BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Button10

 

 ரமணி சந்திரன் நாவல்கள்

Go down 
3 posters
Go to page : Previous  1, 2
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Icon_minitimeSun May 23, 2010 5:04 pm

சந்தனா வீட்டை விட்டுப் போனதற்கும், அவனுக்கு வேலையில் மனம் ஈடுபடாததற்கும் எந்த விதமான தொடர்பும் இருக்கக் கூடும் என்று, தீபனால் மெய்யாகவே நம்ப முடியவில்லை!

அவனுடைய மனைவி, அவனுடைய குழந்தையைப் பெற்றவள் பிரிந்து போன போது கூட, அவனது வேலைக்கு எந்த விதமான தடையும் நேரவே இல்லை!

அவளுக்கு விமான நிலையத்துக்குப் போவதற்குக் கார் அனுப்பும்படி எலிசாவிடம் சொல்லிவிட்டு, எழுதிக் கொண்டிருந்த காட்சியை முழுதாக முடித்து விட்டுத்தானே, அறைக்குள் இருந்து அவன் வெளியே வந்ததே!

வந்து, பத்திரிகைகளுக்குப் பேட்டி, போஸ் எல்லாம் கொடுத்து, "ஓர் அத்தியாயம் முடிந்தது" என்று சொன்னது எல்லாமே, அவனுக்கு நன்றாகவே நினைவிருக்கிறதே!

இரவில் 'காஸ்டிங்' டைரக்டரோடு டின்னர் பேச்சு கூட!

எதிலுமே, அவனுக்கு எந்தத் தடையும் நேரவே இல்லை!

மனைவியே அப்படி என்றால், யாரோ ஒருத்தியான சந்தனா இல்லாதது அவனைப் பாதித்திருக்க வாய்ப்பில்லை!

ஆனால், தன்னால் தான், அந்த முட்டாள் பெண் வீட்டை விட்டுப் போனாளோ என்ற குற்ற உணர்ச்சி... ஒரு வேளை, அது காரணமாக இருந்திருக்கலாம்!

சொல்லப் போனால், சந்தனா வீட்டை விட்டு வெளியேறியதால், ஒரு முக்கியமான விஷயம் தெளிவாகி விட்டதில், அவனுக்கு நிம்மதியாகத்தான் இருக்க வேண்டும்.

சந்தனா பத்திரிகைக்காரி அல்ல என்ற முக்கியமான விஷயம்!

அவனைப் பற்றி செய்தி சேகரிப்பதற்காக வந்தவள் அவள் என்றால், இப்படி இடையில் வீட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டாள்.

செய்தி கிடைக்கும் வரை, உடும்பாய் ஒட்டிக் கொண்டு, அங்கேயே இருந்திருப்பாள்.

அந்த வகையில், அவனது சந்தேகம் நிவர்த்தியாகி, அங்கங்கே வீட்டில் அவளைப் பார்க்கும் போது, என்ன குறிப்பு எடுக்கிறாளோ என்ற எரிச்சல் இல்லாமல் இருக்க முடிவது, அவனுக்கு நிம்மதியாகத்தான் இருக்க வேண்டும்!

மாரீட்டா பிரிந்து போனதும் நிம்மதியாக இருந்த மாதிரி!

ஆனால், அப்போது போல, இப்போது ஏன் எழுத முடியவில்லை?

ஒரு வேளை, தாய், மகள் இருவரின் வாடிய முகங்களும் அவனது எழுத்தைக் கெடுத்தனவோ என்று எண்ணி முடிக்கப் பார்த்தால், அந்த எண்ணத்திலும் ஒரு பெரிய பிழை இருந்தது!

வேலை ஓடாமல் அறையை விட்டு வெளியே வந்த பிறகுதான், வீட்டினரின் வாடிய முகங்களை அவன் பார்த்ததே! எனவே, அவனது வேலை கெட்டுப் போனதற்கு, அதைக் காரணம் காட்ட, அடியோடு முடியாது!

பின்னே?

காரணம் கண்டுபிடிக்க முடியாததால், எரிச்சல் இன்னமும் அதிகமாக, அதை யாருக்கும் காட்ட மனமற்று, தீபன் மீண்டும் அவனது அறைக்குள் புகுந்து கொண்டான்.

குறைந்த பட்சமாய் வெளியே இருந்தவர்களாவது, அவன் மும்முரமாய் வேலை செய்வதாக நினைக்கட்டுமே!

சந்தனா சென்றது, அவனைப் பாதிக்கவில்லை என்றும்!

இரவு உணவும் ஏனோ தானோ என்று, எப்படியோ முடிந்தது!

"எந்த விடுதி? அது எங்கே இருக்கிறது என்று, சந்தனா ஒன்றுமே குறிப்பிடவில்லையே! என்ன, இப்படி செய்து விட்டாள்! எதற்காக என்று, உனக்கு ஏதாவது புரிகிறதா, தீபு?" என்று வருத்தத்துடன் மீனாட்சி அம்மாள் முனகவும், தீபன் பொறுமை இழந்தான்.

"என்னைக் கேட்கிறீர்கள்! இத்தனை நாளும், அவளைக் கொஞ்சிக் குலவிக் கொண்டு இருந்தது நீங்கள் தான்! உங்களையே மதிக்காமல் கிளம்பிவிட்டாள்! போகிறாள் என்று அவளை மறக்க முயற்சிப்பீர்களா, அதை விட்டு... விடுங்கள், அம்மா!" என்றான் அவன்.

"அதில்லைப்பா! என்னவோ, இது அவள் குணத்தோடு ஒத்துப் போகவில்லை!... சரி சரி, விடு. உனக்குத்தான் அவளை எப்போதுமே பிடிக்காதே!"

"கிராண்ட்மா, எனக்கு சந்தனா ஆன்ட்டி பிடிக்கும்!" என்றாள் மித்ரா கண்ணீருடன். "இப்போது யார் எனக்கு கதை சொல்வது?" என்று அழுதபடியே பாட்டியிடம் சென்று, அவளை ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள் சிறுமி!

பாட்டியும் பேத்தியும் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து, செய்கையற்று நின்றான் தீபன்.

அந்த வேளையில், பக்கக் கதவைக் கைவிட்டு திறந்து கொண்டு வந்த ராசையா, பின்புறமாய்ச் சாப்பிட போகாமல், வீட்டினுள் குடும்பத்தார் அமர்ந்திருந்த ஹாலுக்கு வந்தான்.

அவனைப் பார்த்ததும், "என்ன ராசையா, உன் தங்கை குடும்பத்தை வழியனுப்பி விட்டாய் அல்லவா? ரயில் சரியான நேரத்துக்குக் கிளம்பியதா?" என்று, அவனிடம் பொதுவாக விசாரித்தாள் மீனாட்சி.

கிராமத்துப் பக்கம் போக முடிவு செய்து கிளம்பிய தங்கை குடும்பத்தை ரயிலேற்றி விடுவதற்காக, ரயில் நிலையத்துக்குச் சென்றிருந்தான் அவன்.

திரும்பி வந்துவிட்டதைத் தன்னிடம் சொல்லவே, அவன் அங்கே வந்திருப்பதாக எண்ணிய மீனாட்சி, அதற்குத்தக பணியாளரிடம் விசாரித்தாள்.

"ஆமாம்மா, பிள்ளை குட்டியோட, மூட்டை முடிச்சு எல்லாம் ஏற்றி அனுப்பி விட்டேம்மா! ஆனா... நான் சொல்ல வந்தது, வேறேம்மா! அங்கே..." என்று குழப்பத்துடன் இழுத்தான் அவன்.

"அங்கே என்ன?"

"அங்கே... நம்ப சந்தனாம்மா வீட்டிலே இல்... வந்து, சந்தனாம்மா, எங்கயாச்சும் வெளியூரு போறாங்களாம்மா?" என்று அவன் கேட்கவும், எல்லோருமே ஷாக் அடித்தது போலத் திகைப்புடன் அவனைப் பார்த்தனர்!

இரண்டெட்டில் அவன் அருகே வந்து, "சந்தனாவை அங்கே பார்த்தாயா?" என்று ராசையாவின் தோளைப் பற்றிக் கேட்டான் தீபன்!

"விடுதிக்குப் போனவள், ரயில் நிலையத்திலா? அதுவும் இந்த நேரத்தில் எப்படி? நீ சரியாகத்தான் பார்த்தாயா, ராசையா?" என்று கேட்டாள் வீட்டுத் தலைவி.

"சொல்லு! நீ, சந்தனாவைத்தான் பார்த்தாயா?" என்று மறுபடியும் கேட்டான் தீபன்.

"ஆமாங்கய்யா! அவங்க மாதிரியேதான் இருந்தது! ஆனா, ரயிலுக்கு வெளியிலே நிக்கலை! ராவு ரயிலுக்குக் காத்திருப்பாங்களே, அந்த ரூம்புக்குள்ளார ஒரு மாதிரித் தலையைப் பிடித்துக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க! நம்ப அம்மா, எப்பவும் சிரிச்சுக்கிட்டு இருப்பாங்களே, அப்படி இல்லையேன்னு, எனக்கு சந்தேகமாப் போயிட்டுதும்மா. முக்காடும் போட்டிருக்க மாட்டாங்களே! சரி பொம்பளைங்க உட்கார்ந்திருக்கிற ரூம்பு! ஆள் அம்பு சரியாத் தெரியாம, உள்ளே போனா வம்பாப் போகுமோன்னு பயந்து விட்டேன்! அம்மா, வீட்டிலே இருக்கிறாங்களா இல்லியா?" என்று கவலையுடன் விசாரித்தான் வேலையாள்.

"என்னவோ நடந்திருக்கின்றது..." என்று மீனாட்சி சந்தேகமாகக் குழம்புகையில், தீபனுக்கு விஷயம் புரிந்து போயிற்று!

ஏனெனில் தொடங்கி வைத்தவன் அவன் அல்லவா?

இப்போது, அவனுக்கு இரண்டு பொறுப்புகள்!

சந்தனாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டி வருவதோடு, நடந்தது எதுவும் அன்னையின் காதுக்குப் போய் விடாமல் சமாளிப்பதும்!

"ஏன் தீபு, நீ சந்தனாவை ஏதேனும் சொன்னாயா?" என்று பெற்றவள் திடுமென, அவனை நேரடியாகக் கேட்கவும், ஒரு கணம் தீபன் தடுமாறிப் போனான்.
"என்னம்மா நீங்கள்? இப்படி கேட்கிறீர்கள்!" என்று சும்மா சமாளிக்க முயன்றான்.

"பின்னே? இங்கே அவளிடம் ஏதாவது தகராறு பண்ணுகிற ஒரே ஆள் நீதானே?"

"அன்னம்மா, என் கைப்பையை எடுத்து வாருங்கள். ராசையா? டிரைவர் வீடு பக்கம் தானே? நீ அவனை அழைத்து..." என்று எழுந்த தாயின் பேச்சில் குறுக்கிட்டு, "அம்மா, இந்த நேரத்தில் நீங்கள் அலைய வேண்டாம்! நான் போய் அவளைக் கூட்டி வருகிறேன்! ராசையா, எழும்பூர் தானே?" என்று, கார் சாவியை எடுத்தான் தீபன்.

தாயார் சஞ்சலத்தோடு பார்க்கவும், "நம்புங்கள், அம்மா! சந்தனாவை கட்டாயமாக கூட்டி வருவேன்! நான் வழக்கம் போல ஏதோ சொன்னேன் தான்! ஆனால், சந்தனா, இவ்வளவு தூரம்... வீட்டை விட்டுப் போகும் அளவுக்குப் பெரிதாக, அதை எடுத்துக் கொள்வாள் என்று எதிர் பார்க்கவில்லை! அவள் கையில், காலில் விழுந்தேனும், மன்றாடிக் கூட்டி வருகிறேன்! உங்களுக்காகவும், மித்ராவுக்குமாக அவளைத் திரும்ப அழைத்து வந்தே தீருவேன்! நிச்சயம்!" என்று விட்டு, வேகமாகக் கிளம்பிச் சென்றான் அவன்!

சந்தனாவை அழைத்தும் வரவேண்டும்! அதற்கு முன், அவளிடம் தனியாக பேசவும் வேண்டும்!

நல்லவேளை! சந்தனா ஒரு மாதிரிப் பழி வாங்குகிற தினுசில்லை!

"ராசையாவை..." என்று தாயார் தொடங்கியதை கேட்க, அவன் அங்கே இருக்கவில்லை! அதற்குள் வேகமாக வெளியே சென்றுவிட்டிருந்தான்.

காரை வேகமாக ஓட்டிச் சென்ற போது, அவனது கவலையெல்லாம் சந்தனா எழும்பூரில் இருந்து, எங்கேயும் போய்விடக் கூடாதே என்பதுதான்.

காரை நிறுத்திவிட்டு, வெயிட்டிங் ரூம் எங்கே இருக்கிறது என்று பார்வையால் துழாவிய போது, யாரோ பேசும் குரல் கேட்டது!

"தனியாதான் இருக்குதுபா! எப்படியாவது, அறையை விட்டு வெளியே கொண்டு வர்றது என் பொறுப்பு! அப்புறம் நீதான் பார்த்துக்க வேணும்! இன்னா சொல்ற?"

பதைப்புடன் பார்த்த போது, வெயிட்டிங் ரூம் கண்ணில் பட்டது!

உள்ளே தலை தாங்கி அமர்ந்திருந்த அவளும்!

அந்த அறையின் பொறுப்பாளர் போலத் தோன்றிய பெண்ணிடம் அனுமதி கேட்டுக் கொண்டு, அருகில் வந்தவனைப் பார்த்ததுமே சந்தனா எழுந்துவிட்டாள்.

"வெளியே வா! உன்னிடம் பேச வேண்டும்!" என்ற போதும், மறுக்காமல் உடன் சென்றாள்.

ஓரளவு ஆள் நடமாட்டம் இருக்கும் இடத்துக்குப் போனதும், அவ்வளவு நேரம் இருந்த பதைப்பு முழுவதும் கோபமாக மாற, "பெரிய கதாநாயகி என்ற எண்ணமாக்கும்?" என்ற தீபன், ஆத்திரத்தோடு சீறினான்.

"வில்லனாக நடந்தது, நீங்கள் தானே?" என்றாள் அவள் பதிலுக்கு!

"அதற்கு? இப்படி எங்கோ வந்து மாட்டிக் கொள்வதா? உன்னை வெயிட்டிங் ரூமில் இருந்து வெளியே கொணர்ந்து, எப்படி அழைத்துக் கொண்டு போவது என்று பேசிக் கொண்டிருந்தார்கள், தெரியுமா? அப்படி நான் என்ன செய்திருப்பேன் என்று நினைத்தாய்? மூன்றாம் தர சினிமா வில்லன் மாதிரிக் கதறக் கதறக் கற்பழிப்பவன் என்றா? அம்மா இருக்கும் இடத்தில், அப்படி நடப்பேனா? நான் கெட்டவனாக இருந்தால் கூட, அங்கே அம்மா இருப்பதே உனக்குப் பாதுகாப்பு அல்லவா?" என்று படபடத்தான் அவன்.

அவன் வெளிப்படையாக பேசியது, அவளது முகத்தைச் சிவக்க வைத்த போதும், "மூன்றாம் அறையில் ஆன்ட்டி இருக்கும் பொழுதுதான், வந்தீர்கள்!" என்று குத்திக் காட்டினாள் அவள்.

"அது வேறு! உன்னைப் பற்றிய தவறான எண்ணம் இருந்தது! என்ன விரட்டினாலும், அட்டைப் போல ஒட்டிக் கொண்டு, இங்கேயே இருக்கிறாய். மித்ராவை வேறு வசியம் செய்து வைத்திருக்கிறாய். காரியம் நடப்பதற்காக, எதுவும் செய்வாய் என்று நினைத்தேன்! அழகாகவும் இருந்தாயா? ஒரு முயற்சி செய்யலாமே என்று தோன்றியது... அப்போதுமே, உண்மையிலேயே மறுக்கிறவளை விரட்டுவேனா?"

என்னவெல்லாம் பேசுகிறான்!

சிவந்த முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள் சந்தனா.

"அந்த மாதிரி, நீ நினைக்கும்படியாக, நான் நடந்திருந்தால் சாரி. தயவு பண்ணி, என்னை மன்னித்துவிடு! ஆனால், நீ வீட்டை விட்டு வெளியேறியதும், ஒரு வகையில் நல்லதாயிற்று! உன்னைப் பற்றிய என் சந்தேகம் அடியோடு தீர்ந்து போயிற்று! ஆனால், இந்த மாதிரி, எந்த விதமான ஏற்பாடும் இல்லாமல் தனியே பெண்கள் கிளம்புவது, எந்த நாட்டிலுமே நல்லதில்லைதான்! சரி! வா, வீட்டுக்குப் போகலாம்!" என்று அழைத்தான் தீபன்.

அசையாமலே நின்று, "நான் இங்கே இருப்பது எப்படித் தெரியும்?" என்று கேட்டாள் அவள்.

நடந்ததைச் சொன்னான் அவன்.

"ஓ! தங்கைக்காக ராசையா இரண்டு நாட்கள் லீவு கேட்டிருந்தான். இன்றைக்குத்தான் அனுப்பி வைத்தானா?" என்றாள் சந்தனா.

இல்லாவிட்டால் என்ற வார்த்தை இருவர் மனதிலும் தோன்றியது!

"முதலில் காருக்குப் போகலாமா? காரில் போய்க் கொண்டே பேசலாம்!" என்றவன், அவள் ஒரு வினாடி தயங்கவும், "என்னை முழுதாக நம்பலாம்! இனி, அது போல நடக்க மாட்டேன், காட் ப்ராமிஸ்!" என்றான் தீபன்.

காரில் ஏறியதும், "உன்னைச் சீக்கிரமாக வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்! இல்லாவிட்டால், மித்ரா அழுது கரைந்து விடுவாள்! அம்மாவும் தவிப்பில், உடம்பைக் கெடுத்துக் கொள்வார்கள்!" என்றான் தீபன்.

"அவர்களுக்காகத்தான் கூட்டிப் போகிறீர்களா?" என்ற கேள்வி, தன்னை அறியாமல் அவள் வாயிலிருந்து வந்தது.

நெரிசலில் காரைக் கவனமாகச் செலுத்திவிட்டு, "எல்லோருக்காகவும்தான்! எனக்காகவும் தான்! என்னால், வீட்டை விட்டுப் போனாய் என்பது, நினைப்பதற்குச் சுகமாக இருக்கும் என்றா நினைத்தாய்?" என்று கேட்டான் தீபன்.

தொடர்ந்து அவனது முறையாக, "ஆனால், நீ என்ன, திடுமென இப்படிச் செய்து விட்டாய்? அங்கே ஏதோ எழுதி வைத்துவிட்டு, இங்கே வெயிட்டிங் ரூமில் வந்து இருந்து, என்ன இது?" என்று கேட்டான் தீபன்.

"என்ன செய்வது?" என்றாள் அவள்! "நீங்கள் அப்படி நடந்த பின், அங்கே தொடர்ந்து இருப்பது, மறைமுகமாக ஒப்புக் கொள்வது போலத் தோன்றும் என்ற பயம்! ஏற்கனவே, தங்குவதற்குக் கௌரவமான இடமாக்த் தேடித் தேடி அலுத்திருந்த சமயம். இன்றிரவுக்கு இங்கே பெண்கள் அறையில் தங்கி விட்டால், நாளைக்கு ஏதாவது இரண்டாம் தர விடுதியிலாவது சேர்ந்து விடலாம் என்று நினைத்தேன்..."

"நன்றாக நினைத்தாய்! அசட்டுத்தனமாய்!"

சிறு அமைதியின் பின் "சற்று நேரமாக, எனக்கும் அப்படித்தான் தோன்றத் தொடங்கியிருந்தது!" என்றாள் அவளும். "சும்மா உள்ளே வருவதும், போவதுமாக ஆண்கள் நடமாட்டம் தெரிந்தது! டிக்கெட் இருக்கிறதா என்று கேள்வி வேறு! கொண்டு வருவார்கள் என்று சொல்லி, அப்போதைக்குச் சமாளித்தேன்..."

"அதனால் தான், உன்னிடம் பேசவேண்டும் என்றதும், டிக்கெட் கொண்டு வந்தீர்களா என்கிற மாதிரி, ஏதோ கேட்டார்கள் போல! நான் சும்மா தலையாட்டிவிட்டு வந்தேன். ஆனால், இனி இந்த அசட்டுத்தனம் வேண்டாம். தேவையிராது" என்றான் தீபன்.

யோசனையோடு அவனைப் பார்த்தாள் சந்தனா.

பார்வையை உணர்ந்து, "நம்ப வேண்டும் சந்தனா. இங்கே பிறந்து வளர்ந்தவன் தான் என்றாலும், எனக்கு ஏழு ஆண்டுகளாக, அங்குள்ளதே பழகி விட்டதால், அனுசரிப்பது கொஞ்சம் கடினம். தற்செயலாகக் கை பட்டால் கூட உனக்கும் சட்டென சந்தேகம் தான் வரும்! எனவே, ஒன்று செய்வோம். பொதுவாகப் பார்த்துப் பேச வேண்டிய தருணங்கள் தவிர, இருவருமே, அடுத்தவர் பாதையில் குறுக்கிடாமல் ஒதுங்கிப் போய்விடலாம்! மித்தி, அம்மாவுக்காகத் தயவு செய்து, நீ இதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும்" என்றான் தீபன்.

ஏதோ யோசித்து, "ப்ளீஸ்!" என்று சேர்த்துச் சொன்னான்!

வேறு வழியும் தான் இல்லையே என்று யோசிக்கும் போதே, தனக்குமே, அந்த வீட்டை விட்டு வெளியே செல்ல விருப்பம் இல்லை என்று சந்தனா உணர்ந்தாள்!

அந்த வீட்டு வசதிகளுக்குப் பழகி விட்டதாலா என்று உள்ளூரக் கூசியவளுக்கு, அன்று, அவள் வீட்டை விட்டு வெளியேறிய போதும், அதே வசதிகள் இருக்கத்தானே செய்தன என்பது நினைவு வந்தது ஆறுதலைத் தர, "உம்" என்று சிக்கனமாய் சம்மதித்தாள்!

சற்று நேரம் பேசாமலே காரை ஓட்டிவிட்டு லேசாகத் தொண்டையைச் செறுமி, "வழக்கம் போலவே கடுமையாகப் பேசிவிட்டதாக அம்மாவிடம் சொன்னேன்..." என்று இழுத்தான் தீபன்.

அவன் மேலே பேசுமுன், "அப்படியே இருக்கட்டும்!" என்றாள் சந்தனா.

மற்றபடி, இதைப் போய், மீனாட்சி ஆன்ட்டியிடம் விலாவாரியாக விளக்குவாளா என்ன? கண்ராவி!

அதுவும், அவர்களுடைய பிள்ளையைப் பற்றி!

அத்தோடு, தீபனும்தான், ஒரு மாதிரியாக மன்னிப்பும் கேட்டுவிட்டானே!

"தாங்க்ஸ்!" என்றபடி, காரை வீட்டினுள் செலுத்தினான் தீபன்!
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Icon_minitimeSun May 23, 2010 5:07 pm

ஆவலும், ஆர்வமுமாக எல்லாரும் அவளை வரவேற்ற விதத்தில், அவர்களையெல்லாம் விட்டு விட்டு, அங்கிருந்து சென்றோமே என்று, சந்தனாவுக்கு உள்ளூர மனம் நெகிழ்ந்தது. உருகிப் போயிற்று!

தீபன் சொன்ன மாதிரி, என்னிடம் இந்த வேலை வைத்துக் கொள்ளாதே என்று அவனிடம் கண்டிப்பாக சொல்லியிருந்தால் போதுமா?

பழைய காலக் கதாநாயகி போல வீட்டை விட்டு ஓடி, படாத கஷ்டத்தில் மாட்டி... சரியான சமயத்தில் தீபன் வந்திராவிட்டால், அப்படியும் கூட நேர்ந்திருக்கலாம்!

மற்றவர்கள் எப்படி உணர்வார்கள் என்றும் எண்ணிப் பார்க்கவில்லை. தனக்கு என்ன நடக்கக் கூடும் என்றும் யோசிக்கவில்லை!

அதையெல்லாம் யோசியாது செல்வது, எந்த நாட்டிலும் பெண்களுக்கு நல்லதில்லை, என்றானே!

எண்ணிப் பார்க்கையில், அது எவ்வளவு சரியாகத் தோன்றுகிறது!

கடைசியில் சற்று நேரம் மனது என்னமாகப் பதறிப் போயிற்று!

இருந்திருந்து தீபனின் பேச்சு சரியாக இருப்பதாக, அவள் எண்ணுகிற காலம் கூட வரும் என்று அவள் கனவிலும் கருதியது இல்லை!

தன்னை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக... மீனாட்சி ஆன்ட்டி என்ன சொன்னாள்... அவளது கையில் காலில் விழுந்தேனும் அழைத்து வருவதாகச் சொன்னானாமே! அப்படி அவன் வந்து அவளை அந்த வீட்டுக்கு அழைத்து வருவான் என்பதும், கற்பனைக்கு எட்டாத விஷயமே!

ஆனால், எதிர்பாராதது நடப்பதுதானே வாழ்க்கை!

அவளுடைய தந்தையின் மறைவைப் போல!

சட்டென அதிர்ந்து, படுக்கையில் இருந்து, எழுந்து அமர்ந்தாள் சந்தனா!

'எஸ்கேப்பிஸம்' என்று கூடச் சில பேர் சொல்லலாம்!

ஆனால், சந்தனா அவளுடைய தந்தையின் மறைவு குறித்து நினைத்துப் பார்ப்பதே கிடையாது!

அருமையான தந்தையான அவரை தினந்தோறும் நினையாதிருக்க அவளால் முடியாதுதான்! ஆனால், அவரைப் பற்றிய பலப்பல மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை நினைவுக்குக் கொணர்ந்து பார்த்து, உருகிப் போவாளே தவிர, அவரது முடிவை, கடைசிப் பகுதியை அப்படியே மனதில் இருந்து ஒதுக்கியே தான் வைத்திருந்தாள்.

பூஞ்சை மனம் படைத்தவள் அல்ல என்பதால், அவளால், அது முடிந்தது!

ஆனால், இன்று திடுமென, ஏன் இந்த நினைவு வந்தது?

அன்று அனுபவித்த பல்வேறு உணர்ச்சிகளால் அவள் மனம் பலவீனப்பட்டு விட்டிருந்ததா?

அப்பாவின் மரணமும், அதற்கு முன்னிருந்த...

மனம், அதைத் தொடர்ந்து நினைப்பதைத் தவிர்க்க எண்ணி, அவசரமாகப் படுக்கையை விட்டு இறங்கினாள் சந்தனா.

முக்காலியின் மீது இருந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த தண்ணீரை குடித்தாள்!

வழக்கமாக இரவு உணவுக்காகச் செல்லும் போது, இந்த பாட்டிலை எடுத்துப் போவாள். தூங்குவதற்காக மீண்டும் மேலே வரும் போது, பாட்டிலை நிரப்பிக் கொண்டு வருவாள்.

இன்று என்னென்னவோ நடந்து, கீழேயே இருந்து விட்டுப் படுப்பதற்காக மட்டுமே, அறைக்கு வந்தததில், வழக்கம் விட்டுப் போயிற்று!

அப்போதும், அதில் அருந்த தண்ணீர் போதுமானதாக இருந்ததால், அதைக் குடித்துவிட்டு, ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க முயன்றாள்.

மனம் அதில் பதியாததோடு, உடலும் அயர்ந்திருந்ததால், சற்று நேரம் படிப்பதற்குள் கண் சொக்கிவிட, விளக்கை அணைத்துவிட்டுத் தூங்கிவிட்டாள்.

நல்ல அயர்ந்த உறக்கம்!

திடுமென, சந்தனா படுக்கையில் உருண்டு புரளலானாள்!

கடற்கரையில் கூட நடந்து கொண்டிருந்த தந்தை, திடுமென வீசத் தொடங்கிய சூறாவளியில், அவளை விட்டு விலகி எங்கே போனார்?

இங்கும் அங்கும் ஓடி ஓடித் தேடினால், நுரைத்துக் கொண்டு உயரே எழும்பிய அலை, முகத்தில் ரத்த காயத்துடன் அவரது முகம்!

அலை, அவரை இழுத்துப் போய்விடாமல் பிடிப்பதற்காக ஓடினாள், கால் தடுக்கிக் கீழே விழுகிறாள்!

தவிப்புடன் அலை நீரின் இழுப்பைச் சமாளித்து எழ முயலும்போதே, நடந்ததெல்லாம் கனவு என்பது, சந்தனாவுக்குப் புரியத் தொடங்கிவிட்டது.

என்னதான் முயன்றும், உடனடியாக முழு விழிப்பை கொண்டு வர முடியாமல், உடல் சண்டித்தனம் செய்தது!

சிரமப்பட்டு எழுந்து, குளியலறைக்குப் போய், வியர்த்து வடிந்த முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து, தண்ணீர் பாட்டிலுக்காகக் கையை நீட்டும் போதுதான், பாட்டிலில் தண்ணீர் இல்லை என்பது, அவளுக்கு நினைவு வந்தது!

அதொன்றும் பெரிய விஷயம் இல்லை!

வியர்த்துக் கொட்டியிருந்ததால், சற்றுக் குளிர்ச்சியாகக் குடிக்க வேண்டும் போலத்தான் சந்தனாவுக்கும் இருந்தது! எப்படியும், கீழே போய் ஐஸ் வாட்டரைத்தான் குடித்திருப்பாள்.

கூடவே, எப்போது விழித்தாலும், மீண்டும் உறங்குமுன் அவளுக்கு ஒரு மிடறேனும் தண்ணீர் குடிக்க வேண்டும்!

மீண்டும் தூக்கம் கலைந்தால், குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டுமே என்று காலி பாட்டிலையும் எடுத்துக் கொண்டு, மெல்லப் படியிறங்கி சாப்பாட்டு அறைக்குச் சென்றாள் அவள்.

ஃபிரிஜ்ஜைத் திறந்து, உள்ளிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் திறக்கும் போது, "சந்தனா?" என்று தீபனின் குரல் கேட்கவும், அவள் அதிர்ந்த வேகத்தில், பாதி திறந்த நிலையில், கையில் இருந்த தண்ணீர் பாட்டில், கீழே விழுந்து உருண்டது!

"என்ன சந்தனா?" என்றபடி, விளக்கைப் போட்டுவிட்டு, அவள் அருகில் வந்தான் அவன்.

இன்னமும் தண்ணீரைக் கொட்டிக் கொண்டிருந்த பாட்டிலை அவசரமாக எடுத்தவளின் கைகள் நடுங்குவதைக் கண்டதும், பாட்டிலை வாங்கிக் கொண்டு, சாப்பாட்டு அறை நாற்காலி ஒன்றை இழுத்து, அதில் அவளை உட்கார வைத்தான்!

அவள் வந்த நோக்கம் உணர்ந்து ஒரு தம்ளரில் குளிர்ந்த நீர் நிரப்பி அவளிடம் கொடுத்துவிட்டு, "என்ன சந்தனா? என் குரலைக் கேட்டதும் பயந்து விட்டயா?" என்று இதமான குரலில் வினவினான்.

இல்லை என்று தலையாட்டினாள் அவள். "அந்தக் க... கனவு! தி...திரும்பவும், இன்று வந்து விட்டது!" என்றாள் கலங்கிய குரலில்!

அருகிருந்த இன்னொரு நாற்காலியை இழுத்து, அதில் அமர்ந்து, "திரும்பவும், என்றால்? இதே கனவு முன்னேயும் வந்திருக்கிறதா?" என்று கேட்டான் தீபன்.

"இம்!" என்றாள் அவள் ஒப்புதலாக. "இது மூன்றாவது தடவை!"

"என்ன கனவு?" என்று கேட்டான் தீபன்.

அவனை ஒரு தரம் பார்த்துவிட்டு, அவள் பேசாதிருக்கவும், "தயங்க வேண்டாம், சந்தனா. ஒரே கனவு, திரும்பத் திரும்ப வந்தால், அதற்குக் காரணம் இருக்கும்! உன் நிலைமையைப் பார்த்தால், அது பயங்கரக் கனவு என்றும் தோன்றுகிறது! அதிலிருந்து உன்னை மீட்கும் முயற்சியாகத்தான் கேட்கிறேன் சொல்லு!" என்று, தீபன் மறுபடியும் கேட்கவும், ஒரு சிறு தயக்கத்தின் பின், சந்தனா தன் கனவுகளை விவரித்தாள்!


"ம்ம்ம், எல்லாக் கனவுகளும் கடைசியில்... சந்தனா, உன் அப்பாவின் மறைவில் பிரச்சினை இருந்ததா?" என்று கேட்டான் தீபன்!

ஆம் என்பது போலத் தலையாட்டினாள் அவள்.

"என்ன அது?"

மடியில் கோத்திருந்த விரல்களைப் பார்த்தபடி, அவள் சொன்னாள், "திருட்டு! ஒரு... ஓர் ஒன்றாம் தேதி சமயம். பள்ளியில், ஸ்டாஃப் மீட்டிங் முடிந்து, அப்பா வர நேரம் ஆகும் என்று நான் முன்னதாக வந்து விட்டேன்! பிறகு பார்த்தால், வெகு நேரம் அப்பா வரவே இல்லை! கடைசியாக ஏழு மணிக்கு மேலே, கதவைத் தட்டிக் கொண்டு, அப்பா நிற்கிறார்! அவரிடமும் ஒரு சாவி உண்டு. பிறகு தான் தெரிந்தது, சாவி துவாரத்தில் சாவியை நுழைக்கும் அளவுக்கு, அவருக்குக் கை நிதானம் இல்லை! வீட்டு வாயில் வரை அப்பா எப்படி வந்தார் என்பதே அதிசயம்! அந்த அளவுக்கு அவரது தலையில் அடி! முகமெல்லாம்... ரத்தம்!

"ஒன்றாம் தேதி அல்லவா? சம்பளம் வாங்கி வந்திருப்பார் என்று, அவரைத் தலையில் அடித்துக் கீழே தள்ளி, எல்லாவற்றையும் பிடுங்கியிருக்கிறார்கள்...!" தொடங்கி விட்ட பிறகு, நிறுத்த முடியாதவள் போல, சந்தனா சொல்லிக் கொண்டே போனாள்.

அவனும் குறுக்கிடாமல் கேட்டான்.

"...ஆனால், அப்பா சம்பளத்தைச் செக்காக வாங்கி, பள்ளியில் இருந்த பாங்கில் கட்டி விடுவார் என்று தெரியாத முட்டாள்கள்!

"அப்படி, என் அப்பாவிடம் அவர்கள் திருடியது எவ்வளவு தெரியுமா? சுமார் முன்னூறு ரூபாயும், ஒரு வெள்ளி மோதிரமும் மட்டும்தான்!

"இதைப் பிடுங்க, என் அப்பாவின் உயிரையே எடுத்து விட்டார்கள்!

"எவ்வளவு நல்லவர் தெரியுமா, என் அப்பா! தேவை என்று கேட்டிருந்தால், அவரே கொடுத்திருப்பார்! அவரைப் போய், அநியாயமாய் அடித்துக் கொன்று விட்டார்களே!" என்று முடித்த போது, அவளது கண்களில், கண்ணீர் பொங்கி வழியலாயிற்று!

சற்று நேரம் குறுக்கிடாமல் அவளை அழ விட்டுவிட்டு, அதன் பின், "அந்தக் குற்றவாளிகளைப் பிடித்தார்களா?" என்று கேட்டான் தீபன்.

"இல்லை! இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்! ஆனால், அவர்களை எப்படியாவது பிடித்து முன்னூறு ரூபாயும் வெள்ளி மோதிரமும், நான் தருகிறேன். என் அப்பாவின் உயிரைத் திருப்பித் தருவாயாடா என்று கேட்க வேண்..." என்று ஆத்திரத்துடன் சொல்லும் போதே, அதன் பயனற்ற தன்மையை உணர்ந்து, உச்சிக் கொட்டினாள், சந்தனா! "என்ன பிரயோஜனம்? யாரை, என்ன கேட்டும் தான் என்ன பிரயோஜனம்?" என்றாள் சோர்வுடன்.

"உண்மைதான்!" என்றான் அவனும்!

சில வினாடி அமைதியின் பின், "இந்தக் கனவைப் பற்றி, யாரிடமும் சொன்னாயா, சந்தனா?" என்று வினவினான்.

"லேசாக ஒரு தரம், அண்ணனிடம் தொடங்கினேன். முதலில் வந்த படகுக் கனவு! ஆனா, டைட்டானிக் பார்த்ததின் பாதிப்பு என்று சொல்லிச் சிரித்தானா? அதற்குப் பிறகு, அண்ணனைப் பிடித்து வைத்துச் சொல்ல, மனது வரவில்லை! அத்தோடு, அவனும் என்னை இங்கே விட்டுவிட்டு வெளிநாடு செல்ல வேண்டிய நிலை! அவனும் வருத்தம்தானே படுவான் என்று..."

தன்னிச்சையாக எழுந்த கையை அடக்கிக் கொண்டு, "அதுதான் காரணம்!" என்றான் தீபன்.

சந்தனா ஏறிட்டுப் பார்க்கவும், "பெரிய இழப்பு, அநியாயமான முறையில் அது நேர்ந்த விதம், இவற்றால் ஏற்பட்ட துக்கம், ஆத்திரம் என்று எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே போட்டு அடைத்து வைத்ததுதான் இந்தக் கனவுகளின் காரணம் சந்தனா. எல்லாமே உள்ளே கிடந்து முட்டி மோதிக் கொண்டு இருந்திருக்கின்றன! உன் மனமோ, உடலோ களைப்படையும் போது, கனவாக வெளிப்பட்டிருக்கிறது! இன்றைய தினத்தை, அப்படிப்பட்ட நாளாக ஆக்கியதற்கு, சாரிம்மா! ஆனால், உள்ளே அடைத்து வைத்திருந்ததை எல்லாம் இப்போது கொட்டிவிட்டாய் அல்லவா? இனி, இந்தக் கனவுகள் வர வாய்ப்பில்லை! அதனால், இனிக் கவலையற்றுப் படுத்துத் தூங்கு!" என்றான் அவன்.

என்னவோ, சர்வமும் அறிந்தவன் போல, தீபன் கூறிய விதம், சந்தனாவுக்கு வியப்பாக இருந்தது!

நம்ப முடியாததாகவும்!

அவளது கனவுகள் கூடவா, இவன் பேச்சுக்குக் கட்டுப் படும்? ஆனால், இவன் சொல்லும் போது, நம்ப முடியாததைக் கூட நம்பலாம் போலவும் தோன்றியது!

"என்ன? உன் கனவுகள் கூட, என் பேச்சுக்குக் கட்டுப்படுமா என்று யோசிக்கிறாயா?" என்று கேட்டு, அவளைத் திகைக்கச் செய்து விட்டு, "இது, சாதாரண மனோ தத்துவம், சந்தனா! வைத்தியத்தில், மனோ தத்துவம் ஓர் அங்கம்! உனக்குத் தெரியுமோ, என்னவோ, நான் வைத்தியம் படித்தவன் தான்! அதில் மேல் படிப்பையும் முடித்திருக்கிறேன்! யுஎஸ்சில்தான்!" என்றவன், அத்தோடு பேச்சை நிறுத்தி, தோளைக் குலுக்கினான்.

முதல் நாளே, 'சுகம்' மருத்துவமனையில் உள்ள மருத்துவக் கருவிகள், அவை தொடர்பான செலவுகள் பற்றித் தெரிந்தவன் போலத் தீபன் பேசியது, சந்தனாவுக்கு இப்போது நினைவு வந்தது!

பிறருக்கு உதவும் பணி என்று மருத்துவத் தொழிலைச் சொல்வார்கள்! அதைப் படித்து முடித்துவிட்டு, இங்கே சொந்த மருத்துவமனையும் வைத்துக் கொண்டு, இவன் ஏன், அதைப் பற்றிய எண்ணமே இல்லாமல் இருக்கிறான்?

ஒரு வேளை, 'அரை வைத்தியன்...' என்று ஏதோ சொல்லுவார்களே, அது போல ஏதோ செய்து விட்டானோ?

அதுதான் மீடியாவுக்கு அப்படிப் பயப்படுகிறானோ?

மனோதத்துவம் பயின்றவனுக்கு, அவளது முகம் காட்டிய பாவம் பிடிக்கவில்லை போலும்!

சட்டென எழுந்து, "ஓகே! என் விஷயம் போதும்! இனியாவது போய், நிம்மதியாகத் தூங்கு! இரவுத் தூக்கம் ரொம்பவும் குறைவது, ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல! நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே? கூடக் கொஞ்ச நேரம் சேர்த்துத் தூங்கு! குட்நைட்!" என்று விட்டு, அவனது அறைப் பக்கம் சென்றான் அவன்.

திரும்பிக் கூடப் பார்க்கவில்லை!

அதாவது, அவனைப் பற்றிய பேச்சோ, நினைப்போ கூட, அவனுக்குப் பிடிக்கவில்லை! ஆனால் ஏன்?

தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு, அவளது அறையை நோக்கி நடந்தவாறே சந்தனா யோசித்தாள்.

தீபனைப் பற்றிய ஒரு விவரமும், யாரும் சொல்வது இல்லை!

மீனாட்சி ஆன்ட்டியின் பர்சில் இருப்பது தவிர, அவனது புகைப்படங்கள் எதையுமே அந்த வீட்டில் அவள் பார்த்தது இல்லை! அவனது கட்டளையாகவே இருக்க வேண்டும்!

அவனது விருப்பப்படி அவனுடைய தாயாரே, அவனைப் பற்றிப் பேசுவது இல்லை எனும் போது, அவனைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது?

தெரிந்து கொள்வது பற்றி யோசிக்கும் போதே, சற்று முன் பேச்சை நிறுத்தி, அவன் திரும்பிப் பாராமல் சென்றது, அவளுக்கு நினைவு வந்தது!

அடுத்தவர் பாதையில் குறுக்கிடக் கூடாது என்று நேரடியாகவே சொன்னானே!

அவனைப் பற்றிய பேச்சு, கேள்விகள் எல்லாமே, அந்த வீட்டில், பெரும் குற்றங்களே!

கேட்கிறவர் குற்றவாளி என்பது குறைந்த பட்சமாய், அவனது கருத்து!

அதாவது, தீபனைப் பற்றிக் கேட்டு அறிய நினைப்பது, தீக்குள் விரலை வைப்பது போலத்தான்! சூடு பட்டுக் கொள்ள விருப்பம் இல்லை என்றால், அவனைப் பற்றி விசாரிக்கவும் கூடாது!

இருக்கிற நிம்மதியைக் கெடுத்துக் கொண்டு, அவளுக்கு எதற்கு வீண் வம்பு!

எப்படியும் அவள் இங்கே இருக்கப் போவதே, அண்ணன் பூபால் வருகிற வரையில் தான்! அது, ஒரு மாதமோ, இரண்டு மாதங்களோ!

அதன் பிறகும் சந்தோஷமாகவே மீனாட்சி ஆன்ட்டியை வந்து பார்த்துப் பேசுகிற மாதிரி, சுமுகமான உறவோடு இருக்க வேண்டாமா?

இவ்வளவு பழகிய பிறகு, மீனாட்சி ஆன்ட்டியின் உறவை அடியோடு விடுவது வேதனையாக இருக்கும்!

மித்ராவும் அப்படித்தான்! ஆனால், அவளை எப்போது வேண்டுமானாலும், அவளுடைய தந்தை, நாட்டை விட்டு அழைத்துச் சென்று விடலாம்! அதனால், அவள் மீது பாசத்தை வளர விடுவது, மித்ராவுக்குமே நல்லதல்ல!

அப்படிக் குழந்தையோடு தீபன் சென்று விடுகின்ற சமயத்தில், ஆன்ட்டிக்கு ஆறுதலாகக் கூட, சந்தனா இங்கே அடிக்கடி வர வேண்டியிருக்கும்!

எனவே, எந்த வகையிலும், இந்த சுமுகமான உறவைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது!

அதற்காக, தீபன் சம்பந்தப்பட்ட அனைத்திலிருந்தும் தூர...தூரமாய் ஒதுங்கிப் போய்விட வேண்டும்!
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Icon_minitimeMon May 24, 2010 4:30 am

யோசித்துச் செய்த முடிவைச் செயலாற்றுகிறவளாக சந்தனா எப்போதும் எச்சரிக்கையுடனேயே நடந்து கொண்டாள்.

தீபன் முன்னிலையை, முடிந்தவரை தவிர்த்ததோடு, அவனைப் பற்றிய கேள்விகளையும், மனதுக்குள்ளேயே மறைத்து வைத்தாள்!

மித்ராவிடம் இருந்தும் ஒதுங்கத்தான் முயன்றாள்.

ஆனால் ஒரு தரம் சொல்லாமல் கொள்ளாமல் போனாளே என்ற பயத்தில், சிறுமி அவளிடம் பசை போட்ட மாதிரி ஒட்டிய போது அவளால் விலக்க முடியவில்லை!

வீட்டின் மற்றவர்களிடம் எப்போதும் போல் நல்லுறவு தான்!

சொல்லப் போனால், அவளைச் சந்தோஷப்படுத்த முயன்றார்கள் என்றே சொல்லலாம்!

மீனாட்சி மட்டும், ஒரு தரம் அவளைத் தனியே அழைத்து, அவளுக்கு ஏதேனும் மனக்கஷ்டம் என்றால், தன்னிடம் நேரில் சொல்லும்படி கூறி, இனி இப்படிப் போவது இல்லை என்ற வாக்குறுதியும் வாங்கிக் கொண்டாள்!

மொத்தத்தில் வீடு பிரச்சினையற்று அமைதியாக இருந்தது!

அன்று காலை உணவு முடிந்ததும், "இன்று சாப்பிட்ட நூடுல்சை அன்னம்மா என்னவென்று சொன்னாள்?" என்று கேட்டாள் மித்ரா!

அன்று காலைக்கு அன்னம்மா இடியாப்பம் வைத்திருந்தாள். தொட்டுக் கொள்ள, இனிப்புக்குத் தேங்காய்ப்பூ சர்க்கரையும், காரத்துக்குக் குருமாவும்!

சுவை பிடித்துப் போகவே, நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, அதன் பெயரைக் கேட்டாள் மித்ரா.

முறுவலோடு, "சொல்வதற்கு, உனக்குக் கொஞ்சம் கடினமாக இருக்கக் கூடும்! அதனால், இப்படிப் பிரித்து சொல்லிப் பார். இடி...யாப்பம்!" என்று பெயரை இலகுவாக உச்சரிக்கக் கற்றுக் கொடுத்தாள் சந்தனா!

மித்ராவும் அதே போலச் சொல்லிவிட, இருவரும் சந்தோஷமாகக் கைதட்டி மகிழ்ந்தனர்.

புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "மித்ராவுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கலாம் என்று பார்க்கிறேன் தீபு! சும்மா, வீட்டில் பேசும் அளவுக்கேனும் கற்றுக் கொடுக்கும்படி, யாரையேனும் ஏற்பாடு செய்யட்டுமா?" என்று மகனிடம் அனுமதி கேட்டாள் மீனாட்சி.

ஒரு வகையில், இது சற்றுத் துருவும் கேள்விதான்!

விரைவிலேயே யுஎஸ்சுக்குக் கிளம்புகிற திட்டத்தில் இருந்தால் எதற்கம்மா என்று மறுத்துவிடுவான் அல்லவா?

ஆனால், தீபன் இன்னொரு பதில் சொல்லி, எல்லோரையும் திகைக்க வைத்தான்! "அதென்னம்மா 'யாரையேனும்?' வீட்டிலேயே ஒரு டீச்சரம்மாவை வைத்துக் கொண்டு, இன்னொருவரை எதற்காக ஏற்பாடு செய்வது? பேசாமல் சந்தனாவையே கற்றுக் கொடுக்கச் சொல்லுங்கள்! மித்ராவும், அவளிடம் முரண்டு பிடிக்காமல் படிப்பாள்!" என்றான் இலகுவாக!

சந்தனா பிரமித்துப் போனாள்!

'மித்ராவை வசியம் செய்கிறாய்' என்று குற்றம் சாட்டிய அதே தீபன்!

என்னதான், உன்மேல் இருந்த சந்தேகம் போய்விட்டது என்றாலும், விலகியிருக்குமாறும் சொன்னான் தானே?

அவன் வாயால், மகளுக்குக் கற்றுக் கொடுக்கச் சொல்வது என்றால்?

'வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷிப் பட்டம்' என்பது, இதுதான் போலும்!

அன்று முழுவதும், தரையிலேயே கால் பரவவில்லை அவளுக்கு!

மித்ராவுக்கும் ஆர்வம் இருந்ததால், உட்கார்ந்து இருக்கும் போதும், நடக்கும் போதும், சாப்பிடும் போதும், போக வர... ஓரொரு வார்த்தைகளாக, அவளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்ததே, சந்தனாவுக்கு சந்தோஷம்.
அதைத் தீபன் அவ்வப்போது கவனித்து, ஒப்புதலாக முறுவலித்தது, இன்னமும் ஆனந்தமாக இருந்தது!

முறுவலித்தது மட்டுமல்ல, கூடச் சேர்ந்து அவனும் ஏதாவது சொல்லுவான்.

சில சமயங்களில் ஓரோர் எழுத்துக்களை மாற்றிச் சொல்லி, மித்ரா இருவருக்குமே சிரிப்பு மூட்டுவாள்!

சாப்பிடுகிற சமயத்தில், தமிழில் சொல்லுகிறேன் என்று, 'அப்பா, செருப்பு சாப்பிடுகிறார்!' என்பாள்!

பருப்பு, செருப்பான விதத்தில் எல்லோருக்கும் சிரிப்பு பிய்த்துக் கொண்டு போகும்!

புத்திசாலிப் பெண் என்பதால், எதற்குச் சிரிக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, தானாகவே, இதுபோலத் தோசையையும் மீசையையும் குழப்பி, "ராசையா முகத்திலே 'தோசை' வளர்த்திருக்கிறார்" என்று விட்டு எல்லோரும் சிரிக்கையில் கண் சிமிட்டலோடு சேர்ந்து கொள்வாள், சிறுமி!

இது, இன்னமும் மகிழ்ச்சியைப் பெருக்கும்!

மீன் என்ற வார்த்தையின் அர்த்தம் தெரிந்த பின், மீனாட்சி, 'ஃபிஷ்'மா ஆகிப்போனாள்.

அன்னம்மா, 'ரைஸ்மா'.

"என் பெயரை, இப்படிக் கெடுக்கக் கூடாதும்மா" என்று தீபன் சொன்ன பிறகுதான், மித்ராவின் இந்த விளையாட்டு நின்றது!

அவளோடு ஓடியாடி விளையாடுவதும், பெரும்பாலும் தீபனும் கூடவே இருந்ததும், பள்ளி முடிந்து, எப்போது வீட்டுக்குப் போவோம் என்ற துடிப்பை, சந்தனாவுக்கு ஏற்படுத்தின!

இடையில் ஒரு கலக்கமும் நேர்ந்தது!

சிதம்பரநாதனிடம் திருடி, அவரது மரணத்துக்குக் காரணமானவர்களைப் பிடித்துவிட்டதாகவும், அவர்களிடமிருந்து கைப்பற்றிய, அவளுடைய தந்தையின் பேனா, மோதிரம், பர்ஸ் முதலியவற்றை அடையாளம் காட்ட வருமாறும், சந்தனாவைப் போலீஸ் நிலையத்திலிருந்து அழைத்தார்கள்!

சந்தனாவின் கலக்கம் புரிந்து, தீபனே, அவளை அழைத்துச் சென்றான்!

அவன் தாய்க்கு, அதுவே அதிசயம்!

யாராவது பத்திரிகைக்காரர்கள் மோப்பம் பிடித்து விடுவார்கள் என்று சென்னையில் தீபன் வெளியே போகவே மாட்டான்!

அன்று ரயில் நிலையத்துக்குச் சந்தனாவை அழைத்து வர அவன் போனதே மீனாட்சிக்கு ஆச்சரியம்தான்!

ஏதோ மடத்தனமாகச் சொல்லி, அவளை விரட்டிவிட்டுப் பிறர் அறியாமல் மன்னிப்பு கேட்கப் போகிறான் என்பது, அவளது ஊகம்!

அத்தோடு, அப்போது இரவும் கூட!

ஆனால், இப்போது பட்டப்பகலில் சந்தனாவோடு கிளம்புகிறான் என்றால், அவளது ஆறுதல் மற்ற எதையும் மறக்கடிக்கிறது என்று தானே அர்த்தம்?

அப்படியானால்... அதற்கு மேல் யோசிக்கக் கூடாது. நடப்பது நல்லதாக இருந்தால், அவளுக்கு மகிழ்ச்சியே! ஆனால், வெறும் ஊகத்திலேயே கோட்டை கட்டுவது கூடாது என்று மீனாட்சி அம்மாள், தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டாள்.

காவல் நிலையத்தில், தீபனின் கைப்பிடியிலேயே நிற்பதை, சந்தனா உணரவே இல்லை!

வெறும் முந்நூறு ரூபாய்க்கும், ஒரு வெள்ளி மோதிரத்துக்குமாக, என் தந்தையைக் கொன்றுவிட்டாயே என்ற தவிப்பில், அவளது உள்ளத்தோடு, உடலும் பதறியது! தீபனின் கைப்பிடி இல்லையென்றால், என்ன ஆகியிருப்பாளோ?

ஆனால், திருடர்களைப் பிடித்து வைத்திருந்த இன்ஸ்பெக்டர் வேறு சொன்னார்!

"உங்கள் அப்பா காந்தி மாதிரிம்மா! சாவில் கூடப் பிறருக்கு நல்லது செய்கிற விதம்! இந்த மூவரும் ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள். மற்றவர்களின் உயிர் இவர்களுக்குத் துச்சம்! இவர்கள் கணக்கில், ஆறு கொலைகள் இருக்கின்றன. இவ்வளவு நாள் இவர்களைப் பிடிக்கச் சரியான ஆதாரம் கிடைக்காமலே இருந்தது! இப்போது இந்த வெள்ளி மோதிரத்தைப் பிளாட்டினம் என்று நினைத்து விற்கப் போய், மாட்டிக் கொண்டார்கள்! பெரிய தலைமை ஆசிரியர், பாஸ் பண்ணிவிட, பள்ளியில் சேர்க்க என்று நிறைய வாங்கியிருப்பார். இருந்திருந்து வெள்ளியிலா போடுவார் என்று எண்ணினார்களாம்! மாட்டிக் கொண்டார்கள் அல்லவா? சிதம்பரம் சார் விஷயத்தில், நேரில் பார்த்த சாட்சிகளும் இருப்பதால், இனி இவர்கள் ஜெயிலை விட்டு வெளியே வராதபடி, நான் பார்த்துக் கொள்கிறேன்! சமூகத்துக்கு ஒரு பெரிய சாபக்கேடு தீர்ந்தது! உங்கள் அப்பா, தன் உயிரைக் கொடுத்துத் தீர்த்து வைத்திருக்கிறார்!" என்றார் அவர் நன்றியோடு!

கண்ணைக் கரித்தபோதும், இதை எங்கேயோ இருந்து கேட்டிருந்தால், அப்பாவும் சந்தோஷப்பட்டிருப்பார் என்று சந்தனாவுக்குத் தோன்றியது!

திரும்பி வரும்போது கண்மூடி அமர்ந்திருந்தவளை மென்மையாக இழுத்து தன் தோள்மீது சாய்த்துக் கொண்டான் தீபன்.

வீடு வந்த பிறகு, காவல் நிலையத்தில் நடந்ததை மீனாட்சியிடம் விவரிக்கும் பாவனையில், சிதம்பரநாதனைப் பற்றி மிக உயர்வாகத் தீபன் பேசவும், உள்ளிருந்த வருத்தம் குறைந்து, பெருமையாக உணர்ந்தாள் சந்தனா!

அதன் பிறகும், சந்தனாவிடம் ஒரு கனிவுடனேயே அவன் நடந்த கொள்ள, அதைக் கவனித்த மித்ராவும், அவளைத் தடவிக் கொடுப்பதும், கொஞ்சுவதுமாக தன் அன்பைக் காட்ட, விரைவிலேயே, சந்தனாவின் முகத்தில் புன்னகையே மலரத் தொடங்கியது!

உள்ளூர அஞ்சியிருந்த போதும், அன்றிரவு, பழைய கனவு வராதது, சந்தனாவிற்குப் பெரும் ஆறுதலாக இருந்தது!

அதையே யோசித்தவன் போலத் தீபனும் அவளிடம் விசாரிக்க, அதில் தொடங்கி, இருவருமாகத் தனியே பேசிக் கொண்டிருப்பதும், இயல்பாகவே நடக்கலாயிற்று!

பாராதது போல, இதைப் பார்த்திருந்த மீனாட்சி அம்மாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சியே!

தாயின் இந்த மகிழ்ச்சியை, மேலும் அதிகப்படுத்தும் விதமாக, இன்னொன்று நடந்தது!

அன்று, யுஎஸ்சில் இருந்து தீபனுடைய ஏஜெண்ட் எலிசா போன் செய்தாள்.

"ஹல்லோ எலிசா..." என்று தீபன் சொன்னதுமே, மீனாட்சியின் முகம் மாறிவிட்டது!

தாய்நாட்டில் பெற்றவளோடு இருப்பதற்கு, மகனே விரும்பினால் கூட இவள் விடமாட்டாள் போல இருக்கிறதே என்று கலக்கமும் கடுப்பும்!

இவள் போன் செய்தால், தீபன் கிளம்பி விடுவான்! அப்புறமாக, அவன் திரும்பி வர எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

சலிப்புடன் பெற்றவள் திரும்பும்போதே, "எலிசா ஆன்ட்டியாப்பா?" என்று மகள் ஆவலோடு ஓடிவந்தாள்.

"நான் பேசணும்பா! ஆன்ட்டி கிட்டே, நான் தமிழ் படிப்பது சொல்லணும்!" என்று அவள் கேட்கவும், புன்னகையோடு போனை மித்ராவிடம் கொடுத்தான் தந்தை.

"ஆன்ட்டி நான் இங்கே தமிழ் படிக்கிறேன்! என் கிராண்ட்மா, சந்தனா ஆன்ட்டி, அன்னம்மா, ராசையா எல்லோரும் பேசுகிற பாஷை! நான்சி, மிச்சிகிட்டே எல்லாம் சொல்லு! என்ன? சந்தனா ஆன்ட்டிதான் சொல்லித் தருகிறான்னும் சொல்லு! சந்தனா ஆன்ட்டி ரொம்ப ஸ்வீட் தெரியுமா? ஆனால், உன் மாதிரி சாக்லேட்லாம் நிறையத் தரமாட்டாள்! என் உடம்புக்கு நல்லதில்லையாம்! அப்புறம், ஜேடி, இப்போதெல்லாம் ரொம்பத் தூங்கிப் போகுது. என்னோட விளையாடவே வராமல், என்னைத் தமிழ் படிக்க விடுது!" என்று மனதில் நினைத்ததை எல்லாம் அளந்தாள்.

"அப்போ சரி ஆன்ட்டி, எழுப்பி விளையாடுறேன். இதோ, உடனே அப்பாவிடம் கொடுத்து விடுகிறேன். பை ஆன்ட்டி!" என்று போனைத் தந்தையிடம் கொடுத்தாள்.


எதிர்முனையில், எலிசா என்ன சொன்னாளோ, "சேச்சே! அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை! இது, என் அம்மாவின் வீடு! இப்படியெல்லாம் தரக்குறைவாகப் பேச வேண்டாம் எலிசா!" என்றான் ஒரு மாதிரியான குரலில்!

மீண்டும் அவள் பேச்சைக் கேட்டுவிட்டு, "அப்படியா! ஆனால், இது நான் சில நாட்களாக எதிர்பார்த்ததுதான்! உன்னிடம் பார்க்கச் சொல்லியிருக்கவே கூடாது! பழைய பழக்கத்தில், எதையும் நம்பாமல்... இல்லையில்லை! வேண்டாம், எலிசா. இதற்கு மேல் அவசியம் இல்லை! சந்தேகம் எல்லாம் ஏற்கெனவே இங்கேயே தீர்ந்துவிட்டது! விட்டுவிடு! நான் வருவதா? இருக்கட்டும்! கொஞ்ச நாள் ஆகட்டும். அப்புறம் பார்ப்போம்! ஊகூம்! இப்போது வருவதற்கு இல்லை. வைத்து விடுகிறேன்!" என்று ரிசீவரைக் கீழே வைத்தான்.

சற்று விலகி நின்றிருந்த தாயின் முகம் ஓரளவு மலர்ந்திருந்தது!

"அடுத்தவர் போன் பேச்சைக் கவனிப்பது அநாகரீகம் என்று எனக்குத் தெரியும்! ஆனால், இந்தப் பேச்சைக் கேளாமல் விட்டுவிட்டுப் போக முடியவில்லை! இந்த முறை வரவில்லை என்று விட்டாய்! இனித் தினமும் யுஎஸ் போனை எதிர்பார்க்கலாமா? எத்தனை தரம் தாக்குப் பிடிப்பாய்?" என்று புன்னகையும் கலக்கமுமாகக் கேட்டாள்.

"இல்லைம்மா! எனக்கே, இங்கே வந்து விடத்தான் இப்போது விருப்பம்! அதற்குத்தான் பெரிதும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்! கொஞ்சம் பொறுமையாக இருங்கள் பார்ப்போம்! அப்புறம், எலிசா இப்போது போன் செய்தது, என்னை அங்கே வருமாறு அழைப்பதற்காக இல்லை! சந்தனாவுடைய அண்ணன் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தேன் அல்லவா? அவர் விஷயம் எல்லாம் சரிதான், தப்பாக எதுவும் இல்லை என்று... அதைத் தெரிவிப்பதற்காகத்தான்!"

"சந்தனாவுடைய அண்ணன் என்ற பிறகு, அந்தப் பையன் மேல், நீ சந்தேகப்பட்டதே தப்பு! நல்லவர்கள் இருப்பார்கள் என்று நம்பவும் வேண்டும்!" என்றாள் தாய்!

ஆனால், "இங்கே இருந்து கொண்டு, இலகுவாகச் சொல்லலாம்!" என்றான் பிள்ளை!

"அப்போது, அங்கே போகாதே!" என்றாள் அன்னை பதிலுக்கு!

"அம்மா, ப்ளீஸ்! அதிலேயே நில்லாதீர்கள்! நான் தான் முயற்சி செய்வதாக சொன்னேன் இல்லையா?"

"எப்போதும் இப்படித்தான்" என்றாள் தாயார், அவன் பேச்சில் அவ்வளவாக நம்பிக்கையற்று.

"ப்ராமிஸ், அம்மா! இந்த முறை, எல்லாம் வேறு! முன்பெல்லாம், அவ்வளவாக விருப்பமற்று, உங்களைச் சமாதானப்படுத்த மட்டுமே சொன்னேன். ஆனால் இந்தத் தடவை, நூறு சதவீதமாக என் மனதிலேயே நிச்சயமாக இருக்கிறேன்! எனக்கே சிலதிற்கு மிக அதிக விலை கொடுத்து விட்டதாக எண்ணம்! ஆனால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட என்னால் முடியாது! அது, உங்களுக்கும் தெரியும்! அதனால் இப்போதைக்கு, இது பற்றி யாரிடமும், குறிப்பாகக் கூடச் சொல்லி வைக்காதீர்கள்!" என்றான் தீபன்.

"இத்தனை ஆண்டுகளாக, உன்னைப் பற்றி, எதை யாரிடம் சொன்னேன்? சின்னப் பிள்ளைப் படம் தவிர, ஒரு போட்டோவேனும் வெளியே இருக்கிறதா, பார்! பின்னிப் பின்னிக் கேட்கிறார்கள் என்று சொந்த பந்தங்களைக் கூட விட்டுவிட்டேன்! என்னிடம் வந்து, இன்னமும் சொல்கிறாயே!" என்று குறைபட்டாள் அவள்.

"சாரிம்மா! உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான்! ஆனால், இன்னும் கொஞ்ச காலம், இப்படியே இருந்து விடுங்கள், என்றேன். அவ்வளவுதான்!" என்றான் அவன்!

அப்படியே, வீடு சந்தோஷமாக நடந்து கொண்டும் இருந்தது!

இந்தச் சமயத்தில், வானில் மிதந்து கொண்டிருந்த சந்தனா, தரைக்கு இறங்கி வருகிற மாதிரி ஒன்று நடந்தது!

அன்று ஓர் அரசாங்க விடுமுறை தினம்.

நன்றாக தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளித்துவிட்டு வந்த சந்தனா, வெளியே போர்டிகோவில் நின்று, ராசையாவுடன் தீபன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபடி ஹால் சோஃபாவில் உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த மித்ராவின் அருகில் அமர்ந்தாள்.

ஆனால், சிறுமி "அச்சச்சோ!" என்று கத்தவும் பதறி, "என்னம்மா?" என்று விசாரித்தாள்!

"என் ஜேடி!" என்று சோஃபாவை காட்டினாள் மித்ரா.

சோஃபாவின் இடுக்கில் சாத்தி வைக்கப்பட்டிருந்த பொம்மையின் கால் பகுதி, சந்தனாவின் கீழே இருந்தது!

குழந்தையின் உணர்ச்சியை புரிந்து கொண்டு, "அடடா! உன் ஜேடிப் பாப்பாவின் கால் மீதா உட்கார்ந்து விட்டேன்! பாப்பாவுக்கு வலித்திருக்குமே!" என்று பொம்மையின் கால்களை வருடிவிட்டாள் சந்தனா!

ஆனால், அதற்கும் ஒரு படி மேலே போய், "ஊகூம்! பாப்பா கால் உடைந்தே போய்விட்டதே! கட்டுப் போடணும்! எனக்குப் போட்ட மாதிரி!" என்றாள் மித்ரா!

எப்போதேனும் ஒரு தரம், தனக்கு நேர்ந்த விபத்துப் பற்றி, மித்ரா, இப்படிக் குறிப்பிடுவது உண்டு! முதலில் சாதாரணமாகவே குறிப்பிட்டாலும், தொடர்ந்து உடம்பு சரியாகாதது போலக் காலைத் தாங்கி நடப்பாள், அவள்.

அது அடியோடு மறக்கும் வரை, நடை அப்படியே இருக்கும்.

இந்த முறை அந்த நடையை தவிர்க்க எண்ணி, "பாப்பாவைப் பார்த்துக் கொள்!" என்று, மித்ராவின் மடியில் பொம்மையை வைத்துவிட்டு ஓடிப் போய், ஒரு துண்டு துணியை எடுத்து வந்தாள், சந்தனா.

பொம்மையின் காலில் அதைக் கட்டி, "இனிமேல் சரியாகிப் போகும்! எங்கள் மித்திச் செல்லத்துக்கு கட்டுக் கட்டியதும் குணமாகிப் போய், இப்பல்லாம் அவள் ஆன்ட்டியோடு ஓடி விளையாடுகிற மாதிரி, ஜேடிப் பாப்பாவுக்கும், சீக்கிரமாக சரியாகிவிடும்! இதோ, இதே மாதிரி, சுத்தமாகக் குணமாகிவிடும்!" என்று மித்ராவின் காலைத் தொட்டுக் காட்டினாள்.

"ஆமாம், நல்லாயிட்டது!" என்று காலை நீட்டிப் பார்த்துவிட்டு, "ஆமாம் ஜேடி. ஆன்ட்டி சொல்லுகிற மாதிரி, உனக்கும் நிஜம்மாக நல்லாயிடும்!" என்று பொம்மையை மறுபடியும் சோஃபாவில் கிடத்தப் போனவள், "ஊகூம்!" என்று அதைத் தூக்கிக் கொண்டாள். "திரும்பவும், யாராவது ஜேடி மேலே உட்கார்ந்திட்டால்? பாவம்! இன்னொரு காலும் உடைந்து, இன்னொரு காலும் வலிக்கும்!" என்று அவள் யோசித்து சொன்ன தினுசில், சந்தனாவுக்குச் சிரிப்பு வந்தது!

காட்டிக் கொள்ளாமல், "அது சரிதான்!" என்று அவள் தலையாட்டவும், பொம்மையை மடியில் போட்டுக் கொண்டு, "என்னோட ஜேடிக்குத்தான் இப்படி வலிக்கும்! அப்பாவோட பொம்மைக்கு வலிக்கவே வலிக்காது!" என்றாள் சிறுமி!

அதிசயப்பட்டு, "அப்பாவின் பொம்மையா?" என்று கேட்டுவிட்டாள் சந்தனா!

தீபனைப் பற்றி கேட்பது, பேசுவது எல்லாமே, அந்த வீட்டில் பெருங்குற்றமாகக் கருதப்படுவது, சந்தனாவுக்கும் தெரியும்!

ஆனால், ஒரு முழு மனிதனோடு, பொம்மையை சம்பந்தப்படுத்தி, அவனுடைய மகளே பேசவும், திடுக்கிட்டுக் கேட்டுவிட்டாள்!

அவ்வளவே!

அதற்குள் தீபன் அங்கே வந்துவிட்டான்!

மகளை எழுப்பி, "மித்தி, சும்மா பாப்பாவைத் தொந்தரவு பண்ணக் கூடாதுடா! அசந்து மறந்து, எங்கேயாவது வைத்துவிட்டால், இப்படி அடிபட்டுக் கொண்டே இருக்கும்! போய் அவளது தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு வா!" என்றவன், மேலே பேசவிடாமல், மித்ராவின் கையைப் பிடித்து அங்கிருந்து கூட்டிப் போனான்!

முகத்தில் அறை வாங்கியது போல, அப்படியே உட்கார்ந்து விட்டாள்.


மித்ராவும் அவளும் பேசிக் கொண்டிருக்கையில், பேச்சின் நடுவே புகுந்து, மகளைக் கூட்டிப் போகிறான் என்றாள், அதற்கு என்ன அர்த்தம்?

தொடர்ந்து மகளை அவளோடு பேசவிடக் கூடாது என்று தானே?

அதற்கு முன்னரும், போர்டிகோவில் நின்றவாறே, சந்தனாவும் மகளும் பேசுவதை... இல்லை, சந்தனா மகளிடம் என்ன கேட்கிறாள் என்று ஒட்டுக் கேட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறான்!

அதுதான், அந்த ஒரு கேள்வியில் ஓடி வந்து விட்டான்!

அப்படி என்ன நம்பிக்கையில்லாத்தனம்?

ஒரு சாதாரணக் கேள்வியைக் கூட சந்தேகப்படுவது என்றால், அந்த முதல் நாள் ஐயம் அப்படியே இருக்கின்றது என்று தானே பொருள்!

சந்தேகம் போய்விட்டது என்றதெல்லாம் சும்மா! பொய்! அவன் அம்மாவுக்காக, இப்படிச் சொன்னால்தான் வீட்டுக்கு வருவாள் என்று கூறிய பொய்!

என்ன முயன்றும் கொதிப்பை அடக்க, சந்தனாவால் முடியவில்லை!

என்ன இலகுவாக, தீபனின் பேச்சை நம்பிவிட்டாள்!

நம்பி, என்னென்னவோ நினைத்து...

அதுதான் அவளால் தாள முடியாது போயிற்று!

அறையின் தனிமையில், சற்று நேரம் கண்ணீருகுத்த பிறகே, அவளால் யோசிக்க முடிந்தது!

ஏதோ, அவளது நல்ல நேரம்! மயக்கம் ஒரேயடியாகத் தலைக்கேறு முன், ஒரு சிறு செயலில், தீபன் தன்னைக் காட்டிக் கொண்டு விட்டான்!

அண்ணன் வந்ததும், இந்த வீட்டை, வீட்டில் உள்ளவர்களை விட்டுக் கிளம்ப நேருமே என்று, வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்! இனி, அந்த வருத்தம் இல்லாமல் நிம்மதியோடு கிளம்பலாம்!

அதுவரை... மீனாட்சி ஆன்ட்டிக்கு வாக்குக் கொடுத்திருப்பதால், அதுவரை இங்கே தானே இருந்தாக வேண்டும்! அப்படி இந்த வீட்டில் இருக்கும் காலத்தில், முதலில் இருந்தது போலவே, முடிந்தவரை ஒதுங்கி விட வேண்டும்!

ஆனால், அப்படி அவள் இரண்டு நாட்கள் ஒதுங்கு முன், தீபன் அவளைத் தேடி வந்தான்!

அப்போது அவள் மீனாட்சி அம்மாளுடன் தான் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

மித்ராவுக்கென, வெளேர் துணியில் சிறுத்தைத் தோல் போல பிரின்ட்! அதைப் பார்த்ததும் வாங்கி வந்து, உடம்போடு ஒட்டினாற் போல டிசைன் கொடுத்து, தைத்து வந்திருந்தது!

அதில், ஒவ்வொரு சிறுத்தைப் புலிக்கும் நடுவே, நகம் அளவில் பிரௌன் கலர் கல்லை ஒட்டிக் கொண்டிருந்தாள் சந்தனா!

"அவளை ஃபேஷன் ஷோ மாடல் மாதிரி ஆக்கி விடுவாய் போல இருக்கிறது!" என்று மீனாட்சி சொல்லிக் கொண்டிருக்கையில், டெலிபோன் மணி அடித்தது!

வெளிநாட்டு அழைப்புச் சத்தம்!

எலிசாவா?

இரு பெண்களுமே, ஒரு திகைப்புடன் டெலிபோன் கருவியை பார்த்தனர்!

முதலில் போல அல்லாமல், இப்போதெல்லாம் தீபனே நேரடியாக, போனை எடுக்கத் தொடங்கியிருந்தான்.

அன்றும் அதுபோலவே, அவனே எடுத்துப் பேசினான்.

ஒரு முறை மட்டும், "வீட்டில் இந்த போன் இருக்கும் போது செல் எதற்கு? அதனால் தான் அணைத்துப் போட்டிருக்கிறேன். சும்மா இதிலேயே பேசு!" என்றான், ஒரு விளக்கம் போல.


மற்றபடி வெகு நேரம் வெறுமனே "ஊம்" கொட்டிக் கொண்டிருந்தது தவிர, அவன் வேறு எதுவும் பேசவே இல்லை!

"சரி யோசித்து சொல்கிறேன்!" என்று ரிசீவரை வைத்தவன், நேரே, தாயும் சந்தனாவும் இருந்த சிட் அவுட்டுக்கு வந்தான்.

"மித்ராவுக்குக் கொஞ்சம் துணிமணி வாங்க வேண்டும்! தேர்ந்தெடுப்பதற்கு, என்னோடு வருகிறாயா? ப்ளீஸ்!" என்று சந்தனாவை அழைத்தான்!

"நான்... இது..." என்று கையில் இருந்த துணியைப் பார்த்தாள் அவள்.

துணி வேலை முடியவில்லை என்று, அதைச் சாக்கிட்டு இருந்து விடலாம் என்று நினைத்தாள் சந்தனா!

ஆனால் மீனாட்சி குறுக்கிட்டு, "இந்த வேலைதான் முடிந்துவிட்டதேம்மா! போய் வாங்கி வா! அவள் அளவு தான் உனக்கேத் தெரியுமே! சீக்கிரமாக முடித்துக் கொண்டு, மித்ரா விழிக்கு முன் வந்து விடுங்கள்!" என்று சொன்னபோது, சந்தனாவுக்கு மறுத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை!

அத்தோடு, இந்த உடை வாங்குகிற பேச்செல்லாம் சும்மா என்பது, அவளுக்குப் புரியாமல் இல்லை! புரிந்தது!

ஆனால் அப்படி தீபன், அவளிடம் என்ன தான் சொல்லப் போகிறான்? மகன் சந்தனாவிடம் ஏதோ சொல்லப் போகிறான் என்று எண்ணித்தான், மீனாட்சி ஆன்ட்டியும் அவளை அனுப்புகிறாள்!

என்ன என்று தான் அறிந்து கொள்ளலாமே!

முகத்தை மட்டும் கழுவித் துடைத்துக் கொண்டு, சந்தனா அவனோடு கிளம்பினாள்!

சற்றுத் தூரம் சென்றதுமே, காரை ஓரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு, இருக்கையில் லேசாகத் திரும்பி, சந்தனாவைப் பார்த்தாற் போல அமர்ந்தான் தீபன்.

அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு, "இரண்டு நாட்களாக என் மேல் கோபம் என்று தெரிகிறது" என்றான் அவன்.

அவள் பேசாதிருக்கவும், "இப்போது, என்னால் எதையும் விளக்கமாகச் சொல்ல இயலாது, சந்தனா! ஆனால் இப்போது, மித்தியை நான் விலக்கி, அழைத்துப் போனதற்குக் காரணம் இருக்கிறது" என்றான் தொடர்ந்து.

மௌனம் கலைந்து, "நாங்கள் பேசும்போது, வெளியே நின்று ஒட்டுக் கேட்டதற்குக் கூடவா?" என்று சற்றே ஏளனமாகக் கேட்டாள் சந்தனா.

"ஒட்டுக் கேட்டேனா? எப்... ஓ! நீயும், மித்தியும் பேசியதை, மகிழ்ச்சியோடு கேட்டு ரசித்ததற்குப் பெயர் ஒட்டுக் கேட்பதா? சரியாகச் சொல்வதானால், சற்று முன் நானும், எலிசாவும் போனில் பேசியதை, நீயும் அம்மாவும் கவனித்தீர்களே, அதைத்தான் ஒட்டுக் கேட்டல் என்று சொல்ல வேண்டும்!" என்றான் அவன், சிறு கண்டிப்பும், கிண்டலும் கூடிய குரலில்!

லேசாக முகம் சிவந்த போதும், அதை மீறி, "எலிசாதான், இல்லையா?" என்று கவலையுடன் கேட்டாள் சந்தனா!

கையை நீட்டி, அவளது நெற்றியில் புரண்ட கூந்தலை, மென்மையாக ஒதுக்கி விட்டான் தீபன்.

அந்தக் கையைப் பற்றிக் கன்னத்தில் அழுத்திக் கொள்ள வேண்டும் போலத் தோன்றிய ஆவலை அடக்கிக் கொண்டு அசையாமல் வீற்றிருந்தாள் அவள்!

ஒரு பெருமூச்சுடன், "ஆமாம்! உடனே கிளம்பி, அங்கே வரச் சொன்னாள்! அதை, அப்புறம் பார்ப்போம்! ஆனால் நான் கிளம்பும் முன், உன்னிடம் ஒன்று சொல்லியாக வேண்டும், சந்தனா! நான் மித்ராவுடைய தந்தை! ஒருத்தியை மணந்து, மணவிலக்கும் வாங்கியவன்! அது மட்டுமல்ல! அதற்கு மேலும்... நான் அவ்வளவு நல்லவனாக நடக்கவில்லை சந்தனா! அங்கே... அந்த நாட்டில், அது எனக்குத் தப்பாகத் தெரியவில்லை என்றாலும், இங்கே, உன் முன்னிலையில் தலை குனிவாகத்தான் இருக்கிறது! உனக்கும் வெறுப்பாக இருந்தால், சொல்லிவிடும்மா!" என்று குரலில் வருத்தத்துடன் கேட்டான் தீபன்!

வெறுப்பா? அவனிடமா?

இல்லை என்பது போலத் தலையை அசைத்தாள், சந்தனா!

"அன்று... மித்ராவின் விபத்தின் போது கூட... அரை நினைவில், என்னைத் தேடியிருக்கிறாள் குழந்தை! யாராலும், என்னோடு தொடர்பு கொள்ளக் கூட முடியாத நிலை! அப்போதுதான், அங்கே எல்லாம் வெறுத்துப் போயிற்று! எந்த நிலைக்குப் போயிருக்கிறேன் என்று புரிந்தது! விழுந்தடித்துக் கொண்டு, மித்திக்குக் கொஞ்சம் குணமானதும் இங்கே அழைத்து வந்துவிட்டேன்! இங்கே உன்னைப் பார்த்ததும்..."

சந்தனாவின் பார்வையில் கூர்மை ஏறிற்று!

"முதலில், அங்கே நான் ஒதுக்கிவிட்டு ஓடி வந்த கூட்டம் தான் நினைவு வந்தது! நீ கதவைத் திறந்த விதம் வேறு! மேலும், உடல் ரீதியான உணர்வுகளை உன் கவர்ச்சி தூண்டி விடுவது போல... அதை, நீ தெரிந்தே ஒரு நோக்கத்துடன் செய்வது போல... உனக்கு இப்போது புரிகிறது இல்லையா? அப்போதே, என் மனம் உன்னிடம் ஈர்க்கப்பட்டிருக்கிறது! ஆனால், அதை நான் புரிந்து கொண்ட விதம் தான் வேறு! அதை வெறுத்து ஓடி வந்தவன், அந்த ஈர்ப்பை எதிர்க்கச் செய்த முயற்சி! ஆனால், எப்படியும் நான் அவ்வளவு பேசியிருக்கக் கூடாது... அப்படியெல்லாம் குதறிவிட்டு, உன்னிடம் இதைக் கேட்க எனக்குத் தயக்கம் தான்! ஆனால், அதை முழுதாக மறந்து, என்னை ஏற்பாயா சந்தனா?" என்று கேட்டான் தீபன்.

ஒரு கணம், சந்தனாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியாது போயிற்று!

ஆனால், உச்சி முதல், உள்ளங்கால் வரை, ஒரு பூரிப்பும், பொலிவும் ஏற்படுவதை, அவளால் உணர முடிந்தது!

முகம் பிரகாசமுற, "நி... நிஜமாகவா, கேட்கிறீர்கள்? ஆனால்..." என்று கேட்டாள்.

"ஆனால் இன்னும் நிறைய விஷயம், உனக்குத் தெரியாது! அதையெல்லாம் உன்னிடம் சொல்லுகிற நிலையில் இப்போது நானும் இல்லை! இப்போது உடனே நான் யுஎஸ்க்குப் போயாக வேண்டியிருக்கிறது, கண்ணம்மா! முடிந்த அளவு சீக்கிரமாக அங்கே எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொண்டு, இங்கே வந்து விடுவேன்! இடையிடையே இரண்டு மூன்று நாட்கள் கிடைத்தாலும், கிளம்பி வந்து விடுவேன்! அப்போது, எனக்காக, இங்கேயே காத்திருப்பாயா, சது?"

சது!

இப்படி யாரும் அவளைச் செல்லமாக அழைத்தது இல்லையே!

"நிச்சயமாய்!" என்றாள் அவள்.

தீபன், மகளோடு யுஎஸ்சுக்குத் திரும்புகிறான் என்பது, மீனாட்சி அம்மாவுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது!

ஆனால், "அவர் சீக்கிரமாவே, மித்ராவோடு திரும்பி வந்து விடுவார், ஆன்ட்டி!" என்று ஒரு விதமான உறுதியோடு கூடிய குரலில் சந்தனா கூறியது, அவளுக்கு ஆச்சரியத்தோடு ஆறுதலையும் அளித்தது!

ஆயினும், "மித்ராவையாவது விட்டுப் போகக் கூடாதா?" என்றாள் தாய்.

"ஒரேயடியாகத் திரும்பி வருவதற்காக, நிறைய விதிமுறைகளை, அனுசரித்தாக வேண்டியிருக்கிறது! அவளும் கூட இருப்பது, தேவை" என்றான் தீபன்!

மித்ராவுக்கும், இந்தப் பயணம் பிடிக்கவில்லைதான். அவளுடைய யுஎஸ் நண்பர்களை நினைவுபடுத்தி, அவளை ஓரளவு சமாதானப்படுத்தி அழைத்துப் போனான் தீபன்!

கிளம்புவதற்கு முன்பாக, இன்னும் சிலது சொன்னான் அவன்.

"அங்கே எனக்கு வேலைக்கு நேரக் கணக்குக் கிடையாது என்பதோடு, அங்கிருந்து நான் பேசுவதும் கடினம், சந்தனா! அது பற்றி, அம்மாவுக்கும் தெரியும். அதனால் பேசக்கூட இல்லையே என்று எண்ண வேண்டாம்! நீயும் அப்படி இருப்பதே நல்லது! மிகமிக முக்கியம் என்றால், என் ஏஜெண்ட் எண்ணைத் தருகிறேன். அதற்கு போன் செய்தால், விஷயத்தை அவள் என்னிடம் சொல்லுவாள்... எப்படியும் விரைவில் வருவேன். வரும்போது..." என்று முடிக்காமலே, அவளைப் பார்த்து தலையசைத்து, விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
கண்ணீருடன் தன் பொம்மையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மித்ரா கிளம்பியது, இன்னும் வேதனையாக இருந்தது!

இரண்டு நாட்கள் கழித்து, "விமானம் பயணிகளைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தது!" என்று எலிசாவிடம் இருந்து சுருக்கமான ஒரு செய்தி மட்டும் வந்தது!

சந்தனாவின் முகத்தில் ஏமாற்றத்தைக் கண்டதும், ஏதோ சொல்ல வாயெடுத்துவிட்டு, "அங்கே இப்படித்தானம்மா! அதிலும், அந்த எலிசா, ரத்தினச் சுருக்கம் தான்! விடு! ஏதோ உன் பள்ளியில், பரீட்சை சமயம் தானே? ஒரு நாள் லீவு போட்டுவிட்டு, சினிமா, ஷாப்பிங் என்று எங்காவது போய் வாயேன்!" என்றாள் மீனாட்சி!

தாயின் தவிப்பும் பெரிதுதானே? அதை அடக்கிக் கொண்டு, தன்னைப் போகச் சொல்லுகிறாளே என்றிருந்தது சந்தனாவுக்கு!

"இல்லை ஆன்ட்டி! தேர்வு அரைநாள் தானே? போய்விட்டு வந்து, அறையில் என் சாமான்களை அடுக்கி வைத்துவிட்டு, நிம்மதியாகத் தூங்கப் போகிறேன்!" என்று முடித்தாள் சந்தனா.

மார்ச் மாதம் முடிவதால், மருத்துவமனைக் கணக்கு வழக்குகளைப் பார்த்து முடிப்பதற்காக, மீனாட்சி பகலில் பெரும்பான்மை நேரம் மருத்துவமனையில் இருக்கும்படி ஆயிற்று!

வீடு திரும்பிய சந்தனாவுக்குப் போரடித்தது!

சரிதான் என்று, டீவியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள்.

ஏதோ சானலில், வெளிநாட்டுப் படங்களைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

புதிய படம் ஒன்றின் தொடக்க விழா.

கதாநாயகி அழகாக இருக்கிறாள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தீபன் சிரித்தவாறு திரையில் வந்தான்!

மருத்துவம் படிக்க போனவன்! மருத்துவத்துக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்?

இமைகளைத் தட்டக் கூட முடியாமல், விழித்த கண் விழித்தபடி சந்தனா பார்த்திருக்கையில், புதிய திரைப்படத்தின் டைரக்டர் என்று அவனைச் சொன்னார்கள்! கதை வசனமும் அவன் தானாம்!

பெயர்... தீபன் லைட் மித்ரன் என்றார்கள்! திரைக்கான புனைப் பெயரை நன்றாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறான்! தீபன் என்றால் வெளிச்சம் - லைட்! கூடத் தந்தையின் பெயரையும் விடவில்லை! தீபன் லைட் மித்ரன்!

ஓகோ! என்ன கவனம்!

ஆனால், கவனம் இதில் மட்டுமா?

அவனது முந்தைய படத்துக்கு, 'ஆஸ்கார்' பரிசு கிடைத்தது என்றார்கள்!

மித்ரா சொன்ன அப்பாவின் பொம்மை ஆஸ்கார் சிலை!

தலை சுழன்ற போதும், அந்த வீட்டில் இருந்த ரகசிய சூழ்நிலை, பத்திரிகை, மீடியா அச்சம், ஒதுக்கம், யாரிடமும் சந்தேகம், அவளை நம்பாதது... எல்லாமே சந்தனாவுக்கு இப்போது புரிந்தது!

அனைத்தும் புரிந்த போதும், அவற்றுள், அவளை நம்பாததுதான் நெஞ்சில் வெகுவாக வலித்தது!

அவன், கடைசிவரை அவளை நம்பவே இல்லையே!

நம்பியிருந்தால், சொல்லியிருக்க மாட்டானா?

எப்படிச் சொல்லுவான்?

சொன்னால், அந்த உலகத்தை விட்டு, எப்படி எப்போது திரும்பி வருவான் என்றும் சொல்ல வேண்டுமே!

கோடிக் கணக்கில் புரளும் பணம்!

அதோ, இறுக அணைத்து உதட்டிலேயே முத்தமிடுகிறாளே, அவளைப் போன்ற எத்தனை எத்தனையோ பெண்கள்! விட்டுவிட்டு, எப்படி வர முடியும்?

Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Icon_minitimeMon May 24, 2010 4:58 am

அண்ணன் இங்கே எப்படி வந்தான் என்பதே தோன்றாமல், அடிப்பட்ட குழந்தை போல, அவனை நோக்கி ஓடப் போன போதுதான், கூடவே ராசையாவும் நிற்பது தெரிந்தது.

"உங்க அண்ணாருன்னு சொன்னாங்கம்மா! அதான் கூட்டியாந்தேன். உள்ளாரப் போங்க சாரு!" என்று விட்டு, மீண்டும் தன் இடத்துக்குச் சென்றான் அவன்.

"உள்ளே வாண்ணா!" என்றாள் தங்கையும்! "ஆனால் இப்போது நீ எப்படி..." என்ற தங்கையின் பேச்சில் குறுக்கிட்டு, "இது யார் வீடு, சந்தனா? என்னிடம், அதை ஏன் சொல்லவில்லை?" என்று சினந்து கேட்டான், அவன்.

டீவியைக் காட்டினாள் சந்தனா.

ஹாலிவுட் படத் தொடக்க விழா முடிந்து கொண்டிருந்தது!

"எனக்கே, இ...இப்போதுதான் தெரியும்!" என்றாள் அவள் வாடிச் சுண்டிய முகத்துடன்.

"வேண்டும் என்று மறைத்திருக்கின்றான், ராஸ்கல்!" என்றான் அண்ணன் ஆத்திரத்துடன்! "ரொம்ப மோசமானவன், சந்தனா! சரியான பொம்பளைப் பொறுக்கி! அங்கே அவனுக்கு மிகவும் கெட்ட பெயர்! கொஞ்ச நாளாக இந்தியாவில் இருக்கிறான் என்றதுமே, இங்கே எவளைப் பிடித்தானோ என்றுதான் பேச்சு! அது... அது, நீயாக... நீயில்லையே, சந்தும்மா" என்று தவிப்புடன் கேட்டான். "நீ ஒன்றும் அவனிடம் ஏமாந்து போய்விடவில்லையே?"

மறுப்பாகத் தலையசைத்த போதும், சந்தனாவின் கண்கள் நீரைப் பொழிந்தன!

தங்கையின் முகத்தை ஒருதரம் கூர்ந்து பார்த்தான் பூபாலன். "சந்தனா?"

மீண்டும் தலையசைத்து, "மனம் கொஞ்சம் ஈடுபட்டிருப்பது உண்மைதான்! ஆனால் நான் உன் தங்கை! நம், அப்பாவுடைய மகள்! எந்தவித இழிநிலைக்கும் ஆளாக மாட்டேன்!" என்றாள் அவள்.

ஆறுதலும், வருத்தமுமான ஒரு பெருமூச்சுடன், "போகட்டும்! இனியும் இவன் வீட்டில் நீ இருப்பது நல்லதல்ல! வா! போகலாம்!" என்றான் அண்ணன். "ஹோட்டலில் ரூம் போட்டிருக்கிறேன். இப்போதைக்கு, அங்கே போவோம். சீக்கிரமே வீடு பார்த்துக் கொள்ளலாம்!"

போய்விடலாம்! காலின் கீழ் தரையே எரிவது போலத் தான் இருக்கிறது! ஆனால், எந்த மாதிரி நிலையில் இங்கே வந்தாள்!

சற்று யோசித்துவிட்டு, "திடீரென்று, நீ எப்படிண்ணா வந்தாய்?" என்று கேட்டாள் தங்கை!

"அதாம்மா இன்னமும், உலகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்கள். நல்லவர்களுக்கு ஒரேயடியாகக் கெடுதல் நேர்ந்து விடாது என்று, நான் நம்புவது! பெயரைச் சொல்லாமலே ஓர் உதவி கிடைத்தது! கொஞ்ச நாட்களுக்கு முன்பாகவே, ஒரு சிறு குறிப்பு, சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டுப் போவது நல்லது என்று! சென்ற முறை வந்துவிட்டுப் போனதிலிருந்து, நீ தனியாக இருக்கிறாயே என்று நானுமே அதற்குத்தானே முயன்று கொண்டு இருந்தேன்! அசுர கதிதான். வேலை முடியவும், இப்படி இன்னார் வீட்டில் இருக்கிறாய், இவன் இப்படிப்பட்டவன் என்பதால், உனக்கு ஆபத்து என்று ஓர் எச்சரிக்கை! எதற்கும் இருக்கட்டும் என்று விசாரித்துப் பார்த்தேன்! பத்திரிகைகளில், என்னென்னவோ வந்திருக்கிறது! படித்ததும், பயந்தே போனேன்! இந்த வீட்டில் தங்குவதற்கு நானே ஒத்துக் கொண்டேனே என்று, அவ்வளவு கவலை! நல்லவேளையாக, வேலையும் முடிந்து விடவும், விழுந்தடித்துக் கொண்டு, கிடைத்த முதல் விமானத்தில் ஏறி வந்துவிட்டேன்! வாம்மா, சீக்கிரமாகப் போய்விடலாம்!" என்றான் அண்ணன்!

இவ்வளவு தூரம் எந்தப் பரோபகாரி, அண்ணனுக்கு எச்சரிக்கை தந்திருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால், அண்ணன் பத்திரிகைகளில் பார்த்தும் இருக்கிறான்!

பத்திரிகைகள் என்றாலே தீபனுக்கு அலர்ஜ்! அது, உண்மையை வெளிப்படுத்தியதாலா? அன்றி, பரபரப்புக்காகப் பொய்யைப் பரப்பியதாலா?

அவள் யோசிக்கையிலேயே, "பாவம்! அந்த டைரக்டர் நடிப்பை நம்பி, மகா நல்லவன் என்று நினைத்திருப்பாய்! அப்படியில்லை என்பதே, உனக்கு அதிர்ச்சியாக இருக்கும்!" என்று தங்கைக்காக இரங்கினான் பூபாலன்.

சட்டென உறுத்தியது!


இல்லையே! அவன் நல்லவன் என்று சொல்லிக் கொள்ளவில்லையே! மோசமாக வாழ்ந்ததாகத்தானே சொன்னான்! அதுவும் மித்ராவின் விபத்தின் போது, தப்பாக நடந்ததை, மிகுந்த வருத்தத்துடன் கூறினானே!

அல்லது, அந்த வருத்தமே நடிப்பா?

எப்படியாயினும், ஒன்றுமே செய்யாமல், ஒரு கேள்வியேனும் கேட்காமல் போகக் கூடாது என்று தோன்றியது அவளுக்கு.

தப்புச் செய்யாதவள்! அவள் எதற்காகக் கோழையைப் போல ஓடி மறைவது?

அத்தோடு, பதில் சொல்ல, அவனுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துத்தானே ஆக வேண்டும்?

பூபாலனுக்கும் பிடிக்கவில்லைதான்!

ஆனால், கோழைத்தனம் கூடாது என்பதில் அவனுக்கும் ஒப்புதல் இருக்கவே, அரை மனதாய் அவன் சம்மதிக்க, தீபன் கொடுத்த எண்ணுடன் தொடர்பு கொண்டு, அவனுடன் பேச வேண்டும் என்றாள் சந்தனா.

"யார், சந்தனாவா? எப்படி இருக்கிறாய். வந்ததில் இருந்து, மித்ராவுக்கு உன்னைப் பற்றிய பேச்சுதான்! அவள் இல்லாமல், அங்கே போரடிக்கிறதா?" என்று சந்தோஷமாகக் குசலம் விசாரித்தாள் எலிசா.

ஆனால், தீபனுடன் பேசுவது பற்றி, சந்தனா மீண்டும் கேட்கவும், "சாரி!" என்று வருத்தம் தெரிவித்தாள் அவள். "இது லாஸ் ஏஞ்சலிஸ், சந்தனா! வேறே மாதிரி உலகம்! நேற்றுதான், தீபனின் அடுத்த படத்துத் தொடக்கவிழா நடந்தது! படத்துக் கதாநாயகியும், டைரக்டரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? இப்போது, இங்கே இரவு நேரம்! வேண்டுமானால், நாளைக் காலையில் தீபனைச் சந்திக்கும் போது, நீ கூப்பிட்டாய் என்று சொல்லட்டுமா?"

எலிசா சொல்லாமல் சொன்னதில், சந்தனாவின் மனம் நொந்து போயிற்று!

காட்டிக் கொள்ள மனம் இன்றி, மித்ராவைப் பற்றி மட்டும் விசாரித்து விட்டு போனை வைத்தாள்!

ஒரு வேளை, இந்த எலிசா கெட்டவளாக இருக்கலாமோ?

ஆனால், அதற்குக் காரணமே இல்லையே! அவள் வெறும் ஏஜெண்ட்! சில ஆண்டுகளாகப் பழகியதில், மித்ராவைப் பார்த்துக் கொள்கிறாள்! மற்றபடி, தீபனின் சொந்த வாழ்வில் அவளுக்கு இடம் இல்லை என்பது, சந்தனாவுக்குத் தெரியும்.

தீபனுமே, வேறு எண் எதுவும் தரவில்லையே!

முழுக்கத் தோற்றுவிட்ட, உணர்வுடன், தன் பொருட்களை எடுத்து வைத்தாள் சந்தனா!

மீனாட்சி வந்ததும், அவளிடம் சொல்லிக் கொண்டு, அண்ணனும் தங்கையும் கிளம்பினர்.

ஒரு தரம் தடுத்த போதும், சின்னவர்கள் வெளியேறுவதில் பிடிவாதமாக இருந்தனர்.

சந்தனாவின் கண்களில் இருந்த நிராசையைப் பார்த்த பிறகு, மீனாட்சியும், அதற்கு மேல் அவர்களை வற்புறுத்தவும் இல்லை!

அவர்கள் சென்ற பிறகு, உட்கார்ந்து என்ன செய்வது என்று யோசித்தாள்!

அன்றிரவு 'லேட்நைட் டின்னர்!'

திரைப்படத்தின் கதைப் போக்கு, அதன் பாத்திரங்களின் மன நிலை போன்றவைகளை, நடிப்பவர்களுடன் பேசி முடித்துவிட்டு, தீபனும் எலிசாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்!

எலிசாவை அவளது கார் நிற்கும் இடத்தில் விட்டுவிட்டு, தீபன் தன் வீடு செல்ல வேண்டும்!


மறுநாளைய வேலைத் திட்டத்தைப் பேசியவாறே, இருவரும் சென்று கொண்டிருந்த போது திடுமென, "உன் மகளைத் தாய்க்குத் தாயாக, நான் பார்த்துக் கொள்கிறேன்! உடம்பு சுகத்துக்கும், இங்கே பிரச்சினையே கிடையாது! நல்ல, ஆரோக்கியமான பெண்களை, நானே ஏற்பாடு செய்து தருகிறேன் அனாவசியமாக மீண்டும் பந்தத்தில் மாட்டிக் கொள்ளாதே! நீ முழுக்கவனத்தையும், படம் எடுப்பதில் செலுத்து!" என்று அறிவுரை கூறினாள் எலிசா!

ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு!

திடீரென்று, இப்படி ஓர் அறிவுரை எதற்கு?

மீண்டும் பந்தத்தில் மாட்டிக் கொள்ளாதே என்றால், திருமணம் செய்யாதே என்றல்லவா கூறுகிறாள்!

அவனது திருமணத்தை எலிசா விரும்பவில்லை என்றால், அதன் அர்த்தம் சரியில்லையே!

ஆனால், நலபடியாகக் குடும்பம் நடத்துகிறவள் என்பதால், இவளுக்குத் தப்பான எண்ணம் இருக்க முடியாது!

ஆனால், ஏதோ இருக்கிறது!

உள்ளே குறுகுறுப்பு அதிகம் ஆகவும், "என்ன எலிசா, என்னவோ விஷயம் இருக்கிறாற் போலத் தெரிகிறதே! உனக்கே என் மேலே ஒரு கண்ணா?" என்று வேடிக்கைப் போலத் தீபன் கேட்டுவிட்டான்!

அவளது மேக்கப்பிலும் நிறம் மாறி, "ஓ, ஷட்டப், டீப்! ஒரு தமக்கையைப் போல, உன் மேல் உள்ள அக்கறையில், உனக்கு நல்லது சொன்னேன்! பிரச்சினை இல்லாத ஆரோக்கியமான எத்தனையோ பேர்..." என்று அதிலேயே நின்றாள் அவள்.

இடையிட்டு, "நான் தான் பெண்களே வேண்டாம் என்கிறேனே. பிறகு எதற்கு, இந்த ஆரோக்கியமான... அல்லாத... எல்லாம்?" என்று கேட்டான் தீபன்.

"இல்லை, டீப்! அது இயற்கைக்குப் புறம்பானது! அவ்வப்போது அதுவும் இல்லாவிட்டால், உன்னால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது! அதனால் தான்..."

"அதற்காகத்தான் ஓர் ஏற்பாடு செய்ய எண்ணியிருக்..." என்றவன் வாக்கியத்தை முடிக்கும் முன்னரே, "அதைத்தான் சொன்னேன்! முன்னைப் போல மாட்டிக் கொள்ளாதே என்று. சொன்னால், கேள்!" என்று கிரீச்சிட்டாள் எலிசா.

தீபன் வியப்புடன் திரும்பிப் பார்க்கவும், சட்டெனக் குரலைத் தணித்தாள்.

"சொன்னால் கேட்டு நட, டீப்! ஓர் அனுபவம் போதாதா? நிரந்தரத் திட்டம் எதுவும் உனக்குச் சரிப்பட்டு வராது! அதனால், சும்மா அவ்வப்போது..." என்று மீண்டும் பழைய பல்லவியையே அவள் பாடவும், அவன் பொறுமையிழந்தான்!

"இந்தப் பேச்சு இனி வேண்டாம்! விடு எலிசா!" என்று, மறுக்க முடியாத, ஓர் இறுகிய குரலில் கூறி முடித்தான் அவன்!

அவளை இறக்கி விட்டுவிட்டுத் தன் வீட்டுக்குச் செல்லும் வழியெல்லாம், அவனுக்கு ஒரே யோசனை!

ஓர் உறவினரைப் போலப் பழகிய எலிசா, அவன் ஒழுங்காகத் திருமணம் செய்து வாழ்வதை விரும்பவில்லை என்பதை அறியும் போது, அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது!

அதுவும், இன்று அவள் இந்தப் பேச்சை எடுத்து, இவ்வளவு தீவிரமாகப் பேசுவானேன்?

என்னவோ நடந்திருக்கிறது!

பொதுவாகச் சென்னையில் தாயோடு, தீபனது தொடர்பு, எலிசாவின் செல் மூலமாகத்தான்!

பரபரப்பான செய்திக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதை அறிந்த பிறகும், தன் போனில் தாயோடு பேசி, அவளையும் இவர்கள் கொத்திக் குதற விட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில், அவன் செய்த ஏற்பாடு!

அதே கருத்தோடுதான், சந்தனாவிடமும் எலிசாவின் செல் எண்ணையே தந்திருந்தான்!

அவள் எதற்கேனும், அவனோடு தொடர்பு கொள்ள முயன்றிருப்பாளா என்று யோசிக்கும் போதே, அவனது நெஞ்சுத் துடிப்பு வேகமாயிற்று!

என்னவாக இருக்கும்?

அன்னைக்கு எதுவும் இராது என்று, அவனுக்குத் தெரியும்! அவனை பெற்றவளுக்கு ஏதேனும் சுகவீனம் என்றால், 'சுகம்' பெரிய டாக்டர், அவனை அப்போதே தொடர்பு கொண்டிருப்பார்! அதற்கு அவன் வேறு ஏற்பாடு செய்திருந்தான்!

இப்போது பார்த்தால், சந்தனாதான் எதற்கோ பேசியிருக்க வேண்டும் என்று, தீபனுக்கு நிச்சயமாகத் தோன்றியது!

திருமணம் பற்றி, எலிசா பேச வேண்டுமானால்...

சந்தனாவிடம், எந்தக் கழுகு மூக்குக்காரருக்கும் தெரியாமல் எப்படிப் பேசுவது என்று யோசித்தபடியே வீட்டை அடைந்தால், மித்ராவுடைய விளையாட்டுத் தோழனான மிச்சியும், அவனுடைய தந்தை நாகோட்டாவும், நள்ளிரவு தாண்டிய அந்த நேரத்திலும் அவனுக்காக, அங்கே காத்திருந்தார்கள்!

தீபன் புரியாது திகைக்கவும், முகம் கன்றிய நாகோட்டா, "இந்தப் பையனின் பிடிவாதம், சார்! உங்கள் அம்மா, எங்கள் வீட்டுக்கு போன் செய்தார்களாம்! தன்னுடன் உடனே பேசும்படி, உங்களிடம் சொல்லச் சொன்னார்களாம்! செய்தியை நேரில் சொன்னால் நூறு டாலர் கொடுப்பீர்கள் என்றார்களாம்! உங்களிடம் விஷயத்தை சொல்லாமல் வீட்டுக்கு வரமாட்டேன் என்று இவன் ஒரேயடியாக நின்றுவிட்டான்! இல்லை, சார்! இவன் சொன்னான் என்பதற்காக, நீங்கள் பணம் கொடுக்கத் தேவையில்லை!" என்று, தீபன் கோட்டுப் பையிலிருந்து பணப்பையை எடுப்பதைப் பார்த்துவிட்டு, அவசரமாகச் சேர்த்துச் சொன்னார்.

தாயின் கெட்டிக்காரத்தனத்தை உள்ளூர மெச்சியவாறே முறுவலித்து, "அதற்காக மட்டும் அல்ல மிஸ்டர் நாகோட்டா! உங்கள் செல்லைக் கொஞ்சம் பயன்படுத்துவதற்கு, எனக்குத் தரவேண்டும்!" என்று இரண்டு நூறு டாலர் நோட்டுகளை எடுத்து கொடுத்தான் தீபன்.

செல்லை நீட்டியவாறு, "இந்த நேரத்திலா, மிஸ்டர் டீப்?" என்று கேட்டார் அவர்.

"இந்தியாவில் இப்போது பகல் தான் மிஸ்டர் நாகோட்டா!" என்று விட்டு, செல்லை வாங்கிப் பேசினான்.

தாய் சொன்னதைக் கேட்டுவிட்டு, "இங்கே ஒருத்தியை, உங்களுக்கு எப்போதுமே பிடிக்காது! அவளது வேலைதான் என்று நினைக்கிறேன். சந்தனா பற்றிக் கவலைப்படாதீர்கள். அவள் பொறுப்பற்றவள் அல்ல! பள்ளி வேலையை அவசரப்பட்டு விடமாட்டாள். அதுவும், அடுத்த மாதம் முழுப் பரீட்சை எனும் போது, நிச்சயம் மாட்டாள். அதனால் அவளை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்! அதனால் இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம்! நான் வந்து பார்த்துக் கொள்கிறேன்! கவலைப்படாதீர்கள்! நான் பேசுவது, மிச்சி அப்பா போனில் தான். மித்தியிடம் இருந்து, அவன் எண்ணை நீங்கள் வாங்கி வைத்தது, ரொம்பவும் நல்லதாகிப் போயிற்று! உம்! கட்டாயப்படுத்திக் கூட்டி வந்தேன் என்று, என் மீது, இன்னமும் கோபமாக இருக்கிறாள்! சரியாகிவிடும் அம்மா! கவலை வேண்டாம். பை" என்று பேச்சை முடித்தான்.

மேலும் இரண்டு வார்த்தை பேசி, அவரை அனுப்பி வைத்தான்!

ஆக, எலிசாவிடம் பேசியது சந்தனாதான்!

அவளுடைய அண்ணனின் துணையோடுதான் இருக்கிறாள்!

ஒரு மாதம் முன்னதாக, அவளுடைய அண்ணன் போனதும்... அதற்கும் எலிசாதான் காரணமாக இருக்குமோ?

இங்கே தொடக்க விழாவை விரைவுப்படுத்தியது, அவளே!

அது, அவனை உடனே இங்கே வரவழைப்பதற்காக இருக்கலாம்!

ஆனால், எதற்காக உடனே வரவழைக்க வேண்டும்?


கண்மூடி யோசிக்கையில், உடனே புரிந்தது!

அன்று பூபாலன் பற்றிச் சொல்வதற்காக எலிசா போன் செய்த போது, மித்ரா அவளிடம் என்னவெல்லாம் சொன்னாள்!

வரிகளுக்கு இடையே தேடுவது என்பார்களே!

மித்தியின் பேச்சில், எத்தனையோ கண்டுபிடிக்கலாமே!

சந்தனாவுடைய அண்ணனைக் கிளப்பி அனுப்பியதும், அவளாகவே இருக்கக் கூடும்!

பூபாலனின் முகவரியைச் சொல்லி, அவளுக்கு வசதி பண்ணிக் கொடுத்ததே, தீபன் தான்...!

தொடக்க விழாவை முன்னே வைத்து, அவனை இங்கே கொணர்ந்து, பூபாலனை அங்கே அனுப்பி, அவன் தங்கையைக் கூட்டிப் போக வைத்து... எலிசா, எமகாதக வேலைதான் செய்திருக்கிறாள்!

வீட்டிலிருந்து யார் போன் பண்ணினாலும், தன் செல்லுக்குத்தானே பண்ணுவார்கள், சரியாகச் சொல்லாமல் படம் தொடங்கும் வரை, தள்ளிப் போட்டு விடலாம் என்று எண்ணியிருப்பாள்!

படம் தொடங்கிவிட்டால், இடையில் கிளம்புவது முடியாதுதானே?

ஆனால், அவனுடைய அன்னையின் அறிவுத்திறன் தெரியாமல், எலிசா திட்டம் போட்டுவிட்டாள்!

திறப்பு விழாவை முன்னே தள்ளியது, ஒரு வகையில் தீபனுக்கு வசதியாயிற்று!

படப்பிடிப்பு தொடங்குமுன் ஓர் இடைவெளி கிடைத்தது!

யாரிடமும், எதுவும் சொல்லாமல், தானே போய், டிக்கெட் எடுத்து வந்தான் தீபன்.

மீனாட்சி ஆன்ட்டியின் வீட்டை விட்டு சந்தனா வெளியே வந்து, இன்னமும் முழுதாக ஒரு வாரம் முடியவில்லை!

அதற்குள் மாதக் கணக்கில் நோய்ப்பட்டுக் கிடந்தது போன்ற உணர்வு அவளுக்கு!

அன்றும் அப்படித்தான்! பள்ளியில் இருந்து, சோர்வுடன் வீடு திரும்பினாள்.

அண்ணனின் அலுவலக கெஸ்ட் ஹவுஸ்! வேறு வீடு கிடைக்கும் வரை, தங்கிக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள்! அவர்கள் வீடே கிடைக்கும் இன்னும் ஒரு மாதத்தில்! அதுவரை, இங்கேதான்...

சோர்வுடன் வீட்டைத் திறந்து உள்ளே சென்று கதவை மூட முயன்றால், கதவைத் தள்ளிக் கொண்டு, யாரோ உள்ளே வந்தார்கள்!

யாரோ அல்ல தீபன்!

உள்ளே வந்து கதவைச் சாத்திவிட்டு, ஜீன்ஸ் பாக்கெட்டில் கட்டை விரலை விட்டு நின்றபடி, அவளை ஏற இறங்கப் பார்த்தான் அவன்!

"என்னம்மா, வெட்டிக் கொண்டு வந்தாயே! பிரிவு சந்தோ...ஷமாக இருக்கிறதா?"

குத்தலாகக் கேட்டபோதும், உடனேயே உருகி, அவளை இழுத்து அணைத்தான் அவன்!

"என்னடா இது? உடம்பை இப்படிக் காய விட்டிருக்கிறாயே! ஒரு வேளையாவது, ஒழுங்காகச் சாப்பிடுவாயா, இல்லையா?"

உண்மை அன்பு இல்லாதவனால், இப்படிக் கேட்க முடியுமா?

அவன் தோளில் சாய்ந்தபடியே நின்று, "நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை?" என்று ஒரு விசும்பலுடன் கேட்டாள்!

ஒரு கணம் திகைத்து, "ஓ தெரிந்து விட்டதா? ஆனால், அதற்காகவா... அதற்கும் நீ பிரிந்து வருவதற்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டான் தீபன்!


என்ன சாதாரணமாகக் கேட்கிறான்!

"பின்னே? எத்தனையோ மில்லியன் டாலர் பட்ஜெட் படம் என்றார்களே! அத்தனை மில்லியன் செலவு செய்து படம் எடுக்கிறவர், அதை விட்டு, அந்தத் தகதக வாழ்க்கையை விட்டு, அவர் என்னைத் தேடி எப்படி வருவார் என்று..."

அவன் முகத்தில் கடுப்பு தெரிந்தது! "ஆனால், எத்தனை மில்லியன் டாலர் செலவு செய்து படம் எடுக்கிறவனுக்கும், மனைவி குழந்தை இருக்கலாம் தானே?" என்றான் கிண்டலும் எரிச்சலுமாக.

அவளுக்கும் ஆத்திரம் வந்தது! "இருக்கலாம், இருக்கலாம்! ஆனால், அந்த டைரக்டர் தான் யார் என்பதையே மனைவியிடம் மறைப்பாரா, என்ன?" என்றாள் வெடுக்கென.

அவளை ஆழப் பார்த்து, "ஆக மறைத்ததுதான் தப்பாகி விட்டதா? ஏன் மறைத்தேன் என்று யோசிக்கலாம் தானே அல்லது அப்படி யோசிக்கிற அசட்டுத்தனங்கள் எல்லாம், அங்கே இல்லையா?" என்று பழைய மாதிரியே கேட்டான் தீபன்.

அவனுள்ளே கோபம் இருந்தது! தன் குறைகளைக் கூட மறையாது சொல்லியும், தன்னை நம்பவில்லையே என்ற கோபம்! நம்பாமல், தாயையும் வருத்தி, தன்னையும் வருத்திக் கொண்டு இப்படி இருக்கிறாளே என்ற கோபம்!

"எல்லாம் யோசித்தேன்!" என்றாள் அவள் சுருக்கமாக!

"என்னவென்று?" என்று அவளை விடச் சுருக்கமாகக் கேட்டான் அவன்

சொல்லத் தயங்கினாள் சந்தனா!

எவ்வளவு மோசமாக நினைத்தாள்! அதைக் கூசாமல் எப்படிச் சொல்வது?

பதில் சொல்லாமல் அவள் தயங்கி நிற்கவும், "பரவாயில்லை! சொல்லிவிடு! என்ன நினைத்ததால், இந்தப் பிரிவு என்று எனக்குத் தெளிவாக தெரிந்தாக வேண்டும்!" என்று உந்தினான் தீபன்!

அப்போது, சந்தனா சந்தேகப் பட்டதில் தப்பு காண முடியாதுதான்! ஆனால், அவன் நேரிலே வந்து, இப்படிக் கேட்கும் போது, அந்த நினைப்பே, தப்பாகத் தோன்றியதே!

"சொல்லும்மா!"

ஒரு பெரிய மூச்செடுத்துக் கொண்டு, நினைத்ததை எல்லாம் சந்தனா சொன்னாள்.

தீபனின் உடல் இறுகுவதைச் சந்தனாவால் உணர முடிந்தது!

"சது, இவ்வளவு மோசமாக, என்னை நீயாகவே நினைத்தாயா? வேறு யாரும் எதுவும்... எலிசா... உன் அண்ணன் பங்கு... எப்படியும், என்னிடம் ஒரு வார்த்தையாவது கேட்க வேணுமா வேண்டாமா?" என்றான், கோபத்தை மீறிய வருத்தத்துடன்.

கேட்காமலா? அவனுக்குப் பதில் சொல்ல வாய்ப்புக் கொடுக்க எண்ணி முயன்றாள். அவனோடு பேசவே முடியாமல் போனதும் அப்போது பட்ட துன்பமும்...

"எல்லாம் கேட்டேன்" என்று சொல்லு முன், அவளுக்குத் தொண்டை அடைத்தது! "உங்களோடு பேச வேண்டும் என்றால், கதாநாயகி நடிகையோடு, அவளைப் புரிந்து கொள்ளப் போயிருப்பதாக... காலையில் வந்த பின் சொல்வதாகச் சொன்னாள்" என்று தவிப்புடன் தெரிவித்தவள், "அப்புறம் அண்ணனும்" என்று அவன் சொன்னதையும் கூறினாள்.

அவள் ஒன்றும், அவனைத் தப்பாக நினைக்க ஆசைப்பட்டு, அதைச் செய்யவில்லையே! எவ்வளவோ, வேதனையோடு... வேறு வழியின்றிதானே, அவனை மோசமாக எண்ணியதும், அவன் வீட்டை விட்டு வெளியேறியதும்?

சற்றே ஆறுதலுற்றவன் போல, "இப்படி ஒன்றைத்தான், நானும் எதிர்பார்த்தேன். மற்றவர் பேச்சு வலுவாக இருந்திருக்கும் என்று எண்ணினேன்!" என்றான் தீபன். "ஆனால், அடிப்படைக் காரணம், நான் யார் என்று சொல்லாமல் போனதுதான் இல்லையா? மனம் ஒன்றுபட்ட பிறகும், ஏன் மறைத்தேன் என்பது? அதுதானே? அது ஏன் என்று, இப்போது சொல்கிறேன், கேள்!" என்று தொடங்கி, காரண காரியம் விளக்கினான் அவன். தன்னிலை விளக்கம்!

"பார் சந்தனா, தரமான பத்திரிகைகளில் பெயர் வருவது பெருமைதான்! ஆனால், புற்றீசல் போல, பெருகிவிட்ட கொஞ்சம் இரண்டாம் தரப் பத்திரிகைகள், நிலைத்து நிற்பதற்காகவே, பரபரப்பான செய்திகள் வெளியிட வேண்டியிருக்கிறது! பல டீவி சானல்களும் அப்படித்தான் செக்ஸ், கொலை, கொள்ளை, பலவித வக்கிரங்கள்... இவை போன்ற செய்திகள்! ஒரு சின்ன இணுக்குக் கிடைத்தால் போதும், அங்கே பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில், பாடாய்ப் படுத்தி விடுவார்கள்! என்ன மாதிரிக் கேள்விகள்! என்ன மாதிரி விளக்கங்கள்! நம்மைப் பார்க்க, நமக்கே வெறுத்துப் போகும்! போகுமிடம் எல்லாம், கண் கூச வைக்கும் ஃப்ளாஷ் ஒளி வெள்ளங்கள்! ஒரு வினாடி கூட, நாம் நாமாக இருக்க முடியாது! இதில் அதிகம் மாட்டிக் கொள்கிறவர்கள், திரைப்படம், டீவி நிகழ்ச்சிகள் போன்ற 'ஷோ' தொழிலில் இருப்பவர்கள்தான்!

"இங்கேயும், கிசுகிசு என்று, என்னவெல்லாம் எழுதுகிறார்கள் என்பதை நீயே எதிலாவது படித்திருப்பாய்தானே?

"உன்னிடம் விஷயத்தைச் சொல்லாததன் முக்கியமான காரணம் இதுதான்! பேச்சுவாக்கில், கவனமற்று, நீ ஒரு வார்த்தை விட்டுவிட்டால் கூட, வேண்டாத காதுகளில் அது விழ நேர்ந்தால், அப்புறம் உன்னைப் பந்தாடி விடுவார்கள்! உனக்கே தெரியாததைச் சொல்லவும் முடியாது அல்லவா? அதனால் தான் சொல்லாமலே போனேன்! அம்மா வீட்டில் எவ்வளவு எச்சரிக்கையோடு இருக்கிறேன், பார்த்தாய் தானே? அவர்கள் என் அம்மா என்பதே, வெளியே தெரியாது!"

ஆக, அவளுக்காகத்தான் யோசித்திருக்கிறான்!

"இதில் இவ்வளவு இருக்கிறது என்று தெரியாது!" என்றாள் சந்தனா. "அண்ணன் சொன்னதோடு, நீங்கள் நம்பி டெலிபோன் நம்பர் கொடுத்தவள் வேறு அப்படிச் சொல்லவும்..."

"எல்லாமே, எலிசாவின் வேலைதான்!" என்று பூபாலனை அவள் கிளப்பி விட்டதைச் சொன்னான் தீபன்.

"என்னக்கும், அப்படி யார், வேலை மெனக்கெட்டு, அண்ணனிடம் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்க முடியும் என்று யோசனை தான். ஆனால் அண்ணனும், அதை மட்டும் நம்பி வரவில்லை. விசாரித்து, பத்திரிகைகளில் பார்த்து..."

"சொன்னேன் இல்லையா? என்ன பத்திரிகை என்றும் பார்த்திருக்க வேண்டும்! அந்தப் பத்திரிகையின் தரம் பற்றியும், விசாரித்திருக்க வேண்டும்! அத்தோடு, மிஸ்டர் பூபாலனுக்குத் தகவல் கொடுத்துக் கிளப்பி விட்டது, எலிசாவாகத்தான் இருக்க முடியும் என்பது எனக்கு நிச்சயம். அவளுக்குத்தான், உன் அண்ணனைப் பற்றித் தெரியும்! என் பிரச்சினை தெரியும் என்பதால், இந்த விஷயத்தில், என் மீது கோபப்பட மாட்டாய் என்று நினைக்கிறேன்!" என்று பூபாலனைப் பற்றி விசாரிக்குமாறு எலிசாவிடம் சொன்னதைக் கூறினான்.

சற்று யோசித்துவிட்டு, சந்தனா தலையாட்ட, மேலே தொடர்ந்தான். "மித்ராவின் பேச்சில் உன் பெயர், அவளது தமிழ்ப் படிப்பு, நான் அதிக நாள் இங்கே இருந்தது எல்லாம் எலிசாவின் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது! நான் ஒரேயடியாக, இங்கேயே இருந்து விடுவேனோ என்று எண்ணி, அதைத் தடுக்க, எல்லா வகையிலும் முயன்றிருக்கிறாள்."

"ஒரு தரன் சொன்னீர்கள், அவளுக்குப் பத்து சதவீதக் கமிஷன் என்று! அது தடையின்றிக் கிடைப்பதற்காக, இவ்வளவு செய்வார்களா? எந்தத் தொழிலுமே, ஒன்று போனால், இன்னொன்று தானே? அதற்காக நம்பியவர்களின் வாழ்வைக் கெடுத்தால், மனம் உறுத்தாதா?"

"பத்து சதவீதத்தைக் குறைத்து மதிப்பிடாதே! மில்லியன் கணக்கில் செலவிடும் போது, அங்கே பலருக்கு அவள் எஜெண்ட் எனும் போது, அவளுக்கு எவ்வளவு கிடைக்கும் பார்! என்னைக் காட்டியே, என் படங்களின் மூலமாக எத்தனை பேரைப் பிடிப்பாள்? எலிசாவைப் பொறுத்தவரை, அவளது கொழுத்த சம்பாத்தியத்துக்கு, நான் ஒரு கருவி! அது தடையில்லாமல் வேலை செய்ய வேண்டும்! அவ்வளவே! அது போகட்டும்! அவளை விடு! நம் விஷயத்துக்கு வா! இப்போது நான் என்ன செய்யட்டும், சொல்லு?" என்று கேட்டான் தீபன்.

சந்தனா திகைத்தாள்!

அதுபற்றி, அவனே சொன்னான்.

"நான் திட்டமிட்டுச் சென்றது, இந்தப் படம் முடிகிற நிலையில், இந்தத் துறையில் இருந்து விலகுவது பற்றி அறிவிப்பது என்று! நான் மருத்துவம் படித்தவன் என்பது எல்லோருக்கும் தெரியும்! மருத்துவம் ஓர் உன்னதப் பணி என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை! அதையே தொடரப் போகிறேன் என்றால், மதிப்பாகவே விலகிவிடலாம் என்று நினைத்தேன்! அந்தப் பணத்தைக் கொண்டு, நம் மருத்துவமனையைப் பிரம்மாண்டமாகக் கட்டி, ஒரு பகுதியை இல்லாதவர்களுக்காக என்று... பல திட்டங்கள்! ஆனால், இங்கே உள்நாட்டுப் பிரச்சனையைப் பார்க்கும் போது... இப்போதே கூடப் படத்தில் இருந்து விலகிக் கொள்வது, நல்லதோ என்று தோன்றுகிறது! ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டதால், நிறைய இழப்பு ஏற்படும்! எல்லாவற்றையும் விட்டுவிட்டு, வெறும் கையை வீசிக் கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கிறேன். கொஞ்சம் கடனும் ஏற்படலாம்! ஆனால் பெரிய பாதிப்பு இராது! பரவாயில்லை என்றால் சொல்லு! முடிவு உன்னதுதான்!"

பெரிய பொறுப்பைத் தலையில் தூக்கி வைக்கிறான்.

அதன் மூலம், அவனது அன்பின் அளவையும் காட்டுகிறான்!

இப்போது, அவளது அன்பின் அளவு எவ்வளவு?

"விலகாவிட்டால் எப்படி, தீபன்? ஒரு பெரிய இழப்போடு, நம் வாழ்வைத் தொடங்குவது என்றால், சஞ்சலமாக இருக்கிறதே! அத்தோடு, மருத்துவமனை..."

எதுவானாலும் உன் பொறுப்பு! சொல்லு என்பது போல, அவன் பேசாமலே நின்றான்.

"உங்கள் முதல் திட்டப்படி, இந்தப் படத்தை மட்டும் முடித்துவிட்டு வரலாம் என்றால் எப்படி, தீபன்? ரொம்ப நாள் ஆகுமா?"

"இந்தப் படத்துக்கான திட்டம், படப்பிடிப்புத் தொடங்கி, அறுபது நாட்கள்! மாறாது!"

"கட்டாயமாக அதற்குள் முடிந்துவிடுமா?"

"நிச்சயம்!

"இன்னொன்று தீபன், உங்களுக்கு ஆஸ்கார் வரை கிடைத்திருக்கிறதே! உங்கள் திறமை அதில் தான் என்றால், அதை விடுவது சரியா? உங்களுக்கே அதில் தான் ஈடுபாடு என்றால்...செய்யும் தொழிலில் திருப்தி இருக்க வேண்டும்! அது, என்னால் கெடுவது என்றால்..." என்று கலக்கத்துடன் இழுத்தாள் சந்தனா!

"ஊகூம்! அப்படி இல்லை, சது! கடந்த ஓர் ஆண்டாக... ஆஸ்காருக்குப் பிறகே, என்னுள் குழப்பம் தான்! அந்த விளக்கும், ஒளியும், பரபரப்பும்! ரசிக்க முடியாததோடு, வெறுப்பும் வரத் தொடங்கியிருந்தது! மித்ரா அடிப்பட்டதிலிருந்து, எப்போது விடுபடுவோம் என்பதுதான்! இது, ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தம்! அத்தோடு சரி! அதற்கு மேல், என் பணி, என் அப்பா போல, மருத்துவம் தான்! அது, எனக்கு நிச்சயம்!" என்றான் தீபன் தெளிவாக!

"அப்படியானால் சரி!" என்று பளிச்சென்று முகம் மலர்ந்தாள் அவள்! "அங்கே படப்பிடிப்புத் தொடங்கியதும், உங்களுக்கு அவகாசம், சரியாக அறுபதே நாட்கள்! அதற்கு மேல் போனால்..."

"அதற்கு மேல் போனால்?" என்று திரும்பிப் பார்த்துவிட்டு, என்ன என்பது போலக் கையால் சைகை செய்து கேட்டான் அவன்.

"அதற்கு மேல் பிரிந்திருப்பது, என்னால் தாங்காதுப்பா! அதனால், எதையும் லட்சியம் பண்ணாமல், உங்கள் காதைப் பிடித்து இழுத்துவர, நான் அங்கே வந்து குதித்துவிடுவேன், ஜாக்கிரதை!" என்று, கண்ணில் மையலுடன் எச்சரித்தாள் சந்தனா!

சந்தோஷமாகச் சிரித்
தான் அவன்!


Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Icon_minitimeMon Mar 14, 2011 1:55 pm

TAMIL NOVELS HERE ((UMA BALAKUMAR,JEI SHAKTHI,CHITRA BALA,ARUNA NANTHINI,KJ NOVELS HERE
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Empty
PostSubject: BAANUMATHI --RC   ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Icon_minitimeTue Mar 15, 2011 3:37 pm

engu ramanichanthiran novels download seithu paarvai edum vasathi ulladu...



http://tamil-ebooks.webs.com/apps/forums/topics/show/4408845-rc-novel
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Empty
PostSubject: Read tamil novels for free.   ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Icon_minitimeTue Mar 15, 2011 3:40 pm



http://tamilbooksfreedownload.blogspot.com/2010/05/ramanichandran-novels.html
Back to top Go down
Sponsored content





ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Empty
PostSubject: Re: ரமணி சந்திரன் நாவல்கள்   ரமணி சந்திரன் நாவல்கள் - Page 2 Icon_minitime

Back to top Go down
 
ரமணி சந்திரன் நாவல்கள்
Back to top 
Page 2 of 2Go to page : Previous  1, 2
 Similar topics
-
» திருமதி.ரமணிசந்திரனின் சில நாவல்கள் (Part 14)
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» சிவகாமியின் சபதம்
» திருமதி. ரமணிசந்திரனின் சில நாவல்கள் (Part 1)
» திருமதி. ரமணிசந்திரனின் நாவல்கள் (Part 2)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: