BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

avatar

Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 32
Location : Vcitoria,Vergin Island

PostSubject: மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை   Tue May 25, 2010 10:33 pm

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனைமுன்னுரை


நாலைந்து ஆண்டுகளுக்கு முன், என் சுய சரிதையை நான் எழுத வேண்டும் என்று
என் நெருங்கிய சகாக்கள் சிலர் யோசனை கூறியதன் பேரில், நானும் எழுத ஒப்புக்
கொண்டேன்; எழுதவும் ஆரம்பித்தேன். ஆனால், முதல் பக்கத்தை எழுதி
முடிப்பதற்குள்ளேயே பம்பாயில் கலவரம் மூண்டுவிட்டதால் அவ்வேலை தடைப்பட்டு
விட்டது. பிறகு ஒன்றன் பின் ஒன்றாகப் பல சம்பவங்கள் நடந்து எராவ்டாவில் என்
சிறை வாசத்தில் முடிந்தது. அங்கே என்னுடன் கைதியாக இருந்த ஸ்ரீ
ஜயராம்தாஸ், என்னுடைய மற்ற எல்லா வேலைகளையும் கட்டி வைத்துவிட்டுச் சுய
சரிதையை எழுதி முடிக்கும்படி கேட்டுக் கொண்டார். நானோ, சிறையில் பல
நூல்களைப் படிப்பது என்று திட்டமிட்டிருந்தேன். அந்த வேலையை முடிப்பதற்கு
முன்னால் நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை என்று அவருக்குப் பதில்
சொன்னேன். எராவ்டாவில் என் சிறைத் தண்டனைக் காலம் முழுவதையும்
அனுபவித்திருப்பேனாயின் சுயசரிதையையும் எழுதி முடித்தே இருப்பேன். ஆனால்,
அவ்வேலையை முடிப்பதற்கு இன்னும் ஓராண்டுக் காலம் இருந்த போதே நான் விடுதலை
அடைந்து விட்டேன். சுவாமி ஆனந்தர் அந்த யோசனையைத் திரும்ப என்னிடம்
கூறினார். தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக சரித்திரத்தை எழுதி முடித்து
விட்டேனாகையால், சுய சரிதையை "நவஜீவனு"க்கு எழுதும் ஆர்வம் எனக்கு
உண்டாயிற்று. தனி நூலாகப் பிரசுரிப்பதற்கென்றே அதை நான் எழுதவேண்டும் என்று
சுவாமி விரும்பினார். ஆனால், அதற்கு வேண்டிய ஓய்வு நேரம் எனக்கு இல்லை.
வாரத்திற்கு ஓர் அத்தியாயம் வீதமே என்னால் எழுத முடியும். வாரந்தோறும்
'நவஜீவனு'க்கு நான் ஏதாவது எழுதியாக வேண்டும். அப்படி எழுதுவது சுய
சரிதையாக ஏன் இருக்கக் கூடாது? இந்த யோசனைக்குச் சுவாமியும் சம்மதித்தார்;
நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன்.


ஆனால், தெய்வ பக்தியுள்ள ஒரு நண்பருக்கு இதில் சில சந்தேகங்கள்
உண்டாயின. என் மௌன விரத நாளில் அவற்றை அவர் என்னிடம் கூறினார்.
"இம்முயற்சியில் இறங்க நீங்கள் எப்படித் துணிந்தீர்கள்?" என்று அவர்
கேட்டார். "சுய சரிதை எழுதுவது என்பது மேற்கத்திய நாட்டினருக்கே உரிய
பழக்கம். கிழக்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாட்டு நாகரிக வயப்பட்டவர்களைத்
தவிர வேறு யாருமே சுய சரிதை எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
மேலும், நீங்கள் என்னதான் எழுதுவீர்கள்? உங்கள் கொள்கைகள் என்று நீங்கள்
இன்று கொண்டிருப்பவைகளை நாளைக்கு நிராகரித்து விடுகிறீர்கள் என்று வைத்துக்
கொள்ளுவோம், அல்லது, இன்று நீங்கள் வைத்திருக்கும் திட்டங்களை நாளைக்கு
மாற்றிக் கொள்ளுகிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுவோம். அப்போது, நீங்கள்
பேசியவை அல்லது எழுதியவைகளை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்
கொண்டு இருப்பவர்களுக்குத் தவறான வழியைக் காட்டிவிட்டதாக ஆகிவிடாதா?
சுயசரிதை போன்ற ஒன்றை இப்போதைக்காவது எழுதாமலிருப்பது நல்லதல்லவா?" என்று
அவர் கேட்டார்.


இந்த வாதத்தில் ஓரளவு உண்மை இருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆனால்,
உண்மையில் சுயசரிதை எழுதுவது என்பதல்ல என் நோக்கம். நான் நடத்தி
வந்திருக்கும் சத்திய சோதனைகள் பலவற்றின் கதையைச் சொல்லவே விரும்புகிறேன்.
என் வாழ்க்கையிலும் இந்தச் சோதனைகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஆகையால்,
இக்கதை ஒரு சுய சரிதையாகவே அமையும் என்பது உண்மை. ஆனால், அதன் ஒவ்வொரு
பக்கமும் என்னுடைய சோதனைகளைப் பற்றி மாத்திரமே கூறுமானால், அதைக் குறித்து
நான் கவலைப்படமாட்டேன். இந்தச் சோதனைகள் அனைத்தையும் பற்றிய
தொடர்ச்சியானதொரு வரலாறு வாசகர்களுக்குப் பலனளிக்காமற் போகாது என்று
நம்புகிறேன்; அல்லது அந்த நம்பிக்கையுடன் என்னை நானே பாராட்டிக்
கொள்கிறேன். ராஜீயத் துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு
மாத்திரமல்ல, ஓரளவுக்கு 'நாகரிக' உலகத்திற்கும் இப்பொழுது தெரிந்தே
இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத்
தேடித் தந்திருக்கும் 'மகாத்மா' பட்டத்தையும் நான் மதிக்கவில்லை.
அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மன வேதனையையே தந்திருக்கிறது.
அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக
எனக்கு நினைவு இல்லை. ஆனால், ஆன்மிகத் துறையில் நான் நடத்திய சோதனையைப்
பற்றிச் சொல்லவே நிச்சயமாக விரும்புவேன். அவை எனக்கு மாத்திரமே தெரிந்தவை.
ராஜீயத் துறையில் வேலை செய்து வருவதற்கு எனக்கு இருந்து வரும் சக்தியையும்
நான் அதனிடமிருந்தே பெற்றிருக்கிறேன். இந்தச் சோதனைகள் உண்மையிலேயே
ஆன்மீகம் ஆனவைகளாக இருப்பின், இதில் தற்புகழ்ச்சி என்பதற்கே எந்த விதமான
இடமும் இல்லை. அவை என்னுடைய அடக்கத்தையே அதிகமாக்கும். இதுவரை
செய்திருப்பவற்றை நினைத்துப் பார்க்கப் பார்க்க, அவற்றைக் குறித்துச்
சிந்திக்கச் சிந்திக்க, என் குறைபாடுகளையே நான் தெளிவாக உணருகிறேன்.


நான் விரும்புவதும், இந்த முப்பது ஆண்டுகளாக நான் பாடுபட்டு
வந்திருப்பதும், ஏங்கியதும், என்னை நானே அறிய வேண்டும் என்பதற்கும், கடவுளை
நேருக்கு நேராகக் காணவேண்டும் என்பதற்கும், மோட்சத்தை அடைய வேண்டும்
என்பதற்குமே. இந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே நான் வாழ்கிறேன்;
நடமாடுகிறேன். நான் இருப்பதும் அதற்காகவே தான். நான் பேசுவன, எழுதுவன,
ராஜீயத் துறையில் முயற்சி செய்வன ஆகிய யாவும் இக் குறிக்கோளைக் கொண்டவையே.
ஆனால், ஒருவருக்குச் சாத்தியமாவது எல்லோருக்குமே சாத்தியமாகும் என்பதை
நெடுகிலும் நம்பி வந்திருக்கிறேனாகையால், என்னுடைய சோதனைகளை ஒளிவு மறைவாகச்
செய்யாமல் பகிரங்கமாகவே செய்து வந்திருக்கிறேன். இதனால், அவற்றின் ஆன்மிக
மதிப்பு எந்த வகையிலும் குறைந்து விட்டதாக நான் கருதவில்லை. தனக்கும்,
தன்னைப் படைத்த கடவுளுக்கும் மாத்திரமே தெரிந்தவையாக உள்ள சில விஷயங்கள்
உண்டு. அவற்றை ஒருவர் மற்றொருவருக்கு விண்டு சொல்லுவது என்பது
சாத்தியமில்லாத காரியம். நான் சொல்லப் போகும் சோதனைகள் அப்படிப்பட்டவை
அல்ல. ஆனால், அவை ஆன்மீகமானவை; அதைவிடச் சன்மார்க்கமானவை என்றே
சொல்லிவிடலாம். ஏனெனில், சன்மார்க்கமே மதத்தின் சாரம்.


வயது முதிர்ந்தவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் புரிந்து
கொள்ளக்கூடிய மத விஷயங்கள் மாத்திரமே இகக்தையில் சேர்க்கப்படும்.
பாரபட்சமற்ற வகையில், அடக்க உணர்ச்சியோடு அவற்றை நான் விவரிப்பேனாயின்,
இத்தகைய சோதனைகளில் ஈடுபட்டிருக்கும் மற்றும் பலரும் தங்கள்
முன்னேற்றத்திற்கு வேண்டிய ஆதாரங்களை இதில் காண்பார்கள். இச் சோதனைகள்,
குறைகளே இன்றிப் பூரணமானவை என்று நான் சொல்லிக் கொள்ளுவதாக யாரும் கருதிவிட
வேண்டாம். ஒரு விஞ்ஞானி, தம் ஆராய்ச்சிகளை எவ்வளவோ கணக்காகவும் முன்
யோசனையின் பேரிலும், நுட்பமாகவும் நடத்துகிறார். ஆனால், அதன் பலனாகத் தாம்
கண்ட முடிவுகளே முடிந்த முடிவுகள் என்று அவர் கொள்ளுவதில்லை. தாம் அறிந்து
கொள்ளாதவையும் இருக்கக் கூடும் எனக் கருதி, அவற்றையும் தெரிந்து கொள்ளத்
தயாராக இருக்கிறார். அத்தகைய விஞ்ஞானியின் நிலைதான் என் நிலையும். என்னை
நானே ஆழ்ந்து சோதித்து வந்திருக்கிறேன். என்னுள்ளேயே நான் துருவித்
துருவித் தேடிப் பார்க்காத இடமில்லை. என் மனநிலை ஒவ்வொன்றையும் சோதித்து
அலசிப் பார்த்திருக்கிறேன். என்றாலும், நான் கண்ட முடிவுகள் குறையற்றவை.
முடிவானவை என்று சொல்லிக் கொள்ளும் நிலைக்கு நான் வந்து விடவில்லை. ஒன்று
மாத்திரம் சொல்லிக் கொள்ளுகிறேன். அதாவது, அந்த முடிவுகள் முற்றும்
சரியானவையாகவே எனக்குத் தோன்றுகின்றன; இப்போதைக்கு முடிவானவை என்றும்
தோன்றுகின்றன. ஏனெனில், அவை அவ்வாறு தோன்றாது போனால், அவற்றின்
அடிப்படையில் நான் எதையும் செய்ய முடியாது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும்,
ஏற்றுக் கொள்ளுவது அல்லது நிராகரித்து விடுவது என்ற முறையை அனுசரித்து
அதன்படி நடந்தும் வந்திருக்கிறேன். என்னுடைய செயல்கள், என் அறிவுக்கும்
உள்ளத்திற்கும் ஏற்றவையாக இருக்கும் வரையில், நான் என் ஆரம்ப முடிவுகளையே
கடைப்பிடித்தாக வேண்டும்.


கொள்கைகளைப் பற்றிய சித்தாந்தங்களை மட்டுமே விவாதிப்பது என்றால், நான்
சுய சரிதை எழுதும் முயற்சியில் இறங்கியிருக்க வேண்டியதே இல்லை. ஆனால்,
எனது நோக்கமோ, இக் கொள்கைகள் நடைமுறையில் பல வகையிலும் அனுசரிக்கப்பட்டு
வந்திருப்பதன் வரலாற்றைக் கூறுவதாகும். ஆகவே, நான் எழுதப் போகும் இந்த
அத்தியாயங்களுக்கு 'நான் செய்த சத்திய சோதனையின் கதை' என்று தலைப்புக்
கொடுத்திருக்கிறேன். அகிம்சை, பிரம்மச்சரியம் முதலிய ஒழுக்க நெறிகளைப்
பற்றிய சோதனைகளும் இவற்றில் அடங்கியிருக்கும். இந்த ஒழுக்க நெறிகள் வேறு,
சத்தியம் வேறு என்று கருதப்படுகிறது. ஆனால், சத்தியமே தலையாய தருமம், அதில்
மற்றும் பல தருமங்களும் அடங்கி இருக்கின்றன என்று நான் கருதுகிறேன்.
இந்தச் சத்தியம் என்பது உண்மை பேசுவது மாத்திரம் அல்ல; உள்ளத்திலும்
உண்மையோடு இருப்பது என்பதையும் இது குறிக்கும். அத்துடன் நமக்குத் தோன்றும்
சத்தியத்தை மட்டுமின்றி, சுத்த சுயம்புவான சத்தியமும், நித்தியத்துவமான
கடவுளையும் அது குறிக்கும். கடவுளைப் பற்றிய விளக்கங்கள் கணக்கில்
அடங்காதவை. ஏனென்றால், அவர் காட்சி தரும் ரூபங்களும் எண்ணற்றவை.


இவை பற்றி எண்ணும் போது ஆச்சரியத்திலும் அச்சத்திலும் அமிழ்ந்து
விடுகிறேன்; ஒரு கணம் பிரமித்தும் போய்விடுகிறேன். ஆனால், கடவுள் என்றால்
சத்தியம் மாத்திரமே எனக் கருதி நான் வழிபடுகிறேன். அவருடைய தரிசனம் எனக்கு
இன்னும் கிட்டவிலலை. ஆயினும், அவரைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். இம்
முயற்சியில் வெற்றி பெறுவதற்காக, எனக்கு இனியதான எதையுமே தத்தஞ்
செய்துவிடத் தயாராயிருக்கிறேன். என் உயிரையே இதற்காகத் தியாகம் செய்துவிட
வேண்டியிருந்தாலும், அதைக் கொடுக்கவும் நான் தயாராக இருப்பேன் என்றே
நம்புகிறேன். ஆனால், இந்தச் சுத்த சத்திய சொரூபியை நான் அடையும் வரையில்,
எனக்குத் தெரிந்ததாகவுள்ள சாதாரண சத்தியத்தையே நான் பற்றுக் கோடாகக்
கொண்டாக வேண்டும். இதற்கு மத்தியில் இந்தச் சத்தியமே எனக்கு வழிகாட்டும்
ஒளியாகவும், பாதுகாக்கும் கேடயமாகவும், மார்புக் கவசமாகவும் இருந்தாக
வேண்டும். இந்தச் சத்திய வழி, நேரானதாகவும், குறுகலானதாகவும், கத்தி
முனையைப் போல் கூர்மையானதாகவும் இருந்த போதிலும், இதுவே எனக்கு மிகச்
சீக்கிரத்தில் செல்லக்கூடிய, மிக எளிதான வழியாக இருந்து வந்திருக்கிறது.
இவ்வழியிலிருந்து பிறழாமல் நான் கண்டிப்பாக நடந்து வந்திருப்பதால்,
ஹிமாலயம் போன்ற என் பெரிய தவறுகளெல்லாம் கூட எனக்கு அற்பமானவையாகத்
தோன்றுகின்றன. ஏனெனில், இவ்வழியே என்னைத் துன்பங்களிலிருந்து காத்து
வருகின்றது. இதில் என் உள்ளொளிக்கு ஏற்ப நான் முன்னேறிச் சென்றிருக்கிறேன்.
என் முற்போக்கில் சுத்த சத்தியமான கடவுளின் மங்கலான தோற்றங்களை நான்
அடிக்கடி காண்கிறேன்.


மெய்ப்பொருள் அவர் ஒருவரே; மற்றவை யாவும் பொய்யே என்ற திடநம்பிக்கை
நாளுக்கு நாள் எனக்கு வளர்ந்து கொண்டும் வருகிறது. என்னுள் இந்த உறுதி
எவ்விதம் வளர்ந்திருக்கிறது என்பதை விருப்பமுள்ளோர் உணரட்டும்; அவர்களால்
முடிந்தால் சோதனைகளில் பங்கு கொண்டு எனது திடநம்பிக்கையிலும் பங்கு
கொள்ளட்டும். எனக்குச் சாத்தியமானது, ஒரு சிறு குழந்தைக்கும்
சாத்தியமானதாகவே இருக்கும் என்ற மற்றொரு நம்பிக்கையும் என்னுள் வளர்ந்து
வருகிறது. இவ்விதம் நான் கூறுவதற்குத் தக்க காரணங்களும் இருக்கின்றன.
சத்தியத்தை அடைவதற்கான சாதனங்கள் எப்படிக் கஷ்டமானவையோ, அப்படி எளிமையானவை
ஆகவும் இருக்கின்றன. இறுமாப்பைக் கொண்ட ஒருவனுக்கு அவை முற்றும்
சாத்தியமில்லாதவையாகத் தோன்றலாம்; ஆனால் கபடமற்ற ஒரு குழந்தைக்கு அவை
சாத்தியமானவை. சத்தியத்தை நாடிச் செல்பவர், தூசிக்கும் தூசியாகப் பணிவு
கொள்ள வேண்டும். உலகம் தூசியைக் காலின் கீழ் வைத்து நசுக்குகிறது. ஆனால்,
சத்தியத்தை நாடுகிறவரே, அத்தூசியும் நம்மை நசுக்கும் அளவுக்குத் தம்மைப்
பணிவுள்ளவராக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் - அதற்கு முன் அல்ல -
ஒளியைக் கணப்பொழுதாவது காண முடியும். வசிஷ்டருக்கும் விசுவாமித்திரருக்கும்
நடந்த வாக்குவாதம் இதை மிகத் தெளிவாக்குகிறது. கிறிஸ்தவமும், இஸ்லாமும்
கூட இதை நன்கு எடுத்துக் காட்டுகின்றன.


இப்பக்கங்களில் நான் எழுதப் போவதில் ஏதாவது ஒன்று தற்பெருமையோடு
கூறப்பட்டது போல் வாசகருக்குத் தோன்றுமாயின், என் சத்தியத் தோட்டத்தில் ஏதோ
கோளாறு இருக்கிறது என்றும், எனக்குத் தோன்றும் காட்சிகளும் கானல் நீரைப்
போன்றவையே ஒழிய உண்மையானவை அல்ல என்றும் தான் அவர் கொள்ள வேண்டும். என்னைப்
போன்றவர்கள் நூற்றுக் கணக்கில் அழிந்தாலும் சரி, சத்தியம் நிலைக்கட்டும்.
தவறே இழைக்கவல்ல என் போன்றவர்களின் தன்மையைக் கண்டறிவதற்காக, சத்தியத்தின்
பெருமையை மயிரிழையும் குறைத்து விடாமல் இருப்போமாக.

இனி வரும் அத்தியாயங்களில் ஆங்காங்கே காணப்படும் புத்திமதிகள் அதிகார
பூர்வமானவை என யாரும் கருதி விட மாட்டார்கள் என்றே நம்புகிறேன். அப்படிக்
கருதி விடக்கூடாது என்பதே என் பிரார்த்தனையுமாகும். கூறப்பட்டிருக்கும்
சோதனைகளை உதாரணங்கள் என்றே கொள்ள வேண்டும். அவற்றை அனுசரித்து ஒவ்வொருவரும்
தத்தம் நோக்கப்படியும் தகுதிக்கேற்றவாரும் சொந்தச் சோதனைகளை
மேற்கொள்ளலாம். இந்தக் குறிப்பிட்ட அளவு வரையில் இந்த உதாரணங்கள் உண்மையில்
பயனுள்ளவையாகும் என நம்புகிறேன். ஏனெனில், சொல்லியாக வேண்டிய ஆபாசமான
விஷயங்களைக் கூட நான் மறைக்கப் போவதில்லை; குறைத்துக் கூறப்போவதில்லை.
என்னுடைய எல்லாக் குற்றங்களையும், தவறுகளையும் வாசகருக்கு அறிவிப்பேன்
என்றே நம்புகிறேன். என் நோக்கம், சத்தியாக்கிரக சாத்திரத்தில் நடத்திய
சோதனைகளை விவரிப்பதேயன்றி, நான் எவ்வளவு நல்லவன் என்பதைச் சொல்லுவது அன்று.
என்னுடைய நன்மை, தீமைகளை மதிப்பிடுவதில் சத்தியத்தைப் போல அதிகக்
கண்டிப்பாக இருக்கவே நான் முயல்வேன். மற்றவர்களும் அவ்விதமே இருக்க
வேண்டுமென்று விரும்புகிறேன். அந்த அளவுகோலைக் கொண்டு என்னை நானே
அளவிடும்போது, சூரதாஸ் என்னும் பக்தர் பாடியது போல நானும், 'என்னைப் போல்
கொடிய, வெறுக்கத்தக்க பாவி வேறு எவர் உண்டு? படைத்த பிரமனையே மறந்திடும்
நன்றி கெட்டவன் ஆனேன் நான்!' என்று கதற வேண்டும். ஏனெனில் என் வாழ்வின்
ஒவ்வொரு சுவாசத்தையுமே பரிபாலிப்பவனும், என்னை ஈன்றெடுத்தவனுமான
ஆண்டவனுக்கு இன்னும் வெகுதொலைவிலேயே நான் இருந்து வருவது எனக்கு இடையறாத
சித்திரவதையாக இருக்கிறது. என்னுள் இருக்கும் தீய குணங்களே என்னை
அவனுக்குத் தொலை தூரத்தில் கொண்டு வந்து வைத்திருக்கின்றன என்பதை நான்
அறிவேன். என்றாலும், அவற்றிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை.
முன்னுரையை இங்கு நான் முடிக்க வேண்டும். அடுத்த அத்தியாயத்திலிருந்து என்
கதையைத் தொட்ங்குவேன்.


-மோ. க. காந்தி

ஆசிரமம், சபர்மதி.
26, நவம்பர், 1925
Back to top Go down
View user profile http://wwww.myacn.eu
Fréédóm Fightér

avatar

Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 32
Location : Vcitoria,Vergin Island

PostSubject: சத்திய சோதனை முதல் பாகம்   Tue May 25, 2010 10:37 pm

சத்திய சோதனைமுதல் பாகம்1. பிறப்பும் தாய்தந்தையரும்

காந்தி வம்சத்தினர் வைசிய குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆதியில் மளிகை
வியாபாரிகளாக இருந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால் என் தாத்தா
காலத்திலிருந்து மூன்று தலைமுறைகளாக கத்தியவாரிலுள்ள சுதேச சமஸ்தானங்கள்
பலவற்றில் முதன் மந்திரியாக இருந்திருக்கின்றனர். ஓதா காந்தி என்ற உத்தம
சந்திரகாந்தி, என்னுடைய பாட்டனார். தாம் கொண்ட கொள்கையில் மிக்க
உறுதியுடையவராக அவர் இருந்திருக்க வேண்டும். அவர் போர்பந்தரில் திவானாக
இருந்தார். ராஜாங்கச் சூழ்ச்சிகளினால் அவர் போர்பந்தரை விட்டுப்போய்
ஜூனாகட்டில் அடைக்கலம் புக நேர்ந்தது. அங்கு அவர் நவாபுக்கு இடது கையினால்
சலாம் செய்தார். மரியாதைக் குறைவான அச்செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த
ஒருவர், அப்படிச் செய்ததற்குக் காரணம் கேட்டதற்கு என் வலக்கரம் முன்பே
போர்பந்தருக்கும் அர்ப்பணம் செய்யப்பட்டுவிட்டது என்றார் உத்தம சந்திர
காந்தி.


ஓதா காந்திக்கு மனைவி இறந்துவிடவே இரண்டாம் தாரம் மணந்து கொண்டார்.
மூத்த மனைவிக்கு நான்கு குழந்தைகள், இரண்டாம் மனைவிக்கு இரு பிள்ளைகள். ஓதா
காந்தியின் இப்பிள்ளைகளெல்லாம் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகளல்ல என்று என்
குழந்தைப் பிராயத்தில் நான் உணர்ந்ததுமில்லை, அறிந்ததுமில்லை. இந்த ஆறு
சகோதரர்களில் ஐந்தாமவர் கரம்சந்திர காந்தி என்ற கபா காந்தி; ஆறாம் சகோதரர்
துளசிதாஸ் காந்தி. இவ்விரு சகோதரர்களும் ஒருவர் பின் மற்றொருவராகப்
போர்பந்தரில் பிரதம மந்திரிகளாக இருந்தனர். கபா காந்தியே என் தந்தை.
ராஜஸ்தானிக மன்றத்தில் இவர் ஓர் உறுப்பினர். அந்த மன்றம் இப்பொழுது இல்லை.
ஆனால், அந்தக் காலத்தில் சமஸ்தானாதிபதிகளுக்கும் அவர்களுடைய
இனத்தினருக்கும் இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைப்பதில் இந்த
மன்றம் அதிகச் செல்வாக்குள்ள ஸ்தாபனமாக விளங்கியது. என் தந்தை ராஜ்கோட்டில்
கொஞ்ச காலமும் பிறகு வாங்கானேரிலும் பிரதம மந்திரியாக இருந்தார். இறக்கும்
போது ராஜகோட் சமஸ்தானத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று வந்தார்.


ஒவ்வொரு தரமும் மனைவி இறக்க, கபா காந்தி நான்கு தாரங்களை மணந்தார்.
அவருடைய முதல் இரண்டு மனைவிகளுக்கும் இரு பெண் குழந்தைகள் அவருடைய கடைசி
மனைவியான புத்லிபாய், ஒரு பெண்ணையும் மூன்று ஆண் குழந்தைகளையும்
பெற்றெடுத்தார். நானே அதில் கடைசிப் பையன். என் தந்தையார் தம்
வம்சத்தாரிடம் அதிகப் பற்றுடையவர்; சத்திய சீலர்; தீரமானவர்; தயாளமுள்ளவர்.
ஆனால், கொஞ்சம் முன் கோபி. அவர் ஓர் அளவுக்கு சிற்றின்ப உணர்ச்சி
மிகுந்தவராகவும் இருந்திருக்க கூடும். ஏனெனில், தமக்கு நாற்பது வயதுக்கு
மேலான பிறகே அவர் நான்காம் தாரத்தை மணந்து கொண்டிருந்தார். ஆனால், எதனாலும்
அவரை நெறிதவறி விடச் செய்துவிட முடியாது. தமது குடும்ப விஷயத்தில்
மட்டுமின்றி வெளிக் காரியங்களிலும் பாரபட்சமின்றி நடந்து கொள்ளுவதில்
கண்டிப்பானவர் என்று புகழ் பெற்றவர். சமஸ்தானத்தினிடம் அவருக்கு இருந்த
அளவு கடந்த விசுவாசம் பிரபலமானது. தம் சமஸ்தானாதிபதியான ராஜகோட் தாகூர்
சாஹிபை ஒரு சமயம் உதவி ராஜிய ஏஜெண்டு அவமதித்துப் பேசிவிடவே, அதைக் கபா
காந்தி ஆட்சேபித்துக் கண்டித்தார். உடனே ஏஜெண்டுக்குக் கோபம் வந்துவிட்டது.
மன்னிப்பு கேட்டுக் கொள்ளும்படி கபா காந்தியிடம் கேட்டார். அப்படி
மன்னிப்புக் கேட்க மறுத்து விடவே அவரைச் சில மணி நேரம் காவலில்
வைத்துவிட்டனர் என்றாலும் மன்னிப்புக் கேட்பதில்லை என்று கபா காந்தி
உறுதியுடன் இருப்பதை ஏஜெண்டு கண்டதும் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.


பணம் திரட்ட வேண்டும் என்ற ஆசை என் தந்தைக்கு என்றுமே இருந்ததில்லை.
மிகக் கொஞ்சமான சொத்தையே எங்களுக்கு அவர் வைத்துவிட்டுப் போனார்.


அனுபவத்தைத் தவிர அவருக்குப் படிப்பு ஒன்றும் இல்லை. அதிகப்பட்சம்
குஜராத்தி ஐந்தாம் வகுப்பு வரையில் படித்திருந்தார் என்றே சொல்லலாம்.
சரித்திரம், பூகோள சாத்திரம் ஆகியவை பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது.
ஆனால், நடைமுறைக் காரியங்களில் அவருக்கு இருந்த சிறந்த அனுபவம், அதிகச்
சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், நூற்றுக் கணக்கானவர்களை வைத்து
நிர்வகிப்பதிலும், அவருக்குத் திறமையை அளித்தது. சமயத்துறையிலும் அவருக்கு
இருந்த பயிற்சி மிகக் கொஞ்சம். ஆனால், அடிக்கடி கோயில்களுக்குப் போவதாலும்,
சமயப் பிரசங்கங்களைக் கேட்பதாலும் அநேக ஹிந்துக்களுக்குச் சாதாரணமாக என்ன
சமய ஞானம் உண்டாகுமோ, அது அவருக்கும் இருந்தது. குடும்பத்தின் நண்பரான
படித்த பிராமணர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் அவர் தமது கடைசிக் காலத்தில்
கீதையைப் படிக்க ஆரம்பித்தார். தினந்தோறும் பூஜை செய்யும் போது
கீதையிலிருந்து சில சுலோகங்களை அவர் வாய்விட்டுப் பாராயணம் செய்வதுண்டு.என் தாயாரைப் பற்றி நான் நினைக்கும் போது முக்கியமாக அவருடைய தவ ஒழுக்கமே
என நினைவுக்கு வருகிறது. அவர் மிகுந்த மதப்பற்றுக் கொண்டவர். தாம் செய்ய
வேண்டிய அன்றாட பூஜையை முடிக்காமல் அவர் சாப்பிட மாட்டார். அவருடைய
நித்தியக் கடமைகளில் ஒன்று, விஷ்ணு கோயிலுக்குப் போய்த் தரிசித்துவிட்டு
வருவது. ஒரு தடவையேனும் சாதுர் மாச விரதத்தை அனுசரிக்க அவர் தவறியதாக
எனக்கு ஞாபகம் இல்லை. அவர் கடுமையான விரதங்களையெல்லாம் மேற்கொள்ளுவார்.
அவற்றை நிறைவேற்றியும் தீருவார். நோயுற்றாலும் விரதத்தை மாத்திரம்
விட்டுவிடமாட்டார். சாந்திராயண விரதமிருந்த போது அவர் நோயுற்றிருந்தது
எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், விரதத்தை விடாமல் அவர் அனுஷ்டித்து
முடித்தார். தொடர்ந்து இரண்டு மூன்று உபவாச விரதங்கள் இருப்பதென்பதும்
அவருக்குப் பிரமாதம் அல்ல. சாதுர்மாச காலத்தில் ஒரு வேளை ஆகாரத்தோடு
இருப்பதும் அவருக்குப் பழக்கம். அது போதாதென்று ஒரு சாதுர்மாசத்தின் போது
ஒன்றுவிட்டு ஒரு நாள் உபவாசம் இருந்து வந்தார். மற்றொரு சாதுர்மாச
விரதத்தின் போது சூரிய தரிசனம் செய்யாமல் சாப்பிடுவதில்லை என்று விரதம்
கொண்டிருந்தார். அந்த நாட்களில் குழந்தைகளாகிய நாங்கள் வெளியில் போய்
நின்றுகொண்டு, சூரியன் தெரிந்ததும் தாயாரிடம் போய்ச் சொல்லுவதற்காக
ஆகாயத்தைப் பார்த்தபடியே இருப்போம். கடுமையான மழைக்காலத்தில் அடிக்கடி
சூரியபகவான் தரிசனமளிக்கக் கருணை கொள்ளுவதில்லை என்பது எல்லோருக்கும்
தெரிந்ததே. சில நாட்களில் திடீரென்று சூரியன் தோன்றுவான், தாயாருக்கு இதைத்
தெரிவிப்பதற்காக ஓடுவோம். தாமே தரிசிப்பதற்காக அவர் வெளியே ஓடி வந்து
பார்ப்பார். ஆனால் சூரியன் அதற்குள் மறைந்து, அன்று அவர் சாப்பிட
முடியாதபடி செய்துவிடுவான். "அதைப்பற்றிப் பரவாயில்லை" என்று மகிழ்ச்சியோடு
தான் தாயார் கூறுவார். "நான் இன்று சாப்பிடுவதை பகவான் விரும்பவில்லை"
என்பார். பின்னர் வீட்டுக்குள் போய்த் தம் அலுவல்களைக் கவனித்துக்
கொண்டிருப்பார்.


என் தாயாருக்கு அனுபவ ஞானம் அதிகமாக உண்டு. சமஸ்தானத்தைப் பற்றிய
விவகாரங்களெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடைய புத்திக்
கூர்மைக்காக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அவரிடம் அதிக மதிப்பு
வைத்திருந்தார்கள். நான் குழந்தை என்ற சலுகையை வைத்துக் கொண்டு அடிக்கடி
என் தாயாருடன் அரண்மனைக்குப் போயிருக்கிறேன். தாகூர் சாஹிபின் விதந்துவான
தாயாருடன் என் தாயார் உற்சாகத்தோடு விவாதித்ததெல்லாம் எனக்கு இன்னும்
நினைவிருக்கிறது.


இந்தப் பெற்றோருக்குச் சுதாமாபுரி என்று கூறப்படும் போர்ப்பந்தரில்
1869, அக்டோபர் 2-ஆம் தேதி நான் பிறந்தேன். குழந்தைப் பருவத்தில்
போர்பந்தரிலேயே இருந்தேன. அங்கே என்னைப் பள்ளிக்கூடத்தில் வைத்தது எனக்கு
நினைவிருக்கிறது. கொஞ்சம் சிரமத்தின் பேரில்தான் பெருக்கல் வாய்ப்பாட்டை
நெட்டுருப் போட்டேன். மற்றச் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு எங்கள்
உபாத்தியாயரை ஏளனம் செய்து திட்டக் கற்றுக் கொண்டேன் என்பதைத் தவிர அந்த
நாட்களைக் குறித்து வேறு எதுவுமே எனக்கு நினைவில்லை. இதிலிருந்து அப்பொழுது
நான் மந்தபுத்தியுள்ளவனாக இருந்தேன் என்றும், எனக்கு ஞாபகசக்தி போதாமல்
இருந்தது என்றும் யூகிக்க முடிகிறது.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Back to top Go down
View user profile http://wwww.myacn.eu
 
மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: