BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-01

Go down 
AuthorMessage
lakshana

avatar

Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 30
Location : india, tamil nadu

PostSubject: டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-01   Sat Jun 26, 2010 3:59 pm

எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. குழந்தை இல்லை. திருமணமாகி ஆறாவது மாதத்தில் எனக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் பிரச்னை வந்தது. மருத்துவரிடம் கேட்டபோது, ‘திருமணமான புதிதில் இந்தப் பிரச்னை வருவது சகஜம்தான்’ என்று சொன்னார். அப்போது, அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொண்டேன்.

ஆனால், மறுபடியும் சிறுநீர் கழிக்கும்போது அந்த இடத்தில் மிகவும் எரிச்சலான உணர்வு இருந்தது. மீண்டும் டாக்டரிடம் போய், பல பரிசோதனைகள் செய்து, சிகிச்சைகள் எடுத்துக் கொண்டாலும், இன்னமும் பிரச்னை தீரவில்லை. சிறுநீர் கழிக்கும்போது அந்த இடத்தில் விட்டுவிட்டு எரிச்சல் வருகிறது.

இது எதனால்? இதிலிருந்து பூரண குணமடைய என்ன செய்ய வேண்டும்? யூரினரி இன்ஃபெக்ஷன் வராமலிருப்பதற்கு எவ்வாறான வழிகளை கையாள வேண்டும்? எனக்கு சிறுநீரில் ஆர்.பி.ஸி. (RBC) அதிகம் இருப்பதாக சொன்னார்கள். இதனால் ஏதேனும் பிரச்னையா? விளக்கமாகச் சொல்லுங்களேன்..’’

டாக்டர். மு.எஸ்.நாராயணன், யூராலஜிஸ்ட், தூத்துக்குடி.

‘‘இதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. உங்களுக்குத் திருமணமாகி இரண்டு வருஷம்தானே ஆகிறது. உங்கள் டாக்டர் சொன்னதுபோல, இந்தக் கட்டத்தில் இப்படி பிரச்னை வருவது சகஜம்தான்.

சிறுநீர் கழிக்கும்போது மறுபடி, மறுபடி எரிச்சல் ஏற்படுவதற்குக் காரணம் சில பாக்டீரியாக்கள்தான். சிறுநீர் கழிக்கும்போது அந்த இடத்தில் பாக்டீரியா சுலபமாக ஒட்டிக்கொள்ளும். அந்த பாக்டீரியா அப்படியே சிறுநீர்ப்பைக்குள் போய் இன்ஃபெக்ஷனை ஏற்படுத்துகிறது.

இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். போய் வந்தாலும் மறுபடி போக வேண்டும் என்று தோன்றும். ஆனால், சிறுநீர் வராது. சில நேரங்களில் சிறுநீருடன் இரத்தமும் வரும். இந்த அறிகுறி எல்லாம் சாதாரண நீர்க்கடுப்புக்குத்தான். இது ஒவ்வொருவர் உடல் அமைப்பைப் பொறுத்தது.

இதை நோய் என்று சொல்ல முடியாது. ஒருவகை கிருமித் தாக்குதல்! உலகத்தில் முக்கால்வாசி பேருக்கு இந்த மாதிரியான இன்ஃபெக்ஷன் இருக்கிறது.

சிறுநீரில் ஆர்.பி.ஸி. அதிகம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். ‘சிஸ்டாஸ்கோபி’ என்கிற டெஸ்ட் எடுத்துப் பார்த்தால் இதற்கு என்ன காரணம் என்பது தெரிந்துவிடும். இப்படி டெஸ்ட் பண்ணும்போது சாதாரண நீர்க்கடுப்பா, டி.பி.யா, கேன்சரா அல்லது சிறுநீர்ப்பையில் கல் இருக்கிறதா என்றுகூட கண்டுபிடித்துவிடலாம். ‘என்னடா, டாக்டர் இப்படிச் சொல்றாரே’ என்று பயப்பட வேண்டாம். இந்த நோய்களுக்கும் ஓரளவு வாய்ப்பிருப்பதால் சொல்கிறேன்.

சாதாரண நீர்க்கடுப்பாக இருந்தால் டாக்டரின் ஆலோசனையுடன் ஒரு மாதமோ, ஒரு வருஷமோ ஆன்டிபயாடிக் மாத்திரை எடுக்க வேற்றுக்கும் நீங்களே முடிவெடுக்காமல் உடனடியாக ஒரு யூராலஜிஸ்ட்டை பாருங்கள். மற்றபடி, இதனால் உங்களின் திருமண வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் வராது..’’

—————————————————————————————————————–

‘‘என் அம்மாவுக்கு குறட்டை அதிகமாக வருகிறது. உறவினர் வீடுகளில் தூங்க நேரிட்டால் இந்த குறட்டை ஒலி மற்றவர்களை தொந்தரவு செய்கிறதோ என சங்கடமாக உள்ளது. குறட்டையைத் தடுக்க வழி உள்ளதா? குறட்டை விடுவதால் மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்களே.. உண்மையா? இது மற்றவர்களுக்கும் தொற்றுமா?’’

டாக்டர். கே.ஆர்.கண்ணப்பன், காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், மதுரை.

‘‘குறட்டை விடுவதற்கான காரணங்கள் இரண்டு. தொண்டை அல்லது மூக்குப் பகுதியில் ஏற்படும் அடைப்பின் காரணமாக மேல் அன்னத்தில் அசாதாரண அதிர்வுகள் (abnormal vibration) நிகழ்வதால் குறட்டை வருகிறது. உடல் பருமன் அதிகமாக இருப்பது இரண்டாவது காரணம்.

இது நோயல்ல! சராசரி உடல் இயக்கத்தில் இருந்து ஒரு சிறு மாறுபாடுதான். குறட்டையை முழுவதுமாக நீக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் அம்மாவை பரிசோதனை செய்து, அந்த முடிவுகளின் அடிப்படையில் இதற்கென்றே உள்ள லேசர் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் குணப்படுத்திவிட முடியும். சிகிச்சைக்காக மூன்றுநாள் மருத்துவமனையில் தங்க வேண்டிவரும். இந்த சிகிச்சை பின்விளைவுகள் அற்றது. மற்றபடி, எடையைக் குறைப்பது, தூங்கும்போது நிலையை மாற்றிப் படுப்பது போன்ற தற்காலிகப் பயிற்சிகள் குறட்டைக்கு நிரந்தரத் தீர்வாகாது.

குறட்டை விடுவதால் மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது என்பது உண்மையே. காரணம், குறட்டையால் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து, அதனால் இதயத்தின் இயக்கமும் குறைவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. குறட்டை மற்றவர்களுக்குத் தொற்றாது.. தொந்தரவுதான் கொடுக்கும்..’’

——————————-………………………………………………………..

‘‘என் வயது 30. எடை 65 கிலோ. இன்னும் திருமணம் ஆகவில்லை. என் உடம்பிற்கு தகுந்த மார்பகங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் காம்புகளின் வளர்ச்சி இல்லை. தடவிப் பார்த்தால் மட்டுமே தெரியும். அதுவும் சில நேரங்களில் உள்ளே அமிழ்ந்து விடுகிறது. அப்படியே வெளியே வந்தாலும் ஒரு துளியூண்டுதான் வருகிறது. தினமும் காலையில் இழுத்துவிட்டுப் பார்த்தும், எந்த முன்னேற்றமும் இல்லை.

இதேபோன்ற ஒரு பிரச்னைக்கு ‘டியர் டாக்டர்’ பகுதியில் வெளியான ஒரு பதிலில் சிரின்ஜ் மூலம் இழுத்துவிடச் சொல்லியிருந்தார்கள். அது பாலூட்டும் ஒரு தாய்க்கு அளிக்கப்பட்ட பதில். நான் அப்படிச் செய்யலாமா? நான் வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சை ஏதாவது உள்ளதா?

என்னுடைய தோழி பார்த்துவிட்டு, ‘இப்படி இருக்காதே.. நீளமாகத்தானே இருக்கும்’ என்கிறாள். இதனால் எனக்கு கல்யாணம் செய்துகொள்ள மிகவும் பயமாக இருக்கிறது. என்னுடைய இந்த வயதிலாவது எனக்கு திருமணம் நடக்க வேண்டும். உங்கள் பதிலில்தான் என்னுடைய வாழ்க்கையே உள்ளது. டாக்டரிடம் சென்று கேட்கவும் கூச்சமாக இருக்கிறது. என்னுடைய நிலைமையை உணர்ந்து, பதில் தாருங்களேன்..’’

டாக்டர். ஆர். கலைச்செல்வி, மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவ நிபுணர், சேலம்.

‘‘உங்களுக்கு உள்ளிழுக்கப்பட்ட மார்பு காம்பு (Retract-d-Nipple) என்கிற பிரச்னை உள்ளது.

நீங்கள் கேட்டிருந்ததுபோல உங்கள் மார்புக் காம்பை வெளியில் இழுத்து விடுவதுதான் இதற்கு சிறந்த சிகிச்சை. 20 சிசி ப்ளாஸ்டிக் சிரிஞ்சின் (20cc Plastic Syringe) முனையை வெட்டிவிட்டு, பின்னர் சிரிஞ்சின் உள்பகுதியைத் திருப்பிப் போட்டு மார்பில் நன்றாகப் பொருத்தி இழுத்தால் ஏற்படும் நெகடிவ் அழுத்தத்தில் காம்புகள் நன்றாக வெளியில் வரும் (எப்படிச் செய்வது என்கிற சந்தேகம் இருந்தால் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசியுங்கள்). இதைத் தொடர்ந்து செய்யுங்கள்.

நீங்கள் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம். பிரசவத்திற்குப் பின் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க சிரமமிருந்தால் நிப்பிள் ஷீல்டு எனப்படுகிற நிப்பிள் உறை உபயோகிக்கலாம். அல்லது பாலை எடுத்து பாலாடை அல்லது ஸ்பூனில் ஊற்றிக் கொடுக்கலாம்..’’

————————————————————————————————————-

‘‘என் வயது 31. எடை 86 கிலோ. திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. ஏழு மற்றும் பதினோரு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு வருடத்துக்கு முன்பு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டேன்.

என் இரண்டாவது பையன் பிறந்த பிறகு அடிக்கடி கழிப்பறைக்கு போக ஆரம்பித்தேன். டாக்டரிடம் விசாரித்தபோது, காரம் அதிகம் இல்லாமல் சாப்பிடச் சொன்னார். நானும் அப்படித்தான் சாப்பிட்டு வருகிறேன். இருந்தாலும் இந்தத் தொந்தரவு நீங்கவில்லை.

காலையில் எழுந்தவுடன் நான்கு முறையாவது போகிறேன். மதியம், இரவு, சாப்பிட்டவுடன் போகிறேன். இதனால் என்னால் வெளியில் விசேஷங்களுக்கு எங்கும் போக முடியவில்லை. இதற்கு நீங்கள்தான் ஒரு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்..’’

டாக்டர். கே.ஆர்.பிரகாசம், வயிறு மற்றும் குடல்நோய் மருத்துவ நிபுணர், சேலம்.

‘‘உங்களுடைய பிரச்னைக்கும் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‘ஒரு நாளைக்கு காலையில் நான்கு தடவை போகுது’ என்று சொல்வதைப் பார்க்கும்போது உங்களுக்கு உடல் ஒவ்வாமை நோய் இருக்கலாம். அல்லது பெருங்குடலில் ஏதாவது கிருமிகள் ஒட்டிக் கொண்டிருந்தாலும் இப்படி ஆகலாம். உணவில் புரோட்டின் அதிகம் இருந்தாலும் இந்தப் பிரச்னை வரும். இது தவிர, டென்ஷனும் காரணமாக இருக்கலாம்.

இதை நீங்கள் உடனே கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். குடல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை, என்டாஸ்கோப்பி, க்ளானாஸ்கோப்பி பரிசோதனைளை செய்து, இதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஒரே வாரத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

உங்கள் எடை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதையும் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளுங்கள்..’’

…………………………………………………………………………………………..

‘‘என் வயது 48. பத்து வருடங்களுக்கு முன் கர்ப்பப் பையை எடுத்துவிட்டேன். அதன்பிறகு எனது எடை கூடிவிட்டது. இப்போது 70 கிலோ. தினமும் காலையில் ஒரு மணிநேரம் வாக் போகிறேன். எனது உடம்பைவிட என் கைகள்.. குறிப்பாக வலது கை, முழங்கைக்கு மேல் அதிக சதையுடன் தடியாக உள்ளது. என்னால் எடை எதுவும் தூக்க முடிவதில்லை. தூக்கினால் கை வீங்கிவிடுகிறது. முழங்கைக்கு கீழே கை மெலிதாக உள்ளது. இதைச் சரிப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?

எனது மகளுக்கும் இதே பிரச்னைகள் இருக்கின்றன. அவளுக்கு வயது 22. ஏன் இப்படி?’’

டாக்டர். கிருஷ்ணா சேஷாத்ரி, ஹார்மோன் சிறப்பு நிபுணர், சென்னை.

‘‘உங்களுடைய பிரச்னைக்கு ‘லைப்போடிஸ்ப்ரோஃபி என்று பெயர். குறிப்பிட்ட ஒரு இடத்தில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு சேர்வதை இப்படிக் குறிப்பிடுவோம். பொதுவாக, பெண்களுக்கு தொடையிலும் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும் இப்படி கொழுப்பு சேர்வதுண்டு. மிக அரிதாக சிலருக்கு உங்களுக்கு இருப்பது போல் ஆகும்.

ஒரு முக்கியமான விஷயம்.. ‘கர்ப்பப் பையை எடுப்பதால் உடல் பருமன் ஆகும்’ என்பது காலங்காலமாக நம்பப்படுகிற பொய். கர்ப்பப் பையை எடுத்ததும் பெண்களின் செயல்பாடு குறைந்துவிடுகிறது. சும்மா உட்கார்ந்து டி.வி. பார்ப்பது, நொறுக்குத்தீனி சாப்பிட்டபடியே இருப்பது போன்றவற்றால்தான் எடையும் கொழுப்பும் கூடுகிறது.

நீங்கள் தைராய்டு சுரப்பி, சர்க்கரை, கொலஸ்டிரால் ஆகிய பரிசோதனைகளை செய்து, ஹார்மோன் சிறப்பு மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரைகள் எடுக்க வேண்டும். நீங்கள் மெனோபாஸ்க்கு முன்னாலேயே கர்ப்பப் பையை எடுத்திருப்பதால் எலும்பின் அடர்த்தியை பரிசோதிக்கும் ‘டெக்ஸா’ என்கிற பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.

உங்கள் மகளுக்கும் தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும். அவரது தினசரி செயல்பாடு மற்றும் உணவுப் பழக்கங்களிலும் கவனம் தேவை. உணவில் கால்சியம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்..’’

********************************************************************

நன்றி:-டாக்டர். மு.எஸ்.நாராயணன், யூராலஜிஸ்ட், தூத்துக்குடி.
நன்றி:-டாக்டர். கே.ஆர்.கண்ணப்பன், காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், மதுரை
நன்றி:-டாக்டர். ஆர். கலைச்செல்வி, மகப்பேறு & பெண்கள் நல மருத்துவ நிபுணர், சேலம்.
நன்றி:-டாக்டர். கே.ஆர்.பிரகாசம், வயிறு மற்றும் குடல்நோய் மருத்துவ நிபுணர், சேலம்.
நன்றி:-டாக்டர். கிருஷ்ணா சேஷாத்ரி, ஹார்மோன் சிறப்பு நிபுணர், சென்னை.
Back to top Go down
View user profile
 
டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-01
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: