BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 பிரச்சினையும் - தீர்வும்

View previous topic View next topic Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 35

PostSubject: பிரச்சினையும் - தீர்வும்   Tue Apr 20, 2010 9:50 am

ராமனும் லஷ்மணனும் போரில் மயக்கமடைந்தபோது, அந்த மயக்கத்தைப் போக்க சஞ்சீவி மூலிகை தேவைப்பட்டது. அதுவும் இமயமலையில்தான் கிடைக்கும். இந்தப் பிரச்னையைச் சமாளிப்பது யார்? என்ற கேள்விக்கு விடையாக அன்று நின்றது அனுமன்தான். இலங்கையில் உடல் சுகம் குறைந்தவர்களுக்கு மருந்து கிடைத்த இடம் இமயமலை! அதுவும் மருந்து சீட்டைப் பார்த்துத் தானே தேடி எடுத்துக்கொள்ள வேண்டும்! உடனே காற்றாய்ப் பறந்து இமயமலையை அடைந்தான் அனுமன். மலை முழுவதும் பச்சைப்பசேலென்று இருக்க, சஞ்சீவி மூலிகையை எங்கே தேடுவது? அந்த மூலிகை எப்படி இருக்கும் என்பதே அனுமனுக்குத் தெரியாது. என்ன செய்வது என்று யோசித்த அனுமன் செய்த முடிவு, மலையையே தூக்கிக்கொண்டு செல்வதுதான். அனுமன் மலையைவிடப் பெரிதானது போல், நாம் பிரச்சனையை விடப் பெரியவர்கள் ஆகி விட வேண்டும். மலைக்குள் துள்ளி விளையாடும் குரங்கு போல் பிரச்சனைக்குள் நாம் இல்லாமல், அதை விடப் பெரியதாய் நம் நம்பிக்கை விஸ்வரூபம் எடுக்க வேண்டும்.

பிரச்சனைகள் அதிகம் இல்லாத நேரத்தில் தலைவன் என்று ஒருவன் தேவையே இல்லை. அவரவர் வேலையை அவரவர் சரியாகச் செய்து கொண்டு போனால் கண்காணிக்க ஆள் தேவையில்லை. பிரச்சனை வரும் போதுதான் அதைச் சமாளித்து வழி நடத்தத் தலைவன் தேவைப்படுகிறான். பிரச்சனைகள்தான் தலைவனை அடையாளம் காட்டுகின்றன. பிரச்சனையைப் பார்த்ததும் ஒதுங்கும் தலைவர்கள் ஒருவகை. பாதிப் பிரச்சனையில் சமாளிக்க முடியாமல் ஓடிப்போகும் தலைவர்கள் ஒருவகை. பிரச்சனையைக் கண்டு பயப்படாமல் வரவேற்பவர்களே நல்ல தலைவர்கள்.

இன்று நாம் வெளிநாடு போவதென்றால் எவ்வளவு ஏற்பாடு செய்து கொள்கிறோம்? பயணச்சீட்டு, செலவுக்குப் பணம், கடன் அட்டை என எல்லாம் தயார் செய்து, தங்க இடம் முன்கூட்டியே பதிவு செய்து, எத்தனை நாள் தங்க வேண்டுமென எல்லாம் முடிவு செய்து கொண்டு புறப்படுகிறோம். இப்படி எதுவும் செய்யாமல் கன்னியாகுமரி கடல் நடுவே காவியுடை தரித்துத் தவமிருந்த விவேகானந்தருக்கு, அமெரிக்கா கிளம்பிச் செல்லுமாறு குருவிடமிருந்து கட்டளை வந்தது. அளசிங்கப் பெருமாளும், நண்பர்களும் திருவல்லிக்கேணி, மைலாப்பூர் மற்றும் பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வசூல் செய்த பணத்துடன், தாமதமாய் வந்த ராமநாதபுரம் ராஜா அனுப்பிய பணத்தையும் எடுத்துக்கொண்டு, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் பயணமானார் விவேகானந்தர். கையில் இருந்த சொற்பக் காசும் கரைந்து விடத், தங்குவதற்கு இடம் இல்லாமல் நடுங்கும் குளிரில், ஒரு சரக்கு ரயில் பெட்டியில், கோணிப் பைகளைப் போர்த்திக்கொண்டு இரவைக் கழித்தார். ஞான சூரியன் சேற்றில் கிடப்பதா? வேறு யாராவதாக இருந்திருந்தால் "போதுமடா சாமி! குருதேவர் கட்டளையும், அமெரிக்க வாழ்வும்!" என்று திரும்பி ஓடி வந்திருப்பார்கள்! ஆனால் பிரச்சனைகள் நம்மைத் தீர்வுக்கு அருகாமையில் இட்டுச் செல்கின்றன.

விவேகானந்தரை ரயில் பெட்டியில் தூங்க வைத்த விதி, அவர் செல்ல இருந்த சமயப் பாராளுமன்ற அமைப்பில் முக்கியமான ஒரு பெண்மணியை, அந்த ரயில் நிலையத்துக்கு எதிரில் தங்க வைத்திருந்தது. ஆம்! அந்தப் பெண்மணி காலையில் ஜன்னல் வழியே வெளியே பார்த்தபோது, அங்கே சரக்கு ரயில் பெட்டியில் விவேகானந்தர் படுத்துக் கிடந்தார். அவர் அழைத்துப் பேச, விவேகானந்தரின் பிரச்சனை தீர்ந்தது. அதற்குப் பிறகு அவர் அமெரிக்கா முழுவதும் பிரபலமானார். எதையும் வெளிநாட்டார் ஏற்றுக்கொண்டால்தான் தாமும் ஏற்றுக்கொள்ளும் இந்தியரும் விவேகானந்தரை ஏற்றுக்கொண்டனர். அன்று அந்தப் பிரச்சனையின் உச்சி, விவேகானந்தரைப் புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது.

பிரச்சனை என்பது மாறுவேடமிட்ட வெற்றி! விவேகானந்தரைப் போன்ற சிதையா நெஞ்சம் கொண்டவர்கள் காலடியில்தான் வெற்றி பணிந்து நிற்கிறது. நமக்குத்தான் பிரச்சனை என்று அதையே நினைத்துக்கொண்டிருந்தால், பிரச்சனை இன்னும் பூதாகாரம் எடுத்து, நம்மை விழுங்கி விடும். எதையும் புதிதாகச் செய்யும் போது நமக்கே ஒரு தயக்கம் இருக்கும். சுற்றி இருப்பவர்களும் ஆதரவாகப் பேச மாட்டார்கள். பல விதைகள் இதனால்தான் வெளியே முளைக்காமல் போய்விடுகின்றன. அந்த ஆரம்பகாலப் பிரச்சனைகளைச் சமாளிக்க சிதையா நெஞ்சுதான் வேண்டும்! ஆதரவற்ற குழந்தைகளுக்காக இல்லம் துவங்க வேண்டும் என்ற பலரிடம் பேசிய போது, "சமூகத்தில் யாருமே வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிய குழந்தைகள்தான் இங்கு வருகின்றன. இதை நடத்த முடியாமல் போய்விட்டால் இவர்களை என்ன செய்வாய்? நீ எடுத்து வைக்கும் முதல் படி, மீண்டும் பின்வாங்க முடியாத சூழ்நிலையை உருவாக்கும். இதைப்போல் பல பேரைப் பார்த்து விட்டோம். இதெல்லாம் ஒரு வேகத்தில் தோன்றும். தொடர்ந்து செய்ய முடியாது. ஒரு வருடம் நடக்குமா என்பதே சந்தேகம்" என்ற நண்பர்களின் குரல் வேறு. "இதுவும் சம்பாதிக்க ஒரு வழிதான்" என்று பேசியவர்களும் உண்டு. "கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா", என்ற பாரதியின் வரிகளை நினைத்துக்கொண்டு சிரித்துக் கொள்வேன்.

எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கெல்லாம் மனதைத் தளர விட்டிருந்தால் இன்று சேவாலயா நிறுவனம் நடந்து கொண்டிருக்காது. நிறுவனம் செயல்படத் தொடங்க சில ஆண்டுகளுக்குப் பின்புதான் இது சாத்தியம் என்ற நம்பிக்கை சுற்றி இருப்பவர்களுக்கு வந்தது. ஆனால் செயல் செய்பவர்களுக்கு அந்த நம்பிக்கை உறுதியாக முதலிலிருந்தே இருக்க வேண்டும். சந்தேகங்களோடு சண்டை போடாமல் தொடர்ந்து முன்னேற நமக்குச் சிதையா நெஞ்சு வேண்டும்!
Back to top Go down
View user profile
 
பிரச்சினையும் - தீர்வும்
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: