BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகலிநீங்குகாண்டம் – பக்கம் 1 Button10

 

 கலிநீங்குகாண்டம் – பக்கம் 1

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கலிநீங்குகாண்டம் – பக்கம் 1 Empty
PostSubject: கலிநீங்குகாண்டம் – பக்கம் 1   கலிநீங்குகாண்டம் – பக்கம் 1 Icon_minitimeFri Apr 02, 2010 12:51 pm

இக்காண்டம் அவலச்சுவையோடு தொடங்கி இன்பச்சுவையோடு முடிகின்றது.

காரிருளில் கானகத்தில் காதலியை விட்டு நளன் ஏகினான். வழியில் , ஓர் அழுகுரல் கேட்டது. அக்குரலைக்கேட்டு அவ்வழியே சென்ற நளன், ஆங்கொரு பாம்பு தீயில் கிடந்து துன்புறப் பார்த்தான். அத்துன்பத்தைப் போக்கத் தான் முன்னர் அக்கினியிடம் பெற்ற வரத்தால், துன்பமின்றிப் புகுந்து பாம்பைக் காப்பாற்றினான்.

அப்பாம்போ , தன்னைக் கீழே விடுவதற்கு முன் ஒன்று முதலாகப் பத்து வரை எண்ணித் ‘தச’ எனக் கூறிக் கீழே விடுமாறு கூறியது. ‘ தச’ என்பதற்குப் ‘ பத்து’ என்பதும் ‘ கடி’ என்பதும் பொருள். செம்மனத்தனாகிய நளன், அவ்வண்ணமே ‘ தச ‘என்று கூறிக் கீழே விட்டான். உடனே பாம்பு கடித்தது. நளன் உடல் கருகியது . நளன் வேற்றுருவை அடைந்தான்!

நளன் , ‘ பாம்பே, நீ சினங்கொள்ளக் காரணம் இல்லாதிருந்தும் என்னைக் கடித்ததற்குக் காரணமென்ன? ‘ என்றான். ‘கார்கோடகன்’ என்னும் அப்பாம்பு , நின் உருவத்தை மாற்றுவதற்கே இதைச் செய்தேன்! இவ்வாடைகளை வைத்துக் கொள்; வேண்டும் போது உடுத்துக்கொள்ளின் பழையவடிவை பெறுவாய்; நின் வாகு ( அழகு ) குறைந்தால் ‘ வாகுகன் ‘ என்னும் பெயரைப் பூண்பாயாக. அயோத்தி அரசனிடத்தில் மடைத்தொழிலும் தேரோட்டும் தொழிலும் மேற்கொண்டு வாழ்க!’ என்று கூறி மறைந்தது.

நளன் வடிவு மாறியது; மங்கையர்கள் தம் மனத்தை வாங்கும் தடந்தோள், சூம்பிக் கருகியது ! நளன் கார்க்கோடகன் கூறிய வண்ணம் அயோத்தியை அடைந்தான்; ‘ யான் மடைத்தொழிலும் தேர்த்தொழிலும் வல்லேன் ,’ என்று அயோத்தி மன்னனான இருதுபன்னனுக்குக் கூறி , அவனிடம் அவ்வேலையைப் பெற்று வந்தான்.

தமயந்தி, அந்தணனை அழைத்து, நளனைத் தேட வழி கூறினாள்.

‘கானகத்துக் காரிருளில் காரிகையைக் கைவிட்டுப் போனதுவும் வேந்தர்க்கு போதுமோ?’ என்று வினவுக! இதற்கு விடை கூறுவார் உளராயின், வந்துரைக்க! ‘ என்று சொல்லி அனுப்பினாள்.

அந்தணன் பலவிடங்களிலும் தேடியலைந்துவிட்டு , அயோத்தியை அடைந்து , ‘ கானகத்துக் காரிருளில் காரிகையைக் கை விட்டுப் போனதுவும் வேந்தர்க்குப் போதுமோ?’ என்றான். நளன் இதற்கு விடையாக ‘ அங்ஙனம் நிகழ்ந்தது விதியின் விளைவால் ஆம் ,’ என்றான். இதைக் கேட்ட அந்தணன் மகிழ்ந்து , மீண்டு வந்து தமயந்தியிடம் கூறினான்.

வழியில் இருதுபன்னன் மேலாடை கீழே வீழ்ந்தது; ‘அதை எடு ,’ என்றான் இருதுபன்னன். அதற்குள், ‘தேர் நாலாறு காதம் சென்றது,’ என்றான் நளன். இருதுபன்னன் வியந்தான். வழியில் உள்ள தான்றி மரத்தின் கிளை ஒன்றில் பத்தாயிரங்கோடிக் காய்கள் உள்ளன என்று இருதுபன்னன் எண்ணாமலே கூறினான். இதை வியந்தான் நளன் . பின்பு இருவரும் தம் வித்தைகளை மாறிக்கொண்டனர். கலியும் அங்கேயே நளனை விட்டு நீங்கினான்.

இருதுபன்னன் தேர் விதர்ப்ப நாட்டை அடைந்தது. ஏறு போல் பீடு நடையோடு அரண்மனைக்குள் இருதுபன்னன் புகுந்தான். புகுந்தானைக் கண்ட வீமன், ‘வந்த காரணம் யாது? ‘ என்றான். உடனே இருதுபன்னன் , ‘உம்மைப் பார்க்க வந்தேன்,’ என்று சாதுரியமாகக் கூறினான்.

தேர் விட்டு அடுக்களைக்குள் சென்ற நளன் செயல்களை அறிந்து வரத் தமயந்தி ஒரு தோழியை அனுப்பினாள்.

அவள் இன்னொருத்தியிடம் மக்களை ஒப்படைத்து நளன் அருகே சென்று விளையாட விட்டு மேல் நிகழ்வதை அறிந்து வரச் சொன்னாள்.

நளன் நெருப்பு, நீர் , விறகின்றியே சமையலை செய்து முடித்தான். அவன் மக்களைக்காண நேர்ந்தது . அன்பு கரை புரண்டது! வாரியெடுத்து அணைத்துக்கொண்டான். ‘என் மக்களைப் போல இருக்கின்றீர்களே ! நீவிர் யார் மக்கள்? ‘ என்றான்.

‘எங்கள் வள நாட்டை வேற்றான் ஆள , எங்கள் தாயை கானகத்தில் இரவில் விடுத்துச் சென்று வேறெங்கோ வாழும் நளமகராசருடைய மக்கள் யாங்கள்!’ என்றார்கள் மக்கள்.

‘உங்கள் வளனாடு வேற்றான் ஆள , அவனுக்கஞ்சி நீங்கள் இங்கே வாழ்தல் தக்கதாகுமோ? மானக் குறைவன்றோ?’ என்றான் நளன்.

உடனே , இந்திரசேனன் , ‘எங்கள் அரசர் வாய்மையே உறுதி எனக் கொண்டார். ஆதலால் , நாங்கள் இந்நிலையை அடைந்தோம்! நீ மடையன் ஆதலால், இம்மாற்றம் உரைத்தாய்! மன்னரும் இதை உரைக்க அஞ்சமாட்டாரோ!’ என்றான்

‘ உண்மை தான் இளவரசே , யான் மடைத்தொழிலன்; எனக்கென்ன தெரியும் அரசர்தம் அருமை பெருமை! பொறுத்தருள்க !’ என்றான் நளன்.

இந்நிகழ்ச்சிகளை கேட்ட தமயந்தி வருந்தினாள்; வீமனிடம் சென்று கூறினாள். துடிதுடித்து ஓடி வந்த வீமன் நளனைப் பார்த்து, ‘ உன் உருவை ஒளியாது காட்டு,’ என்ன , நளன் தான் முன்னர்க் கார்க்கோடகனிடமிருந்து பெற்ற ஆடை ஒன்றை அறையில் உடுத்தான்; மற்றொன்றை மேலே போர்த்துப் பண்டை வடிவு கொண்டான். அனைவரும் மகிழ்ந்தனர். வீமன் அனைவர்க்கும் விருந்திட்டான்.

இருதுபன்னன் தன் அறியாமைக்கு வெட்கப்பட்டுத் தன் நாடு நோக்கிச் சென்றான்.

நளன் தமயந்தியோடு புறப்பட்டு நிடத நாட்டுக்கு வந்து மாவிந்த நகரத்தின் ஒரு சார் தாங்கினான். தூதுவர் நளன் செய்தியை ஏற்றுச் சென்றனர்; புட்கரனை அடைந்து ‘ மறு சூது ஆட நளமகராசர் வந்துள்ளார்; மறு பனையமும் கொண்டு வந்துள்ளார், ‘ என்றனர்.

புட்கரன் நளனை அவன் தங்கியிருந்த சோலைக்கண் வந்து பார்க்க, இருவரும் மறு சூது ஆட முனைதனர். நளன் இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றான் ; புட்கரன் அனைத்தையும் இழந்தான்; வந்த வழியே , வந்தபடியே , திரும்பினான்!

நளன் நிடத நாட்டு அரசன் ஆனான் . மக்கள் மகிழ்ந்தார்கள் . கலி மறுபடியும் தோன்றி அவனைப் பாராட்டித் தன்னிடமிருந்து வரங்கொள்ளுமாறு கேட்க , தன் கதையைக் கேட்டாரைக் கலி அணுகாதிருக்க வேண்டும் என்ற வரத்தை நளன் பெற்றுக்கொண்டான்.

இந்த அளவில் வியாசர் தருமனுக்குக் கதையைக் கூறி விட்டு, ஆறுதல் மொழியும் புகன்று மறைந்தார்.

நூல் இதனோடு முற்றுகிறது.

தமயந்தியைப் பிரிந்த நளன்.
——————————————-

‘மன்னா! உனக்கபயம்!’ என்னா வனத்தீயிற்
பன்னாக வேந்தன் பதைத்துருகிச் – சொன்ன
மொழிவழியே சென்றான் முரட்கலியின் வஞ்சப்
பழிவழியே செல்கின்றான் பார்த்து.

பன்னாக வேந்தன் = பாம்புகளுக்கு அரசன்.
முரண் = பகை கொண்ட
வஞ்சப்பழி வழியே = கலியினுடைய வஞ்சக செயலின் படி.

தன்னிடம் பகை கொண்ட கலியின் வஞ்சனையாம் தீய வழியிலே செல்கின்ற நளன், ஒரு பெரும்பாம்பு காட்டுத்தீயில் அகப்பட்டுத் துடித்து மனம் வாடி,’ அரசனே, அடியேன் உனக்கு அடைக்கலம்!’ என்று கூறிய சொற்கள் வந்த வழியாகவே பார்த்துக்கொண்டு சென்றான்.

நளன் பாம்பை காணல்.
——————————-

ஆரும் திரியா அரையிருளின் அங்ஙனே
சோர்குழலை நீத்த துயரோடும் – வீரன்
திரிவான் அத்தீக்கானிற் செந்தீயின் வாய்ப்பட்டு
எரிவானைக் கண்டான் எதிர்.

ஆரும் = யாரும்.
த்ரியா = செல்ல முடியாத.
தீக்கானில் = கொடிய காட்டில்
செந்தீ வாய்ப்பட்டு = கொழுந்து விட்டெரியுந்தீயில் அகப்பட்டு
எரிவானை = எரிகின்ற ‘கார்க்கோடகன் ‘ என்னும் பாம்பை.

எத்தகைய் அஞ்சாமை படைத்தவரும் துணிந்து செல்ல முடியாத நள்ளிரவில் பாழ் மண்டபத்தில் தாழ்ந்த கூந்தலையுடைய தமயந்தியை விட்டுப் பிரிந்து வந்த துன்பத்தோடு வீரனும் அங்கே சுற்றித் திரிகின்றவனுமான நளன், அத்தீய காட்டில் செந்நெருப்புத் தழலில் அகப்பட்டு வருந்திக்கொண்டிருக்கின்ற கார்க்கோடகன் என்னும் அப்பாம்பினை நேரே பார்த்தான்.

தீக்கடவுள் வரத்தால் தீயினுள் புகல்.
—————————————————

தீக்கடவுள் தந்த வரத்தைத் திருமனத்தில்
ஆக்கி அருளால் அரவரசை – நோக்கி
அடைந்தான்; அடைதலுமே ஆரழலோன் அஞ்சி
உடைந்தான்;போய்ப் புக்கான் உவந்து.

திருமனத்தில் = நல்ல மனத்தில்
ஆர் அழல் = பெருகிய தீக்கடவுள்
உவந்து = மகிழ்ந்து
புக்கான் = புகுந்தான்

நளன் , தீகடவுள் தனக்கு முன்பு கொடுத்த வரத்தைத் தன் நல்ல நெஞ்சத்தில் நினைத்து, அக்கார்க்கோடகன் என்னும் பெரிய பாம்பை இரக்கத்தால் நோக்கி , அதன் பக்கத்தே போனான்; அவன் சென்றவுடனே தீக்கடவுள் அச்சங்கொண்டு தன் வேகம் தணிந்து நின்றான்; அதனால். நளன் உளம் மகிழ்ந்து உள்ளே நுழைந்தான்.

கார்கோடகன் தன் வரலாற்றைக் கூறல்.
————————————————–

‘வேத முனியொருவன் சாபத்தால் வெங்கானில்
ஆதபத்தின் வாய்ப்பட் டழிகின்றேன்! – காதலால்
வந்தெடுத்துக் கா!’என்றான் மாலை மணிவண்டு
சந்தெடுத்த தோளானைத் தான்.

வேதமுனி = வேதத்தைக் கற்ருணர்ந்த முனிவன்.
ஆதபத்தின் வாய்ப்பட்டு = தீயில் அகப்பட்டு
சந்து எடுத்த = இசைப் பாட்டுப் பாடுகின்ற

கார்க்கோடகன் , மலர் மாலையிலுள்ள அழகிய வண்டுகள் இசைப்பாட்டுப் பாடுகின்ற தோள்களையுடைய நளனை நோக்கி, ‘ மறைப் பொருளை அறிந்த ஒரு முனிவனுடைய சாபத்தால் நான் இக்கொடிய காட்டின் நெருப்பினுள் அகப்பட்டுக்கொண்டு வருந்துகின்றேன்! என்னிடம் இரக்கம் கொண்டு என்னை காப்பாயாக! என்று கூறினான்.

‘ நீ தொட்டால் என் சாபம் நீங்கும்’.
—————————————————-

‘சீரியாய் ! நீயெடுப்பத் தீமை கெடுகின்றேன்;
கூரும் தழலவித்துக் கொண்டுபோய்ப் – பாரில்
விடுகென்றான்’ மற்றந்த வெந்தழலால் வெம்மைப்
படுகின்றான் வேல்வெந்தைப் பார்த்து.

சீரியாய் = செம்மையுடையவனே
கெடுகின்றேன் = நீங்கப் பெறுவேன்

அக்கொடிய காட்டுத் தீயால் வேகின்ற அந்தப் பாம்பு அரசன் , வேல் படையையுடைய அரசனைப் பார்த்து , ‘மேன்மையானவனே , நீ வந்து என்னைத் தொட்டு எடுப்பாயானால், நான் சாபம் நீங்கப் பெறுவேன் ; இந்த மிக்க நெருப்பைக்கெடுத்து என்னை எடுத்துச் சென்று தரையில் விடுவாயாக!’ என்று வேண்டினான்.

பாம்பை விடுதல்.
—————————

என்றுரைத்த அவ்வளவில் ஏழுலகுஞ் சூழ்கடலும்
குன்ல்றும் சுமந்த குலப்புயத்தான் -வென்றி
அரவரசைக் கொண்டகன்றான் ஆரணியந் தன்னில்
இரவரசை வென்றான் எடுத்து.

குலப்புயந்தான் = மேன்மை பொருந்திய தோள்களையுடையவன்.
அரவரசு = கார்க்கோடகன்.
ஆரணியந்தன்ன்னில் = காட்டில்.

‘என்னைக் காப்பாயாக’ எனப் பாம்பரசன் வேண்டிக் கொண்ட போது ஏழு உலகங்கலையும், ஏழு கடல்களையும், மலைகளையும் தன் ஆட்சி முறையில் தாங்கிய சிறப்புப் பொருந்திய தோள்களையுடையவனும் கொடிய காட்டில் மிக்க இருளையும் பொருட்படுத்தாது செல்பவனுமாகிய நளன், அக்கார்கோடகனைத் தன்னுடைய கைகளால் தொட்டுத் தூக்கிகொண்டு அவ்விடத்தினின்று அகன்றான்.

பத்து வரை எண்ணிக் கீழே விடுக !
—————————————————

‘மண்ணின்மீ தென்றனைநின் வன்றாளால் ஒன்றுமுதல்
எண்ணித் தசவென் றிடுகெ’ன்றான் -’ நண்ணிப்போர்
மாவலான் செய்த உதவிக்கு மாறாக
ஏவலால் தீங்கிழைப்பேன் என்று

வந்தாளால் = வன்மை வாய்ந்த அடியால், ‘ தச’ என்று வாயால் கூறி
நண்ணி = தன்னை நெருங்கி
ஏவலால் = நளனுடைய ஏவலாலேயே
( ‘தச’ என்ர வட சொல்லுக்கு இருபொருள் உண்டு; ஒன்று , பத்து என்பது; மற்றொன்று , ‘கடி’ என்பது .இவ்வாறு இரு பொருள் படும் சொல்லை நளன் வாயாலேயே வரவழைத்து அவன் கடி என்று தன்னை ஏவியதால் தான் கடித்ததாகக் கருதட்டும் என்று கார்க்கோடகன் கருதினான்.

கார்கோடகன் போர்க்குதிரைகளின் இயல்பை அரிவதிலே வல்லவனான நளன் தன்னைச் சேர்ந்து செய்த நன்மைக்கு மறு உதவியாக , ‘ நளனுடைய ஏவலினாலேயே அவனுக்குத் தீங்கு செய்வேன்,’ என்று கருதி, ‘ தரையின்மேல் நீ உன்னுடைய கால்களால் ஒன்று முதல் பத்து வரை எண்ணிக்கொண்டு ‘தச’ என்று சொல்லி என்னை விடுக,’ என்று நளனை வேண்டிக்கொண்டான்.

கார்க்கோடகன் நளனைக் கடித்தல்.
——————————————–

ஆங்கவன்றான் அவ்வா றுரைப்ப, அதுகேட்டுத்
தீங்கலியாற் செற்ற திருமனத்தாந் பூங்கழலை
மண்ணின்மேல் வைத்துத் தசவென்று வாய்மையால்
எண்ணினான் வைத்தான் எயிறு.

அவன்றான் = அக்கார்க்கோடகன்
தீங்கலியால் = தீமை செய்கின்ற கலியால்.
செற்ற = கெடுக்கப்பெற்ற
எயிரு வைத்தான் = பல்லாற்கடித்தான்.

அவ்விடத்தில் அப்பாம்பு கூறத் தீமையைச் செய்கின்ற கலியின் வயப்பட்ட நல்ல மனத்தை உடைய நளன், அதைக் கேட்டுத் தன் அழகிய கழல் அணிந்த பாதங்களைத் தரைமேல் வைத்து ஒன்றுமுதல் பத்துவரை எண்ணித் ‘ தச’ என்று கூறிப்பாம்பைக் கீழே விட்டான். உடனே அக்கார்க்கோடகன் தன் நஞ்சு நிறைந்த பல்லை வைத்து நளனைக் காலிலே தீண்டினான்.

திருமேனி கருமேனியாதல்.
————————————–

வீமன் மடந்தை விழிமுடியக் கண்டறியா
வாம நெடுந்தோள் வறியோருக்கு – ஏமம்
கொடாதார் அகம்போற் குறுகிற்றே மெய்ம்மை
விடாதான் திருமேனி வெந்து.

வாமநெடுந்தோள் = அழகு மிக்க பெரிய தோள்.
குறுகிற்றே = சுருங்கியது.
மெய்ம்மை விடாதான் = வாய்மை வழியினின்று பிறழாதவன்

வாய்மையை விடாதவனாகிய நளனுடைய அழகான உடல் விடத்தால் கரு நிறமாய் மாரி வீமனுடைய செல்வமகளாகிய தமயந்தியின் கண்கள் முழுவதும் பார்த்துத்தெரிந்து கொள்ள முடியாத அழகுமிக்க பெரிய தோள்கள் இரப்பார்க்குப் பொருளைக் கொடாத உலோபருடைய இல்லத்துச் செல்வம் நாளடைவில் குறைவது போலக் குறைந்தது.

நளனது வினா.
——————————-

‘ஆற்றல் அரவரசே! ஆங்கென் உருவத்தைச்
சீற்றமொன் றின்றிச் சினஎயிற்றால்- மாற்றுதற்கின்று
என்கா ரணம்?’என்றான் ஏற்றமரிற் கூற்றழைக்கும்
மின்கால் அயில்முகவேல் வேந்து.

போர்க்களத்தில் பகைவர்களுடைய உயிரைக்கொண்டு செல்வதற்கு இயமனை வருக என அழைக்கும் ஒளி வீசுகின்ற கூர்மையான நுனியையுடைய வேலைக்கொண்ட நளன் , ‘ வன்மை பொருந்திய பாம்புக்கரசனே, இப்போது என்னால் நன்மையைப் பெற்ற நீ என்மேல் கொள்ளவேண்டிய சினம் ஒன்றில்லாதிருக்கவும், முன் இருந்த என் உடல் வடிவத்தின் நிறத்தை உன் சினம் பொருந்திய பற்களால் கடித்து மாற்றக் காரணம் யாது?’ என்று கேட்டான்.

‘வடிவை மாற்றவே கடித்தேன்!’
—————————————-

‘காயும் கடகளிற்றாய்! கார்க்கோ டகனென்பேர்
நீயிங்கு வந்தது யான்நினைந்து – காயத்தை
மாறாக்கிக் கொண்டு மறைந்துறைதல் காரணமா
வேறாக்கிற் றென்றான்’ விரைந்து.

கார்க்கோடகன் நளனை பார்த்து, ‘பகைவர்கலை சினந்து அழிக்கும் மதம் பொருந்திய ஆண்யானையையுடையவனே , என் பெயர் கார்கோடகன் என்பது! யான் நீ இங்கு வந்ததை அறிந்து கொண்டு , நீ உடல் வண்னத்தை வேற்றுருவமாக்கி மறைந்து வாழ வேண்டுவது காரணமாக , வேறு உருவமாக மாற்றினேன் என்பதை அறிவாயாக,’ என்று விரைந்து விடை கூறினான்.

அரவம் நளனுக்கு ஆடை தருதல்.
—————————————————

‘கூனிறால் பாயக் குவளை தவளைவாய்த்
தேனிறால் பாயும் திருநாடா!- கானில்
தணியாத வெங்கனலைத் தாங்கினாய்! இந்த
அணியாடை கொள்கென்றான்’ ஆங்கு.

கார்க்கோடகன், நளனைப் பார்த்து, ‘வளைந்த இறால் மீன் பாய்கின்ற காரணத்தால் தவளைகளின் வாயில் குவளையிலுள்ள தேனானது, தேன் கூட்டிலிருந்து ஒழுகுவதைப் போலப் பாய்ந்து ஓடுகின்ற நீர் வளம் மிகுந்த அழகிய நிடத நாட்டு அரசனே , வனத்தில் ஆறாத கொடிய தீயை நீ எனக்காகப் பொறுத்துக்கொண்டாய்! ஆதலின், அதற்குக் கைம்மாறாக, இவ்வழகான ஆடையைப் பெற்றுக்கொள்வாயாக!’என்று கூறி வேண்டினான்.

ஆடையின் பயன்.
———————

‘சாதி மணித்துகில்நீ தண்கழுநீர்ப்
போதின்கீழ் மேயும் புதுவரால் – தாதின்
துளிக்குநா நீட்டும் துறைநாடர் கோவே!
ஒளிக்கும்நாள் நீங்கு உரு.

பாம்பு நளனை நோக்கி,’ குளிர்ச்சியையுடைய செங்கழு நீர் மலரின் கீழே மேய்கின்ற இளவரால் மீன்கள் , அப்பூக்களின் தேன் துளிக்காக நாவை நீட்டுகின்ற நீர் வளமுடைய துறைகளையுடைய நிடத நாட்டுக்கரசே, நீ மறைந்து வசிக்கும் காலத்தில் உயர்ந்த இந்த அழகிய ஆடையை அணிந்தால், இந்த வேற்றுருவம் நீங்கும்; பழைய உருவம் வந்து சேரும்,’ என்று கூறியது.

‘வாகு குறைந்ததால் வாகுகன் ஆகுக!’
—————————————————

‘வாகு குறைந்தமையால் வாகுகனென் றுன்னாமம்
ஆக அயோத்தி நகரடைந்து – மகனகத்
தேர்த்தொழிற்கு மிக்கானீ யாகென்றான்’ செம்மனத்தாற்
பார்த்தொழிற்கு மிக்கானைப் பார்த்து.

கார்க்கோடகன், நடுவு நிலை மாறாத நல்ல நெஞ்சப் பாங்கினால் அரசாட்சி முறையில் சிறந்த நளனை பார்த்து , ‘உன் தோள்களின் அழகு குறைந்துவிட்டால், உன் பெயரானது வாகுகன் என்று வழங்கும்படி நீ அயோத்தி நகரத்திற்குச் சென்று , சிறந்த பொன்மயமான தேரை ஓட்டும் தொழிலிலே மிக்கானாய் இருப்பாயாக! என்று கூறியது.

நளன் புறப்படல்.
—————————

இணையாரும் இல்லான் இழைத்த உதவி
புணையாகச் சூழ்கானிற் போனான் – பணைஆகத்
திண்ணாகம் ஓரெட்டும் தாங்கும் திசையனைத்தும்
எண்ணாக வேந்தன் எழுந்து.

பரிஅய் உடல் வலி கொண்ட எட்டு யானைகளும் தாங்குகின்ற உலகின் எல்லாத் திக்குகளிலும் தன் எண்ணம் போலவே நடக்கும்படி ஆண்ட நளன் புறப்பட்டுத் தனக்கு ஒப்பு என்று சொல்லுவதற்கு இல்லாதானாகிய கார்க்கோடகன் செய்த உதவியையே தனக்குத் துணையாகக்கொண்டு முட்புதர் மிக்க காட்டின் வழியே சென்றான்.

காட்டை நீங்கினான்; கடலைக் கண்டான்!
————————————————————-

நினைப்பென்னுங் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்
கனற்புகைய வேகின்றான் கண்டான் – பனிக்குருகு
தண்படா நீழல் தனிப்பேட்டைப் பார்த்திரவு
கண்படா வேலைக் கரை.

குளிர்ச்சியையுடைய கொடிகளின் நிழலின்கீழ் குளிரால் நடுங்கிக்கொண்டிருக்கும் ஆண் நாரையானது, தனியாகப் பிரிந்து போயுள்ள பெண் நாரையைக்காணாது எதிர் நோக்கி , இரவு முழுவதும் உறங்காமல் கண்விழித்துக் கொண்டிருக்கின்ற கடலின் கரையைக் காதலையுடைய தமயந்தியை நினைத்தல் என்ற வளி மோதி அலைத்தலால் தன் மனத்திலே மூளும் பிரிவு எனும் துன்பத்தீப் புகைந்து எரிவதால் வருந்துகின்ற நளன் கண்டான்

நாரையைப் பார்த்துக் கூறல்.
——————————————

‘கொம்பர் இளங்குருகே ! கூற திருத்தியால்
அம்புயத்தின் போதை அறுகாலால் – தும்பி
திறக்கத்தேன் ஊறும் திருநாடன் பொன்னை
உறக்கத்தே நீத்தேனுக் கொன்று.

இத்தகைய சிறப்பையுடைய கடற்கரையின் பக்கத்தே உள்ள நாரையை நோக்கி , ‘ மரக்கிளையில் தங்கியிருக்கும் இளமை வாய்ந்த குருகே , வண்டுகள் தாமரை மலரைத் தம்முடைய ஆறு கால்களினால் மலரச் செய்ய ,அதிலிருந்து தேனானது வெளிப்படுகின்ற அழகிய விதர்ப்ப நாட்டு அரசனாகிய வீமனுடைய மகளை , அவள் தூங்குகின்ற போது கைவிட்டு வந்தவனாகிய எனக்கு ஆறுதலாக ஒன்றையும் கூறாமல் இருக்கின்றாயே! இது உனக்குத் தக்கதோ!’ என்றான் நளன்.

வண்டின் செயல் கண்டு மயங்கல்.
—————————————–

புன்னை நறுந்தாது கோதிப் பொறிவண்டு
கன்னிப் பெடையுண்ணக் காத்திருக்கும் – இன்னருள்கண்
டஞ்சினான்; ஆவி யழிந்தான்; அறவுயிர்த்து
நெஞ்சினால் எல்லாம் நினைந்து.

புள்ளிகளையுடைய ஆண் வண்டு மலரின் மணம் மிக்க மகரந்த பொடியைக் கிளறித் தன் காதலுக்குரிய இளமை பொருந்திய பெண் வண்டு தேனை உண்ணும் வரை காத்துக்கொண்டிருக்கும் , இனிய நல்ல பேரன்பினை நோக்கி, நளன் தனது நினைத்து அஞ்சினான்; மிகவும் பெருமூச்சு விட்டு தான் விட்டு வந்த தமயந்தியை நினைந்து உயிர்வாடப் பெற்றான்.

நண்டும் நளனைக்கண்டு ஒளிந்தது!
———————————————–

‘காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ – நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ! ஓடி
ஒளிக்கின்ற தென்னோ? உரை.

கடற்கரைக்கண் நண்டு ஓடி மறைகின்றது. அதைக்கண்ட நளன் உள்ளம் அழிகின்றான்! அது தன்னைக்கண்ட நளன் உள்ளம் அழிகின்றான்! அது தன்னைக்கண்டு – தன் கொடுமையைக்கண்டு – ஓடுவதாக நினைக்கின்றான்! நண்டைப் பார்த்து என்ன கூறுகின்றான்?

” நண்டே , பேரொலியை எழுப்புகின்ற அலைகளையுடைய கடற்கரை ஓரத்தில் நீ சென்று உன் வளைக்குள் புகுந்து மறைந்து கொள்ளுதல் , ‘ தன் அன்புடைய மனைவியைக் கரிய நள்ளிரவில் கொடிய காட்டில் கைவிட்டுப் பிரிந்து வந்த இப்பாவியைப் பார்த்தல் தகாது!’ என்ற காரணமோ? வேறு என்ன காரணமோ ? சொல்வாயாக!”

குவளை முதலியவற்றோடு குறை நயத்தல்.
—————————————————-

‘பானலே! சோலைப் பசுந்தென்றல் வந்துலவும்
கானலே ! வேலைக் கழிக்குருகே ! – யானுடைய
மின்னிமைக்கும் பூணளவ் வீங்கிருள்வா யாங்குணர்ந்தால்
என்னினைக்கும்? சொல்வீர் எனக்கு’

நளன் ,’ கருங்குவளைகளே , குளிர்ந்த தென்றல் வந்து உலவுகின்ற சோலை சூழ்ந்த கடற்கரையே , கடற்கரையைச் சார்ந்துள்ள உப்பங்கழிகளில் வாழும் நாரையே, என்னுடைய மனைவியாகிய ஒளி வீசுகின்ற அணிகளை அணிந்த தமயந்தியை நான் விடுத்து வந்த அந்தக் கொடுங்காட்டில் அந்த நள்ளிருளில் விழித்தெழுந்த போது என்னைக் குறித்து அவள் என்ன நினைத்திருப்பாள்? நீங்கள் அதைச் சொல்வீர்களாக!’ என்றான்.

கடலோடு கழறல்.
——————————-

‘போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் – தீவாய்
அரவகற்றும் என்போல ஆர்கலியே! மாதை
இரவகற்றி வந்தாய்கொல் இன்று?’

நளன் கடலை நோக்கி,’ பேரொலியையுடைய கடலே, நீ எழுச்சி பெற்று விழுகின்றாய்! போகின்றாய் ! புரண்டு வருகின்றாய் ! உன்னுடைய நடு இடம் எங்கும் அசைய அலை அலையாக ஒலி செய்து கொண்டு ஓவென்றலறி இரைந்து அலைகின்றாய் ( உன் மேல் கலங்கள் அலைய ‘ஓ ‘ என்ற ஒலியுடன் இரைந்து அசைகிறாய் ) நெருப்பில் அகப்பட்டு வருந்திக்கொண்டிருந்த பாம்பை அதனின்றும் விலக்கி எடுத்துக் காப்பாற்றிய என்னைப் போல நீயும் உன் மனைவியை இரவு நேரத்தில் தனியாக விடுத்து வந்தாயோ ! இவ்வாறு அலையக் காரணம் என்ன? என்றான்.

அயோத்தியை அடைதல்.
—————————-

முன்னீர் மடவார் முறுவல் திரள்குவிப்ப
நன்னீர் அயோத்தி நகரடைந்தான் – பொன்னீர்
முருகுடைக்கும் தாமரையின் மொய்ம்மலரைத் தும்பி
அருகுடைக்கும் நட்டாட் டரசு.

அழகிய குளிர்ச்சி பொருந்திய தேனானது பீறிச் செல்கின்ற தாமரையின் நெருங்கிய மலர்களை வண்டுகள் அவற்றின் அருகே சென்று இதழ்களை விரிக்கின்ற நீர் வளம் செறிந்த நிடத நாட்டையுடைய நளன் பெண்களின் பற்களைப் போன்ற முத்துகளை அலைகள் கரைகளில் ஒதுக்கிக் குவிக்கின்ற நல்ல இயல்பையுடைய அயோத்தி நகரில் சென்று சேர்ந்தான்.

நளன் இருதுபன்னனுக்குத் தன்னை
———————————–
அறிமுகப்படுத்திக்கொளல்.
———————————–

‘ மாந்தேர்த் தொழிற்கு மடைத்தொழிற்கு மிக்கோனென்
றூன்றேய்க்கும் வேலான் உயர்நறவத் – தேன்றோய்க்கும்
தார்வேந்தற் கென்வரவு தானுரைமின்,’ என்றுரைத்தான்
தேர்வேந்தன் வாகுவனாய்ச் சென்று,

தேரையுடைய நளன் , வாகுகன் என்ற பெயரை உடையவனாய் இருதுபன்னனுடைய ஏவலரிடம் சென்று , ‘ பகைவரது உடலை அழிக்கும் வேலையுடைய நறுமணமுடைய மலர் மாலையை அணிந்த உம் மன்னராகிய இருதுபன்னரிடம், குதிர்5ஐகள் பூட்டிய தேரை ஓட்டுகின்ற தொழிலிலும் சமையல் தொழிலிலும் சிறந்த எனது வரவைச் சொல்லுங்கள்,’ எனக் கூறினான்.

நளன் இருதுபன்னனைக் காணல்.
—————————————————-

அம்மொழியைத் தூதர் அரசற் கறிவிக்கச்
செம்மொழியாத் தேர்ந்ததனைச் சிந்தித்தே – ‘ இம்மொழிக்குத்
தக்கானை இங்கே தருமின்,’ எனவுரைக்க
மிக்கானும் சென்றான் விரைந்து.

இவ்வண்ணம் நளன் கூறியதை ஏவலர் சென்று இருதுபன்னனுக்கு அறிவிக்க, அவன் அதைக் கேட்டு நினைத்து, உண்மை மொழியாகும் என்று கருதி, ‘ நீங்கள் கூறிய இச்சொற்களுக்கு ஏற்ற தகுதியுள்ள அவனை இங்கே அழைத்துக்கொண்டு வருக ,’ என்று சொல்ல , அவ்வேவலர் வந்து அழைக்க , மேன்மை பொருந்திய நளனும் விரைந்து அவனிடம் போனான்.

இருதுபன்னன் வினாவல்.
———————————

பொய்யடையாச் சிந்தைப் புரவலனை நோக்கித்தன்
செய்ய முகம்மலர்ந்து தேர்வேந்தன், – ‘ஐய!நீ
எத்தொழிலின் மிக்கனைகொல்? யாதுன் பெயர்?’ என்றான்
கைத்தொழிற்கு மிக்கானாக் கண்டு.

தேரையுடைய மன்னனாகிய இருதுபன்னன் வேலைகளில் தேர்ந்து உயர்ந்த நளனைப் பார்த்து , உண்மையுள்ள மனதையுடைய நளனது தன்மையைத் தெரிந்துகொண்டு, அழகிய முகமானது மலர , ‘ ஐய, நீ எந்தத் தொழிலிலே வல்லாய்? உனது பெயர் என்ன?’ என்று வினவினான்.

நளன் விடை.
————————-

‘அன்னம் மிதிப்ப அலர்வழியும் தேறல்போய்ச்
செந்நெல் விளைக்கும் திருநாடர் – மன்ன!
மடைத்தொழிலும் தேர்த்தொழிலும் வல்லன்யான்,’ என்றான்
கொடைத்தொழிலில் மிக்கான் குறித்து.

கொடுத்தலில் சிறந்தவனான நளன்,’ அன்னப் பறவைகள் மிதிப்பதால் தாமரையிலிருந்து பெருக்கெடுத்து ஓடுகின்ற தேன், நீரோடு கலந்து செந்நெற்பயிர்களை வளர்க்கின்ற அழகிய நாட்டுக்கு அரசரே , சமையல் வேலையிலும் தேர் ஓட்டுவதிலும் நான் வல்லேன் ஆவேன்,’ என்று அவைகளை குறிப்பிட்டுரைத்தான்.

நளன் தொழில் ஏற்றலும்
———————————–
நங்கையின் வாட்டமும்.
———————————–

குறித்துரைத்த வாறக் குலவேந்தன் ஏன்று
மறித்துரையான் ஆங்கவனும் வைக – வெறித்த-இள
மான்போல் விழியாள் மகிழ்நன்நிலை ஏதெனவெ
ஊன்போல் உயங்குவாள் ஓர்ந்து.

வாகுகன் குறித்துக் கூறியவாறே சிறந்த மன்னனான அவ்விருதுபன்னன் தடுத்துக் கூறாமல் , அவனை ஏற்றுக் கொள்ள அந்நகரில் அவ்வாகுகன் தங்கியிருக்க, மருண்ட இளமான் போலும் பார்வையையுடைய தமயந்தி தன் கணவன் நிலைமை எத்தகையதென்று ஆலோசித்து, உயிர் நீங்கிய உடல் போல வாடுவளாயினள்.

தமயந்தி நளனைத் தேட ஆள் அனுப்பல்.
—————————————————–

‘என்னை இருங்கானில் நீத்த இகல்வேந்தன்
தன்னைநீ நாடுகெனத் தண்கோதை – மின்னுப்
புரைகதிர்வேல் வேந்தன் புரோகிதனுக் கிந்த
உரைபகர்வ தானாள் உணர்ந்து.

குளிர்ச்சியையுடைய கூந்தலையுடைய தமய்ந்தி, ஒளி வீசுகின்ற வேல் படையைத் தாங்கிய வீமனுடைய புரோகிதனை அழைத்து , ‘ என்னைப் பெரிய காட்டில் விட்டுப் பிரிந்த போரிலே வல்ல அரசரை நீ தேடிக் கொண்டு வா,’ என்று ( அவன் தேடுவதற்குரிய தகுதியுடையவன் என்பதை ) நன்கு உணர்ந்து இப்படிக் கூறத் தொடங்கினாள்.

நளனை கண்டறிய நங்கையின் உபாயம்.
—————————————————

‘ காரிருளில் பாழ்மண்ட பத்தேதன் காதலியைச்
சோர்துயிலில் நீத்தல் துணிவன்றோ – தேர்வேந்தற்கு?’
என்றறைந்தால் நேற்நின் றெதிர்மாற்றம் தந்தாரைச்
சென்றறிந்து வா’என்றாள் தேர்ந்து.


‘ அந்தணரே , கரிய நிறமுள்ள இரவுப் பொழுதில் பாழடைந்த ஒரு மண்டபத்திலே தனது அன்புக்குரிய மனைவியை நல்ல தூக்கத்திலே விட்டுவிட்டுச் செல்வது தேரையுடைய அரசர்க்குத் தகுந்த செயலாகுமோ?’ என்று நீர் கூறினால், அதைக் கேட்டவருள் மறு மொழி உரைப்பவர் யாராய் இருந்தாலும், அவரை அறிந்து வருக,’ என்று கூறினாள்.

புரோகிதன் அயோத்தியை அடைதல்.
——————————————–


மின்னாடும் மால்வரையும் வேலையும் வேலைசூழ்
நன்னாடும் கானகமும் நாடினாந் மன்னு
கடந்தாழ் களியானைக் காவலனைத் தேடி
அடைந்தான் அயோத்தி நகர்.


அந்தணன், மின்னல் போன்று ஒளி வீசுகின்ற மேகங்கள் தவழ்கின்ற பெரிய மலைகளிலும் கடற்கரைப்பகுதிகளிலும் கடல் சூழ்ந்த பல நாட்டுப்புறங்களிலும் கானகங்களிலும் தேடிக்கொண்டே சென்று , நிலை பெற்ற மதத்தையுடைய மயக்கம் பொருந்திய ஆண் யானைகளையுடைய நளனைத் தேடி அயோத்தி நகரை அடைந்தான்.

‘வேந்தனுக்கு இது தகுமோ?’
———————————–

‘கானகத்துக் காதலியைக் காரிருளில் கைவிட்டு
போனதுவும் வேந்ததற்குப் போதுமோ – தான்?’என்று
சாற்றினான்; அந்தவுரை தார்வேந்தன் தன்செவியில்
ஏற்றினான் வந்தான் எதிர்.

அந்தணன்,’ வனத்திலே நள்ளிரவிலே தன் மனைவியைக் கைவிட்டுப் பிரிந்து போனதும் அரசனாயுள்ளவனுக்குத் தகுமோ?’ என்று கூறினான்; மாலையை அணிந்த நளன் அச்சொற்களைக் கேட்டுத் துன்பம்டைந்தவனாய் அவன் முன் வந்தான்.

‘பண்டை விதியின் பயனே!’
—————————————

‘ஒண்டொடி தன்னை உறக்கத்தே நீத்ததுவும்
பண்டை விதியின் பயனேகாண் – தண்தரளப்
பூத்தாம வெண்குடையான் பொன்மகளை வெவனத்தே
நீத்தானென்று ஐயுறேல் நீ.’

வாகுகன் என்ற பெயரோடு விளங்கும் நளன் புரோகிதனைப் பார்த்து, ‘ குளிர்ச்சியையுடைய முத்துகளால் ஆன ஆரங்களைக் கொண்ட வெண்கொற்றக் குடையையுடைய வீமனுடைய இலக்குமியைப் போன்ற மகளைக் கொடுமையான காட்டிலே கைவிட்டுச் சென்றான் என நீ ஐயப்பட வேண்டா; ஒளியையுடைய வளையலை அணிந்த மனைவியைத் தூங்கும்போது தனித்திருக்க விட்டு நீங்கியதும், முன் செய்த பாழ்வினையின் பயனே ஆகும் என்பதைத் தெரிந்துகொள்,’ என்று கூறினான்.

அந்தணன் மீண்டு அணங்கைக் காணல்
——————————————–

அம்மொழிகேட் டந்தணனும் ஐயுற் றுருநோக்கி
விம்மு கருங்குழலை மீண்டடைந்தான் – தெம்மன்னர்
ஊந்தோய் வடிவேல் விதர்ப்பன்றன் ஒண்ணகர்க்கே
வாந்தோய் கோயிலிடை வந்து.


சுவேதன் என்னும் புரோகிதன் வாகுகன் உரைத்த அவ்வுரை கேட்டுச் சந்தேகித்து அவன் உருவை நோக்கி , மீண்டு விதர்ப்ப நாட்டை அடைந்து தமயந்தியைக் கண்டான்.

காவலரைக் கண்டனையோ?
——————————

‘எங்கண் உறைந்தனைகொல் எத்திசைபோய் நாடினைகொல்?
கங்கைவள நாட்டார்தங் காவலனை- அங்குத்
தலைப்பட்ட வாறுண்டோ? சாற்றொன்றாள் ‘ கண்ணீர்
அலைப்பட்ட கொங்கையாள் ஆங்கு.

எங்கண் = எவ்விடத்தில்
உறைந்தனைகொல் = தங்கி இருந்தாய்
நாடினைகொல் = தேடினாய்.

விழிகளின் நீரானது கடல் போலப் பெருகி நனைக்கின்ற முலைகளையுடைய தமயந்தி , அயோத்தியினின்று திரும்பிய புரோகிதனைப் பார்த்து , ‘ நீ எங்குத் தங்கியிருந்தாய்?கங்கை பாயும் நீர் வளம் உடைய நளமகராசரை எந்த எந்தத் திசையில் சென்று தேடினாய்? அந்த இடங்களில் அவரைக் கண்டதுண்டோ?’ என்று வினவினாள்.


வாக்கினால் மன்னவனை ஒப்பான்.
——————————————

‘வாக்கினால் மன்னவனை ஒப்பான்; மறித்தொருகால்
ஆக்கையே நோக்கின் அவனல்லன்; – பூக்கமழும்
கூந்தலாய்! மற்றக் குலப்பாகன்.’ என்றுரைத்தான்
ஏந்துநூல் மார்பன் எடுத்து.

மறித்து = மீண்டும்.
ஏந்து நூல் மார்பன் = பூணூலை அணிந்த மார்பையுடைய அந்தணன்.

பூணூல் அணிந்த மார்பையுடைய அந்தணன், தமயந்தியை அணுகி, ‘ மலரினது மணம் கமழ்கின்ற கூந்தலையுடையவளே, நான் அயோத்தி மாநகரில் ஒருவனைக் கண்டேன். அவன் தன் சொற்களால் அரசரை ஒத்திருக்கின்றான்; மீண்டும் ஒருகால் அவன் உடம்பை பார்த்தால், அவரல்லன்; வேறு ஒரு சிறந்த தேர்ப்பாகனாகக் காணப்படுகின்றான்!’ என்று விளங்க உரைத்தான்.

நாயகனைக் காண நங்கையின் சூழ்ச்சி.
——————————————————–

‘மீண்டோர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை
பூண்டாள்,’என் றந்தண! நீ போயுரைத்தால் – நீண்ட
கொடைவேந்தற் கித்தூரம் தேர்க்கோலம் கொள்வான்
படைவேந்தன்,’ என்றாள் பசிந்து.

தமயந்தி அந்த அந்தணனை நோக்கி,’ மறையவரே, ‘வீமராசருடைய அழகிய மகளாகிய தமயந்தி மறுமுறையும் ஒரு சுயம்வரத்தை மேற்கொண்டனள்,’ என்று நீர் அயோத்திக்குச் சென்று கூறுவீரானால், இருதுபன்ன மன்னவனுக்கு நம் மன்னர் தேரோட்டியாய் அமைந்து வருவார்,’ என்று அன்பு கொண்டு கூறினாள்.

‘தமயந்திக்கு நாளை இரண்டாம் சுயம்வரம்’
—————————————————–

‘எங்கோன் மகளுக் கிரண்டாம் சுயம்வரமென்று
அங்கோர் முரசம் அறைவித்தான்;- செங்கோலாய்!
அந்நாளும் நாளை அளவென்றான்’ அந்தணன்போய்த்
தென்னாளும் தாரானைச் சேர்ந்து.

எங்கோன் = எம்மன்னன்.
தென் = அழகு.

தமயந்தி கூறியபடி அயோத்திக்கு அந்தணன் சென்று, எழில் மிகுந்த மாலையையுடைய இருது பன்னனைச் சார்ந்து , ‘செவ்விய முறைப்படி ஆட்சி புரியும் அரசரே, எம் விதர்ப்ப நாட்டு அரசரான வீமர் மகள் தமயந்திக்கு இரண்டாம் சுயம்வரம் நடைபெறப் போவதை அவ்விதர்ப்ப நாட்ட
Back to top Go down
 
கலிநீங்குகாண்டம் – பக்கம் 1
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கலிநீங்குகாண்டம் பக்கம் - 2
» கலிதொடர்காண்டம் – பக்கம் 1
» கலிதொடர்காண்டம் – பக்கம் 2
» சுயம்வர காண்டம் பக்கம் 2
» நபிகளை இழிவுபடுத்தும் படங்கள் இடம் பெற்ற ஃபேஸ்புக் பக்கம் நீக்கம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: