BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகருணையா? கொலையா? Button10

 

 கருணையா? கொலையா?

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

கருணையா? கொலையா? Empty
PostSubject: கருணையா? கொலையா?   கருணையா? கொலையா? Icon_minitimeTue Apr 06, 2010 4:24 am

அமுதென்றும் நஞ்சென்றும் - கருணையா? கொலையா?


6 மாதங்களுக்குள் இறந்துவிடக் கூடிய வாய்ப்பிருக்கும் நோயாளிகள் எழுத்து மூலமாகத் தங்கள் மருத்துவரிடம் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள உதவி கோரலாம்
"எனது வாழ்க்கை எனக்குத் திரும்பக் கிடைத்துவிட்டது" - சில மாதங்களுக்கு முன் நீதிமன்ற வாசலில் இப்படி அந்தப் பெண்மணி முகமலரச் சொன்ன போது 'இதென்ன விநோதம்' என்று வியக்காமலிருக்க முடியவில்லை.

"எனது தற்கொலைக்கு உதவினால் எனது கணவர் மீது வழக்குத் தொடுப்பீர்களா என்று தெளிவாகக் கூறவேண்டும்" என்று நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்றிருக்கும் டெபி பர்டிதான் இந்தப் பெண்மணி. தீராத நோயால் அவதிப்படும் பர்டி, வேதனையைப் பொறுத்துக் கொள்ள முடியாத பட்சத்தில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புகிறார். தனது இறுதி நொடிகளைத் தனது கணவருடன் கழிக்க விரும்பும் பர்டி, அப்படித் தன் கணவர் உடனிருப்பதால் சட்ட ரீதியாக அவருக்கு எந்த ஒரு இன்னலும் வராதென உறுதி செய்ய விரும்பி நீதிமன்றத்தின் படியேறி இருக்கிறார்.

இங்கிலாந்தில் 1961ல் இயற்றப்பட்ட தற்கொலைச் சட்டத்தின்படி தற்கொலை என்பது குற்றமல்ல. ஆனால் தற்கொலைக்கு தூண்டுதலாகவும் உதவியாகவுமிருப்பவர்களுக்கு 14 ஆண்டு வரை சிறைவாசம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதுவரை எவருமே இந்தச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்டதில்லை. வயதான அல்லது நோய்வாய்ப்பட்ட உறவினர்களைத் தீய எண்ணத்துடன் தற்கொலைக்குத் தூண்டுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த சட்டம் அமலிலிருப்பதாகக் கருதப்படுகிறது.

சென்ற வருடம் 23 வயதான டேனியல் ஜேம்ஸ் என்ற ரக்பி விளையாட்டு வீரர் விபத்தொன்றில் புலன்கள் செயலிழந்ததால், சுவிட்சர்லாந்திலுள்ள டிக்னிடாஸ் என்ற மருத்துவமனையில் சட்ட ரீதியாக தற்கொலை செய்து கொண்டார். அவருடனிருந்த அவர் பெற்றோர் மீது வழக்குத் தொடர்வது பொதுநலத்துக்கு மாறாக இருக்கும் எனக் கூறி அரசு வழக்கேதும் தொடுக்கவில்லை. இருந்தும் பர்டி விடாப்பிடியாகத் தனது கேள்விக்கு நீதித்துறை பதிலளிக்கவேண்டும் என்று போராடினார்.

இங்கிலாந்திலிருந்து மட்டும் சென்ற வருடம் 23 பேர் சுவிட்சர்லாந்திலுள்ள டிக்னிடாஸ் மருத்துவமனையில் சட்ட ரீதியாகத் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுள் இரு வயதான தம்பதியரும் அடங்குவர். கௌரவமாக இறக்க உரிமை வேண்டும் என்ற நோக்கில் இங்கு பெரும்பிரச்சாரம் கூட நடந்து வருகிறது. 74% ஆங்கிலேயர்கள், தீராத நோய்களால் அவதிப்படும் நோயாளிகள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள மருத்துவ உதவி கிடைப்பதைப் பெரிதும் வரவேற்கிறார்கள்; 60% பேர் உறவினர்களும் நண்பர்களும் கூட இத்தகைய நோயாளிகளுக்கு உதவி செய்ய சட்டம் அனுமதிக்க வேண்டும் என்று கருதுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம். இது அரசியல்வாதிகளை யோசிக்க வைத்திருக்கிறது.

பிரிட்டனின் சட்டத்துக்கு பயந்து தமது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக அயல்நாடுகளுக்குச் செல்வது துரதிர்ஷ்டமானது என பெரும்பாலோர் கருதுகிறார்கள். இருப்பினும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் நோயாளிகள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள சட்டம் அனுமதிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும் என்ற வற்புறுத்தலும் இருக்கிறது. 13% மக்கள் எந்த சூழ்நிலையிலும் ஒரு தனிமனிதனுக்குத் தனது வாழ்வை முடித்துக்கொள்ள முழு சுதந்திரம் தேவை என்று எண்ணினாலும் பெரும்பாலான மக்கள், இந்த வாய்ப்பு தீராத நோயால் அவதியுறும் நோயாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

அமெரிக்காவின் ஆரிகான் மாநிலத்தில்தான் முதல்முதலாக தற்கொலைக்கான மருத்துவ உதவி சட்டமயமாக்கப்பட்டது. இதன்படி, 6 மாதங்களுக்குள் இறந்துவிடக் கூடிய வாய்ப்பிருக்கும் நோயாளிகள் எழுத்து மூலமாகத் தங்கள் மருத்துவரிடம் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள உதவி கோரலாம். மருத்துவர்கள் அவர்களுக்குத் தேவையான மருந்துகளைத் தரலாமே எனினும் நோயாளிகளுக்குச் செலுத்த அனுமதி கிடையாது. அப்படிச் செலுத்தினால் அது கருணைக் கொலையாகக் கருதப்படும். நோயாளிகள் தாங்களாகவே மருந்தினை உட்கொள்ள வேண்டும் என்பது சட்டம். கடந்த பத்து வருடங்களில் இந்த சட்டத்தை பயன்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 400க்கும் குறைவானதே என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.

"நம்மால் எதிர்கொள்ள முடியாத சூழல்களிலிருந்து தப்பிக்க தற்கொலை ஒரு உன்னதமான வழி" என்கிறார் டிக்னிடாஸைத் தோற்றுவித்த மினெலி என்ற வழக்கறிஞர். இதுவரை உயிரைக் குடிக்கும் நோய்களால் துன்புறுபவர்களுக்கு மட்டுமே உதவி செய்த இவரின் நிறுவனம், முதல் முறையாக நோய்வாய்ப்பட்ட கணவருடன் தானும் இறக்க விரும்பும் ஒரு பெண்மணிக்கு உதவுவதற்காக சட்ட ரீதியான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறது.

தற்கொலை உதவி, கருணைக் கொலை, கொலை என்று பெயர்கள் வேறுபடலாமே ஒழிய அடிப்படையில் இவை எல்லாமே ஒரு மனித உயிரைப் பறிக்கும் செயல்கள்தாம் என்றும் ஒன்றுக்கு அனுமதி கொடுத்துவிட்டால் படிப்படியாக இவற்றுக்கிடையேயான வித்தியாசங்கள் மறைந்து போகும் அபாயம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள் எதிர்ப்பாளர்கள். நோயால் துன்புறுவோர் தம் வாழ்க்கையை முடித்துக் கொள்வது சட்டரீதியாகக் கருதப்பட்டால், இப்படிப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டும் வாழ விரும்பும் மனிதர்களுக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பது இவர்களது வாதம். நோயாளியின் சம்மதத்துடன் செய்யப்படும் கருணைக் கொலைக்கு அனுமதியிருக்கும் ஹாலந்தில் மரண தருவாயிலிருக்கும் நோயாளிகளுக்கான மருத்துவ சேவை வளர்ச்சியடையாத நிலையிலேயே உள்ளது என்ற ஆதாரத்தையும் இவர்கள் முன்வைக்கிறார்கள்.

சென்ற வருடம் மோட்டார் ந்யூரான் நோயால் பாதிக்கப்பட்டுத் தன் வாழ்க்கையை டிக்னிடாஸில் முடித்துக் கொண்ட க்றிஸ் எவெர்ட் ஒரு ஓய்வுபெற்ற பேராசிரியர். இவரது இந்தப் பயணத்தை விவரணப்படமாக்குமாறு இவர் யோசனை வழங்க, ஸ்கை தொலைக் காட்சி இந்தப் பணியை மேற்கொண்டது. இந்தப் படத்தைப் பார்த்த பத்திரிகையாளர் ஒருவர், "தற்கொலை உதவி தேவையா இல்லையா என்ற விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலோர் வெறும் அனுமானத்தை வைத்தே பேசுகிறோம் என்பது இந்தப் படத்தைப் பார்த்தபின் புரிந்தது. சம்பந்தப்பட்ட குடும்பங்கள் படும்பாடுகளை துல்லியமாக வெளிக் கொண்ர்ந்த இந்தப் படம் எனக்குப் புதிய பரிமாணத்தைக் காட்டியது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் 77 வயதான டாக்டர் இர்வின் என்பவர், தனது நோயாளி ஒருவர் தனது வாழ்க்கையை டிக்னிடாஸில் முடித்துக் கொள்ள தான் உதவியதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்து, தன் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியிருக்கிறார். இவரது நோக்கம் தன் மேல் தொடுக்கப்படும் வழக்கின் மூலம் இந்தப் பிரச்சினையை பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதுதான். டாக்டர் இர்வின் ஐநா சபையில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்தவர். அடுத்த ஆறு மாதத்தில் மற்றொரு நோயாளிக்கு தாம் உதவப் போவதாகவும் இவர் அறிவித்திருக்கிறார். தவிர, சென்ற மாதம் தற்கொலை உதவிக்கெதிரான தனது நிலையை ராயல் காலேஜ் ஆஃப் நர்ஸிங் கைவிட்டிருப்பதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

இப்படி தற்கொலைக்கான மருத்துவ உதவியைச் சட்டரீதியாக்க பிரிட்டன் அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் எழுந்திருக்கும் அதே சமயம், பல்வேறு நாடுகளிலிருந்தும் தற்கொலை செய்து கொள்வதற்காக மக்கள் தங்கள் நாட்டுக்கு வருவதை விரும்பாத சுவிட்சர்லாந்து அரசு தனது சட்டத்தை மறு பரிசீலனை செய்து வருகிறது.

"தனிமனிதனுக்கான முடிவை அரசு எடுப்பது சரியல்ல" என்று ஒரு புறமும், "பலவீனமானவர்களை அரசுதான் பாதுகாக்க வேண்டும்" என்று மறுபுறமும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், "எனக்கு வாழ ஆசை இருக்கிறது. ஆனால் வாழ இயலவில்லை. விடைபெற அனுமதியுங்கள்" என்று ஒரு தனிமனிதன் தாங்கவொணா துன்பத்தோடு கேட்கையில் மனதைப் பிசையத்தான் செய்கிறது
Back to top Go down
 
கருணையா? கொலையா?
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: