BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகாமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம் Button10

 

 காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம் Empty
PostSubject: காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம்   காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம் Icon_minitimeSat May 15, 2010 2:13 pm

பிப்ரவரி 14 என்பது வெலன்டைன் என்ற கிறிஸ்தவப் பாதிரியாரால்

நடைமுறைப்படுத்தப்பட்ட காதலர் தினம் என்பதும் இந்திய நாட்டிலும் தமிழகத்திலும் இந்நாள் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும் பரபரப்பாகக் கொண்டாடப்பட்டுதான் வருகிறது என்பதும் நமக்குத் தெரிந்த விடயங்களே. ஆனால், இவ்வாறு காதலர் தினம் என்று ஒன்றைக் கொண்டாடுவதற்கு நமது வரலாற்றில் முன்னுதாரணங்கள் உண்டா என்று ஆராய்ந்தால் எத்தனையோ விடயங்களில் நம் நாடும் சமூகமும் முன்னுதாரணங்களாக இருந்திருப்பது போன்றே இந்த விடயத்திலும் முன்னுதாரணமாக இருந்துள்ளன எனத் தெரியவருகிறது.

கணம் எனப்பட்ட குழுச் சமூக அமைப்பிலிருந்து முன்னேறிக் கணவன், மனைவி, வாரிசுகள் என்ற ஒரு தொகுதியை - அதாவது - குடும்பத்தை அடிப்படை அலகாகக் கொண்ட சமூக அமைப்பை நோக்கித் தமிழ்ச் சமூகம் நடைபோட்ட வரலாற்றின் எச்சங்கள் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. இப்பதிவுகளெல்லாம் சம காலப் பதிவுகளாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தங்களுடைய சமூகத்தின் முந்து வடிவத்திலிருந்து எஞ்சி நிற்கும் சில கூறுகள் திரிந்த வடிவிலாகிலும் நீடித்து வருகின்ற ஒரு நிகழ்வின் பதிவாகவும் அது இருக்க முடியும். அப்படிப் பார்க்கும்போது, அகநானூற்றில் ”பங்குனி முயக்கம்”, “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” (பா 368) என்றும், கலித்தொகையில் ”மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து... விளையாடும் வில்லவன் விழவு” (35:13-14) என்றும் குறிப்பிடப்படுகின்ற காமன் பண்டிகையே சங்ககாலக் காதலர் தினம் எனத் தெரியவருகிறது.

நாம் இங்குச் சங்ககாலம் எனத் தோராயமாகக் குறிப்பிடுவது இலக்கியங்கள் எழுத்தில் பதிவுபெறத் தொடங்கிய கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான சற்றொப்ப 800 ஆண்டுக் காலகட்டம் எனக் கொள்ளலாம். கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், பழைய கற்கருவிப் பயன்பாட்டின் இறுதி நிலைப் பண்பாடு (Late Palaeolithic civilization), புதிய கற்கருவிப் பயன்பாட்டுப் பண்பாடு (Neolithic Civilization), செம்புக் கருவிகளைப் பயன்படுத்திய கிராமியப் பண்பாடு (Copper Hoard Civilization), குறுணிக் கற்கருவிப் பயன்பாட்டுப் பண்பாடு (Microlithic Civilization), இரும்புக் கருவிப் பயன்பாட்டுப் பண்பாடு (Iron age or Megalithic Civilization) ஆகிய வெவ்வேறு பண்பாட்டு நிலைச் சமூகங்கள் தம்முள் பூசலிட்டும் சில தளங்களில் உறவுகொண்டும் சிலவகைப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டும் சிறுகச் சிறுகக் குடி, ஊர் போன்ற நிலைத்து வாழ்கின்ற அமைப்புகளுடனும் மன்றம், பொதியில் போன்ற வழக்குத் தீர்க்கின்ற அமைப்புகளுடனும் பதிந்து வாழத் தொடங்கி அரசு என்ற அமைப்பின்கீழ் நாடு என்ற பெயரில் வாழத்தொடங்குகின்ற காலகட்டத்திலிருந்தே, உத்தேசமாகச் சொல்வதானால் கி.மு. 1000த்திலிருந்தே இலக்கியம் எனப்படும் மொழிசார்ந்த வெளிப்பாடுகள் நிகழத் தொடங்கியிருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. எனவே, அக்காலகட்டத்திலிருந்தே தமிழ்ச் சமூகத்தில் நிலவிய பல்வேறு வகைப்பட்ட பண்பாட்டுக் கூறுகள் வாய்மொழி இலக்கிய மரபில் அல்லது பாணர் மரபில் பதிவாகியிருப்பது இயல்பே.1

வெவ்வேறு அரசுகள் – நாடுகளுக்கு இடையிலான வாணிக உறவு வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட தகவல் பரிமாற்றப் புரட்சியின் ஓர் அம்சமாக, அகர ஒலி ஆதியான ஓரோலிக்கு ஓரெழுத்து என்ற முறை (alphabetical script) அறிமுகப்படுத்தப்பட்டு, அரசு என்ற நிறுவனத்தின் துணையுடன் எழுத்தறிவு பரவலாக்கப்பட்டு எழுத்தினைக் கற்பிக்கும் கணக்காயர்கள்2 தலைமைப் புலவர்களாக வீற்றிருக்கின்ற தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பும் (மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் பற்றிய கதைகள் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்) உருவான நிலையிலேயே ‘சங்க இலக்கியங்கள்’ எழுத்தில் பதிவு பெறத்தொடங்கின. எனவே, சங்க இலக்கியப் பதிவுகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கி.மு. 1000ஆவது ஆண்டு தொடங்கித் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை மீளக் கட்டுதல் என்பது சிரமமானதே என்பதோடு அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டால் ஆரிய-திராவிட இனவாதம் என்பது போன்ற எளிமையான வாய்ப்பாடுகளின் அடிப்படையிலான அரைகுறைப் புரிதலே விளையும். சான்றாகக் காமவேள் வழிபாடு, காமன் பண்டிகை போன்றவற்றில் சுதேசித்தன்மை (தமிழ் மரபு) எத்தனை விழுக்காடு உள்ளது என்பது போன்ற கணிப்புகள் மிகக் கடினமானவை ஆகும்.

நாம் மேலே கண்ட கலித்தொகைக் குறிப்பு கி.பி. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குறிப்பாகலாம். கலித்தொகையில் இடம்பெற்றுள்ள வேறொரு பாடலில் (27:24-26) ”நாம் இல்லாப் புலம்பாயின் நடுக்கம் செய் பொழுதாயின் காமவேள் விழவாயின் கலங்குவள் பெரிதென ஏமுறுகடுந்திண்டேர்கடவி நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தம்மை நன்கு அலங்கரித்துக்கொண்ட பெண்டிர் குழுக்களாகக் கூடி வையையாற்றின் மணல் திட்டுகளில் விளையாடுவர் என்ற குறிப்பும் இப்பாடலில் (வரி 19-20) இடம்பெற்றுள்ளது. இது பங்குனி மாதம் உத்தர பால்குன நட்சத்திர நாளில் நிகழ்ந்தது. பங்குனி என்ற மாதப் பெயரே பால்குனி என்ற பெயரின் திரிபாகும். பனிக்காலத்தின் இறுதிக் கட்டத்தைக் குறிப்பதாகவும், இளவேனில் பருவத்தை வரவேற்கின்ற முன்னறிவிப்பாகவும் இந்நாள் திகழ்ந்தது.

அகநானூற்றில் “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டோம். கொங்கு நாட்டில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனத் தெரிகிறது. இறையனார் களவியல் நூற்பா 16-17க்கான உரையில் ‘கருவூர் உள்ளிவிழாவே’ என்ற குறிப்பு காணப்படுகிறது. ஊளி விழவு என்பது பிரதியெடுப்போரால் உள்ளி விழவு என்று தவறாக எழுதப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஊளி என்ற சொல் பேரோசை என்ற பொருளில் நம்பிள்ளையின் ‘ஈடு’ முப்பத்தாறாயிரப்படி ஏழாம் பத்தில் (4:4) இடம்பெற்றுள்ளது.3 உளை, ஊளை என்ற சொல் வழக்குகளையும் இதனோடு தொடர்புபடுத்தலாம். சமஸ்கிருதத்தில் ஹுல ஹுலி என்ற சொல் மகளிர் மகிழ்ச்சியில் எழுப்பும் பொருளற்ற ஓசை எனப் பொருள்படும்.4 இந்த அடிப்படையிலேயே காமன் பண்டிகை என்பது வட இந்தியாவில் ஹோலகா ஹோலிகா என்றும் ஹூளா ஹூளி என்றும் அழைக்கப்பட்டது. இவ்விழா நாளில் ஆடவரும் பெண்டிரும், குறிப்பாக இளைஞர்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக்கொண்டும், சாயப் பொடிகளை தூவிக்கொண்டும், மதுபானம் அருந்தி ஊளையிட்டுக்கொண்டும் குதித்துக்கொண்டும் சில வேளைகளில் இருபொருள்படும் கொச்சையான பாடல்களைப் பாடிக்கொண்டும் திரிவர். இதுவே தற்போது ஹோலி என்று வழங்கப்படுகிறது. கொங்கு நாட்டில் ஒலி எழுப்புகின்ற மணிகளைக் கோத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நடுத்தெருக்களில் ஆடிப்பாடிக்கொண்டு இவ்விழாவைக் கொண்டாடினர். உறையூரிலும் (திருச்சிராப்பள்ளி) திருவரங்கத்திலும் ஆற்றின் இடையே இருந்த மணல் திட்டுகளில் ஆடவரும் பெண்டிரும் தததமக்கு விருப்பமான இணைகளுடன் சேர்ந்துகொண்டு கூடிக் களிப்பது சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் எங்கல்ஸ் குறிப்பிடுகின்ற சட்டகத்தினைச் சங்க காலத் தமிழ்ச் சமூக அமைப்புடன் பொருத்திப்பார்த்தால் நாம் மேற்குறிப்பிட்ட மரபு எச்சப் பதிவுகளைப் புரிந்துகொள்ள முடியும். பல்வேறு குழுச் சமூகங்கள் ஒன்றுகூடி வாழத் தொடங்கும்போது ஒவ்வொரு குழுச் சமூகமும் வெளிச்சக்திகள் பலவற்றை உள்வாங்கித் தன்மயமாக்கி வளர்வதும், அவ்வாறு தன்மயமாக்கி வளர்கின்றபோது அக்குழுச் சமூகத்தின் இயல்பில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதவை ஆகும். பூசல்கள், போர்கள், போர்களின் போது வேற்று நாடுகளிலிருந்து சிறைப்பிடித்துக் கொணரப்பட்டு உழவு, நீர்ப்பாசனப் பணிகள் போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட்ட போர் அடிமைகள் வேளாண்மை விரிவாக்கம், பொருள் பரிவர்த்தனை, இவற்றின் அடிப்படையில் அரசு என்ற நிறுவனம் கட்டி எழுப்பப்படும்போது அரச குலம் என்ற ஒன்று தனியாகத் திரண்டு ஒதுங்கி உயர்ந்து வாழத்தொடங்கிவிடுவது இயல்புதான்.

சமூகத்தின் பல்வேறு குழுக்களிலிருந்து அரச குலத்தவருக்குக் காவற்பணிக் கூலியாக அல்லது கப்பமாக உபரி உற்பத்தியைச் செலுத்துவது போன்றே மகட்கொடையாகப் பெண்ணை மணம் செய்து கொடுக்கும் வழக்கம் உருவாகி அதற்குப் பிரஜாபத்தியம் என்ற பெயரில் வைதிக அங்கீகாரமும் கிடைத்த பிறகும்கூடச் சமூக அமைப்பில் வெகுஜனங்களிடையில் பழைய மரபுகளுக்கும் புதிய அறிமுகங்களுக்குமிடையிலான ஊசலாட்டங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருந்தன. இந்நிலையில் ஆண்டில் ஒருநாள் காமன் பண்டிகை என்ற பெயரில் தமக்குள் ஈர்ப்பும் விருப்பமுமுடைய ஆடவரும் பெண்டிரும் கூடிக்களித்தல் அல்லது களவு மணம்புரிதல் என்பது பழைய மரபின் எச்சமாகத் தொடர்ந்துவந்தது. நிலப்பிரபுத்துவப் படிநிலைச் சமூக அமைப்பில் இத்தகைய உறவுகள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவே.5 சாதி சனம் என்று இன்று சொல்கின்ற ரத்த உறவுக் குலக் குழுக்களிடையிலும், கிராம சமூக அமைப்புக்குள்ளும்தான் இத்தகைய களியாட்டங்கள் நிகழ்ந்தன என்றே கருதவேண்டியிருக்கிறது. குடும்பம் என்ற அமைப்பிற்கு முற்பட்ட இரத்த உறவுக் குழுச் சமூகத்தில் நிலவிய பாலுறவு முறைகள் மாற்றமடைந்துவிட்ட பின்னரும் பழைய மரபுகளை ஒரு சடங்கு போலக் கடைபிடிக்கும் வழக்கத்தின் அடையாளமாகவும் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அடையாளக் குறியீட்டு விழாவாகவும், கிராம சமூக அமைப்புகள் கூடி அச்சமூக உறுப்பினர்களான இளைஞர்கள் தமக்குரிய இணையைத் தாமே தேர்ந்துகொள்ளும் வாய்ப்பை உருவாக்கும் நிகழ்வாகவும் இது நீடித்து வந்திருக்கலாம். இற்பரத்தை, சேரிப்பரத்தை வகைப்பாடுகளுடன்கூடிய பரத்தையர் வர்க்கத்தை உருவாக்கி நிலைநிறுத்தி முழு வளர்ச்சியடைந்துவிட்ட நிலவுடைமைச் சமூகத்தில் இத்தகைய நிகழ்வுகளுக்கு வாய்ப்பில்லை. எனவே, கலித்தொகை குறிப்பிடுகின்ற காமவேள் விழவு என்பது உள்ளி விழவு அல்லது ஊளி விழவேயாயினும் அகநானூற்றில் குறிப்பிடும் விழாவும் கலித்தொகையில் குறிப்பிடப்படும் விழாவும் தன்மையளவில் மிகப் பெரும் வேறுபாடுகள் உடையவை என்பதில் ஐயமில்லை.

காந்தர்வம் என வைதிக மரபில் குறிப்பிடப்படுகின்ற திருமண முறை எந்தவித நிர்ப்பந்தமும் பொய்மையும் பாசாங்குகளுமற்ற உறவு முறையாகும். உத்தரகுரு என்றும் போகபூமி என்றும் புராணங்களில் குறிப்பிடப்படும் நாட்டில் இத்தகைய உறவுமுறை இருந்தது எனத் தெரியவருகிறது.6 தமிழ் மரபில் களவு மணம் எனக் குறிப்பிடப்படுவதை வைதிக மரபில் நிலவிய காந்தர்வ மணத்தோடு ஒப்பிடுவதுண்டு.7 களவு என்ற சொல்லே கள்ளத்தனமாக, பிறர் அறியாமல் மேற்கொள்ளப்படும் காதல் ஒழுக்கம் எனப் பொருள்படும். களவு மணமே தமிழ் நெறி என்று கூறும் அளவிற்குக் களவு மணத்திற்குச் சங்கப் புலவர்களிடையே குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிட்டியிருந்தது. இந்நெறி காமன் வழிபாட்டோடு தொடர்புடையது என்பதற்குப் பிற்காலக் காப்பியமாகிய சீவகசிந்தாமணி அசைக்கமுடியாத சான்றாகத் திகழ்கிறது. சீவகனும் சுரமஞ்சரியாரும் காமன் கோட்டத்துக் கடியறை தன்னில் இரகசியமாகச் சந்தித்துக் கூடி மகிழ்ந்ததை ”இன்றமிழ் இயற்கை இன்பம்” நுகர்ந்தார்கள் எனச் சீவகசிந்தாமணி (பா. 2003,2055,2063) குறிப்பிடுகிறது.

சீவகசிந்தாமணி ஜைன சமயக் காப்பியம் என்பதாலும் சீவகன், சுரமஞ்சரி இருவருமே தமிழர்கள் அல்லர் என்பதாலும் இக்குறிப்பினை சொல்லுக்குச் சொல் அப்படியே பொருள்கொள்வது தவறு என்ற வாதம் எழக்கூடும். ஆனால், சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பு காமவேள் கோட்டம் தமிழகத்தில் பிரபலமாக இருந்துள்ளது என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது. திருவெண்காட்டிலிருந்த சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய நீர்த்துறைகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தில் தொழுகின்ற பெண்டிர் மறுபிறப்பில் போகபூமியில் பிறப்பர் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே நிலவிற்று என்றும், கண்ணகி ஜைன சமயத்தின் சிராவக நோன்பினைப் பின்பற்றிய பெண்ணாகையால் அந்நம்பிக்கையை கெளரவிக்க மறுத்தாள் என்றும் சிலப்பதிகாரத்தால் (1:9:57-64) தெரியவருகின்றன. ஜைன சமயத்தைப் பின்பற்றிய சீவகன் சுரமஞ்சரியாரை மட்டுமே இவ்வகையில் மணம் புணர்ந்தான் என்பதாலும், இப்புணர்ச்சி இன்பம் மட்டுமே இன்றமிழ் இயற்கை இன்பம் என்று சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்படுவதாலும் களவு மணம் என்ற கருத்தோட்டத்துடன் காமன் வழிபாடு தொடர்புடையதே எனத் தெளிவுபெற முடிகிறது.8

காமன் பண்டிகை என்பது இளவேனில் பருவத்தை வரவேற்கின்ற ஒன்றாக அமைந்ததாகும். பின்பனிக் காலம் முடிந்து இளவேனிற் பருவம் தொடங்குவதற்கு அறிகுறியாகப் பங்குனி மாதத்தின் இறுதியில் அல்லது சித்திரை மாதத் தொடக்கத்தில் வசந்த விழா என்ற பெயரில் இவ்விழாவைக் கொண்டாடுவதும இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் வழக்கமாக உள்ளது. வசந்தம் என்ற சொல்லிலிருந்து தோன்றிய வாசந்த, வாசந்தி என்ற சொற்களுக்கு இனிமை, இளமை, குயில், தென்றல், காதல் பேச்சு என்றெல்லாம் பல பொருள்கள் உண்டு9. ”வாசந்தி பேசி மணம் புணர்ந்து” எனத் திருமூலர் தம் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார். வசந்த காலம் என்பது காதலுக்குரிய பருவமாதலால்தான் இத்தகைய காதல் தொடர்பான சொல்லாட்சிகள் மக்கள் வழக்கில் நிலைத்துவந்துள்ளன. வசந்தன் என்ற பெயர் மன்மதனுக்குரியதாகும். ”சித்திரை வசந்தன் வரு செவ்வியுடன்” என்று வில்லிபுத்தூராரின் மகாபாரதத்தில் (சம்பவ. 101) ஒரு குறிப்பு உள்ளது. பனிக்காலத்தின் முடிவும் வசந்த காலத்தின் தொடக்கமுமே மன்மதனுக்குரிய காலமாகக் கருதிக் கொண்டாடப்பட்டன என்பது இதனால் தெரியவருகிறது. இரண்டு வகையான சாந்த்ரமானக் கணக்கீடுகளுள் அமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மாத அமாவாசையை அடுத்த நாளான சுக்லபட்சப் பிரதமையன்று பங்குனி மாதம் தொடங்கிப் பங்குனி அமாவாசையுடன் முடிவடையும். இந்த அமாந்தக் கணக்கீட்டின்படி பங்குனி உத்தரம் என்பது பங்குனி மாதத்தின் இடைப்பகுதியிலேயே வந்துவிடும். பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி மாசி மகத்தையடுத்துப் பூர்வ பால்குன நட்சத்திர நாளன்று, அதாவது கிருஷ்ணபட்சப் பிரதமையன்று தொடங்கும் பங்குனி மாதம் அன்றிலிருந்து முப்பது நாள்கள் நீடித்து உத்தர பால்குன நட்சத்திர நாளன்று (பங்குனி உத்தரத்தன்று) முடிவடையும். இந்தக் கணக்கீட்டின்படி சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தன்று தொடங்கி சித்திரை நட்சத்திரத்தன்று முடியும். எவ்வாறாயினும் உத்தர பால்குன நட்சத்திர நாளில் நிகழ்வதே பங்குனி மாதப் பெளர்ணமி நாளாகும். அன்றுதான் வசந்த விழா கொண்டாடப்பட்டது.

ஊளி விழா அல்லது ஹோளி விழா என்பது சாஸ்திரங்களால் அங்கீகரிக்கப்படாத ஒன்று என்றும், உயர்ந்தோரான மூதாதையர்களால் கொண்டாடப்பட்ட விழா என்பதால் (சாஸ்திரத்தால் அன்றி சிஷ்டாசாரத்தால்) பின்பற்றத்தக்கதே என்றும் இத்தகைய முன்னுதாரணத்தை ”ஹோள அதிகரண நியாயம்” என்று குறிப்பிட்டனர் என்றும் திருப்பாவை அவதாரிகை அரும்பதவுரையால் தெரியவருகின்றன.10

காமனுக்கு அனங்கன் என்றும் பெயருண்டு. சிவன் தவம் செய்துகொண்டிருந்தபோது, அத்தவத்தைக் கலைப்பதற்காகச் சிவன்மீது காதல் உணர்வுகளை ஏற்படுத்தும் கணைகளை மன்மதன் தொடுத்தமையால் தவம் கலைந்த சிவனுடைய நெற்றிக்கண்ணின் கதிர்வீச்சுக்குக் காமன் பலியானான். அதனால் அவனுக்கு அங்கம் (உடல்) இல்லாதவன் என்று பெயர் வந்ததாக விளக்கம் கூறப்படுகிறது. காளிதாசனின் குமாரசம்பவம் இந்த விளக்கத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது11. தமிழ் இலக்கியங்களில் உருவிலி என்ற பெயரால் மன்மதன் குறிப்பிடப்பட்டுள்ளான். காதல் உணர்வு என்பது எவ்வாறு இருபாலார் மனதிலும் விதைக்கப்பட்டு வேர்பிடித்து வளர்கிறது என்பது எளிதில் கணித்துச் சொல்லமுடியாத ஒன்றாக இருப்பதாலும் இத்தகைய உணர்வுக்குக் காரணமான தெய்வத் தத்துவத்தை உருவிலி என்றும் அனங்கன் என்றும் குறிப்பிட்டிருக்கக்கூடும்.

இவ்வாறிருப்பினும், மன்மதன் கணையைப் பற்றிப் பல்வேறு குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. சுறா மீன் அவனுடைய கொடியென்ற குறிப்பு கலித்தொகை (பா 84:23-24)யில் காணப்படுகிறது. காமவேளின் அம்பு இதயத்தை நோக்கி எய்யப்படுவது; இதயத்தை நையச் செய்வது என்ற குறிப்பு கலித்தொகையில் (147:46-47) பின்வருமாறு இடம்பெறுகிறது: ”தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் அன்னவோ காம நின் அம்பு?” இந்த அம்பின் செயல்பாடு என்ன? தான் விரும்புகின்ற மாற்றுப் பாலினத்தாரின் நெஞ்சில் தன்பால் காதலுணர்வினைத் தூண்டி ஏங்கச் செய்தலே இதன் செயல்பாடாகும். “தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டவன் நெஞ்சில் காதல் அம்பினை ஏவுமாறு அதனால் அவன் மடலேறித் தன்னிடம் வரச்செய்யுமாறு காமதேவனின் கால்களைக் கட்டிக்கொண்டு கெஞ்சுவேன்” என ஒரு தலைவி புலம்புகிறாள்: ”பனையீன்ற மா ஊர்ந்து அவன் வரக் காமன் கணை இரப்பேன் கால்புல்லிக் கொண்டு” (கலி. 147:59-60). மடலேறுதல் என்பது நிறைவேறாத காதலால் பித்துப்பிடித்த மனநிலையை அடைந்துவிட்ட ஆடவன் பனைமடலால் குதிரை போலச் செய்து தான் அதில் படுத்துக்கொண்டு சிறுவர்களைக் கொண்டு அந்தப் பனைமடல் குதிரையை வழக்குரைக்கும் மன்றத்துக்கு இழுத்துச் செல்லவைத்து மன்றத்துச் சான்றோர்கள் மூலம் தன் காதல் நிறைவேறுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியாகும். இத்தகைய மடலேறுதல் என்ற செயல்பாடு அதர்வண வேதத்தில் இடம்பெறுகின்ற (“இப்பனை மடலைக் காற்று கிழித்துச் செல்வது போல நான் மனதால் பாவித்துச் செலுத்துகின்ற அம்பு அவளுடைய இதயத்தைக் கிழிக்கட்டும்” என்று குதிரை வடிவக் கடவுளர்களான அஸ்வினி தேவர்களிடம் வேண்டுகின்ற) ஒரு சுலோகத்துடன் ஒப்புமையுடையது என அறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை எழுதியுள்ளார்.

காமவேள் பற்றியும், காமவேள் விழா பற்றியும் இத்தகைய சங்க இலக்கியக் கருத்துகளை அவற்றின் சமூகப் பின்னணியில் வைத்து ஆராய்ந்து புரிந்துகொள்வதற்காகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இன்றைய வணிக மயமான சூழலில் ஃபாஷன் ஷோக்கள், அழகிப் போட்டிகள் போன்றவை எவ்வாறு முதலாளித்துவச் சுரண்டல்வாதிகள் கையிலும் நேர்மையும் நுண்ணுணர்வுமற்ற இடைத்தரகர்களிடத்திலும் சென்றடைந்துவிட்டனவோ அவ்வாறே தனிமனித சுதந்திரம், பெண்ணியம் போன்றவற்றையே மலினப்படுத்துகின்ற பாலுணர்வு அரசியல் போக்கிரிகளின் விளையாட்டுக் கூடமாகக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் மாறிவிடக்கூடிய அவலநிலையே நிலவுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

பின்குறிப்பு: கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று ஒரு நண்பரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. காதலர் தினச் செய்தி அல்ல. கோயம்புத்தூரில் 1998 பிப்ரவரி 14ஆம் தேதியன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பின் நினைவு நாள் என்று நினைவுபடுத்திய குறுஞ்செய்தி அது. இது நம் நாடு; நம்முடைய மண் என்ற உணர்வில் இயல்பாகத் தங்களுடைய பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 60க்கும் மேற்பட்டவர்கள் உடல் வெடித்துச் சிதறி இறந்த குரூரமான நிகழ்வை நினைவுபடுத்துகின்ற வகையில் நண்பர் ஒருவரால் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி அதுவாகும். இக்கொடுமையை நினவுகூர்வதுகூட இந்துத்துவ ஆதரவாகக் கருதப்படுகிற ஒரு சூழலில் இதனை நினைவுபடுத்தவோ அனுதாபம் தெரிவிக்கவோ மத அடிப்படைவாத பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு நாளாக அதனை அனுசரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கவோகூட எந்த ஓர் ஊடகமும் ஆயத்தமாக இல்லாத தமிழகச் சூழலில் இந்நாளை ஒரு சிறுபான்மையினர் நாளாகவாவது அனுசரிக்கலாம் என்ற கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். மத அடிப்படைவாத பயங்கரவாதத்துக்கு எதிராகக் சிறு முனகலாகக் குரல் கொடுப்பவர்களும்கூட தமிழ்ச் சமூகத்தில் மிக மிகச் சிறுபான்மையினராக இருப்பதால் இதனைச் சிறுபான்மை நாளாக அனுசரிப்பது பொருத்தமாக இருக்குமென்ற
ு கருதுகிறேன்.
Back to top Go down
 
காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தமிழ்ச் சங்கம்
» உங்கள் இளமைக் காலத்தில் எச்சரிக்கையாக இருங்கள்!!
»  அமரர் கல்கியின் படைப்புகள் - அலை ஒசை ( 1. தபால்சாவடி )
» பெற்றோரை கவர்வாரா காதலர் ........
» தினம் ஒரு பொன்மொழி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: