BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in30 வகை சீஸன் சமையல் Button10

 

 30 வகை சீஸன் சமையல்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

30 வகை சீஸன் சமையல் Empty
PostSubject: 30 வகை சீஸன் சமையல்   30 வகை சீஸன் சமையல் Icon_minitimeFri Jun 25, 2010 6:23 am

தக்காளி ஜாம்

தேவையானவை: தக்காளி – ஒரு கிலோ, சர்க்கரை – 3 கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்.

செய்முறை: பழுத்த தக்காளிப் பழங்களை நன்கு கழுவவும். சூடான நீர் உள்ள பாத்திரத்தில் தக்காளியைப் போட்டு, 2 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு, பழங்களை எடுத்து உரிக்க, தோல் எளிதாக வந்துவிடும். தோலுரித்த பழங்களை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் அரைத்த தக்காளி விழுதையும் சர்க்கரையையும் சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். ஜாம் பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். ஆறியதும், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். இதை சுத்தமான காற்றுபுகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும்.

பூரி, சப்பாத்தி, அடைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது இந்த ஜாம்!

வெள்ளரி – தக்காளி -மிளகு சாலட்

தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகள் – 2 கப், பொடியாக நறுக்கிய தக்காளித் துண்டுகள் – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய வெள்ளரித் துண்டுகள், தக்காளித் துண்டுகள் கொத்தமல்லியை ஒரு பாத்திரத்தில் போட்டு சேர்த்து, நன்றாகக் கலந்து கொள்ளவும். அதில் மிளகுத்தூள், உப்பு தூவி மீண்டும் ஒருமுறை கலந்து பரிமாறவும்.

இது, சத்து நிறைந்த காலை சிற்றுண்டி; வெயில் காலத்துக்கு மிகவும் ஏற்றது!

தக்காளி வடாம்

தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப், வேக வைத்து அரைத்த தக்காளிச் சாறு – 5 கப், கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் விழுது – 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை: முதல் நாள் இரவே ஜவ்வரிசியை ஊற வைக்கவும். தக்காளி சாறுடன் பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். ஊற வைத்த ஜவ்வரிசியை மிக்ஸியில் நைஸாக அரைத்து அதில் சேர்த்துக் கிளறவும். கூழ் பதம் வந்ததும், கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து இறக்கி ஆற வைக்கவும். பிறகு பிளாஸ்டிக் பேப்பரில் லேசாக எண்ணெய் தடவி, சிறிய கரண்டியால் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் விடவும். வெயிலில் 2 அல்லது 3 நாட்கள் காய வைத்து எடுக்க… கலர்ஃபுல் தக்காளி வடாம் ரெடி!

தக்காளி பர்ஃபி

தேவையானவை: தக்காளி – அரை கிலோ, தேங்காய் துருவல் – அரை கப், துண்டுகளாக்கப்பட்ட முந்திரிப் பருப்பு – அரை கப், வெனிலா எசன்ஸ் – ஒன்றரை டீஸ்பூன், நெய் – 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை: தக்காளிப் பழங்களைக் கழுவி, தண்ணீரில் 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். ஆறியதும், பழங்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, ஜூஸ் வடிகட்டியால் வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தக்காளிச் சாறைப் போல், 2 மடங்கு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். அடி கனமான, வாய் அகன்ற பாத்திரத்தில் வடிகட்டிய தக்காளிச் சாறு, சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும். மிதமான தீயில் வைத்து, அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். அனைத்தும் ஒன்றாகக் கலந்து, பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது, முந்திரித் துண்டுகளையும், வெனிலா எஸன்ஸையும் சேர்த்துக் கிளறவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி… நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் விரும்பிய வடிவத்தில் துண்டுகள் போடவும்.

வேப்பம் பூ வத்தல்

தேவையானவை: வேப்பம் பூ – ஒரு கப், தயிர் – கால் கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேப்பம் பூவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். அதை, தயிரில் கொட்டி, உப்பு சேர்த்து நன்கு கலந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அந்தப் பூவை வெயிலில் 2, 3 நாட்கள் காய வைத்து, ஈரமில்-லாத காற்றுபுகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.

தேவைப்படும் போது, நெய் அல்-லது எண்-ணெயில் பொரித்து, சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். குடற்புழு பிரச்னைக்கு சிறந்த மருந்து இது!

கொத்தவரங்காய் வத்தல்

தேவையானவை: கொத்தவரங்காய் – அரை கிலோ, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: கொத்தவரங்காயை காம்பு ஆய்ந்து, நன்றாகக் கழுவிக் கொள்ளவும். குக்கரில் கொத்தவரங்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், தண்ணீரை வடித்து கொத்தவரங்காயை ஒரு துணியில் பரப்பவும். வெயிலில் இதனை 2, 3 நாட்கள் காய வைத்து எடுத்து, ஈரமில்லாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.

தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். இந்த வத்தலை குழம்புக்கும் பயன்படுத்தலாம்.

லெமன் சிரப்

தேவையானவை: எலுமிச்சைச் சாறு – 2 கப், சர்க்கரை – 1 கப்.

செய்முறை: எலுமிச்சைச் சாறையும் சர்க்கரையையும் ஒன்றாகக் கலந்து கெட்டியான கண்ணாடி பாட்டிலில் ஊற்றவும். அந்த பாட்டிலின் வாய்ப்புறத்தை மெல்லிய துணியால் கட்டி தினமும் வெயிலில் வைத்து எடுக்கவும். இதேபோல் 10 நாட்கள் வைக்க எலுமிச்சை – சர்க்கரை கலவை, கெட்டியான ‘சிரப்’ போல் ஆகிவிடும். இதனை காற்றுபுகாதவாறு இறுக்கமாக மூடி வைக்கவும்.

தேவைப்படும்போது, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் அளவு இந்த ‘சிரப்’ கலந்து, ஐஸ் க்யூப் போட்டு ஜூஸ் போல குடிக்கலாம்!

இளநீர் புட்டிங்

தேவையானவை: சைனா கிராஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், இளநீர் – ஒரு கப், மில்க்மெய்டு – ஒரு டின், காய்ச்சி, ஆற வைத்த பால் – முக்கால் லிட்டர், தேங்காய் வழுகல் – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், சர்க்கரை – அரை கப்.

செய்முறை: ஒரு கப் தண்ணீரில் சைனா கிராஸை கலந்து, மிதமான தீயில் அடுப்பில் வைக்கவும். அது முழுமையாகக் கரைந்ததும் இறக்கி, இளநீர் சேர்க்கவும். அடி கனமான பாத்திரத்தில் பால், மில்க்மெய்டு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, மிதமான தீயில் வைத்து அடிக்கடி கிளறவும். சர்க்கரை கரைந்ததும், சைனா கிராஸ் – இளநீர் களவையை அதில் சேர்த்து நன்கு கிளறி… உடனே இறக்கவும். தேங்காய் வழுகலை சேர்த்து ஒரு அகலமான கண்ணாடி பாத்திரத்தில் விட்டு ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறுவதற்கு முன் கடாயில் சிறிதளவு சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி செட் ஆன புட்டிங் மீது தூவிப் பரிமாறவும்.

இளநீர்- வாழைப்பழ ஸ்மூத்தி

தேவையானவை: இளநீர் – 2 கப், தேங்காய் வழுகல் – ஒரு கப், வாழைப்பழம் – 1, கெட்டித் தயிர் – அரை கப், காய்ச்சி, ஆற வைத்த பால் – கால் கப், சர்க்கரை – அரை கப்,

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக மிக்ஸியில் சேர்த்து, நன்றாக அடித்துக் கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’லென்று பரிமாறவும்.

கீரை வடை

தேவையானவை: அலசி, ஆய்ந்து, பொடியாக நறுக்கிய கீரை – 2 கப், கோதுமை மாவு – ஒரு கப், கடலை மாவு, ரவை – தலா அரை கப், இஞ்சித் துருவல் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, சமையல் சோடா – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, மிளகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் துண்டுகள் – தலா அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒன்றாக சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதனை 10 நிமிடம் ஊற விடவும். பிறகு, அதில் சிறிய உருண்டை எடுத்து, வட்டமாக வடை போல தட்டிக் கொள்ளவும். இதேபோல் ஒவ்வொரு வடையையும் செய்து, ஆவியில் வேக வைத்துப் பரிமாறவும்.

இது, வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற சத்தான வடை!

மாங்காய் பருப்பு மசியல்

தேவையானவை: நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் – 2 கப், வேக வைத்த துவரம்பருப்பு – அரை கப், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் – 4, சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் மாங்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், 2 பச்சை மிளகாய் சேர்த்து வேக விடவும். மாங்காய் வெந்ததும், வேக வைத்த துவரம்பருப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மீண்டும் கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து நன்கு கலக்கி இறக்கவும். கடாயில், எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மீதம் உள்ள 2 பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, மாங்காய்-பருப்பு கலவையில் கொட்டிக் கலக்க… மாங்காய் பருப்பு மசியல் ரெடி!

பப்பாளிக்காய் மிளகுக் கூட்டு

தேவையானவை: தோல் சீவிய பப்பாளிக்காய்த் துண்டுகள் – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் தண்ணீர் விட்டு பப்பாளித் துண்டுகள், பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், சேர்த்து வறுத்துக் கொள்ளவும். ஆறியதும், தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதை, வேக வைத்த பப்பாளியுடன் சேர்த்து, உப்பு போட்டு லேசாகக் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து அதில் கொட்டிக் கலந்து பரிமாறவும்.

தேங்காய்ப் பால் – பனீர் கறி

தேவையானவை: இளநீர் – ஒன்றரை கப், பொடியாக நறுக்கிய தேங்காய் வழுகல் – அரை கப், தேங்காய்ப் பால் – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப், நறுக்கிய தக்காளி – அரை கப், பனீர் துண்டுகள் – ஒரு கப், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்ததும், இளநீர் விட்டுக் கலந்து கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்க விட வும். கொதித்து வரும்போது, பனீர் துண்டு கள், தேங்காய் வழுகல் சேர்த்து, உப்பு கலந்து மிதமான தீயில் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். தேங்காய்ப் பால் சேர்த்து, ஒருமுறை கொதித்தும் இறக்கவும்.

சப்பாத்தி, பூரி, பரோட்டாவுக்குத் தொட்டுக்கொள்ள சிறந்த சைட் டிஷ் இது.

கிர்ணிப் பழ ஸ்வீட் சாலட்

தேவையானவை: கிர்ணிப் பழம் – ஒன்று, வெல்லம் – கால் கிலோ.

செய்முறை: கிர்ணிப் பழத்தை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை சீவி, பழத்துடன் கலக்கவும். பழமும்
வெல்லமும் ஒன்றுடன் ஒன்று நன்றாகக் கலந்ததும் எடுத்து, அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, ‘ஜில்’லென்று பரிமாறவும்.
இரும்புச் சத்து நிறைந்த சாலட் இது. கோடை வெயிலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

மாம்பழ பாஸந்தி

தேவையானவை: பால் – ஒரு லிட்டர், மீடியம் சைஸ் மாம்பழம் – 5, சர்க்கரை – ஒன்றரை கப்.

செய்முறை: மாம்பழத்தின் தோல், கொட்டை நீக்கி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்; அரைத்த கூழ் ஒரு கப் இருக்க வேண்டும். பாலை நன்றாகக் காய்ச்சி, மேலே படியும் ஏட்டை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, முதல்முறை ஏடு வந்ததும் எடுத்து விட்டு, மறுபடியும் காய்ச்சி… ஏடு படிந்ததும் எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் பாலும் பாதியாக சுண்டி விடும். பாஸந்திக்கு தேவையான ஏடும் கிடைத்து விடும். பிறகு, சுண்டிய பாலில் மாம்பழக் கூழ், சர்க்கரை சேர்த்துக் கிளறி உடனே அடுப்பை அணைத்து, பாத்திரத்தை இறக்கவும். எடுத்து வைத்துள்ள பால் ஏட்டை சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க… அசர வைக்கும் அற்புதமான மாம்பழ பாஸந்தி தயார்!

பலாக்காய் வறுவல்

தேவையானவை: சிறிய பலாக்காய் – ஒன்று, மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தரையில் பேப்பரை விரித்து, கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, பலாக்காயின் மேல் இருக்கும் தோல், நார் ஆகியவற்றை நீக்கி சுத்தப்படுத்த-வும். கொட்டைகளை நீக்கி, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பலாக்காய்களைப் போட்டுப் பொரிக்கவும். ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கரைத்து, அதன் மீது தெளிக்கவும். பொரியும் ஓசை அடங்கியதும் கரண்டியால் வடிகட்டி எடுக்க.. மொறுகலான பலாக்காய் வறுவல் மணக்க மணக்க ரெடி!

பலாக்காய் ஊறுகாய்

தேவையானவை: பொடியாக நறுக்கிய பலாக்காய்த் துண்டுகள் – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் – தலா 1, சோம்பு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, பலாக்காய் துண்டுகளை வேக வைத்து, தண்ணீரை வடிக்கவும். பலாக்காய் துண்டுகளை துணியால் நன்றாக ஈரம் போக ஒற்றி எடுத்து உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். மிக்ஸியில் சோம்பு, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்துப் பொடிக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பொடித்த பொடியை சேர்த்து வறுத்து… வேக வைத்த பலாக்காய் துண்டுகளைப் போட்டு அடுப்பை அணைக்கவும். நன்றாகக் கலந்து இறக்கவும். ஆறியதும், சுத்தமான பாட்டிலில் அடைத்து வைத்துத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

பலா பிஞ்சு பொரியல்

தேவையானவை: பிஞ்சு பலா – ஒன்று, தேங்காய் துருவல் – அரை கப், பாசிப்பருப்பு – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: பலாக்காயை தோல் நீக்கி, நார் எடுத்து நன்றாக சுத்தம் செய்து… சுளைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை அரை வேக்காடு பதத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து நறுக்கிய பலா துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். வெந்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து கொஞ்ச நேரம் வேக விடவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து மணம் வந்ததும், அடுப்பை அணைத்து தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்க… பலா பிஞ்சு பொரியல் ரெடி!

மாம்பழக் குழம்பு

தேவையானவை: நீலம் வகை மாம்பழம் (சிறியது) – 5, துவரம்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, புளி – 50 கிராம், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். வடிகட்டிய புளிக் கரைசலை சேர்த்து அதில் மாம்பழம் சேர்க்கவும். உப்பு சேர்த்து, பாத்திரத்தை மூடி மிதமான தீயில் வேக விடவும். இன்னொரு வெறும் கடாயில் துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து சிவக்க வறுத்துப் பொடிக்கவும். அந்தப் பொடியை குழம்புடன் சேர்த்துக் கலக்கிக் கொதிக்க விடவும். மாம்பழம் வெந்து விட்டால் தோல் நன்றாக சுருங்கியிருக்கும். இந்தப் பதத்தில் இறக்கிப் பரிமாறவும்.

மாங்காய் எம்மி சட்னி

தேவையானவை: தக்காளி, மாங்காய் – தலா 1, கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பூண்டு – 4 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மாங்காயைத் தோல் சீவி கேரட் துருவியால் துருவிக் கொள்ளவும். மாங்காய், தக்காளி, பூண்டு, வறுத்த கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்க… சட்னி ரெடி!

இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்ற சட்னி இது; சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.

பலாக்கொட்டை பொடி

தேவையானவை: பலாக்கொட்டை – ஒரு கப், கடலைப்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பலாக்கொட்டையை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் வறுத்துக் கொள்ளவும். ஆற வைத்து.. மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். அதனுடன் வேக வைத்த பலாக்கொட்டைகள் சேர்த்து, ஒருமுறை சுற்றி எடுக்கவும்.

இதை சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.

பலாப்பழ இலை அடை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், பலாச்சுளை (நறுக்கியது) – அரை கப், வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி – தலா கால் டீஸ்பூன், காய்ந்த வாழை இலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதிக்கும்போது நறுக்கிய பலாச்சுளைகளைச் சேர்த்து வேக வைக்கவும். ஆறியதும், தண்ணீரை வடித்து வெல்லத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, அரைத்த விழுதைச் சேர்த்துக் கெட்டியாகும் வரைக் கிளறவும். ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி சேர்த்து மீண்டும் கிளறி இறக்கினால், பலாப்பழ பூரணம் ரெடி!

இன்னொரு கடாயில், தண்ணீரைக் (ஒரு கப் அரிசி மாவுக்கு ஒண்ணேகால் கப் தண்ணீர் என்ற விகிதத்தில்) கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் மிதமான தீயில் வைத்து, உப்பு சேர்த்து, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் கிளறவும் இளஞ்சூட்டில் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து வட்ட அடைகளாகத் தட்டவும். நடுவில் பலாப்பழப் பூரணத்தை வைத்து, இலையை மடிக்கவும். இதேபோல் ஒவ்வொரு அடையையும் தயார் செய்யவும். அவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்க, வாழை இலை வாசனையோடு, வித்தியாசமான சுவையில் பலாப்பழ இலை அடை தயார்.

பலாப்பழ எனர்ஜி பாயசம்

தேவையானவை: பலாச்சுளை – 10, தேங்காய்ப் பால் – ஒரு கப், அவல் – அரை கப், செர்ரி பழம் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் பழக்கடைகளிலும் கிடைக்கும்) – அரை கப், தேன் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரித் துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: தேங்காய்ப் பாலில் அவலை ஊற வைக்கவும். நறுக்கிய பலாச்சுளை, செர்ரி பழங்களை ஒன்றாக்கி, மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பழ பேஸ்ட்டுடன் ஊற வைத்த அவல், தேன் சேர்த்துக் கலக்கவும். முந்திரித் துண்டுகளை வைத்து அலங்கரித்துப் பரி-மாறவும்.

எளிதாகத் தயாரித்து காலை, மாலை சிற்றுண்-டியாக உண்ணலாம்!

மேங்கோ டாஃபீ

தேவையானவை: தோல், கொட்டை நீக்கி அரைத்த மாம்பழக் கூழ் – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், சர்க்கரை – முக்கால் கப்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் மாம்பழக் கூழ், தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை ‘சிம்’மில் வைத்துக் கிளறவும். கெட்டியான பதத்தில் வந்ததும், இறக்கி ஆற விடவும். ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாக்லேட் வடிவத்தில் உருட்டி வைக்க… உடலுக்கு கெடுதல் செய்யாத ஹோம் மேட் சாக்லேட் ரெடி!

பனானா ஈஸி குல்ஃபி

தேவையானவை: பச்சை (அ) ரஸ்தாளி வாழைப்பழம் – 2, மில்க் மெய்ட் – ஒரு டின், முந்திரி, பாதாம் பருப்பு – தலா 10, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: வாழைப்பழத்தை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பேஸ்ட்டுடன் மில்க் மெய்ட், பாதாம், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அதனை, குல்ஃபி அச்சுகளில் நிரப்பி, ஃப்ரீஸரில் வைத்துக் கெட்டியாக உறைந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

கீரை மோர்க் கூட்டு

தேவையானவை: ஆய்ந்து, அலசிய முளைக்கீரை – 2 கப் (எல்லா கீரையிலும் செய்யலாம்), தயிர் – ஒரு கப், துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கடுகு, குண்டு மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையுடன் உப்பு சேர்த்து வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். துவரம்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டவும். ஊறிய பருப்புடன் காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய குண்டு மிளகாய் தாளிக்கவும். அதில் வேக வைத்த கீரை, அரைத்த விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். எல்லாம் கலந்து ஒன்றாக வந்ததும், இறக்கி.. தயிர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

இது, உடலுக்கு குளிர்ச்சி தரும்; வெயிலுக்கு ஏற்ற கூட்டு.

மாம்பழ புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், மாம்பழக் கூழ் – ஒரு கப், பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, காய்ந்த மிளகாய் – 2, நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அடுப்பை ’சிம்’மில் வைத்து, ஊற வைத்த அரிசியைச் சேர்த்து வறுக்கவும். மாம்பழக் கூழை அதனுடன் சேர்த்துக் கிளறி, ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆறியதும் எடுத்துப் பரிமாறவும்.

தர்பூசணி பாயசம்

தேவையானவை: தர்பூசணித் துண்டுகள், கண்டன்ஸ்டு மில்க், தேங்காய் பால், சர்க்கரை – தலா ஒரு கப், முந்திரி, திராட்சை – தலா 10, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – தேவையான அளவு

செய்முறை: கடாயில் நெய் விட்டு திராட்சை, முந்திரி வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் சர்க்கரையை தண்ணீர் விடாமல் போட்டு, அது கரைந்து பிரவுன் கலரில் வந்ததும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைத்து விட்டு, தேங்காய் பால், ஏலக்காய்தூள், வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். தர்பூசணித் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் மேல், திராட்சை – முந்திரிக் கலவையை விட்டுக் கலந்து பரிமாறலாம்; ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.

இது, நீர்க்கடுப்பை குறைக்கும்.

மாம்பழம் – பேரீச்சம்பழக் கொழுக்கட்டை

தேவையானவை: பெரிய மாம்பழம் – ஒன்று (துண்டுகளாக நறுக்கியது), துருவிய வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய முந்திரித் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன், பேரீச்சம்பழம் – 10, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,

மேல் மாவுக்கு: மைதா – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மேல் மாவு: ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதை 10 நிமிடம் ஊற வைக்கவும்.

பூரணம்: தோல் நீக்கிய மாம்பழத் துண்டுகள், வெல்லம், முந்திரி, நறுக்கிய பேரீச்சம்பழத் துண்டுகள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கையால் நன்றாக பிசைய… பூரணம் ரெடி!

மைதா மாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து, நடுவில் பூரணம் வைத்து, மூடி ஆவியில் வேக வைக்கவும். அல்லது சிறிய பூரிகளாக இட்டு நடுவில் பூரணம் வைத்து மூடியும் கொழுக்கட்டையாக செய்து ஆவியில் வேக வைக்கலாம்.

நார்ச்சத்தும், இரும்புச்சத்தும் நிறைந்த இது, சிறந்த மாலை நேர மாலை சிற்றுண்டி!

வெள்ளரிக்காய் சாப்ஸ்

தேவையானவை: வெள்ளரிக்காய் – கால் கிலோ, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் – 4, கறுப்பு உப்பு (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, நெய் – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரிக்காயை தோல் சீவி, சிறிய வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி… அதில் வெள்ளரித் துண்டுகளை சேர்த்து வதக்கவும். தண்ணீர் வற்றியதும், கொடுத்துள்ள எல்லாத் தூளையும் சேர்த்துக் கிளறவும். பிறகு பச்சை மிளகாய், கறுப்பு உப்பு, சர்க்கரை, கொத்தமல்லியை மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்துக் கிளறி இறக்க.. சுவையான வெள்ளரிக்காய் சாப்ஸ் தயார்!

நன்றி:- சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்.
Back to top Go down
 
30 வகை சீஸன் சமையல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சமையல் குறிப்புகள்
» 30 வகை கிராமத்து சமையல்
» 30 வகை வாழை சமையல்
» 30 வகை அதிசய சமையல்
» 30 வகை எண்ணெய் இல்லாத சமையல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: