BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 கலிநீங்குகாண்டம் பக்கம் - 2

Go down 
AuthorMessage
Fathima

avatar

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 33
Location : srilanka

PostSubject: கலிநீங்குகாண்டம் பக்கம் - 2   Fri Apr 02, 2010 12:52 pm

கலி நீங்கினான்.
———————–

வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்
தண்தார் புனைசந் திரன்சுவர்க்கி – கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி.

இருதுபன்னன் தேர் ஓட்டும் தொழிலை கற்றான்; நளனுக்குக் கணக்கிடும் முறையைக் கற்றுக் கொடுத்தான்.

அரசனான நளனிடம் பொருந்தியிருந்த கலி என்னும் துன்பம் , வண்டுகள் மொய்க்கின்ற நீர்வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த மள்ளுவ நாட்ட இஆளும் எம் அரசனான குளிர்ச்சி பொருந்திய மலர் மாலையை அணிந்த சுவர்க்கியால் பாராட்டப்படும் பாவாணனிடத்திருந்த பசி நீக்குவதைப் போல நீங்கியது.

வீமன் நகரடைதல்.
———————————

ஆமை முதுகில் அலவன் துயில்கொள்ளும்
காமர் நெடுநாடு கைவிட்டு – வீமன்றன்
பொன்னகரி சென்றடைந்தான் போர்வேட் டெழுங்கூற்றம்
அன்னகரி ஒன்றுடையான் ஆங்கு.

இருதுபன்னன், ஆமையின் முதுகில் நண்டுகள் தூங்குகின்ற நீர் வளத்தை உடைய அழகிய பெரிய கோசல நாட்டை விட்டு நீங்கி , வீமனுடைய விதர்ப்ப நாட்டின் அழகிய தலை நகரான குண்டினபுரத்தை அடைந்தான்.

அரண்மனைக்குள் புகல்.
—————————-

வெற்றித் தனித்தேரை வீமன் பெருங்கோயில்
முற்றத் திருத்தி முறைசெய்யும் -கொற்றவற்கு
தன்வரவு கூறப் பணித்துத் தனிப்புக்கான்
மன்விரவு தாரான் மகிழ்ந்து.

ஆளும் சிறப்புடைய வெற்றிமாலை அணிந்த இருதுபன்ன மன்னன், வெற்றி பொருந்திய ஒபில்லாத தனது தேரை வீமனது பெரிய அரண்மனை வாயிலின் முன் நிறுத்தி நீதி முறையிலே ஆட்சி புரியும் மன்னவனான வீமனுக்குத் தன் வருகையைத் தெரிவிக்கும்படி வாயிலோனுக்குத் தெரிவித்து அனுப்பித் தான் தேரினின்றும் கீழே இறங்கிச்சென்று மகிழ்ச்சியோடு தனியாக அரண்மனையினுள் சென்றான்.

‘வந்த காரணம் என்?’
—————————-

‘கன்னி நறுந்தேறல் மாந்திக் கமலத்தில்
மன்னித் துயின்ற வரிவண்டு -பின்னையும்போய்
நெய்தற் கவாவும் நெடுனாட! நீயென்பால்
எய்தற் கவாவியவா றென்?’

இருதுபன்னனை வீமன் நோக்கித் ‘தாமரைப் பூவிலுள்ள புதிய மணமுடைய தேனை அருந்தி, அதிலேயே தூங்கி எழுந்த புள்ளிகளையுடைய வண்டுகள், அதன் பிறகும் நெய்தல் நிலத்திற்குச் சென்று அங்கே மலர்ந்துள்ள குவளை மலர்த் தேனை உண்பதற்கு விரும்புகின்ற பெரிய கோசல நாட்டுக்கு அரசரே, நீர் என்னிடத்திற்கு வரக் காரணம் என்ன? என்று கேட்டான்.

இருதுபன்னன் விடை.
———————–

‘இன்றுன்னைக் காண்பதோர் ஆதரவால் யானிங்ஙன்
மன்றல் மலர்த்தாராய்!வந்தடைந்தேன்,’-என்றான்
ஒளியார்வேற் கண்ணாள்மேல் உள்ளம் துரப்பத்
தெளியாது முன்போந்த சேய்.

தமயந்தியிடத்தில் தன் உள்ளம் சென்றதால் முன் ஆராய்ச்சி இல்லாமல் வந்த அயோத்தி அரசனான இருதுபன்னன்,’ மணம் வீசுகின்ற மலர்மாலையை அணிந்த அரசரே, இன்று உம்மைக் காணவேண்டும் என்ற ஆசையில்னான் இங்கே வந்து சேர்ந்தேன்,’என்று சாதுரியமாகக் கூறினான்.

நளன் சமைக்க புகல்.
—————————–

ஆதி நெடுந்தேர்ப் பரிவிட் டவையாற்றிக்
கோதில் அடிசிற் குறைமுடிப்பான் -மேதிக்
கடைவாயில் கார்நீலம் கண்விழிக்கும் நாடன்
மடைவாயிற் புக்கான் மதித்து.

நிடத நாட்டு வேந்தனான நளன், முதன்மையான நீண்ட தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளை அவிழ்த்து விடு, அவைகளை இளைப்பாறச்செய்து , குற்றமில்லாத சமையலை முடித்தலாகிய தான் நாடோறும் செய்ய வேண்டிய வேலையின் குறையை முடிப்பதற்கு எண்ணிச் சமையல் அறைக்குள் புகுந்தான்.

சோறு கறிகள் நிரம்பின.
——————————-

ஆதி மறைநூல் அனைத்தும் தெரிந்துணர்ந்த
நீதி நெறியாளர் நெஞ்சம்போல் -யாதும்
நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே பொற்றேர்
வரப்பாகன் புக்க மனை.

நளன் புகுந்த மடைப்பள்ளி, பழமையான வேத நூல் முதலிய அற நூல்கள் யாவற்றையும் ஓதி உணர்ந்து நீதி நெறியில் செல்கின்றவருடைய உள்ளத்தைப்போல ( நெருபு நீர் முதலிய எப்பொருளுமில்லாமலே )சோறு கறிகள் முதலிய யாவும் நிரம்பின.

தமயந்தி தோழியிடம் கூறல்.
———————————————–

இடைச்சுரத்தில் தன்னை இடையிருளில் நீத்த
கொடைத்தொழிலோன் என்றயிர்த்த கோமான் -மடைத்தொழில்கள்
செய்கின்ற தெல்லாந் தெரிந்துணர்ந்து வா,’என்றாள்
நைகின்ற நெஞ்சளால் நயந்து.

நளனுடைய பிரிவால் வருந்தும் மனத்தையுடையவளாகிய தமயந்தி, நடுக்காட்டில் நள்ளிருளில் தன்னைத் தனியே விட்டுச்சென்ற கொடுக்கும் இயல்புடைய நளமன்னன் என்று தான் சந்தேகித்த ‘வாகுகன் என்னும் தலைவனுடைய சமையல் தொழிலையெல்லாம் கண்டறிந்து வருவாயாக,’ என்று தன் தோழி ஒருத்திக்கு சொல்லி அனுப்பினாள்.

தன் மக்களை அனுப்பல்.
——————————-

‘கோதை நெடுவேற் குமரனையும் தங்கையும்
ஆதி அரசன் அருகாகப் -போத
விளையாட விட்டவன்றன் மேற்செயல்நாடென்றாள்
வளையாடுங் கையாள் மதித்து.

தமயந்தி , நன்கு சிந்தித்து முடிவு செய்து , ‘மகனான இந்திரசேனனையும் அவனது தங்கையான இந்திரசேனையையும் நம் முன்னை அரசர் என்று கருதப்படும் வாகுகனிடத்து விளையாடும்படி விட்டு, அதற்கு மேல் அவன் செயல்களைக் கண்டு வருக’ என்று கூறி மறுபடியும் ஒரு தோழியை அனுப்பினாள்.

மக்களை கண்டு மன்னன் வருந்தல்.
———————————————

மக்களைமுன் காணா மனம்நடுங்கா வெய்துயிராப்
புக்கெடுத்து வீர புயத்தணையா -’மக்காள்!நீர்
என்மக்கள் போல்கின்றீர்!யார்மக்கள்?’ என்றுரைத்தான்
வன்மக் களியானை மன்.

பகைமைத் தன்மை கொண்ட மதயானையை உடைய நளன் தன் மக்களை எதிரே பார்த்து, மனம் பதைத்துப் , பெருமூச்சு விட்டு விரைந்து அவர்களிடம் சென்று , அவர்களை எடுத்து வீரம் பொருந்திய தன் தோள்களில் அணைத்துக்கொண்டு ,’ குழந்தைகளே , நீவிர் இருவீரும் என் மக்களைப் போலவே இருக்கின்றீர்! நீங்கள் யார் பெற்ற மக்கள்?’ என்று கேட்டான்.

மக்கள் கூறிய மறுமொழி.
——————————————

‘மன்னன் நிடதத்தார் வாழ்வேந்தன் மக்கள்யாம்;
அன்னைதனை கான்விட்ட வனேக – இநகர்க்கே
வாழ்கின்றோம்; எங்கள் வளநாடு மற்றொருவன்
ஆள்கின்றான்!’ என்றார் அழுது.

மக்கள், ‘ நாங்கள் , நிடத நாட்டு மக்கள் வாழ்வுக்குக் காரணமான நளமகராசருடைய மக்கள்; அவ்வரசர் எம் தாயை வனத்தில் விட்டுவிட்டுப் பிரிந்து செல்ல, இந்தக் குண்டினபுரத்தில் எம் தாயோடு வாழ்ந்து வருகின்றோம்! எங்களுடைய வளம் மிக்க நாட்டை வேறொரு மன்னன் இப்போது ஆட்சி புரிந்து வருகின்றான் !’ என்று அழுதபடி கூறினார்கள்.

மன்னன் மனத்தளர்வு.

————————–

ஆங்கவர் சொன்ன வுரைகேட் டழிவெய்தி
நீங்கா உயிரோடு நின்றிட்டான் -பூங்காவில்
வள்ளம்போற் கோங்கு மலரும் திருநாடன்
உள்ளம்போற் கண்ணீர் உகுத்து.

நளன், அழுதபடி அக்குழந்தைகள் சொன்ன சொற்களைக் கேட்டுணர்ந்து, மனம் தளர்ச்சியடைந்து வருந்தி, தன் உள்ளம் உருகி வழிவது போலக் கண்ணீரைச் சொரிந்து , தனது உடலை விட்டு நீங்காமல் இருக்கின்ற உயிரோடு ஒன்றும் தோன்றாமல் அசைவற நின்றிருந்தான்.

குழந்தைகளைப் பார்த்து வினாவுதல்.
—————————————–

‘உங்கள் அரசொருவன் ஆளநீர் ஓடிப்போந்து
இங்கண் உறைதல் இழுக்கன்றோ? – செங்கை
வளவரசே!’ என்றுரைத்தான் மாதவத்தாற் பெற்ற
இளவரசை நோக்கி எடுத்து.

நளன் மிக்க தவத்தால் பெற்றெடுத்த தன் மகனாகிய இந்திரசேனனைப் பார்த்து, ‘ செம்மையான கை வளத்தையுடைய அரசே, உங்களுடைய உரிமையாகிய அரசாட்சியை வேறொருவன் ஆண்டுக்கொண்டிருக்க , நீங்கள் அவனுக்கு அஞ்சி ஓடி வந்து இந்தக் குண்டினபுரத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது மானக் குறைவன்றோ?’ என்று கேட்டான்.

மன்னன் அஞ்சுவர்! மடையன் அஞ்சான்!
———————————————–

‘ நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லாது
அஞ்சாரோ மன்னர்? அடுமடையா ! -எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலாய்! எங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி.

இளவரசனான இந்திரசேனன் நளனை நோக்கி, ‘ சமைத்தல் தொழிலை செய்பவனே, எப்போதும் இழிவான தொழிலைச் செய்பவனே, இவ்வாறு கூறுகின்ற சொல்லை உள்ளத்தால் நினைத்து சொல்வதற்கு நீயன்றி அரசர் அச்சப்படமாட்டாரோ!எம் அரசரின் சொல் தவறாமையே எமக்கு உறுதி பயப்பது என்பதை நீ அறிந்துகொள்!’ என்றனன்.

ஆற்றலின் அறிகுறி.
————————-
‘எந்தை கழலிணையில் எம்மருங்கும் காணலாம்
கந்து சுளியும் கடாக்களிற்றின் -வந்து
பணிமுடியில் பார்காக்கும் பார்வேந்தர் தாழும்
மணிமுடியின் தேய்ந்த வடு.

‘ஆதிசேடன் என்னும் பாம்பால் சுமக்கப்படுகின்ற உலக மன்னர் யாவரும் கட்டுத்தறியைக் கோபித்து முறிக்கின்ற தன்மையுடைய வன்மை பொருந்திய ஆண்யானைகளின் மீது ஏறிவந்து தாழ்ந்து வணங்குவதால் மணி இழைக்கப் பெற்ற அவர்கள் முடிகள் பட்டுத் தேய்ந்த தழும்புகளை எம் தந்தையார் திருவடிகளின் எல்லாப் பக்கங்களிலும் பார்க்கலாம்! ‘என்று இந்திரசேனன் கூறினான்.

மன்னன் மறுமொழி.
————————-

‘மன்னர் பெருமை மடையர் அறிவரோ?
உன்னை அறியா துரைசெய்த -என்னை
முனிந்தருளல்!’ என்று முடிசாய்த்து நின்றான்
கனிந்துருகி நீர்வாரக் கண்.

நளன், இந்திரசேனனை நோக்கி, ‘ அரசர்களுடைய அருமை பெருமைகளை அடுமடையர் அறிவரோ? அறியார். ஆதலால்,உனது பெருமை அறியாமல் பேசிவிட்ட என்னை வெகுளல் வேண்டா!’ என்று சொல்லி, மனம் கரைய கண்களிலிருந்து நீர் பெருக்கெடுத்துப் பாயத் தலை வணங்கி நின்றான்.

நடந்தவை கேட்டு நங்கை நெஞ்சழிதல்.
————————————————–

குற்றக் குமரனையும் கோதையையும் தான்கண்டு
மற்றவன்றான் ஆங்குரைத்த வாசகத்தை -முற்றும்
மொழிந்தார்; அம்மாற்றம் மொழியாத முன்னே
அழிந்தாள் விழுந்தாள் அழுது.

தோழிகள் தமயந்தியிடம் வெற்றிக்குரிய தன்மையுள்ள அவள் மகனையும் மகளையும் வாகுகனான நளன் பார்த்து , அவ்விடத்தில் சொன்ன சொற்களை விடாமல் கூறினார்கள் ; அச்சொற்களை அவர்கள் கூறி முடிப்பதற்கு முன்னே தமயந்தி மனமுடைந்து அழுதபடியே கீழே விழுந்தாள்.

உருமாற்றத்திற்கு இரங்கல்.
———————————

‘கொங்கை அளைந்து குழல்திருத்திக் கோலஞ்செய்
அங்கை இருஅண்டும் அடுபுகையால் -எங்ஙன்
கருகியவோ!’ என்றழுதாள் காதலனை முன்னாள்
பருகியவேற் கண்ணாள் பதைத்து.

தமயந்தி, ‘ மணப் பொருளைத் தொட்டு தடவி என் கூந்தலை ஒழுங்கு படுத்தி அழகு மிகச் செய்த அழகிய கைகள் இரண்டும் , சமைக்கும் போது எழுந்த புகையால் எப்படிக் கரு நிறத்தைப் பெற்றனவோ ?’ என மனம் துடிதுடித்துப் புலம்பினாள்.

தமயந்தி வாகுகனே நளன் எனத் தந்தைக்குக் கூறல்.
———————————————————————-

‘மற்றித் திருநகர்க்கே வந்தடைந்த மன்னவற்குக்
கொற்றத் தனித்தேரும் கொண்டணைந்து -மற்றும்
மடைத்தொழிலே செய்கின்ற மன்னவன்காண் எங்கள்
கொடைத்தொழிலான்,’ என்றாள் குறித்து.

தமயந்தி தந்தையைப்பார்த்து ,’இச்சிறந்த குண்டினபுரத்திற்கு வந்து சேர்ந்த இருதுபன்னனுக்கு வெற்றியையுடைய நிகரற்ற தேரைச்செலுத்திக்கொண்டு வந்து, பின்னும் சமையல் தொழில் செய்யும் வாகுகனே கொடையிலே சிறந்த எம்மன்னர்,’என்று உறுதியாகக் கூறினாள்.

வீமன் வாகுகனிடம் செல்லல்.
————————————

போதலருங் கண்ணியான் போர்வேந்தர் சூழப்போய்க்
காதலிதன் காதலனை கண்ணுற்றான்;-ஓதம்
வரிவளைகொண் டேறும் வளநாடன் தன்னை
தெரிவரிதா நின்றான் திகைத்து.

வீமன், போர்த்தொழிலில் வல்ல அரசர்களெல்லாம் தன்னைப் பிந்தொடர்ந்துவர சென்று தன் மகளாகிய தமயந்தியின் கணவனைப் பார்த்தான். நளனை அவனால் அடையாளம் காண இயலாமல் மயங்கி நின்றான்.

வாகுகனே நளன் என வீமன் அறிதல்.
——————————————

‘செவ்வாய் மொழிக்குஞ் செயலுக்குஞ் சிந்தைக்கும்
ஒவ்வாது கொண்ட வுரு,’என்னா- எவ்வாயும்
நோக்கினான் நோக்கித் தெளிந்தான் நுணங்கியதோர்
வாக்கினான் தன்னை மதித்து.

வீமன் அந்த மடைத் தொழிலானுடைய இயல்பைப் பார்த்து, ‘இவன் கொண்டுள்ள வடிவமானது இவனுடைய நல்ல சொற்களுக்கும் செய்கின்ற தொழிலுக்கும் நினைப்பிற்கும் பொருந்தாததாக இருக்கின்றது!’ என்று எல்லா இயல்புகளையும் ஆராய்ந்தான்; ஆராய்ந்து, ‘ நுட்பமான சிறந்த சொல்லையுடையவனாகிய வாகுகனே நளன் ஆவன்,’ என நினைத்து உறுதி பூண்டான்.

‘ நளனே , உன் உண்மை உருவைக்காட்டு!’
——————————————-

‘பைந்தலைய நாகப் பணமென்று பூகத்தின்
ஐந்தலைய பாளதனை ஐயுற்று -மந்தி
தெளியா திருக்கும் திருநாடா ! உன்னை
ஒளியாது காட்டுன் உரு.’

‘பெண் குரங்கானது கமுக மரத்தின் உச்சியிலுள்ள அழகான பாளையை, நச்சுப் பையையுடைய நாகப்பாம்பினது படம் என கருதி சந்தேகித்து , மனத்துணிவில்லாமல் அஞ்சி இருக்கின்ற அழகு பொருந்திய வளமிக்க நிடத நாட்டு அரசனே, இன்னம் மறையாமல் உன் உண்மை வடிவத்தை எங்களுக்கு மறைக்காமல் காட்டுவாயாக,’ என்று வீமன் நளனை பார்த்துக் கூறினான்.

பாம்பரசு கொடுத்த பைந்துகில் உடுத்தல்.
————————————————–

அரவரசன் தான்கொடுத்த அம்பூந் துகிலின்
ஒருதுகிலை வாங்கி உடுத்தான்; -ஒருதுகிலைப்
போர்த்தான் பொருகலியின் வஞ்சனையால் பூண்டளிக்கும்
கோந்தாயம் முன்னிழந்த கோ.

வீமன் ‘ உன் உருக்காட்டு ‘ எனறவுடன் பகையைச் செய்யும் கலியின் வஞ்ச சூழ்ச்சியினால் சூதாடலைத்தனக்கு உரிமையாகக் கொண்டு யாவரையும் பாதுகாக்க வேண்டிய அரச உரிமையை இழந்துவிட்டவனான நளன் , பாம்புக்கரசன் கார்கோடகன் தனக்கு முன்னர்த் தந்த அழகிய மென்மையான ஆடைகளுள் , ஓர் ஆடையை இடையிலும் மற்றொன்றை மேலாடையாகப் போர்த்துக்கொண்டான்.

முன்னுரு அடைதல்.
———————–

மிக்கோன் உலகளந்த மெய்யடியே சார்வாகப்
புக்கோர் அருவினைபோல் போயிற்றே -அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும்
மானகத்தேர்ப் பாகன் வடிவு.

அந்தக் காலத்தில் தன் காதலியாகிய தமயந்தியை வனத்திலே விட்டுப் பிரிந்து மறைந்து வாழ்கின்ற பெரிய மலை போலும் தேரினது பாகனாகிய வாகுகன் வடிவமானது, தேவர்களுள் சிறந்தவனான திருமாலின் உலகம் முழுவதையும் குறுகிய வடிவமெடுத்து மூவடிகளால் அளந்த உண்மைத் திருவடிகளே ஆதரவாகக் கொண்டு அவற்றைச் சார்ந்தவர்களின் தீவினைகள் ஒழிவது போல, விட்டு நீங்கியது.

பழைய நளன் வடிவைக்காணல்.
———————————————-

தாதையைமுன் காண்டலுமே தாமரைக்க ணீரரும்பப்
போதலரும் குஞ்சியான் புக்கணைந்து -கோதிலாப்
பொன்னடியைக் கண்ணிற் புனலாற் கழுவினான்
மின்னிடையா ளோடும் விழுந்து.

இந்திர சேனன், தன் தந்தையாகிய நளனைக் கண்டவுடனே , அன்பால் தன்னுடைய விழிகளிலிருந்து நீர் வடிய ,மின்னல் கொடி போன்ற இடையையுடைய தன் தங்கை இந்திர சேனையுடன் சென்று தந்தையைச் சார்ந்து கீழே விழுந்து வணங்கிக் குற்றமற்ற அழகிய திருவடிகளைத் தன் விழி நீரால் கழுவினான்.

தமயந்தி நளன் அடியில் வீழ்ந்தழுதல்.
————————————————-

பாதித் துகிலோடு பாய்ந்தழியுங் கண்ணீரும்
சீதக் களபதனம் சேர்மாசும் -போத
மலர்ந்ததார் வேந்தன் மலரடியில் வீழ்ந்தாள்;
அலர்ந்ததே கண்ணீர் அவற்கு.

தமயந்தி தன் கணவனைக் கண்டதும் அவனால் அறுக்கப்பட்ட பாதி ஆடையை உடுத்த கோலத்துடன் பாய்ந்தோடுகின்ற விழிகளின் நீரும், குளிர்ச்சி பொருந்திய கலவைச் சாந்தணிந்த முலைகளில் படிந்திருந்த அழுக்கும் தன் உடலில் பொருந்த , அரும்பு விரியப் பெற்ற மலர் மாலையை அணிந்த அவனுடைய தாமரை மலரைப்போன்ற திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள்; தமயந்தி அழுதலைக் கண்டவுடன் நளனுடைய கண்களிலிருந்து தாரை தாரையாய் நீர் வடிந்தோடியது.

நீர் தேங்கும் நீள்விழிகள்.
———————————-

வெவ்விடத்தோ டொக்கும் விழியிரண்டும் வீழ்துயில்கொள்
அவ்விடத்தே நீத்த அவரென்றே – இவ்விடத்தே
வாரார் முலையாளம் மன்னவனைக் காணாமல்
நீரால் மறைத்தனவே நின்று.

கொடிய நஞ்சை போன்றிருக்கின்ற விழிகள் இரண்டும் ,சோர்ந்த தூக்கத்தின் போது அந்த வனத்திலே விட்டுப் பிரிந்தவர் என்று இவ்வீமன் அரண்மனையில் கச்சார்ந்த மார்பினையுடையவளான தமயந்தி அந்த நளனை நன்கு காண முடியாதபடி தம் நீரினால் இடையே தமது ஒளியை மறைத்து விட்டன.

( காட்டகத்தே நளன் நீத்துச் சென்றவன் என்று அவனைத் தமயந்தி காணாதவாறு இடையே நின்று தடுத்ததைப் போல கண்ணீர் தோன்றியது. )

தேவர் பெய்த பூமாரி.
———————————–

‘உத்தமருள் மற்றிவனை யொப்பார் ஒருவரிலை
இத்தலத்தில்!’என்றிமையோர் எம்மருங்கும் -கைத்தலத்
தேமாரி பெய்யும் திருமலர்த்தார் வேந்தன்மேற்
பூமாரி பெய்தார் புகழ்ந்து.

தேவர்கள், ‘இப்பூவுலகத்தில் சிறந்தவர்களுள் இந்த நளனைப்போன்ற இயல்புடையவர் ஒருவரும் இல்லை’என்று புகழ்ந்து கொண்டாடி, நளன்மேல் மலர் மாரியைப் பெய்தார்கள்.

காவலனை வேண்டும் கலி.
————————————–

‘தேவியிவள் கற்புக்கும் செங்கோல் முறைமைக்கும்
பூவுலகில் ஒப்பாய்யார் போதுவார்?-காவலனே!
மற்றென்பால் வேண்டும் வரங்கேடுக் கொள்,’ என்றான்
முற்றன்பாற் பாரளிப்பான் முன்.

கலி புருடன், நளமன்னன் முன் தோன்றி,’ அரசனே, உன் மனைவியாகிய இத்தமயந்தியின் கற்பின் சிறப்பிற்கும் உன் செங்கோல் ஆட்சி முறைக்கும் நிகராக இவ்வுலகத்திலே இனித் தோன்றுவார் யார்? ஆகவே , நீ என்னிடம் விரும்பும் வரத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்வாயாக,’ என நளனை வேண்டிக்கொண்டான்.

நளன் வேண்டிய நல்வரம்.
————————————-

‘உன்சரிதம் செல்ல உலகாளும் காலத்தும்
மின்சொரியும் வேலாய்! மிகவிரும்பி -என்சரிதம்
கேட்டாரை நீயடையேல்,’ என்றான் கிளர்மணிப்பூண்
வாட்டானை மன்னன் மதித்து.

நளன், ‘மின்னல் போலும் ஒளி வீசும் வேலேந்திய கலியே, உனது ஆட்சியே எவ்விடத்தும் நடக்கும் வண்ணம் நீ உலகையெல்லாம் ஆட்சி செய்யும் காலத்திலும் கூட எனது வரலாற்றை மிகவும் விருப்பம் கொண்டு கேட்டாரை நீ அடையாமல் இருப்பாயாக ! என வேண்டிக்கொண்டான்.

உன் சரிதம் கேட்டாரை யானடையேன்.
———————————————-

‘என்காலத் துன்சரிதம் கேட்டாரை யானடையேன்
மின்கால் அயில்வேலாய்!மெய்,’என்று – நன்கலி
மட்டிறைக்கும் சோலை வளநாடன் முன்னின்று
கட்டுரைத்துப் போனான் கலி.

கலி,’ நளனே என்னுடைய ஆட்சி நடக்கின்ற கலி காலத்திலும் உன் வரலாற்றை கேட்டவரிடத்தே நான் சென்று துன்பமடையச் செய்யேன்! என்று நிடத நாட்டு அரசனான நளனுக்கு முன்னர் நின்று உறுதிமொழி கூறிவிட்டு சென்றான்.

வீமன் செய்த விருந்து.
—————————–

வேத நெறிவழுவா வேந்தனையும் பூந்தடங்கட்
கோதையையும் மக்களையும் கொண்டுபோய்த் – தூது
புதையத்தேன் பாய்ந்தொழுகும் பூஞ்சோலை வேலி
விதையக்கோன் செய்தான் விருந்து.

மகரந்தப் பொடியானது மறையத் தேன் பாய்ந்தோடுகின்ற மலரை உடைய சோலைகளையே வேலியாகக் கொண்ட விதர்ப்ப நாட்டு அரசனான வீமன், வேத நெறி கடவாத ஒழுக்கமுடைய நளனையும், தாமரை மலர் போன்ற பெரிய கண்களையுடைய தமயந்தியையும் , அவர்களுடைய மக்களையும் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டுபோய் விருந்து அளித்தான்.

இருதுபன்னன் விடைபெறுதல்.
—————————————-

‘உன்னையான் ஒன்றும் உணரா துரைத்தவெலாம்
பொன்னமரும் மார்ப!பொறு,’என்று -பின்னைத்தன்
மேல்நீர்மை குன்றா வெறுந்தேர் மிசைக்கொண்டான்
மால்நீர் அயோத்தியார் மன்.

மிக்க நீர் வளத்தையுடைய அயோத்தி நகரத்தார்க்கு அரசனான இருதுபன்னன், ‘ அழகு மிக்க மாலையையுடைய அரசரே , நீவிர் இன்னார் என்று அறியாது பேசிய கடுமையான சொற்களையெல்லாம் பொறுக்க வேண்டும்!’ என்று கூறி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தமயந்தியின் சுயம்வரத்திற்கு என்று அணிந்து வந்த மேல் பகட்டுத் தன்மை எல்லாம் ஒடுங்கி , அழகற்ற தன் தேரின்மேல் ஏறி அயோத்திக்குச் செல்ல புறப்பட்டான்.

நளன் குடும்பத்துடன் நாடு திரும்புதல்.
————————————————–

விற்றானை முன்செல்ல வேல்வேந்தர் பின்செல்லப்
பொற்றேர்மேல் தேவியொடும் போயினான் – முற்றம்பல்
தேனீர் அளித்தருகு சேந்நெற் கதிர்விளைக்கும்
மாநீர் நிடதத்தார் மன்.

நிடத நாட்டு அரசனான நளன், விற்படை தாங்கிய வீரர் பலர் தனக்கு முன்பாக செல்லவும், வேற்படை ஏந்திய அரசர் பின் வரவும், மனைவி மக்களுடன் அழகிய தேரின் மேல் ஏறி நிடத நாட்டை நோக்கிப் போனான்.

நம் நகரம் எவ்வளவு தூரம்?
———————————

‘தானவரை வெல்லத் தரித்தநெடு வைவேலாய்!
ஏனைநெறி தூரமினி எத்தனையோ?- மானே !கேள்;
இந்த மலகடந் தேழுமலைக் கப்புறமா
விந்தமெனும் நம்பதிதான் மிக்கு.

தமயந்தி,’ அரக்கத் தன்மையுடையவரை வெல்லக் கொண்டுள்ள நீண்ட கூர்மை பொருந்திய வேற்படையையுடைய அரசரே, வழித்தூரம் எவ்வளவு இருக்கின்றதோ!’என்று கேட்டாள்; நளன் ,’ மான் போன்றவளே, இதோ காணப்படும் மலையை கடந்து , அதற்க்கப்பாலுள்ள ஏழுமலைகளையும் கடந்து , அதன் பின்னுள்ள இடத்தில் நமது மாவிந்த நகரம் சிறந்து விளங்கக் காணலாம் ,’ என்றான்.

கதிரவன் தோற்றம்.
—————————-

‘இக்கஙுல் போக இகல்வேல் நளனெறிநீர்
செய்க்கங்கு பாயும் திருனாடு- புக்கங்கு
இருக்குமா காண்பான் ஏறினான் குன்றிற்
செருக்குமான் தேர்வெய்யோன் சென்று.

நளன் அழகிய நிடத நாட்டில் இன்றிரவு நீங்கும் வண்ணம் சென்று அங்குத் தங்கியிருக்கின்ற நிலைமையைக் காண வருபவனைப் போல் ஓட்டம் மிகுந்த குதிரை பூட்டிய தேர்மீது கதிரவன் போய்த் தோன்றும் மலையாகிய கிழக்குத் திக்கினின்று புறப்பட்டான்.

மாவிந்த நகரத்தின் சோலையில் தங்கல்.
————————————————–

மன்றலிளங் கோதையோடு மக்களும் தானுமொரு
வென்றி மணிநெடுந்தேர் மேலேறிச்-சென்றடைந்தான்
மாவிந்தம் என்னும் வளநகரஞ் சூழ்ந்ததொரு
பூவிந்தை வாழும் பொழில்.

‘மாவிந்தம் ‘ என்னும் பெயரைத் தாங்கும் வளம் பொருந்திய நகரத்தைச் சுற்றியுள்ள வெற்றித்திரு விளங்குகின்ற ஒப்பில்லாத சோலையில் நளன் தமயந்தியுடன் குழந்தைகளும் தானும் வெற்றியையுடைய அழகிய பெரிய தேர்மேல் ஏறிப் போய்ச்சேர்ந்தான்.

புட்கரனிடம் தூது அனுப்பல்.
—————————————–

‘மற்றவனுக் கென்வரவு சொல்லி மறுசூதுக்கு
உற்ற பணையம் உளதென்று -கொற்றவனைக்
கொண்டணைவீர் ‘- என்று குலத்தூ தரைவிடுத்தான்
தண்தெரியல் தேர்வேந்தன் தான்.

குளிர்ச்சியையுடைய மலர் மாலையை அணிந்த தேரையுடைய நளன், ‘ வெற்றியையுடைய அரசனான புட்கரனுக்கு என் வருகையை அறிவித்து , என்னிடத்தில் இரண்டாம் சூதுக்கு பணையப் பொருள் உள்ளது என்று கூறி , அவனை அழைத்துக்கொண்டு வருவீர்களாக ! என்று கூறித் தூதுவர்களை அனுப்பினான்.

நளனைப் புட்கரன் காணல்.
————————————

மாய நெடுஞ்சூதில் வஞ்சித்த வன்னெஞ்சன்
தூய நறுமலர்ப்பூஞ் சோலைவாய் – ஆய
பெருந்தானை சூழப் பெடைநடையா ளோடும்
இருந்தானைக் கண்டான் எதிர்.

வஞ்சத்தையுடைய சூதாட்டத்தால் நளனை ஏமாற்றி அவன் நாடு முதலியவற்றைக் கைப்பற்றிய வஞ்சம் செய்த கல் நெஞ்சினனான புட்கரன் , தூய மணத்தையுடைய பூக்கலால் பொலியும் சோலையில் சிறந்த பெரிய படைகள் சூழ ,பெண் அன்னத்தைப்போன்ற மென்மையாகிய நடையையுடைய தமயந்தியோடு தங்கியிருந்த நளனை நேரில் வந்து கண்டான்.

புட்கரன் நளனை நலம் வினாதல்.
—————————————–

செங்கோல் அரசன் முகம்நோக்கித் தேர்ச்சியிலா
வெங்கோல் அரசன் வினவினான்;-’அங்கோலக்
காவற் கொடைவேந்தே! காதலற்குங் காதலிக்கும்
யாவர்க்கும் தீதிலவே?’ என்று.

தெளிவு இல்லாத கொடுங்கோல் அரசனான புட்கரன், செங்கோல் ஆட்சி நடத்தும் நளனது முகத்தைப் பார்த்து, ‘அழகிய வடிவமும் , உலகை ஆளும் சிறப்பும், ஈகைத்தன்மையும் கொண்ட மன்னரே, உம்முடைய மகனும் மகளும் மனைவி முதலிய யாவரும் நலந்தானே?’ என்று கேட்டனன்.

மறு சூது.
——————

தீது தருகலிமுன் செய்ததனை ஓராதே
‘யாது பணையம்?’ எனவியம்பச் -சூதாட
மையாழி யிற்றுயிலும் மாலனையான் வண்மைபுனை
கையாழி வைத்தான் கழித்து.

தீமையைச் செய்யும் கலி தனக்கு முன்னொரு காலத்தில் நடந்த சூதில் வெல்லும் தன்மையைச்செய்த செயலை நினைத்து பாராமல் , புட்கரன்,’ மறு சூதுக்கு என்ன வைக்கிறாய்?’ என்று கேட்க , கருமையான கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலைப் போன்றவனான நளன், கொடைத்தன்மை பூண்ட தன் வலக்கை விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றிப் பந்தயப்பொருளாக வைத்தான்.

நாடு நகர் முதலியன திரும்பப் பெறல்.
————————————————–

அப்பலகை யொன்றின் அருகிருந்தார் தாம்மதிக்கச்
செப்பரிய செல்வத் திருநகரும்-ஒப்பரிய
வன்றானை யோடும் வளநாடும் வஞ்சனையால்
வென்றானை வென்றானவ் வேந்து.

அந்தச் சூதுக்கருவிப் பலகையில் ஒன்றாலாயே தன் பக்கத்தில் இருந்த அரசர் முதலிய அனைவரும் நன்கு மதிக்கும்படி புகழ்ந்து சொல்வதற்கு அரிய செல்வம் மிகுந்த அழகிய தன் மாவிந்த நகரத்தையும், ஒப்பில்லாத வன்மை மிகுந்த நால்வகைப்படைகளுடன் வளம் மிகுந்த நிடத நாட்டையும், முன்னர் மாயச்சூதினால் வென்ற புட்கரனை அந்த நளன் வென்று தனக்குரிமையாக்கிக்கொண்டான்.

புட்கரன் வந்தபடியே வழிக்கொண்டான்.
——————————————-

அந்த வளநாடும் அவ்வரசும் ஆங்கொழிய
வந்த படியே வழிக்கொண்டான் – செந்தமிழோர்
நாவேய்ந்த சொல்லால் நளனென்று போற்றிசைக்கும்
கோவேந்தற் கெல்லாம் கொடுத்து.

புட்கரன், செந்தமிழ் புலமையையுடைய அறிஞர்கள் நாவிலே பொருந்திய பாவால் போற்றிப் பாடுகின்ற நிடத நாடும், அந்நாட்டின் ஆட்சியும், அங்குச் சூதினால் தன்னிடமிருந்து நீங்கும்படி மற்ற அரண்மனையிலுள்ள செல்வங்கள் யாவற்றையும் கொடுத்துவிட்டு தான் வெறுங்கையோடு வந்தது போலவே தன் நகரத்திற்குத் திரும்பிசென்றான்!

நளன் நன்னகரம் புகுந்தான்.
———————————–

ஏனை முடிவேந்தர் எத்திசையும் போற்றிசைப்பச்
சேனை புடைசூழ தேரேறி – ஆனபுகழ்ப்
பொன்னகரம் எய்தும் புரந்தரனைப் போற்பொலிந்து
நன்னகரம் புக்கான் நளன்.

புட்கரனையொழிந்த மற்ற அரசர் எல்லாப் பக்கங்களிலிருந்தும் வாழ்த்து கூறவும், படைகள் ஒரு பக்கம் வரவும், நளன் தேரின்மேலேறி அமர்ந்து , நிலைத்த புகழையுடைய தேவர் உலகத்தைச் சேரும் இந்திரனைப்போல விளங்கிய தனக்கே உரித்தான மாவிந்த நகரம் என்னும் நல்ல நகரில் சென்று சேர்ந்தான்.

கவிஞர் மகிழ்ச்சி.
———————————

‘கார்பெற்ற தோகையோ!கண்பெற்ற வாள்முகமோ!
நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ! – பார்பெற்று
மாதோடு மன்னன் வரக்கண்ட மாநகருக்கு
ஏதோ உரைப்பன் எதிர்!

நளன் தன்னால் முன் இழக்கப்பட்ட நாடு நகர் முதலியவற்றை மீளப் பெற்றுக்கொண்டு தன் மனைவியாகிய தமயந்தியுடன் திரும்பிவரப் பார்த்த பெருமையுடைய மாவிந்த நகரத்திற்கு ஒப்பாக எதைத் துணிந்து கூறுவேன்! முகிலைக் கண்ட மயில் என்பேனோ! இழந்த கண்களை மீண்டும் பெற்ற ஒளியையுடைய முகம் என்று மொழிவேனோ! நெடுங்காலமாக எதிர் நோக்கி இருந்து மழை பெய்ய அந்நீரை ஏற்று வளர்ந்த நெற்பயிர் என்று கூறுவேனோ!

வியாசர் மொழிந்த ஆசி.
———————————–

‘வென்றி நிடதத்தார் வேந்தன் சரிதையீது’
என்றுரைத்து வேத இயல்முனிவன் – ‘ நன்றிபுனை
மன்னா! பருவரலை மாற்றுதி!’என் றாசிமொழி
பன்னா நடந்திட்டான் பண்டு.

முற்காலத்தில் வேதத்தின் நடையைச் சிக்கு அறுத்து ஒழுங்கு செய்த வியாச முனிவர் தருமனை நோக்கி, ‘ நல்லறத்தை மேற்கொண்டு நடக்கின்ற தருமனே , வெற்றி மாலை சூடிய நிடத நாட்டினர்க்கு மன்னனாகிய நளன் வரலாறு இதுவே,’ என்று விளக்கிச் சொல்லி,’ நீ சூதாட்டத்தால் நடந்ததை நினைத்து வருந்தும் துன்பத்தை இனி விட்டு விடுக! ‘ என்று கூறி வாழ்த்திச் சென்றார்.

கவிஞர் வாழ்த்து.
—————————-

வாழி அருமறைகள்! வாழிநல் அந்தணர்கள்!
வாழிநளன் காதை வழுத்துவோர் – வாழிய
மள்ளுவநாட் டாங்கண் வருசந் திரன்சுவர்க்கி
தெள்ளுறுமெய்க் கீர்த்தி சிறந்து!

அருமறாஇகள் = ஓதுதற்கும் அறிதற்கும் அரிய வேதங்கள்.
மள்ளுவ நாடு = சந்திரன் சுவர்க்கியினுடைய நாடு.
ஆங்கண் = அவ்விடத்தில்
தெள் உற = தெளிவுற.
மெய்கீர்த்தி = உண்மைப்புகழ்.

அரிய வேதங்கள் வாழ்க ! நல்லொழுக்கத்தையுடைய முனிவர்கள் வாழ்க ! நளன் வரலாறும் அதனை கூறுவோரும் கேட்போரும் வாழ்க ! மள்ளுவ நாடு என்ற நீர் வளம் மிகுந்த நாட்டில் தோன்றி ஆட்சி செய்யும் சந்திரன் சுவர்க்கி என்ற அரசனுடைய குற்றமற்ற உண்மைப்புகழ் சிறப்புற்றோங்கி நெடு நாள் வாழ்க !

சந்திரன் சுவர்க்கி புகழேந்தியாரை ஆதரித்தவன். அன்னானை நூலுள் பல இடத்தும் வைத்துப் போற்றியது போல இறுதியிலும் அவன் புகழைப் பேசி நூலை முடிக்கின்றார் நன்றியறிவு குன்றாத புகழேந்தியார்.

கலி நீங்கு காண்டம் முற்றிற்று[b]
Back to top Go down
View user profile
 
கலிநீங்குகாண்டம் பக்கம் - 2
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: