BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல! Button10

 

 கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல!

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல! Empty
PostSubject: கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல!   கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல! Icon_minitimeSun Mar 04, 2012 7:19 am



இன்றைய
காலத்தில் பெரும்பாலான மனிதர்களுக்குப் புதிராக இருப்பது என்ன தெரியுமா? மகிழ்ச்சி
தான். அதையே அனைவரும் தேடி அலைகிறார்கள். அதற்காக படாத பாடு படுகிறார்கள். பார்க்கின்ற
பலரிடம் அது இருப்பதாக எண்ணி பொறாமைப்படுகிறார்கள். ஆனால் தங்களிடத்தில் மட்டும்
ஏனது இல்லை என்று மனம் புழுங்குகிறார்கள். பொருள்களை வாங்கிச் சேர்த்தால் வருமா
என்று பார்க்கிறார்கள். குடித்தால் கிடைக்குமா, புகைத்தால் கிடைக்குமா என்று மயங்குகிறார்கள்.
கேளிக்கைகளில் கிடைக்குமா என்று தேடுகிறார்கள். புகழால் பெற முடியுமா என்று
முயற்சிக்கிறார்கள். ஆனால் மகிழ்ச்சி
பலருக்கும் என்றும் ஒரு புதிராகவே தங்கி விடுகிறது.





சில
சமயங்களில் மகிழ்ச்சி கிடைப்பது போலத் தெரிகின்றது. ஆனால் ஒருசில சின்ன
மாற்றங்களில் அது மின்னல் வேகத்தில் மறைந்தும் போகிறது. இதோ கிடைத்து விடும்,
இப்போது கிடைத்து விடும், இதைச் செய்தால் கிடைத்து விடும், இது கிடைத்தால்
கிடைத்து விடும் என்று சலிக்காமல் அதன் பின்னால் போகும் மனிதனுக்கு
மகிழ்ச்சி கடைசி வரை முழுமையாக பிடிபடுவதில்லை.
அதனால் தான் பல
சமயங்களில் கிளர்ச்சியையே மகிழ்ச்சி என்று எண்ணி அவன் ஏமாந்து விடுகிறான். வெறுமனே
ஏமாந்தாலும் பரவாயில்லை அதனால் சிறிதும் எதிர்பாராத பல பிரச்னைகளில் சிக்கிக்
கொள்கிறான்.





உதாரணத்திற்கு
சமீபத்தில் செய்தித்தாள்களில் வந்த இரண்டு நிகழ்வுகளைப் பார்க்கலாம். செய்தி
ஒன்று-கல்லூரி மாணவ நண்பர்கள் சிலர் ஜாலியாக இருக்க எண்ணி மது அருந்தி
இருக்கிறார்கள். போதையில் பேசிக் கொண்டு இருந்த போது அவர்களுக்குள் சண்டை வந்து
விட்டது. வாய் வார்த்தைகள் கைகலப்பாகி, கடைசியில் ஒரு மாணவன் தன் நண்பனைக்
கத்தியால் குத்திக் கொன்று விட்டான்.





நன்றாகப்
படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று மிக நல்ல கல்லூரியில் சீட் கிடைத்து
இன்ஜீனியராகும் கனவுகளுடன் காலடி எடுத்து வைத்த இரண்டு மாணவர்களில் ஒருவன் இறந்து
விட்டான். இன்னொருவன் சிறையில் இருக்கிறான். அவர்களின் குடும்பங்கள் கண்ணீருடனும்,
வேதனையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மகிழ்ச்சியை மதுவில் தேடியதில் அவர்களுக்கும்,
குடும்பத்தாருக்கும் கிடைத்தது பெருத்த சோகமே.





மது
மனக்கவலைக்கு ஒரு மருந்து என்கிற எண்ணம் பலருக்கு உண்டு. இது வரை மது எந்தப்
பிரச்னையையும் தீர்த்து வைத்ததாய் யாரும் சொல்லி விட முடியாது. போதையால்
பிரச்னைகள் உருவாகலாமே ஒழிய தீராது, குறையாது. மூளையை மழுங்கடித்து மந்தமாக்கி
யாரும் மகிழ்ச்சியை அடைந்து விட முடியாது.





இன்னொரு
செய்தியைப் பார்ப்போம். சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கும் ஒரு இளைஞன் நல்ல
சம்பளம் கிடைக்கும் வேலையில் இருக்கிறான். திருமணமாகி மனைவி, ஒரு பெண்
குழந்தையுடன் நல்ல குடும்பஸ்தனாக இருக்கிறான். அந்த சமயத்தில் அவனுக்கு கூட வேலை
செய்யும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. அவளுடனேயே அதிகம்
இருக்கிறான், குடும்பத்தை சரிவர கவனிப்பதில்லை, வீட்டு செலவுக்குப் பணம்
தருவதில்லை என்ற நிலை வந்தவுடன் தான் அவன் மனைவிக்கு உண்மை தெரிய வருகிறது. அவள்
அவளுடைய சகோதரனிடம் சொல்ல அவன் அவளுடைய கணவனுக்கு புத்திமதி சொல்கிறான். ஆனால் அது
எடுபடாமல் போகிறது. சகோதரன் சிலரை வைத்து கணவனைக் குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டு
போய் சிறை வைத்து மிரட்ட, வெளியே தப்பி வந்த கணவன் போலீசிடம் புகார் தருகிறான்.
சகோதரனுக்கு ஆதரவாக இருந்து இதை செய்ய வைத்த மனைவியைப் போலீஸ் கூப்பிட்டு
விசாரிக்கிறது. இனி கைதும் ஆகும் வாய்ப்பு இருக்கிறது என்ற பயம் வந்த மனைவி
தற்கொலை செய்து கொள்கிறாள். அந்த சகோதரனையும், குண்டர்களையும் போலீஸ் தேடுகிறது.
இதில் பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக தாயில்லாமல் தவித்து நிற்கிறது.





கள்ள
உறவு கிளர்ச்சியைத் தரலாம், அது என்றும் மகிழ்ச்சியைத் தராது. அந்தந்த நேரத்தில்
மயங்க வைக்கலாம், ஆனால் என்றும் மனநிறைவைத் தராது. மனைவி, குழந்தை, அமைதியான
குடும்பம், நல்ல வேலை என்று ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் கூடுதல் மகிழ்ச்சியைத்
தேடிப் போய் கள்ள உறவில் ஈடுபட்டு குடும்பத்தையே நாசப்படுத்திக் கொண்டு விட்டான்
அந்த இளைஞன்.





இந்த
இரண்டு நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சி என்றால் என்னதென்று அறியாமல் கிளர்ச்சியை
மகிழ்ச்சியாய் எண்ணியதால் விளைந்த கொடுமைகள். கானல் நீரை நிஜமென்று எண்ணி பயணித்து
ஏமாந்த கதைகள். மகிழ்ச்சியைத் தேடி ஏதேதோ செய்யப் போய் அதற்கு நேர்மாறான துக்கத்தை
சம்பாதித்த கதைகள். இந்த அளவிற்கு விபரீதத்தில் போய் முடியா விட்டாலும்
கிளர்ச்சிகள் என்றுமே வாழ்க்கையில் நன்மையையும், மகிழ்ச்சியையும் தந்து விட
முடியாது என்பது மட்டும் உண்மை.





ஆதிசங்கரரின்
பஜகோவிந்தத்திற்கு விளக்கவுரை எழுதும் போது ராஜாஜி மிக அழகாகச் சொல்வார். “இதில்
என்ன குற்றம் என்று எண்ணி மோசம் போக வேண்டாம். கண்கள் வழி திருப்தி உண்டாகாது.
உண்டாவது ஆசை தான். ஒருவன் தண்ணீரைத் தேடுவான். தாகத்தை யாரேனும் தேடுவரோ?
தேடினால் பிறகு உடனே தண்ணீரைத் தேட வேண்டுமல்லவா? நேர்மையை இழக்க
எண்ணமில்லையாயின் ஏன் நீயாகக் கஷ்டத்தை
உண்டாக்கிக் கொள்ள வேண்டும்?





தத்துவார்த்தமாகச்
சொல்லப்பட்டாலும் ராஜாஜி அவர்கள் சொன்னதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. தண்ணீரைத்
தேடுவது இயற்கை. ஆனால் தாகத்தையே தேடுவது செயற்கை. செயற்கையான எதிலும் மகிழ்ச்சி
வந்து விடாது.





கிளர்ச்சிகளின்
குணம் எப்போதும் ஒன்றே. அது அக்னியைப் போன்றது. எத்தனை விறகு போட்டாலும் அந்த
அக்னி எரிந்து கொண்டே இருக்கும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று
கேட்டுக் கொண்டே இருக்கும். தீனி போட்டு அதன் பசியைத் தீர்க்க முடியாது. தீனி
போடுவதாலேயே பசி அதிகரிக்கும். அழிவு நிச்சயம் என்ற போதிலும் அடங்கி விடாது. அது
அழித்தே அணையும்.





தீய
பழக்கங்கள் தான் கிளர்ச்சிகள் என்றில்லை. ஒரு வரம்பை மீறி உங்களிடத்தில் எழும்
எதுவும் கிளர்ச்சியாக மாறி விடலாம். பண ஆசை, புகழ் ஆசை, பொருளாசை முதலான எதுவும் வரைமுறைக்குள்
இருக்கும் போது சாதாரண ஆசைகளாக இருக்கக்கூடியவை. ஒரு வரம்பை விட்டு மேலும் மேலும்
அதிகரிக்கும் போது அவை கிளர்ச்சிகளாக மாறி விடும். கட்டுப்பாடு இல்லாமல் போகும்.
என்ன விலை கொடுத்தாவது அடையத் தோன்றும். மனிதன் என்ற நிலையிலிருந்து மிருக
நிலைக்கும் போக வைக்கும். இந்த அறிகுறிகள் தோன்றுமானால் கிளர்ச்சி தன் ஆதிக்கத்தை
உங்கள் மேல் செலுத்த ஆரம்பித்து விட்டது என்று பொருள்.





இத்தனையும்
செய்வது மகிழ்ச்சிக்காகத் தான் என்ற பொய்யான மனோபாவத்தை அது மனதில் ஏற்படுத்தும். இதில்
என்ன குற்றம் என்று அது வாதம் செய்யும். யாரும் செய்யாததா என்ற கேள்வியைக்
கேட்கும். அப்போதெல்லாம் ஒரு உண்மையை மறந்து விடாதீர்கள்- கிளர்ச்சிகள் எல்லாம்
மகிழ்ச்சிகள் அல்ல.





உண்மையான
மகிழ்ச்சி உங்களுடன் அடுத்தவரையும் மகிழ வைக்கும். உங்களோடு சேர்ந்து உங்களுக்கு
நெருங்கியவர்களையும் மகிழ வைக்கும். உண்மையான மகிழ்ச்சி நேர் வழியில் தான் வரும்.
பின்னால் வருந்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது. ஆனால் கிளர்ச்சி மகிழ்ச்சியைத்
தருவது போல தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாது.
ஆசைப்பட்டதைப் பெற எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும். உங்கள் நல்ல தன்மைகளைப்
படிப்படியாக அழிக்கும். உங்களையும் உங்களுக்கு நெருங்கியவர்களையும் கடைசியில்
துக்கத்தில் ஆழ்த்தி விடும்.





எனவே
மகிழ்ச்சிக்கும், கிளர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்திருங்கள்.
மகிழ்ச்சியை நாடுங்கள். கிளர்ச்சியை விலக்குங்கள்.







-
என்.கணேசன்


நன்றி: வல்லமை
Back to top Go down
 
கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இருவகை மகிழ்ச்சிகள்
» இது கதை அல்ல .....இது நிஜம்
» Beauty Tips - அழகுக் கேள்விகள்
» என் நேசம் என்றும் மாறவில்லை
» == Tamil Story ~~ என்றும் காதல்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: