BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in கடல் தாண்டிய உறவுகள் Button10

 

  கடல் தாண்டிய உறவுகள்

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

 கடல் தாண்டிய உறவுகள் Empty
PostSubject: கடல் தாண்டிய உறவுகள்    கடல் தாண்டிய உறவுகள் Icon_minitimeSun Feb 12, 2012 4:24 pm

அந்த ஊரில் அது ஒரு சின்ன தெரு. எதிரும் புதிருமாக இருபது வீடுகள் தாம். அங்குள்ள எல்லாரையும் எல்லாருக்கும் தெரியும். அதனால்தான் சுப்பாமணியின் வீட்டில் அந்தத் தெருவே கூடியிருந்தது.

அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. கால்மணி நேரத்துக்கு முன்னால் தெருவாசலில் யாருடனோ பேசிக்கொண்டு நின்றிருந்த சுப்பாமணியின் மனைவி இப்போது இல்லை '

வாசலில் பேசிவிட்டு வராந்தாவில் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தவள் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. தான் போகப் போகிறோம் என்பதுக்கூடத் தெரியாமலே போய்விட்டாள்.

தெருக்காரர்களுக்கு வியப்புதான். 'கொடுத்து வைத்த ஆத்மா. எந்தச் சங்கடமும் இல்லாமல் பொசுக்கென்று போய்விட்டாள். புண்ணியவதி, ' என்றார் எதிர் வீட்டுக்கோணார்.

'பூர்வஜென்மப் புண்ணியம் சார். இப்படி ஒரு சாவு யாருக்குக் கிடைக்கும். கொடுத்துவைத்தவள், ' என்றார் மேல வீட்டு நாடார்.

நாடாருக்கு வயது எண்பது. உடல் தளர்ந்து பல உபாதைகள் இருந்தாலும், கோலூன்றி எங்கும் சென்று வருவார். இப்படி ஒரு சாவு தனக்குக் கிடைக்கவேண்டுமே என்கிற ஏக்கம் அவருக்கு.

வீட்டுக்குள் மனைவி சங்கரியின் உடலை வெறிக்கப் பார்த்தபடி இருந்தார், சுப்பாமணி.

'பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டாமா ? ' என்று அருகிலிருந்த சுப்பாமணியின் மைத்துனர், கேட்டார்.

'இப்பவே சொல்லி என்ன ஆகப் போகிறது ? அவங்க போன் பண்றபோது சொல்லிக்கலாம், ' என்றார் சுப்பாமணி.

'அதெப்படி ? பிள்ளைகளுக்கு உடனே தகவல் சொல்ல வேண்டாமா ? அப்புறம் கோபப்படுவார்கள். '

'சொன்னால் மட்டும் உடனே வந்துவிடமுடியுமா ? கோபம் என்ன வேண்டிக்கிடக்கு. '

'வாராங்களோ வரலையோ. தகவலையாவது தெரிவிக்க வேண்டாமா ? '

'அதுக்கு இப்போ என்ன அவசரம் ? கொள்ளி போடக்கூட யாரும் வரமுடியாதுங்கறபோது எப்போ சொன்னா என்ன. '

'பிளேனில் டிக்கட் உடனே கிடைத்தால் நாளைன்னுக்கு வந்துவிடலாமே. உடம்பை நாம் ஐஸ் பெட்டியில் வைத்தால் போச்சு. '

'வந்து என்னத்துக்கு, பிரேதத்தைப் பார்க்கவா ?. உயிரோடு இருந்தகாலத்தில் ஆறுதலாகப் பக்கத்தில் இல்லை. செத்தபிறகு வந்தால் என்ன வரட்டாத்தான் என்ன '

'நம்ம கடமையைச் செஞ்சுட வேண்டாமா ? '

'செஞ்ச கடமையெல்லாம் போதும். இப்போ நமக்கு யார் கடமையைச் செய்யப் போறாங்க. பேசாம இரு. '

சுப்பாமணியின் விரக்தியை உணர்ந்து மெளனமானார், மைத்துனர்.

கூடியிருந்த உறவுக்காரர்கள் ஆளுக்கொரு விதமாகப் பேசிக்கொண்டிருந்தனர். சிலர் தேற்றும் பாவனையில் வயிற்றெறிச்சலைக்கொட்டினார்கள்.

'மூணு பிள்ளைகளைப் பெத்தும் ஒண்ணுகூடக் கடைசிக்காலத்தில் உதவ முடியலையே, ' என்றார் ஒருவர். இவர் தாம் ஒருசமயம், ' இவருக்கென்ன ? மூணுபிள்ளைகளும் அமெரிக்கா போயிட்டாங்க. இவருக்கு என்ன குறை ? ' என்றார். வயிறு எரிந்தார்.

சுப்பாமணியின் குறையே அதுதான். மூன்று பிள்ளைகளில் ஒன்றுகூட அருகில் இல்லாத குறை.

'தசரத சக்ரவர்த்திக்கு நான்கு பிள்ளைகள். ஒருவன்கூட அவர் சாகும்போது அருகில் இல்லை. அவரோட கட்டை வேகாமலா போச்சு, ' என்று மனதிற்குள் முனகினார், சுப்பாமணி.

முதல் பையனை அமெரிக்காவிற்கு அனுப்பியபோது சுப்பாமணியும், சங்கரியும் பெருமையால் பூரித்துப் போனார்கள். பல உறவினர்களுக்குப் பொறாமையால் வயிறு எரிந்தது.

இருபது ஆண்டுகளுக்குமுன் முதல் மகனை அமெரிக்காவிற்கு விமானம் ஏற்றிவிட்டுத் திரும்பியபோது சுப்பாமணி மகிழ்ச்சியில் திகழ்ந்தார். அப்போதெல்லாம், அமெரிக்காவிற்கு விசா கிடைத்து மேற்படிப்பிற்குப் போவதென்றால் மிகுந்த சிரமப்படவேண்டும். அமெரிக்க தூதரகம் இலகுவில் விசா தராதகாலம் அது. விசா கிடைக்காமல் தூதரக வாசலில் அழுதுகொண்டு நிற்கும் மாணவர்கள் பலரை அப்போது பார்க்கலாம்.

சங்கரிக்குப் பெருமையாக இருந்தாலும், மகன் கடல்தாண்டிப் பிரிந்து போகிறானே என்ற வருத்தமும் இருந்தது. மற்றவர்களின் புகழ்ச்சியில் வருத்தம் அமிழ்ந்துவிட்டது.

சுப்பாமணிக்கு இன்னும் நினைவிருக்கிறது- கடைசிமகனை மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு விமானம் ஏற்றி அனுப்பிவிட்டுத் திரும்பும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. திடாரென்று தான் அனாதையாகிவிட்டதாக உணர்ந்தார். மகனை அனுப்பும்போது சங்கரி தேம்பி அழுததைப் பார்த்துக்கொண்டிருந்த சுப்பாமணி, மனதிற்குள் அழுதுகொண்டிருந்தார்.

விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பியபோது 'ஏன் அழறே, இவன்தான் படிப்பு முடிந்ததும் ஊருக்குத் திரும்பி விடுவதாகச் சொன்னானே, ' என்று சமாதானப்படுத்த முயன்றார்.

'மூத்த பிள்ளைகள் இரண்டும் போகும்போது இப்படித்தான் சொன்னார்கள். என்னாச்சு ? படிச்சுட்டு அங்கேயே வேலைக்குச் சேர்ந்திட்டாங்க. இவன் முதலில் அமெரிக்கா வேண்டாம், இந்தியாவில்தான் இருப்பேன்னு சொன்னான். இப்போ என்னாச்சு ? இரண்டு அண்ணாக்களும் இவன் மனசைக் கலைச்சு அங்கே இழுத்துட்டாங்க. அங்கே போன பிறகு இங்கே எங்கே வரப்போறான். ' சங்கரி அழுதாள்.

சுப்பாமணி சோகத்தை வெளிக்காட்டாமல் புழுங்கினார்.

'நமக்குன்னு இங்கே யார் இருக்கா ? என்று ஒருநாள் சங்கரி அங்கலாய்த்தாள். ' அனாதைகள் மாதிரி காலத்தை ஓட்டறோம், ' என்றாள்.

'யாருடைய துணையும் வேண்டாம். அம்பாள் துணை இருக்காள், ' என்று சமாதானப்படுத்த முயன்றார்.

இப்போது சங்கரியின் உடலைப் பார்த்தபடியிருந்த சுப்பாமணிக்கு அப்போது சொன்னது நினைவிற்கு வந்தது. 'உனக்கு நானும், எனக்கு நீயும் துணையாயிருந்தோம். அதையும் அம்பாள் பறிச்சிட்டாளே. '

போன் மணி அடித்தது. அமெரிக்காவிலிருந்து இரண்டாவது மகன் பேசினான். எடுத்த எடுப்பிலேயே கோபத்தில் குமுறினான். 'அம்மா இறந்ததும் ஏன் போன் பண்ணலை ? ' என்றான்.

'உனக்கு எப்படித் தெரியும் ? யார் சொன்னா ? ' -சுப்பாமணி கேட்டார்.

'பாஸ்டனில் இருக்கிறானே எதிர்வீட்டு சுந்தரம், அவன் சொல்லித்தான் எனக்குத் தெரியும். தற்செயலா அவன் ஊருக்கு இப்போ பேசியிருக்கான். அவன் அம்மா சொன்னாளாம். அவன் போனில் என்னிடம் துக்கம் விசாரிச்சான். மூணாம் மனுதன் சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா ? '

'யார் சொல்லித் தெரிஞ்சா என்னடா ? தெரிஞ்சு என்ன செய்யப்போறே ? '

'என்னப்பா இப்படிப் பேசறே. அம்மா இறந்த செய்தி எனக்குத் தெரியவேணாமா ? '

'வழக்கமா நீ போன் பண்ணுகிறபோது சொல்லலாம் என்றிருந்தேன். உடனே சொல்லி நீ வந்துடப் போறியா ? '

'நான் இன்னிக்கே புறப்படறேன். டிக்கட் கிடைச்சாலும் கிடைக்கும். '

'உடனே புறப்பட்டு என்ன பிரயோஜனம் ? அம்மாவைப் பார்க்கப்போறதில்லை. கொள்ளிகூடப் போடவும் முடியாது. உனக்கு டிக்கட் உடனே கிடைக்கிறதோ இல்லையோ. அதுவரை உடம்பைப் போட்டு வைக்க முடியாது. இங்கே எல்லாரும் வந்தாச்சு. தாமதிக்க முடியாது. நீ மெள்ளவே வா. '

'கருமாதி விசேடத்துக்காவது நான் வந்துடுவேன். '

மற்ற இரு பிள்ளைகளும் தகவல் தெரிந்து போனில் கோபமாகப் பேசினார்கள்.

என்ன கோபம் வேண்டிக்கிடக்கிறது. வயதான காலத்தில் எதுவும் நடக்கலாம். பெற்றோர்களைத் தனியே விட்டுவிட்டுத் தூரதேசம் போனால் இதையெல்லாம் எதிர்பார்க்கவேண்டியதுதான். நானா உங்களைப் போகச் சொன்னேன் ? நிறையச் சம்பாதிக்கலாம் என்று போனீர்கள்....

பதினாறாம் நாள் விசேடத்திற்கு மூன்று பிள்ளைகளும் வந்துவிட்டார்கள் --பிண்டம் இறைக்க.
Back to top Go down
 
கடல் தாண்டிய உறவுகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உறவுகள்
» உறவுகள் ஊனமானால்- படித்ததில் பிடித்தது
» உறவுகள் கைவிட, துபாயில் தவிக்கும் உயிர்!
» தமிழ் கவிதைகள்
» இன்டர்நெட் மற்றும் "டிவி'யால் குடும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: