BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inவெற்றிக்கு ஏழு குறள்கள் Button10

 

 வெற்றிக்கு ஏழு குறள்கள்

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

வெற்றிக்கு ஏழு குறள்கள் Empty
PostSubject: வெற்றிக்கு ஏழு குறள்கள்   வெற்றிக்கு ஏழு குறள்கள் Icon_minitimeSun Mar 21, 2010 5:15 am

வெற்றிக்கு ஏழு குறள்கள்

எல்லா சுயமுன்னேற்ற நூல்களையும் சேர்த்து சாராம்சத்தை சுருக்கமாக அறிய முற்படுகிறீர்களா? உங்களுக்கு திருக்குறள் தான் ஒரே புகலிடம். கடுகைத் துளைதேழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்ற வர்ணனை திருக்குறளைப் பொருத்த வரை சிறிதும் மிகையல்ல.

எந்த சூழ்நிலையானாலும் சரி அதைச் சமாளிக்க என்ன அறிவுரை வேண்டுமானாலும் ஒருவன் திருக்குறளில் இருந்து பெற்றுத் தெளிவடைய முடியும். ஆன்மீகம் ஆகட்டும், லௌகீகம் ஆகட்டும், அறம் ஆகட்டும், தொழில் ஆகட்டும், அமைதி ஆகட்டும், மகிழ்ச்சி ஆகட்டும் குழப்பாமல் வழி காட்டும் அறிவுப் பொக்கிஷம் திருக்குறள் தான்.

நீங்கள் வெற்றியடைய விரும்புகிறீர்களா? உங்களுக்குப் பல நூல்கள் படிக்க நேரமும் பொறுமையும் இல்லையா? உங்களுக்கு திருக்குறள் உதவும். அதிலும் நீங்கள் எல்லாக் குறள்களையும் படிக்க வேண்டியதில்லை. ஏழே ஏழு குறள்களை நினைவில் நிறுத்தி பின்பற்றுங்கள் போதும்.


1) எண்ணத்தில் உறுதி:

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின். (666)

நினைத்ததை நினைத்தபடி அடைபவர் யார் தெரியுமா? தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்கள் தான். எண்ணத்தில் உறுதி இல்லா விட்டால் அது செயலில் முடியாது. செயலில் முடியாத எண்ணங்கள் விதைக்காத விதைகள். மாறாத உறுதியான எண்ணம் தான் எல்லா வெற்றிக்கும் ஆரம்ப விதி

2) Think positive

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து. (596)

எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகளிலும் உயர்வான எண்ணங்களை எண்ணுவதை விட்டு விடக் கூடாது. எண்ணமே வாழ்க்கை என்பது அனுபவ உண்மை. சாதகமான சூழ்நிலைகளில் பாசிடிவ் ஆகவும், உயர்வான எண்ணங்களையும் நினைப்பது பெரிய விஷயமல்ல. பாதகமான சூழ்நிலைகளிலும் அதே எண்ணங்களோடு இருப்பவன் தான் வெற்றியை தனதாக்கிக் கொள்கிறான்.

3) விடாமுயற்சி

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல். (472)

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்கு அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது எதுவும் கிடையாது. வெற்றிக்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். நம் இயல்புக்குப் பொருந்துகிற வழியைத் தேர்ந்தெடுத்து அதற்கு அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்து அந்த வழியில் விடா முயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்.

4) இந்த ஐந்தில் கவனம் தேவை

பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)

வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.

5) இந்த நான்கைத் தவிருங்கள்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)

காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலம் என்கிறார் திருவள்ளுவர். வெற்றியடைய வேண்டுபவர்கள் தோல்விக்கான வாகனத்தில் பயணம் செய்யலாமோ?

6) இவை இரண்டும் வழுக்குப்பாறைகள்

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. (854)

ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், யாருக்கும் எளியவன். வெற்றியின் உயரத்திற்குச் செல்பவர்கள் இந்த இரண்டு வழுக்குப் பாறைகளில் கவனமாக இருப்பது நல்லது. இல்லா விட்டால் இது வரை சாதித்தது எல்லாம் வீணாய்ப் போகும்.

7) இந்தப் பேருண்மையை மறக்காதீர்கள்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை (659)

பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும். நல்வழியில் வந்தவை தற்காலிகமாக இழக்கப்பட்டாலும் பின்னர் பயன் தரும். இந்த பிரபஞ்ச உண்மையை என்றுமே மறந்து விடாதீர்கள். வெற்றி என்பது எந்த வழியில் வருகிறது என்பது மிக முக்கியம். நேர்மையற்ற வழியில் மற்றவர் வயிறெரிந்து வருவதெல்லாம் நம்மை நிம்மதியாக இருக்க என்றுமே விடாது.

இந்த ஏழு குறள்களில் முதல் நான்கு வெற்றிக்கு வழி சொல்கின்றன. அடுத்த இரண்டும் தோல்வி தரக் கூடியவற்றில் எச்சரிக்கையாக இருக்கச் சொல்கின்றன. கடைசி குறள் வெற்றியின் நிறைவு நமக்கு என்றென்றைக்கும் நிலைக்க வேண்டுமானால் அது நியாயமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது

பின்பற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

-என்.கணேசன்
Back to top Go down
 
வெற்றிக்கு ஏழு குறள்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் - படித்தது
» வெற்றிக்கு முன் வரும் தடைகள்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: