BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபடித்ததில் பிடித்தது - ரயில் பயணங்களில் .... Button10

 

 படித்ததில் பிடித்தது - ரயில் பயணங்களில் ....

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

படித்ததில் பிடித்தது - ரயில் பயணங்களில் .... Empty
PostSubject: படித்ததில் பிடித்தது - ரயில் பயணங்களில் ....   படித்ததில் பிடித்தது - ரயில் பயணங்களில் .... Icon_minitimeThu Apr 01, 2010 6:26 am

ரயில் பயணங்களில்...!!!

மதுரை ரயில் நிலையம். ஈரோடு வழியாக பெங்களூர் வரை செல்லும் ரயிலுக்காக காத்திருந்தேன். பிளாட்பாரம் எங்கும் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டு இருந்தனர். வண்டி அரை மணி நேரம் தாமதமாக வந்தது. வண்டியின் உள்ளேயும் பயங்கர ஜனத்திரள். எல்லோருக்கும் பயணம் செய்வதற்கான ஏதோ ஒரு காரணம் இருந்து கொண்டே இருக்கிறது. கஷ்டப்பட்டு அடித்து பிடித்து ரயிலில் ஏறினால் நிற்கக் கூட இடம் இல்லை. என்னருகில்.. ஒரு பாட்டி கையோடு ஒரு சிறு குழந்தையையும் கூட்டி வந்து இருந்தார்கள்.

"தம்பி.. கொஞ்சம் இடம் விட்டீங்கன்னா வயசானவ உக்காந்துக்குவேன்.."

"பரவா இல்லை பாட்டி.. இப்படி கீழ உக்காருங்க.."

மெதுவாக கீழே அமர்ந்தவர் கால்களை நன்றாக நீட்டிக் கொண்டார். அவர் மடியில் அந்தக் குழந்தை படுத்துக் கொண்டது. சாவகாசமாக சாய்ந்து அமர்ந்து கொண்டார். பக்கத்தில் நடந்து போன ஒருவர் தெரியாமல் அவரை இடித்தபோது காச்மூச்சென்று கத்தத் தொடங்கி விட்டார். எனக்கு எங்கள் ஊர்ப்பக்கம் சொல்லும் விஷயம் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. "இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடி கேட்பார்கள்.." சிரித்துக் கொண்டே நகர்ந்து வந்து கதவை ஒட்டி நின்று கொண்டேன். ரயில் நகரத் தொடங்கி இருந்தது. காற்று மிதமாக என் முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. இரவின் குளிர் காற்றில் எங்கும் பாவி இருந்தது.


தரையில் நிறைய பேர் உட்கார்ந்து இருந்தார்கள். என்னை ஒட்டி நின்று இருந்த சிலர் தங்களுக்குள் ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். வடமாநிலத்தவர் போல.. வேலைக்காக இங்கே வந்துள்ளார்கள். எந்த நம்பிக்கையில் இவர்கள் தங்கள் சொந்த மண்ணை பிரிந்து வந்தார்கள்? எதை தேடி பயணம் செய்கிறார்கள்? இவர்களுடைய குடும்பத்தினர் இவர்களைப் பற்றி கவலைப் படுவார்களா? எனக்குள் நிறைய கேள்விகள். வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கும் இருள் படர்ந்து இருந்தது. மரங்களும் விளக்குக் கம்பங்களும் பின்னோக்கி சென்று கொண்டிருந்தன. எத்தனையோ ரகசியங்களை தனக்குளே புதைத்துக் கொண்ட இரவு என்னுடைய கேள்விகளையும் விழுங்கிக் கொண்டது.


வாசற்படியில் அமர்ந்து இருந்த ஒரு ஹிந்தி இளைஞன் காதில் செல்போனை மாட்டிக் கொண்டு சத்தமாக பாடி கொண்டு இருந்தான். எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். " பாகோ மே சலே ஆ..." நானும் மெதுவாக அந்தப்பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். நான் பாடுவதை அவன் கவனித்து விட்டான். சட்டென்று நின்று போன பெருமழை போல, நத்தை தனது கூட்டுக்கள் ஒடுங்குவது போல் அவனுடைய பாடல் தானாகவே தொலைந்து போனது. எதற்காக அவன் பாடலை நிறுத்தினான்? நாம் எல்லாருமே மற்றவர் நம்மை கவனிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அது நிகழும்போது நமக்கு என்னவோ அதில் விருப்பம் இல்லாததுபோல் நடிக்கிறோம். அவனுடைய சந்தோஷத்தை பறித்துக் கொண்டதுபோல் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது. மெதுவாக ரயிலின் உள்ளே திரும்பி நின்று கொண்டேன். சற்று நேரம் கழித்து அவன் மீண்டும் மெல்லிய குரலில் பாடத் தொடங்கினான்.


ரயிலின் உள்ளே கலைத்துப் போட்ட சீட்டுக்களாய் மக்கள் எல்லா இடங்களிலும் உக்கார்ந்து இருந்தார்கள். கதவை ஒட்டிய முதல் கூபெவில் ஒரு குடும்பம் பொறுமையாக தாங்கள் கொண்டு வந்த புளிச்சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலை ஒட்டி ஒரு ஜோடி அமர்ந்து இருந்தது. புதுமணத் தம்பதி என்பது பார்த்தவுடன் புரிந்தது. பெண் ரொம்ப சின்னவராக இருந்தார். நிறைய பேசிக்கொண்டே வந்தார். அவள் கணவரோ அதில் சுவாரசியம் இல்லாமல் குமுதம் படித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் பேச்சை நிறுத்தி விட்டு ஜன்னலின் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். அந்தக் கண்களில் சொல்ல முடியாத ஏதோ ஒரு சோகம் தேங்கி நின்றது . இதற்குள் ரயில் திண்டுக்கல்லை அடைந்து விட்டு இருந்தது.


ரயிலுக்குள் இரண்டு குறவர்கள் ஏறினார்கள். அவர்கள் அணிந்து இருந்த உடையை துவைத்து பல மாதங்கள் இருக்கும். ரயிலில் நின்றவர்கள் எல்லாம் அவர்களைப் பார்த்து முகம் சுளித்தார்கள். ஒருவர் அவர்களிடம்.."டேய்.. இங்க எல்லாம் நிக்கக் கூடாது.. போ.. போய் கக்கூஸ் பக்கத்துல உக்காரு.." அவர்கள் எந்த விதமான எதிர்ப்பும் காட்டாமல் அங்கே போய் அமர்ந்து கொண்டார்கள். உதாசீனத்தை ஏற்றுக் கொள்ள இந்த சமூகம் அவர்களைப் பழக்கி விட்டதா? அவர்களுடைய இந்த நிலைக்கு அவர்கள் மட்டும்தான் காரணமா? எனக்குப் புரியவில்லை. ரயிலுக்குள் பார்த்தேன். அந்தப் பெண்ணின் கணவர் அவள் தோளின் மீது சாய்ந்து தூங்கி விட்டிருந்தார். நான் கையோடு எடுத்துப் போயிருந்த "பதினெட்டாம் நூற்றாண்டின் மழை"யில் ஆழ்ந்து போனேன். கரூர் வந்தபின்தான் உட்கார இடம் கிடைத்தது.

சிறிது நேரத்திற்குப் பின் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. ஏதாவது கிராசிங்கா இருக்கும் என்றார்கள். வெகு நேரமாக வண்டியின் உள்ளேயே இருந்ததால் மூச்சு முட்டுவது போல் இருந்தது. கொஞ்ச நேரம் கீழே நிற்கலாம் என்று இறங்கினேன். ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஒரு மனிதர் "கடலை சார், டைம்பாஸ் கடலை சார்.." என்று கத்தியவாறே கடலை விற்றுக் கொண்டிருந்தார். அருகில் கிடந்த சிமென்ட் பெஞ்சின் மீது படுத்துக் கொண்டேன். விரித்து வைத்த கறுப்புப் போர்வையாய் என் பார்வையில் வானம். சின்னச் சின்ன வெளிச்ச பொட்டுக்களாய் நட்சத்திரங்கள் அங்கங்கே இருந்தன. நிலா ஏதோ ஒரு மேகத்தின் பின்னே ஒளிந்து கொண்டு இருந்தது. பொதுவாக எனக்கு தனிமை பிடிப்பதில்லை. எனினும் அந்த இரவின் ஏகாந்தம் ரொம்ப ரம்மியமானதாக இருந்தது.

திடீரென.. யாரோ என்னை பார்ப்பதுபோல் ஒரு குறுகுறுப்பு. அந்த பெண்ணும் ஜன்னல் வழியாக வானத்தை பார்த்துக் கொண்டிருந்தவள், என்னை திரும்பி பார்த்தாள். அவள் கண்களில் இனம் புரியாத ஒரு ஆர்வமும் சிநேக பாவமும் இருந்தன. அவளும் வானத்தை ரசித்து கொண்டு இருந்திருக்கிறாள். எனக்கு அவளைப் பார்க்கையில் சொல்லவொண்ணாத உணர்வுகள் தோன்றின. முக்கால் மணி நேரம் கழித்து ரயில் கிளம்பியபோது நான் அவளை எனக்கு மிகவும் நெருக்கமானவளாக உணர்ந்தேன்.

ஈரோடு ரயில் நிலையம் வந்தபோது மணி ஒன்றாகி இருந்தது. அந்தத் தம்பதியும் ஈரோடுதான் போல.. இறங்கி எனக்கு எதிர் திசையில் நடக்கத் தொடங்கினர். அந்தப் பெண்ணின் முகமும் அவள் உதடுகளில் தேங்கி நின்ற சிரிப்பும் எனக்குள் நன்றாக பதிந்து விட்டிருந்தது. நான் ரயிலை பிரிந்து நடந்தேன். ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு அனுபவத்தை தனக்குள்ளாக கொண்டு இருக்கிறது. பயணிகள்தான் மாறிக் கொண்டு இருக்கிறோம். பயணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நம் வாழ்க்கையும் அதுபோலத்தான்.. இல்லையா..?!!
Back to top Go down
 
படித்ததில் பிடித்தது - ரயில் பயணங்களில் ....
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது..
» படித்ததில் பிடித்தது - 18
» படித்ததில் ….பிடித்தது .
» படித்ததில் பிடித்தது

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: