BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inவளையாபதி Button10

 

 வளையாபதி

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

வளையாபதி Empty
PostSubject: வளையாபதி   வளையாபதி Icon_minitimeSat Apr 03, 2010 3:47 am

வளையாபதியின் ஆசிரியர் பெயர், இயற்றப் பட்ட காலம், அக்காவியத் தலைவன் பெயர், காவியத்தின் கதை போன்றவை தெரியவில்லை. இக்காவியத்தின் 72 பாடல்கள் தான் கிடைத்துள்ளன. அவற்றில் 66 பாடல்கள் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டிலும், 3 பாடல்கள் சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாகவும், 2 பாடல்கள் யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலின் பெயர்தெரியாத ஓர் அறிஞரால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும், இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் மேற்கோளாக் காணப்படுவதும் கடவுள் வாழ்த்துப் பாடலென்று கருதப்படுவதுமாகிய எஞ்சிய 1 பாடல் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோளாகவும் கிடைத்துள்ளன. இது ஒரு சமண சமய நூல்.

புகார் நகரில் நவகோடி நாராயணன் என்னும் செல்வச் செழிப்புமிக்க வணிகன் இருந்தான். அவன் சைவ சமயத்தவன். அவனுக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி அவன் குலத்தைச் சார்ந்தவள். இரண்டாம் மனைவி வேறு குலத்தைச் சார்ந்தவள். அவன் வேற்றுச் சாதிப் பெண்ணை மணந்ததை எதிர்த்து அவன் குலத்தவர்கள் அவனைச் சாதியைவிட்டு ஒதுக்கி வைப்பதாக அச்சுறுத்தவே அவன் தன் இரண்டாம் மனைவியை விட்டுப் பிரிந்தான். அவன் பிறிந்த சமயத்தில் அப் பெண் கருவுற்றிருந்தாள். பின்னர் அவன் கடற்பயணத்தை மேற்கொண்டு பெரும்பொருள் ஈட்டித் திரும்பித் தன் முதல் மனைவியுடன் இன்பமாக வாழ்ந்து வந்தான். இரண்டாம் மனைவி தன் துன்பம் தீர காளி தேவியை வழிபட்டு வந்தாள். சில மாதம் கழித்து அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனை நன் முறையில் வளர்த்து வந்தாள். அச்சிறுவனுடைய விளையாட்டு தோழர்கள் அவனைத் தகப்பன் பெயர் தெரியாதவனென்று எள்ளித் துன்புறுத்தவே, அச்சிறுவன் அதுபற்றி தன் தாயிடம் முறையிட்டான். அவள் ஒருவழியாக அவன் தந்தையின் பெயரை அவனுக்குத் தெரிவித்தாள். அது கேட்ட அவன் தன் தந்தையைத் தேடிச் சென்று தன்னை மகனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். ஆயினும் ஊர்க் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு நவகோடி நாராயணன் அவனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறான். பின்னர் அவன் தாய் காளியின் உதவியால் செட்டிச்சாதிப் பெரியவர்களிடம் தன் கற்பின் உண்மையை நிலைநாட்டுகிறாள். நாராயணனும் அவனைத் தன் மகனாக ஏற்று அவனுக்கு வீரவாணிபன் எனப் பெயரிட்டு, அவர்களுடன் இனிது வாழ்ந்தான்.

இவ்வாறு இக் காப்பியத்தின் கதை கூறப்பட்டாலும், இந்நூல் சமண சமயக் கருத்துக்களையும் கூறுவதால், சமண நூலில் காளியைப் பற்றிய செய்திகள் இடம் பெற வாய்ப்புகள் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்நூலின் செய்யுட்கள் முழுமையாக கிடைக்கப் பெறாததால் இதுபற்றி அறுதியிட்டுக் கூற இயலவில்லை.

கடவுள் வாழ்த்து

உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
திலகம் ஆய திறல் அறி வன் அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான். 1
[இளம்பூரனார் தொல்காப்பிய உரையில் செய்யுளியல் 98ஆம் நூற்பாவுக்கும், யாப்பருங்கலக்காரிகை விருத்தியுரையாசிரியர் 37-ஆம் நூற்பாவுக்கும் நூற்பெயரைக் குறிப்பிடாமல் மேற்கோளாக இச் செய்யுளைக் காட்டியுள்ளனர். நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் செய்யுளியல் 148ஆம் நூற்பாவின் உரையில் இப்பாடல் வளைபதிச் செய்யுள் எனக் கூறப்பட்டுள்ளது.]


[பின் வரும் 66 பாடல்கள் புறத் திரட்டிலிருந்து தொகுக்கப் பட்டவை]

வினைபல வலியி னாலே வேறுவேறு யாக்கை யாகி
நனிபல பிறவி தன்னுள் துன்புறூஉம் நல்லு யிர்க்கு
மனிதரின் அரியதாகும் தோன்றுதல்; தோன்றி னாலும்
இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்ன தேயாம். 2

உயர்குடி நனிஉள் தோன்றல் ஊனமில் யாக்கை ஆதல்
மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்லர் ஆதல்
பெரிதுணர் அறிவே யாதல் பேரறம் கோடல் என்றாங்கு
அரிதிவை பெறுக லோடே பெற்றவர் மக்கள் என்பார். 3

நாடும் ஊரும் நனிபுகழ்ந்து ஏத்தலும்
பீடுறும்மழை பெய்கஎனப் பெய்தலும்
கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால்
பாடு சால்மிகு பத்தினிக்கு ஆவதே. 4


பள்ள முதுநீர்ப் பழகினும் மீன்இனம்
வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம்
கள்ளவிழ் கோதையர் காமனோடு ஆயினும்
உள்ளம் பிறிதாய் உருகலும் கொள்நீ. 5

உண்டியுள் காப்புண்டு; உறுபொருள் காப்புண்டு;
கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு;
பெண்டிரைக் காப்பது இலம் என்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே. 6

எத்துணை ஆற்றுள் இடுமணல் நீர்த்துளி
புற்பனி உக்க மரத்து இலை நுண்மயிர்
அத்துணை யும்பிறர் அஞ்சொலி னார்மனம்
புக்கனம் என்று பொதியறைப் பட்டார். 7

தனிப்பெயல் தண்துளி தாமரையின் மேல்
வளிப்பெறு மாத்திரை நின்றற்று ஒருவன்
அளிப்பவன் காணும் சிறுவரை அல்லால்
துளக்கிலர் நில்லார் துணைவனைக் கையார். 8

பொறையிலா அறிவு; போகப் புணர்விலா இளமை; மேவத்
துறையிலா வசன வாவி; துகில் இலாக் கோலத் தூய்மை;
நறையிலா மாலை; கல்வி நலமிலாப் புலமை; நன்னீர்ச்
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே. 9

ஆக்கப் படுக்கும்; அருந்தளைவாய்ப் பெய்விக்கும்;
போக்கப் படுக்கும்; புலைநரகத்து உய்விக்கும்;
காக்கப் படுவன இந்திரியம் ஐந்தினும்
நாக்குஅல்லது இல்லை நனிபேணும் ஆறே. 10

தாரம் நல்வதம் தாங்கித் தலைநின்மின்
ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை
வீர வென்றி விறல்மிகு விண்ணவர்
சீரின் ஏத்திச் சிறப்புஎதிர் கொள்பவே. 11

பெண்ணின் ஆகிய பேர் அஞர் பூமியுள்
எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்
பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்னது ஆயினும் ஏதில்பெண் நீக்குமின். 12

பொய்யன் மின்;புறம் கூறன்மின்; யாரையும்
வையன் மின்;வடி வல்லன சொல்லிநீர்
உய்யன் மின்;உயிர் கொன்றுஉண்டு வாழும்நாள்
செய்யன் மின்;சிறி யாரொடு தீயன்மின். 13

கள்ளன் மின், களவு ஆயின யாவையும்;
கொள்ளன் மின், கொலை கூடி வரும்அறம்;
எள்ளன் மின், இலர் என்றெண்னி யாரையும்;
நள்ளன் மின், பிறர் பெண்ணொடு நண்ணன்மின். 14

துற்றுள வாகத் தொகுத்து விரல்வைத்தது
எற்றுக்கு அஃது உன்னின் இதுஅதன் காரணம்
அற்றமில் தானம் எனைப்பல ஆயினும்
துற்றவிழ் ஒவ்வாத் துணிவு என்னும் ஆறே. 15

ஆற்று மின், அருள் ஆருயிர் மாட்டெல்லாம்;
தூற்று மின்அறம், தோம்நனி துன்னன்மின்;
மாற்று மின்கழி மாயமும் மானமும்;
போற்று மின்பொரு ளாஇவை கொண்டுநீர். 16

பொருளைப் பொருளாப் பொதிந்தோம்பல் செல்லாது
அருளைப் பொருளா அறம்செய்தல் வேண்டும்;
அருளைப் பொருளா அறம்செய்து வான்கண்
இருள் இல் இயல்பு எய்தாது என்னோ நமரங்காள். 17

தகாது உயிர் கொல்வானின் மிகாமைஇலை பாவம்
அவாவிலையில் உண்பான் புலால்பெருகல் வேண்டும்
புகாவலை விலங்காய்ப் பொறாதுபிற ஊன்கொன்று
அவாவிலையில் விற்பானும் ஆண்டு அதுவே வேண்டுமால். 18

பிறவிக் கடலகத்து ஆராய்ந்து உணரின்
தெறுவதில் குற்றம் இலார்களும் இல்லை
அறவகை ஓரா விடக்கு மிசைவோர்
குறைவு இன்றித் தம்சுற்றம் தின்றனர் ஆவர். 19

உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்து உண்ணன்மின்
செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்துஒரீஇக்
கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு
மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர். 20

பொருளொடு போகம் புணர்தல் உறினும்
அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின்
இருளில் கதிச்சென்று இனிஇவண் வாரீர்
தெருளல் உறினும் தெருண்மின் அதுவே. 21

தவத்தின் மேல் உரை தவத்திறை தனக்குஅலது அரிதே
மயக்கு நீங்குதல் மனம்மொழி யொடும்செயல் செறிதல்
உவத்தல் காய்தலொடு இலாதுபல் வகைஉயிர்க்கு அருளை
நயத்து நீங்குதல் பொருள்தனை அனையதும் அறிநீ. 22

எண்ணின்றி யேதுணியும்; எவ்வழி யானும் ஓடும்;
உள்நின்று உருக்கும்; உரவோர்உரை கோடல் இன்றாம்
நண்ணின்றி யேயும்; நயவாரை நயந்து நிற்கும்;
கண்ணின்று காமம் நனிகாமுறு வாரை வீழ்க்கும். 23

சான்றோர் உவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்;
ஆன்றுஆங்கு அமைந்த குரவர்மொழி கோடல் ஈயார்;
வான்தாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர்; காமன்
தான்தாங்கி விட்ட கணைமெய்ப்படும் ஆயி னக்கால். 24

மாஎன்று உரைத்து மடல்ஏறுப மன்று தோறும்;
பூஎன்று எருக்கின் இணர்சுடுப; புன்மை கொண்டே
பேய்என்று எழுந்து பிறர்ஆர்ப்பவும் நிற்பர்; காம
நோய்நன்கு எழுந்து நனிகாழ்க் கொள்வதாயி னக்கால். 25

நக்கே விலாசிறுவர்; நாணுவர்; நாணும் வேண்டார்;
புக்கே கிடப்பர்; கனவும்நினை கையும் ஏற்பர்;
துற்றூண் மறப்பர்; அழுவர்; நனி துஞ்சல் இல்லார்;
நற்றோள் மிகைபெ ரிதுநாடுஅறி துன்பம் ஆக்கும். 26

அரசொடு நட்டவர் ஆள்ப விருத்தி
அரவொடு நட்டவர் ஆட்டியும் உண்பர்
புரிவளை முன்கைப் புனைஇழை நல்லார்
விரகிலர் என்று விடுத்தனர் முன்னே. 27

பீடுஇல் செய்திக ளால்கள வில்பிறர்
வீடில் பல்பொருள் கொண்ட பயன் எனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்து
ஓடல் இன்றி உலையக் குறைக்குமே. 28

பொய்யின் நீங்குமின்; பொய்யின்மை பூண்டுகொண்டு
ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்;
வைகல் வேதனை வந்துஉறல் ஒன்றுஇன்றிக்
கௌவை இல்உலகு எய்துதல் கண்டதே. 29

கல்வி இன்மையும் கைப்பொருள் போகலும்
நல்லில் செல்லல்க ளால்நலிவு உண்மையும்
பொய்யில் பொய்யோடு கூடுதற்கு ஆகுதல்
ஐயம் இல்லை அதுகடிந்து ஓம்புமின். 30

உலகுஉடன் விளங்கஉயர் சீர்த்திநிலை கொள்ளின்
நிலையில்கதி நான்கின் இடை நின்றுதடு மாறும்
அலகில்துயர் அஞ்சின்உயிர் அஞ்சவரும் வஞ்சக்
கொலைஒழிமின் என்றுநனி கூறினர் அறிந்தார். 31

வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயம்
கள்வர்என்று இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளில் ஒருபொருளை ஒட்டாது ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோய் எவ்வம் இகப்பவோ. 32

ஒழிந்த பிறஅறன் உண்டென்பார் உட்க
அழிந்து பிறர் அவாம் வம்பப் பொருளை
இழந்து சிறிதானும் எய்தாது ஒழிந்தார்
அழிந்து பெருந்துயர்நோய்க்கு அல்லாப் பவரே. 33

இன்மை இளிவாம் உடைமை உயிர்க்கு அச்சம்
மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப்
புன்மை உறுக்கும் புரைஇல் அரும்பொருளைத்
துன்னாது ஒழிந்தார் துறவோ விழுமிதே. 34

ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி
நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம்
மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை
வேண்டாது ஒழிந்தார் விறலோ விழுமிதே. 35

இல்லெனின் வாழ்க்கையும் இல்லைஉண் டாய்விடின்
கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர்
இல்லைஉண் டாய்விடின் இம்மை மறுமைக்கும்
புல்லென்று காட்டும் புணர்வதும் அன்றே. 36

வேல்கண் மடவார் விழைவுஒழிய யாம்விழையக்
கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதாம்
நாற்பது இகந்தாம் நரைத்தூதும் வந்தது இனி
நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே. 37

இளமையும் நிலையாவால்; இன்பமும் நின்றஅல்ல;
வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக்கு என்றும்என்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின். 38

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகைஅவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பலபல யோனிகள்
அற்றாய் உழலும் அறுத்தற்கு அரிதே. 39

உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை
மற்றது தோய்த்துக் கழுவுதல் என்ஒக்கும்
பற்றினால் ஆகிய பாவத்தை மீட்டும்
பற்றொடு நின்று பறைக்குஉறும் ஆறே. 40

தானம் செய்திலம் தவமும் அன்னதே
கானம் தோய்நில விற்கு அழிவு எய்தின
நானம் தோய்குழல் நமக்குஉய்தல் உண்டோ
மானம்தீர்ந்தவர் மாற்றம்பொய் அல்லவால். 41

பருவந்து சாலப் பலர்கொல்என்று எண்ணி
ஒருவந்தம் உள்ளத்து உவத்தல் ஒழிமின்
வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன்
ஒருவன் உலகிற்கு உளன்என்னும் ஆறே. 42

உய்த்து ஒன்றி ஏர்தந்துஉழஉழுது ஆற்றவும்
வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்ஒக்கும்
மெய்த்தவம் இல்லான் பொருளோடு போகங்கட்கு
எய்த்து உழந்தேதான் இடர்ப்படு மாறே. 43

செந்நெலங் கரும்பினொடு இகலும் தீஞ்சுவைக்
கன்னல் அம் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண்கிலன் என்று பூகமும்
முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே. 44

குலந்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்
அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ . 45

கெட்டேம் இதுஎம் நிலைஎன்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிதுஇகழ்ந்து ஆற்றவும்
எட்டவந்து ஓர்இடத்து ஏகிநிற்பவே. 46

தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட
எண்ணெய்கொண்டு ஈட்டற்கு இவறுதல் என்ஒக்கும்
பெண்மனம் பேதித்து ஒருப்படுப்பென் என்னும்
எண்ணில் ஒருவன் இயல்புஎண்ணும் ஆறே. 47


நீள்முகை கையால் கிழித்து மோக்குமாறு
மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறின்
பேணலும் அன்பும் பிறந்துஉழிப் போதுசெய்து
ஆணைப்பெண் ஐய அணைக்குறு மாறே. 48

அந்தகன் அந்தகற்கு ஆறு சொலல்ஒக்கும்
முந்துசெய் குற்றம் கெடுப்பான் முழுவதும்
நன்குஅறிவு இல்லான் அஃதுஅறி யாதவற்கு
இன்புறு வீட்டின் நெறிசொல்லு மாறே. 49

யாறொடு யாழ்ஞெலி கோல்நில வார்கொடிப்
பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று
கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்குஇவை
வேறுஓர் இடத்து வெளிப்படல் நன்றாம். 50

ஆய்குரங்கு அஞ்சிறை வண்டினம் போல்க என்று
பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான்பொருள் தந்துநின் தோள்நம்பி
யாவர் அடைந்தவர்க்கு அவையும் புரைய. 51

வாரி பெருகப் பெருகிய காதலை
வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின்
மாரி பெருகப் பெருகி அறஅறும்
வார்புனல் ஆற்றின் வகையும் புரைப. 52

எங்ஙனம் ஆகியது இப்பொருள் அப்பொருட்கு
அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின்
எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற்கு
அங்ஙனம் ஆகிய யாழும் புரைப. 53

கரணம் பலசெய்து கையுற்று அவர்கட்கு
அரணம் எனும் இலர் ஆற்றிற் கலந்து
திரணி உபாயத்தில் திண்பொருள் கோடற்கு
அரணி ஞெலிகோல் அமைவர ஒப்ப. 54

நாடொறும் நாடொறும் நந்திய காதலை
நாடொறும் நாடொறும் நைய ஒழுகலின்
நாடொறும் நாடொறும் நந்தி உயர்வுஎய்தி
நாடொறும் தேயும் நகைமதி ஒப்ப. 55

வனப்பிலர் ஆயினும் வளமையு ளோரை
நினைத்தவர் மேவர நிற்பமைக்கு அவர்தாம்
கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப்
புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப. 56

தம்கண் பிறந்த கழிஅன்பி னார்களை
வன்கண்மை செய்து வலிய விடுதலின்
இன்பொருள் ஏற்றி எழநின்ற வாணிகர்க்கு
அங்கண் பரப்பகத்து ஆழ்கலம் ஒப்ப. 57

ஒத்த பொருளால் உறுதிசெய் வார்களை
எத்திறத் தானும் வழிபட்டு ஒழுகலின்
பைத்தரவு அல்குல்பொன் பாவையின் நல்லவர்
பத்தினிப் பெண்டிர் படியும் புரைப. 58

வீபொரு ளானை அகன்று பிறனும் ஓர்
மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின்
மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு
மாவும் புரைப மலர் அன்ன கண்ணார். 59

நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள்
நன்குடை யானை நயந்தனர் கோடலின்
வம்புஇள மென்முலை வாள்நெடுங் கண்ணவர்
கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப. 60

முருக்குஅலர் போல்சிவந்து ஒள்ளிய ரேனும்
பருக்கொடு இல்லவர் பக்கம் நினையார்
அருப்பிள மென்முலை அம்சொல் அவர்தாம்
வரிச்சிறை வண்டின் வகையும் புரைப. 61


மக்கள் பயந்து மனையறம் ஆற்றுதல்
தக்கது அறிந்தார் தலைமைக் குணம் என்ப
பைத்துஅரவு அல்குல் படிற்றுஉரை யாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றமொன்று இன்றே. 62

நகைநனி தீது துனிநன்றி யார்க்கும்
பகைநனி தீது பணிந்தீ யாரோடும்
மிகைமிகு பொருள் என்று இறத்தல் இலரே
வகைமிகு வானுலகு எய்திவாழ் பவரே. 63

பெண்டிர் மதியார் பெருங்கிளை தான் அது
கொண்ட விரகர் குறிப்பினின் அஃகுப
வெண்டறை நின்று வெறுக்கை இலராயின்
மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார். 64

சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்
நல்லவை யாரும் நன்மதிப் பார் அல்லர்
கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய
புல்லென்று போதலை மெய்யென்று கொள்நீ. 65

தொழுமகன் ஆயினும் துற்றுடை யானைப்
பழுமரம் சூழ்ந்த பறவையின் சூழ்ப
விழுமிய ரேனும் வெறுக்கை உலந்தால்
பழுமரம் வீழ்ந்த பறவையின் போப. 66

பொருள்இல் குலனும் பொறைமைஇல் நோன்பும்
அருள்இல் அறனும் அமைச்சுஇல் அரசும்
இருளினுள் இட்ட இருண்மையிது என்றே
மருள்இல் புலவர் மனம்கொண்டு உரைப்ப. 67

[சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாக வருபவை]

துக்கம் துடைக்கும் துகளறு காட்சிய
நிக்கந்த வேடத்து இருடி கணங்களை
ஒக்க அடிவீழ்ந்து உலகியல் செய்தபின்
அக்கதை யாழ்கொண்டு அமைவரப் பண்ணி. 68
[சிலம்பு: கனாத்திறம்: 13-க்கு மேற்கோளாகச் சொல்லப்பட்டது]


பண்ணால் திறத்தில் பழுதின்றி மேம்பட்ட
தொண்ணூற்று அறுவகைக் கோவையும் வல்லவன்
விண்ணாறு இயங்கும் விறலவர் ஆயினும்
கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான். 69
[சிலம்பு: கனாத்திறம்: 14-க்கு மேற்கோளாகச் சொல்லப்பட்டது]


அன்றைப் பகற்கழிந் தாள் இன்று இராப்பகற்கு
அன்றில் குரலும் கறவை மணிகறங்கக்
கொன்றைப் பழக்குழல் கோவலர் ஆம்பலும்
ஒன்றல் சுரும்பு நரம்பென ஆர்ப்பவும். 70
[சிலம்பு: ஆய்ச்சியர்குரவை: 3-க்கு மேற்கோளாகச் சொல்லப்பட்டது]


[யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் மேற்கோளாகக் காட்டியது]

நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து
கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே!
கோலம் குயின்ற குழலும் கொழும்சிகையும்
காலக் கனல் எரியின் வேம்வாழி நெஞ்சே!
காலக் கனல் எரியின் வேவன கண்டாலும்
சால மயங்குவது என்வாழி நெஞ்சே! 71
[யாப்பருங் கலம்: 93-ஆம் நூற்பாவிற்கு மேற்கோளாகச் சொல்லப்பட்டது]


வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்
மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே!
மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே!
உத்தம நன்னெறிக்கண் நின்றுஊக்கஞ் செய்தியேல்
சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே. 72
[யாப்பருங் கலம்: 93-ஆம் நூற்பாவிற்கு மேற்கோளாகச் சொல்லப்பட்டது]





[b]
Back to top Go down
 
வளையாபதி
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: