BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 புலமை மெல்லியலார்கள் [வெள்ளி வீதியார் ,ஆதிமந்தியார் }

Go down 
AuthorMessage
Fathima

avatar

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 33
Location : srilanka

PostSubject: புலமை மெல்லியலார்கள் [வெள்ளி வீதியார் ,ஆதிமந்தியார் }   Mon Mar 29, 2010 3:31 am

ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனார், மரபியலில்,

'மாவு மாக்களு மையறி வினவே.'
'மக்கள் தாமே யாற்றி வுயிரே.'

என்பனவற்றால், மானிடரை மாக்கள், மக்கள் என இருதிறத்தினராகப் பகுத்தோதினார். மாக்கள் எனப்படுவார், ஐம்பொறியுணர்வுமட்டிற் பெற்று மனவுணர்ச்சி யிலராயினாரெனவும், மக்கள் எனப்படுவார், ஐம்பொறி யுணர்வேயன்றி மனமென்பதோ ரறிவும் உடையரயினர் எனவுங் கூறுவர். இது மானிடரை அறிவுவேற்றுமைபற்றிப் பகுத்த பகுப்பாகும்.

இனி, அவயவவெற்றுமைபற்றி, மானிடர், ஆண் பெண் என இருதிறத்தின ராவர். ஆணியல்பு மிக்க அலி ஆண்பால் எனவும், பெண்ணியல்பு மிக்க பேடி பெண்பால் எனவும் வழங்கப்படுமாதலின், அவயவம்பற்றிய பகுப்பும் இரண்டே என்னலாம். இவ்வாறே, ஒவ்வொரு குறையுடைய ஊமும் செவிடும் குருடும் பிறவும் இவ் விருபாலுள்ளே அடங்குதலுங் காண்க. அவயவ வெற்றுமையான் இருதிறத்தினராய மானிடரே அறிவுவேற்றுமையான் மாக்கள், மக்கள் எனப்பட்டனராதலின், ஆண்பாலினும் மாக்களும் மக்களும் உண்டென்பதும், அவ்வாறே பெண்பாலினும் மாக்களும் மக்களும் உன்டென்பதும அவர்க்கு உடன்பாடாம். இதனால் ஆசிரியர் எத்துணை அறிவுண்மையும் அறிவின்மையும் ஆண்பாற்கு உடன்பட்டாரோ அத்துணையும் பெண்பாற்கும் உடன்பட்டாராதல் தெளியப்படும்.

களவியலுள், 'ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப' என வுரைத்து, அத்தலைவற்கும் தலைவிக்கும் உள்ள ஒப்புமைவகையினை விரித்தோதுவாராய், மெய்ப்பாட்டியலில்,

'பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே யருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த வொப்பினது வகையே'

என்றாராகலின், ஆண்பாற்கொத்த ஆண்மையும், உணர்வும் பிறவும் பெண்பாற்கும் ஒக்கும் என்பதும் உடன்பட்டனராவர். இதனால், ஆண்மையும் அறிவும் ஆண்பாலார்க்கே சிறந்தது என்பது ஆசிரியர்க்கு உடன்பாடன்மை யுணரப்படும். மற்றுக் களவியலுள், 'பெருமையும் உரனும் ஆடூஉ மேன' என்றாராலெனின், அவர் பொருளியலுள்,

'செறிவும் நிறைவுஞ் செம்மையுஞ் செப்பும்
அறிவு மருமையும் பெண்பா லான'

எனக் கூறினாராதலின், ஆண்பாலினை உயர்த்துரைக்கு முகத்தாற் பெண்பாலினை இழித்தாரென்றால் பொருந்தாதாகும்.

செறிவாவது அடக்கம்; நிறைவாவது மறை புலப்படாமல் நிறுத்தும் உள்ளம்; செம்மையாவது மனக்கோட்ட மின்மை; செப்பாவது செய்யத் தகுவன கூறுதல்; அறிவாவது நன்மை பயப்பனவும் தீமைபயப்பனவும் அறிதல்; அருமையாவது உள்ளக்கருத்தறித லருமை என்பர். இவ்வறுபெருங் குணங்களும் ஆண்பார் கோதிய பெருமை உரன் என்னும் இரண்டற்குஞ் சிறிதுந் தாழ்ந்தனவாகாமை உய்த்துணர்க. மகளிர்க்கே சிறந்த சில இயற்கை வேற்றுமையினை நன்றாய்ந்து, ஆசிரியர், கிழவோள் பணிவும் கிழவோன் உயர்வும் உடன்பட்டனரல்லது வேறு எவ்வகை அறிவு வேற்றுமையும் உடன்படாமை கண்டுகொள்க. இதுவே தெய்வப்புலமை திருவள்ளுவனார்க்கும் கருத்தென்பது, அவர், 'அறிவறிந்த மக்கட்பேறு', 'நன்மக்கட் பேறு', 'பேதையார் கேண்மை', ' பேதையார் சொன்னோன்றல் ', 'மடவார்ப் பொறை' என்னுமிடங்களில், ஆண் பெண் இருபாலார்க்கும் பொதுப்பட வழங்கிய பெயர்களானே ஆய்ந்தறியத் தக்கது. 'வகைதெரிவான் கட்டே யுலகு' என்பது முதலாக ஆண்பாலாற் கூரியனவெல்லாம் 'நஞ்சுண்டான் சாம்' என்புழிப்போல ஒருபாற் கிளவி எனைப்பாற்கண்ணுஞ் சேறற்குரிய என்பதுபற்றித் தலைமையாற் கூறினாராவர்.

இனி, வடநூலுள் ஒருசாராசிரியர் மதம் பற்றிப் பரிமேலழகர் பெண்பாலாரை ஆண்பாலாரோடு ஒத்த அறிவெய்தற்கு உரியரல்லராகக்கொண்டு,

'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்'

என்புழி, 'பெண்ணியல்பாற் றானாக அறியாமையிற் "கேட்ட தாய்" எனக் கூறினார்' என்றார். அவர், ஆடவருடைய அறிவொழுக்கங்களின் அருமையறிதற்கும் உரியரல்லரெனக் கருதியமை காண்க. அந்நிலைய பெண்பாலார் பலருளரால் எனின், அந்நிலைய ஆண்பாலாரும் பலருளர் என்க. தன் மகனென்னுந் தொடர்புபற்றி யுளதாகும் அன்புமேலீட்டாற் குணமும் குற்றமும் நாடுமிடத்துக் குற்றந் தோன்றாது மறையினும் மறையும்; அவற்றை யுள்ளவாறாராய்ந்து குணமிகுதிகண்டு சான்றோரெனவல்லார் பிறரே யாதலானும், தானறிந்ததனோடொப்பத் தன்னையொத்தாரும் மிக்காரும் கூறியவழியே தனக்கு மகிழ்ச்சி யுளதாதலானும், 'கேட்டதாய்' என்றார் எனக்கூறல் ஆண்டைக் கியைபுடைத்தாம். பிறர் கூறியவழித் தன்னறிவு மாறுபடினும், தானறிந்த வழிப் பிறர்கூற்று மாறுபடினும் தனக்கு மகிழ்ச்சியின்றாதலுங் கண்டுகொள்க. 'சான்றோ ரென்கை யீன்றோர்க் கின்பம்' என்பதூஉம் இக்கருத்தேபற்றி வந்தது.

மற்றும் அவ் வடநூலுள் ஒருசாரார், சூத்திரசாதியாரும் பெண்பாலாரும் வேதத்தின் சொல்வழக்கும் பொருளுணர்ச்சியும் மெய்யுணர்தலும் வீடும் எய்தப்பெறார் என்று கூறி, அவரை அறியாமையுள்ளே நிறுத்துப. இஃதெல்லார்க்கும் உடன்பாடன்று. பெரும்பாலார் வேதத்தை முறையே நியமிக்கப்பட்ட ஒலியுடன் ஓதற்கண் சூத்திரசாதியாரையும் பெண்பாலாரையும் விலக்குபவல்லது, அதன் சொல்வழக்கினும் பொருளுணர்ச்சியினும் மெய்யுணர்ந்து வீடுபெறுதலினும் விலக்கார். இதுவே இத் தமிழ்நாட்டுச் சிறந்த சைவ வைணவ நல்லாசிரியர் தொன்னெறி மரபாம். சைன பௌத்தரும் மெய்யுணர்ந்து வீடு பெறுதற்கண் மகளிரை விலக்காரென்பது, அவரவர் நூல்களான் நோக்கித் தெளிக. அவருள் ஆரியாங்கனைகளும், பிக்குணிகளும் எனத் துறவொழிக்கம் பூண்டு வீடுபேறு முயலும் பெண்பாலாரும் உளராதல் அறிந்துகொள்க.

இனி, ஆண்மக்கள் காமத்தாற் கண்மயங்கிப் பிறனில் விழைந்தும் பெண்வழிச்சென்றும் வரைவின்மகளிர்ச் சேர்ந்தும் கேடுறாது பாதுகாத்தற்கண், பெண்பாலைப் பழித்து ஆண்பாற்கு அறிவுறுத்துப. அங்ஙனம் வருமாறு

'பெண்ணி னாகிய பேரஞர் பூமியு
ளெண்ண மிக்கவ ரெண்ணினு மெண்ணிலார்.'

'புரிவளை முன்கைப் புனையிழை நல்லார்
விரகில ரென்று விடுத்தனர் முன்னே.'

'பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்கா
உண்ணிறை யுடைய வல்ல வொராயிர மனத்த வாகும்
எண்ணிப்பத் தங்கை யிட்டால் இந்திரன் மகளு மாங்கே
வெண்ணெய்க்குன் றெரியுற் றாற்போன் மெலிந்துபின்னிற்கு மன்றே.'

'அன்புநூ லாக வின்சொ லலர்தொடுத் தமைந்த காத
லின்பஞ்செய் காமச் சாந்திற் கைபுனைந் தேற்ற மாலை
நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப்
பின்செ லும்பிறர்க ணுள்ளம் பிணையனார்க்கடிய தன்றே.'

'நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும்
பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே.'

என இவை முதலியன பலவாம். ஆண்மக்களை நோக்கி, காமமாகாதென்றற்கண் பெண்மக்கள் பழிக்கப்படுதல்போல, ஆரியாங்கனைகள், பிக்குணிகள், கைம்மை நோன்பினர் முதலாய பெண்மக்களை நோக்கி, காமமாகா தென்றற்கண் ஆண்மக்களும் இவ்வாறே பழிப்புரை பெறுதற்குரிய ரென்பது ஒருதலையாம். ஆணும் பெண்ணும் அறிவு மயங்கிக் காமவேட்கை மீதூர்ந்து, ஒருவ ரொருவரைக் காமித்து முறை தப்பித் திரிதற்கண், பெண்ணால் எத்துணைக்கேடு ஆணுக்கு எய்துமோ அத்துணையும் பெண்ணுக்கும் எய்துவதேயாகும். இங்ஙனமாகவும், ஒருவர் ஒருவரைப் பழித்து உரைப்பது எவ்வாறு? அவரவர் கேட்டிற்கு அவரவர் அறிவும் செயலும் காரணமாவனவே யன்றிப் பிறவில்லை. இக்கருத்துணர்ந்த நல்லோரெல்லாம் இருபாலார் நல்லொழுக்கமும் வேண்டுப.

ஆச லம்புரி யைம்பொறி வாளியுங்
காச லம்பு முலையவர் கண்ணெனும்
பூச லம்பு நெறியின் புறஞ்செலாக்
கோச லம்புனை யாற்றணி கூறுவாம்.
என்றார் கல்வியிற்பெரியாரும்.

நடுக்கடற் பிறந்த சங்கி னுள்ளி ருந்த பாலினற்
குடிப்பி றந்த மைந்தர்தங் குழைமு கம்பி றர்மனை
யிடைக்கண் வைத்த லில்லைகாத லார்கண் மேலு மார்வமூர்
கடைக்கணோக் கிலாத மாதர் கற்பை யாவர் செப்புவார்.

என்றார் வாமன முநிவரும்.

ஆண்மக்கள், கண்டபக்கமெல்லாம் பேராசை யெழுவிக்கும் தம் பேய்மனத்தைப் பழியாமற் பெண்பாலாரையே பழிப்பது, குருடன் தன்கண்ணைப் பழியாமல் தன்னை யிடறிய வழியைப் பழித்தலையே யொக்கும். கொன்றுதின்பான், தனது தின்றல் வேட்கையே கொலைக்குக் காரணமென்னாது, கொல்லுதற்றொழிற்குரிய கருவிகளும் கொல்லப்படும் யாடு முதலியனவும் உண்மையே காரணமென்னும்; இது, அதுவே போலுமென்க. அன்றியும், மண் பொன் பெண் என உடனெண்ணப்பட்ட மூன்றனுள் முன்னை இரண்டனையும் விழைந்து இவனடையுங் கேடெல்லாம் இவன் வேட்கை முதலியன காரணமாக விளைதல்போலப் பின்னதற்கும் ஆம் என்பது எளிதினுணரப்படும்.

காமம் ஒழியத்தக்கது என்னும் பொதுமொழிக்கண்ணும் ஆண்பாலார்க்குப் பெண்பாலார்பக்கத் துளதாகும் காமவேட்கையும், பெண்பாலார்க்கு ஆண்பாலார்பக்கத் துளதாகுங் காமவேட்கையுமே ஒழியத்தக்கன என்பதே பொருளாதலுங் கண்டுகொள்க. இனி, வீடெய்தற்கட் காமமுதலியன ஒழியற்பாலவாதலால் ஆண்பாலார் பெண்பாலாரை விடுதற்கு எத்துணை அறிவொழுக்கங்களுடையராவரோ அத்துணையும் பெண்பாலார் ஆண்பாலாரைவிடுதற்கும் வேண்டுவ ரென்பது. 'நூலொடு பழகினும் பெண்ணறிவென்பது பெரும் பேதைமைத்தே' என்பார்க்கு, நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தம் உண்மையறிவே மிக்காகும். ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தாமடங்காப் 'பேதையாரும் ஆண்மக்களுள்ளும் பலருளராவராதலால் அப்பேதைமை மகளிர்க்கே சிறந்ததில்லை என்று கூறுக. இவையெல்லாம் வடித்தாராய்ந்தே வடகலை தென்கலைக் கடனிலை கண்ட ஆசிரியர் தொல்காப்பியனார் ஆண்பெண் இருபாலார்க்கும் அறிவொப்புமை கூறியமட்டி லமையாது,

'கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே' என்பதனால், வீடுபெறுதற்கு எமஞ்சான்றவற்றை இருபாலாரும் புரிதற்கு உடன்பட்டனரென வுணர்க. சிறந்தது, சிறப்பு, சிரேயசு என்பன வீட்டின் பெயராம். இத் தொல்காப்பிய நன்னெறி கடைப்பிடித்தொழுகிய பண்டைத் தமிழ்மக்கள் அனைவரும் ஆண் பெண் இருதிறத்தாரையும் நற்றமிழ்க் கல்வியினும் அற்றமிலறிவினும் குற்றமி லொழுக்கினும் வேற்றுமை யின்றிப் பயில்வித்தனராவர். இத்தகைப் பயிற்சி ஒத்திலையாயின் மூன்றுவகைச் சங்கத்து நான்கு வருணத்தொடுபட்ட சான்றோருள்ளும், சைவ வைணவ மெய்யடியருள்ளும் உத்தமக் கல்வி வித்தகர்போற்றும் நல்லிசைப்புலமை மெல்லியலார்கள் பலரை நாம் பெற்றுய்யுமா றெங்ஙனம்! பெண்டிரெல்லாம் அறிவு நிரம்புதல் தண்டமிழ் வரைப்பிற் பண்டே நிகழ்ந்தது என்பதனை, கோப்பெருஞ்சோழற்கு உயிர்த்துணைவராகிய பிசிராந்தையார் என்னும் புலவர்பெருந்தகையார், யாண்டு பலவாகவும் தமக்கு நரையிலவாதற்குக் காரணமாகத் தம் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பினரா யிருத்தலைக் கூறியதனானும் அறியலாகும். 'இல்லதெ னில்லவண் மாண்பானால்' என்பதனையும் நோக்கிக்கொள்க.

இனி, ஒருசாராசிரியர், பெண்பாலார்க்கு யாழ் முதலிய சில கலைகளே கூறுவர். இவ்வாறு, 'கலைமலிகாரிகை' எனவருந் திருச்சிற்றம்பலக் கோவைக்கும், 'கலைவலார்' என்னுஞ் சிந்தாமணிக்கும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கூறிய உரைநோக்கித் தெளிக. மகளிராற் பயிலப்படும் யாழ் முதலியன ஆண்மக்களானும் பயிலப்படுமாறுபோல, ஆண்மக்களாற் பயிலப்படுவனவும் மகளிராற் பயிலப்படுமென் றுணர்க. பெண்பாற் கோதிய மடைநூற்செய்தி ஆண்பாலாராலும் பயின்று செய்யப்படுதல்போலக் கொள்க. நளன் வீமன் என்னும் ஆண்பால் நன்மக்கள் மடைத்தொழில் வல்லுநராதலுங் காண்க. இவ்வேற்றுமை யின்மையானன்றே மகளிர்க்கோதிய யாழ் முதலியவற்றிற் றேர்ச்சிமிக்க நல்லாண்மக்களும், இயற்றமி ழறிவிற் சிறந்த நல்லிசைப்புலமை மெல்லியலாரும் இத்தமிழ்நாட்டுப் பலராயினரென்பது.

வீடுபயக்கும் விழுப்பேருணர்வைக் கொள்ளும் வாயெல்லாங் கொளுத்தியது இப்பழைய தமிழ்நாடே. ஆண் பெண் என்னும் வேற்றுமையின்றிப் பிறப்பினிழிபு கருதாது கடைநிலத்தோராயினுங் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைத்து மகிழ்ந்தது இத் தண்டமிழ்வரைப்பே. குலத்தினும் பாவினும் குடியினும் தொழிலினும் கொள்கையினும் பல்வேறு வகைப்பட்ட நன்மக்களும் இகலிலராய் ஒருங்கு குழீஇ அறிவான் மகிழ்ந்தது இவ்வருந்தமிழ் நிலமே. 'நன்மக்களெங்கே பிறந்தாலுமென்' என்று அறிவின் பெருமையும் அன்பின் அருமையுமே கருதிப் பெண்டிரும் பிறப்பினிழிந்தாரும் உரைத்தருளிய நன்மொழி யனைத்தையும் வேதமெனப் போற்றி புகழ்ந்து, அவரது அன்புருவாய இன்புறுவடிவைத் திருக்கோயிலில் வைத்து வழிபடுவதும் இத் தென்றமிழ்ப்பொழிலே. 'எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை வருக' என்றழைத்தது இவ்வண்டமிழுலகே. ஆண்மையில்லென்பார் நாண்கொள முன்னே எண்டிசை வென்று பெண்டரசாண்டதிவ் வொண்டமிழகமே. இவையெல்லாம் நன்காராயின், இத்தமிழர் ஆண் பெண் இருபாலார்க்கும் அவயவவேற்றுமையல்லது அறிவுவேற்றுமை சிறிதுங் கருதினராகார் என்பது தெளிவாம். இக்கூறியவற்றிற்கெல்லாம் சான்றெனச் சிறந்த இத்தமிழ்நாட்டு நல்லிசைப்புலமை மெல்லியலாரைப்பற்றி யானறி யளவை யீண்டெடுத்தோதலுற்றேன். அவர்,

ஆதிமந்தியார்

குறமகள் இளவெயினி

வெள்ளிவீதியார்

பேய்மகள் இளவெயினி

ஔவையார்

காவற்பெண்டு

பாரிமகளிர்

காரைக்காற்பேயம்மையார்

பூதப்பாண்டியன்றேவியார்

வில்லிபுத்தூர்க்கோதையார்

காக்கைபாடினியார்

நச்செள்ளையார்

எனப் பலராவர்.
--------
1. ஆதிமந்தியார்

இவர் பெண்பாலர் என்பதும், இவர் நல்லிசைப்புலமை வாய்ந்தவர் என்பதும்,

'மக்க ணுதலிய வகனைந் திணையுஞ்
சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஆ'

என்னும் அகத்திணையியற் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர்,
'மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
ண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலு மாடுகள மகனே'. (குறுந் --31)

என்னும் பாடலை எடுத்தோதி, 'இது காதலற் கெடுத்த ஆதிமந்திபாட்டு' எனவுரைத்தமையானும், இச்செய்யுள் சான்றோராற் றொகுக்கப்பட்ட குறுந்தொகையு ளொன்றாதலானும் அறியப்படும். இதனுள், 'காதலற்கெடுத்த' என்றது, கணவனைக் காணப்பெறாத என்றவாறு. ஈண்டு, கெடுத்த என்பதனை 'அரசுகெடுத் தலமரு மல்லற் காலை' (சிலப்-அந்தி) 'எற்கெடுத்திரங்கி' (மணி-5) 'யானைதன் வயப்பிடி கெடுத்து மாழாந்த தொத்து' (சிந். கன-34) 'ஒருபொற் பூங்கொடி யென்னு நீராளை யிங்கே கெடுத்தேன்' (சிந். கன-38) என்னுமிடங்களிற்போலக் கொள்க.

இவர் காதலனைக் காணப்பெறாதவா றென்னையெனிற் கூறுவேன்: இவர், திருமாவளவனெனச் சிறந்த கரிகாற்சோழன் அருமை மகளாவர். சேரநாட்டு மன்னனாகிய ஆட்டனத்தி என்பானை மணந்தவர். இவர், தங்காதலனுடன் கரிகாற்சோழனாற் கழாஅர் என்னும் ஊரிற் காவிரி முன்றுறையிற் சிறப்பித்துக்கொண்டாடப்பட்ட புதுப்புனல் விழவுக்குச் சென்றாராக, ஆங்குக் கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினனாய், இயற்கை வனப்பாலும் செயற்கையணியாலும் கண்டாரனைவரும் விரும்புந் தகையனாய் யாரினும் மேம்பட்டு ஆடுதற் றொழிலாற் சிறந்த தம் உயிர்க்காதலனாகிய அவ் வாட்டனத்தியை நீர்விளையாடுகையிற் காவிரி வவ்வியதனால், அவனை நாட்டிலும் ஊரிலும் சேரியிலும் வீரர்தொக்க வில்விழவுகளிலும் மகளிர் தொக்க துணங்கையா டிடங்களிலும் யாண்டுந் தேடிக் காணப்பெறாது, புனல்கொண் டொளித்ததோ கடல்கொண்டு புக்கதோ என்று கலுழ்ந்த கண்ணராய் மருண்டசிந்தையராய் அலமந்து, அக்காவிரி ஓடும் வழியெல்லாம் ஓடிக் கடல்வாய்ப் புக்கு அவனையே கூவி யரற்றினார்க்கு, அக்கடலே அவ்வாட்டனத்தியைக் கொணர்ந்துவந்து முன்னிறுத்திக் காட்டியவளவில், ஆங்கவனைத் தழுவிக்கொண்டு பொற்கொடிபோலப் போந்தார் என்ப. இதனாற் காதலற்கெடுத்தவாறு உணர்க.

இவ்வரியகதை நெடுந்தொகையினும் சிலப்பதிகாரத்தும் எடுத்தாளப்பட்டுள்ளது. இது பரணர் முதலிய நல்லிசைப்புலவரால் ஆங்காங்கெடுத்துப் பாராட்டப்படுவது. தலைவர் பிரிவுக்குத் தலைவியர் வருந்துமிடனெல்லாம் இவ்வாதிமந்தியார்க்கு நேர்ந்த பெருந்துயரே எடுத்து உவமை கூறப்படுவது. இக் கதையோ டொட்டி ஆராயுமிடத்து, மேற்குறித்த பாடல் இவரது பெருந்துயர்நிலையி லுரைத்த தென்பதும், தம்முடைய நாயகன் நாடுகெழுகுரிசி லாகிய மாண்டக்கோன் என்பதும், அவன், மைந்தர்க்கு மைந்தனாய் மகளிர்க்குச் சாயலாய் இருபாலாராலும் விரும்பப்படுபவனாதலால், மைந்தர் வில்விழவா டிடங்களிலும் மகளிர் துணங்கையாடிடங்களிலும் மற்றுமவன் இருத்தற்குத் தக்குழியெல்லாந் தேடிக் காணாதுழன்றாரென்பதும், வில்விழவாடுகளத்தும் துணங்கையாடுகளத்தும் அவனைத் தேடுதல் காரணமாகப் பல்காற் சுற்றித்திரிதலாற் றாமும் ஆடுகளமளே போறலின், 'யானுமோ ராடுகள மகளே' என்றாரென்பதும், தங்கணவன் ஆடுதற் றொழிலிற் சிறந்தோன் என்பதும், அவனைக் காணாமையாற் றம்மேனி பெரிதுமெலிந்தார் என்பதும் தெளியப்படுதல் காண்க. இவர் தங்கணவன் யாவரும் விரும்பும் பேரழகுடையனாதலால் காவிரி அவனது நலனயந்து வவ்விய தென்று சிறப்பித்துக் கூறுவர். இவர் பெயரும் இவரது காதலன் பெயரும் சிறுபான்மை முதற்சொல்லொழித்து மந்தி எனவும் அத்தி எனவும் வழங்கவும்படும். இவற்றை யெல்லாம்,
'காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்
தாதிமந்தி போலப் பேதுற்
றலந்தனெ னுழல்வேன் கொல்லோ.'
(வெள்ளி வீதியார் - அகம் - 45)

'கச்சினன் கழலினன் றெந்தார் மார்பினன்
வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியற்
சுரியலம் பொருநனைக் காண்டி ரோவென
வாதி மந்தி பேதுற் றினையச்
சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகு
மந்தண் காவிரி போல.'
(பரணர். அகம் - 76)

'கழா அர்ப் பெருந்துறை விழவி னாடு
மீட்டெழிற் பொலிந்த வேந்துகுவவு மொய்ம்பி
னாட்ட னத்தி நலனயந் துரைஇத்
தாழிருங் கதுப்பிற் காவிரி வவ்வலின்
மாதிரந் துழைஇ மதிமருண் டுழந்த
வாதி மந்தி காதலற் காட்டிப்
படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர்.'
(பரணர். அகம் - 222)

'அணிகிளர் சாந்தி னம்பட் டிமைப்பக்
கொடுங்குழை மகளிரி னொடுங்கிய விருக்கை
யறியா மையி னழிந்த நெஞ்சி
னேற்றிய லெழினடைப் பொலிந்த முன்பிற்
றோட்டிருஞ் சுரியன் மணந்த பித்தை
பாட்ட னத்தியைக் காணீ ரோவென
நாட்டி னாட்டி னூரி னூரிற்
கடல்கொண் டன்றெனப் புனல்கொண் டன்றெனக்
கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த வாதி மந்தி.'
(பரணர். அகம் - 236)

* ... ... ... உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
றன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
கன்னவி றோளாயோ வென்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட வவனைத் தழீஇக்கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்.'
(சிலப்பதிகாரம், வஞ்சினமாலை)

என்பனவற்றாற் கண்டு ஆராய்ந்து கொள்க. நெடுந்தொகை 41-ம் பாட்டில், நன்னன் ஏற்றை நறும்பூணத்தி முதலிய சிலர், சேரன் படைத்தலைவராகக் கூறப்படுதலால், அத்தியை வஞ்சிக்கோன் என்றலும் பொருந்தும். கரிகால் வளவன் புதுப்புனல் விழவு கொண்டாடுதல் சிலப்பதிகாரத்துக் கடலாடுகாதையினுங் கண்டது. 'விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன், றண்பதங் கொள்ளுந் தலைநாட் போல' என்பதன் உரையானுணர்க. அறிவாற் கலைமகளே எனச் சிறந்த ஔவையார் பாடியருளிய, 'நெடுமலைச் சிலம்பின்' என்னும் நெடுந்தொகையில், 'வெள்ளி வீதியைப் போல 'கன்றுஞ், செலவயர்ந் திசினால் யானே' என வருதலானே வெள்ளிவீதியார் ஔவையாரின் முற்பட்டவராதல் அறியப்படுவது. அவ் வெள்ளிவீதியார்,

'ஆதி மந்தி போலப் பேதுற், றலந்தனெ னுழல்வேன் கொல்லோ' (அகம்- 45)

என்றமையானே, இவ்வாதிமந்தியார் அவர்க்கும் முற்பட்டவராதல் தெளியப்படும். செந்தமிழ்ச் சரிதவாராய்ச்சி செவ்விதிற்புரிந்த இக்காலத்தறிஞர் [மகா-100-100-ஸ்ரீ வி. கனகபைப் பிள்ளையவர்களுடைய 'Tamils Eighteen Hundred Years Ago" Madras Review, Page 433.] கரிகாற்சோழன் காலம் கி.பி.55 முதல் 95 இறுதியாமெனத் தெளிவித்தலால், இவ்வாதிமந்தியாரும் அவன்மகளெனல்பற்றி அக்காலத்தவரே யாதல் தெரிந்துகொள்க. இவரது நுண்ணிய அறிவும் திண்ணிய கற்பும் இவற்றான் ஒருவா றறியத்தக்கது. இனி, வெள்ளி வீதியாரைப்பற்றி ஓதுவேன்.

--------------

2. வெள்ளி வீதியார்

இவர் பெண்பாலார் என்பதும், நல்லிசைப் புலமை யுடையார் என்பதும் நச்சினார்க்கினியர், 'மக்க ணுதலிய வகனைந் திணையுஞ், சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஅர்' என்னுந் தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரவுரையில்,

'கன்று முண்ணாது கலத்தினும் படாஅது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணீஇய வேண்டுந்
திதலை யல்குலென் மாமைக் கவினே.' (குறுந் - 27)

இது வள்ளி வீதியார் பாட்டு. 'மள்ளர் குழீஇய...மகனே இது காதலற்கெடுத்த ஆதிமந்திபாட்டு. இவை தத்தம் பெயர் கூறிற் புறமாம் என்றஞ்சி வாளாது கூறினார்' எனக் கூறியவாற்றான் நண்குணரலாகும். தம்பெயர் கூறிற் புறமாமென்றஞ்சி வாளாது கூறிய இச்செய்யுள், பெண்பாற் கூற்றாதலுங் கண்டுகொள்க. ஔவையார் பாடியருளிய, 'ஒங்குமலைச் சிலம்பின்' என்னும் அகப்பாட்டில்,

'நெறிபடு கவலைய நிரம்பா நீளிடை
வெள்ளி வீதியைப் போல நன்றுஞ்
செலவயர்ந் திசினால் யானே' (அகம். 147)

என்பதனால், செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் நிரம்பா நீளிடையில் யானும் வெள்ளிவீதியைப்போலச் செல்லத் துணிந்தேன் எனக் கூறியவாற்றானும், நச்சினார்க்கினியர்,

'இதனுள் வெள்ளிவீதியைப் போலச் செல்லத் துணிந்து
யான் பலவற்றிற்கும் புலந்திருந்து பிரிந்தோரிடத்தினின்னும்
பிரிந்த பெயர்வுக்குத் தோணலந்தொலைய உயிர்செலச்
சாஅய் இரங்கிப் பிறிது மருந்தின்மையிற் செயலற்றேனென
மிகவும் இரங்கியவாறு மெய்ப்பாடு பற்றியுணர்க'
(தொல்-பொ-அகத்-15)

எனக் கூறியவாற்றானும், இவர் தம் அருமைத்தலைவனைப் பிரிய நேர்ந்துழித் தமித்துயிர்வாழ்த லாற்றாது, அவனுடனுறை வேட்கை மீதூர்ந்து அவன் சென்றுழிச் செல்லவேண்டிக் காடும் பிறவுங் கடந்து சென்றனரென்பது உய்த்துணரப்படுவது. 'முந்நீர் வழக்க மகடூஉவோ டில்லை' (தொல் - பொ - அகத் - 34) என்னும் புலனெறி வழக்கிற்கு மாறாய்த் தலைவனைப் பிரிந்துறையலாற்றா உழுவலன்பால் அறிவிற் சிறந்த பெருந்தகைமகளார் ஒருவர் நிகழ்த்திய அருஞ்செயலாதலின், ஔவையார் என்னும் அருந்தமிழ்ச் செல்வியார், கற்பின்பாற் றலைவி, பிரிந்த தலைவன்பாற் செல்லத் துணிந்தமைக்கு எடுத்துக்காட்டினா ராவர்.

இவ் வெள்ளி வீதியார் புலனெறி வழக்கெலா முணர்ந்த நல்லிசைப்புலமை மெல்லியலாரா யிருந்தும் தம் தலைவன்மாட்டு வைத்த அன்புமிகுதியான் அவற்றையிகந்து அவன்பாற் செல்லத்துணிந்தமையானே இஃதெடுத்தாளப்பட்டதாகும். இவர் பாடல்களுட் பெரும்பான்மையாகப் பிரிவுபற்றி வருவனவெல்லாம் இவர் தம் தலைவனைப் பிரிந்த காலத்துப் பாடியனவே யாம். புலனெறி வழக்கினாற் பிரிவுடன்பட்டும், ஆற்றலாகாப் பிரிவுத் துயரான் அறிவு மயங்கி அவனைக் காண்டல் வேட்கையே மீதூர்ந்து பெரும் பாலை நிலமெல்லஞ் செல்லத் துணிந்த இவரது அரிய பெரிய அன்பின்றகைமை யாவரானும் அறியலாவது.

'அன்பென்ப தொன்றின் றன்மை யமரரூ மறிந்த தன்றால்' என்றார் கம்பநாடரும். அயோத்தியரிறை பின்னே வைதேகி என்றுரைக்கும் அன்ன நடை அணங்கு காடெலாம் நடந்ததும், இத்தமிழ்நாட்டுக் கண்ணகி என்னும் கற்புடையாட்டி கோவலன் பின் சென்றதும் இப்புலனெறி வழக்கிற்கு மாறாயினும் அன்பின்றகைமையான் ஆன்றோரெல்லாரானும் புகழ்ந்து பாராட்டப்படுதல்போல, இதனையுங்கொள்க. இதனோடொட்டியாராய்வுழி, மேல் தம்பெயர்கூறிற் புறமாமென்றஞ்சி வாளாது கூறிய, 'கன்று முண்ணாது' என்னுஞ் செய்யுள், இவர், தம் தலைவன் பிரியலுற்றபோது தம்மையும் உடன்கொண்டு செல்லாமைக்குக் கவன்று பாடியதாக உய்த்துணரப்படும். இனித் தலைவி, கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன்கொண்டு சென்மினெனக் கூறுவனவும் உண்டென்பது, முற்குறித்த 'முந்நீர் வழக்கம்' என்பதற்கு நச்சினார்க்கினியருரை நோக்கி யறிக.

'என்னீ ரறியாதீர் போல விவைகூறி
னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு
மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு
துன்பந் துணையாக நாடி னதுவல்ல
தின்பமு முண்டோ வெமக்கு'
(கலித்தொகை)

என்று தலைவி கூறுமாற்றான் உணர்க. இவ்வாறு தலைவி கூறுவன தலைவன் செலவழுங்குதற்குக் காரணமாவனவல்லது உடன்கொண்டு சேறற்காவன வில்லை என்பர். இவர் அவ்வாறன்றித் தலைவன்பாற் செல்லவேண்டி நெறிபடு கவலைய நிரம்பா நீளிடையினுஞ் சென்றமையானே அருமைபற்றி இவர் பெருஞ்செயல் எடுத்தாளப்பட்டதாகும் என்பது தெள்ளிது. இனி, இவர் தலைவனுடன் செல்லவேண்டினரல்லது, அவன் பிரிந்த பின்பு அவன்பாற் செல்லத் துணிந்தனரில்லையெனின், அஃது எல்லா மகளிர்க்கும் ஒத்தலான் இவரது செயலொன்றையே சிறப்பித்து, 'வெள்ளி வீதியைப் போல நன்றுஞ், செலவயர்ந் திசினால் யானே' எனக் கூறார் என்க.

இனி, இவர் தந்தலைவனைப் பிரியலுற்றுழிப் பாடியருளிய இக் 'கன்று முண்ணாது' என்னுஞ் செய்யுளொன்றே இவரது நல்லிசைப் புலமையினை நன்கு புலப்படுத்தும். இது சொல்லானும் பொருளானும் சுவை பெரிது பயப்பதென்பது ஆய்ந்தறியத்தக்கது. கன்று வயிறாரவுண்டபின்னே கலத்திற் கறத்தல் அறமென்னுங் கருத்தாற் கன்ருண்டலை முன்னும் கலத்திற்படுதலைப் பின்னும் வைத்தோதினார். 'கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும்' என மணிமேகலை துறவினும் (அறவணர்த்தொழுதகாதை), 'கன்றருத்தி மங்கையர் கலநிறை பொழிதர' எனச் சிந்தாமணியினும் (நாமகள் -110), கூறுதல் காண்க.

'விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து
நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்
பிறந்தநாட் டொட்டுச் சிறந்தன் றீம்பா
லறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்'
[மணிமேகலை ஆபுத்திரன்றிற மறிவித்தகாதை.
விடுநிலம் - மக்களால் விளைவிற்குதவாமல் விடப்பட்ட நிலம்.]

தன்மைத்தாகலின் 'நல்லான்' என்றார். நல்லான் றீம்பால் கன்று முண்ணாமற் கலத்தினும்படாமல் வெறிதே நிலத்தே உகுந்தொழிந்தாற் போல எனது மாமைநிறத்தொடு கூடிய அழகு எனக்குமாகாமல் என் தலைவற்கும் உதவாமற் பசலையான் உண்டு கழிய வேண்டும் என்றார் என்க. என்னை என்பது,

'என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்'

என்புழிப் போல, என்றலைவன் என்னும் பொருட்டு. பொருண்மேற் சேறல் முதலாயின மனைவியோ டில்லை என்பதனால், மகளிர்க்கு இவ்வரிய பிரிவுத்துயர் அநுபவித்தலே யுறுவது என்னுங் கருத்தால், 'வேண்டும்' என்று கூறினார். இவ்வாறு இவர் பாடியருளிய செவ்விய கூரிய தீஞ்சொல் வவ்விய பாடல்கள் நற்றிணையில் 3-ம், குறுந் தொகையில் 8-ம், நெடுந்தொகையில் 2-ம், திருவள்ளுவமாலையில் 1-ம், ஆகப் பதினான்குள்ளன. இவற்றுள், 'வாடபடுபுல் - ஒருவர் முயற்சியானன்றித் தானே
Back to top Go down
View user profile
 
புலமை மெல்லியலார்கள் [வெள்ளி வீதியார் ,ஆதிமந்தியார் }
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: