BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசங்கம் காண்போம் (02) Button10

 

 சங்கம் காண்போம் (02)

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

சங்கம் காண்போம் (02) Empty
PostSubject: சங்கம் காண்போம் (02)   சங்கம் காண்போம் (02) Icon_minitimeSun Apr 04, 2010 1:29 pm

தோழி வேதனையாகவும், கோபமாகவும், ஆத்திரமாகவும் இருந்தாள். எத்தனை தடைகளை மீறி திருமணம் நடந்தது தலைவிக்கு! தினம் தினம் தலைவியின் தரிசனத்திற்காகத் தோழியை யாசித்த தலைவனின் முகம் நெஞ்சில் நிழலாடிற்று. தலைவியின் பெற்றோர்கள் திருமணத்திற்கு மறுத்தனர். சில பெரியவர்களின் துணையோடு தோழிதான் இருவருக்கும் திருமணம் செய்வித்தாள். இருவரும் இனிதாகத்தான் இல்லறத்தைத் துவங்கினர். ஐந்தாண்டு வாழ்வில் எவ்வித சலனமுமின்றி இரு குழந்தைகளுடன் இனிமையாக வாழ்ந்திருந்தனர். ஆனால் சமீபகாலமாகத்தான் தலைவனைப் பற்றி வதந்திகள் பரவி வருகின்றன.

தலைவியும், தோழியும் அவற்றை நம்பவில்லை. ஆனால் கடந்த பதினைந்து நாட்களாக நடந்து வரும் சம்பவங்களால்கலங்கினாள் தோழி! ஆம்! தலைவன் தன் காதல் மனைவியையும் குழந்தைகளையும் மறந்து.. 'இன்று வருவான் நாளை வருவான்' என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து.. மனம் வெதும்பினாள் தலைவி. ஊரார் கூறியது பொய் அல்ல என்று உணர்ந்தாள். அழுதாள், துடித்தாள், வருந்தினாள். நேற்று தலைவன் வீட்டிற்கு வந்து விட்டான் என்பதைப் பிறர் மூலம் அறிந்தாள் தோழி. "தலைவன் ஏதேதோ காரணங்கள் கூறி தலைவியைச் சமாதானப் படுத்தியிருப்பான்; தலைவியும் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டிருப்பாள்!" அந்தக் காட்சி மீண்டும் மீண்டும் மனதில் ஓட.. இதோ தோழி கோபமும், ஆத்திரமுமாக செல்கிறாள் பரத்தையின் வீட்டை நோக்கி!!

பச்சைப் பசேலென்ற வயல்களில் நெற்கதிர்கள் சூல் கொண்ட பாம்பைப் போல் நிமிர்ந்து நிற்க, ஆங்காங்கே வயல்களில் வாளை மீன்கள் குதித்து விளையாட, நாரைகள் மீன்களைப் பிடிப்பதற்காக இங்கும் அங்கும் பறக்க, மாமர நிழலில் நின்றிருந்த எருமைக் கன்றுக்குட்டி எதிர்பாராமல் துள்ளிப் பாய.. செல்வச் செழிப்பாகவும், ஆரவாரமாகவும் இருந்தது அந்த வழி! தோழி அவற்றையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் இல்லை. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் அழகு மிகுந்த பெண்கள் அலங்காரம் செய்து கொண்டும், ஒருவரையொருவர் கேலி செய்து ஓடி ஆடி விளையாடிக் கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தது தோழிக்கு வெறுப்பாக இருந்தது. ஒருவழியாக இவற்றையெல்லாம் கடந்து அவள் தேடி வந்த பரத்தையின் வீட்டை அடைந்தாள்.

அவள் முகத்தின் கோபம், வெறுப்பு ஆகியவற்றைக் கண்டு அஞ்சிய பணிப்பெண்.. ''யார்..என்ன வேண்டும்?'' என்று குழறியவாறு கேட்டாள். பணிப்பெண்ணின் கேள்விகளை அலட்சியம் செய்தவளாய் அவளைத் தாண்டிச் சென்ற தோழி சட்டென்று முன் வாசலிலேயே நின்றாள். அங்கிருந்தபடி வீட்டினுள் நோட்டம் விட்டாள். முன் வாசலைத் தாண்டி சிறு அறை இருந்தது. அதைத் தாண்டி பெரிய அளவில் கூடம் இருந்தது. நடுவில் வேலைப்பாடுகள் மிகுந்த தேக்கு மர ஊஞ்சல். அதன் எதிரே ஆள் உயர கண்ணாடி. பரத்தை ஒய்யாரமாக அந்த ஊஞ்சலில் அமர்ந்தவாறு கண்னாடியைப் பார்த்து ஒப்பனை செய்து கொண்டிருந்தாள். ஓடிச் சென்ற பணிப்பெண் அவளிடம் ஏதோ ரகசியமாகக் கூறினாள். தோழிக்கு மார்பு விம்மித் தணிந்தது. 'என்ன அழகு அவள்!.. ஆண்களையெல்லாம் கட்டிப்போட்டு பைத்தியமாக்கும் அழகு!' கண்ணாடியில் பார்த்தாள் தோழி. முகத்தில் ஆணவம்! கண்களில் அலட்சியம்! சிரிப்பில் நஞ்சு! கொதித்தாள் தோழி. ஏதோ முணுமுணுப்பாகப் பேசிய அந்தப் பரத்தையின் குரல் இப்போது நன்றாகக் கேட்டது.

''ஏன் பதறுகிறாய் பணிப் பெண்னே! அமைதியாக இரு! நம் நிலத்தில் அடிக்கடி காணும் ஒரு அருமையான இயற்கைக் காட்சியை நினைவுபடுத்திக் கூறு'' என்று நிதானமாக கூந்தலை வாரியவாறு கேட்டாள் பரத்தை.

பணிப் பெண்ணிற்குப் புரியவில்லை. ''அம்மா..வெளியில்..பெண்..''என்றாள்.

''அவள் இருக்கட்டும். நான் கேட்ட கேள்விக்குப் பதில் கூறு'' என்று கோபமாகப் பேசினாள் பரத்தை.

'இந்நிலத்தில் எத்தனை எத்தனையோ இயற்கைக் காட்சிகள். எவற்றைக் கூறுவது..' என்று யோசித்தவாறு பணிப்பெண் கூறினாள். ''நீர் நிறைந்த வயல்கள், கதிர்கள், வாளை மீன்கள், நாரைகள், மாமரங்கள், காஞ்சி மரங்கள்...''

''போதும்.. போதும்.. சரியாகச் சொன்னாய். அந்த மாமரத்திலுள்ள பழங்களை இங்கு வாழும் எவரும் பறிப்பதில்லை. அவைகள் தாமாகவே பழுத்து விழுந்து நீர்நிலைகளில் விளையாடும் மீன்களுக்கு உணவாகி விடுகின்றன. வாளை மீன்களும் அந்தப் பழம்தான் வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இல்லை. அப்படிப்பட்ட நிலம்தான் இந்த மருத நிலம். புரிகின்றதா.. " என்று கேட்டவாறு கண்களுக்கு மை வரைந்தாள்.

பணிப்பெண்ணிற்குப் புரிந்ததோ இல்லையோ தோழிக்கு சுரீரென்றது. மண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. சுதாரிப்பதற்குள் பரத்தை சத்தமாக இவள் காதில் விழ வேண்டும் என்பது போல, ''என் அழகில் மயங்கி அங்கு வந்து விழுந்து கிடக்கும் இந்த நிலத் தலைவர்கள் எல்லாம் எப்படிப் பட்டவர்கள் தெரியுமா? இங்கு நம் வீட்டில் இருக்கும்போது பெருங்குரலில் பேசிச் சிரித்து ஆரவாரமாகத் தம் விருப்பத்திற்கேற்ப இருப்பார்கள். ஆனால்.. அவர்கள் வீட்டில் எப்படி இருப்பார்கள் தெரியுமா..?'' என்று பணிப் பெண்ணிடம் கேட்டுவிட்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.

தோழியின் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் போயிற்று. 'அது ஒரு சாக்கடை. அதில் கல்லெறிந்தால் நமக்குத்தான் அவமானம்' என்று தலைவி கூறியது சரிதான்! அதைக் கேட்காமல் வந்ததை எண்ணி வருந்தியவளாக வெளியே நடக்க ஆரம்பித்தாள்.

பரத்தையின் சிரிப்பிற்கு அர்த்தம் புரியாதவளாக நின்றிருந்த பணிப் பெண்ணிடம், இன்னும் சத்தமாக, ''என்ன புரியவில்லையா, இதோ பாரடி! இந்தக் கண்ணாடி நான் எதைச் செய்தாலும் அதை அப்படியே அச்சு மாறாமல் செய்கிறதல்லவா? அது போலத்தான் அந்தத் தலைவர்கள் தம் வீட்டில் தம் மனைவிமார்கள் சொற்படி நடந்துகொள்கிறார்கள். அதனால்தான் மகிழ்ச்சிக்காக இங்கு வருகின்றார்கள்..'' என்று நகைத்துக் கூற...பணிப் பெண்ணும் சேர்ந்து கொண்டாள்.

ஆத்திரம் எல்லாம் அழுகையாக மாற, தோழி அந்த இடத்தை விட்டு வேகவேகமாக நடந்தாள்.இக்காட்சி குறுந்தொகையில் அமைந்துள்ளது

மருதத்திணை

காதற்பரத்தை கூற்று

கழனி மாத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரான்
எம்இல் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே

- ஆலங்குடி வங்கனார்


வயல்வெளி மாமரத்தின்
கனிந்த மாம்பழம்
கீழே விழ
அதனை
நீர்நிலை வாளைமீன்கள் உண்ணும் நாடன்!
என் வீட்டில் இருப்பின்
பெருங்குரலெடுத்துப் பேசுவான்
தன் வீட்டில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
கண்ணாடி போல
தன் புதல்வனின் தாய்க்குத்
தேவையானதைச் செய்வான்...
Back to top Go down
 
சங்கம் காண்போம் (02)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சங்கம் காண்போம்
» சங்கம் காண்போம் (03)
» சங்கம் காண்போம் (04)
» சங்கம் காண்போம் (05)
» தமிழ்ச் சங்கம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: