BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inரமணி சந்திரன், வலையுலக ஃபோபியா Button10

 

 ரமணி சந்திரன், வலையுலக ஃபோபியா

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன், வலையுலக ஃபோபியா Empty
PostSubject: ரமணி சந்திரன், வலையுலக ஃபோபியா   ரமணி சந்திரன், வலையுலக ஃபோபியா Icon_minitimeWed Mar 31, 2010 3:28 pm

கெட்டு குட்டி சுவராவ(ன)து எப்படி?


சிந்திக்க சில நொடிகள்:

புத்தகங்களை படித்து முன்னேறியவர்கள் பலர் என்றால், கெட்டு குட்டிச்சுவராவனர்கள் என்று சிலராவது இருக்க வேண்டாமா?
வாழ்நாளில் எங்கேயாவது திருந்தியவர்கள்/நல்லவர்கள் லிஸ்டில் நம் பெயர் வர முடியுமா?
மேலே உள்ள இரண்டு வரிகளை படித்தாலே தெரிந்திருக்க வேண்டுமே, புத்தங்களை படித்து கெட்டு குட்டிசுவரானவர்கள் பட்டியலில் முதல் இடம் எனக்குத்தான் என்று. புத்தகம் படிக்கும் பழக்கம் சிறு வயதிலே இருந்தே எங்களுக்கு வர காரணம் எங்கள் அப்பாதான். பல புத்தங்கள் வாங்கி கொடுத்து இருக்கின்றார். நினைவு தெரிந்து படித்த முதல் புத்தகங்கள் – அம்புலிமாமா, பூந்தளிர், பாலமித்ரா, கோகுலம், ரத்னபாலா, ராணி காமிக்ஸ் என பல சிறுவர் மலர்கள். கடைக்கு வந்த மறு நிமிடம் எங்கள் வீட்டில் ஒரு பிரதி இருக்கும். அப்பா ஒரு புத்தகமாக வாங்கி வந்தால் வீட்டில் நடக்கும் போராட்டத்தை தவிர்க்கவே பெரும்பாலும் இரட்டை புத்தகங்களாக வாங்கி வருவார். நானும் என் அக்காவும் ஆளுக்குகொரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு செட்டில் ஆனால் முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டை வரை படிக்காமல் விடுவதில்லை. புத்தகத்தை மாற்றிக் கொண்டு, அடுத்ததையும் அன்றைய இரவுக்குள் படித்து முடித்து விடுவோம். அம்புலிமாமாவில் வந்த விக்கிரமாதித்யன் வேதாளம் கதைகள், தொடர்கதைகள், பூந்தளிரில் வந்த தந்திரகார மந்திரி, கபீஷ், சுப்பாண்டி, ராணி காமிக்ஸில் வந்த மாயாவியின் சாகஸம் எல்லாம் இன்னும் கூட நினைவில் நிற்கின்றன.

கொஞ்சம் பெரிய பசங்களானவுடன் கை வைத்தது – குமுதம், ஆனந்த விகடன், மங்கையர் மலர். அதில் வந்த சுஜாதாவின் கதைகள், ரா.கி. ரங்கராஜனின் தமிழாக்கம் செய்யப்பட்ட சிட்னி ஷெல்டன் கதைகளும் வந்தவுடன் படிக்கின்ற முதல் விஷயங்கள். லாரா கெமெரூனும், டிரேஸி விட்னியும் தினமும் கனவில் வரும் கதாநாயகிகள் ஆகினர். ஆனந்த விகடனின் பின்னட்டையில் வந்த 3 டி படத்தில் தெரியும் உருவத்தை கண்டுபிடிப்பதே அந்நாளைய சாதனையாக இருந்தது. இன்றைய அளவிற்க்கு சினிமா சார்ந்ததாக இல்லாமல் இருந்ததாக ஞாபகம், தெளிவாக நினைவில்லை. சுஜாதாவின் தூண்டில் கதைகளின் வரிசையில் வந்த கறுப்பு குதிரை கதையை எத்தனை முறை படித்து இருப்பேனோ எனக்கே தெரியவில்லை. அதே போல மங்கையர் மலரில் வந்த ஒரு கதை – ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வருவாள். நிறைய தங்கைகள் உள்ள குடும்பம். அனைவருக்கும் வாழ்க்கையில் வழி காட்ட, தனக்கு குழந்தைகளே வேண்டாம் என முடிவு செய்து, தையல் வேலை எல்லாம் செய்து, அனைவருக்கும் திருமணம் செய்து வைப்பாள். கடைசில ஒரு விஷேஷத்தில் அவளை உறவினர்கள் மலடி என்று கூறி அவமானபடுத்தும் போது, அந்த தங்கைகள் அனைவரும் அவளுக்கு சாதகமாக பேசி உண்மையை கூறி சந்தோஷபடுத்துவார்கள். அந்த தியாக சுடர் கதையை படித்து விட்டு, நானும் நிறைய தங்கைகள் இருக்கிறவனாக பார்த்துத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று எண்ணம் கொண்டு திரிந்த காலம் அது – ஐந்தாவதோ நாலாவதோ படித்துக் கொண்டிருந்தேன் அப்போது. இன்னொன்று – ஒரு பெண் ஊரின் நடுவில் இருக்கும் சாராயக்கடையை எடுக்க மகளிர் மன்ற பெண்களுடன் சென்று போராடி வெல்வாள். அன்பான வீட்டுக்காரர் இருப்பார், ஒரு நிருபர் உதவி செய்வார், கரெக்டாக அன்றைக்கு கலெக்டர் அந்த பக்கம் வருவார் – அப்படி எல்லாம் போகும் கதை. அன்றைக்கு அவள் வெள்ளை காட்டன் புடவையில் நீல பொட்டுகள் போட்ட புடவை கட்டி சென்றிருந்தாள் என்பது வரை நினைவு இருக்கின்றது என்றால், எத்தனை தரம் அதை படித்து பரவசப்பட்டு இருப்பேன் என்று நீங்களே யூகித்து கொள்ளலாம்.

வார இதழ்களுக்கு அடுத்தபடியாக பரமார்த்தகுரு கதைகள், தெனாலிராமன், பீர்பால், மரியாதைராமன், ஆயிரத்தொரு இரவுகள், விக்கிரமாதித்யன் பதுமைகள், இப்படியாக பல புத்தகங்கள் படித்து இருப்பேன். படிப்பது பிடிக்கும் என்பதால், படித்ததெல்லாமே பிடித்தது. ஐந்தாவது வரை படித்தது தமிழ் மீடியம் பள்ளி என்பதால் ஆங்கில அறிவு மிகக்குறைவு. இந்த டின்டின், டிங்கிள், famous five, nancy drew, enid blyton, ஆர்ச்சீஸ் எல்லாம் படித்ததே இல்லை. ரொம்பவே விவரம் தெரிந்த பிறகு சரி இதை எல்லாம் படிக்காமல் இருந்தால் மிகவும் அவமானம் என்று படிக்க முயற்சி செய்தேன், ஆனால் மனதில் பதியும் அளவிற்க்கு எதுவும் தேறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சாமான் கட்டி வரும் பொட்டல கவர் வரைக்கும் படிக்கும் பைத்தியம் முத்தியது. அப்படியே கொஞ்சம் தேவிபாலா, கண்மணியில வரும் நாவல்கள் என கையில் கிடைக்கும் புத்தங்கள் – இதை எல்லாம் எங்கப்பா வாங்கி தரவில்லை என்று சொல்லவும் வேண்டுமோ…

சரி இது வரை படித்து வந்தவர்களுக்கு, இதை எல்லாம் படிப்பதற்க்கும் கெட்டு குட்டிசுவராவதற்க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவரகளுக்கு - இனிமேல தான் கதையே ஆரம்பிக்குதுங்க…

என்னுடைய விதி வாழ்க்கையில் எப்படி விளையாடியது என்றால் – ஒன்பதாவது முடிந்து பத்தாவது போகும் விடுமுறையில் எங்கள் கணித டியுஷன் மிஸ் வீட்டில் ஒரு புத்தகத்தின் வடிவில் உக்காந்து இருந்தது. மத்தியான வேளை பொழுது போகாமல் அவங்க வீட்டிற்க்கு சென்ற நான், சும்மா இல்லாமல், எங்க மிஸ் வீட்டுக்காரர் அவர் ஆபிஸ் லைப்ரரில இருந்து கொண்டுவந்திருந்த – ரமணி சந்திரன் நாவல் – “மயங்குகிறாள் ஒரு மாது” என்ற ஒரு புத்தகத்தை எடுத்து, ஒரு பாய் தலையனை சகிதமாக படுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். கதையை எழுதினால் அடிக்க வருவீர்கள் தான் இருந்தாலும் சிறு சுருக்கமாக – கதாநாயகி கதாநாயகனை சீண்டும் விதமாக நடந்து கொள்வாள், அதனால் கோபமடைந்த கதாநாயகன் அவளை கடத்தி சென்று விடுவான், வீட்டினர் அனைவரும் அவள் யாருடனோ ஓடிவிட்டதாக நினைத்து கொள்வர், கொஞ்ச நாள் கழித்து அவள் கர்ப்பவதியாக திரும்பி வரும்போது யாரும் ஏற்றுக்கொள்ளாததால் தற்கொலைக்கு முயன்று தோற்று, திரும்ப குழந்தையை ஒப்படைக்க வந்து திரும்பவும் சிறைபடும் போது, கதாநாயகனுக்கு அவள் மீது அன்பு ஏற்ப்பட்டு, பின்னர் அவளுக்கும் ஏற்ப்பட்டு, அவள் வீட்டு மனிதர்கள் வந்து ஒப்புக்கொண்டு திருமணம் நடப்பதாக முடியும். இப்போது எழுதும் போது உங்களுக்கு என்ன தான் காதில பூ என்று தோன்றினாலும், அப்போது நான் எப்படி படித்தேன் என்று நன்றாக நினைவு இருக்கின்றது. கண்களி நீர் வழிய வழிய தலையனை முழுவதையும் ஈரமாக்கி, கண்களை கண்ணீர் மறைக்க எனக்கே நடந்தது போல நினைத்து அவ்வளவு சோகமாக படித்தேன். விவரம் அறியாத அந்த வயதில் படித்தது ஒரு வாரத்துக்கு அந்த தாக்கம் இருந்தது.

நான் மட்டும் கெடுவேனா, என்னுடைய டியுஷன் தோழி யாமினிக்கும் சொல்லி, அவளும் படித்தாள். அப்படியே என்னுடைய ஃபீலிங்க்ஸை திருப்பி படித்துக் கொள்ளுங்கள், அதுதான் அவள் நிலமையும் கூட. அப்போதுதான் தெரிந்தது ரமணி சந்திரன் என்று ஒரு எழுத்தாளர் இருக்கின்றார் என்று… முதல் கதை ரொம்ப பிடித்து இருந்ததனால் சரி அவரது மற்ற புத்தகங்களை படித்து பார்க்கலாம் என்று அவள் அம்மா மெம்ப்ராக இருந்த லைப்ரரிக்கு சென்று புத்தங்கள் எடுக்க ஆரம்பித்தோம்… எப்படி ஆரம்பித்தோம் என்று தான் நினைவு இருக்கின்றது, அடுத்து அடுத்து படித்த புத்தங்கள் எல்லாமே கூட நன்றாக இருந்தாக நினைவு. ஒளித்து மறைத்து படித்துக் கொண்டு இருக்கும் போது தான் தெரிந்தது யாமினியின் அம்மாவும் ரமணி சந்திரன் புத்தகங்கள் விசிறி என. ஒளித்து மறைத்து படிக்கும் தொல்லை விட்டது என்றால், நாங்கள் கொண்டு வரும் புத்தகங்களுக்கு அவர்களும், போட்டி போட்டது அன்ட்டி-கிளைமேக்ஸ். வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆனால், புத்தகம் எடுப்பதும், மூவருமாக படிப்பதும் பழக்கமானது. வெண்மையின் நிறம் எத்தனை என்ற ஒரு புத்தகத்தை படிக்கும் போது, நான் அழுததை அவர்கள் பார்த்து என்னை ஓட்டியது மறக்கவே முடியாது. இப்படியாக நாள் நல்ல நாள், வைரமலர், எனக்காவே நீ, விடியலை தேடும் பூபாளம், என் கண்ணில் பாவையடி, காதலெனும் சோலையிலே என பல புத்தகங்கள் படித்தோம்.

நடுவில் எனக்கு படித்ததையே திரும்ப படிக்கும் படிக்கும் பழக்கம் வேறு… நான் படித்து முடித்தும் அவர்கள் இருவரும் படித்து முடிக்க வில்லை என்றால், படித்த புத்தகத்தையே திரும்ப படிக்க ஆரம்பித்து விடுவேன். என்ன ஜென்மமோ என்று நீங்கள் காறி துப்புவது தெரிந்தாலும் அதை எல்லாம் மதிக்க மாட்டோம் பாருங்கள். சில புத்தகங்கள் மிகவும் சொறியாக இருக்கும், அவர்களுடைய புததகத்துடைய அப்பட்டமான காப்பியாக இருக்கும், கேவலமான கதையாக இருக்கும், அப்படிபட்ட புத்தத்ததை படித்தவுடன் நானும் யாமினியும் முடிவு செய்வோம், இத்தோடு இவ புக் படிக்கவே கூடாது யாமினி, படிக்கறவங்களுக்கு சுத்தமா மூளையே இல்லை என நினைக்கறாங்களா என்று சண்டை போடுவோம், ஆனால் அத்தனையும் சீனியை கண்ட எறும்பு போலதான்.. லைப்ப்ரரி காரர் புது புக் வந்து இருக்கும்மா என்றவுடன் விட்ட டையலாக் ஒன்று கூட ஞாபகத்துக்கு வராமல் போய், எடுத்துக் கொண்டு வருவோம் வீட்டிற்க்கு. அதை பார்த்தவுடன் யாமினி அம்மா ஒரு அற்ப புழுவினை பார்ப்பது போல பார்ப்பார்கள், அதையும் மதிக்காமல் படிக்க உட்கார்ந்து விடுவோம். பின்னர் அதே புத்தகத்தை அவர்களும் படிப்பார்கள் அப்போது அந்த பார்வை நாங்கள் பார்ப்போம்… சரி புத்தகம் தானே அதை படிப்பதில் என்ன தப்பு என்று நினைப்பவருக்கு – நாங்கள் எப்படி படிப்போம் என்றால், அதை படித்து முடிக்கும் வரை சோறு தண்ணி தேவை இல்லை. இரவு பகல் பார்ப்பதில்லை. விடியற்க்காலை நான்கு மணி வரை நிறுத்தாமல் படித்து இருக்கிறேன். லைப்பிரரியில் இருந்து திரும்பி வரும் போது நான் வண்டி ஓட்டினால் அவள் பின்னால் உட்கார்ந்து படித்துக் கொண்டு வருவாள், அவள் ஓட்டினால் நான். புத்தகத்தின் பேரை சொன்னால் கதையை சொல்லுவோம் இருவருமே. சத்தியமாக அவள் புத்தகங்கள் படிக்கும் வரை கொஞ்சம் அசட்டு தைரியம், வாய் பேச்சு எல்லாம் கம்மியாக இருந்தது என்று நினைக்கிறேன். வீட்டில் ஒரு வேலை செய்து நினைவில்லை. ஆனால் நாங்கள் படித்த எந்த புத்தகத்தின் கதாநாயகியும், எங்களைபோல புத்தகம் படித்து பொழுது போக்கிய சோம்பேறிகள் இல்லை என்ற உண்மை ஏனோ உறைக்கவே இல்லை. நிஜமாக அந்த கதையில் வரும் வில்லிகளை போலவே நாங்கள் இருந்தோம், ஆனால் கற்பனை என்னவோ மிகவும் உத்தமமான பெண்கள் என நினைப்பு…

இப்படியாக ரமணி சந்திரன் புத்தங்களோடு எங்கள் வாழ்க்கை ஓடியது… நமக்கும் இந்த கதாநாயகிகள் போல ஒரு சுவாரிஸ்யமான வாழ்க்கை அமையும்… ஒரு நல்ல ஸ்மார்ட்டான முக்கியமாக பணக்காரன் எம்.டி யாக வேலை செய்யும் கம்பனிக்கு அவரது செக்கரட்டிரியாக போவோம்… அல்லது யாராவது ஒருவனுடன் சண்டை என ஆரம்பித்து பின்னர் காதலாக மாறும் அல்லது எவனாவது ஒருவனை பார்த்தவுடனே மனசுக்குள் பட்டாம்பூச்சி பறந்து நமக்காக பிறந்தவன் இவனே என்று வெள்ளை உடை தேவதைகள் சொல்ல அவனை கரம் பிடிப்போம், இல்லை கல்யாணம் பண்ணிக் கொள்ளும் போது பிடிக்காமல் செய்து கொண்டு பின்னர் அவனே சிறந்த ஆண்மகன் என்று தெளிந்து அவனுக்காகவே வாழுவோம் அப்படியும் இல்லையா எவனாவது ஒருவன் நம்மைப்பார்த்து நம்மை த்தான் திருமணம் செய்து கொள்ளுவேன் என்று ஒற்றைக் காலில் நின்று கல்யாணம் செய்து கொண்டு நம் மேல் உயிராக வாழ்வான் என்றாவது நினைத்து இருந்தோம் பன்னிரண்டாவது படிக்கும் வரைக்கும். பின்னே அவள் கதையில் எழுதாத மாதிரி வாழ்க்கை இருந்தால் அதில் ஏதாவது சுவாரிஸ்சியம் இருக்குமா என்ன? நிஜமான கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கும் கனவுகள் எவ்வளவு சுகமாக இருந்தது?

அப்படியே கொஞ்சம் ஆங்கிலம் பக்கம் போனபோது கிடைத்தவை மில்ஸ் அன்ட் பூன்ஸ்… ஓகோ இந்த அம்மா இங்கிருந்துதான் மேட்டர் சுடுகிறார்கள் என்று கண் திறந்தது, கண்தான் திறந்ததே தவிர அறிவு திறக்கவில்லை. இரண்டையும் மிக்ஸ் செய்து படித்துக் கொண்டு இருந்தோம். கடைசியில் நிறைய புத்தகங்கள் படித்து படித்து சரி நாமே எழுத்தாளர் ஆகி விடலாம் என்ற முடிவுக்கு வராத குறை. ஒரு வழியாக அந்த அம்மா அப்போது வரை எழுதி இருந்த ஒரு 80 புக்கும் படித்து முடித்த பிறகு என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு இருந்த போது எண்டமூரி வீரேந்திரநாத் கையில் அகப்பட்டார். ரொம்ப பிடித்து இருந்தது அவர் புத்தகங்கள். அண்ணபூர்ணா என்று ஒரு புக்கில் கதாநாயகி ஊமையாக வருவாள், அவ்வளவு அருமையாக இருக்கும் அந்த கதையும் கதாபாத்திரமும்… அப்போது யோசித்தேன், நம்ம ரமணி சந்திரன் அம்மா கதாநாயகியை ஊமையாக வைத்தால், கதை எங்கே நகரும்? அவரின் முக்கிய ஆயுதமே கதாநாயகியின் வாய் பேச்சு தானே? எல்லா எண்டமூரி புத்தகங்களயும் ஒரு கையாக முடிக்காவிட்டால் பூலோகத்தில் பிறந்து என்ன பயன்? மிகவும் பிடித்தது – பர்ணசாலை, அந்த கிருஷ்ண சந்திரன்ஆதர்ஷ கதாநாயகன் ஆனான். ரமணி சந்திரனின் ஸ்டிரியோ டைப் ஹிரோவை விட ஒரு படி உயர்ந்து தெரிந்தான். மற்றும் கூண்டுக்குள் குருவி, மனைவி குணவதி சத்ரு, தர்மதாதா, உன்னை விட மாட்டேன், நேத்ரா, என பல புத்தகங்கள் பல விதமான கதைகள், படித்தவுடன் அடக்கடவுளே இந்த மாதிரி புத்தகங்களை படிக்காமல் குப்பை ரமணி சந்திரனை படித்துக் கொண்டு இருந்தோமே என்று ஒரு குற்ற உணர்ச்சியில் ஃபீல் பண்ணிக் கொண்டு இருந்தேன்.

அதற்க்குள் யாமினிக்கு திருச்சியில் கல்லூரியில் இடம் கிடைத்து விட, அவளும் இல்லாமல் நான் மட்டும் தனியாக வாசிக்கும் நிலைமை ஏற்ப்பட்டது. அதற்க்கப்புறமாக கல்லூரி வாழ்வின் அட்டகாஸங்களை அனுபவிக்க ஆரம்பித்து விட்டதால், அதற்க்கே நேரம் பத்தாமல் போக புத்தகங்கள் படிப்பது கொஞ்சம் பின்னடித்தது. அப்போதும் லைப்ரரி போகும் பழக்கம் விடவில்லை, ஆனால் மாசத்திற்க்கு ஒரு முறை என ஆனது. எந்த ஒரு எழுத்தாளரையும் மும்மரமாக படிக்காதது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும், உள்ளே போன இன்புட்களுக்கு ஒரு குறையும் இல்லை பாருங்கள். மனம் எப்போதும் நம் ஹிரோவை தேடிக்கொண்டு தான் இருந்தது, சுவாரிஸ்யமான சம்பவங்களை எதிர்பார்த்துக் கொண்டு தான் இருந்தது என்று வெளியே சொல்லக்கூடாதோ? அப்படியே கொஞ்சம் சிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர் என ஆங்கில புத்தகங்களில் டைம் பாஸ் ஆனது.

அதற்க்கு நாலு வருஷம் ஓடி விட யாமினி சென்னையிலே வேலை தேடிக்கொண்டு வந்து விட, நாங்கள் திரும்ப லைப்ரரி படை எடுப்பதை ஆரம்பித்தோம் திரும்ப… போய் என்ன செய்தோம் என்கிறீர்கள். சரி ரமணி சந்திரன் படித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது, ஏன் நாம அதை திரும்ப ரிவைஸ் பண்ண கூடாது என்று (காறி துப்பினால் மாசைடைவது உங்கள் மானிட்டர் தான்) திரும்ப ஆரம்பித்தோம். காலேஜ் பாடத்தை மூணு வருஷத்தில் ஒரு தரம் கூட ரிவைஸ் பண்ணதில்லை என்தெல்லாம் நினைவே வரவில்லை. நாலு வருஷங்களில் அந்த புத்தகத்தின் கதை என்ன மாறிவிட்டு இருக்குமா என்ன? ஆனாலும் படித்த புத்தகத்தையே திரும்ப படிக்க ஆரம்பித்தோம் அவ்வளவு ஜாலியாக.

அதற்க்குள் எங்களுக்கே ஒரு தெளிவு வந்து விட்டு இருந்தது – நம் வாழ்க்கையில் அது மாதிரி எதுவும் நடக்க போவதில்லை, சரி யார் வாழ்க்கையிலாவது நடந்ததே அதையாவது படிப்போம் என்று, நீங்கள் புக் படிக்கவேண்டாம் என்ற தெளிவு என்று நினைத்து இருந்தீர்கள் என்றால் நான் பொறுப்பல்ல. இரண்டாவது முறையாக அப்போது வரை வந்திருந்த 100 புத்தகத்தையும் திரும்ப படித்தோம். அந்த வருடம் வந்த புக் ஃபேரில் சொந்த சம்பாதியத்தில் ஆளுக்கு இரண்டு ரமணி சந்திரன் புத்தகம் வாங்கியதை மிக பெரிய சாதனையாக கருதினோம்.

சரி அதற்க்கப்புறம் வாழ்க்கை அதன் படி போக, யாமினி லண்டன் சென்று விட்டாள், நானும் வேலை மாறி, அதன் பிறகு திருமணமும் ஆனது. ரொம்ப கம்பெளெய்ன் பண்ண முடியாமல் அமைந்தது காதல் கல்யாணம் தான் என்றாலும், ரமணி சந்திரனின் எந்த ஒரு ஸ்டோரி லைனும் வராத, நாங்கள் எதிர்பார்த்தாற் மாதிரி சுவாரிஸ்யம் எதுவும் இல்லாமல் கல்யாணமும் நடந்தது. என் வீட்டுக்காரருக்கு என் புத்தக பைத்தியம் பற்றி கொஞ்சம் தெரிந்து இருந்தாலும், அப்போது அவருக்கு இருந்த மயக்கத்தில் அது எல்லாம் பெரிய விஷயமாக தெரியவில்லை என்பதே நிஜம். இப்போது கேட்டு பாருங்க, நாராசமான வார்த்தைகள் கொட்டும் அருவி போல.

அதற்க்கப்புறமும் திருந்த முடியுமா நம்மால்… மாமியார் மிகவும் நல்லவர்கள் என்பதால் வேலை செய்து களைத்து வரும் மருமகளை ஒன்றும் வேலை வாங்க மாட்டார்கள், சமையலும் பிரமாதமாக செய்வார்கள் எனவே புகுந்த வீடு பிறந்த வீடு என்ற பாகுபாடு இல்லாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. இடையில் நான் ரமணி சந்திரன் புத்தகங்களே கையில் எடுக்காத காலம் என்று ஒன்று இருந்தால் அது அகில் வயிற்றில் இருந்த போது தான். நல்ல சிந்தனைகளும், ஆக்கப்பூர்வமான எண்ணங்களுமே இருக்க வேண்டும் என்பதால் பல்லை கடித்துக் கொண்டு படிக்காமல் இருந்தேன். ஆனால் அவன் பிறந்த பிறகு லீவ் முடிந்து ஆபீஸ் வந்தேன். போட்ட ஒரு பத்து கிலோ வெயிட்டை ரமணி சந்திரன் மூலமாகத்தான் குறைத்தேன். என்ன எப்படி என்று கேட்கிறீர்களா? காலேஜ் சமயத்தில் கிடைத்தவள் யாமினி என்றால் ஆபீஸில் சுகந்தி.அங்கே கந்தன் லென்டிங் லைப்ரரி என்றால் இங்கே டிலென்டிங் லைப்ரரி. எங்களை மாதிரியே குட்டிசுவர்களுக்கு என, எப்படித்தான் சரியான இடங்களில் மாட்டுமோ?

இருவருமாக எங்கள் ஆபீஸில் உள்ள ஜிம்மிற்க்கு தினமும் ஒரு புத்தகத்துடன் சென்று விடுவோம். கையில் புத்தகம் இருந்தால் ஒரு 40 நிமிடம் டிரட்மில்லில் அலுக்காமல் நடக்கும் நாங்கள் புத்தகம் இல்லை என்றால் ஒரு பத்து நிமிடத்திற்க்கே உன்னைப்பிடி என்னைபிடி என நாக்கு தள்ளுவோம். இப்படியாக ரமணி சந்திரனை மூன்றாவது முறையாக முழுவதும் ஒரு ஆறு மாச காலத்தில் படித்து முடிக்கும் நேரம், ஆளுக்கு பத்து கிலோ குறைந்து, நான் பழைய மாதிரி ஆகி இருந்தேன். எதற்க்கு நன்றி கடன் பட்டு இருக்கிறோமோ இல்லையோ உடல் இளைத்ததற்க்கு நன்றி கடன் பட்டு இருக்கிறோம். யாராவது என்னை பார்த்து, அடிப்பாவி இப்படி இளைத்து இருக்கிறாயே எப்படி என்றால், பெருமிதமான சிரிப்பு ஒன்றை உதிர்த்து மனதிற்க்குள் நடந்த காட்சியினை ஓட்டிப் பார்ப்பேன். வெளியே சொன்னால் மானம் கப்பலேறிப் போகும் என்ற காரணத்தினால் ரகசியம் காத்துக் கொண்டு இருந்தேன்.இந்த சமயத்தில் எங்களுக்கு ஒரு ஞானோயதம் ஏற்ப்பட்டது, படித்த புத்தகங்களை ஒரு பட்டியல் போட்டு வைத்துக் கொண்டால் என்ன, பின்னாளில் ரெஃப்ரென்ஸாக இருக்குமே என்று எங்கள் மூளைக்கு ஒரு அற்புதமான ஐடியா தோன்றியதால், zoho sheet’ல் ஒரு ஷீட் போட்டு, புக் பெயர், கதாநாயகி, கதாநாயகன் பெயர்கள், கதை சுருக்கம், எங்களது கருத்து என பட்டியலிட ஆரம்பித்தோம். அது போனது அனுமார் வால் கணக்காக ஒரு 120 புத்தகங்களுக்கு மேல்.. ரமணி சந்திரனே அந்த மாதிரி ஒரு ரெஃபரென்ஸ் வைத்து இருப்பார்களா என்று தெரியவில்லை…

இதற்க்கு நான் எப்பேர்பட்ட ஓ.பி. பேர்வழி என்று தெரிந்து விட, என் வீட்டுக்காரர் உஷாராகிவிட்டார். என் கையில் புக்கை பார்த்தாலே அவருக்கு பிரஷர் ஏற ஆரம்பித்தது. அதை விட என்ன புக் படிக்கற கதை சொல்லு என்று ஓரே நச்சரிப்பு. யோவ் இந்த கதை எல்லாம் படிச்சு தான்பா பார்க்கனும், சொன்னா எல்லாம் புரியாது என்று நானும் எவ்வளவோ எஸ்கேப் ஆக பார்த்தாலும் வீடாக்கொண்டனாக அவர் துரத்த, வீட்டில் புத்தகம் படிக்கும் சுதந்திரம் கொஞ்சம் பறி போனது. பாத்ரூமில் பதுக்கி வைப்பது, துணிமணிகளுக்கு இடையே சொருகி வைப்பது, ஆள் வீட்டில் இருக்கும் போது பாத்ரூமில் உட்கார்ந்து படிப்பது என பொழப்பு நாறிப்போனது… சரி இதற்க்கு மேலே போனால் மரியாதை இருக்காது என்ற எண்ணத்தாலும், மூன்றாவது முறையும் 120 புத்தகங்கள் படித்து முடித்து விட்டதாலும், ரமணி சந்திரனை ஏறக்கட்டி வைத்தேன்.

இத்துடன் முடிந்ததா? இல்லையே, லண்டனுக்கு போனாளே யாமினி என்று ஒரு எமகாதகி. லைப்ரரி புத்தகங்கள் அங்கே கிடைப்பதில்லை என்பதால் ஆன்லைனில் ஒரு குரூப் கண்டுபிடித்தாள். அங்கு எல்லா ரமணிசந்திரனையும் ஒரு மகா புண்ணியவதி ஸ்கேன் செய்து, அப்லோட் செய்து வைத்து இருந்தாள், தான் மட்டும் கெடுவாளா என் தோழி, யான் பெற்ற இன்பம் பெருக என் தோழியும் என்ற எண்ணத்தில் எனக்கு அனுப்பி வைத்தாள். அதை பார்த்த நான் சும்மா இருப்பேனா, புக்காக படிக்கும் போது கண்டு பிடித்த கணவரால் கம்ப்யூட்டரில் ஆல்ட் டேப் போட்டு படிக்கும் போது கண்டு பிடிக்க ரொம்ப நேரம் ஆனதால் அதிலே ஒரு 50 புக் டவுன்லோட் செய்து வீட்டு கம்ப்யூட்டரில் வைத்து, வீட்டில் ஆள் இல்லாத போது, அல்லது போர் அடிக்கும் போது படித்துக் கொண்டு இருந்தேன். மனப்பாடமான புத்தகங்களை தவிர மற்றவையை படித்து டைம் பாஸ் செய்து கொண்டு இருந்தேன்….

நடுவில் காஞ்சனா ஜெயதிலகர் நாவல்களும் படித்தேன். பரவாயில்லை நன்றாகவே எழுதினாலும், நூறு பக்கத்திற்க்கு அதிகமாக இருப்பதில்லை என்பதால் சுவாரிஸ்யம் குறைவாக இருப்பதாக தோன்றியது. கதை ஆரம்பிப்பதற்க்குள் முடிந்து விடுகின்றது… கண்டிப்பாக ரமணி சந்திரன் நடையில் எழுதவில்லை என்றாலும், முக்கால் மணி நேரம் கூட தாக்குபிடிக்க மாட்டேங்குது. அடுத்ததாக ஜெயசக்தி – இவரது புத்தங்கள் பெரிதாக இருந்தாலும், சில சமயம் பயங்கர ஜவ்வாக இழுக்கின்றார். அப்புறம் கதை வேற இருக்குது… கொஞ்சம் கவணித்து படிக்க வேண்டியதாக் இருக்கின்றது. ரமணி சந்திரன் ஹிரோவும் ஹீரோயினும் சேர்ந்தவுடன் அழகாக கதையை முடித்து விடுவார், இந்த அம்மா அதற்க்கபுறம் ஒரு 20 பக்கம் எழுதுகிறார், அடக்கடவுளே… எப்போது முற்றும் வரும் என எதிர்பார்க்க தோன்றுகிறது. ஆகையால் இவர்கள் புத்தக்ங்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகை என சொல்ல முடியவில்லை.

ஆனால் இப்போதும் ரமணி சந்திரன் நாவல்களை கண்டால் கை பர பர என்று தான் இருக்கின்றது. ஒரு முப்பது- நாற்பது படு கேவலமாக இருக்கும், அதை சத்தியமாக படிக்க முடியாது, மற்றவை தேவலை, நல்ல புத்தகமாக ஒரு 40 தேறும், ஒரு மாததிற்க்கு ஒரு முறையாவது படிக்கலாம்

ஒரு சமயம், எனது கணவர் அலுவலத்தில் வேலை செய்யும் ஒருவர் ரமணி சந்திரனின் விசிறி என கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், அதுவரை பெண்கள் மட்டுமே படிப்பார்கள் என்ற என் எண்ணம் ஆட்டம் கண்டது அப்போது. இதில் வேறு அவர் அவரிடம் இருந்த புத்தகங்களை எனக்கு வேறு படிப்பதற்கு தந்தனுப்பினார், அடப்பாவி மனுஷா நாங்க படிக்காத புத்தகமே இல்லையே, என்று சொல்ல முடியாமல் வாங்கி திரும்ப படித்துவிட்டு கொடுத்தேன் பின்னே படிக்காமல் கொடுப்பதற்க்கா அவர் கஷ்டப்பட்டு கொடுத்தார்?

அவரது புத்தங்களை கடுமையாக விமர்சிப்பவர் பலரும் உள்ளனர், என் அலுவலத்திலேயே பணிபுரியும் நந்தா, பக்காவாக ஒரு பதிவினை போட்டிருந்தார். அவருக்கு பதில் எழுத வேண்டும் என்று நினைத்து நினைத்து தள்ளிப் போய்விட்டது, இப்பொது ஒரு பதிவாகவே வெளி வந்து விட்டது. அவர் கதைகளை நல்லது, அல்லது அறிவுக் கண்களை திறப்பது என்று எல்லாம் என்னாலேயே சொல்ல முடியாது. அது வெறும் ஒரு பொழுது போக்கு மட்டுமே, ஆண்கள் கும்பலாக சேர்ந்து கூத்தடிப்பது, அல்லது சிகரெட் பிடிப்பது போன்றது எப்படியோ அப்படித்தான் இந்த புத்தகங்களும் என நான் நினைக்கிறேன். இந்த கதைகளில் மாமியார் மருமகள் சண்டைகள் வருவதில்லை, வருமானத்தினை எண்ணி எண்ணி செலவு பண்ணும் வறுமை வருவதில்லை, நம்மை சுற்றிலும் நெருக்கும் சமுதாய பிரச்சனைகள் வருவதில்லை, வருவதெல்லாம் ஒரு அழகான கதாநாயகி, ஒரு பணக்கார கதாநாயகன், அவர்களின் கருத்து வேற்றுமைகள்/ஒற்றுமைகள், அவர்களை சுற்றி நிகழும் சில பல நிகழ்ச்சிகள்,குழந்தை பெற்ற பின் கல்யாணம் அல்லது கல்யாணம் செய்த பின் குழந்தை (இது எல்லாம் அரசியல்ல சகஜம்மப்பா), அன்பு, காதல், அப்புறம் ஒரு இன்ப வாழ்வு. எத்தனையோ பெண்களுக்கு இவைகளில் பல மறுக்கப் பட்டு இருக்கலாம், அவர்களின் உணர்ச்சிகளின் வடிகாலாக இந்த புத்தகங்களை படிப்பவர்களாக இருக்கலாம். மேலும் ரமணி சந்திரன் படித்ததால் வாழ்க்கை வீணாக போனது என்று புலம்புவர் யாரையும் நான் பார்த்தது இல்லை. படிப்பவர்களுக்கும் நன்றாக தெரியும், இது ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று, அப்படியும் கேளாமல் வீணாக்கி கொள்ளுபவர்க்கு, இது வெறும் கருவியாக மட்டுமே இருக்க கூடுமே தவிர முதல் காரணமாக இருக்க முடியாது என நான் நினைக்கிறேன். என்னுடைய மகன் அல்லது மகளுக்கு இவர் புத்தகங்களை படிக்க விடுவேனா என்றால், கண்டிப்பாக விடுவேன் என்று தான் தோன்றுகிறது, கூடவே ஒரு முறை வாழ்க்கை நிதர்சத்தை எடுத்து சொல்லிவிட்டு என் பெண்ணுடன் ஒரு பத்தாவது தரமாக ரிவைஸ் பண்ணிக் கொண்டு இருப்பேன்….

திருந்தாத ஜென்மம் என்றுதானே திட்டிக் கொண்டு இருக்கின்றீர்கள், அதுதான் எங்களுக்கே தெரியுமே, திருந்துவது என்றால் நாங்கள் எப்போதோ திருந்தி இருக்க மாட்டோமா?

ஜெயா.
Back to top Go down
 
ரமணி சந்திரன், வலையுலக ஃபோபியா
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ரமணி சந்திரன் நாவல்
» ரமணி சந்திரன் கதைகள்
» ரமணி சந்திரன் நாவல்கள்
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» சிவகாமியின் சபதம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: