BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசங்கம் காண்போம் Button10

 

 சங்கம் காண்போம்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

சங்கம் காண்போம் Empty
PostSubject: சங்கம் காண்போம்   சங்கம் காண்போம் Icon_minitimeSun Apr 04, 2010 1:24 pm

பெற்றோர்களின் சம்மதத்துடன் தலைவி, தன் மனம் விரும்பிய தலைவனைத் திருமணம் செய்து கொண்டாள். ஊரும் உறவினரும் வாழ்த்த, மிக கோலாகலமாக நடைபெற்றது திருமணம். மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு தோழி தன் தலைவியைத் தலைவனிடம் ஒப்படைத்து விட்டு, தன் கடமைகளைச் செம்மையாக நிறைவேற்றிய பெருமிதத்துடன் இருந்தாள். ஆனால்... தோழி நடந்ததை மீண்டும் நினைத்துப் பார்த்தாள்.

திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. ,'தலைவன் தன்னுடைய ஊருக்குத் தலைவியை அழைத்துச் சென்று விடுவான். அதனால் இன்று தலைவியைப் பார்த்து விட வேண்டும்' என்று எண்ணியவாறு தலைவியின் வீட்டை அடைந்தாள் தோழி.

திருமணத்திற்கு வந்தவர்களில் பெரும்பாலோர் சென்று விட்டிருந்தனர். சிலர் மட்டுமே இருந்தனர். தோழியைக் கண்ட தலைவி ஆனந்தமாக வரவேற்றாள். தலைவியின் முகம் நாணத்தில் சிவந்திருந்தது. அது தெரியாமல் இருக்கத்தான் மஞ்சள் பூசியிருக்கிறாளோ! கண்களில் மயக்கம் கலந்த மகிழ்ச்சி! ஒரு வாரத்திற்குள் தலைவி ஒரு சுற்று பெருத்து விட்டதாகத் தோன்றியது தோழிக்கு! ''என்ன புதுப்பெண்ணே!... எப்படி இருக்கிறாய்?'' என்று கேலியாகக் கேட்டாள் தோழி.

''ம்.. மகிழ்ச்சியாக'' என்று தோழிக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள் தலைவி. தோழி விடவில்லை. தலைவியைப் பரிகாசம் செய்தவாறு இருந்தாள். தலைவியும் சிணுங்கியவாறு பொய்க் கோபத்தோடு பேசிக் கொண்டிருந்தாள்.

சட்டென்று அமைதியான தலைவி, ''தோழி! நாளை முதல் என்னுடன் யார் இப்படி உரிமையாகப் பேசி விளையாடுவார்கள்?'' என்று கண் கலங்கினாள். தோழிக்கும் அதே வருத்தம்தான்! ஆயினும் அதை மறைத்துக் கொண்டு, ''என்ன இது குழந்தை மாதிரி... கண்களைத் துடைத்துக் கொள்! அடுத்த ஊருக்குத்தானே செல்கிறாய்! அடிக்கடி நான் வருவேன்'' என்று சமாதானம் செய்து கொண்டிருக்கும்போதே தலைவன் வெளியிலிருந்து வந்தான். வேக வேகமாக வந்தவன் தோழியைப் பார்த்து ''தோழி! நன்றி.. மிக்க நன்றி.. நீ இதுவரை செய்தவற்றிற்கு மட்டுமல்ல.. இனி செய்யப் போவதற்கும்தான்..!''என்று புதிராகப் பேசினான். தலைவியும், தோழியும் ஒருவரையொருவர் கேள்விக்குறியுடன் பார்த்துக் கொண்டனர்.

''என்ன புதுமாப்பிள்ளை, புதிர் போடுகிறீர்கள்?'' என்று நகைத்தவறு தோழி கேட்டாள்.

தோழியின் கேலியை ரசிக்காதவனாக, தலைவியை நோக்கி, ''தலைவி, நான் கூறப்போவதைக் கேட்டு வருந்தாதே! அரசரின் போர்ப்பணிக்காக நான் இன்றே செல்ல வேண்டும். அடுத்த நாட்டு மன்னன் படையெடுத்து வருகிறானாம். உடனடியாக செல்ல வேண்டும். தோழி, நீதான் தலைவியைப் பார்த்துக்கொள்ள வேண்டும்..நான்..''என்று பேசி முடிப்பதற்குள் தலைவி மூர்ச்சையாகி விழுந்தாள்.

இதோ! இன்றுடன் ஒரு மாதம் ஓடிவிட்டது. தோழியும் அடிக்கடி தலைவியைச் சந்தித்து ஏதேனும் கதைகள் பேசி.. விளையாடி.. அவளுடைய தனிமையைப் போக்க முயன்றாள். இன்றும் அப்படித்தான்! தோழி வீட்டிற்குள் நுழைந்ததும் தலைவியின் தாய், ''வா தோழி..வா! நேற்று மதியம் எங்கள் வீட்டு மாடு கன்று போட்டிருக்கின்றது. அழகாக இருக்கின்றது.. போய்ப் பார்'' என்றாள். தோழிக்கு இச்செய்தி மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் அளித்தது. தலைவியையும் அழைத்துக் கொண்டு வீட்டின் பின்பக்கம் சென்றாள். வெள்ளை நிறக் கன்றுக்குட்டி! கண்கள் இரண்டும் கரு கருவென்று.. பார்ப்பதற்கு.. மிக அழகாக இருந்தது.

தலைவி மகிழ்ச்சியோடு அதை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள். அதன் கழுத்தை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தாள். இருவரும் கொஞ்ச நேரம் கன்றுக்குட்டியுடன் பொழுதைக் கழித்தனர். அப்போது பால்காரர் கையில் குவளையுடன் வந்தார். கன்றுக்குட்டியைக் கொஞ்சியவாறு பால் குடிப்பதற்கு ஏதுவாக மாட்டின் அருகில் தூக்கிச் சென்றார். கன்றுக்குட்டி திமிறிக் கொண்டு இங்கும் அங்கும் துள்ளியது. மறுபடியும் அதைக் கொஞ்சி , தடவி மாட்டிடம் இழுத்துச் சென்றார். மீண்டும் குடிக்காமல் ஓடியது.

இதற்குள் ஆரவாரத்தைக் கேட்டு தலைவின் தாய் வந்துவிட்டாள். ''என்ன பால்காரரே! கன்றுக்குட்டி பால் குடிக்க மறுக்கின்றதா?'' என்று கவலையாகக் கேட்டாள். ''ஆம், அம்மா. இன்னும் பழகவில்லை. முதலில் கொஞ்சம் பால் கறந்து விடுகிறேன். பின்பு கன்றுக்குட்டியைப் பழக்குகிறேன்'' என்று கூறியவாறு குவளையுடன் மாட்டின் அருகில் சென்று அதன் மடியில் கை வைத்தார். அவ்வளவுதான்! மாடு பின்னங்கால்களால் உதைத்தது. பால்காரரும் குவளையுடன் கீழே விழுந்தார். அதன் பின் பல முறை முயன்றும் மாடு அவரை அண்ட விடவில்லை.

செய்வதறியாது நின்றார் பால்காரர். மாட்டின் மடியிலிருந்து பால் வழிந்து கீழே ஓடிக்கொண்டே இருந்தது. இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த தலைவி விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள். திடுக்கிட்ட தோழி, ''தலைவி! வருந்தாதே! எப்படியும் பால்காரர் மாட்டையும், கன்றினையும் சமாதானம் செய்து விடுவார்...''என்று தலைவியைத் தேற்றினாள். ''இல்லை..தோழி.. என் நிலைமையும்..'' என்று முகத்தை மூடிக் கொண்டு அழலானாள். ''என்ன நேர்ந்தது தலைவி..?''என்று தோழி தலைவியை உசுப்பினாள். ''தோழி, அந்த மாட்டின் இனிமையான பால் கன்றுக்கும் பயன்படாமல் நமக்கு அருந்தவும் பயன்படாமல் நிலத்தில் வழிந்து ஓடுவது போல...''என்று விசும்பினாள் தலைவி.

''அழாதே தலைவி! வா.. நாம் இருவரும் வீட்டிற்குள் செல்லலாம்'' என்று பேச்சை மாற்றினாள் தோழி. ''தோழி! நான் கூற எண்ணியதை அழாமல் கூறி விடுகிறேன்'' என்று கண்களைத் துடைத்துக் கொண்டு கூற ஆரம்பித்தாள் தலைவி.

''தோழி! அந்தப் பால் வீணாவது போல என் அழகும் வீணாகின்றது. இதோ பார். என்னுடைய திரண்டதோள்கள் மெலிந்து விட்டன. என்னுடைய மார்பும் இடுப்பும் சிறுத்து விட்டன. என் உடலின் பொன்னிறம் மாறி கறுத்து விட்டது. என்னுடைய தலைவனுக்கு அளிக்க வேண்டிய என் முழுமையான அழகு சிதைந்து விட்டது. எனக்கும் பயன்படாமல் என் தலைவனுக்கும் பயன்படாமல் பசலை நோய்க்கு இரையாகின்றதே..''என்று வருந்தினாள்.

தலைவி கூறியது உண்மைதான்! தலைவன் பிரிவினால் வாடும் தலைவியைத் தன் மார்போடு அணைத்து ஆறுதல் கூறினாள் தோழி.

இக்காட்சி குறுந்தொகையில் அமைந்துள்ளது.

தலைவி கூற்று
பாலைத்திணை

கன்றும் உண்ணாது கலத்தினும் படாஅது
நல்ஆன் தீம்பால் நிலத்துக் காஅங்கு
எனக்கும் ஆகாது.என்ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல்என் மாமைக் கவினே

- வெள்ளிவீதியார்

கன்றும் குடிக்காமல்
பாத்திரத்திலும் பிடிக்காமல்
நல்ல காராம்பசுவின் இனிய பால்
தரையில் வீணாக வழிவது போல
எனக்கும் பயன்படாமல்
எந்தலைவனும் அனுபவிக்காமல்
பசலைநோய்க்கு இரையாகின்றதே
என் உடலின் இளமை அழகே!
Back to top Go down
 
சங்கம் காண்போம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சங்கம் காண்போம் (05)
» சங்கம் காண்போம் (02)
» சங்கம் காண்போம் (03)
» சங்கம் காண்போம் (04)
» தமிழ்ச் சங்கம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: