BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதமிழ் இழப்பும் இருப்பும் (Thamizh) Button10

 

 தமிழ் இழப்பும் இருப்பும் (Thamizh)

Go down 
AuthorMessage
NaviNesh

NaviNesh


Posts : 249
Points : 572
Join date : 2010-05-24
Age : 35
Location : The Little World Of Cuties

தமிழ் இழப்பும் இருப்பும் (Thamizh) Empty
PostSubject: தமிழ் இழப்பும் இருப்பும் (Thamizh)   தமிழ் இழப்பும் இருப்பும் (Thamizh) Icon_minitimeWed Jul 21, 2010 4:37 pm

பற்பசையும் சோப்பும் தயாரிக்கும் சில பன்னாட்டு நிறுவனங்கள் தம் அண்மைத் தயாரிப்புகளில், மூலிகைகளைச் சேர்த்துப் புதுமை படைத்துள்ளன. பல உள்நாட்டு மூலிகைகளின் பட்டியலைச் சொல்லித் தங்கள் தயாரிப்புகளின் விஷேசத்தை ஊடகங்களில் உரத்துக் கூறுகின்றன. இதன் அர்த்தம் யாது? உள்நாட்டு மூலிகைப் பயன்களை இப்போது தான் அவை கண்டுபிடித்தனவா என்ன? இல்லை. உண்மையில், ஒரு நாட்டின் தட்ப வெப்பங்களில் விளையும் மூலிகைகளே, அந்த நாட்டு மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றும் வைத்தியர்கள் பொறுப்பை ஏற்கின்றன. இயற்கையின், பரவலாக்கும் விசேஷ குணம் இது. ஆங்கில ஆதிக்கம், அழித்த பல சுதேசிப் பயன்பாடுகளில் மருத்துவமும் ஒன்று. நகரில், ஆங்கிலப் பள்ளிகளுக்கு அடுத்தபடியாக முளைத்திருக்கும் தீமைகளில் ஒன்றான அலோபதி மருந்துக்கடைகள், இந்த உண்மைக்குச் சாட்சியம். எனினும், ஒரு ஆங்கில ஆதிக்கம் இருந்த பூமியில் பன்னாட்டு ஆதிக்கம் நேர, அவற்றில் ஒன்றான இந்த வியாபார நிறுவனங்கள், திடுமென தமிழ்நாட்டு மூலிகைகளைப் பயன்படுத்தும் காரணங்கள் என்ன? இரண்டு. ஒன்று, வித்தியாசம் எதையேனும் செய்து, வியாபாரத்தை விருத்தி செய்வது, மற்றது, இயல்பாகவே தமிழர்களின் பார்வை தம் மண்ணை நோக்கித் திரும்பி இருப்பது.

இது ஒரு சாதகமான நல்ல அம்சம். வேப்ப எண்ணெயைக் கொண்டும், துளசியைக்கொண்டும் சோப்புகள், பல மருந்துகளால் ஆன முகப்பூச்சிகள் எல்லாம் கடைவிரித்திருக்கின்றன. அண்மையில் கல்லூரி மாணவிகள், கைத்தறி புடவையில் ஈடுபாடு காட்டியது போல, இருபாலரும், சித்த ஆயுர்வேத மருந்துப் பொடிகளில் ஆர்வம் கொள்கின்றனர். கல்வி தொடர்பாகத் தமிழ் மொழிக்கு நியாயமாக முதல் இடம் அளிக்கக் கோரும் இயக்கம் கனிந்து கொண்டிருக்கிறது. சுதேசிக்கலர், பவன்டோ போன்ற பானங்களின் இடத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் முயற்சியில் கைப்பற்றி இருக்கின்றன. தமிழர் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில், வாழ்க்கை முறையில், "தமிழம்" இல்லை. தமிழ் மண்ணோடு, தமிழ்ப்பண்பாட்டோடு இணைந்த சாரம், தமிழர் வாழ்க்கையில் இல்லை. தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகள், பழக்க வழக்கங்கள், தமிழர் வாழ்வில் இல்லை.

சேர சோழ பாண்டிய மற்றும் வேளிர்களாடு, அவர்களின் குழப் பெயர்களோடு இணைந்த சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்பன போன்ற பெயர்களாலும், தம் ஊர், தம் சாதிகளாலுமே, தமிழர் சிந்தனை குறுகி இருந்தது. தமிழ் அறிஞர்களான புலவர்களே அன்று, இவற்றை இணைத்துத் "தமிழகம்" என்றார்கள். தமிழ் என்பது மொழியோடு இணைந்த வெறும் சொல்லாக அர்த்தப்படவில்லை. மாறாக, தமிழ், தமிழ் பேசும் இனமான தமிழர், அவர் வாழ்ந்த இடமான தமிழ் மண் என்பதாகவே தமிழ் என்னும் சொல், பொருள் கொண்டது. தமிழ் என்னும் சொல் இலக்கண, இலக்கியத்தையும், அகப்பெருள் பண்பாட்டையும் குறித்தது. பண்பு அடிப்படையில் தமிழ், இனிமை, வீரம் என்று பல பொருளைக் கொண்டது. சங்க காலம் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரை, தமிழை முன்வைத்து, தமிழனைத் தமிழக மனிதனாக உருவகித்த செயற்பாடு, பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் சரிந்தது. ஆரிய, சமஸ்கிருத ஊடுருவல், தமிழர் வாழ்வை, அதன் சத்தான பல பகுதிகளை மாற்றிப் போட்டது- தமிழர்கள் தமிழை தொடங்கி 700 ஆண்டுகள் நடந்து, 10-ஆம் நூற்றாண்டில் வெற்றியைக் கண்டது.

தமிழர் வாழ்க்கையில் மிக முக்கியமான, தமிழர் கண்டுபிடிப்பான, தாம் வாழும் வாழிடங்களுக்குச் சுற்றுப்புறத் தாவரங்களின் பெயரையே சூட்டிக் கொள்ளும் அசலான தமிழ்ப் பண்பாடு குலைக்கப்பட்டது. தில்லை மரங்கள் சூழ்ந்த ஊரைத் தில்லை என்றே அழைத்தனர். தமிழர். அது சிதம்பரம் ஆயிற்று. மயிலாடுதுறை மாயவரம் ஆயிற்று, பழைய மலை அல்லது பழமலை விருத்தாச்சலம் ஆயிற்று, குளம், தீர்த்தம் ஆயிற்று. இயற்கையோடு இரண்டறக் கலந்திருந்த தமிழ் வாழ்வு, பிடுங்கப்பட்டு மதங்களோடு சேர்த்துக் கட்டப்பட்டது. தங்கள் நிலத்தோடு, மரங்களோடு, பூக்களோடு வாழ்ந்த தமிழ் வாழ்க்கை, கோயிலோடு பிணைக்கப்பட்டது. ஒரு இன மக்களின் மண் சார்ந்த மனோபாவங்கள் அழிக்கப்படுகிறபோது, தமிழர்களின் மண்ணும் மண் சார்ந்த கலாச்சாரமும் அபகரிக்கப்பட்டு அவர்களின் வெற்றிடத்தில் மதம் திணிக்கப்பட்டது- அருண்மொழித்தேவன், ராஜராஜன் ஆன பிறகு, அவன் ராஜரீகம் எத்தன்மைத்தாய் இருக்கும் என்பதில் வியப்படைய வேண்டியதில்லை.

வாழும் நிலம், தட்ப வெப்பம், நீர், உணவு ஆதாரங்களே, பண்பாட்டைத் தகவமைக்கும் காரணங்கள். தமிழர்களின் இசை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை நிலங்களை?, சூழலை ஆதாரமாகக் கொண்டவை. அந்த நிலங்களின் பெயர்களிலேயே பண்கள், இசைச்கருவிகள் இருந்தன. தமிழர் இழந்த ஆகப் பெரும் செல்வம், இசை, இன்றைய கர்நாடக சங்கீதத்தின் தோற்ற மூலமாக இருந்தது. பழந்தமிழர் இசையின் ஆதி இசை, இது வைதிகம் வளர்ந்த காலத்துச் சமஸ்கிருத வடிவம் ஏற்றுப் பின்னர், தெலுங்கர் ஆட்சியில் தெலுங்கு பேசி வளர்ந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டியது. கீர்த்தனைகளின் மொழி மாறியதேயன்றியும், இந்துஸ்தானி இசை கர்நாடக இசையோடு கொண்டும் கொடுத்தும் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டது. இந்துஸ்தானியே, கர்நாடக சங்கீதத்தின் குட்டி எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் வைதிகத்தை எதிர்த்து கடுமையாக ஐந்து, ஆறு நூற்றாண்டுகள் போர் செய்து தமிழ் மண்ணில் வேரூன்றிய பௌத்தம் மற்றும் சமணம் ஆகிய மதங்கள், சங்கீதத்தை, நாட்டியத்தை, கூத்தைத் தத்தம், தத்துவ வழியில் நின்று புறக்கணித்தன. கடுமையான "ஒழுக்க"மும், துறவும், உணவு முறையும் கொண்டிருந்த சமணம், ஓரளவு நெகிழ்வுற்ற பௌத்தம், இசையையும் கூத்தையும் தம் கையில் எடுத்திருக்குமேயானால், தமிழக வரலாறு மாறி இருக்கும். ஏழாம் நூற்றாண்டு தொடங்கி நடந்த பக்தி இயக்கமும் தோன்ற வழியற்றுப் போயிருக்கும். மற்றும் ஒரு முக்கிய சமூக நிகழ்வும் உண்டு. இசையைத் தம் வாழ்வாகக் கொண்டிருந்த பறையர், துடியர், பாணர்கள், பாடினிகள் சமூக வாழ்விலிருந்துமே விலக்கி வைக்கப்பட்டமை, தமிழர் பண்டை இசையையும், விலக்கி வைக்கப்பட்டதாக ஆயிற்று. கோயில்கள் கலாச்சாரப் பிரதேசமாக ஆக்கப்பட்டுவிட்டபின், கோயிலுக்குள் பிரவேசம் மறுக்கப்பட்ட ஆதி தமிழர்களின் இசை எங்ஙனம் வளர்ச்சியுற முடியும்? இந்த விபரீதத்தின் இன்னெரு பக்கமே. தமிழ்க் கோயில்களில் தமிழ் வழிபாடு, தமிழ்க் குடமுழுக்கு இல்லாமையும்.

தமிழர்களின் மண்ணும் இசையும் நிறம் மாறியபின், அவர்களின் இறைவர்கள் மாறினர். குன்றின் தலைவனாம் குறிஞ்சித் தலைவன், அழகையுடைய முருகன், ஸ்கந்தன் ஆக்கப்பட்டான். ஏற்கனவே அவனுக்குக் கல்யாணம் ஆகியிருந்தது. அவன் காதல் மனைவியின் பெயர் வள்ளி. வைதிகம், தங்கள் பங்களிப்பாகத் தேவயானையைத் திருமணம் செய்வித்தது அவனுக்கு. சிவப்பானவன் என்ற பொருளில் சிவன் என்றழைக்கப்பட்ட இறைவன், முருகனுக்குத் தந்தையானான். பார்வதி என்பவள் மனைவியானாள். "கதையல்ல நிஜம்" நிகழ்ச்சியில் பிரிந்தவர் கூடுவது போல, அன்றைக்கும் இந்தக் கதை நிஜமாயிற்று போலும். பாலைக்கடவுள், கொற்றவை, இரு உருவம் எடுத்தாள். காளி என்றும், சிவன் மனைவி என்றும் ஆனாள். இப்படியாகத் தமிழர்கள் அறியாத கடவுளர்கள் பெருகி, ஏறக்குறைய பாரதி காலத்து (1921) இந்திய ஜனத்தொகை அளவுக்குப் பல்கினர் - முப்பத்து முக்கோடி.

வடவேங்கடமும், தென்குமரியும், இருபக்கக்கடல்களும், தமிழ்நாட்டின் எல்லைகளாக ஒரு காலத்தில் இருந்தன. இன்றைய மலையாளமும் (மலைஞாலம்) கன்னடப் பெரும் பகுதியும், ஆந்திரப்பகுதியும் தமிழ்நாடேயாகும். எருமை நாடு மகிஷாசுர நாடு ஆகி, மைசூர் ஆனது. காவிரி, தென் தமிழ்க்குமரி, காவிரியை இழந்தோம். பவானியை இழக்கப் போகிறோம். பவானியில் கேரளாவில் அணை கட்டுகிறார்கள் என்று செய்தி வருகிறது. மலைவளம், வீரப்ப அரசால் ஆளப்பட்டுத் தனித்தீவாகியிருக்கிறது. உதகையை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பல பறவை இனங்கள். மர இனங்கள் அழிந்தே போயின. இன்றைய சென்னை நகரில் மட்டும் 19-ஆம் நூற்றாண்டில், சுமார் நூறு ஏரிகள் இருந்தன. வள்ளுவர் கோட்டம் இருக்கும் பகுதிக்கு ஏரிக்கரை என்பதே பழைய பெயர். ஏரி அப்பால் ஏறிப்போன இடத்தை முப்பால் அறிஞரும் அறியார். தேவி குளம், பீர்மேடு தமிழகத்துக்கு வேண்டும் என்று சிலர் சொன்னபோது, "மேடாவது, குளமாவது" என்ற காமராசர், இப்போதிருந்தால் வருத்தப்படுவார்.

தமிழர், அகம், புறம் என்று வகுக்கப்பட்ட வாழ்வில் திளைத்தனர் என்பார்கள். அகம், புறம் என்பது காதலும் வீரமும் ஆம். 24 மணி நேரமும் காதலிப்பது என்பது சாத்தியம் இல்லை. (சிட்டுக்குருவி மற்றும் அஸ்வகந்தி லேகியம் சாப்பிட்டாலும் கூட) அதே போல் 24 மணி நேரச் சண்டையும் ஆகாது. இடைப்பட்ட நேரத்தில் தமிழர் என்ன தான் செய்தனர்? அரசர்கள், காலை நேரங்களில் தங்கள் அரியாசனத்தில் அமர்ந்து மக்களுக்குத் தரிசனம் தந்தார்கள். வழக்குத் தீர்த்தார்கள். நெய்யோடு புலால் கலந்த அரிசிச்சாதம் சாப்பிட்டார்கள். பாணர்களுக்குப் பணம் தந்தார்கள். பின்னர், தம் மார்பால் தம் உரிமை மகளிரைத் தழுவிக்கொண்டு ஓய்வு கொண்டார்கள். தீயோரைத் தண்டித்தார்கள். வீரர்களுக்குச் சௌகர்யம் செய்து கொடுத்தார்கள். சுற்றத்தை வறுமை இன்றி வாழ வைத்தார்கள் (உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாட்டு-புறநானூறு).

அரச வாழ்க்கை இப்படியானது. புலவர்கள் குடும்பத்தில் வறுமை மிஞ்சியது. தொழிலாளர்கள், உழைத்தார்கள், இயற்கையாகவே சுரண்டப்பட்டார்கள். சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்க்கைச் சித்திரங்கள். புனைவும், யதார்த்தமும் கூடியவை. கடும் யதார்த்தமும், மிகையும் உண்டு. பொதுவாக, அவை மேட்டுக்குடி வாழ்க்கையைச் சித்தரித்தன. வாழ்வின் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் இலக்கியத்தகுதி பெறாமல் தான் இருந்தார்கள்.

ஒன்று நிச்சயம்.

தமிழனின் வீரம், புறம் கொடாத்தன்மை, மானத்துக்காகப் போரிடல் இவை இன்றும் நீடிக்கும் தமிழ்ப் பண்புகள், தன்னிடம் இருப்பதைப் பங்கிட்டுக் கொடுத்தல் இன்னும் நீடிக்கும் தமிழ்க்குணம்.

பழந்தமிழர்கள், அரசர்கள், அந்தணர்கள் என்கிற பிராமணர்கள், போர் வீரர்கள், சேவகர்கள், அரசு சார்ந்த மேல் கீழ் உத்தியோகஸ்தர்கள், விவசாயிகள், நெசவு மற்றும் குயவர்கள், கிராம அதிகாரிகள், ஏவலர்கள், பஞ்சமர்கள், சண்டாளர்கள் என்று பிரிக்கப்பட்டு வாழ்ந்தார்கள். சோழச்சமுதாயம் இடங்கை, வலங்கை என்ற சாதிப்பிரிவினையைக் கொண்டது. அரசனைச் சார்ந்தோர் மட்டுமே (இன்னைய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மேல் அதிகாரிகள், கார்பரேட் தலைவர்கள்) நல்ல, சுகமான வாழ்க்கை நடத்தினர். கல்வி பொது வாய்ப்பாகச் சங்க காலத்துக்குப்பின் இல்லை. பெண்கள், எக்காலத்திலும் உயர்தரத்தில், மனித மரியாதைகளுடன் இருந்ததாகச் செய்தி இல்லை. பழைய தமிழ்ச் சமுதாயம் ஆண் சமுதாயமே, பரத்தையர், விலை மகளிர் உண்டு என்பதால் விபசாரத்தைப் பேணிய சமுதாயம் உயர் சமுதாயமாக இருக்க முடியுமா என்ன?

நிலத்தை ஐவகையாகப் பிரிந்த தமிழர்கள், காலத்தையும் மிக நுட்பமாகப் பிரித்தார்கள். பெரும்பொழுது என்ற பகுப்பில், கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில் முதுவேனில் அடங்குவன. காட்டை அழித்து, நீர் நிலைகளையும் அழித்த பின் காலங்கள் குழம்பின. இன்றைய தமிழனுக்குப் பெரும்பொழுது இல்லை. காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் வைகறை என்ற சிறுபொழுதின் வகை 10-15 உத்தியோக வாழ்வில் குழம்பித்தான் போகும். இல்லறம் நல்லறம். "பிரேமானந்த" வாழ்க்கை விலக்கு. விதி விலக்கிற்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. "ஐயப்போ" மற்றும் ஆதிபராசக்திச் சிவப்பு இல்லை. அன்றைய திருமணம், இன்றைய சிர்திருத்த மணம் மாதிரிதான் இருந்தது. மாமுது பார்ப்பான் மறைவழி காட்டும் நிலமை சிலம்பு காலத்தில் வந்தது. பெண்கள் கற்பு வலியுறுத்தப்படடது. கவனிக்கவும், பெண்கள் கற்பு மட்டும்தான். கணவன் பிரிந்து தாசி வீட்டுக்குப் போனால் பெண்களுக்குக் கோபம் வராது. ஊடல்தான் வரலாம்.

கணவனை இழந்த பெண், உடன்கட்டை ஏறினாள். பல சமயம், கைம்மை நோன்பு நோற்றாள். தலையை மழிக்கும் பழக்கம் தமிழருடையது.

வரி, கொஞ்சம் கூடுதல்தான். மன்னர்களின் அந்தப்புர ஜனத்தொகை கூடினால் வரியும் கூடியது.

பொதுவாக மக்கள் அரிசிச் சோறு (புழுங்கல் அரிசி) உண்டனர். வரகும், சாமையும் உண்டதுண்டு. கடுகுதாளித்து, மிளகு, புளி உப்பு சேர்த்து சமைத்தார்கள். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு மிளகாய் பஜ்ஜி தெரியாது. மிளகாய் அன்று இல்லை. புளிப்புக்கு மாங்காய், நாவல்பழம் பயன்பட்டது. ஊறுகாய் இருந்தது. வாழை, பலா, மாங்காய், நுங்கு, இளநீர், சோம்பு, வள்ளிக்கிழங்கு போன்றவையும் இருந்தன. எல்லாச் சாதியாரும் பார்ப்பாரும் இறைச்சி உண்டனர். கள் குடிக்கும் நல்ல பழக்கம் (பிராந்தி, விஸ்கி கிடைப்பதில்லை) தமிழரின் சுகப்பழக்கம், தேள் மற்றும் பாம்பு விஷம் போல் போதை ஏறவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆண்கள் (உயர்குடி) வேட்டியும் மேலாடையும் அணிந்தார்கள். பெண்கள், கீழே புடவை மட்டும் கட்டினர். மார்புகளை மறைக்கும் பழக்கம் இல்லை. நகரங்களில் மாடி வீடுகள் இருந்தன. கிராமங்களில் பெரும்பாலும் குடிசைகள்தான். பெண்கள் பந்து விளையாட்டிலும், பல்லாங்குழியிலும் நேரம் போக்கினர். (அக்காலத்தில் டி.வி. இல்லை அழவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது) எனவே, விளையாட நேரம் இருந்தது. கூத்துக்கள் நடந்தன. ராஜாக்கள், மேட்டுக் குடிகள் கலைகள் வேறு, மக்கள் கலை வேறு.

திரும்பிப் பார்த்தது போதும், கொஞ்சம் முன்னால் பார்க்கலாம். தமிழன் என்ற அடையாளம் அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையிலும், மேலும் அது முற்றும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட்டாக வேண்டும். சில கேள்விகள் நமக்கு உதவ முடியும். தமிழனை இனம் காட்டுவது எது? இரண்டாயிர ஆண்டுகாலத் தொடர்ச்சியாக வரும் தமிழ்ப் பண்பாட்டின் இன்னும் இருக்கும் மிச்சம் எது? அது இன்னும் செழிப்பாகப் போஷிக்கப்பட மேற்கொள்ளப்படவேண்டிய குறைந்த பட்ச செயல்திட்டம் என்ன? சிறப்புற உருவாகி வரும் தலித். பெண்கள் இயக்கங்களை இந்த மீள் செப்பத்தில் இணைத்துக் கொள்வது எப்படி?

வைதிகத்திலிருந்தும் முற்றாகத் துண்டுபடுத்திக் கொள்ளும் தமிழ் முயற்சிகள் ஊக்குவிடப்பட வேண்டும். ஓரளவு சமய, சாதி சாராத பொது இலக்கியமாகத் தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொண்ட திருக்குறளுக்கு இந்த முன் நகர்த்தலில் இருக்கும் பங்கு என்ன? சிலப்பதிகாரக் கண்ணகியிடம் இந்தவிதச் சிந்தனைக்குத் தர ஏதும் இருக்குமா? "பீடன்று" என்ற சொல்லும், கவுந்திக்கு அவள் அருளிய பொதுச் சொற்களும் அவையில் அவள் நிகழ்த்திய உரையும் இக் கண்ணோட்டத்தில் என்ன பயன் தரும்? சங்க இலக்கியங்களின் ஊடாகப் பெறக்கூடிய தமிழ்ப் பொதுப்பண்புகள் என்ன? இருபதாம் நூற்றாண்டு தொடங்கி பின்னோக்கி எழுதப்படவேண்டிய தமிழ் தமிழின மக்கள் வரலாற்று நூல்களின் தேவை யோசிக்கப்பட வேண்டும். பிராந்திய மாவட்ட வரலாறுகள் எழுதப்பட்டவை. தொகுக்கப்படவேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளில், வைதிகம், சாதி, வர்க்கம் ஆகியவைகள் மேல் எடுக்கப்பட்ட போராட்டங்களின், எழுச்சிகள் வராறுகள் தொகுக்கப்பட வேண்டும். வாய்மொழி வரலாறுகள், நாட்டுப்புறக்கதைகள், பாடல்கள் இந்த வராற்றில் பெரும் பங்கு எடுக்க முடியும் என்பது உணரப்பட வேண்டும்.

தமிழ் இசைத்துறையில், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்தர், தமிழிசை மூவர்கள் முதலான மாற்றுச் சிந்தனைகள் தொகுக்கப்பட வேண்டும். தமிழ் நாடக கூத்துக்களின் அசல் வடிவம் கண்டு தேர வேண்டும். உலகத்தின் சகல அறிவுத்துறைகளின், கலை இலக்கியங்களின் உச்சங்கள் தமிழுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். தமிழின் அற்புதப் பங்களிப்புகள் மேலை மொழிகளில் கொண்டு செல்லப்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக, உடனடியாகச் செய்யத்தக்கது. தொடக்கக்கல்வி, மேல்நிலைக்கல்வி ஆய்வுக் கல்வி, அறிவியல் தொழில் நுட்பக்கல்வி ஆகியவற்றில் தமிழ் முழுப் பங்கு வகிக்குமாறு செய்யப்பட வேண்டும். கல்வி, மத்திய அரசின் பட்டியலில் இருந்து முழுமையாகத் தமிழ்நாட்டு அதிகாரத்துக்கு உட்பட வேண்டும். தமிழகத்துக்குத் தமிழ் அரசிடம் இருந்து எந்த அரசுத்துறையிலிருந்தும் வரும் அறிக்கைகள், தமிழில் இருந்தாக வேண்டும். தமிழக நீதிமன்றத்தில், தமிழ் வழக்கறிஞர்கள், தமிழ் நீதிபதிகள், தமிழ் வாதி பிரதிவாதிகளிடம் தமிழில் பேச ஆணையிடும் வழிவகை காணப்படவேண்டும்.

இவை அனைத்துமே பல்வேறு காலமாகத் தனிமனிதர்களாலும் அமைப்புகளாலும் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. எனினும் இவை தொகுக்கப்படவில்லை. இவை சரியாக விமர்சிக்கப்பட்டு ஆவணப் படுத்தப்படவில்லை.

வைதிகம், உயர்சாதி, மேல்வர்க்கக் குணாம்சங்கள் கொண்டவர்களே தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் விரோதிகளாக இருக்கிறார்கள். பதவி அரசியல், தமிழனைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு மூலதனங்களின் தரகர்களுக்குத் தமிழ் அடையாளம் பிடிக்காது. தமிழ், தமிழின விரோதிகள் தமிழகத்துக்கு வெளியில் மட்டும்அல்ல. தமிழ் நாட்டுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர், தமிழ், தமிழ்நாட்டு அரசியல் பண்பாட்டுத் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் சிலர் மடங்களின் தலைவர்கள்.

நன்றி: திறனாய்வு சில புதிய தேடல்கள்
Back to top Go down
 
தமிழ் இழப்பும் இருப்பும் (Thamizh)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்
» என் தமிழ் மொழியின் பெருமை!
» செந்தமிழும் சிறு ஆய்வும்
» தமிழ் இலக்கியவரலாறு
» தமிழ் கவிதைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: