BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 போரின் தோல்வி எமது போராட்டத்தின் தோல்வி அல்ல -

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

avatar

Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 32
Location : Vcitoria,Vergin Island

PostSubject: போரின் தோல்வி எமது போராட்டத்தின் தோல்வி அல்ல -   Sun May 23, 2010 4:32 am

போரின் தோல்வி எமது போராட்டத்தின் தோல்வி அல்ல -


இலங்கை: ஈழப் போரில் ஏற்பட்ட தோல்வி எமது போராட்டத்தின் தோல்வி அல்ல என்று
இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் ஈ.சரவணபவன் தமது கன்னியுரையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை
நாடாளுமன்றத்தில் சரவணபவன் ஆற்றிய உரை:

எதிர்பாராத விதமாக இந்
நாட்டின் ஏழு மாவட்டங்களிலும் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக
உயிரிழப்புகள், சொத்திழப்புகள், இடம்பெயர்வுகள் உட்பட பல இன்னல்களுக்கு
முகம் கொடுக்கும் ஏறக்குறைய நான்கு லட்சம் மக்களுக்கு எனது மனப்பூர்வமான
அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் அவர்களுக்கு இயல்பு வாழ்வு வெகுவிரைவில்
திரும்ப வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டு எனது கன்னி உரையை
ஆரம்பிக்கின்றேன்.

தென்னிலங்கை மக்கள் முகங்கொடுக்கும்
அவலங்களுக்காக மனம் நெகிழும் நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எமது
மக்கள் அனுபவித்த அவலங்களையும் இன்றுவரை அவர்கள் அனுபவிக்கும்
துன்பங்களையும் இங்கு நினைவு கூராமல் இருக்கமுடியாது. கடந்த வருடம் இதே
காலப்பகுதியில் நாற்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட எமது மக்கள்
கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் ஊனமுற்றவர்களாக்கப்பட்டனர். ஏராளமானோர்
காணாமற்போயினர். பலகோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இறுதியில்
சுமார் 4 லட்சம் மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டனர்.

அதே வேளையில் பல
ஆயிரம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இப்போரில் தங்கள் உயிர்களை
அர்ப்பணித்த படைவீரர்களுக்காக வெற்றிவாரம் கொண்டாடி அவர்களை நினைவு
கொள்கின்றீர்கள். 18ஆம் தேதியன்று விளக்கேற்றி அவர்களுக்கு அஞ்சலி
செலுத்துகிறீர்கள். நாட்டுக்காக உயிரிழந்தவர்களைப் போற்றுவது ஒரு
முக்கியமான தேசிய கடமையாகும். அதே அஞ்சலியில் நாமும் எம்மை மனப்பூர்வமாக
இணைத்துக்கொள்கிறோம்.

இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் நாம் எமது
மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையை இழந்துள்ளோம். எமது மக்கள் உயிரிழந்த
புதைக்கப்பட்டும் புதைக்கப்படாமலும் சடலங்களாகக் கைவிடப்பட்ட
முள்ளிவாய்க்கால் இன்று தடை செய்யப்பட்ட பிரதேசம். நாம் அங்கு சென்று
அஞ்சலி செலுத்த முடியாது. அது மட்டுமன்றி எமது மக்களின் உரிமைகளுக்காகப்
போராடி உயிர்த் தியாகம் செய்த எமது இளைஞர்களின் கல்லறைகள் இடித்து
நொறுக்கப்பட்டு விட்டன. அவை இருந்த பிரதேசங்கள் முள்வேலியிடப்பட்டு
தடுக்கப்பட்டு விட்டன. அதாவது எமது மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மலர் தூவி
விளக்கேற்றி அஞ்சலிக்கும் உரிமை மறுக்கப்பட்டுவிட்டது.

இத்தகைய எமது
உணர்வுகளை மதிக்காத கொடூரமான பாரபட்ச நடவடிக்கைகள் இந்நாட்டில் நிரந்தர
சமாதானத்தை கொண்டுவர உதவுமா? தமிழ் மக்கள் தாங்கள் அடக்கி ஒடுக்கப்படவில்லை
என்ற உணர்வை ஏற்படுத்த உதவுமா? இந்நாட்டின் சுபீட்சத்தை நோக்கிய பயணத்தில்
எம் இரு தேசிய இனங்களும் கரம் கோர்த்து நடைபயிலத் துணைநிற்குமா?

இக்கேள்விகளைத்
தங்களின் மேலான சிந்தனைக்கு விட்டு விடுகிறேன். நாங்களும் உங்களைப் போன்று
சகல உரிமைகளும் பெற்ற மக்களாக, இந்தத் தேசத்தைக் கட்டி எழுப்பும் பணியில்
இணைந்துகொள்ளும் எங்கள் அபிலாசையை நியாயபூர்வமாகவும் திறந்த மனதுடனும்
பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்.

நியாயபூர்வமான நிரந்தரத்தீர்வு
கிடைக்க வேண்டும் என்று விரும்பினார் பண்டாரநாயக்கா. பிரிட்டிஷ்
ஆட்சிக்காலத்தில் இலங்கைச் சட்டசபையில் சிங்களம் மட்டுமே அரச கருமமொழியாக
இருக்கவேண்டும் எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது தமிழும் சிங்களமும்
ஆட்சிமொழிகளாக இருக்க வேண்டும் எனத் திருத்தம் கொண்டுவந்தவர் மறைந்த
முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யூ.
ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்கள். அதுமட்டுமன்றி இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி
வேண்டும் என அங்கு வாதிட்டவரும் அவரே.

சந்தர்ப்ப வசத்தால் அவர்
1956இல் தனிச் சிங்களச் சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து
நிறைவேற்றியபோதும் தமிழ் மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு மதிப்பளித்து
பண்டா - செல்வா ஒப்பந்தத்தை உருவாக்கினார். துரதிர்ஷ்டவசமாக இனவாதிகள்
கொடுத்த நெருக்கடிகள் காரணமாக அவரே அதைக் கிழித்தெறிய
நிர்ப்பந்திக்கப்பட்டார்.

பண்டா - செல்வா ஒப்பந்தம்
நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாடு சந்தித்து விட்ட பேரவலங்கள்
ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிகழாமல் போயிருக்கும். இந்தச் சின்னஞ்சிறு
தீவு இப்படியான ஒரு கொடிய பெரும் போரை சந்திக்க வேண்டிய தேவை
எழுந்திருக்காது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அவரால்
நிறைவேற்றமுடியாமல் போனாலும், தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான,
நிரந்தரமான ஒரு தீர்வு காணப்படவேண்டும் என்பதை அவர் மனப்பூர்வமாக
விரும்பினார் என்பது வரலாற்றில் மறுக்கமுடியாத ஓர் உண்மையாகும்.

சிறிலங்கா
சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தது உட்பட அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.
பண்டாரநாயக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தோளோடு தோள்நின்று செயற்பட்டவர்
ஜனாதிபதியின் தந்தையார் அமரர் டி.ஏ.ராஜபக்ஷ என்பதை இங்கு தங்களுக்கு
நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அமரர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி
பண்டாரநாயக்கா, ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல்

பாரம்பரியத்தின் வழிவந்த நீங்களும் உங்கள் சகோதரர்களும் ஜனாதிபதியாகவும்,
பொருளாதார அமைச்சராகவும், பாதுகாப்புச் செயலராகவும், சபாநாயகராகவும்
நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய அதிகார பீடங்களில்
வீற்றிருக்கிறீர்கள்.

தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களின் பாரம்பரிய நிலப்பிரதேசம்
அங்கீகரிக்கப்பட்டு, நியாயமான உரிமைகள் வழங்கப்பட்டு ஒரு நிரந்தரமான
ஐக்கியப்பட்ட ஒரு சமாதானத்தை உருவாக்கி தேசத்தை வளங்கொழிக்கும் பூமியாக
மாற்றும் உரிமையும், கடமையும் வேறு எவரையும் விட தங்களுக்கு அதிகமாகவே
உள்ளது. அத்தகைய ஓர் அரியவாய்ப்பை சரியான முறையில் தாங்கள்
பயன்படுத்தவேண்டும் என்பதே எமது பெரு விருப்பமாகும்.

இதுவே ஜனாதிபதி
அவர்களும் இச்சபையின் உறுப்பினர்களும் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர். டி.
பண்டாரநாயக்கா அவர்களுக்கும் தங்கள் தந்தையாருக்கும் ஆற்றும் மிகப்பெரும்
கடமையாகும். மீண்டும் மீண்டும் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்படும்
இனவாத ஒடுக்குமுறைகளும், பாரபட்ச நடவடிக்கைளும் தமிழ் மக்களை இரண்டாம் தரப்
பிரஜைகளாகக் கருதும் மனப்பாங்கும் இந்தப் புனிதமான கடமையைப்
பாழடித்துவிடும் என்பதை தாங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்த
விரும்புகிறேன்.

இன்றைய அரசியலமைப்பு எமது நாட்டுக்குப் பொருத்தமான
முறையில் மாற்றப்படவேண்டும் என்ற கருத்து இன்று மேலோங்கியுள்ளது. நாமும்
இக்கருத்துடன் உடன்படுகிறோம். 1972ஆம் ஆண்டிலும் 1978ஆம் ஆண்டிலும்
நிறைவேற்றப்பட்ட அரசியல் அமைப்புகள் தமிழ்மக்களின் ஒப்புதல் இன்றியே
நிறைவேற்றப்பட்டவையாகும்.

உலகமயமாக்கல் என்ற வலைப்பின்னலுக்கு
வல்லரசுகளுக்கு நிலவும் ஆதிக்கப் போட்டியின் மத்தியிலும் பிராந்திய
வல்லரசின் மேலாதிக்க நோக்கங்களுக்கு இடையிலும் நாம் எமது இறைமையையும்
தனித்துவத்தையும் பேணி நிமிர்ந்து நிற்கும் வகையில் எமது அரசியலமைப்பு
இருக்கவேண்டியது அவசியமாகும். சிங்கள மக்கள் தமது தனித்துவத்தையும்
இறைமையையும் பேணும் வகையிலும் தமிழ்மக்களும் இறைமையையும் சுதந்திரத்தையும்
பாதுகாக்கும் வகையிலும் அமையும் போதே நாம் ஐக்கியப்பட்ட மக்களாக எமது
தேசத்தின் தனித்துவத்தையும் இறைமையையும் நிலைநிறுத்துவது சாத்தியமாகும்.
மீண்டும் மீண்டும் தேசிய இனப்பிரச்சினையை காரணம் காட்டி அந்நிய தேசங்கள்
எமது நாட்டிற்குள் தலையிடுவதைத் தவிர்க்கமுடியும்.

எனவே புதிய
அரசியல் அமைப்பு இவ்விளங்கங்களைக் கருத்தில் எடுத்து வரையப்படும்போது தமிழ்
மக்களின் சார்பில் எமது ஒத்துழைப்பு நிச்சயம் வழங்கப்படும் என்பதை இங்கு
உறுதியாகக் கூறிவைக்க விரும்புகிறேன்.

இப்போரில் ஏற்பட்ட தோல்வி சில
இனவாத சக்திகள் மத்தியில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான ஓர் அலட்சியப்
போக்கை ஏற்படுத்தலாம். இப்போரின் தோல்வியானது எமது போராட்டத்தின்
தோல்வியல்ல. இது போராட்ட வழிமுறை ஒன்றுக்குக் கிடைத்த தோல்வி மட்டுமே
என்பதைக் கூறிவைக்க விரும்புகிறேன்.

அமைச்சர் டி.யூ குணசேகரா
அவர்கள் ஒரு பத்திரிகைப் பேட்டியின் போது கூறியவற்றை இங்கு சுட்டிக்காட்ட
விரும்புகிறேன்.

"பிரபாகரன் தான் பிரச்சினை என்றால் பிரபாகரனின்
இறப்புடன் பிரச்சினை முடிந்திருக்கவேண்டும். ஆனால் முடியவில்லை.
பிரபாகரனுக்கு முன்பும், பிரச்சினை இருந்தது; பின்பும் இருக்கிறது.
பிரபாகரன்கள் பிரச்சினையை உருவாக்குவதில்லை. பிரச்சினைகள்தான் பிரபாகரன்களை
உருவாக்குகின்றன''

எவ்வாறு அவர் பிரபாகரனின் முடிவு பிரச்சினையின்
தீர்வாகிவிடாது என தெளிவுபடுத்துகிறாரோ அவ்வாறே நானும் போரின் முடிவு
என்பதும் பிரச்சினைகளின் தீர்வாகிவிட முடியாது என்பதை இங்கு வலியுறுத்த
விரும்புகிறேன்.

இனியும் போரின் முடிவு ஏற்கனவே இங்கு நிலவிய
இறுக்கமான ஒரு சூழ்நிலையை தளர்த்தியதென்பதையும் சில கெடுபிடிகளை நீக்கின
என்பதையும் நாம் ஒப்புக்கொள்கிறோம். அண்மைக்காலமாக இங்கு நடைபெறும்
சம்பவங்கள் ஒரு பயங்கரசூழலையும் நிம்மதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளமையைச்
சுட்டிக்காட்ட வேண்டியுள்ளேன்.

இன்று வடக்கில் கடத்தல் , கொலை, கப்பம் என்பன ஒரு
தொடரும் அபாயங்களாக உருவாகியுள்ளன. இவை மக்கள் மத்தியில் ஒரு
நம்பிக்கையீனத்தையும் சில அரசியல் சக்திகள் பின்னணியில் இருக்கக்கூடும்
என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எப்படியிருப்பினும் சில
தீயசக்திகள் கையில் இன்னமும் ஆயுதங்கள் இருப்பதே இதற்கான வாய்ப்புக்களை
உருவாக்குகின்றன என்பதை மறுக்கமுடியாது.

எனவே சட்டவிரோதமான
ஆயுதங்கள் அனைத்தும் களையப்படவேண்டும் என்பதை இந்நேரத்தில் எமது மக்களின்
சார்பில் வலியுறுத்த விரும்புகிறேன்.

நாம் இறைமையும் சுதந்திரமும்
உள்ள மக்களாக எங்கள் நியாயமான உரிமைகள் அங்கீகரிக்கப்படும் நிலையில் எமது
தேசத்தின் இறைமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்து சுபீட்சம் நோக்கிய
பாதையில் பயணிக்க உங்களுடன் ஒன்றிணைவோம் எனக் கூறி நிறைவு செய்கிறேன்
என்றார் சரவணபவன்.
Back to top Go down
View user profile http://wwww.myacn.eu
 
போரின் தோல்வி எமது போராட்டத்தின் தோல்வி அல்ல -
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: