BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 "காலம் நம் கையில்"

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 36

PostSubject: "காலம் நம் கையில்"   Tue Apr 27, 2010 10:37 am

காலம் அழியேல்

ஒரு இந்தியக் குடிமகனுக்கு ஒரு சாதாரணப் பிரச்சினை. சில நாட்களாய் மலச்சிக்கல். ஊரில் வைத்தியம் பார்த்தும் எந்தத் திருப்தியும் இல்லை. என்ன செய்வது? அதுதான் இருக்கிறாரே ஒரு மகாமனிதர், மஹாத்மா காந்தி. எல்லா பிரச்னைக்கும் தீர்வு சொல்லக் கூடியவர் என்ற எண்ணத்தில், அந்த மனிதர் மஹாத்மாவிற்குத் தன் பிரச்சினையை விளக்கி ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் அரசை எதிர்த்து, புதிய அஹிம்சை ஆயுதம் கைகொண்டு, ஒரு நாட்டை நடத்திச் சென்று கொண்டிருக்கும் மஹாத்மாவிற்கு மலை போல பல சிக்கல்கள் இருக்க, இந்த ஒரு தனி மனிதரின் மலச்சிக்கல் பிரச்சினையைப் பற்றி யோசிக்க நேரம் இருக்குமா?

ஒரு பெரிய வேலையை நாம் செய்து கொண்டிருக்கும் போது இப்படி ஒருவர், கடிதமோ, மின்னஞ்சலோ, அனுப்பியிருந்தாலோ அல்லது, தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தாலோ, நமக்குக் கோபம் வருவது நியாயமானதுதான். ஆனால் மஹாத்மா அப்படி இல்லை. அந்தக் கடிதத்தைப் படித்த கையோடு அதற்கு ஒரு விரிவான பதில் எழுதுகிறார். நார்ச்சத்து உள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், மேலும் தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார். அதற்கு ஒரு படி மேலே போய், இதைச் சில காலம் செய்து விட்டு, என்ன முன்னேற்றம் என்று மீண்டும் எழுதச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறார்.

கடிதம் எழுதிய ஒருவருக்கு மட்டும் தீர்வு சொல்லிவிட்டால் அவர் எப்படி தேசத் தந்தையாகி விட முடியும்? எனவே, இதைப்பற்றி தான் நடத்தி வந்த 'யங் இந்தியா' என்ற பத்திரிகையிலும் கட்டுரை எழுதுகிறார். இந்தியாவில் பலருக்கு இந்தப் பிரச்சினை இருக்கலாம். எனவே, அனைவரும் பயன் அடைவார்கள் என்ற எண்ணம். இது அத்தனையும் நடந்தது நம்முடைய சுதந்திரப் போர் உச்சக் கட்டத்தில் இருந்து, காந்திஜி தேசத்தலைமை ஏற்று இருந்த நேரத்தில்!

பல மொழிகளைக் கற்றுக் கொண்ட காந்திஜி, தனக்கு வரும் கடிதம் எந்த மொழியில் வந்ததோ அதே மொழியில் பதில் அளிக்க முயற்சிப்பார். தமிழும் ஓரளவு எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருந்தார். அமரர் கல்கி அவர்கள், பாரதி பிறந்த எட்டையபுரத்தில், அந்த மகாகவிக்கு மணிமண்டபம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, காந்திஜி "பாரதி ஞாபகார்த்தப் பிரயத்தனங்களுக்கு என் ஆசிர்வாதம்" என்று தமிழிலேயே வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் தனக்கு வந்த கடிதங்கள் அனைத்துக்கும் பதில் எழுதியுள்ளார் மஹாத்மா. வலது கையில் எழுதி எழுதி கை வலிக்க ஆரம்பித்தால், இடது கையால் எழுதித் தள்ளும் திறமையும் பெற்றிருந்தார்.

ஐந்து மொழிகளில் புலமை; தனக்குத் தொழில் கவிதை என்று நிர்ணயித்துக் கொண்டு பலவிதமான கவிதைகளை எழுதியது; தமிழ்ப் பண்டைய இலக்கியங்களையெல்லாம் கரைத்துக் குடித்தது; வேத உபநிஷதங்களைப் படித்து, வசன கவிதைகளாய்ப் பல வேத வாக்கியங்களை மொழி பெயர்த்தது; பகவத் கீதைக்குத் தமிழ் மொழிபெயர்ப்பு; எழுத்தாளர்; பத்திரிகையாளர்; தானே கார்ட்டூன் படங்கள் வரையும் திறமை; சுதந்திரப் போராட்டத்தில் தீவிர ஈடுபாடு; இதை எல்லாம் செய்து முடித்து பாரதி கண்ணை மூடிய போது அவருக்கு வயது 39 தான்! 'கனக்கும் செல்வம்; நூறு வயது' கேட்டார். கிடைக்கவில்லை!

வேதங்களையும், உபநிஷதங்களையும் மிக ஆழமாகப் படித்து புதுப்புது அர்த்தங்களைத் தந்தார். இந்தியா முழுவதும் கால்நடையாகவே வலம் வந்தார். இரண்டு முறை வெளிநாட்டுப் பயணம் சென்று, பல இடங்களில் அனல் பறக்கும் சொற்பொழிவுகள்; ஆங்கில இலக்கியங்களை நன்கு படித்து ஆங்கிலத்தில் புலமை; வழிவழியாகத் துறவிகள் சேர்ந்து நாட்டுச் சேவை செய்ய நிறுவனம் நிறுவியது; உலகம் முழுவதும் சீடர்களைத் தட்டி எழுப்புதல்; இதைச் செய்து முடித்து சுவாமி விவேகானந்தர் முக்தியடைந்த போது அவருக்கு 39 வயதுதான்.

இத்தனை 'பிஸி'யாக வாழ்ந்த இந்த மூவரும் தங்களின் ஒரு வாழ்நாளிலேயே இவ்வளவு சாதிக்க முடிந்ததே, நம்மால் ஏன் முடியவில்லை? பாரதி சொன்ன 'காலம் அழியேல்' தான் இன்று 'Time Management' என்ற பெயரில் பல இடங்களிலும் பேசப்படுகிறது.

நாம் எங்கே போகிறோம் என்பதில் தெளிவு இல்லையென்றால் எந்தப் பாதையும் ஒன்றுதான். அதேபோல், இப்போது எங்கே இருக்கிறோம் என்பதில் தெளிவு இல்லையென்றால் எந்த வரைபடமும் நமக்கு பயனளிக்காது. எனவே, முதல் தேவை, நாம் எங்கே போகிறோம்; இன்று எங்கே இருக்கிறோம் என்பது நமக்குத் தெளிவாகப் புரிய வேண்டும். "குறிக்கோள் இருப்பவன் ஆயிரம் தவறு செய்தால், குறிக்கோள் இல்லாதவன் பத்தாயிரம் தவறுகள் செய்வான்" என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

எனவே குறிக்கோளை முதலில் சரியாக நாம் முடிவு செய்து கொள்வோம். இந்தக் குறிக்கோள் யோசிக்க மிகப் பெரியதாக இருக்கலாம். நம்மால் முடியுமா? என்ற அச்சத்தை நம்முள் ஏற்படுத்துவதாக இருக்கலாம். எனவே, இந்தத் தொலைநோக்குக் குறிக்கோளை நாம் ஆண்டுக் குறிக்கோளாக, பின் மாதக் குறிக்கோளாக, பின் நாள் குறிக்கோளாகப் பகுத்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் நம்மை இந்தக் குறிக்கோளுக்கு அருகில் அழைத்துச் செல்லும் எனில், நாம் நமது நேரத்தைப் பயனுள்ளதாக செலவு செய்வதாக அர்த்தம். குறிக்கோளுடன் பொருந்தாத செய்கைகள் நேரத்தை வீணாக்குவதாக ஆகும்.

குறிக்கோளை அடைவதற்கான செயல்கள் இன்று என்ன செய்ய வேண்டும் என்பதைக் காலையிலேயே நாட்குறிப்பில் குறித்துக் கொள்ளும் பழக்கத்தைக் கை கொள்ளலாம். பலமுறை இன்று நமக்கு நிறைய வேலை இருக்கிறது என்று கண் விழிக்கிறபோதே ஒரு வித 'டென்ஷன்' ஏற்படுகிறது. அதைப் போக்க சுலபமான வழி, நாட்குறிப்பை எடுத்துக் கொண்டு, என்ன என்ன வேலைகள் இன்று செய்ய வேண்டும் என்று பட்டியல் இடுவதே ஆகும். பட்டியல் எழுதி முடித்ததும் பார்த்தால், பல சமயங்களில். 'இவ்வளவுதானா? இதற்கா நம் மனது அந்த ஆர்ப்பாட்டம் செய்தது?' என்று எண்ணத் தோன்றும்.

பட்டியல் எழுதி முடித்த பின், இந்த நீண்ட பட்டியலில் எதை முன்னால் செய்ய வேண்டும், எதைப் பின்னால் செய்ய வேண்டும் என்று குறித்துக் கொள்வது நல்லது. சில வேலைகள் மிக முக்கியமானதாக இருக்கும். அன்றே செய்தாக வேண்டிய காரியமாக இருக்கும். சில காரியங்கள் ஒத்திப் போட்டாலும் தவறில்லை என்ற வகை. எனவே பட்டியலில் உள்ள வேலைகளை வகைப்படுத்தி, பிறகு வரிசைப்படுத்திக் கொள்ளவும். மிக முக்கியமானது, யோசிப்பதற்கும் சற்று நேரம் ஒதுக்கிக் கொள்வது. யோசனை எதுவும் செய்யாமல், நாம் பலமுறை ஒரு வேகத்தில் காரியத்தில் இறங்கி விடுவதும், பிறகு பின் வாங்குவதும் கூட 'காலம் அழித்தல்' தான். எனவே யோசனை செய்வதற்கு என்று தினம் தினம் தனியே நேரம் ஒதுக்க வேண்டும்.

பல சமயங்களில் பாதி வேலையை நாம் செய்துவிட்டு, மீதிப் பாதி வேலை மற்றவர்கள் செய்ய வேண்டிய நிலைமை இருக்கலாம். அடுத்தவர் செய்து முடித்தபின், மீண்டும் நாம் தொடர வேண்டி இருக்கலாம். இடைப்பட்ட காலம் நாம் சும்மா காத்திருக்கும் காலம். இதைப் போல பல 'காத்திருப்புக் காலங்கள்' வரும். ஒருவரைப் பார்க்கப் போகிறோம். அங்கு அவருக்காகக் காத்திருப்பு; பேருந்து நிலையம், ரயில் நிலையம் என பல இடங்களில் காத்திருப்பு; இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள நல்ல புத்தகம் கையில் இருந்தால், அல்லது இந்த நேரங்களை நம் 'யோசனை நேரமாக' மாற்ற முடிந்தால், காலம் சரியானபடி பயன்படும். ஒரு செயலை முழுவதுமாக முடித்த பின்புதான் அடுத்த செயலைச் செய்ய முடியும் என்று மனதைப் பழக்கிக் கொண்டால், பல 'காத்திருப்புக் காலங்கள்' நமக்கு வீணான நேரங்கள் ஆகிவிடும். எனவே மனதைப் பல விஷயங்களில் மாறி மாறி ஈடுபட பழக்கிக் கொள்ளுங்கள்.

காலையில் வேலைப் பட்டியல் இடுவது போல, இரவு என்னென்ன வேலைகள் சரியாக முடிந்தது என்று 'review' செய்யவும் நேரம் ஒதுக்க வேண்டும். நாளை இன்னும் சிறப்பாகச் செயல்பட, இன்று செய்த தவறுகளை எப்படி மாற்றிக் கொள்ள முடியும் என்று யோசிக்க வேண்டும். காலம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள நீட்டிக்க முடியாத பொக்கிஷம். இதைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள் தலைவர்கள் ஆகிறார்கள். சரியான 'Time management' கற்றுக் கொண்டுவிட்டால், எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கவும், அதே சமயம் மனதை மிக 'relaxed' ஆக வைத்துக் கொள்ளவும் முடியும். இன்னும் பல வேலைகளை எடுத்துத் திறம்பட செய்ய முடியும். தலைவர்கள் சொல்லும் வார்த்தை "காலம் நம் கையில்"
Back to top Go down
View user profile
 
"காலம் நம் கையில்"
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: