BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 கூச்சம் தவிர்

Go down 
AuthorMessage
lakshana

avatar

Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 30
Location : india, tamil nadu

PostSubject: கூச்சம் தவிர்   Fri Jun 25, 2010 6:36 am

கூச்சம் தவிர்ப்பது எப்படி? ஆளுமை வள்ர்க்க தோழமை டிப்ஸ்
.

‘கூச்சம் தவிர்’, ‘சந்திப்பு தவறேல்’ ஆத்தி சூடியை ரீ-மிக்ஸினால் இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும். காரணம், இன்று இளைஞர்களை அதட்டி மிரட்டி உருட்டும் அசுரன்… கூச்சம்!

‘கூச்ச சுபாவமே எனது கேடயம்!’ என்றார் மகாத்மா காந்தி. அன்று அவருக்குக் கேடயமாக இருந்த விஷயம், இன்று இளைஞர்களுக்குத் தடையாக இருக்கிறது. கை குலுக்குவதில் இருந்து மைக் பிடிப்பது வரை, இன்று பல பதின்பருவத் தினரைக் கூச்சம்தான் ஆட்டிப் படைக்கிறது. கூச்ச சுபாவத்தினால் இளைஞர்கள் இழக்கும் வாய்ப்புகள், சந்திக்கும் பிரச்னைகள் என்ன? இதில் இருந்து மீண்டு வருவது எப்படி?

பொதுவாக, கூச்சம் என்பது அறிமுகம் இல்லாத வரிடம் ஆறு முதல் எட்டு நிமிடங்கள் வரையும், அறிமுகமானவர்களிடம் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரையும் நீடிப்பதாகச் சொல்கின்றன மனநல ஆய்வுகள். அந்த நிமிடங்களைத் தைரிய மாகத் தாண்டிவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த நேரத்தைச் சாதகமாக மாற்றத் தெரியாவிட்டால் அதுவே உங்களுக்குப் பாரமாகி விடும். உங்களின் கூச்சத்துக்கு நீங்கள் மட்டும்தான் முழுமுதற் காரணம். ஏனெனில், பிறக்கும்போதே கூச்ச சுபாவத்துடன் யாரும் பிறப்பது இல்லை. ‘கூச்சம் என்பது ஒருவகையில் பலர் தங்களின் சௌகர்யத்துக்காக அவர்களே வளர்த்துக்கொள்ளும் ஒரு குணம்’ என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர் கள். ‘மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டும், கருணையாகப் பார்க்க வேண்டும்’ என்று உள்ளுக்குள் வேண்டி விரும்பியே பலர் கூச்ச சுபாவத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். பின்னா ளில் அதுவே அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகவும் வந்து நிற்கிறது. ஏனெனில், கூச்சம் கொஞ்ச நாளில் பயமாக மாறிவிடும். நீங்கள் பயந்து ஒதுங்கும்போது, உங்கள் மேல் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அப்புறம் எப்படி ஜெயிப்பீர்கள்?

”ஒருமுறை என்னிடம் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவன் ஒருவனை அழைத்து வந்தார்கள். அவனைச் சோதித்தபோது, கடுமையான மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவனது பெற்றோரிடம் விசாரித்தேன். ‘இவன் யாரிடமும் பேசுவதற்கு அவ்வளவு கூச்சப்படுவான். பக்கத்து வீட்டுக்காரர்களிடம்கூடப் பேச மாட்டான். ‘அமைதியான பையன்… தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கிறான்’ என்று நினைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களிடம் பேசுவதைக்கூடக் குறைத்துவிட்டான். இப்போது எங்களிடமும் பேசுவது இல்லை. அறைக்குள்ளேயே அடைந்துகிடக்கிறான். அறைக்குள் இருந்து தானாக முணுமுணுக்கும் சத்தம் மட்டும் கேட்கிறது’ என்று கண்கலங்கினார்கள்.

அவனைத் தனிமையில் விசாரித்தபோது,’எல்லோ ரிடமும் நல்ல பையன்னு பேர் எடுத்துவெச்சிருக்கேன். நான் ஏதாவது தப்பா பேசி, மத்தவங்க என்னைப் பத்தி தப்பா நினைச்சிருவாங்களோன்னு பயமா இருக்கு. அதனால, யார்கிட்டேயும் நான் பேசுறது இல்லை’ என்றான். நண்பர்களோ, பெற்றோர்களோ பேசும்போது தன்னைப்பற்றி ஏதாவது பேசுகிறார்களா என்று ஒட்டுக்கேட்பது என்று அவனது கூச்சம் தயக் கமாக மாறி, சந்தேகப் புத்தியாக உருவெடுத்து இருந் தது. ஒரு வருட தீவிரப் பயிற்சிக்குப் பின் அவனை இயல்பான, துடிதுடிப்பான பையனாக மாற்றினோம்” என்கிறார் மனநல மருத்துவர் சி.ஆர்.எஸ்.

சின்ன தயக்கம், நமக்குள் இருக்கும் திறமையை நாம் உணராதபடி செய்துவிடுகிறது. திறமைகள் இருந்தும் சிலர் தோற்றுப் போவதற்குக் கூச்சமே முதல் காரணம். ‘சிரமம் இன்றி எதுவும் இல்லை, சிரமம் என்பது எதுவும் இல்லை’ என்பதை உணர்ந்து, தங்களுக்குள் ஏற்பட்ட தயக்கத்தைத் தாண்டி தங்களுக்குள் தங்களைக் கண்டுபிடித்தவர்களின் அனுபவங்கள் இவை.

நடனம், மிமிக்ரி எனப் பல கலைகளில் அசத்துபவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிவகார்த்திகேயன். தற்போது நேரலை நிகழ்ச்சிகளில்கூட டைமிங் காமெடிகளில் வெளுத்துக் கட்டுபவருக்கு, சின்ன வயதில் மைக்பிடித்தாலே கை நடுங்கும் என்றால் நம்புவீர்களா?

”மேடை, மைக்கைப் பார்த்தாலே தடதடன்னு கை, கால் உதற ஆரம்பிச்சிடும். அவ்வளவு ஏன்… சுத்தி 10 பேர் நின்னாலே பயந்துருவேன். நாலு பேர் கைதட்டுற மாதிரி வாழணும்னு கனவு மட்டும் இருந்தது. ஆனா, அதைவிட அதிகமா பயம் இருந்தது. எனக்கு நெருக்கமான, கிண்டல் பண்ணாத 10 நண்பர்களைத் தேர்ந்தெடுத்து, என் முன்னாடி உட்காரச் சொல்வேன். விதவிதமா டான்ஸ் ஆடி, மிமிக்ரி பண்ணிக் காட்டினேன். அவங்க கிண்டல் அடிக்காம சரியா விமர்சனம் பண்ணி என் தவறுகளைத் திருத்தினாங்க. நேரம் கிடைக்கும்போது எல்லாம் கண்ணாடி முன்னாடி நின்னு பயிற்சி எடுத்தேன். கண்ணாடியில நம்ம கண்ணை நேருக்கு நேர் பார்த்துப் பேசும்போது, கூச்சம் இருக்கிற இடம் தெரியாமப் போயிரும். அந்தப் பயிற்சி கொடுத்த தைரியத்தில் 1,500 மாணவர்கள் கூடியிருந்த ஸ்டேஜில் டான்ஸ் ஆடினேன். பயங்கர அப்ளாஸ். கூச்சம் இருந்தா திறமையை மறந்திருங்க. திறமையை வெளிப்படுத்தணும்னா, கூச்சத்தை மறந்திருங்க!” என்று சிரிக்கிறார் சிவகார்த்திகேயன்.

தனிமையில் இருந்தபடி செல்போன் எஸ்.எம்.எஸ், ஆர்குட், ஃபேஸ்புக் என எலெக்ட்ரிக் சாதனங்கள் மூலமாகவே மற்றவர்களுடனான தொடர்புகளை முடித்துக் கொள்கிறார்கள். திடீரென்று நேரில் அவர்களைச் சந்திக்கும்போது, தனிமை தரும் சௌகர்யத்தை உணர முடியாமல் கூச்சத்தால் நெளிகிறார்கள் பலர். அந்தப் பழக்கம் நம் அடிமனதில் பதிந்துவிடக் கூடாது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

நல்ல நிலையில் இருக்கும் மனிதர்களையே கூச்சம் முடக்கிப் போட்டுவிடும். அப்படியென்றால் மாற்றுத் திறனாளிகளின் கதி?

‘கூச்சம் ஒரு வியாதி’ என்பதைக் கண்டுபிடித்து அதை அடியோடு அழித்து வெற்றிக் கொடி நாட்டியவர் ரேடியோ மிர்ச்சி ஜாக்கி ‘சேட்டை’ சேது.

”17 வயசு வரைக்கும் எங்கேயும் தவழ்ந்துதான் போவேன், வருவேன். மத்தவங்க என்னைப் பரிதாபமா பார்த்துப் பார்த்தே எனக்குக் கூச்சமும், தயக்கமும் வந் திருச்சு. எவ்வளவு நாள்தான் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க முடியும்? ஒரு சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குப் போயிருந்தேன். ‘உங்களால எப்படி இந்த வேலை பார்க்க முடியும்?’னு கேட்டாங்க. ‘சரி… நான் செய்ற மாதிரி வேலை எதுவும் காலி இருக்கா’ன்னு கேட்க நினைச்சு, கூச்சப்பட்டு கேட்காமலே வந்துட்டேன். மறு நாள் அதே கம்பெனி லிஃப்ட் ஆபரேட்டர் வேலைக்கு ஒரு மாற்றுத் திறனாளியைத் தேடிட்டு இருந்த விஷயமும், வேற ஒருத்தரை அந்த வேலைக்கு நியமிச்ச விஷயமும் கேள்விப்பட்டேன். என் கூச்சத்தால் கை நழுவிப்போன முதல் வாய்ப்பு!

சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில தற்காலிகப் பணியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். ஆண்டு விழா வந்தது. ‘கம்பெனியில் வேலை பார்க்கும் ஒவ்வொ ருத்தரும் கட்டாயம் ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் பண்ண ணும்’னு சொல்லிட்டாங்க. சின்ன வயசில் இருந்து கூச்சத்தால் நான் பொத்திவெச்சிருந்த பேச்சுத் திறமையைக் காட்ட ஒரு வாய்ப்பு. கூச்சத்தைத் தூக்கி எறிஞ்சு களத்தில் இறங்கினேன். எல்லோரும் சின்ட்ரெல்லா, ஆலிவர் ட்விஸ்ட்டுனு இங்கிலீஷ் நாடகங்கள் போட்டுப் பொளந்து கட்டிட்டு இருந்தாங்க. ‘பாரதியார் இப்ப உயிரோடு ஊருக்குள் வந்தா எப்படி இருக்கும்?’னு பக்கா லோக்கலா காமெடி ஸ்க்ரிப்ட் எழுதி, ஸ்டேஜில் ஏறி நடிச்சு முடிச்சப்போ பயங்கர ஆரவாரம். கூச்சத்தை மறந்தா, இத்தனை கைதட்டல்கள் காத்திருக்கான்னு ஆச்சர்யமா இருந்தது. இன்னிக்கு வரைக்கும் எனக்குக் கிடைக்கிற ஒவ்வொரு கைதட்டலுக்கும் அந்தச் சம்பவம்தான் ஆதாரம். வாழ்க்கையில தப்பு செய்ய மட்டும் கூச்சப் படுங்க. மத்த விஷயங்களில் கூச்சத்தைக் கண்டுக்காதீங்க!” என்கிறார் பூரிப்போடு.

முதன்முதலாக சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே ‘மா’ என்ற திரைப்படத்தினை இயக்கி இருக்கிறார் மாற்றுத் திறனாளி பாத்திமா பீவி. இவர் தன் வாழ்க்கையில் தாண்டவமாடிய கூச்சத்தை எதிர்கொண்ட விதத்தினை விவரித்தார். ”சாதாரணமான மனிதர்களைவிட எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் இரண்டு மடங்கு அதிகமான கூச்சத்தையும் அவமானங்களையும் தாண்டி வரணும். மதுரையில் பள்ளிக்கும் கல்லூரிக்கும் நான் தவழ்ந்துதான் செல்வேன். சில வேளைகளில் ரிக்ஷாவில் செல்வேன். பள்ளிக்குள் இறங்கும்போது எல்லோரும் என்னைப் பரிதாபமாகப் பார்ப்பார்கள். அதுவே எனக்குக் கூச்சத் தையும், தாழ்வுமனப்பான்மையையும் உருவாக்கியது.

பொது இடங்களில் எப்போதும் மற்றவர்களின் கால்களுக்கு இடையே தவழ்ந்து செல்ல வேண்டும். அதனாலேயே வெளியில் செல்லாமல் முடங்கிக்கிடந்தேன். பள்ளியில் எல்லோரும் விளையாடப் போகும்போது, ஆர்வமாக நானும் கிளம்புவேன். மாணவிகள் சிரித்துவிடுவார்களோ என்கிற தயக்கத்தில் அமைதியாக இருந்துவிடுவேன். அப்படிக் கூட்டுப் புழுவா சுருங்கியிருந்த என்னை, தலை நிமிர்த்தி வெளியே எட்டிப் பார்க்க வெச்சது புத்தகங்கள்தான். தன்னம்பிக்கைப் புத்தகங்கள்தான் எனக்குத் தைரியத்தைக் கொடுத்தது. இலக்கியப் புத்தகங்கள் எனக்கு உலகத்தைப்பற்றிய பார்வையை விரிவுபடுத்தியது. அதற்கடுத்து, என் குறை எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

இயக்குநர் பயிற்சி பெறும்போது, வகுப்பறை இரண்டாவது மாடியில் இருந்தது. நான் மாடிப்படியில் தவழ்ந்து செல்லும்போது ஏளனமாகப் பார்ப்பார்கள். அதை எல்லாம் நான் பொருட்படுத்துவது இல்லை. பேச்சு, நடனம், திரைக்கதை, வசனம், கதை என்று இயக்குநர் பயிற்சிக்காகவைத்த தேர்வுகளில் எல்லாம் எனக்குத்தான் முதல் மதிப்பெண். அதற்கடுத்து, அவர்களின் கேலிப் பார்வை மரியாதையாக மாறிவிட்டது. வெற்றிகளை உங்கள் அடையாளமாகவைத்திருங்கள். கூச்சத்தை அல்ல!” என்கிறார் உற்சாகமாக.

உள் மனதில் விஷமாக ஊடுருவிப் பரவும் கூச்சத்தை எப்படி எதிர்கொள்வது? பதில் சொல்கிறார் மனநல மருத்துவர் செந்தில்வேலன். ”கரூர் அருகே கிராமத்தில் இருந்து நகரத்துக்குச் சென்று பொறியியல் படிப்பு முடித்தவன் அவன். செமஸ்டர் தேர்வுகளில் 90 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தவன். நல்ல திறமைசாலி. பெரிய அளவில் பிரகாசிப்பான் என்று அவனது நண்பர்கள் கனவோடு இருந்தார்கள். ஆனால், அவனால் ஒரு சின்ன வேலைக்குக்கூடச் செல்ல முடியவில்லை. ஏனெனில், நேர்முகத் தேர்வுகளில் கேள்வி கேட்டாலே டென்ஷனாகிவிடுவான். பதில் தெரியும். ஆனால், சொல்லத் தெரியாது. அல்லது சொல்ல வராது. ஒரு வார்த்தை பேசுவதற்குள் வியர்த்து வெலவெலத்துவிடுவான். இதனால் நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்வதையே தவிர்க்க ஆரம்பித்தான். கடைசியில், அருகில் இருந்த ஒரு பொறியியல் கல்லூரியில் 3,000 ரூபாய் சம்பளத்துக்கு லேப் அசிஸ்டென்டாக வேலைக்குச் சேர்ந்தான். அவனுடைய தகுதிக்கு லெக்சரர் ஆகியிருக்கலாம். இருந்தாலும் மாணவர்களைப் பார்த்து பாடம் நடத்தப் பயம். அவனுடைய நண்பர்கள் அவனை என்னிடம் அழைத்து வந்தார்கள். தொடர் பயிற்சி, மருந்து, மாத்திரைகள் மூலம் அவனைக் குணமாக்கினேன். இப்போது அவன் சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளர். இவரைப்போல உலகத்தில் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கூச்சம், பயம், தயக்கத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். உங்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும், கூச்சம் உங்களை இரண்டுபடி கீழே இறக்கி விட்டுவிடும். உடல், சூழல் என இரண்டு காரணங்களால் அதீத கூச்ச உணர்வு ஏற்படுகிறது. மூளையில் செரட்டோனின் (serotonin) என்ற ரசாயனம் குறையும்போது தானாகவே பயம், பதற்றம், குற்றஉணர்சி, தாழ்வுமனப்பான்மை, தயக்கம் போன்ற உணர்ச்சிகள் உருவாகும். இதை மாற்றுவதற்கான சூழ்நிலை இல்லையென்றால், கூச்சம் நம் குணமாகவே மாறிவிடும். இதைத்தான் கூச்ச சுபாவம், பயந்த சுபாவம் என்று சொல்கிறோம்.

பெற்றோரின் அதிகப்படியான பாதுகாப்பும், அக்கறை யும் ஒருவனுக்கு கூச்ச உணர்வை ஏற்படுத்திவிடும். பெற்றோர்கள் ஒருவனை எதற்கெடுத்தாலும் ‘தப்பு’, ‘இது குற்றம்’ என்று அடக்கிவைக்கும்போது, அவனுக்கு மன தைரியம் இல்லாமல் போய்விடுகிறது. மகனையோ, மகளையோ எந்தக் காரியத்தையும் செய்யவிடாமல் தடுத்து, பெற்றோர்களே செய்து முடிப்பது ஆபத்தான வளர்ப்பு முறையாகும். இதனால், எந்தக் காரியத்தையும் துணிச்ச லாகச் செய்யும் தைரியம் அவர்களுக்குள் வளராமலேயே போய்விடும். பொருட்களைப் பேரம் பேசி வாங்க முடியாது. சாலையைக் கடக்கத் தெரியாமல் தடுமாறு வார்கள். இந்தச் சூழ்நிலையில் 18-19 வயதில் கல்லூரிக்குச் செல்லும்போது, பெற்றோர் இல்லாமல் எதையும் சந்திக்கப் பயப்படுவார்கள். ‘எதிரில் இருப்பவர் நம்மைவிடச் சிறந்தவர்’ என்கிற எண்ணம் எழுந்து, தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். தன்னம்பிக்கையே இருக்காது. யாரையும் சந்திக்க, எதிர்கொள்ளப் பயப்படுவார்கள். பெரும்பாலும் சந்திப்புகளைத் தவிர்ப்பார்கள். இவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, சிகிச்சை கொடுத்துச் சரி செய்ய வேண்டும்.

மனப் பதற்ற நோய்கள் இருந்தாலும் இந்தப் பிரச்னை கள் வரும். மனப் பதற்ற நோய்களில் சோஷியல் ஃபோபியா என்பதும் ஒன்று. அதாவது, சமூக சூழ்நிலைகளைக் கண்டு அதீதமாகப் பயப்படுவது. இந்த ஃபோபியா வந்தவர்களால் மேடையில் ஏறிப் பேச முடியாது. மேடையில் ஏறியதுமே நெஞ்சு அடித்துக்கொள்ளும். கை கால் நடுங்கும். தொண்டை வறண்டுவிடும். வியர்த்துக் கொட்டும். இதே ஆட்களை யாரும் இல்லாத அறையில் பேசச் சொன்னால், அற்புதமாகப் பேசுவார்கள். இன்னும் சிலர், அருகில் ஆட்கள் இருக்கும்போது எதையுமே செய்ய மாட்டார்கள். யாராவது அருகில் இருந்தால் சிலரால் சாப்பிடக்கூட முடியாது. பப்ளிக் டாய்லெட்டில் நான்கைந்து பேர் யூரின் போய்க்கொண்டு இருந்தால், இவர்கள் கூச்சப்பட்டு வெளியேறிவிடுவார்கள்.

பயிற்சிகள், மருந்துகள் மூலம் இந்தப் பாதிப்புகளை மாற்றிவிடலாம். கூச்ச சுபாவத்தைப் போக்க நிறைய பயிற்சிகள் எடுக்க வேண்டும். யாரையாவது சந்திக்கச் செல்வதற்கு முன், என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், அவர் இப்படிப் பதில் சொன்னால், அடுத்து எப்படிப் பேச்சைக் கொண்டுசெல்வது? என்று உங்களுக் குள்ளேயே ரிகர்சல் செய்ய வேண்டும். திட்டமிட்டுச் செல்லும்போது, பயம், பதற்றம் வராது. அதேபோல யாரையும் சந்திக்கச் செல்லும்போதோ, மேடையில் ஏறும்போதோ, ‘நமக்கு முன் இருப்பவர்கள் நம்மைப்போல் சராசரி மனிதர்கள்’ என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். ‘நாம் படித்திருக்கிறோம். நமக்கு இவ்வளவு திறமைகள் இருக்கின்றன. சமுதாயத்தில் நமக்கு ஒரு மதிப்பு உண்டு’ என்று சுய மரியாதையை வரவழைத்துக்கொள்ளுங்கள். இப்படி தொடர்பயிற்சிகள் எடுக்கும்போது கூச்சம் காணாமல் போய்விடும். உதாரணமாக, திருமணத்தின்போது பெண்கள் அதிகம் கூச்சப்படுவார்கள். பிறகு, இரண்டு மூன்று மாதத்தில் புருஷனை ‘வாடா, போடா’ என்று செல்லமாக அழைப்பார்கள். அந்த அளவுக்குத் தைரியம் என்பது பழக்கத்தால் வருகிறது. நீங்களும் அப்படி மற்றவர்களோடு பேசிப் பழகுங்கள்.

மூளையில் ஏற்படும் செரட்டோனின் குறைவை மருந்துகள் மூலம் சரிப்படுத்திவிடலாம். ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து மருந்துகள் எடுக்க வேண்டும். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் சிலர் கேள்விகேட்கும்போது பிரமாதமாகப் பதில் அளிப்பார்கள். பரீட்சையில் பாதி மதிப்பெண்கள்கூட வாங்க மாட்டார்கள். அவர்களுக்குத் தேர்வுத்தாளைக் கையில் வாங்கிவிட்டாலே பயம், பதற்றம் வந்துவிடும். கை, கால் வெடவெடத்து,வியர்த்துக் கொட்டும். படித்தது எல்லாம் மறந்துவிடும். இரண்டு கேள்விக்கு மட்டும் பதில் எழுதிவிட்டு ஓடி வந்துவிடுவார் கள். இதற்கு எக்ஸாம் ஃபோபியா என்று பெயர். இந்த மாதிரி பலருக்கு குறிப்பிட்ட துறையில் மட்டும் தயக்கம், கூச்சம் இருக்கும். இதையும் மருந்துகள் மூலம் குணப் படுத்தலாம். எக்ஸாம் ஃபோபியா உள்ள மாணவர்களுக்கு தேர்வு தினத்தன்று மட்டும் மருந்து கொடுத்துப் பயத்தைப் போக்க`ம். எந்தப் பயமும் இல்லாமல் தேர்வு எழுதி விட்டு வருவார்கள். ஸ்டேஜ் ஃபியர் இருப்பவர்களுக்கும் ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் செய்யும்போது மாத்திரை கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த முடியும்.

ஒன்றே ஒன்றுதான்… கூச்சப்படுபவர்களால் தங்களின் அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற வாழ்க்கையை அடைய முடியாது. கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாதவன்தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியும்!”

எப்படி உங்கள் இஷ்டம்?
கூச்சத்தை உதறியெறிந்து சிகரம் தொட்ட சிலர்…

திக்குவாய் என்பதால் கூச்ச சுபாவம் உடையவனாக இருந்தான் அவன். ஆனால், அது அவனை எந்தவிதத்திலும் அமெரிக்க ஜனாதிபதியாகவோ, புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் உரை நிகழ்த்துவதையோ தடுக்கவில்லை. கூச்ச சுபாவத்தை மீறி வந்ததால்தான் ஒரு ஆபிரகாம் லிங்கன் உதித்தார்!

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்பது அவனின் லட்சியம். ஆனால், அவனுடைய குரல் மோசமாக இருந்தது. ஆள் கோமாளி மாதிரி இருந்தான். இவை இரண்டும் அவனுக்கு கூச்ச உணர்வைக் கொடுத்தது. அந்தக் கூச்சத்தை தகர்த்து எறிந்து அவன் கண்டுபிடித்த சினிமாதான் இன்று உலகின் நம்பர் ஒன் பொழுதுபோக்கு. அவர் தாமஸ் ஆல்வா எடிசன்!

கூச்ச சுபாவமும் ‘ஸ்டேஜ் ஃபியர்’ காரணத்தாலும் அவளால் பியானோ வாசிக்க முடியவில்லை. ஆனால், அவள் புகழ்பெற்ற மர்ம நாவல்கள் எழுதி அகதா கிறிஸ்டியாக வளர்வதை அந்தக் கூச்சத்தால் தடை செய்ய முடியவில்லை!

இன்னும் பட்டியல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், நீங்கள் விரும்பும் மாற்றமாக நீங்களே மாறாத வரையில் இவைகள் வெறும் வார்த்தைகள்தான்!


Back to top Go down
View user profile
 
கூச்சம் தவிர்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: