BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉண்மையான மகான் எப்படி இருப்பார்? Button10

 

 உண்மையான மகான் எப்படி இருப்பார்?

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

உண்மையான மகான் எப்படி இருப்பார்? Empty
PostSubject: உண்மையான மகான் எப்படி இருப்பார்?   உண்மையான மகான் எப்படி இருப்பார்? Icon_minitimeThu Mar 25, 2010 9:53 am

உண்மையான மகான் எப்படி இருப்பார்?

இந்த தேசத்தில் மனித தெய்வங்கள் அதிகம். அதிலும் சமீப காலங்களில் நான் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் மனித தெய்வங்களை நாம் மேலும் அதிகமாகப் பார்க்க முடிகிறது. திருவள்ளுவர் மழித்தலும், நீட்டலும் வேண்டா என்றார். அது முக்கியமல்ல என்பது அவர் கருத்து. ஆனால் பார்க்க மற்ற மனிதர்களைப் போலவே தோற்றம் இருந்தால் அவர்கள் வந்து வணங்குவார்களா? எனவே மழித்தல், நீட்டல், ஆசிரமம் வைத்தல், மேஜிக் காட்டுதல், கூட்டம் சேர்த்தல் என்று பல வழிகளிலும் முயன்று கோடிக்கணக்கில் இந்த தெய்வங்கள் காசு பார்க்கின்றன. புகழ் தேடுகின்றன.

அடுத்ததாக மகான்கள். கடவுள் என்று சொல்லிக் கொள்வது "ரொம்பவும் ஓவர்" என்று தீர்மானித்து அதற்கு அடுத்த நிலையை ஏற்படுத்திக் கொண்ட கூட்டம் இது. இவர்கள் பல சித்திகள், மகாசக்திகள் தங்களுக்கு இருப்பதாக பிரகடனப்படுத்திக் கொண்டு மேலே சொன்ன தெய்வங்களைப் போலவே தாங்களும் 'உழைத்து' கோடிக் கணக்கில் செல்வம் சேர்க்கின்றன.

ஆனால் உண்மையான மகான்கள் பெரும்பாலும் நம் கவனத்திற்கு வராமலேயே இருக்கிறார்கள். மற்றவர் வணக்கம், புகழ், பணம் என எதுவும் அவர்களுக்குத் தேவையில்லாததால் அவர்கள் எந்த பிரகடனமும் செய்வதில்லை. நம்முடைய அங்கீகாரமோ, அலட்சியமோ அவர்களைப் பாதிப்பதில்லை. தங்களுடைய ஞானத்தை வஞ்சனையின்றி மக்களுக்கு வழங்கிய வண்ணம் வாழும் அவர்கள் எந்த பிரதிபலனையும் எவரிடத்தும் எதிர்பார்ப்பதில்லை.

போலிகளையே அதிகம் கண்டு பழக்கப்பட்ட நமக்கு உண்மை எப்படியிருக்கும் என்பதற்கு அடையாளம் காட்ட ரமண மகரிஷி இருந்திருக்கிறார்.

இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியேயும் பிரபலமாக இருந்தாலும் துளியும் கர்வமில்லாது, சலனப்படாமல் ஜீவன்முக்தனாக வாழ்ந்து மறைந்த ரமண மகரிஷி அப்படிப்பட்ட ஞானி. தன்னிடம் மேலான சக்திகள் இருப்பதாக எப்போதும் அவர் காட்டிக் கொண்டதில்லை. யாரையும் விட தான் உயர்ந்தவன் என்பதை சூசகமாகக் கூட அவர் தெரிவித்ததில்லை.

திருச்சுழியில் வெங்கடரமணனாகப் பிறந்த ரமண மகரிஷி ஆன்மீகத் தேடலில் திருவண்ணாமலைக்கு இளம் வயதிலேயே வந்து விட்டார். ஆரம்பத்தில் இருந்தே அதிகம் பேசாமல் மோன நிலையில் அமர்ந்திருக்கும் ரமணர் பால் ஈர்க்கப்பட்ட சிலர் அவரிடம் திரும்பத் திரும்ப வர ஆரம்பித்தார்கள். அவருடைய ஞான சக்தி சிறிது சிறிதாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பலரையும் வர வைத்தது. ·ப்ராங்க் ஹம்ப்ரீஸ் (Frank H.Humphreys) என்ற ஆங்கிலேயர் வந்து ரமண மகரிஷியால் வசீகரிக்கப்பட்டு, ரமணாசிரமத்தில் சில நாட்கள் தங்கி மகரிஷியிடம் உபதேசம் பெற்று அதை எழுதி லண்டனில் வசிக்கும் தன் நண்பனுக்கு அனுப்ப அவர் அதை The International Psychic Gazetteல் 1911ஆம் ஆண்டு பிரசுரித்தார். சிறிது சிறிதாக அவர் புகழ் மேலை நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. வெளிநாட்டிலிருந்தும் அவரைத் தரிசிக்க பலர் வர ஆரம்பித்தனர்.

ஒரு முறை ரமண மகரிஷி மரத்தடியில் அமர்ந்து சந்திக்க வந்தவர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். அவரைத் தரிசிக்க வந்த ஒரு வெளிநாட்டு அன்பர் காலை மடித்து நம்மைப் போல் கீழே உட்கார முடியாததால் வேகமாகச் சென்று வெளியே போட்டிருந்த ஒரு நாற்காலியை எடுத்துக் கொண்டு வந்து அதில் உட்கார்ந்து கொண்டார். ரமணரை விட உயரமான இடத்தில் அவர் அமர்வது ஆசிரம நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அந்த மனிதரிடம் ஏதோ சொல்ல அவர் வெளியேறி விட்டார்.

இதைக் கவனித்த ரமணர் என்ன என்று விசாரிக்க அவர்கள் "உங்களை விட உயரமான இடத்தில் உட்கார வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம்" என்று சொல்ல ரமணர் மரத்தில் அமர்ந்திருந்த ஒரு குரங்கைக் காண்பித்து "இதுவும் என்னை விட உயரத்துல தானே இருக்கு.. இதை என்ன செய்யப் போறீங்க?" என்று வேடிக்கையாகக் கேட்டு "இதில் உயர்வென்ன, தாழ்வென்ன" என்று சொன்னார்.

தன்னை அவர் என்றுமே உயர்த்திக் கொண்டதில்லை. தன்னை முன்னிலைப் படுத்த அவர் முயன்றதுமில்லை. ஒரு முறை அவர் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட நினைத்த அன்பர்கள் அவரிடம் அனுமதி கேட்டனர். "பிறந்த நாள் தெரிந்தால் தானே கொண்டாடறதுக்கு" என்று ரமணர் மறுத்து விட திருச்சுழியில் அவர் பிறந்த நாளை அவர்கள் கண்டு பிடித்துக் கேட்டனர். ரமணர் சிரித்தபடி சொன்னார். "இது இந்தப் பிறவி. முதல் பிறவி எப்ப ஆரம்பிச்சது என்று தெரிந்து கொண்டாடுவது தானே நியாயம். அது தானே உண்மையான பிறந்த நாள்"

சமையலுக்காக காய்கறிகளை சுத்தம் செய்து அரிந்து தருவது, பக்தர்களின் ஆன்மீகப் படைப்புகளைப் பிழை திருத்துவது என்று எந்த வேலையானாலும் உயர்வு தாழ்வு பார்க்காமல் செய்யக் கூடியவராக ரமணர் விளங்கினார். வெளிப்புற தோற்றத்தில் மற்றவர்களை விடப் பெரிய வித்தியாசம் இல்லா விட்டாலும் அவர் கண்களில் ஞான தீட்சண்யமும், அவரைச் சுற்றி சக்தி அலைகளும் இருந்ததாக சந்தித்தவர்கள் கூறுகிறார்கள்.

பல சமயங்களில் அவரைக் காண வந்தவர்கள் தங்கள் கேள்விகளுக்கான பதில்களை அவரிடம் கேட்காமலேயே அவர் முன்னிலையில் விடைகளை உணர்ந்தனர். எண்ண அலைகளாலேயே அவற்றைப் பெற முடிந்தவர்களுக்கு பதிலளிக்கும் சக்தி அவருக்கு இருந்ததாக உள்நாட்டு வெளிநாட்டு அன்பர்கள் கூறுகின்றனர். இதை பால் பிரண்டன் (Paul Brunton) என்ற மேலை நாட்டு தத்துவஞானியும் ரமணரிடம் தன் அனுபவமாக ஒரு நூலில் (A search in secret India) எழுதினார்.

அந்த நூலில் ரமண மகரிஷியின் பக்தர்களுள் ஒருவரான யோகி ராமையா என்பவருடன் தனக்கேற்பட்ட அனுபவத்தையும் பால் பிரண்டன் குறிப்பிட்டுள்ளார். கொடிய விஷம் கொண்ட பெரிய பாம்பு ஒன்று பால் பிரண்டன் அறையில் வந்து விட பலரும் அதை அடிக்க கம்புகளை எடுக்க விரைந்த போது ராமையா அவர்களைத் தடுத்து நிறுத்தி அந்த பாம்பை தன் கைகளால் மெல்ல எடுத்து அதைத் தடவிக் கொடுக்க அதுவும் சீற்றத்தை அடக்கி சாந்தமாகி விட ராமையா அதைக் கீழே இறக்கி விட்டதாகவும், அந்த பாம்பு அங்கிருந்து யாருக்கும் எந்தத் தொந்திரவும் செய்யாமல் போய் விட்டதாகவும் பால் பிரண்டன் குறிப்பிடுகிறார்.

பால் பிரண்டன் பிறகு பயமாக இருக்கவில்லையா என்று ராமையாவிடம் கேட்டாராம். நான் அதை அன்புடன் அணுகுகையில் அது என்னை ஏன் துன்புறுத்தப் போகிறது என்று ராமையா சொன்னாராம். அந்த அளவு பண்பட்ட யோகிகளும், ஞானிகளும் கூட ரமணரின் பக்தர்களாக இருந்தார்கள் என்றால் ரமணரைப் பற்றி இனி என்ன சொல்ல?

அவருடைய இறுதிக் காலத்தில் இடது தோளில் கட்டி ஒன்று வந்து பெரிதாகத் தொடங்கியது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னும் அது குணமாகவில்லை. அதையும் கூட மகரிஷி பற்றில்லாமல் கவனிக்கலானார். மற்றவர்கள் துக்கப்பட்டபோது தான் அந்த உடல் அல்ல என்றும், உடல் அதன் இயற்கையான முடிவுக்கு வருவதில் வருந்த ஒன்றுமில்லை என்றும் புன்னகையுடன் கூறினார். சிலர் மகரிஷி தன் தவசக்தியால் அதைக் குணப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதும், சிலர் தங்களுக்கே அந்த சக்தி உள்ளது என்று மகரிஷியைக் குணப்படுத்த முயன்ற போதும் அவர்களைப் புன்னகையோடு பார்த்தாரே தவிர வேறொன்றும் செய்யவில்லை. கீதையில் கிருஷ்ணர் சொன்ன ஸ்திதப்ரக்ஞனும், குணாதீனனும் இவரல்லவோ.

ரமண மகரிஷியின் அருளுரைகளில் சில -

* ஒவ்வொரு எண்ணத்தையும் அதன் மூலத்திற்கே கொண்டு செல்லுங்கள். எண்ணங்கள் மேன்மேலும் ஓட அனுமதிக்காதீர்கள். அவ்வாறு செய்தால் அதற்கு முடிவே இல்லை. மறுபடியும் மறுபடியும் உற்பத்தி ஸ்தானத்திற்கே அழைத்துச் சென்றால் மனம் செயலற்று இறந்து போகும்.

* சித்திகள் உண்மையான ஞானத்தின் அடையாளமல்ல. சமத்துவமே உண்மையான ஞானத்தின் அடையாளம். சமத்துவம் என்பது வேறுபாடுகளை மறுப்பதன்று. மாறாக ஒன்று படும் ஏகத்துவத்தை உணர்தல்.

* மூலமாம் இதயத்தில் அகந்தை கரைதலே உண்மையான சரணாகதி. வெளிச்செயல்களால் கடவுளை ஏமாற்ற முடியாது. அவர் பார்ப்பதெல்லாம் இன்னும் எவ்வளவு அகந்தை பலமாக எஞ்சி நிற்கிறது என்பதும், எவ்வளவு அழியும் நிலையிலிருக்கிறது என்பதும் தான்.

* ஆத்மஞானத்தையே நான் வலியுறுத்துகிறேன். நம்மை அறிந்த பின்னரே உலகையும் கடவுளையும் அறிதல் வேண்டும்.... ஆத்மாவைத் தேடி ஆழ்ந்துசெல்லச் செல்ல உண்மை ஆத்மா உங்களை உள்ளிழுக்கக் காத்திருக்கிறது. பின் செய்ய வேண்டியவற்றை எல்லாம் வேறு ஏதோ ஒன்று செய்கிறது. உங்களுக்கு அதில் பங்கு இல்லை.


நன்றி: விகடன்
Back to top Go down
 
உண்மையான மகான் எப்படி இருப்பார்?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உண்மையான மகான் எப்படி இருப்பார்?
» உண்மையான தலைவன்
» உண்மையான செல்வம்
» உண்மையான அன்பு
» உண்மையான அழகு சிறு கதை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: