BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 பாரதியும் பெண்மையும்!

Go down 
AuthorMessage
Fathima

avatar

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 33
Location : srilanka

PostSubject: பாரதியும் பெண்மையும்!   Mon Apr 05, 2010 12:52 pm

............எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே- அவர்
கன்னிய ராகி நிலவினிலாடிக்
களித்தது மிந்நாடே
........................................................
......................................................

மங்கைய ராயவர் இல்லற நன்கு
வளர்த்தது மிந்நாடே - அவர்
தங்க மதலைக ளீன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே
..............................................................
.....................................................

தாய் நாடு, தாய் மொழி, தாய் அன்பு, தாயே தெய்வம், பெண் கடவுளர்கள் என பெண்களுக்குத் தனியிடமும், சிறப்பும் அளித்து, உயர்த்தி வணங்குவது பாரத நாட்டின் பண்பாடும், பாரம்பரியமும்!

யார் வணங்கத் தகுந்தவர்கள் என முறைப்படுத்தும் பொழுது, முதலிடம் தாய்க்கு, அடுத்து தந்தைக்கு, மூன்றாவது இடம் ஆசிரியருக்கு, நான்காவது இடம்தான் இறைவனுக்கே!

இத்தகு கலாசாரத்தைப் பெற்ற இந்த நாட்டின் தீவினைப் பயனா என்ன என்று சிந்திக்க முடியாத அளவிற்கு இடைக் காலத்தே சில பிற்போக்குவாதிகளின் செயல்களால், தவறான சிந்தனைகளால், பெண்ணின் பெருமை காற்றில் பறக்க, பெண் விடுதலை சமுதாயத்தை விட்டு விலக, பெண்ணடிமை எனும் பேய் சமுதாயத்தின்மேல் பாய்ந்து அலைக்கழித்தது. இந்நிலையைப் போக்க எத்தனையோ பெண் விடுதலை வீரர்களும், சமுதாயச் சிற்பிகளும், சிந்தனாவாதிகளும், கவிஞர்களும், அரசியல் தலைவர்களும், பல காலம் போராட வேண்டியிருந்தது. அப்போராட்டம் நாடு விடுதலை பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் தொடர்ந்து வருகிறது என்பது வேதனைக்குரியது மட்டுமல்லாது, வெட்கித் தலை குனியவும் வைக்கிறது.

பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பெருமக்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்க சிலர் அண்ணல் மகாத்மா காந்தி அடிகள், இராஜாராம் மோகன் ராய், ஈ.வே.ரா., திரு வி.க., கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன் இன்னும் பலர்.

இப்பகுதியில் மகாகவி பாரதியாரின் பெண்கள் முன்னேற்றம் பற்றிய சிந்தனையைக் காண்போம்.

பண்டைத் தமிழ் வரலாற்றையும், பாரதப் பண்பாட்டினையும் நன்கு தெரிந்திருந்த பாரதியார், நாட்டின் ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களின் நிலையையும், வேதனையையும் கண்டு மனம் வெதும்பினார்; வேதனைப் பட்டார்; பெண் விடுதலைக்காக எழுச்சி மிகுந்த பாடல்களைப் பாடினார். அப்பாடல்கள் இன்றும் பெண்கள் முழு உரிமையைப் பறைசாற்றும் வண்ணம் அமைந்துள்ளன. அவை மனித உள்ளங்களைத் தொட்டன; விழிப்புணர்வை ஊட்டின; பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்தின. அதன் விளைவே சமுதாயத்தில் படிப்படியாக பெண்கள் முன்னேற்றம் அடையத் துவங்கினர்.

பாரதியார் தமது கவிதைகளிலும், கட்டுரைகளிலும் அவருடைய கருத்துக்களை அவருக்கே உரித்தான அழகோடும், அழுத்தத்தோடும், வீராவேசத்தோடும், படிப்போரின், கேட்போரின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் கனல் தெறிக்க எழுதியுள்ளார்.

பாரதியின் தலையாய கொள்கைகளுள் ஒன்று 'பெண் விடுதலை'. பாரதி, தான் வடித்த புதுமைப் பெண்ணை, 'புதுமைப் பெண்' என்ற கவிதையில் நம் கண் முன்னர் கொண்டு வந்து நிறுத்தியதை அறிவோம். பெண்ணிற்கு ஓர் இலக்கணத்தையே வகுத்த கவிதை அது. பெண்களை அடிமைப்படுத்த எண்ணும் பேடிகளை ''அறிவு கொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம்'' என்பார்.

யார் அந்தப் பெண்? எப்படி அவரை நடத்த வேண்டும்?

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ் வையந் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்கு பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம்
நாணு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டீரோ!

பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் குணநலன்கள்? நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு!

புதுமைப் பெண்கள் என்ன செய்வராம்?

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவி லொழிப்பராம்.
சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுரியங்கள் பலபல செய்வராம்
மூத்த பொய்மைகள் யாவு மழிப்பராம்
மூடக் கட்டுகள் யாவுந் தகர்ப்பராம்!

பாரதியாரைப் பற்றி பலர் அறியாத செய்தி: ஆசார சீர்திருத்த மகாசபை என்று சென்னையில் ஓர் அமைப்பு. அது ஒரு சமுதாயச் சீர்திருத்தச் சங்கம். அதில் பாரதியும் ஓர் உறுப்பினர். அந்த அமைப்போடு தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டு உழைத்ததை அவர் கட்டுரைகள் காட்டுகின்றன.

புதுவையில் அவர் வாழ்ந்த பொழுது பெண்களை ஒருங்கிணைத்து பெண்ணுரிமைகள் பற்றி ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தாராம். அப்பொழுது அவர் கூறிய கருத்திலிருந்து ''ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு; மனம் உண்டு; புத்தியுண்டு; ஐந்து புலன்கள் உண்டு. அவர்கள் செத்த யந்திரங்களல்லர்.சகோதரிகளே! ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. தர்மத்துக்காக இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள். ஆதலால் சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்மயுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம்....''

ஆண் - பெண் கற்பு பற்றி தனது கருத்துக்களை 'பதிவிரதை' என்ற கட்டுரை மூலம் வெளிப்படுத்துகிறார்.

''ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருந்தால் நன்மையுண்டாகும். பதிவிரதைக்கு அதிக வீரமும் சக்தியும் உண்டு. சாவித்ரி தனது கணவனை எமன் கையிலிருந்து மீட்ட கதையில் உண்மைப் பொருள் பொதிந்திருக்கிறது. ஆனால் பதிவிரதை இல்லை என்பதற்காக ஒரு ஸ்திரீயை வதைத்து ஹிம்சை பண்ணி அடித்து ஜாதியை விட்டுத் தள்ளி ஊரார் இழிவாக நடத்தி அவளுடன் யாவரும் பேசாமல் கொள்ளாமல் தாழ்வு படுத்தி அவளைத் தெருவில் சாகும்படி விடுதல் அநியாயத்திலும் அநியாயம்.''

கற்பிழந்த ஆண்களைப் பற்றிச் சீறிப் பாய்வார்.

''அட.. பரம மூடர்களா! ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படி பதிவிரதையாக இருக்க முடியும்? ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்க வேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும்''
Back to top Go down
View user profile
Fathima

avatar

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 33
Location : srilanka

PostSubject: பாரதியும் பெண்மையும்! (2)   Mon Apr 05, 2010 12:55 pm

பெண் விடுதலை என்ற ஒரு அருமையான கட்டுரையில், சமநீதித் தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒன்பது கட்டளைகளைப் பட்டியலிடுகிறார் இப்படி:

1. பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
2. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
3. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.
4. சொத்தில் சம உரிமை தர வேண்டும்
5. திருமணமின்றி வாழும் உரிமை வேண்டும்
6. பிற ஆடவருடன் பழகும் சுதந்திரம் வேண்டும்
7. உயர் கல்வி அனைத்துத் துறையிலும் தரப்பட வேண்டும்
8. எவ்விதப் பணியிலும் சேரச் சட்டம் துணை நிற்க வேண்டும்
9. அரசியல் உரிமை வேண்டும்

பெண்களுக்கு வேண்டிய உரிமைகளில் பல இன்று நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், இவையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத காலத்திற்கு முன் சிந்தித்த தீர்க்க தரிசனமும், பெருமையும் பாரதியாரைச் சாரும்.

பெளத்தப் பெண்கள் நிலை, இசுலாமியப் பெண்கள் நிலை, தென் ஆப்பிரிக்கப் பெண்கள் நிலை ஆகியவை குறித்து பாரதியார் விவாதித்திருப்பது அவருடைய சிந்தனைகள் முழுமையாக மனித குலத்தைத் தழுவியிருப்பதை வெளிப்படுத்துகிறது.

பெண்மையின் பெருமை குறித்து இவ்வாறு கூத்திடுவார் பாரதி:

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா
தண்மை இன்பநற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்!

"போற்றித்தாய்" எனத் தாளங்கள் கொட்டடா!
"போற்றித்தாய்’ எனப் பொற்குழல் ஊதடா!
காற்றிலேறி அவ்விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே...
எனப் பாடுவார்!

பெண்மை என்பது என்ன?

அன்பு, அமைதி, ஆசைக் காதல், துன்பம் தீர்ப்பது, சூரப் பிள்ளைகளைப் பெறுவது, வலிமை சேர்ப்பது தனது முலைப் பாலால், மானஞ்சேர்க்கும் வார்த்தைகள், கலி அழிப்பது, கைகள் கோர்த்துக் களித்து நிற்பது! எங்கெங்கு காணினும் சக்தியடா! என்ற பாரதி கூற்றுப்படி சக்தி வடிவாய்த் திகழ்வது பெண்மை.

"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர் பாரதி.

"தையலை உயர்வு செய்" என்பது பாரதியின் புதிய ஆத்திசூடி.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடு மீசன்;
மண்ணுக்குள் ளேசிலமூடர் - நல்ல
மாதர றிவைக் கெடுத்தார்.

கண்க ளிரண்டினி லொன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதமை யற்றிடுங் காணீர்.

என்று பெண்மையைப் பேணி வளர்க்க வேண்டியதின் இன்றியமையாமையைக் குறிப்பிட்டார்.

"தமிழ்த் திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா"

என்று தமிழ்த்திருநாட்டையும், தாயையும் கும்பிட வேண்டியதின் சிறப்பைக் குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார்.

பெண் விடுதலைக்காக முதன் முதலில் ’புதுமைப் பெண்’ படைத்த புதுமைக் கவிஞர் அல்லவா பாரதி? பெண்களே நமது நாட்டின் கண்களாவார்கள் என்பதில் மிகத் தெளிவான கருத்துக் கொண்டிருந்தவர் அவர். எனவேதான் அக்கவிஞர் பெண்மை பற்றிப் பலபல பாடல்களை இயற்றினார். பெண்மையின் சிறப்பை உணர்த்த எழுதப்பட்ட உன்னதக் காவியமே அவரது பாஞ்சாலி சபதம்.

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும் என அவர் கவிதைகளிலும், கட்டுரைகளிலும் வலியுறுத்துகிறார். அப்பெண்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து கும்மி அடிக்கின்றனர். எதைப் பாடி?

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்!
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்!
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்,
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி! என!


பாரதியாரின் பெண்மை பற்றிய கருத்துக்களை இதுவரை கண்டோம். பெண்களின் நிலை ஒருவகையில் மேம்பட்டிருந்தாலும், இன்னும் நமது சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள் குறைந்த பாடில்லை. தெருக்களிலும், கல்வி நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் மகிழ்வோடும், அமைதியாகவும் இருக்க முடியாது அவதிப்படும் நிலை இன்னும் நீடிப்பது வேதனைக்குரியது.

அண்ணல் காந்தி அடிகள் கூறினார்: " நகையணிந்த பெண்கள் இரவு நேரத்திலும் தெருக்களில் அச்சமின்றி நடந்து செல்லமுடியும் என்ற நிலை வரும் வரை நாட்டிற்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்பதை என்னால் ஏற்க முடியாது" என்று!

பாராளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும், பஞ்சாயத்து ஆட்சிகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதில் அரசு படும் பாட்டைப் பார்த்து வேதனை ஏற்படுகிறது.

அந்த நிலையைக் கொண்டு வருவதற்கு ஒவ்வொருவரும் தனது பங்கை அளிக்க வேண்டும். பெண்களுக்குச் சம உரிமை அளிக்கும் மனப்பாங்கு ஏற்பட வேண்டும். பெண்கள் போகப்பொருளே என்ற அருவருப்பான எண்ணம் மக்கள் மனங்களிலிருந்து அறவே அகற்றப்பட வேண்டும்.

இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பொறுப்பு மிகவும் அதிகம். இதை ஒரு வேள்வியாக ஏற்று அனைவரும் பாடுபடுவோம். பெண்மை உயர்ந்தால், சமுதாயமும் நாடும் உயரும் என்பதை மனதார ஏற்று, மதித்து வாழக் கற்றுக் கொள்வோம்!. இதுவே பாரதிப் பெருமகனாருக்கு நாம் செய்யும் நன்றியும் அஞ்சலியுமாகும்!
[b]
Back to top Go down
View user profile
 
பாரதியும் பெண்மையும்!
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: