BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inவயது 34 ~~ சிறுகதைகள் Button10

 

 வயது 34 ~~ சிறுகதைகள்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

வயது 34 ~~ சிறுகதைகள் Empty
PostSubject: வயது 34 ~~ சிறுகதைகள்   வயது 34 ~~ சிறுகதைகள் Icon_minitimeFri Mar 25, 2011 2:40 pm

வயது 34 ~~ சிறுகதைகள்


நான் டாம்க்ரூஸ் போல் மிக அழகாக தினமும் மீசையை ட்ரிம் செய்து (சிரைத்து) கொண்டு கண்ணாடியில் அப்படியும், இப்படியும் பார்ப்பதற்கு மிக முக்கிய காரணம், என்னை திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் தந்தைக்கு என் வயது 34 அல்ல என்பதை எடுத்துரைப்பதற்காக மட்டும்தான். அழகான பெண்களை எல்லாம் அசட்டுப் பார்வையுடன் கடந்து சென்றது ஒரு காலம். புத்தர், விவேகானந்தர் எல்லாம் இன்று ஏட்டுச் சுரைக்காய் ஆகிவிட்டார்கள். அவர்களும், அவர்கள் கருத்துக்களும் கறிக்கு உதவாது போல என்று எனக்கு நானே கடந்த 3 வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுதெல்லாம் ஓடிச்சென்று பேருந்தை பிடிக்க முயலும் சாகசச் செயலை, நான் பேர் வியந்து பார்க்கும் படி செய்ய முடியாமல் போய்விட்டதே என்பதை நினைத்துப் பார்த்தால் பெரும் துக்கம் ஏற்படுகிறது. எங்கே ஓடும் பொழுது தடுக்கி அசிங்கமாக கீழே விழுந்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது என்பதை ரகசியமாக ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு வேளை அசிங்கமாக கீழே விழுந்துவிட்டால்......... 4 பேர் மத்தியில் என் சாகச வரலாறு பற்றிய குறிப்புகளை எப்படி நிலை நாட்டுவது.

பேருந்து வந்து நின்ற பிறகு அதற்குள் வரிசையில் நின்று மெதுவாக ஏறுவது மிக அவமானகரமான செயலாக இருக்கிறது. பேருந்தை அதன் நிறுத்தத்தில் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று ஆவேசமாக முழங்கியிருக்கிறேன் கல்லூரியில் நண்பர்களுக்கு மத்தியில். பேருந்து நிறுத்தத்தில் பேருந்தானது மெதுவாகத்தான் செல்ல வேண்டும். பயணிகள் ஓடிச் சென்று ஏறிக் கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு பேருந்தை நிறுத்துவார்களாம். அதில் பயணிகள் வரிசையில் நின்று ஏறுவார்களாம். அதுவும் படியில் யாரும் நிற்கக் கூடாதாம். என்ன கொடுமை இது. படிகளில் தொங்கும் 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று பாலகங்காதர திலகர் கூறியிருக்கிறார் அல்லவா? எப்படி ஒரு சுதந்திர போராட்ட வீரரின் புகழ்பெற்ற வீரவுரையை இன்றைய மனிதர்கள் மீறுகிறார்கள்.

வாயை அகல திறந்தபடி மெய்மறந்து எனது உரையை கேட்ட அந்த நண்பர்கள் இன்று என்னைப் பார்த்தால் என்னாவது. அன்று அகஸ்மாஸ்தாக படியில் தொங்கியபடி சென்ற கல்லூரி மாணவனை கடுமையாக மனதிற்குள் திட்டிவிட்டேன்.

"படுபாவிப் பயலே விழுந்து தொலைத்து விடாதே, இவர்களுக்கு படிகளில் தொங்கியபடி சீன் போடுவதே வேலையாக போய்விட்டது"

கடவுளே நல்லவேளை என் நண்பர்கள் யாரும் இங்கே இல்லை.

நான் மிகப்பொறுப்பானவனாக மாறிவிட்டேன்.

நான் படிகளில் தொங்குவதில்லை. நான் வரிசையில் நின்று பேருந்துக்குள் செல்கிறேன். நான் வலது பக்கம் ஆண்கள் அமரும் இருக்கையில் மட்டுமே அமருகிறேன். நான் பேருந்து நின்ற பிறகே இறங்குகி‍றேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் சரியான சில்லரை கொடுத்து டிக்கெட் வாங்குகிறேன்.

வாழ்க்கையில் இருந்த சாகசத்தை ஒட்டு மொத்தமாக தொலைத்து விட்டேன். இவ்வாறு சொல்லிக் கொள்வதில் எனக்கு ஏன் வெட்கம் ஏற்படவில்லை என்றால், நான் அவ்வாறெல்லாம் வாழ்ந்ததில் மிக சந்தோஷமாக இருந்திருக்கிறேன். அவ்வாறெல்லாம் வாழ்வதில் உள்ள சந்தோஷத்தைப் பற்றி சிறிதும் தெரியாதவர்கள், "வெட்காமாயில்லை உனக்கு" என்று கேட்கும் உரிமையை பெறவில்லை என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கி‍றேன்.

----------------------------

எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் கருப்பு மை தலைச் சாயம் (டை) கண்டுபிடித்த அந்த மனிதருக்கு ஏன் நோபல் பரிசு கொடுக்கவில்லை என்று கடுமையாக சண்டை போட்டிருப்பேன். எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு. அங்கீகாரம் கிடைக்கப்பெறாமல் உதாசீனப்படுத்தப்படுவது சகஜமாக போய்விட்டது இங்கு.

இந்தியாவில் இந்த நிகழ்வு நடைபெறுவது சகஜம்தான். அதாவது. ஒரு முடி. ஒரே ஒரு முடி. அழகாக வெள்ளை நிறத்தில் இருந்துவிடக் கூடாது. அப்படி இருந்துவிட்டால் அவனது பாலுணர்வு வாழ்க்கையே கேள்விக் குறியாக மாறிவிடும். தலைமுடி வெள்ளையாகத்தான் இருந்தால் என்ன? இந்தியாவின் மக்கள்தொகையை 200 கோடி ஆக்குவதில் என் பங்கு என்ன குறைந்துவிடப் போகிறதா என்ன. அந்தச் சாதனை வேள்வியில் என்னை விட்டு விட்டு தனியாக பயணிக்க இந்தச் சமூகத்தை நான் அனுமதிக்க மாட்டேன். எனக்காக, அல்லது என்னைப் போன்றவர்களுக்காக அன்றே ஒரு விஞ்ஞானி கடுமையாக தனது முடியெல்லாம் கொட்டி விடும் அளவுக்கு யோசித்திருக்கிறான். முடியை எப்படி கருமையாக்குவது என்பதை பற்றி.

அன்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன், பந்தை என் வீட்டிற்குள் அடித்து விட்டு என்னைப் பார்த்து கூறுகிறான்.

"அங்கிள், அங்கிள் தயவு செஞ்சு பந்த எடுத்துப் போடுங்க"

வீட்டிற்குள் கண்ணாடி உடைந்தது பற்றி கூட எனக்குக் கவலையில்லை. ஆனால்......... ஆனால்......... அவன் ஏன் என்னைப் பார்த்து அப்படிக் கூப்பிட்டான்.

அவனை தொடர்ச்சியாக 40 நிமிடங்கள் மிரட்டினேன். இனிமேல் அவன் என்னை எங்கு பார்த்தாலும் "அண்ணன்" என்று தான் கூப்பிடுவான். அவனை தயார் படுத்த 40 நிமிடங்கள் ஆனது.

அன்று ஒருநாள் அவன் அம்மாவுடன் மார்க்கெட் சென்றுவிட்டு வரும் போது என்னை முறைத்து பார்த்படி சென்று கொண்டிருந்தான். எங்கே தனது பழியை தீர்த்துக்கொள்வானோ என்று பயந்து போனேன்.

இதற்குத்தான் வெள்ளைக்காரனாக பிறக்க வேண்டும் என்பது. அவர்களது முடி ஏற்கன‍வே வெள்ளையாகத்தான் இருக்கும். அவர்களுக்கு நரைப்பது என்ற பிரச்னையே இல்லை. ஏன் இந்த இந்தியர்கள் மட்டும் முடியின் நிறத்தை கவனிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏன் என் மனதின் நிறத்தை கவனிக்க மாட்டேன் என்கிறார்கள். அது உஜாலா சொட்டு நீலம் போட்டு துவைத்தது போல் வெள்ளை வெளேர் என பளிச்சிட்டுக் கொண்டுதானே இருக்கிறது.

அன்று ஒருநாள் பெண் பார்க்கப் போன இடத்தில் இவ்வாறு சம்பாஷனை நடைபெற்றது.

நான் : பெண் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

பெண்ணின் தாய் : மாப்பிள்ளைக்கு வயசு ரொம்ப இருக்கும் போல இருக்கு

நான் (மனதிற்குள்ளாக) : ஆமாம் டை அடிக்க மறந்து விட்டேன்.

(சங்கடத்தில் நெளிவதைப் பார்த்து)

பெண்ணின் தந்தை : இல்லை மாப்பிள்ளைக்கு தலையெல்லாம் நரைச்சு போயிருக்கே அதான் கேக்குறாங்க, வேற ஒண்ணும் இல்லை.

அந்த படுபாவி போட்டோ கிராபர் என் தலையை போட்டோஷாப்பில் கருப்பாக்கி கொடுத்துவிட்டிருக்கிறான். என்முடிக்கு திடீரென என்ன வந்துவிட்டதோ அது வெளுத்துவிட்டது. ஏன் அவ்வாறு ஆனது என எனக்கு எப்படி தெரியும்.

என் நிலைமையை புரிந்த கொண்டு, கூட்டத்தில் மிச்சர் தின்று கொண்டிருந்த ஒருவர் இவ்வாறு துணைக்கு வந்தார்.

ஒருவர் : அது பித்தநரைதாங்க, அவருக்கு வயசு 30 தான் ஆகுது

என்னுடைய மனசாட்சி : அடப்பாவி 4 வயதை முழுங்கிவிட்டானே, முதல் இரவில் பெண்ணுக்கு விஷயம் தெரிந்து கண்ணை கசக்கினால் என் நிலைமை என்ன ஆவது. என் மானம் தான் என்னாவது.

பெண் என்னவோ 10 லிட்டர் குக்கரில் தினமும் சமைத்து சாப்பிடுபவள் போலத்தான் இருந்தாள். இருந்தாலும், வெள்ளை முடி என்பது 10 லிட்டர் குக்கரை மிஞ்சுவதாக இருக்கிறதே. என்ன செய்வது.

பெண்ணின் தந்தை : மாப்பிள்ளை டீ. காப்பி ரொம்ப குடிப்பீங்களோ?

அசிங்கமாக சிரித்துக் கொண்டே கூறித் தொலைத்தேன்

நான் : ஆமாங்க........

அவர்கள் தங்களுக்குள் ரகசியமாக பேசிக் கொணடார்கள். அப்பொழுது அந்த ஒருவருக்கு திண்பதற்கு மிக்சர் தீர்ந்துவிட்டது போல. அதனால் என்னுடைய ஒரே அட்வைஸ் என்னவென்றால், பெண்பார்க்க செல்லும் பொழுது அந்த ஒருவருக்கு எப்பொழுதும் திண்பதற்கு நிறைய மிச்சர் வாங்கிச்செல்ல வேண்டும். அவர் வாய் எப்பொழுதும் அரைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர் ஒருவார்த்தையை கூட பேசக் கூடாது. அவர் வாயை பிசியாக வைத்திருக்க வேண்டும். ஆனால் என் துரதிஷ்டம், அந்த ஒருவர் தின்பதற்கு மிச்சர் தீர்ந்து விட்டது. என்ன செய்வது என் தலையெழுத்து. அந்த புகழ்பெற்ற வாக்கியத்தை அவர் தன் வாய் மொழிந்தார்.

அந்த ஒருவர் : மாப்பிள்ளை தலைமுடி மட்டும் வெள்ளையில்லைங்க.....மாப்பிள்ளை மனசும் வெள்ளைங்க...........

என் செருப்பு பிய்ந்து போன காரணத்தை மட்டும் நான் சொல்லப் போவதில்லை. அது பிய்ந்து போவதற்குரிய சரியான நேரத்தை அடைந்திருந்தது. அது தன் வாழ்க்கையை போதும் என்று முடித்துக் கொண்டது. இனி ஒருவர் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு....

--------------------------------

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டால் ஒரு அமெரிக்கன் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிடுவான். இந்தியாவில் ஒருவன் 34 வயது வரை பெண் ஸ்பரிசம் என்பதை அனுபவப் பூர்வமாக உணராமல் இருக்கிறான். அவன் ஒரு பாதிரியார் இல்லை. அவன் ஒரு சாது இல்லை. அவன் தன் சுயஒழுக்கத்தில் இதுவரை எந்தப்பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் வாழ்ந்து வந்திருக்கிறான். அவன் பெண்களை இதுவரை மரியாதையான பார்வையுடன் எந்தவித கெட்ட எண்ணங்களும் இல்லாமல் அணுகி வந்திருக்கிறான். இருப்பினும் அவனுக்கு 34 வயதில் திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு பெண் கிடைக்கவில்லை. அவனை இந்தியப் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புறக்கணித்து விட்டார்கள்.

மனவியல் நிபுணர்கள் உட்பட அனைவரையும் குழப்பக் கூடிய இந்த விஷயத்தை இந்திய இளைஞர்கள் மிகசுலபமாக பல நூற்றாண்டுகளாக சமாளித்து வருகிறார்கள். அவர்கள் ஆன்மீகத்தை நாட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்கள் திடீரென்று மனோதைரியம் மிக்கவர்களாக, புனிதர்களாக, சிற்றின்பத்தை புறக்கணித்து, பேரின்பத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் பெண்ணின்பத்தை கடந்து கடவுள் இன்பத்தில் திளைக்க ஆரம்பித்து விடுவார்கள். வேறு வழி இருந்திருக்கவில்லை என்பதை வேறு யாரும் அறிந்திராத வரையில் காவி உடைக்குள் புனிதனாக வலம் வர வழியிருக்கிறது இந்தியாவில். இன்னும் ஒரு வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையானாலும் கடைசியாக சம்சார வாழ்விற்குள் கடைந்தேற முயற்சி செய்து பார்க்கலாம் என்கிற என் எண்ணம் இன்னும் தீவிரமாய் இருக்கத்தான் செய்கிறது.

அன்று அந்த பேருந்து நிறுத்தத்தில் அந்த பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தால். என்னால் என்னை நம்பவே முடியவில்லை. என்னையும் ஒரு பெண் பார்க்கிறாள். வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நாம்தான் கவனிக்கவில்லையோ என்று அப்பொழுது தான் தோன்றியது. அவள் வைத்த கண் வாங்காமல் என்னைப் பார்த்ததையும், நான் வெட்கியபடி நிலைகுலைந்து போய் தலைகுனிந்து நின்றதையும் என் முன்னால் நின்ற அந்த வயதான (கிட்டத்தட்ட 45 வயது) பெண்மணி கவனிக்கவில்லை. நான் செல்ல வேண்டிய பேருந்து அன்று மட்டும் சீக்கிரமாய் வந்து தொலைத்தது என்பதை சொல்லவும் வேண்டுமா? எப்பொழுதும் எனக்குஅப்படித்தான் நடக்கும். வரவேண்டிய நேரத்தில் பேருந்தானது வந்துவிட்டால் சூரியன் மேற்கே உதித்து விடுமே. வரக்கூடாத நேரத்தில் வந்து தொலைத்த அந்த பேருந்தை கொடூரமாக கண்டபடி திட்டி, சபித்து, உதைத்து (மனதிற்குள்ளாக) அனுப்பி வைத்தபின். அந்த பெண்ணை ஓரக்கண்ணால் கவனிக்க ஆரம்பித்தேன். அவள் இன்னும் என்னையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் முகத்தை கடுமையாக வைத்திருந்தாள் அதுதான் ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை என்னை சோதனை செய்கிறாளோ? நான் பெண்களை பார்தவுடன் பல்லை இளிக்கக் கூடிய குணம் உடையவனா? என சோதித்து பார்க்க நினைக்கிறாளோ? அய்யோ! நான் அப்படியெல்லாம் இல்லை. இந்த 34 வருடங்களில் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சுத்தமான நைத்ரீக பிரம்மச்சாரிகளை பற்றி கேள்விதான் பட்டிருப்பீர்கள். இப்பொழுது நேரடியாக பாருங்கள், தயவு செய்து கண்களை இமைக்காமல் பாருங்கள். நான் உங்களுக்கு இடது புறமாக 10 மீட்டர் தொலைவில்தான் இருக்கிறேன் என்பதை கவனித்து பாருங்கள். என் பக்கத்தில் உள்ள அந்த 55 வயது தலைநரைத்த கிழவனை பார்த்து விடாதீர்கள். நான் சற்று தள்ளியிருக்கிறேன். அந்த கிழவனுக்கும் எனக்கும் 5 அடி இடைவெளி உள்ளது என்பதை உங்களுக்கு சுட்டி காட்ட ஆசைப்படுகிறேன் என காற்றின் வழியாக அந்த பெண்ணுக்கு செய்திகளை அனுப்பிக் கொண்டே இருந்தேன்.

அவள் இமைக்காமல் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. 4 வருடங்களுக்கு முன் நான் நாத்திகனாக மாறிவிட்டதாக சத்தியம் செய்திருந்தேன். அந்த சத்தியத்தை இன்று கேன்சல் செய்துவிட்டேன். நான் என் மனதார அந்த கடவுளுக்கு நன்றி கூறினேன். ஆனால் கண்களை மூடவில்லை. அதையெல்லாம் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் அந்தக் கடவுள். கடவுளே நான் திட்டிய‌தையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் எனக்கு உதவி செய்கிறாயே உனக்கு கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு நடத்துவதற்கு ஏற்பாடு செய்கிறேன். நீ நல்லவன். உன்னை மதிக்கிறேன்.

அந்த பெண் என்னவோ சற்று கருப்புதான். இருந்தால் என்ன?? கருப்புதான் திராவிடர்களின் நிறம் என்பதை யாரோ அடிக்கடி கூறுவதை சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேட்டிருக்கிறேன். நானும் திராவிடன் என்பதை தரையில் துண்டைப் போட்டு தாண்டி சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நான் வெள்ளைக்காரனாக ஆசைப்படுகிறேன் என்று சில வாரங்களுக்கு முன் மனதிற்குள்ளாக ஒரு பேதையைப் போல நினைத்ததை இப்பொழுதே வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். கருப்பு நிறம் தான் வெயிலுக்கு ஏற்ற நிறம். இங்குள்ள வெப்பநிலையை தாங்க வேண்டுமானால் கருப்பு நிறமுள்ள தோல் உள்ளவர்களால் தான் முடியும். முடி வெள்ளையானால் என்ன நான் மொட்டை அடித்துக் கொள்கிறேன். அதனால் என்ன? முடியெல்லாம் ஒரு விஷயமா?...

கல்லூரி தினங்களில் சில மோசமான நண்பர்கள் பெண்களைப் பார்த்து படுமோசமாக கமெண்ட் அடிப்பார்கள். அதில் ஒன்று

"அவளைப் பார் செம கட்டையாக இருக்கிறாள்" என்பார்கள்.

எனக்கு அப்பொழுது அந்தப் பெண்ணைப் பார்க்கையில் அப்படித்தான் தோன்றியது. அவள் மகளிர் ஜிம்முக்கு போயிருப்பாள் போல. நல்ல வலிமையான தேகமுடையவளாக இருந்தாள். விட்டால் 90 கிலோ எடையை அப்படியே தூக்குவாள் போல.

பெண்கள் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். பெண்கள் இப்படி வலிமையாக இருந்தால் தான் அராஜகமாக நடந்து கொள்ளும் ஆண்களை தட்டிக் கேட்க முடியும். பாரதியார் இதைப் பார்த்தால் நிச்சயமாக சந்தோஷம் அடைந்திருப்பார். ரௌத்திரம் பழகு என்று அவர் கூறியிருக்கிறார் அல்லவா? நல்லவேளை இந்தியப் பெண்கள் கணவனை அடிக்க கை ஓங்க மாட்டார்கள். அந்த வகையில் நான் தப்பித்தாலும், சமூகத்தில் அராஜகமாக நடந்து கொள்ளும் ரவுடிகளை பந்தாட இதுபோன்ற பெண்கள் கை ஓங்கத் தான் வேண்டும். அவளுக்கு என் வாழ்த்துக்களை மோர்ஸ் தந்தி முறையில் காற்றில் அனுப்பினேன்.

இவ்வளவுக்குப் பின்னும் அவள் இருக்கமாகத்தான் இருந்தாள். என் மூளையை உறுத்திக் கொண்டிருந்த விஷயம் அது ஒன்றுதான்.அவள் ஏன் இன்னும் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

திடீரென்று அவள் என்னை நோக்கி நடந்துவர ஆரம்பித்தாள். என் கால்கள் ஒன்றும் நடுங்கவில்லை. யாரும் அப்படியெல்லாம் தவறாக முடிவு செய்யக் கூடாது. என் முடிகள் ஒன்றும் குத்திட்டு நிற்கவில்லை. அப்படியெல்லாம் என் அனுமதியில்லாமல் கற்பனை செய்யக் கூடாது. என் நாக்கு வறண்டு போனது என்றும் நான் சொல்லவில்லை. என்னால் நிற்க முடியவில்லை என்று யார் சொன்னது. எல்லாம் அவரவர் பிரம்மை.

ஆனால் இப்பொழுது நினைத்துப் பார்க்கும்பொழுது நான் நின்றுகொண்டிருந்தேன் என்பதை என்னால் நியாபகப்படுத்திப் பார்க்க முடிகிறது. நேராக வந்தவள் என் முன்னே நின்று கொண்டிருந்த அந்த 45 வயது மதிக்கத் தகுந்த பெண்மணியை அணுகி தாழ்ந்த குரலில் பேசியபடி சிறிது நேரம் நின்றிருந்தாள். இருவரும் 10 வினாடிக்கு ஒருமுறை என்னை முறைத்துப்பார்த்தவாறு பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து அவள் அதே முறைப்பான முகத்துடன் என்னை கடந்து சென்றாள்.

என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாமல் தவித்த நான் அன்று தற்கொலைப்படை வீரனின் செயலுக்கு இணையானதொரு செயலைச் செய்தேன். நான் தைரியமாக அந்த 45 வயது பெண்மணியை அணுகி, அந்த கரிய நிற அழகி என்ன கூறினாள் எனக் கேட்டேன். அவள் கூறினாள்.............

உங்கள் பின்னே நின்றிருக்கும் அந்த தடியன் உங்களை ஏதேனும் தொந்தரவு செய்கிறானா? அந்த ரவுடிப்பயலால் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டதா? அவன் ஏதேனும் தவறாக நடந்து கொள்வானேயானால் தயங்காமல் என்னிடம் கூறுங்கள். நான் ஒரு போலீஸ் அதிகாரி.............என்று கூறியதாக கூறினாள்.

நான் உடனடியாக 4 காரியங்களைச் செய்தேன்.

1. நான் மீண்டும் நாத்திகனாக மாறிப் போனேன்.

2.மீண்டும் அடுத்த பிறவியில் வெள்ளைக்காரனாக பிறப்பது என்று முடிவு​ செய்தேன்.

3. நான் இன்று முதல் திராவிடன் அல்ல

4. அடுத்து வரப்போவது பேருந்து என்று அல்ல மாட்டு வண்டியாக இருந்தாலும் பரவாயில்லை ஏறிவிடுவது என்று முடிவு செய்தேன்.

மேலும் ஒன்றை சத்தம் போாாாாாாாாட்டு கத்தினேன் (மனதிற்குள்ளாக)

ஆண், பெண் உறவில் இவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்த சமூகம் ஒழிக...... ஒழிக.... ஒழிக.....





Back to top Go down
 
வயது 34 ~~ சிறுகதைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அன்றில் ~~ சிறுகதைகள்
» காட்சி ~~ சிறுகதைகள்
» ~~ வசை ~~ சிறுகதைகள்
» மாயக்கிளிகள் ~~ சிறுகதைகள்
» விதை ~~ சிறுகதைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: