BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchRegisterLog inஇவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து Button10

 

 இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 38

இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து Empty
PostSubject: இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து   இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து Icon_minitimeSat Dec 28, 2013 1:55 pm

இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து Ld2136

16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து... இவரால் முடியும் எதுவும்!

நவரஸா-நன்னம்பிக்கை

அலைபேசியில் ஒலிக்கிற ரம்யாதேவியின் கணீர் குரலையும் அட்சர சுத்தமான அழகுத் தமிழையும் கேட்ட பிறகு  கம்பீரமான ஒரு தோற்றம் மனதில் பதிகிறது. நேரிலோ, நேரெதிராக இருக்கிறார் ரம்யா. தீ தின்றதில், ஒரு பக்க முகமும், கழுத்து, கைகளும் சிதைந்திருக்கின்றன. ஒரு கணம் மனது கனத்தாலும், கண்ணாடியை மீறி வெளிப்படுகிற அவரது தீர்க்கமான பார்வையும் தன்னம்பிக்கை தெறிக்கிற வார்த்தைகளும் அவரை வேறு ஒரு மனுஷியாக நம் முன் நிறுத்துகின்றன.

‘ஸ்டோன்பிரிட்ஜ் பயோமெட்ரிக்’ மற்றும் ‘ரம்யாஸ் எக்ஸ்போர்ட்ஸ் - இம்போர்ட்ஸ்’ என இரு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற ரம்யா, 16 வயதில் கடுமையான தீ விபத்துக்குள்ளாகி, மரண வாசல் வரை சென்று மீண்டவர். தீ சிதைத்த உருவத்தை சரி செய்ய, இதுவரை 45 அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் மிச்சமிருப்பதாகச் சொல்கிறார்.‘‘பிறந்ததுலேருந்து என்னோட பாட்டிகிட்டயே வளர்ந்தேன். அதனால பெத்தவங்க பாசம் பெரிசா எனக்குத் தெரியாது. அன்பு, பாசம்னு எனக்குக் கிடைக்காத விஷயங்கள் எதுவும் என்னைப் பாதிக்கலை.

எதைப் பத்தியும் கவலைப்படாம, ரொம்பப் பிரமாதமா படிச்சேன். டபுள் பிரமோஷன்ல பாஸ் பண்ணினேன். அறிவோட சேர்ந்து அழகும் இருந்தது என்கிட்ட. அதுல கொஞ்சம் கர்வமும் உண்டு எனக்கு. ஒரு நாள் எல்லாம் சிதைஞ்சது. கண்ணைத் திறந்து பார்த்தப்ப, வேற ஒரு உருவம் தாங்கிக் கிடந்த அந்தக் கணத்தை இப்பவும் என்னால மறக்க முடியலை...’’ - கண்கள் மூடி, நடந்ததை விவரிக்கிறார் ரம்யா.‘‘சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிருந்தேன். எல்லாரும் வெளியே போயிருந்தாங்க. வீட்ல நான் மட்டும் தனியா இருந்தேன்.

காஃபி போட்டுக் குடிக்கலாமேன்னு பம்ப் ஸ்டவ்வை பத்த வச்சேன். ஸ்டவ்ல மண்ணெண்ணெய் ஊத்தற இடம் மூடாம திறந்தே இருந்ததை நான் கவனிக்கலை. ‘நெருப்பு சரியா வரலையே’ன்னு பின் வச்சுக் குத்திக்கிட்டே இருந்தேன். திடீர்னு சீறிக் கிளம்பின நெருப்பு, திறந்திருந்த மண்ணெண்ணெய் துளையில விழுந்து, வெளியில கசிஞ்சு, என் மேல பத்தினதுதான் தெரியும். நான் மயக்கமாயிட்டேன். 47 நாள் நினைவில்லாத
நிலைமையில ஆஸ்பத்திரியில இருந்தேனாம். ஆஸ்பத்திரியில இருந்த ஒரு கிறிஸ்தவ டாக்டருக்கு, பிரேயர் பண்ணினப்ப, என்னைக் காப்பாத்தச் சொல்லி அசரீரி மாதிரி ஒரு குரல் கேட்டிருக்கு. தீக்காயங்களால பாதிக்கப்பட்டவங்களா படுத்துக்கிடக்கிற அந்த வார்டுல, நான்தான் அவர் காப்பாத்த வேண்டிய பெண்ணுங்கிறதைக் கண்டுபிடிச்சதெல்லாம் நிஜமான அதிசயம்.

அந்த டாக்டர் தினம் என்னை வந்துப் பார்ப்பாராம். ஆனாலும், என் உடம்புல எந்த முன்னேற்றமும் இல்லை. ஒருகட்டத்துல, இது தேறாதுன்னு, நான் செத்துட்டதா நினைச்சு, என்னை மார்ச்சுவரிக்கே கொண்டு போயிட்டாங்க. அப்பவும் ஆபத்பாந்தவன் மாதிரி வந்தவர் அந்த டாக்டர்தான். என்னோட கணுக்கால்கிட்ட ரொம்ப மெலிசா கேட்ட நாடித் துடிப்பு சத்தம் அவருக்குக் கேட்டு, மார்ச்சுவரிக்குள்ள ஓடி வந்து, எனக்கு உயிர் இருக்கிறதை உறுதி செய்து, வெளியே கொண்டு வந்திருக்கார். அன்னிலேருந்து 3-வது நாள் நான் கண் விழிச்சேன். ‘உனக்கு சிகிச்சை கொடுக்க நான் தயார். ஆனா, நீ ஒத்துழைப்பியா’ன்னு கேட்டார். ஏதோ ஒரு தைரியத்துல சரின்னு சொல்லிட்டேன்.

என்னோட 2 கைகளையும் மேலே கட்டிட்டு, துணி துவைக்கிற பிரஷ்ஷால தீயில வெந்து, ஒட்டி, சீழ் பிடிச்சுப் போயிருந்த சதைப் பகுதிகளைத் தேய்க்கச் சொன்னார். வலி தாங்காமக் கதறித் துடிச்சேன். காயங்கள்லேருந்து சதை பிஞ்சு தொங்க, ரத்தம் கொட்டும். மரண வேதனை அது. கருகிப் போன அந்த தசைகளை சுத்தப்படுத்தி எடுத்து, ரத்தம் தெரியற அளவுக்கு சருமம் மாறினாதான், அறுவைசிகிச்சை சாத்தியம்னு சொல்லிட்டார் டாக்டர். வாழணுங்கிற வெறியில எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டேன். நான் ஆஸ்பத்திரியில இருந்த வரைக்கும் என்னைச் சுத்தியிருக்கிற யாரும் முகம் பார்க்கிற கண்ணாடியை உபயோகிச்சிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருந்தார். அதையும் மீறி ஒருநாள் காந்தியோட ஃப்ரேம் போட்ட படத்துல என் முகம் லேசா தெரியவே அதிர்ச்சியாயிட்டேன்.

கை, கால்கள் எல்லாம் வெந்து கருகிப் போனதைக் கூடப் பெரிசா எடுத்துக்காம, ‘என்னோட மூக்கை காணோம்’னு அழுது, ஆர்ப்பாட்டம் பண்ணினேன். எனக்கு சிகிச்சை கொடுத்த டாக்டர் அளவுக்கு மீறின தைரியம் சொல்லி என்னைத் தேத்தினார். எனக்கு எந்தக் கட்டத்துலயும் தற்கொலை எண்ணம் தலைதூக்கிடக் கூடாதுங்கிறதுலயும் கவனமா இருந்தார்.  2 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்பத்திரி வேண்டாம், வீட்லயே சிகிச்சை செய்துக்கலாம்னு முடிவு பண்ணினாங்க. பிறந்ததுலேருந்தே பெத்தவங்க பாசம் இல்லாம, சொந்த, பந்தம் தெரியாம வளர்ந்த எனக்கு, திடீர்னு வீட்டுக்குப் போறதுல பெரிய தயக்கம் இருந்தது. என்னோட நிலைமையைப் பார்த்து, 6 மாசமோ, ஒரு வருஷமோ எனக்கு சேவை செய்வாங்க. அப்புறம் நான் அவங்களுக்குப் பாரமா தெரிவேன். என்னோட தன்னம்பிக்கையை சிதைப்பாங்க. தைரியத்துக்கு தடை போடுவாங்க.

விடாமுயற்சிக்கு முட்டுக்கட்டை விழும். வாழணுங்கிற வைராக்கியமே ஒரு கட்டத்துல காணாமப் போயிடும். இதையெல்லாம் யோசிச்சு, நான் வீடு வேண்டாம்னு முடிவெடுத்தேன். ‘இந்த நிலைமைக்கு வந்த பிறகும் உனக்கு திமிரு அடங்கலை... கொழுப்பு அதிகம். நீயெல்லாம் இன்னும் நிறைய பட்டாதான் அறிவு வரும்’னு என் காது படவே பேசினாங்க. நான் எதையுமே பெரிசா எடுத்துக்கலை. ‘டாக்டர் எனக்கொரு வேலைக்கு ஏற்பாடு பண்ணுங்க. நான் ஹாஸ்டல்ல தங்கிட்டே என்னோட ட்ரீட்மென்ட்டை கன்டின்யூ பண்ணிக்கிறேன்’ன்னு சொன்னேன். ‘கை விரல்கள் எல்லாம் சுருங்கியிருக்கு. காயங்கள் முழுசா ஆறலை. உனக்கு யார் வேலை தருவாங்க’ன்னு கேட்டார்.

‘இல்லை... எனக்கு நம்பிக்கை இருக்கு... ஏற்பாடு செய்யுங்க’ன்னு கதறினேன். கம்ப்யூட்டர் ஆபரேட்டரா ஒரு இடத்துல வேலை கிடைச்சது. வேலை பார்த்துக்கிட்டே, எம்.சி.ஏவும், எம்.பி.ஏவும் முடிச்சேன். ஹாஸ்டல்ல தங்கினேன். ‘என்னோட சம்பளத்தை 60 - 40ஆ பிரிச்சேன். 60 சதவிகிதத்தை என்னோட சிகிச்சைக்காகவும், என்னைச் சார்ந்தவங்களுக்காகவும் செலவு செய்யவும், 40 சதவிகிதத்தை சமூக சேவைக்காகவும் ஒதுக்கினேன். படிக்க கஷ்டப்படறவங்க, கணவர் இல்லாதவங்க, ஆண் துணை இல்லாமக் கஷ்டப்படறவங்களுக்கெல்லாம் என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யறேன். அவங்களுக்கான ஒரு ஆதரவு இல்லத்தையும் சீக்கிரமே ஆரம்பிக்கிற முயற்சிகள்ல இருக்கேன்.

ஹாஸ்டல்ல வந்து சேர்ந்ததும், கலைச்செல்வி அக்காவை சந்திச்சேன். நான் ஓயாமப் பேசுவேன்னா, அக்கா எனக்கு அப்படியே நேரெதிர். முழுநேரமும் அவங்களை கலாய்க்கிறதும், சீண்டிப் பார்க்கறதுமே வேலையா திரிவேன். ஏற்கனவே தீ விபத்துல பட்ட காயங்கள் முழுக்க ஆறாத நிலையில, எனக்கு கழுத்துல டி.பி. கட்டி ஒண்ணு வளர்ந்து, ஆபரேஷன் பண்ண வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. சதாசர்வ காலமும் நான் சீண்டிக்கிட்டே இருந்த கலை அக்காதான்,  அம்மா ஸ்தானத்துல இருந்து என்னைப் பார்த்துக்கிட்டாங்க. எங்க ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல அன்னியோன்யம் வளர்ந்தது. எனக்கு அவங்க, அவங்களுக்கு நான் ஆதரவா இருக்கிறதா முடிவெடுத்தோம். ‘ஸ்டோன்பிரிட்ஜ் பயோமெட்ரிக்’னு ஒரு கம்பெனியும், ‘ரம்யாஸ் எக்ஸ்போர்ட்ஸ் - இம்போர்ட்ஸ்’னு ஒரு கம்பெனியையும் ஆரம்பிச்சேன். உடல்நலம் சரியில்லாததால அவங்க பார்த்திட்டிருந்த வேலையை விட்டாங்க. எனக்கு அம்மாவா இருந்து என்னைப் பார்த்துக்கிற கலை அக்காவை, என்னோட கம்பெனிக்கு அட்மின் டைரக்டராக்கினேன்.

விபத்து நடந்த புதுசுல, நான் எங்கேயாவது வெளியே போனா, என்னை வித்தியாசமான ஜந்து மாதிரி பார்ப்பாங்க. பஸ்ல என் பக்கத்துல யாரும் உட்கார மாட்டாங்க. தொழுநோய் போலன்னு பேசிக்குவாங்க. கேள்வி மேல கேள்வியா கேட்பாங்க. நான் யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன். ஊமை போலம்பாங்க. என்னைக் கடந்து போனாலும், திரும்பித் திரும்பி என்னைப் பார்ப்பாங்க. எதுவுமே என்னை ஒண்ணும் செய்யாது. என்னை நோக்கி வரும் விமர்சனங்களையும் பார்வைகளையும் பாசிட்டிவாக எடுத்துக்கப் பழகினேன். இதுவரைக்கும் 45 ஆபரேஷன்ஸ் முடிஞ்சிருக்கு. வயித்துப் பகுதியிலேருந்தும் தொடையிலேருந்தும் சதைகளை வெட்டி, ஒட்டி, உருவமே இல்லாம உருக்குலைஞ்சிருந்த எனக்கு ஒரு உருவத்தைக் கொடுத்திருக்கார் டாக்டர். இன்னும் நாலஞ்சு ஆபரேஷன்ஸ் மிச்சமிருக்கு.

எதுவுமே என்னோட வெளிப்புற அழகுக்காக பண்ணினதில்லை. மார்க்கெட்டிங் வேலையில தலைமைப் பொறுப்புல இருக்கேன். பெரிய ஆட்களோட மீட்டிங் நடக்கும். ரொம்ப நேரம் பேசினா, எனக்கு வாய்லேருந்து எச்சில் வழியும். அதைக் கட்டுப்படுத்த ஒரு ஆபரேஷன். கண்ணுக்கடியில ஒரு தொய்வு. பார்வை பாதிக்கக்கூடாதுன்னா அதை சரிசெய்ய இன்னொரு ஆபரேஷன்... இப்படி எல்லாமே என் பிரச்னைகளை சரி செய்யறதுக்கானதுதான். ஒவ்வொரு ஆபரேஷனுக்கும் குறைஞ்சது ஒன்றரை முதல் 2 லட்சம் செலவாகும். இப்போதைக்கு என்னோட பொருளாதார நிலை இடம் கொடுக்கலைன்னு தள்ளிப் போட்டிருக்கேன்.

முன்னல்லாம் ‘நான் எதுக்காக இருக்கேன்’னு அடிக்கடி ஒரு கேள்வி வரும். ‘எதுக்காகவோ இருக்கோம்’னு எனக்கு நானே சமாதானமும் சொல்லிப்பேன். ஆனா, அதோட உண்மையான அர்த்தம் இப்பதான் புரிய ஆரம்பிச்சிருக்கு. நாலு பேருக்கு என்னால முடிஞ்ச நல்லதைச் செய்யணும்... சொல்லணும்... அப்பதான் நான் வாழற இந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்...’’அழகாகச் சொல்கிறார் வலிகளை வென்று வாழ்க்கையை அழகாக்கிக் கொண்ட ரம்யா.!
Back to top Go down
 
இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: