BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதமிழ்ச் சங்கம் Button10

 

 தமிழ்ச் சங்கம்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

தமிழ்ச் சங்கம் Empty
PostSubject: தமிழ்ச் சங்கம்   தமிழ்ச் சங்கம் Icon_minitimeSun Mar 28, 2010 4:01 pm

சங்கம் என்ற சொல் "கழகம்", "கூடல்" என்று பொருள்தரும் வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். பௌத்தம் இந்தியாவில் உயர்நிலையிலிருந்த காலத்தில் பௌத்த குருமாருடைய கூடல் "சங்கம்" எனப்பட்டது. தற்போதும் இச்சொல் பௌத்தசமயத்துடன் பெரிதும் தொடர்புள்ளது.
இதைவிடக் குறிப்பிட்ட நோக்கத்துடன் பலர் கூடி அமைக்கும் ஒரு குழுவும் "சங்கம்" என அழைக்கப்படுகின்றது. இதன்படி, தமிழ் அல்லது தமிழர் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படும் சங்கங்கள் தமிழ்ச்சங்கங்கள் எனப் பெயரிடப்படுகின்றன. இவ்வாறான தமிழ்ச்சங்கங்கள் பல தமிழகத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ளன.
எனினும், தமிழ் தொடர்பில் சங்கம் என்ற சொல் பண்டைத் தமிழகத்தில் இருந்ததாகச் சொல்லப்படும், தமிழ்ச் சங்கங்களையே விசேடமாகக் குறிக்கும். தொல்பழங்காலத்தில், அக்காலத்துப் பாண்டிய அரசர்களின் ஆதரவில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று தமிழாய்ந்த சங்கங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என இன்று குறிப்பிடப்படும் இச்சங்கங்களில் முதற்சங்கம், கடல்கோளினால் அழிந்துபோன பழைய மதுரையில் இருந்ததாம். இரண்டாவதான இடைச்சங்கமும், இதேபோல இன்னொரு கடல்கொண்ட பழந் தலைநகரான கபாடபுரத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது. கடைச் சங்கம் பாண்டிநாட்டின் பிற்காலத் தலைநகரான மதுரையில் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது.
நக்கீரர் என்னும் புலவரே தானெழுதிய இறையனார் அகப்பொருள் உரை நூலில் இச்சங்கங்கள் பற்றி விபரித்துள்ளார். ஒவ்வொரு சங்கமும் இருந்த காலமும், அச்சங்கங்களில் இருந்த புலவர்களின் எண்ணிக்கைகளையும் இவர் கொடுத்துள்ளார். இதன்படி:
முதற்சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இடைச்சங்கம் 3700 புலவர்களுடன் 3700 ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் இருந்து, 449 புலவர்களுக்கு இடமளித்துள்ளதாம்.
இதன்படி மூன்று சங்கங்களினதும் மொத்தக் காலம் 9990 ஆண்டுகளாவதுடன், முதற்சங்கத்தின் தொடக்கம் அண்னளவாக 12000 வருடத்துக்கு முன் செல்கிறது. தற்போதுள்ள சான்றுகளின்படி, மேற்படி காலக்கணக்கு நிறுவப்பட முடியாத ஒன்றாகும்.
மேற்கூறிய சங்கங்கள் இருந்தது பற்றியே சில ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும், கிறீஸ்து சகாப்தத்துக்குச் சற்று முன்பின்னாகத் தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்று பலர் கருதுகிறார்கள். புறநானூறு, அகநானூறு போன்ற தொகை நூல்கள், சங்ககாலம் என்று குறிக்கப்படும் மேற்படி காலத்தில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மைத் துணிபு.
[b]
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

தமிழ்ச் சங்கம் Empty
PostSubject: சங்க காலத் தமிழர் உணவு   தமிழ்ச் சங்கம் Icon_minitimeSat Apr 10, 2010 7:28 am

இரும்பின் பயன்பாடு. உற்பத்திக் கருவிகளின் முன்னேற்றம் ஆகியவற்றுடன் உழைப்பாளிகளின் உழைப்பும் சேர்ந்ததால் சமூகத்தின் செல்வநிலை உயர்ந்தது. மக்களின் வாழ்க்கை மேம்பட்டது. மனிதனின் அடிப்படைத்தேவைகளான உணவு, உடை உறையுள் ஆகியவற்றின் தரம் வெகுவாக உயர்ந்தது. எண்ணும் எழுத்துமாகிய கலைகள் தோன்றிச் சிறந்தன. கல்வி மேம்பட்டது. இசையும் இசைக்கருவி களான குழல், யாழ்,பாறை. முழா என்பவையும் மேம்பட்டன. கட்டடம் சிற்பம், ஓவியம் நடனம், இசை முதலான கலைகள் செழித்தன. மக்கள் வாழ்வில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் இவ்வளர்ச்சியும் முன்னேற்றமும் அவை தோன்றுவதற்குக் காரணமான உழைப்பாளிகளைச் சென்றடையவில்லை. உழைக்கும் மக்களின் வாழ்வு உயரவில்லை. மாறாக, தாழ்நிலையிலேயே இருந்தது. வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் வாழ்ந்த காலகட்டத்தில் நிலவிய பற்றாக் குறையான நிலையே இப்போதும் இவர்கள் வாழ்வில் நீடித்து நிலவியது.

மனிதன் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில் விலங்குகளை வேட்டடையடினான். அவற்றின் ஊனைப் பச்சையாகவும் தின்றான். சுட்டும் தின்றான். ஊனைப் பச்சையாகத் தின்று ஈரமான கையை வில்லினது புறத்தே தேய்த்துத் துடைத்து விட்டு, புல்லிய தாடியையுடைய காளை போன்ற வீரன் வேற்றுப்புலத்தாரது ஆநிரைகளைக் கவர்தற்காக அப்புலத்தின்கட் புக்கான்’ என்று எயினர் ஊனைப்பச்சையாகத் தின்ற தற்குப் புலவர் உலோச்சனார் சான்றளிக்கிறார்.

‘பச்சூன் தின்று பைந்நிணம் பெருத்த

எச்சில் ஈர்ங்கை விற்புறந் திமிரிப்

புலம்புக்கனனே புல்லணற்காளை’ - (புறநானூறு : 258) என்பது அவர் கூற்று

வேட்டையாடிய விலங்குகளின் ஊனை எயினர் தீயில்சுட்டும் தின்றனர்.

‘முளவுமாத்தொலைச்சிய முழுச்சொலாடவர்

உடம்பிழுதறுத்த வொடுங்காய்ப் படலைச்

சீறில் முன்றிற் கூறு செய்திடுமார்

கொள்ளி வைத்த கொழு நிணநாற்றம்

மறுகுடன் கமழும்” - புறநானூறு : 325

(முள்ளம் பன்றியைக் கொன்ற வீரர்கள் அறுத்தெடுத்த உடும்பின் தசையை ஒடுமரத்தின் கழிகளால் செய்யப்பட்ட படல் சார்த்தப்பட்டசிறிய மனைமுற்றத்தில் பகுத்தளித்தற்பொருட்டு நெருப்பில் சுட்ட கொழுவிய நிணத்தின் மணம் தெருவெல்லாம் மணக்கும்) என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் கூறுகிறார்.

‘செல்வத் தொன்றலோர் வல்வில் வேட்டுவன்

தொழுதன னெழுவேற் கைகவித் திரீஇ

இழுதினன்ன வானிணக் கொழுங்குறை

கானதர் மயங்கிய இளையர் வல்லே

தாம்வந் தெய்தா வளவை யொய் யெனத்

தான் ஞெலிதீயின் விரைவனன் சுட்டுநின்

இரும்பேரொக்கலொடு தின்மெனத் தரீஇ’

(செல்வத்தையும் ஒருவலிய வில்லினையும் உடைய வேட்டுவன், தன்னை வணங்கி ய என்னைக் கை கவித்து இருத்தி, நெய்யிழுது போன்ற வெள்ளிய நிணத்தையடைய கொழுவியதசையைக் கடிதாகத் தான் கடைந்த தீயில் விரைந்து சுட்டு, ‘நினது சுற்றத்துடனே தின்பீராக’ என்று தந்தான்) என்று, வன்பரணர், நள்ளி என்னும் கணசமூகத்தலைவன், காட்டில் தான் கொன்ற விலங்கின் தசையைத் தீயில் சுட்டுப்பசியோடிருந்த பாணர்க்குக் கொடுத்த செய்தியைக் கூறுகிறார். இப்பாடலில் நள்ளி என்னும் வள்ளலின் ‘கம்பீரமும் குறிப்பறிந்தீதல் முதலிய நற்குணங்களும் தௌ;ளிதிற் புலப்பட நின்ற அழகு பாராட்டற்பாலது” என்று உரையாசிரியர் போற்றுகிறார். இப்பண்பு கணசமூகத்தலைவர்களுக்கே வாய்ப்பதாகும். நள்ளி கணசமூகத்தலைவன்.

எயினர் ஊனை வெறுமனேதான் சுட்டுகின்றனர். அதனுடன் உப்பு உறைப்பு நெய் முதலிய எதையும் சேர்க்கவில்லை. அதற்குரிய சமூகச்சூழல் அப்போது அவர்களுக்கு அமையவில்லை. இந்நிகழ்வுகள், வேட்டைச் சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாறாத நிலையினையே உணர்த்துகின்றன எனல் தவறாகாது. ஆனால், மேய்ச்சல் சமூகமாக மாற்ற மடைந்தபின் அவர்கள் ஊனுடன் பால் தயிர் முதலியவற்றையும் உண்டதனை இலக்கியங்கள் கூறுகின்றன.

மேட்டு நிலத்தே விளைந்ததும் ஈந்தின்விதை போன்றதும் ஆன சிவந்த அரிசியாற் சமைத்த சோற்றை நாய் கடித்துக் கொண்டு வந்த உடும்புக்கறியுடன் மக்கள் சமைத்து உண்டதனையும் கரம்பைநிலத்தில் எறும்பு இழுத்துச் சென்று புற்றுக்களில் சேமித்து வைத்திருந்த புல்லரிசியை எயிற்றியர் அப்புற்றைக்கிளைத்தெடுத்து வந்ததனை, நிலத்தில் புதைத்திருந்த மரவுரலிற் பெய்து குற்றி உவர்நீரை உலையாகப் பெய்து முரவுவாய்க் குழிசியை முறியடுப்பில் ஏற்றி வாராமல் சமைத்த புழுக்கலை உப்புக் கண்டத்தோடே தேக்கிலையில் வைத்துப் பாணர்க்குக் கொடுத்துத் தாமும் உண்டதனையும் நமக்குக் காட்டிய சங்க இலக்கியங்கள், சமூகமாற்றத்தால் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காட்டத் தவறவில்லை.

சமூக மாற்றத்தால் வளர்ச்சியும் முன்னேற்றமும் வேகமாக நிகழ்ந்தன. உணவு உற்பத்தி பெருகியது, கால் நடைச் செல்வம் வளர்ந்தது. ஆனால் இவ்வளர்ச்சியும் முன்னேற்றமும் மக்களைச் சென்றடைய வில்லை. அவர்களை அடிமையாக்கவே பயன்பட்டது. சமூகத்தின் செல்வப் பெருக்கத்தை ஆண்டைகளான தனிமனிதர் சிலரே அனுபவித்தனர். மிகப் பலரான உழைக்கும் மக்கள் அடிமைகளாகி அவதியுற்றனர்.

மனிதனது உணவு உடை உறையுள் ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்பட்டது. உப்பும் உறைப்பும் இன்றி ஊனைப்பச்சையாகவும் சுட்டும் தின்று பசியாறிய நிலை மாறியது. காயம் கலந்து நெய்யிற் பெய்து பொரித்துச் சமைத்த ஊனை ‘ நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப உண்டும் தின்றும் இரப்போர்க்கீந்தும்” மனிதன் மகிழ்ந்ததனைச் சங்க இலக்கியங்கள் சுவைபடக் கூறுகின்றன.

‘கொழுந்தடிய சூடென்கோ

வளமனையின் மட்டென்கோ

குறுமுயலின் நிணம் பெய்த

நறுநெய்ய சோறென்கோ” - புறநானூறு “:396

(அவன் எமக்களித்த கொழுவிய துண்டமாகிய சூட்டிறைச்சியைச் சொல்வேனா, வளவிய பூந்தேறலாகிய கள்ளைச் சொல்வேனா, குறுமுயலின் தசை விரவித்தந்த நறிய நெய்யையுடைய சோற்றைச் சொல்வேனா) என்று புலவர்கள் புகழ்ந்தனர், ஆண்டைகள் தமக்களித்த சுவை மிகு ஊன் உணவின் சிறப்பை அவர்கள் போற்றிக் கூறினர்

‘நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்ச+டு

மணிக்கல நிறைத்த மணநாறு தேறல்” என்று நெய்யை மிகுதியாகச் சொரிந்து பொரித்த தாளிதத்தையுடைய சூட்டிறைச்சியையும் மணியிழைத்த வள்ளத்தில் நிறையைப் பெய்த மணங்கமழும் கட்டெளிவையும் ஆண்டைகள் தம்மைப் புகழ்ந்து பாடிய புலவர்களுக்கு மிகுதியாக வழங்கியது குறித்துப் புறநானூறு பேசுகிறது.

‘களந்தோறுங்கள்ளரிப்ப

மரந்தோறும் மை வீழ்ப்ப

நிணவூன் சுட்டுருக்கமைய

நெய் கனிந்து வறையார்ப்பக்

குரூஉக்குய்ப்புகை மழைமங்குலிற்

பரந்து தோன்றா வியனகர்

(இடங்கள் தோறும் கள்ளையரிப்ப, மரத்தடிகள் தோறும் செம்மறியாட்டுக் கிடாயைப் படுப்ப, நிணத்தையுடைய தசைகள் சுடுதலாலே அந்நிணம் உருகுதல் பொருந்த நெய் நிறையப் பெய்து பொரிக்கறிகள் ஆரவாரிப்ப, தாளிப்புப்புகை மேகம் போல் பரந்த அகன்ற வீடுகளையுடைய நகர்) என்று, தசைத்துண்டங்களை நெய்யிற்பெய்து பொரித்துச் செல்வர்கள் உண்டதனை மதுரைக் காஞ்சி (753-58) கூறுகிறது. மனிதன் கணசமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில்

‘ களர் வளரீந்தின் காழ் கண்டன்ன

சுவல் விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி”யும்

‘இருங்கிளை ஞெண்டின் சிறு பார்ப்பன்ன

பசுந்தினை மூரலும்” உண்டதனையும் பச்சூன் தின்றதனையும் நமக்குக் காட்டிய சங்க இலக்கியங்கள் சமூகமாற்றத்துக்குப் பின்,

‘முகிழ்த்தகை

முரவை போகிய முரியா அரிசி

விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்

பரல் வறைக் கருனை காடியின் மிதப்ப”

அயின்றதனை அழகுறக் காட்டுகின்றன.

பெரிய வயலில் விளைந்த நெல்லின் அரிசியிற் சமைத்த சோறு கொக்கின் நகம் போல் இருந்ததனையும் அச்சோற்றைப் பசிய துண்டுகளாகிய பொறிக்கறியுடனும் சூட்டிறைச்சியுடனும் செல்வர்கள் உண்டு களித்ததனையும் புறநானூறு (395) கூறுகிறது.

‘பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர்நிமிரல்

பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி “ என்றும்

‘கொக்குகிர் நிமிரலாற” என்றும் புறநானூறு (345,398,358,) கூறுகிறது.

‘பொன்னறைந்தன்ன நுண்ணேரரிசி

வெண்ணெறிந் தியற்றிய மாக்கணமாலை

தண்ணெனுண் ணிழு துள்ளீடாக

வகையினிற் சேப்பினல்கலும் பெறுகுவிர்”

- பெரும்பாணாற்றுப்படை : 440-43

(பொன்னை நறுக்கினாற் போன்ற நுண்ணிய ஒத்த அரிசியினை வெள்ளையெறிந்து ஆக்கின கரிய இடத்தையுடைய சோற்றுக் கட்டியை, தண்ணென்ற நுண்ணிய நெய் விழுதை உள்ளேயிட்டு உண்ணும்படி நாள் தோறும் பெறுகுவீர்) என்று உயர்தரமான அரிசியிற் சமைத்த சோற்றை, மானின் கொழுவிய தசையை நெய்யிற் பொரித்ததனோடு செல்வர்கள் தாமும் உண்டு தம்புகழ்பாடுகின்ற பாணர்க்கும் வழங்கியதனைச் சங்க இலக்கியங்கள் சுபைபடக்கூறுகின்றன.

உயர்தரமான நெல்லை’ பறவைப் பெயர்படுவத்தம்” என்று பெரும்பாணாற்றுபடை கூறுகிறது. ‘ ராசான்னம் என்னும் பெயர் பெற்ற நெல்லு, ஆகுதிபண்ணுதற்கு இந்நெல்லுச் சோறே சிறந்தது” என்று இதனைக்கூறினார்”.என்று ராசான்னம் என்னும் உயர்தரமான நெல்லில் சோறு சமைத்துச் செல்வர்கள் சுவையாக உண்டது குறித்து நச்சினார்க்கினியர் புகழச்;சியாகப் பேசுகிறார். இவ்வாறு ஆண்டைகளும் அடிமை எஜமானர்களும் ஊனும் நெய்யும் பெய்து உயர்தரமான நெல்லரிசியிற் சமைத்த சோற்றை உண்டு களித்ததற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.

அடிமை எஜமானர்களான ஆண்டைகள் மற்றும் செல்வர் மனைகளில் சமையல் செய்வதற்கெனத்தனியாக அடிமைகள் இருந்தனர். ஆண்களும் பெண்களுமான அவ்வடிமைகள் அவ்வேலைகளைச் செய்தனர். பெண்கள் நெல் குற்றுவோராகவும் சமையல் காரிகளாகவும் சலவைக்காரிகளாகவும் பணி செய்தனர்.

கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை

வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை

அரிசெத்துணங்கிய பெருஞ்செய் நெல்லின்

றெரி கொளரிசித்திரணெடும் புழுக்கல்

அருங்;கடித் தீஞ்சுவை அமுதொடு பிறவும்

விருப்புடை மரபிற் கரப்புடை யடிசில்’

(வளைந்த அரிவாளைக் கொண்ட வடு வழுந்தின கையினையுடைய மடையன் (சமையல் காரன்) ஆக்கின பல இறைச்சியிற் கொழுவிய தசைகளும் நிறத்தால் ஞாயிற்றையொத்து, உலர்ந்த பெரிய வயலில் விளைந்த செந்நெல்லினுடைய பொறுக்கிக் கொண்ட அரிசியாலாக்கின திரண்ட இடைமுரியாத சோறாகிய, பெறுதற்கரிய மிகுதியினையும் இனிய சுவையையும் உடைய அடிசிலை, வெள்ளிக்கலங்களைப் பரப்பிப் பாணர்க்கு உண்பித்தனர்) என்று பெரும்பாணாற்றுப்படை (471 – 476) கூறுகிறது. செல்வர்மனைகளில் அடிமைகளான ஆடவர் சமையல் வேலைசெய்ததனை மேற்குறித்த பாடலடிகள் உணர்த்துகின்றன. இச்செய்தி முன்னர்க் கூறப்பட்டுள்ளது.

அடிமைகளின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த ஆண்டைகள் வேலை எதுவும் செய்யாமல் சோம்பேறிகளாகவே காலங்கழித்தனர். உண்பதும் தின்பதும் மதுவகைகளைக் குடிப்பதும் பரத்தையரோடு காமக்களியாட்டங்களில் திளைப்பதுமாக அவர்கள் பொழுதைப் போக்கினார்கள். அவர்களது வீட்டு வேலைகள் வயல்வேலைகள் முதலிய அனைத்தையும் அடிமைகளான களமர்களே செய்தனர். களமர் உழுதுண்ணும் வேளாளர் எனப்பட்டனர். அவர்களின் உழைப்பைச் சுரண்டிக்கொழுத்த ஆண்டைகளும் அடிமை எஜமானர்களும் உழுவித்து உண்ணும் வேளாளர் எனப்பட்டனர். உழுவித்து உண்ணும் வேளாளர் என்னும் தொடரே, அடிமை எஜமானர்கள் வேலை எதுவும் செய்யாமல் உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்தனர் என்ற செய்தியை உணர்த்துகிறது. அவர்கள் சுவை மிகு உணவுவகைளைச் சூடாக உண்டு சோம்பேறிகளாக வாழ்ந்தனர். அவர்களால் சமூகத்தில் அனைத்து விதமான ஒழுக்கக் கேடுகளும் பெருகலாயின. அவர்கள் உண்ட உணவின் சூட்டினால் தான் அவர்களுக்கு உடல் வியர்த்தது: உழைப்பால் அவர்களுக்கு உடல் வியர்க்கவில்லை.

‘நெடுநீர நிரை கயத்துப்

படுமாரித் துளிபோல

நெய்துள்ளிய வறை முகக்கவும்

சூடுகிழித்து வாடூன் மிசையவும்

ஊன் கொண்ட வெண்மண்டை

ஆன் பயத்தான் முற்றளிப்வும்

வெய்துண்ட வியர்ப்பல்லது.

செய்தொழிலால் வியர்ப்பறியாமை’ - புறநானூறு : 386

(நீர் நிறைந்த குளத்தின் கண் வீழ்கின்ற மழைத்துளி போலத் துள்ளித் தெறித்த புத்துருக்கு நெய்யில் பொறிக்கப்பட்டகொழுவிய ஊன் துண்டங்களின் வறுவல்களை முகந்து உண்ணவும் சூட்டுக்கோலால் கிழித்துச் சுடப்பட்ட ஊனைத் தின்னவும் ஊனைப்பெய்து வைத்த வெள்ளியாலாகிய உண்கலத்தில் ஆவின் பால் நிறைந்து வழியவும் உண்பவற்றைச் சுடச்சுட உண்டதனால் உடல் வியர்த்ததேயன்றிச் செய்தொழிலால் உடல் வியர்த்திலது) என்று, இரவலராகிய பாணரது உடல் வியர்ப்புக்குப் புலவர் காரணம் கூறினார். இக்காரணம், புரவலரான அடிமை எஜமானர் களுக்கும சாலவும் பொருந்தும்,

செல்வர்கள் வேலை எதுவும்’ செய்யாமல்வெறுமனே சோம்போறிகளாய் தின்று கொழுத்துத் திரிந்ததால் அவர் தம் கைகள் மெத்தென்று மென்மையாக இருந்தன. அது குறித்துப் புறுநனூறு (14) கூறும் செய்தி இது :

புலவுநாற்றத்த பைந்தடி

பூநாற்றத்த புகை கொளீஇ யூன்றுவை

கறிசோறுண்டுவருந்து தொழிலல்லது

பிறிதுதொழிலறியாவாக லினன்றும்

மெலிய ..............................................

................................... பாடுநர் கையே’

(நின்னைப் பாடுவாரது கைகள் புலால் நாற்றத்தையுடைய வாகிய செவ்வித்தடியைப் பூநாற்றத்தாவகிய புகையைக் கொளுத்தி அமைந்த ஊனையும் துவையலையும், கறியையும் சோற்றையும் உண்டு வருந்துஞ் செயலல்லது வேறு செயல் அறியா வாகலின் அவைதாம் பெரிதும் மெலிய வாயின) என்று, புலவரது கையின் மெத்தென்ற தன்மைக்குக் கபிலர் காரணம் கூறினார். அக்காரணம் செல்வர்க்கும் பொருந்தும் என்பது சரியான கூற்றோகும்.

ஆனால் களமர்கள் கடினமான வயல் வேலைகள் அனைத்தும் செய்தமையால் அவர்களது கைகள் காய்த்துத்தழும்பேறிக் கடினப்பட்டிருந்தன. இதனை ‘வடுவாழ்நோன்கை மடியா வினைஞர்” என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. மரங்களை வெட்டுகையினால் கோடரி பிடித்துக் காய்ப்பேறின உழைப்பாளிகளின் கைகளை ‘மழுத்தின் வன்கை” என்று அந்நூல் (170) கூறுகிறது.

அடிமைகளான களமர் ஆண்டைகளுக்காக அனைத்து விதமான வேலைகளையும் செய்தனர். அவர்களின் வயலில் உழுது நீர்பாய்ச்சினர். தொளிகலக்கி நாற்று நட்டனர். களைபறித்துப் புள்ளோப்பிக் காவல் காத்தனர். நெல்லரிந்து போரடுக்கினர். கடாவிட்டுப் பிணையலடித்தனர். பொலிதூற்றி நெல்லை மலைபோலக் குவித்தனர். குவித்த நெல்லை ஆண்டைகளின் மனைகளில் இருந்த ஏணிக்கு எட்டாத உயரத்தையுடைய நெற் கூடுகளில் கொண்டு போய் இட்டு நிரப்பினர்.

ஆண்டைகளுக்காக அடிமைகள் நெல் குற்றினர். சமையல் செய்தனர். அழுக்கான உடைகளைத் துவைத்து வெளுத்துச் சலவை செய்து கொடுத்தனர்- ஆண்டைகளின் பிள்ளைகளுக்குப் பால் கொடுத்துப் பராமரித்தனர். அலங்கரித்து அழகுபடுத்தினர். ஆண்டைகள் செத்தால் அவர்களின் பிணங்களை இடுதலும் சுடுதலுமாகிய ஈமச் செயல்களையும் அடிமைகளே செய்தனர். இவ்வாறு ஆண்டைகளுக்காக அனைத்துவிதமான பணிகளையும் செய்தாலும் அடிமைகளுக்கு ஆண்டைகள் பழைய சோற்றையே உண்ணக் கொடுத்தனர். அதனை உண்ணும் அவல நிலையிலே அடிமைகள் இருந்தனர்.

‘அடிமைகள் ஆண்டைகள் தரும் பழைய சோற்றையே உண்ண வேண்டும். அவர்கள் உடுத்துக் களைந்த பழைய உடைகளையே உடுக்க வேண்டும். என்பது, அடிமைச் சமூகம் தோன்றிய காலம் முதலே அவர்கள் விஷயத்தில் ஆண்டைகளால் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை விதியாகவே இருந்துள்ளது.

செல்வர் மனைகளில் அடிமைப் பெண்கள் சமையல் பணிகளைச் செய்து வந்தனர் என்பது முன்னர்க் கூறப்பட்டது. பூணிட்டு மாட்சிமையுறுவித்த பருத்த உலக்கையால் அடிமைப்பெண்கள் குற்றிய அரிசியை அடுமகள் சோறாக்கினாள். அச்சோற்றைக் காடிநீர் பெய்தவெள்ளுலையில் இட்டு வைத்தாள். மாங்காயைப் பிசைந்து செய்த புளிக்குழம்பும் வரால் மீனின் இறைச்சியும் சுறாமீனின் இறைச்சியும் கொண்டு (எண்ணெயும் நெய்யுமின்றி) சமைத்த குழம்பும் ஆகிய இவற்றை நாளுக்கு ஒன்று வீதம் செய்து அப்பழைய சோற்றுக்கு உள்ளீடாகப் பெய்து தந்தாள். வயலிலும் வைக்கோலிலும் நாளெல்லாம் உழைத்துக் களைத்த அடிமைகளான களமர் அப்பழைய சோற்றை உண்டு பசியாறினர். உழைப்பாளிகளான அடிமைகளுக்கு ஆண்டைகள் பழைய சோற்றை உண்ணக் கொடுத்து அவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்தனர். இதனை

‘அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்

தொடிமாணுலக்கைப் பரூஉக் குற்றரிசி

காடி வெள்ளுலை கொளீஇ நீழல்

ஓங்கு சினைமாவின் தீங்கனி நறும்புளி

மோட்டிரு வரா அற் கோட்டு மீன் கொழுங்குறை

செறுவின் வள்ளை சிறு கொடிப் பாகற்

பாதிரி யூழ் முகையவிழ் விடுத்தன்ன

மெய்களைந்தினனொடு விரைஇ

மூழ்ப்பப் பெய்த முழுவவிழ்ப் புழுக்கல்

அளிகளிற் படுநர் களியட வைகிற்

பழஞ்சோறயிலும்’ - புறநானூறு : 399

என்றும்

‘மென்புலத்து வயலுழவர்

வன்புலத்துப் பகடுவிட்டுக்

குறு முயலின் குழைச் சூட்டொடு

நெடுவாளைப் பல்லுவியற்

பழஞ்சோற்றுப் புக வருந்தி - புறநானூறு : 395

(மென் புலமாகிய மருத நிலத்து வயல்களில் தொழில்புரியும் உழவர்கள் வன்புலமாகிய முல்லை நிலத்தில் தம் எருதுகளை மேயவிட்டு, குறு முயலின் குழைந்த சூட்டிறைச்சியுடன் நெடிய வாளை மீனைக் கொண்டு (நெய்பெய்யாமல்) செய்த அவியலைப் பழைய சோற்றுடன் உண்டனர் என்றும் அடிமைகள் பழைய சோற்றை உண்டதைப் புறநானூறு கூறுகிறது. இப்பாடல்களில் நெய் என்ற சொல்பெய்யப்படாமை நோக்கத்தக்கது. அடிமைகளுக்கு ஆண்டைகள் வழங்கிய சோற்றில் நெய் பெய்யப்படவில்லை என்பதை இப்பாடல்களில் நெய் என்ற சொல் பெய்யப்படாமை உணர்த்துகிறது.

உழைக்கும் மக்களுக்கு மட்டுமல்லாது, அவர்களது குழந்தைகளுக்கும் பழைய சோறே வழங்கப்பட்டது. ஆனால் அக்குழந்தைகள் பழைய சோற்றை வெறுத்து உண்ண மறுத்தனர். அதனை வெறுத்த அக்குழந்தைகள் அவல் இடித்து உண்டுபசியாறினர். இதனை,

‘இரும்பு வடித்தன்ன மடியா மென்றோற்

கருங்கை வினைஞர் காதலஞ் சிறாஅர்

பழஞ்சோற்றமலை முனைஇ வரம்பிற்

புதுவை வேய்ந்த கவிகுடில் முன்றில்

அவலெறி உலக்கைப்பாடு” – பெரும்பாணாற்றுப்படை 222-26.

(இரும்பைத் தகடாக்கினாற் போன்ற திரையாத தோலை யுடைய வலிய கையால் தொழில் செய்வாருடைய அன்புக்குரிய அழகிய சிறுபிள்ளைகள் பழைய சோற்றினது கட்டியை வெறுத்தனர். அதனால் வரம்பிடத்துப் புதிய வைக்கோலால் வேய்ந்த கவிந்த குடிலின் முற்றத்தில் அவல் இடித்து உண்டனர்) என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகிறார்.

வயலில் உழைத்த கடையர் கடைசியர் முதலான அடிமைகளுக்கு மட்டுமல்லாது, அவர்தம் பிள்ளைகளுக்கும் பழையசோறே ஆண்டைகளால் வழங்கப்பட்டது என்பதனை மேற்குறித்த பாடலடிகள் தௌ;ளிதின் உணர்த்துகின்றன.

செல்வர்களான ஆண்டைகள் பன்றி, மான், முயல், வெள்ளாட்டுக் கிடாய் செம்மறியாட்டுக்கிடாய் முதலியவற்றின் கொழுத்த இறைச்சியை நெய் நிரம்பப் பெய்து வறுத்தும் பொரித்தும் சுவைபட உண்டனர். அவ்வுணவின் சிறப்பை ‘பைநிணம் ஒழுகிய நெய்மலி அடிசில்” என்று புறநானூறு புகழ்கிறது. ஆனால் ஆண்டைகளின் வயலில் உழைத்த அடிமைகளுக்குப் பழைய சோற்றையே அவர்கள் வழங்கினர்.

நாளெல்லாம் நெல்லரிதல், போரடுக்குதல், கடா விடுதல், பொலி தூற்றுதல் முதலான வேலைகளைச் செய்த களமர் அவ்வேலைக்களைப்பை மறத்தற் பொருட்டுக் கள் உண்டனர்.அதனை அவர்கள் ஆம்பல் இலையில் தான் வாங்கியுண்டனர். இதனை ‘அகலடை அரியல் மாந்தி” என்று புறநானூறு கூறுகிறது. அவ்வாறு கள் அருந்தும் போது பக்குவம் செய்யப்படாத ஊன் துண்டங்களையே தொடுகறியாக உடன் உண்டனர். அவை நெய் பெய்து பொரிக்கப்படவில்லை. உப்பும் உறைப்பும் இட்டுப் பக்குவம் செய்யப்படவில்லை. இதனை. ‘திருந்தா மூரிபரந்துபடக்கெண்டி அரியலார்கை உண்டினிதுவக்கும்” என்று கல்லாடனர் புறநானூற்றில் குறித்துக் காட்டுகிறார்.

அகலடை ஸ்ரீ அகன்ற இலை, அரியல் ஸ்ரீ கள்

கரும்பனூர் கிழான்

கரும்பனூர் தொண்டை நாட்டிலுள்ள ஓர் ஊர், நீர்வளமும் நிலவளமும் மிக்க அவ்வூரில் நெல்லும் கரும்பும் மிகுதியாக விளைந்தன. கரும்பனூர் கிழான் என்பவன் அவ்வூர்த்தலைவன், அவ்வூரின் வயல்கள் அனைத்தும் அவனுக்கே உரியவை என்பதனைக் கிழான் என்ற சொல்லே உணர்த்துகிறது. ஆண்டையாகிய அவனது செல்வச் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் புலவர் புறத்திணை நன்னாகையார் புகழ்ந்து பாடுகிறார். அவனது கொடைச் சிறப்புக் குறித்துக் கூறும்புலவர்,

‘ஊனுமூணும் முனையின் இனிதெனப்

பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்

அளவு பு கலந்து மெல்லிது பருகி

விருந்துறுத் தாற்றி யிருந்தனம்” – புறநானூறு:381

(இறைச்சியும் சோறுமாகியவற்றைத் தின்று தெவிட்டி வெறுப்புற்றதால் பால் கலந்து செய்த பாயசம் போல்வனவும் வெல்லப்பாகு கொண்டு செய்த பணிகாரம் போன்றனவும் ‘ இது மிக இனிது” என்னுமாறு நன்கு கலந்து உண்டு விருந்தாகிப் பசிபோக்கிப் பன்னாள் இருந்தனம்) என்று விதந்து கூறுகிறது.

அவன் புலவர்க்கு நெய்யும் நிணமும் நிரம்பப்பெய்து சமைத்த ஊனுணவை மிகுதியாகக் கொடுத்து உண்ணச் செய்த செயலையும் பெருமிதம் தோன்றப் புகழ்ந்துரைக்கிறார்.

நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை

மண்ணாணப் புகழ் வேட்டு

நீர்நாண நெய் வழங்கிப்

புரந்தோனெந்தை யாமெவன்றொலைவதை

அன்னோனையுடைய மென்ப வினிவறட்கி

யாண்டு நிற்க வெள்ளி மாண்டக

உண்டநன்கலம் பெய்து நுடக்கவும்

தின்ற நன் பல் ஊன் தோண்டவும்

வந்தவைகலல்லது

சென்ற வெல்லைச் செலவறியேனே” – புறநானூறு : 384

என்று நிணம் கலந்த கொழுவிய சோற்றுணவில் நீரினும் மிகுதியாக நெய் பெய்து வழங்கியதைப் புலவர் புகழ்ந்து கூறுகிறார். நீர் நாண நெய்கலந்து நிணம் பெய்து ஆக்கிய சுவை மிகு சோற்றைச் சூடு குறையாமல் நாள் தோறும் தானும் உண்டு தன்னைப் புகழ்ந்துபாடிய புலவர்களுக்கும் வழங்கினான். அதனை உண்டு செருக்குற்ற புலவர், ‘உண்ணப் படாது எஞ்சியவற்றை இலையிடைவைத்து மடித்துப் புறத்தே எறியவும் ஊனைத் தின்றதனால் பற்களின் இடையில் சிக்கிக் கொண்டவற்றைத் தோண்டியெடுக்கவுமாக உண்ணக்கழிந்த நாட்களை எண்ணியறிந்திலனே” என்று பெருமிதமாகக் கூறுகிறார்.

புலவருடன் புரவலனாகி கரும்பனூரனும் உண்டு மகிழ்ந்த செய்தியை உவப்புடன் கூறிய புலவர், அவனது வயல்களில் காலமெல்லாம் உழைத்துக் களைத்த களமரின் நிலை பற்றியும் நமக்குக் கூறுகிறார்.

வாழ்நாள் முழுவதும் வயல்களில் உழைக்கின்ற உழவர்களுக்கு வாழ்வில், ஊரில் திருவிழா முதலியன நிகழுங்காலங்களில் தான் ஊனும் மீனும் உண்ண வாய்ப்புக் கிடைக்கும். பிறநாட்களில் அவர்கள் அதை நினைத்தும் பார்க்க முடியாது. இது, வறியவர் வாழ்வில் அன்றாடம் நிகழும் உலகியல் உண்மை ஆகும்.

ஆனால் கரும்பனூரது வயல்கள் நீர்வளம் மிக்கவையாகையால் அங்கு எல்லா நாட்களிலும் மீன் மிகுதியாகக் கிடைக்கும், அதனால் அடிமை களான உழவர்களின் உண்கலங்களில், ஊன் உணவு இன்றெனினும் மீன் உணவு நாள் தவறாமல் இருந்தது. அந்த மீனை அவர்கள் சுட்டும் தின்றனர். அவித்துச்சமைத்தும் உண்டனர். அவற்றைச் சமைக்குங்கால் நெய் முதலியன பெய்து சமைக்க வில்லை. வெறுமனே சுட்டும் சமைத்துமே தின்றனர், சுட்ட மீனைத் தின்று கள்ளைக் குடித்துக் காலங்கழித்தனர். இச்செய்தியை,

விழ வின்றாயினும் உழவர் மண்டை

இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து”

என்று புறநானூறு (384) பேசுகிறது.

கரும்பனூர் கிழான் தனக்கு வழங்கிய நிணம் பெருத்த சோற்றுணவில் நீர் நாண நெய்பெய்து வழங்கிய செய்தியைக் கூறிய புலவர், உழவர் உண்கலங்களை நிறைத்த மீனைப் பற்றிச் சொல்லும் போது, நெய் பெய்தது பற்றிக் குறிப்பு எதுவும் கூறவில்லை என்பது நம் கவனத்துக்குரியதாகிறது. இப்பாடல் ஆண்டைகளுக்கும் அடிமைகளுக்கும் இடையேயான ஏற்றத் தாழ்வினை நமக்குத் தெளிவுறக் காட்டுகிறது என்பது மிகையன்று.

மனிதன் கணசமூகமாக விலங்குகளை வேட்டையாடியும் நிரை மேய்த்தும் வாழ்ந்த காலகட்டத்தில் தேக்கிலை, வாழையிலை, பனையோலை முதலிய வற்றிலே தான் உணவை உண்டான். ஊனைப் பச்சையாகவும் உண்டான், சுட்டும் தின்றான். மூங்கிற்குழாயிலும் பனையோலையிலும் மட்கலங்களிலும் கள்ளையுண்டான்.

அடிமைச் சமூகத்தில் ஆண்டைகள் பொன் வெள்ளி முதலியவற்றால் மணியிழைத்துச் செய்யப்பட்ட வள்ளங்களில் உயர்தரமான மதுவகைகளை அழகிய மங்கையர் பெய்துதர உண்டு மகிழ்ந்தனர். அக்கலங்களில் நெய் பெய்து நிணம் கலந்து ஆக்கியசுவை மிகு சோற்றுணவைச் சூடு குறையாமல் உண்டு மகிழ்ந்தனர்.

ஆனால் அடிமைகளான களமர் பனங்கள்ளையும் அரியலையும்; பனையோலையிலும்ஆம்பல் இலையிலும் தான் வாங்கியுண்டனர். ஆண்டைகள் வழங்கிய பழைய சோற்றையே உண்டனர். தாம் பிடித்த மீன் முயல் முதலியவற்றின் தசைத்துண்டங்களை நெய் முதலியன பெய்யாமல் சுட்டும் அவித்தும் தின்றனர். அடிமைகளின் வாழ்வில் வேட்டைச் சமூகத்து அவலம் தொடர்கதை யான செய்தியைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
Back to top Go down
 
தமிழ்ச் சங்கம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச் சிறுவன்:
» சங்கம் காண்போம் (05)
» சங்கம் காண்போம்
» சங்கம் காண்போம் (02)
» சங்கம் காண்போம் (03)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: