BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஜூலியஸ் சீசர் கொலையின் பின்னணியில்.... Button10

 

 ஜூலியஸ் சீசர் கொலையின் பின்னணியில்....

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ஜூலியஸ் சீசர் கொலையின் பின்னணியில்.... Empty
PostSubject: ஜூலியஸ் சீசர் கொலையின் பின்னணியில்....   ஜூலியஸ் சீசர் கொலையின் பின்னணியில்.... Icon_minitimeSun Apr 18, 2010 7:19 am

கி.மு. 49ம் ஆண்டு, ஜூலியஸ் சீசர் மேற்கு இத்தாலியிலுள்ள ரூபிகான் நதியைக் கடந்து ரோமன் குடியரசில் ஒரு உள்நாட்டுப் போரை ஏற்படுத்தினார். ஜூலியஸ் சீசரின் பரம எதிரி பாம்ப்பே கிரீசுக்குத் தப்பிச் சென்றார். மூன்றே மாதங்களிலில் இத்தாலிய தீபகற்பம் முழுவதையும் சீசர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். ஸ்பெயின் நாட்டில் பாம்ப்பேய்க்கு ஆதரவாயிருந்தவர்களையும் வென்றார். பின்னும் விடாமல் பாம்ப்பேயை கிரீசுக்குத் துரத்திச் சென்றார். ஆனால் பாம்ப்பே அதற்குள் எகிப்திற்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவரை எகிப்திற்குத் தொடர்ந்த சீசருக்கு பாம்ப்பேயின் வெட்டப்பட்ட தலை நட்பின் பரிசாக அளிக்கப்பட்டது.

எகிப்திலிருந்து திரும்புவதற்கு முன்னால் சீசர் கிளியோபட்ராவை தன் சார்பில் எகிப்தின் அரசியாக நியமித்தார். வட ஆப்பிரிக்காவில் இருந்த தன் மற்ற எதிரிகளை வென்ற பின்னர், கி.மு. 47ம் ஆண்டு தனது ஆட்சியை முழுமையாக நிலைநிறுத்திய மனநிறைவுடன் ரோமிற்குத் திரும்பினார். ஆனால் சீசர் அதனுடன் நிற்கவில்லை. கி.மு. 44ம் ஆண்டு வரை தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போரிட்டு வந்தார். அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னை வாழ்நாள் சர்வாதிகாரியாகப் பிரகடனம் செய்தார். அவரது இந்தச் செயலும் அதிகார ஆணவமும் அவரது அரசவையில் இருந்தவர்களை அவர் மீது வெறுப்படைய வைத்தன. அவரது அரசவையிலிருந்த அறுபது உறுப்பினர்கள் சீசரின் சர்வாதிகாரத்தை ஒழிக்க ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று தீர்மானித்தார்கள்.

டமாஸ்கசைச் சேர்ந்த நிக்கோலஸ் என்பவர் சீசரது மரணத்தைப் பற்றி விரிவாக விளக்குகிறார். அவர் சீசர் கொல்லப்பட்டதை நேரில் பார்க்காவிட்டாலும் அந்த நிகழ்ச்சியின்போது இருந்தவர்களை சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.

சீசரைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் ஒருபோதும் ஒரே சமயத்தில் சந்தித்துக் கொள்ளவில்லை. யாராவது ஒருவர் வீட்டில் சிலர் கூடிப் பேசுவார்கள். நிறையத் திட்டங்கள் அலசப்பட்டன; எப்படி, எங்கே சீசரைத் தீர்த்துக் கட்டுவது என்று. சிலர் சீசர் எப்போதும் நடந்து செல்லும் புனித வழி எனும் பாதையில் அவரை மடக்கிக் கொன்றுவிடலாமென்று கூறினர். இன்னொரு யோசனை சீசரைத் தேர்தலின் போது கொன்று விடுவது என்பது. அந்த சமயத்தில் சீசர் தேர்தலுக்கான மாஜிஸ்ட்ரேட்டுகளை நியமிப்பதற்காகப் பாலத்தைக் கடந்து செல்வார். அது சரியான தருணமாக இருக்கும் என்பது அவர்கள் கணக்கு. யார் பாலத்திலிருந்து சீசரைக் கீழே தள்ளுவது, யார் அவரைக் கொல்வது என சீட்டுப் போட்டுப் பார்க்க வேண்டும் என்றார்கள். அடுத்த யோசனை கத்திச் சண்டை போட்டி நடக்கும்போது அவரைத் தீர்த்துக் கட்டிவிடலாம் என்பது. அந்த சமயத்தில் கத்தியுடன் யார் சென்றாலும் சந்தேகப்பட மாட்டார்கள் என்பது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் பெரும்பாலானோர் சீசரை அரசவையில் வைத்துக் கொன்றுவிட வேண்டுமென்று விரும்பினார்கள். அப்போது உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். கத்திகளை மறைத்து வைப்பது சுலபம் என்பது அவர்கள் எண்ணம். கூடியிருந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

ஜூலியஸ் சீசரின் நெருக்கமான நண்பர்களுக்கு அவரைக் கொல்வதற்கான திட்டங்கள் பற்றி வதந்திகள் கசிந்து வந்தன. அவர்கள் சீசர் அரசவைக்கு வர வேண்டாம் என்று கருத்து தெரிவித்தார்கள். சீசரது மருத்துவர்களும் சீசரின் உடல் நிலையைக் கருதி அவர் அன்று அரசவை செல்ல வேண்டாம் என்றார்கள். அவரது மனைவி கல்பூரினா சில நாட்களாகக் கெட்ட கனவுகள் கண்டிருந்ததால் தன் கணவருக்கு ஆபத்து வருமோ எனக் கலங்கியிருந்தாள். இந்த நிலையில் அவளும் கணவன் அரசவை செல்வதை விரும்பவில்லை.

ஆனால், நண்பனைப் போல் உடனிருந்து சீசரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தவர்களில் முதல்வனான ப்ரூடஸ், சீசரிடம் ”இது என்ன பைத்தியக்காரத்தனம்! ஒரு பெண் கண்ட அர்த்தமில்லாத கனவுகளையும் சில அறிவில்லாதவர்களின் வார்த்தைகளையும் கேட்டு அவைக்கு செல்லாதிருக்கலாமா? இது அவைக்கு நீங்கள் செய்யும் அவமானமில்லையா? நான் சொல்வதைக் கேளுங்கள். யார் யாரோ சொல்வதைக் கேட்டு அவைக்கு வராமலிருக்க வேண்டாம்” என்றான். ப்ரூடஸ் சொன்னதைக் கேட்டு மனம் மாறிய சீசர் அவைக்குச் செல்ல நினைத்தார்.

சீசர் அரசவை செல்லும் முன் அவரது குருமார்களும் அவருக்காக பலி ஏற்பாடு செய்தபோது ஏற்பட்ட கெட்ட சகுனங்களைக் கூறி அவரை எச்சரித்தார்கள். கெட்ட சகுனங்களால் பலி ஏற்பாட்டை மாலை வரை ஒத்தி வைத்து, மாலை வரை சீசரை அரசவைக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்கள். சீசரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

எங்கே தங்கள் திட்டம் வீணாகி விடுமோ என்று எண்ணிய ப்ரூடஸ் சீசரிடம் மறுபடியும் சென்று, ”யாரோ வேலையில்லாதவர்கள் உளறுவதைக் கேட்டு அரசவைக்கு வராமல் இருக்காதீர்கள். தாங்கள் கூட்டிய அரசவை தங்களுக்காகக் காத்திருக்கிறது. கெட்ட சகுனங்களையே மாற்றி நல்லவைகளாக்கும் சக்தி உங்களுக்கு இருக்கிறது. வாருங்கள்!" என்று கூறி சீசரது வலது கரத்தைப் பற்றியவாறே அவரை அரசவைக்கு அழைத்துச் சென்றான்.

கொலுமண்டபத்திற்கு வந்த சீசரை அங்கிருந்த உறுப்பினர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர். அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்தவர்கள் அவர் அருகில் நின்றனர். டில்லியஸ் சிம்பர் எனும் அந்த உறுப்பினர் சீசரால் நாடு கடத்தப்பட்ட தன் சகோதரனுக்காக அவரிடம் பேசும் சாக்கில் சீசரது கரங்களை அவரது மேலங்கியுடன் சேர்த்து தன் கைகளால் பிடித்துக் கொண்டார். சிம்பர் சீசரின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டதால் சீசரால் அவற்றை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.

சரியான தருணத்தை உணர்ந்த எதிரிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த பிச்சுவாக்களை வெளியே எடுத்து சீசரை நோக்கிப் பாய்ந்தார்கள். முதலில் சர்விலஸ் காஸ்கா என்பவன் கத்தியை சீசரின் இடது தோளை நோக்கி செலுத்த முயன்றான். ஆனாலும் அந்த பரபரப்பில் அவனது குறி தவறியது. சீசர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றபோது காஸ்கா தனது சகோதரனை நோக்கிக் கத்த, அவன் சீசரின் விலாவில் கத்தியைச் செலுத்தினான். இன்னொரு உறுப்பினரான காசியஸ் லான்ஜினஸ் குத்த முயன்றபோது குறி தவறி மார்கஸ் ப்ரூடஸின் விரலில் குத்திவிட்டான். பின்னர் காசியஸ் சீசரின் முதுகிலும், புரூடஸ் அவரது இடுப்பிலும் குத்தினர். இன்னொருவன் சீசரது தொடையில் குத்த, தாக்குதல் எல்லா முனையிலிருந்தும் சரமாரியாய் நடந்தது. ஒவ்வொருவரும் சீசரது கொலையில் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்பதுபோல் தொடர்ந்து குத்தினர்.

இறுதியில் சீசர் பாம்ப்பேயின் சிலையின் கீழே காயங்களுடன் வீழ்ந்தார், உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக்களுடன். சர்வாதிகாரியாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட சீசரின் இறுதி மூச்சு பிரிந்தது.
[b]


THANKS:

நெல்லைச்சாரல்
Back to top Go down
 
ஜூலியஸ் சீசர் கொலையின் பின்னணியில்....
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: