BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - காத்திருக்கும் அபாயம்?

Go down 
AuthorMessage
NaviNesh

avatar

Posts : 249
Points : 572
Join date : 2010-05-24
Age : 29
Location : The Little World Of Cuties

PostSubject: 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - காத்திருக்கும் அபாயம்?   Sun Jun 27, 2010 8:48 pm

உலகில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பணிகளில் மிகப்பெரும் பணி என்று 2011ம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி வர்ணிக்கப்படுகின்றது. இது வளர்ச்சிப் பணிகளை திட்டமிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் பயன்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். ஏற்கனவே தெரிந்துள்ள விவரங்களை வைத்து இவர்கள் என்ன பெரிதாகக் கிழித்து விட்டார்கள் என்கின்ற கேள்வி ஒரு பக்கம் எழுகின்றது. வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, பட்டினிச் சாவுகள், விவசாயிகள் தற்கொலை, அடிப்படை வசதிகளின்மை, குடிநீர்ப் பற்றாக்குறை என்று இன்மைகளின் பட்டியலும் உலகிலேயே மிகப் பெரியதாக இருக்கலாம்.இதையெல்லாம் களைவதற்கு இவர்கள் இத்தனை நாட்களாக உருப்படியாக எதையும் செய்யாதது மட்டுமில்லை, இப்பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்கும் வழியில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இது பற்றி ஏற்கனவே நிறைய எழுதியாகிவிட்டது, இன்னும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இப்போது விஷயம் என்னவெனில், இந்த முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் முறையே, இப்பிரச்சனைகளுக்கு எதிராக எழுந்து வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்குத்தானோ என்பதுதான்.

இதற்கு முன்னர் கணக்கெடுப்பு நடந்தபோது கேட்கப்பட்ட கேள்விகளுடன் இப்போது கூடுதலாக பல கேள்விகள் கேட்கப்பட உள்ளன. பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பாலினம், கல்வி, விலாசம், திருமணமாகிவிட்டதா இல்லையா, ஆகியிருந்தால் துணையின் பெயர் போன்றவை மட்டுமின்றி புகைப்படம் கேட்கப்படும். இரு கட்டை விரல்களின் ரேகைகள் மட்டுமின்றி, எஞ்சியுள்ள எட்டு விரல்களின் ரேகைகளும் பதிவு செய்யப்படும். (பின்னாளில் மரபணு விவரத்தைப் பதிவு செய்யும் ஆலோசனையும் உள்ளது. மரபணு வங்கி அமைக்கப் போகிறார்களாம்.) இது ஒவ்வொரு தனிநபருக்கும் பிரத்யேகமான அடையாள அட்டை, அடையாள எண் போன்றவை வழங்குவதற்காக என்று கூறப்படுகின்றது. ஆகா, இது நல்லதுதானே என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அங்குதான் இருக்கின்றது விஷயமே.

ஒரு உதாரணத்திற்கு விலைவாசி உயர்வை எதிர்த்து நீங்கள் போராட்டம் நடத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். போராட்டத்தில் நீங்கள் கைது செய்யப்படலாம். உங்களது அடையாள அட்டையை காவல்துறையினர் கேட்பார்கள். (அட்டை இல்லை என்றால் உங்கள் கதை அங்கேயே முடிந்தது. சிறைதான்). அட்டையைக் கொடுத்தால் அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள். அடுத்தப் போராட்டத்திற்கு முன், தேவை என்றால் முன்னெச்சரிக்கை கைது செய்வார்கள். தொடர்ந்து போராட்டம் நடத்துகிறவராக இருந்தால் மொத்தமாக சிறையில் அடைக்கவோ அல்லது வேறு வழிகளில் கட்டுக்குள் வைத்திருக்கவோ இப்போது சேகரிக்கப்படும் விபரங்கள் எல்லாம் பயன்படும்.

தேசிய நுண்ணறிவுத் தொகுப்பு (National Intelligence Grid) என்கின்ற ஏற்பாட்டின் பின்னணியில் இது மேற்கொள்ளப்படுகின்றது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் தலைவர்கள், மக்கள் தொண்டர்கள் குறித்த தனிப்பட்ட விவரங்களை இதுநாள் வரையிலும் ரகசியமாக கண்காணித்துத் திரட்டும் வேலையை உளவுத்துறை போலீசார் செய்து வருகின்றனர். இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் பகிரங்கமாகச் செய்யப் போகின்றார்கள்.

இந்தக் கணக்கெடுப்பு 1948ம் ஆண்டு சென்சஸ் சட்டப்படி மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமாக அப்படித்தான் செய்யப்படும். ஆனால், 1955ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம், 2003ம் ஆண்டு குடியுரிமை விதிகள் (குடிமக்களைப் பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குதல்) சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது. அதில் என்ன பிரச்சனை? ஏனெனில், சென்சஸ் சட்டத்தில் தனிமனித அந்தரங்கம் பற்றிய ஒரு விதி தெளிவாக இருக்கின்றது. குடியுரிமைச் சட்டத்தில் அந்த விதியைக் காணவில்லை என்பது மட்டுமின்றி, தகவல்களை "பிரத்யேக அடையாளம் காணும் திட்ட அமைப்பிடம்" வழங்குவது நோக்கங்களில் ஒன்றாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இரண்டு நடைமுறைகளுக்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாடு இதுவாகும். எடுத்துக் காட்டாக, நாம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முகமைக்கு அளிக்கும் தகவல்கள் "ஆய்வுக்கு உட்படுத்தக் கூடியதோ அல்லது ஒரு சாட்சியமாக (நீதிமன்றத்தில்) ஏற்றுக் கொள்ளத்தக்கதோ அல்ல என்று சென்சஸ் சட்டத்தின் 15 வது பிரிவு திட்டவட்டமாகக் கூறுகின்றது. மக்கள் தொகை பற்றிய ஒரு சித்திரத்தை அரசு பெறுவதற்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்கு சென்சஸ் சட்டம் உதவுகின்றது. தனிமனித சித்திரத்தைப் பெறுவதற்காக அல்ல". (உஷா ராமநாதன், தி ஹிந்து, 5.4.10).

ஆனால், இத்தகைய சட்டங்களின்படிதான் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வங்கியில் கணக்கு துவங்க வேண்டும் என்றாலும், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றாலும், கடவுச் சீட்டு பெற வேண்டும் என்றாலும், இன்னும் இது போன்ற பற்பல வேலைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குச் சென்றால் அந்த புரூப் இருக்கிறதா, இந்த புரூப் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். இந்த ஒரு அட்டை அந்த எல்லாப் பிரச்சனையையும் தீர்த்துவிடும் என்று சிலர் வரவேற்கிறார்கள். மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக அரசு இதைச் செய்யவில்லை. மக்களால் தனக்கு பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ளவே இதை, இப்படிச் செய்கின்றது.

மேலும், கணக்கெடுப்பின்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் பதிவு செய்யப்படுவதை குடும்பத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். இல்லை என்றால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும். கொடுக்கப்படும் விபரங்களில் பின்னாளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். பெண்ணுக்கு திருமணம் ஆகிச் சென்று விட்டால், மகனுக்குத் திருமணம் ஆகி மருமகள் வந்துவிட்டால், பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு வேறு வேலைக்கு யாரேனும் போனால், வெளியூருக்கு படிக்கவோ, வேலைக்கோ சென்றுவிட்டால், இப்படியான மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டால் தெரிவிக்க வேண்டும். குடும்பத் தலைவரை கிட்டத்தட்ட போலீஸ் இன்பார்மர் ஆக்குகின்றன 2003 ம் ஆண்டு குடியுரிமை விதிகள் என்கிறார் உஷா ராமநாதன்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் திட்டம் நிறைவேறினால் ரா, நுண்ணறிவுப் பிரிவு, அமலாக்கப் பிரிவு, தேசிய புலனாய்வுத் துறை, மத்தியப் புலனாய்வுத் துறை, போதை மருந்துத் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 11 பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நிறுவனங்களுக்குத் தேவைப்பட்டால் ஏற்கனவே திரட்டப்பட்டுள்ள 23 வகையான தரவுகளை சம்பந்தப்பட்ட துறையினர் அளிக்க வேண்டியிருக்கும். அல்லது அந்நிறுவனங்களே எடுத்துக் கொள்ள முடியும். ரயில் மற்றும் விமானப் பயண விவரங்கள், வருமானவரி விவரங்கள், தொலைபேசி அழைப்புகள், வங்கிக் கணக்கு விவரங்கள், கடன் அட்டை பரிவர்த்தனைகள், விசா மற்றும் குடியேற்ற ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், ஓட்டுநர் உரிம ஆவணங்கள் ஆகியவை அவற்றில் அடங்கும். அதாவது, கிட்டத்தட்ட தனிமனித அந்தரங்கம் என்பதே இருக்காது. தனிமனித சுதந்திரம் என்பதும் அதனால் இருக்கவே இருக்காது. தனிமனித சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் முதலாளித்துவ அரசுதான் இந்த வேலையைச் செய்கின்றது. எந்த ஜனநாயகத்தின் பெயரால் முதலாளிகள் ஆண்டுகொண்டிருக்கிறார்களோ அந்த ஜனநாயகத்தையே குழி தோண்டிப் புதைக்கிறார்கள்.

"தன்னுடைய ரகசியப் புலனாய்வு சாதனம் சதித்திட்டத்திற்கான வாகனமாகவோ அல்லது பாரம்பரியமான ஜனநாயக சுயாட்சி உரிமைகளை நசுக்கும் கருவியாகவோ ஆகாமல் இருப்பதை எப்படி ஒரு ஜனநாயகம் உறுதி செய்யப் போகின்றது?" என்ற கேள்வியை எழுப்பி அதற்குப் பதிலும் கூறியிருக்கிறார் குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி. புலனாய்வு அமைப்புகள் பாராளுமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவையாகவும், பாராளுமன்றத்தின் கண்காணிப்பிற்கு உட்பட்டவையாகவும் இருக்க வேண்டும் என்பது அவரது ஆலோசனை. ஆனால் இதற்கு அந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அரசாங்கமும் அந்த எதிர்ப்பை ஏற்றுக் கொள்கின்றது. முதலாளித்துவ எதிர்க்கட்சிகளும் இதைக் கண்டு கொள்ளவில்லை.

மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத, ஆனால் மக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுள்ள அமைப்புகள் இருப்பது, அந்த அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றது. இன்று ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் நாளை எதிர்க்கட்சியாக ஆகலாம். புதிதாக ஆட்சிக்கு வருகின்றவர்கள் ஏற்கனவே திரட்டி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தரவுகளை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தக் கூடும் என்று இது தொடர்பாக பிரதமர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த தீர்மானமும் இன்றி அந்தக் கூட்டம் முடிந்திருக்கின்றது. கலந்தாலோசனைகள் தொடரும் என்று அறிவித்திருக்கின்றார்கள். கட்சிகள் ஒன்றையொன்று பழிவாக இதைப் பயன்படுத்தும் என்கின்ற ஆபத்தை விட, ஆட்சிகள் எதிர்ப்புக் குரலெழுப்பும் மக்களை அடக்கி ஒடுக்கவே இதை அதிகம் பயன்படுத்தும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.

மேலும், இப்படி அதிகாரங்களை மேலும் மேலும் தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகளிடம் அளிக்கும் போக்கு உலகமய அரசியலின் முக்கியமான பண்பாகும்.

"....இவை கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகங்கள். அவற்றில் கட்டுப்படுத்துபவர்கள் எந்த ஜனநாயக அமைப்பு முறைக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல".

"பிறரின் மேற்பார்வையில் நடப்பவை, வரம்பிற்கு உட்பட்டவை, கட்டுப்படுத்தப்பட்டவை அல்லது குறைவான தீவிரம் கொண்டவை என்று இந்த ஜனநாயக ஆட்சிகள் பல்வேறு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றில் அதிகாரம் நிலையான, தேந்தெடுக்கப்படாத அமைப்புகளிடம் குவிக்கப்படுகின்றது. இவை தேர்தல்களினால் ஏற்படும் மாற்றங்களினால் பாதிக்கப்படுவதில்லை" (மார்த்தா ஹர்னேக்கர், வெளிவரவிருக்கும் "புதிய பாதையில் இடதுசாரிகள்" என்ற நூலில் இருந்து).

ஏழைகள்- பரம்பரை ஏழைகள் (இனியும் பொறுக்க முடியாதவர்கள்), உலகமயம் உண்டாக்கிய ஏழைகள் (இவர்கள் சமீபத்தில் ஏழைகளாக்கப்பட்டவர்கள் என்பதால், கலாச்சாரம் "செல்வம்" வழங்கியபோதும் பொருளாதாரம் "ஏழ்மையை" வழங்கியதால் அதை எதிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்) விஷயத்தில் இந்தச் சட்டங்கள், விதிமுறைகள் என்ன செய்யும்?

பெரும்பாலும் வாழ்வின் விளிம்பிலும், சட்டப்படியான நிலையின் விளிம்பிலும் வாழும் ஏழைகளுக்கு இது குற்றமிழைக்கும் குணம் உள்ளுறையாகப் பொதிந்துள்ளவர்கள் என்கின்ற அடையாளத்தை அளிக்கும். வெளிப்படையான வறுமையை அபாயத்தின் குறியீடாகக் கருதும் நீதிஅமைப்பு நிலவும் நாட்டில் இதுதான் நடக்கும். (இது ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல. பிச்சைக்காரர்கள் குறித்த சட்டங்களைப் படித்துப் பாருங்கள். ஒரு நில ஆக்கிரமிப்பாளருக்கு மறுகுடியமர்த்துதல் என்கின்ற பெயரில் நிலம் வழங்குவது என்பது பிக்பாக்கெட்காரனுக்கு சன்மானம் வழங்குவது போலத்தான் என்று சில நீதிமன்றங்களின் தீர்ப்பில் இந்த அணுகுமுறை பிரதிபலிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர் என்கின்ற சொல்லை வேறு வழியின்றி பயன்படுத்துகின்றோம். நீதிமன்றம் சேரி வாழ் மக்களை மனதில் வைத்துத்தான் அப்படிக் கூறியுள்ளது என்பது தெளிவு. வர்க்க ஏற்றதாழ்வுகளை, அதாவது இவ்விடத்தில் பொருளாதார ஏற்றதாழ்வுகளை கணக்கில் கொள்ளாமல்தான் நீதிமன்றங்கள் அப்படிக் கூறியுள்ளன. வீடற்ற ஏழைகள் கிடைக்கும் இடத்தில் குடிசை போடுவதும், ரியல் எஸ்டேட் முதலைகள் அரசு புறம்போக்கு நிலங்களையும், மற்றவர்க்கு உரிய இடத்தை அடித்துப் பிடுங்குவதும் ஒன்றா என்ன?).

பணக்காரர்கள் எப்போதும் ஏழைகளைக் கண்டு பயப்படத்தான் செய்வார்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்.

"பிறநாடுகளுடனான ஒப்புநோக்கில் அரசு இறையாண்மை உள்ளது. ஆனால், ஒரு நாட்டிற்குள் அரசைவிட மக்களே இறையாண்மை உள்ளவர்கள்" (உஷா ராமநாதன் கட்டுரை).

மக்களின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் பிரத்யேக அடையாள எண் திட்டம் தேவையா என்ன?
king
Back to top Go down
View user profile
 
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - காத்திருக்கும் அபாயம்?
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: