BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 கடவுளைக் காண முடியுமா?

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 35

PostSubject: கடவுளைக் காண முடியுமா?   Sat Mar 20, 2010 5:07 am

கடவுளைக் காண முடியுமா? ஒரு ஆத்மார்த்தமான தேடலைப் பற்றிய கதை.


நாளை கிறிஸ்துமஸ். ஜான் டேவிடின் இன்றைய தேவாலயப் பணிகள் முடிந்து விட்டன. மக்கள் திரளாக வர இன்னும் சில மணி நேரங்களாவது ஆகும் என்று மனதில் கணக்குப் போட்ட ஜான் டேவிட் தன் புதிய கிறிஸ்துமஸ் உடையை ப்ளாஸ்டிக் பையில் எடுத்துக் கொண்டு தேவாலயத்தின் பிரார்த்தனை மண்டபத்தில் நுழைந்தான். அங்கு ஒரு சில பணியாளர்கள் மின்விளக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

பிரார்த்தனை மண்டபத்தின் வாயிலுக்கு அருகே உள்ள கர்த்தர் சிலையைப் பார்த்து ஜான் டேவிட் புன்னகைத்தான். மிக நெருங்கிய பிரியமான நண்பர்களைப் பார்த்துப் புன்னகைப்பது போன்ற நிஜமான சந்தோஷமான புன்னகை அது. தன் கையில் இருந்த ப்ளாஸ்டிக் பையைக் கர்த்தரின் காலடியில் வைத்து மண்டியிட்டு வழக்கம் போல் தன் பிரார்த்தனையை ஆரம்பித்தான். அதைப் பிரார்த்தனை என்பதை விட ஒருபக்க சம்பாஷணை என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும். அவன் மௌனமாகப் பேசுவான். கர்த்தர் அமைதியாகக் கேட்பார். சில சமயங்களில் அவரது புன்னகை கூடியிருப்பதாக அவனுக்குத் தோன்றும். சில சமயங்களில் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு அவனை சமாதானப்படுத்தும் கனிவை அவர் கண்களில் காண்பான்...

தற்போது ஐம்பது வயதாகும் ஜான் டேவிடிற்கு இந்தக் கர்த்தர் மீது சிறு வயதில் இருந்தே மிகுந்த ஈடுபாடு இருந்தது. பத்து வயதில் தன் நண்பன் ஜேம்ஸிடம் இதே இடத்தில் தன் ஆசையை ஜான் டேவிட் தெரிவித்து இருக்கிறான்.

"ஜேம்ஸ் எனக்கு ஒரு தடவையாவது இந்தக் கர்த்தரை நேரில் பார்க்கணும் ஆசையாய் இருக்குடா"

ஜேம்ஸ¤ம் அதே ஆவலுடன் தன் ஆசையைச் சொன்னான். "எனக்கும் ஒரு தடவையாவது எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்னு ஆசைடா."

இவர்கள் பேச்சை பின்னாலிருந்து கேட்டுக் கொண்டு இருந்த மூத்த பாதிரியார் வயிறு குலுங்க வாய் விட்டுச் சிரிக்க சிறுவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடிப்போனார்கள்.

படிப்பில் சிறிதும் நாட்டமில்லாத ஜான் டேவிட் தன் பதினைந்தாவது வயதில் பெற்றோரையும் இழந்து இந்த தேவாலயத்தில் எடுபிடி வேலைக்குச் சேர்ந்தான். முப்பத்தைந்து வருடங்களாக இங்கு வேலை செய்கிறான்.

ஆனாலும் அவனுக்கு அந்த வேலையில் இன்று வரை சலிப்பு தட்டவில்லை. கர்த்தரின் தேவாலயத்தில் வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது தன் பாக்கியம் என்று நினைத்தான். அதிலும் தேவாலயத்தின் சிலைகளைத் துடைப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமான வேலை. எல்லாச் சிலைகளையும் துடைத்து விட்டு கடைசியாக பிரார்த்தனை மண்டபத்தின் நுழைவாயிலுக்கு அருகே இருக்கும் அவன் மிகவும் நேசிக்கும் கர்த்தர் சிலையை மிகவும் வாஞ்சையுடன் துடைப்பான். பிறகு அந்த கர்த்தர் சிலையுடன் சிறிது நேரம் மனம் விட்டு மௌனமாகப் பேசுவான். அந்த சிறிது நேரம் தடங்கல் எதுவும் வராத போது மணிக்கணக்காவதும் உண்டு.

ஆரம்பத்தில் ஒருமுறை மூத்த பாதிரியார் அவனிடம் கேட்டார். "அதென்ன ஜான் இந்தக் கர்த்தர் சிலைக்கு கூடுதல் கவனம்."

"•பாதர். இந்த கர்த்தர் சிலை எல்லாத்தையும் விட தத்ரூபமாய் இருக்கிற மாதிரி எனக்குத் தோணுது. கனிவான புன்னகை எவ்வளவு அழகாக இருக்கு பாருங்களேன்"

அவன் முகத்தில் தெரிந்த ஆனந்த பிரமிப்பு அந்த மூத்த பாதிரியாரை வியக்க வைத்தது. இத்தனை சிறிய வயதில் இப்படிப்பட்ட எண்ணங்கள் அபூர்வமே.

"மேடையில் இருக்கிற அந்த பிரதான சிலை?"

"அதுவும் நல்லாத் தான் இருக்கு •பாதர். ஆனா சிலுவையில் இருக்கிற கர்த்தரைப் பார்த்தா மனசு வேதனைப்படுது. இந்தக் கர்த்தர் கையை உயர்த்தி ஆசிர்வாதம் செஞ்சுகிட்டே கொஞ்சம் குனிஞ்ச மாதிரி இருக்கிறது நாம பேசறதைக் காது கொடுத்துக் கேட்கற மாதிரி இருக்கு. இல்லையா •பாதர்"

அந்த மூத்த பாதிரியார் அவனுடைய கற்பனையைக் கேட்டுப் புன்னகைத்தார். உற்றுப் பார்த்த போது அப்படித் தான் இருந்தது. அந்த தேவாலயத்தில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் இருக்கும் அவர் இது வரை இதைக் கவனித்ததில்லை. பிரதான சிலையைக் கவனிக்கும் அளவு மற்ற சிலைகளை யாரும் அவ்வளவு கவனிப்பதில்லை.

"•பாதர். எனக்கு இந்த சிலையில் இருக்கிற மாதிரியே கர்த்தரை ஒரே ஒரு தடவையாவது பார்க்கணும்னு ஆசை. முடியுமா •பாதர்?"

இந்த ஆசையையும் அவர் இது வரை யார் வாயில் இருந்தும் கேட்டதில்லை. பணம், பதவி, புகழ், நிம்மதி என்று எத்தனையோ தேடல்கள் பார்த்திருக்கிறார். ஆனால் கர்த்தரைக் காண நிகழ்கால மனிதர்கள் ஆசைப்படுவதாய் அவருக்குத் தெரியவில்லை. பத்து வயதில் அவன் காண ஆசைப்பட்டது ஒரு விளையாட்டு ஆசையாகத் தான் அவருக்குத் தோன்றி இருந்தது. ஆனால் அவனுடைய இப்போதைய ஆசையை அப்படி எடுத்துக் கொள்ள அவரால் முடியவில்லை.

ஜான் டேவிடின் தோளைப் பரிவோடு தடவியபடி அவர் சொன்னார். "இதய சுத்தி உள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இறைவனைக் காண்பார்கள்னு கர்த்தர் மலைப் பிரசங்கத்தில் தெளிவாய் சொல்லி இருக்கிறார். நீ இதே மாதிரி உன் மனதை வைத்திருந்தால் ஒரு நாள் நிச்சயமாய் அவரே உன்னைப் பார்க்க வருவார்"

அந்த வார்த்தைகள் ஒரு சத்தியப் பிரமாணமாய் ஜான் டேவிடின் மனதில் பதிந்தன. அதற்குப் பின் அந்தப் பாதிரியார் அவனைக் கூப்பிட்டு அடிக்கடி அவனுடன் பேச ஆரம்பித்தார். அவனுக்கு நல்ல அறிவுரைகள் சொல்வார். "ஜான் டேவிட். உன் மனதில் அன்பு, கருணை, இரக்கம் எல்லாம் நிறைந்து இருக்கிற போது நீ கர்த்தரின் ஆதிக்கத்தில் இருக்கிறாய் என்று பொருள். வெறுப்பு, கோபம், பொறாமை, கர்வம் ஆகிய குணங்களை மனதிற்குள் நுழைய விட்டால் நீ சைத்தானின் ஆதிக்கத்தில் நுழைகிறாய். நீ எப்போதும் கர்த்தரின் ஆதிக்கத்தில் இரு. அவரால் நீ ஆசிர்வதிக்கப்படுவாய்....."

தனக்குத் தோன்றுவதை எல்லாம் அவனும் அவரிடம் மனம் விட்டுச் சொல்வான். "இங்கே வர்றவங்க கர்த்தரை மனசார வணங்கற மாதிரி தெரியலை •பாதர். ஏதோ பேருக்கு வந்து எந்திரத்தனமாய் ப்ரார்த்திச்சுட்டு சேர்ந்து தேவையில்லாமல் வம்பு பேசிட்டு போறவங்க தான் அதிகம்னு தோணுது •பாதர். கஷ்டத்தில் இருக்கிறவங்க மனமுருகப் ப்ரார்த்தனை செய்யறாங்க. ஆனா அவங்க கூட கஷ்டம் தீர்ந்துடுச்சுன்னா மத்தவங்க மாதிரியே மாறிடறாங்க. ஏன் •பாதர்"

அவன் எதையும் ஆழமாகக் கவனிக்கும் விதம் அவரை வெகுவாகக் கவர்ந்தது. எனவே மூத்த பாதிரியார் அவன் சொல்லுவதை எல்லாம் புன்முறுவலோடு கேட்பார். சில சமயங்களில் பொருத்தமான பதில் இருந்தால் சொல்வார். இல்லாவிட்டால் சிரித்தபடி கேட்டுக் கொண்டு இருப்பார். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இளம் பாதிரியாருக்கு அவர் ஒரு எடுபிடியுடன் இவ்வளவு நெருக்கமாகப் பழகுவது சிறிதும் பிடிக்கவில்லை.

மூத்த பாதிரியார் ஜான் டேவிட் வந்து சேர்ந்த 12வது வருடம் இறந்து போனார். ஜான் டேவிடிற்கு அவர் மரணம் பேரிழப்பாக இருந்தது. கர்த்தரைத் தவிர அவன் பேச்சைக் கேட்கவோ புரிந்து கொள்ளவோ இனி யாரும் இல்லை. மூத்த பாதிரியார் இறந்து போய் ஒருவாரத்திற்குள் அவன் கனவில் கர்த்தர் வந்து புன்னகைத்தார். அவன் சந்தோஷம் தாங்காமல் சக பணியாளன் ஒருவனிடம் அதைச் சொன்னான். சக பணியாளன் சொன்னான். "அதெல்லாம் மனப்பிராந்தி" அன்றிலிருந்து இது போன்ற விஷயங்களை மற்றவர்களிடம் சொல்வதை விட்டு விட்டான்

மூத்த பாதிரியார் மறைவிற்குப் பின் தேவாலயம் இளம் பாதிரியார் நிர்வாகத்தில் வந்தது. எல்லோரையும் அவரவர் இடத்தில் வைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்த இளம் பாதிரியார் ஜான் டேவிடை அலட்சியப்படுத்த ஆரம்பித்தார். ஜான் டேவிடிற்கோ இது போன்ற சில்லரை விஷயங்கள் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. அது இளம் பாதிரியாரை மேலும் ஆத்திரமடைய வைத்தது.

மற்ற பணியாளர்கள் இவர் அதிக மரியாதையையும் பணிவையும் எதிர்பார்க்கிறார் என்பது தெரிந்தவுடன் அவர் எதிர்பார்த்தபடி நடந்து கொண்டார்கள். ஜான் டேவிட் எப்போதும் போலவே இருந்தான். அவனுக்கு அவர் கூடுதல் வேலைகள் தர ஆரம்பித்தார். அவன் கர்த்தரின் வேலை என்று அதையும் சந்தோஷமாகவே செய்தான். பகலில் அவனுக்கு சிறிதும் ஓய்வில்லாமல் அவர் பார்த்துக் கொண்டார். அதனால் அவன் தினமும் இரவு நேரத்தில் அவனுடைய கர்த்தர் சிலை முன் மெழுவர்த்தியைப் பற்ற வைத்து குறைந்தது ஒரு மணி நேரமாவது பிரார்த்தித்துப் பேசுவான்.

வருடா வருடம் மற்றவர்களின் ஊதியத்தை உயர்த்துவது போல அவன் ஊதியத்தை இளம் பாதிரியார் ஒருகட்டத்தில் உயர்த்தாமல் விட்டுப் பார்த்தார். அவன் அதைப் பற்றிக் கேட்க வருவான். அவனுக்கு நன்றாக உபதேசித்து விட்டுப் பின் உயர்த்தலாம் என்று நினைத்தார்.

ஜான் டேவிடிற்கோ கர்த்தருக்காக செய்யும் வேலைக்கு ஊதியம் வாங்குவதே மனதைப் பல சமயங்களில் உறுத்துவதுண்டு. எனவே இப்படி ஊதியத்தை உயர்த்தாததை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. இளம் பாதிரியாரிடம் சம்பள உயர்வு பற்றி நேரில் சென்று பேசும்படி ஜான் டேவிட்டிடம் மற்ற பணியாளர்களும் சொன்னார்கள். அவன் அதையும் லட்சியம் செய்யவில்லை. அவன் அதைப் பற்றிப் பேச வராததையும் இளம் பாதிரியார் திமிர் என்றே எண்ணினார். இனியும் எவ்வளவு நாள் அவன் தாக்குப் பிடிக்கிறான் என்பதையும் பார்த்து விடலாம் என்று எண்ணினார். பதினைந்து வருடங்களாக அவன் மாதசம்பளம் மாறாமலேயே இருந்தது.

ஜான் டேவிடிற்கு தன் சம்பள விஷயமோ தன்னை அலட்சியப்படுத்தும் விஷயமோ பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும் இளம் பாதிரியார் தேவாலயத்திற்கு வரும் கிறிஸ்தவர்களிடையே ஏழை, பணக்காரர், சாமானியர், செல்வாக்குள்ளவர் என்று வித்தியாசப்படுத்தி நடந்து கொள்ளும் விதம் மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது. மாட்டுத் தொழுவத்தில் பிறந்த கர்த்தரின் போதனைகளை போதிப்பவர்கள் இப்படி ஏழைகளையும், சாமானியர்களையும் அலட்சியப்படுத்தலாமா என வருத்தப்பட்டான்.

அவர் அப்படி சிலரை உதாசீனப்படுத்தும் போது ஜான் டேவிட் அருகில் இருந்தானானால் அவனையும் அறியாமல் வருத்தத்துடன் பார்ப்பான். அதைக் கவனிக்கும் போது இளம் பாதிரியாருக்கு இன்னும் ஆத்திரம் அதிகமாகியது. 'என்னை எடைபோட இவன் யார்? இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்று அவர் அடிக்கடி தனக்குள் கேட்டுக் கொண்டார். அவனிடம் வாய் விட்டுக் கேட்கும் சந்தர்ப்பம் ஏனோ இதுவரை வரவில்லை.

மற்ற பணியாளர்கள் ஜான் டேவிட் மீது இளம் பாதிரியாருக்கு ஏதோ மனவருத்தம் இருப்பதை அவனிடம் வந்து அடிக்கடி சொன்னார்கள். நேரில் போய் அவரிடம் பேசச் சொன்னார்கள். அப்படிப் பேசினால் கண்டிப்பாக சம்பளத்தைக் கூட்டிக் கொடுப்பார் என்று சொன்னார்கள். சம்பளம் அதிகமாகக் கேட்கும் எண்ணம் ஜான் டேவிடிற்கு இல்லை என்றாலும் அவருக்கு அவன் மீது ஏதாவது மனவருத்தம் இருக்குமானால் அதை நீக்கத் தன்னால் முடிந்ததை உடனடியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஜான் டேவிடிற்கு சில நாட்களாகத் தோன்றி வருகிறது.

நன்றாகச் சிந்தித்துப் பார்த்த போது அவர் தேவாலயத்திற்கு வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பது பெரிய விஷயமல்ல என்று அவனுக்குத் தோன்றியது. கர்த்தரைக் காண வருபவர்கள் மற்றவர்கள் தங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது பற்றி ஏன் யோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். கர்த்தர் என்றும் பேதம் பார்ப்பதில்லையே!

தன் இன்றைய சம்பாஷணையில் கர்த்தரிடம் அவன் சொன்னான். "எனக்குத் தெரிந்து நான் அவரைப் புண்படுத்தும் படியாக எதுவும் செய்ததாய் நினைவில்லை. மூத்த பாதிரியார் அன்றைக்குச் சொன்னது போல அன்பு, கருணை, இரக்கம் போன்ற நல்ல தன்மைகளையே நான் என்னிடம் தக்க வைத்துக் கொள்கிறேன், கர்த்தரே. அதற்கு எதிர்மாறான எதையும் நான் வந்தவுடன் விரட்டிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் என்னால் இன்னொருவர் மனதில் மோசமான எண்ணங்கள் வருமானால் அதுவும் என் தவறே என்று இப்போது எனக்கு தோன்றுகிறது. கண்டிப்பாக அவரிடம் சென்று பேசப் போகிறேன் கர்த்தரே......"

சொல்லி முடித்தவுடன் தன் கர்த்தர் முகத்தில் அதற்கான வரவேற்பைக் கண்ட ஜான் டேவிட் மனநிறைவுடன் எழுந்தான். தன் வெள்ளை உடைகளை அவர் காலடியில் இருந்து திரும்ப எடுத்துக் கொண்டான். தேவாலயத்திற்கு வரும் செல்வந்தர் ஒருவர் இந்த கிறிஸ்துமஸிற்கு ஆயிரம் ரூபாய் பணத்தை அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து நல்ல டிரஸ் தைத்துக் கொள்ளச் சொன்னதால் இந்த முறை அந்த அழகான வெண்ணிற உடை தைத்திருந்தான்.

"இந்த டிரஸ் நல்லாயிருக்கா கர்த்தரே. முதல் முதலில் இவ்வளவு நல்ல டிரஸ்ஸை கிறிஸ்துமஸிற்காக தைத்திருக்கிறேன். பிடிச்சிருக்கா?"

கர்த்தரின் புன்ன்கை பிடித்திருக்கிறது என்று சொன்னதாய் தோன்ற ஜான் டேவிட் திருப்தியுடன் அங்கிருந்து நகர்ந்தான். மேடையில் கர்த்தரின் சிலை அருகே இருந்த மின் விளக்குகளை இளம் பாதிரியார் மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்ததைக் கவனித்த ஜான் டேவிட் அவரை நெருங்கினான்.

ஜான் டேவிட் தன்னருகே வந்ததைக் கண்ட இளம் பாதிரியார் முகத்தில் புன்னகை படர்ந்தது. "இந்த வீராப்பெல்லாம் எத்தனை காலத்திற்கு நிற்கும்? தாக்குப் பிடிக்க முடியாமல் சம்பளம் கூட்டித் தரக் கேட்க வந்து விட்டான்" என்று மனதில் சொல்லிக் கொண்டவர் என்ன என்று ஜான் டேவிடைக் கேட்டார்.

"•பாதர். எனக்குப் படிப்பு கிடையாது. பெரிய பெரிய விஷயங்கள் புரியாது. நான் கிணத்துத் தவளை மாதிரி. என் உலகம் இந்த தேவாலயத்திலேயே அடங்கிடுச்சு. வேற உலகமும் தெரியாது..... என் மேல் உங்களுக்கு ஏதோ வருத்தம் இருக்கிறதா சிலர் என் கிட்டே சொல்லி இருக்காங்க. அது உண்மையான்னு எனக்குத் தெரியாது. எதனாலன்னும் எனக்குத் தெரியாது. எதுவாய் இருந்தாலும் நீங்க என்னை மன்னிக்கணும்....." ஜான் டேவிட் அவர் முன்னால் மண்டி இட்டு வணங்கினான்.

இளம் பாதிரியார் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தார். வணங்கி நிமிர்ந்தவன் அவர் மன்னித்தேன் என்று சொல்லக் காத்திருக்க அவரோ அவன் சம்பளப் பேச்சை ஆரம்பிக்கட்டும் என்று காத்திருந்தார். அவர்கள் இருவரும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்க்க பிறகு இளம் பாதிரியாரே பேசினார்.

"சொல்லு. வேறென்ன வேணும்"

"உங்க மன்னிப்பு தவிர வேறு எதுவுமே எனக்கு வேண்டாம் •பாதர். கர்த்தர் எனக்கு எல்லாமே கொடுத்திருக்கார். மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொன்னால் இந்த கிறிஸ்துமஸை நிம்மதியாய் கொண்டாடுவேன்"

அவன் மன்னிப்பைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை என்று கள்ளங்கபடமில்லாமல் சொன்ன விதம் அவரை என்னவோ செய்தது. அவனையே பார்த்தபடி நிறைய நேரம் நின்றிருந்து விட்டு குரல் கரகரக்க அவர் சொன்னார். "கர்த்தரின் முன்னிலையில் நான் சொல்லத்தக்க தவறு எதையும் நீ செய்யவில்லை ஜான் டேவிட். அதனால் மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை."

அவன் மனதில் இருந்து ஒரு பாரம் நீங்கியது போல் இருந்தது. அவரைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

அவர் வெளிப்படையாகச் சொன்னார். "நான் நீ சம்பள உயர்வு பற்றி என்னிடம் கேட்பாய் என்று நினைத்தேன்."

ஜான் டேவிட் குற்ற உணர்வுடன் சொன்னான். "எனக்கு தேவாலயத்தில் செய்யும் வேலைக்கு சம்பளம் வாங்கறது சரியான்னு இன்னும் தெரியலை. சில சமயத்தில் கர்த்தர் தர்றார்னு தோணுது. சில சமயம் கர்த்தருக்கு செய்யற வேலைக்குக் காசு வாங்கறதான்னு தோணுது. அதனால் எனக்கு சம்பள உயர்வு பற்றிய எண்ணமே வரலை."

இளம் பாதிரியார் அவனது பதிலில் மெய் சிலிர்த்துப் போனார். மூத்த பாதிரியார் அவனைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் வைத்திருந்தது ஏன் என்று இப்போது அவருக்கு விளங்கியது.

"மெர்ரி கிறிஸ்துமஸ் •பாதர்"

"மெர்ரி கிறிஸ்துமஸ் ஜான் டேவிட்"

அவர் குரலில் இதுநாள் வரை இல்லாத புதிய சினேகம் இருந்ததாக ஜான் டேவிடிற்குத் தோன்ற அவரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு தேவாலயத்தை விட்டு வெளியே வந்தான். அவனுக்கு மனம் லேசாக இருந்தது. இன்று செய்ததை முன்பே செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ஏன் நாம் மன்னிப்பு கேட்பது போன்ற நல்ல செயல்களைச் செய்யக் கால தாமதம் செய்கிறோம் என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

வெளியே சில பிச்சைக்காரர்கள் நின்று கொண்டு இருந்தனர். சில்லரைகளை எடுத்து நீட்டப்பட்ட கைகளில் கொடுத்தபடியே வந்த ஜான் டேவிட் சில்லரை முடிந்த பின்னும் இன்னொரு கை நீட்டிக் கொண்டு இருப்பதைக் கண்டான். அந்த பிச்சைக்காரன் அரையிருட்டில் நின்று கொண்டு இருந்தான். கிட்டத் தட்ட அவனைப் போன்றே உடல்வாகு உடையவனாக இருந்தாலும் அவன் இளைஞனாகத் தெரிந்தான். கந்தல் உடைகளில் இருந்த அந்த இளம் பிச்சைக்காரனுக்குத் தர சில்லரை இல்லாதது ஜான் டேவிடிற்கு மன வருத்தத்தைத் தந்தது.

ஒரு கணம் தன் கையில் இருந்த அந்த ப்ளாஸ்டிக் பையைப் பார்த்த ஜான் டேவிடிற்கு ஒரு எண்ணம் தோன்றியது. "ஐம்பது வயசான எனக்கு எதற்கு இவ்வளவு நல்ல டிரஸ். சின்ன வயசுல இருக்கிற இந்தப் பிச்சைக்காரனுக்கு இதைக் கொடுத்தால் இவன் இதை உடுத்திகிட்டு இந்த கிறிஸ்துமஸை எவ்வளவு சந்தோஷமாய் கொண்டாடுவான்"

ஜான் டேவிட் பின் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. தன் கையில் இருந்த ப்ளாஸ்டிக் பையை அந்தக் கையில் வைத்து மனதார சொன்னான். "மெர்ரி கிறிஸ்துமஸ்"

அந்த ப்ளாஸ்டிக் பையை வாங்கிக் கொண்ட அந்த பிச்சைக்காரன் ஓரிரு அடிகள் எடுத்து வைத்து வெளிச்சத்திற்கு வந்தான். "மெர்ரி கிறிஸ்துமஸ்" என்றான்.

ஜான் டேவிட் உடலில் மின்சாரம் பாய்ந்தது. அண்ட சராசரங்கள் ஒரு கணம் அசையாமல் நின்றன. காலம் ஸ்தம்பித்து நின்றது. கந்தல் உடைக்கு எதிர்மாறான தேஜசுடன் அவன் தினமும் பார்த்துப் பேசும் அவனுடைய கர்த்தர் காட்சி அளித்தார். அழகாய் புன்னகை செய்து கையை உயர்த்தி ஆசி கூறியபடி அவன் சிரசைத் தொட்டார். அவன் உடல் லேசாகி அவன் விண்வெளியில் மிதப்பது போல் தோன்றியது. வாழ்நாள் பூராவும் அவன் கண்ட கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. பேச முயன்றான். முடியவில்லை. "கர்த்தரே, கர்த்தரே....."என்று திரும்பத் திரும்ப மனதில் சொன்னான்.....

எத்தனை நேரம் அந்த அனுபவத்தில் திளைத்திருந்தான் என்று தெரியவில்லை. அவன் பழைய நிலைக்குத் திரும்பிய போது அவன் தரையில் மண்டி இட்டு கண்களில் இருந்து அருவியாக ஆனந்தக் கண்ணீர் வழிய "கர்த்தரே கர்த்தரே" என்று இடை விடாமல் சொல்லிக் கொண்டு இருந்தான். குழப்பத்துடன் தன்னைப் பார்த்தபடி சூழ்ந்து நின்று கொண்டு இருந்த உருவங்களுக்கிடையே அவன் கர்த்தரைத் தேடினான். கர்த்தர் அந்த வடிவத்தில் அங்கு இருந்த சுவடே இருக்கவில்லை. அவனுடைய ப்ளாஸ்டிக் பையையும் காணவில்லை.

"என்ன ஆயிற்று?" என்று யாரோ கேட்டார்கள். மனம் ஆனந்தத்தில் நிறைந்திருந்த அந்த நேரத்தில் மற்றவர்களிடம் சொல்ல அவனுக்கு வார்த்தைகள் இருக்கவில்லை.

-என்.கணேசன்

(நன்றி: நிலாச்சாரல்)
Back to top Go down
View user profile
 
கடவுளைக் காண முடியுமா?
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: