BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 ஆசை ஓர் அசுர விதை

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 36

PostSubject: ஆசை ஓர் அசுர விதை   Sun Mar 28, 2010 5:19 am

ஆசை ஓர் அசுர விதை

ஆன்மீகக் கட்டுரை

நம்மில் பலருக்கும் ஒரு குறிப்பிட்ட ஆசை நிறைவேறி விட்டால் பின்பு வாழ்நாள் முழுவதும் ஆனந்தமாக இருக்கலாம் என்று பல சமயங்களில் தோன்றுவதுண்டு. அப்படி நினைத்த எத்தனையோ ஆசைகள் நம் வாழ்வில் நிறைவேறி இருக்கின்றன. ஆனாலும் அந்தக் கணத்தில் ஏற்பட்ட ஆனந்தம் கடைசி வரை நீடித்ததில்லை. உடனடியாக இன்னொரு ஆசை அதே போன்ற நம்பிக்கை தூண்டிலைப் போட்டு நிற்க, நாம் அதை நோக்கி ஓடுகிறோம். மீண்டும் மீண்டும் ஒவ்வொரு ஆசையாக நோக்கி ஓடும் இந்த ஓட்டத்தை மரணம் வரை ஓடினாலும் ஆனந்தமும் நிறைவும் தொடுவானம் போல தொட முடியாத தூரத்திலேயே இருக்கின்றன.

பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவரான யயாதி சக்ரவர்த்தி ஒரு முறை சுக்ராச்சாரியாரின் சாபத்தினால் மூப்பு அடைகிறான். அவனது ஐந்து மகன்களில் ஒருவருக்கு தன் மூப்பைத் தந்து அவர்களது இளமையை சில காலத்திற்குப் பெற்று வாழ்வின் சுகங்களை அனுபவிக்க எண்ணுகிறான். அதற்குப் பதிலாகத் தன் ராஜ்ஜியத்தையே தருவதாகக் கூறிக் கெஞ்சியும் அவனது முதல் நான்கு மகன்களும் மறுத்து விடுகிறார்கள். பாசம் மிகுந்த கடைசி மகன் புரு தந்தைக்காக இளமையைத் தந்து மூப்பை ஏற்றுக் கொள்கிறான். பல ஆண்டுகள் கழிந்தும் ஆசைகளால் திருப்தியடையாத யயாதி கடைசியில் மகனிடம் வந்து சொன்ன வார்த்தைகள் காலத்தால் அழியாதவை:

"எனக்குப் பிரியமான மகனே! நெய்யினால் அக்கினி ஆறாமல் மேலும் மேலும் ஜொலிப்பது போல விஷய அனுபவத்தினால் ஆசைகள் விருத்தி ஆகுமேயன்றி தணிவது கிடையாது என்பதை இப்போது தான் உணர்கிறேன். நெல்லும், பொன்னும், பசுவும், பெண்களும் மனிதன் ஆசையை ஒரு நாளும் தீர்க்க முடியாது. விருப்பும், வெறுப்பும் இல்லாத சாந்த நிலையை அடைய வேண்டும், அதுவே பிரம்ம நிலை. அதுவே பேரின்பம்". பின்பு இளமையை மகனுக்குத் திருப்பித் தந்து விட்டு, அரசையும் ஆளச் சொல்லி விட்டு, யயாதி வனம் சென்று தவம் செய்து சொர்க்கம் அடைந்தான்.

சரியாகச் சிந்தித்துப் பார்த்தோமானால் யயாதியின் இந்த அனுபவ உண்மையை நாமும் நம் வாழ்வில் உணர முடியும். ஆரம்பத்தில் கூறியது போல நமது எத்தனையோ ஆசைகள் கடந்த காலத்தில் நிறைவேறி இருந்தாலும் மனம் அதை எண்ணி இந்த கணம் திருப்தியாகவா இருக்கிறது? "அதெல்லாம் பழைய கதை. இப்போது இது கிடைத்தால் தான் சந்தோஷம்" என்று ஆசைவயப் பட்ட மனம் புதிய பட்டியலோடு நம்மை பாடாய் படுத்துகிறது.

ரக்தபீஜனின் ரத்தம் சிந்திய இடம் எல்லாம் அசுரர்கள் உருவாவது போல, ஒரு ஆசை நிறைவேறும் போது அதிலிருந்து பல புதிய ஆசைகள் உதயமாகின்றன. அவை ஒவ்வொன்றும் எப்போதும் கோபம், பொறாமை, துக்கம், அகங்காரம் போன்ற பல இலவச இணைப்புகளுடன் வருகின்றன. எதிர்பார்த்த இன்பத்திற்குப் பதிலாக இணைப்புகளுடன் நாம் போராட வேண்டி வருகிறது.

"இதை மட்டும் அடைந்து விடு. பின் ஒரு குறையுமில்லை" என்று ஆசை, ஆசை காட்டும் போது அது தான் உலகத்திலேயே மிகப் பெரிய பொய் என்பதை நாம் உணர வேண்டும்.

நிறைவு என்பது ஆசைகளையும் மாசுக்களையும் களைந்து விட்ட அகத்தின் இயல்பு நிலை. அது என்றுமே புறத்திலிருந்து வருவதில்லை. பணம் பதவி முதலானவை எக்காலத்திலும் எவ்வளவு கிடைத்தாலும் போதும் என்று மனதுக்கு நிறைவு அளித்ததாக சரித்திரம் இல்லை. அவை கிடைத்த போதும் தக்க வைத்துக் கொள்ள மிகவும் பாடுபட வேண்டி இருக்கிறது. கிடைத்தது கையை விட்டுப் போய் விடுமோ என சதா சர்வ காலமும் பயத்துடம் வாழ வேண்டி உள்ளது. அவை நமது தகுதிக்கு மீறியதாக இருந்தாலோ அவற்றால் வரும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் விதமும் நமக்கு இயல்பாக இருப்பதில்லை, ஆனாலும் அவற்றை விடவும் முடியாமல் சமாளிக்கவும் தெரியாமல் திண்டாட வேண்டி வருகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் முள்ளைத் தின்னும் ஒட்டகத்தை இதற்கு உவமையாகக் கூறுவார். வாயில் ரத்தம் வழிவதையும் பொருட்படுத்தாது ஒட்டகம் முட்செடியைத் தொடர்ந்து சாப்பிடுமாம். ஒட்டகத்தை விட ஒரு அறிவு அதிகமுள்ள மனிதனும் அவ்வாறே நடப்பது விந்தையல்லவா?
எதையும் என்ன விலை கொடுத்துப் பெறுகிறோம் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். மன நிம்மதியை விலையாகக் கொடுத்து நாம் நிறைவேற்றிக் கொள்ளும் ஆசை, கண்களை விற்று வாங்கும் சித்திரத்திற்குச் சமமானது.

ஆசைகளை முழுவதும் ஒரேயடியாகத் துறப்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. என்றாலும் ஒவ்வொன்றிலும் ஒரு வரையறை வைத்துக் கொண்டு வாழ்வது ஒரு நல்ல ஆரம்பம். அது அனாவசியமான ஆசைகளையும், தேவையென நாம் நினைப்பவைகளையும் துரத்திக் கொண்டு ஓடும் மாரத்தான் ஓட்டத்தை ஓரளவு குறைக்கும். நமது ஆசைகள் நியாயமானவை தானா, அவசியமானவை தானா என்று சீர்தூக்கி, தெளிந்து குறைத்துக் கொள்ளும் போது நாம் சுமக்கும் பாரத்தை வெகுவாகக் குறைத்துக் கொள்கிறோம். வாழ்க்கை எளிதாகிறது. கண்மூடித் தனமாக ஆசை வழிப் போகாமல் தெளிவாக சிந்தித்து, சீர்தூக்கிப் பார்க்கும் போது தான் மனிதன் தன் வாழ்க்கை லகானைத் தன் கையில் வைத்திருப்பவனாகிறான்.

எனவே ஆசை என்னும் அசுர விதை மனதில் விழும் அந்த முதல் கணத்திலேயே அதை மிகக் கவனமாகக் கையாளுங்கள். அனாவசியமாக அதை நிறைய நேரம் மனதில் தங்க விடாதீர்கள். அது விரைவில் வேர் விட்டு பல மடங்கு பெருகக் கூடியது. அவசியமானதா, நியாயமானதா, தகுதிக்கேற்றதா, கொடுக்கப் போகும் விலை சரி தானா என்றெல்லாம் சிந்தித்து, தேறினால் மட்டும் அதை மனதில் தங்க விடுங்கள். இல்லையென்றால் உடனடியாக அதை மறுபடி எழாதபடி எரித்து விடுங்கள். அவ்வாறு செய்ய முடிந்தால் ஏராளமான பிரச்னைகளில் இருந்தும் உங்களைக் காத்துக் கொள்கிறீர்கள் என்பது உறுதி.


நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்
Back to top Go down
View user profile
 
ஆசை ஓர் அசுர விதை
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: