பணம் எல்லாத்தையும் பேங்கிலிருந்து எடுத்து வீட்டில் வெச்சிருந்தார். அன்னைக்கு ராத்திரி அந்த ஆள் எனக்கும் எங்கப்பாவுக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துட்டு என் நகைகள், அப்பாவோட பணம் எல்லாத்தையும் எடுத்துட்டு ஓடிட்டார். போறப்ப என் காது, மூக்கு, கழுத்திலிருந்த நகைகளை மட்டுமல்ல என் தங்கத் தாலிக் கொடியைக் கூட விட்டு வைக்கலை"

பரம சாதுவாய் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருக்கும் அந்த முதியவர் இந்தக் காரியம் செய்தார் என்பதை நம்பவே அவனுக்குக் கஷ்டமாய் இருந்தது. "அப்ப உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்னு எனக்குப் புரியுதும்மா. ஆனாலும் அவர் சாகக் கிடக்கிற இந்த நேரத்தில் நீங்க பெரிய மனசு பண்ணி மறந்து மன்னிக்கணும்மா"

அவள் ஆக்ரோஷத்தோடு சொன்னாள். "அவர் போனதைத் தொடர்ந்து என் வாழ்க்கை சுலபமாய் இருந்திருந்தால் மன்னிக்கலாம். மறக்கலாம். ஆனா அப்படி இருக்கலியே தம்பி. பணமும், மருமகனும் போன அதிர்ச்சியில் என் அப்பா மாரடைப்பால காலமாய்ட்டார். ரெண்டு குழந்தைகளோட நான் நடுத்தெருவில் நின்னேன் தம்பி. அப்பத் தான் நரகம்கிற நாலெழுத்து வார்த்தையோட நிஜ அர்த்தம் எனக்குப் புரிஞ்சது தம்பி. நிராதரவாய் நின்ன என்னைப் பார்த்து, கூடப் படுக்க வர்றியான்னு கூப்பிட்ட அயோக்கியன்களும் இருந்தாங்க. இப்ப அதை நினைச்சாலும் எனக்கு வயிறு பத்தி எரியுது தம்பி. என்னை இப்படியொரு நிலையில் நிக்க வச்சுட்டு எங்க பணத்தில் எங்கேயோ ஜாலியாய் இருந்த ஆளை என்னால் மன்னிக்க முடியும்னு நினைக்கிறீங்களா தம்பி?"

திவாகர் தர்ம சங்கடத்தோடு நெளிந்தான். அவள் அந்த அறையின் மூலையில் இருந்த தையல் மெஷினைக் காண்பித்து தொடர்ந்து சொன்னாள். "எங்களைப் பார்த்து பரிதாபப்பட்டு ஒரு புண்ணியவான் இந்த மெஷினை வாங்கிக் கொடுத்து ஒரு கம்பெனியில் தைக்க ஆர்டரும் வாங்கிக் கொடுத்தார் தம்பி. ஒவ்வொரு நாளும் பன்னிரெண்டு மணி நேரம் இந்த மெஷினில் தைப்பேன். புது வருஷம் தீபாவளின்னா இன்னும் நேரம் கூடும். இப்படி ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்லை தம்பி பதினைந்து வருஷங்கள் உழைச்சேன். அதோட விளைவு இன்னைக்கும் தீராத முதுகு வலியால் அவஸ்தைப் படறேன். பையன் படிச்சு ஒரு சுமாரான வேலையில் இருக்கான். பெண்ணை ஒரு கௌரவமான இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருக்கேன். இப்பவும் அந்த ஆளை ஒரு கிரிமினலாய்த் தான் என் குழந்தைகள் நினைக்கிறாங்க"

திவாகர் ஒரு கணம் அந்தம்மாளின் அன்றைய நிலையை எண்ணிப் பார்த்தான். அந்த நிலையில் மன உறுதி இல்லாத வேறு நபர் இருந்திருந்தால் நிலைமை சீரழிந்து போயிருக்கும் என்பதில் அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை.

அவள் தொடர்ந்தாள். "சம்பந்தமே இல்லாத ஒரு வயதான மனிதனின் கடைசி ஆசையை நிறைவேற்றணும்னு நல்ல மனசோட இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க தம்பி. அதனால தான் உங்களை உள்ளே உட்கார வச்சுப் பேசறேன் உங்களை மாதிரி நல்ல மனசிருக்கிற நாலு பேராலத்தான் இன்னைக்கு நாங்க கௌரவமாக இருக்கோம். யாரோ எக்கேடோ கெட்டுப் போகட்டும்னு இல்லாம இரக்கப்பட்டு எங்களுக்கு உதவி செஞ்ச அந்த சில நல்ல மனுஷங்களுக்கு நாங்க எப்பவுமே கடமைப்பட்டிருக்கோம். ஆனா ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடக்கிற அந்த ஆலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை."

அவள் குரலில் தெரிந்த உறுதியைக் கண்டு அவன் எழுந்து நின்றான். "நான் அவர் கிட்ட என்ன சொல்லட்டும்?"

"அவரை மன்னிச்சு அவர் செஞ்சதெல்லாம் மன்னிக்கக் கூடிய தப்புன்னு அங்கீகரிக்க நாங்க தயாராயில்லைன்னு சொல்லுங்க. சௌகரியப் படறப்ப தப்பு செய்யறதும், தேவைப் படறப்ப திருந்தறதும் வடிகட்டின சுயநலம்னு சொல்லுங்க. பழைய தமிழ் சினிமா வில்லனாட்டம் கடைசி காட்சியில் திருந்தறதை, இப்ப சினிமாவில் கூட யாரும் ரசிக்கறதில்லைன்னு சொல்லுங்க தம்பி". ஆவேசமாகவும் ஆணித்தரமாகவும் வந்தது பதில்.

கடைசி வரை கணவனை 'அந்த ஆள்' என்றே அவள் அழைத்ததையும் ஒரு முறை கூட அவர் உடம்புக்கு என்ன நோய் என்று கேட்காததையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. அந்தம்மாள் சொன்ன எல்லாவற்றிலும் நியாயம் இருந்தது, உண்மை இருந்தது. இத்தனையையும் சமாளித்து அவள் தாக்குப் பிடித்து சாதித்து இருக்கும் விதத்தையும் அவன் மனதாரப் பாராட்டினான். ஆனாலும் மரணப் படுக்கையில் இருக்கும் மனிதனின் பழைய கணக்கைப் புரட்டிப் பார்க்காமல் உடனே பார்க்க அவள் கிளம்பி இருந்தால் இன்னும் உயர்வாக இருந்திருக்கும் என்று அவன் மனதுக்குப் பட்டது. அங்கிருந்து அவன் கிளம்பும் போது போன காரியம் தோல்வி என்று அவருக்குத்னைதெரிவிப்பதெப்படி, அவர் அதை எப்படித் தாங்குவார் என்றெல்லாம் யோசிக்க யோசிக்க அவன் மனதில் கனம் கூடியது.

கோயமுத்தூர் போய் சேர்ந்து அவன் ஆஸ்பத்திரியை அடைந்த போது அவன் மனைவி அவருக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்துக்கொண்டிருந்தாள். "போன ஜென்மத்தில் நீ எனக்கு மகளாய் இருந்திருப்பாய்னு தோணுதம்மா." என்று சொன்னது அவன் காதில் விழுந்தது.

அவனைப் பார்த்தவுடன் தன் குடும்பத்தினர் யாராவது அவன் பின்னால் இருக்கிறார்களா என்று கிழவர் எட்டிப் பார்த்தார். பின்பு ஆர்வத்துடன் அவனைக் கேட்டார். "சுசீலாவையும் என் மகனையும் பார்த்தாயா? என்ன சொன்னாங்க?"

திவாகர் சுசீலாம்மாள் சொன்னதை விவரிக்கப் போகாமல், அவர்கள் மன்னிக்கவோ, மறக்கவோ தயாரில்லை என்பதை மட்டும் ரத்தினச் சுருக்கமாகச் சொன்னான். அவர் முகம் கறுத்தது.

"அந்த சனியனுக நல்லாயிருக்காதுகப்பா. நான் தப்பே செய்யலைன்னு சொல்லலை. ஆனா அதுக்குத் தான் நான் மன்னிப்பு கேட்கிறேனே. வேறொன்னுமில்லையப்பா. அவளை விட்டுட்டு வர்றப்ப அவள் நகைகளைக் கொஞ்சம் எடுத்துட்டு வந்துட்டேன். அவள் அதை இன்னும் மறக்கத் தயாரில்லை. கட்டின புருஷனை விட அவளுக்கு நகைகள் தான் பெருசாயிடுச்சு."

திவாகர் அதிர்ந்து போனான். அவனுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்ல. இது திருந்தி தன் செய்கைகளுக்காக வருந்தும் ஒரு மனிதனின் பேச்சாக இல்லையே.

"அவள் உன்னை சரியாக நடத்தி இருக்க மாட்டாள். அது உன் முகம் பார்த்தாலே தெரியிது. அவள் சார்பில் நான் உன் கிட்டே மன்னிப்பு கேட்டுக்கறேன். எனக்கு மட்டும் என்னைக் கடைசி காலத்தில் பார்க்க நாதி இருந்திருந்தா அந்த நாயிங்க கிட்டே உன்னை அனுப்பிச்சிருக்க மாட்டேன்." என்றவர் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு பழுப்பேறிய காகிதத்தை எடுத்தார். "அந்த மூதேவி என்னைக் கை விட்டுட்டா. இந்த விலாசத்தில் இருக்கிற ஸ்ரீதேவியாவது என் மேல் கருணை காட்டறாளான்னு பார்ப்போம். இவள் என் இளைய தாரம். பழசையெல்லாம் மற்ந்துட்டு உடனையாய் என்னை வந்து பார்க்கச் சொல்லு. அந்த மூதேவி கிட்ட போனதைப் பத்தி இவ கிட்டே மூச்சு விட்டுடாதே. நீ என் மகன் மாதிரி. இத்தனை உதவி செஞ்ச நீ இதையும் எனக்காக செய்யப்பா. ஏழேழு ஜென்மத்துக்கும் உன் உதவியை நான் மறக்க மாட்டேன்...." சொல்லும் போது கிழவரின் குரல் தழுதழுத்தது.

திவாகருக்கு அவரைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. அவர் சட்டைப் பையில் இன்னும் எத்தனை தேவியரின் விலாசங்கள் இருக்குமோ, அவனுக்குத் தெரியவில்லை. உண்மையில் அவருக்கு மன்னிப்போ, பாசமுள்ள குடும்பத்தினரோ தேவையில்லை. அவருக்கு வேண்டியதெல்லாம், இந்தக் கடைசி காலத்தில் அவரைப் பார்த்துக் கொள்ள சில ஆட்கள். மன்னிப்பு, திருந்துவது எல்லாம் அதற்கான யுக்திகள் தான். நினைத்தவுடன் வரும் கண்ணீரும், 'மகன் மாதிரி', 'மகள் மாதிரி' என்ற வார்த்தைகளும் அவனைப் போல் இளகிய உள்ளம் படைத்தவர்களுக்கு அவர் போடும் தூண்டில்கள். சாகப் போகிறவர்கள் எல்லாம் நிஜமாய் திருந்தத் துடிப்பவர்கள் என்றும், கஷ்டப்படுகிறவர்கள் எல்லாம் இரக்கப்படத் தகுந்தவர்கள் என்றும் இது நாள் வரை யதார்த்தமாக நம்பி வந்த அவன் சுலபமாய் அந்தத் தூண்டிலில் சிக்கி விட்டான்.

இது போன்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை இன்னமும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை, இந்த மனிதனுக்காக ஆபிசிற்கு இரண்டு நாள் லீவு போட்டு, குழந்தைகளைப் பக்கத்து வீட்டுக்காரர்களின் பாதுகாப்பில் விட்டு, சேவை செய்ய மனைவியை ஆஸ்பத்திரியில் உட்கார வைத்து, வெளியூர் சென்று விலாசம் தேடி அலைந்து கண்டு பிடித்து அங்கும் 'இந்த ஆளி'ற்காகப் பரிந்து பேசிய தன்னைப் போல் ஒரு பைத்தியக்காரன் இந்த உலகில் இருக்க முடியுமா என்று திவாகர் யோசித்தான். கடைசிக் காட்சியில் கூடத் திருந்தாத இந்த வில்லனிடம் பேசக் கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. மௌனமாக அந்தக் காகிதத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

"சரோஜா, ஒரு நிமிஷம் வா" என்று மனைவியை வெளியே அழைத்து வந்து "வா வீட்டுக்குப் போகலாம்" என்றான்.

"ஐயோ அந்தப் பெரியவர் தனியாக..." என்று அவள் ஏதோ சொல்லப் போனாள்.

"இனி அந்த ஆளைப் பத்தி ஏதாவது பேசினா நான் கொலைகாரனாய் மாறிடுவேன்" என்று ஒரே வாக்கியத்தில் அவள் வாயை அடைத்தான். தெருவிற்கு வந்ததும் முதல் வேலையாக அந்தப் பழுப்பு நிற விலாசக் காகிதத்தை சுக்கு நூறாகக் கிழித்தான். அந்தக் காகிதத் துகள்களை காற்றில் பறக்க விட்டு விட்டு வேகமாய் வீடு நோக்கி நடக்கும் கணவனைப் புரிந்து கொள்ள முடியாமல் திகைப்புடன் சரோஜா அவனைப் பின் தொடர்ந்தாள்.

-என்.கணேசன்
Back to top Go down
View user profile
 
மனிதன் மாறவில்லை
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: