BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ கனவு தேசம் Button10

 

 ~~ Tamil Story ~~ கனவு தேசம்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ கனவு தேசம் Empty
PostSubject: ~~ Tamil Story ~~ கனவு தேசம்   ~~ Tamil Story ~~ கனவு தேசம் Icon_minitimeSun Mar 27, 2011 6:24 am

~~ Tamil Story ~~ கனவு தேசம்



அப்போதுதான் எனக்குத் தோன்றியது. இது மழை பெய்யும் காலம் அல்லவே என்று, ஜன்னல் திறந்துதான் இருந்தது. ஆனால் நியாயமாக பாலைவனத்தில் அடிக்க வேண்டிய வெயில் எனது பள்ளிக்கு வெளியே அடித்துக் கொண்டிருந்தது. புதிதாக மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்திருந்த தினம் அது. பார்க்கும் அனைத்தையும் பிரமிப்போடு ரசித்துக் கொண்டிருந்தேன். பொதுவாக ரசனை மிகுந்த இடத்தில் சாரல் மழைபொழிந்தால் அது ரம்மியமாக இருக்கும். ஆனால்... இதை....இதை எப்படி சகித்துக் கொள்வது. வெகுநேரம் அந்த சாரல் பொழிவின் மூலாதாரம் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். எனது ஆறாவது அறிவின் அறிவுறுத்தலின் படி இந்த உஷ்ணத்தில் சாரல் மழைக்கு வாய்ப்பேயில்லை. அந்தசாரல் மழையின் பிறப்பிடம் எனது புது ஆசிரியரின் வாய் என்று தெரியவந்தபோது, எனது கண்கள் கடைசி பெஞ்சை நோக்கி தேடியது ஒரு இடத்தை.

முதல் பெஞ்சில் இடம் பிடிப்பதற்காக முட்டி மோதியதில் தோள்பட்டையில் பட்ட அடியை நினைத்துப் பார்க்கும்போதுதான் வலி என்ற வார்த்தையின் பொருள் தெரிந்தது.

பற்களின் ஈறுகளுக்கு நடுவே ரத்தம் கசிந்தபடி என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் எல்.பிரபாகரன். முதல் பெஞ்சில் இடம் பிடிக்கும் முயற்சியில் என்னிடம் தோல்வியடைந்தவன். அவ்வளவு மூர்க்கமாக அவனைத் தாக்கியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அவன் அருகில் சிறிது இடம் இருந்தது. நான் திரும்பிப்பார்த்த பொழுது, என்னைப் பார்த்து சிரித்தபடி தனது புத்தக மூட்டையை எடுத்து அந்த இடத்தை நிரப்பினான். அவன் சிரிப்பில் கருணையே இல்லை, வஞ்சம்தான் தெரிந்தது.

எருமை மாட்டின் கவனமின்மையும், ஆங்கில ஆசிரியரின் புறக்கணிப்பும்

உண்மையிலேயே எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது. இன்னும் இருக்கிறது. நமதுமக்கள் உண்மையிலேயே ஆங்கிலேயர்களை வெறுத்தார்களா? இது எனது நியாயமான சந்தேகம். ஒரு ஆறாம் வகுப்பு மாணவனின் நியாயமான சந்தேகத்துக்கு எப்பொழுதுமே விடை கிடைப்பதில்லை என்பதில் உள்ள எதார்த்தமான மற்றும் சாதாரணமான விஷயம் நிச்சயமாக அப்பொழுது எனக்குப் புரிந்திருக்கவில்லை. உண்மையில் நான் ஒரு மாணவனை வெறுத்தால் அவன் வாங்கிக் கொடுக்கும் சாக்லேட்டைக் கூட சாப்பிட மாட்டேன். காரணம் என்னுடைய வெறுப்பு உண்மையானது. ஆகையால் நான் தைரியமாக சொல்லலாம். இந்தியர்களின் ஆங்கிலேயர் மீதான வெறுப்பு உண்மையானது அல்ல என்று.

நான் நினைத்திருந்தேன் உலகிலேயே மிக மோசமான ஆயுதம் அந்த கட்டை அடிஸ்கேல் தான் என்று. அந்த எலிமின்ட்ரி ஸ்கூலின் பூதத்தின் பருமனை நினைவுபடுத்தும் அந்த ஆசிரியை என் கைவிரல் மொழிகளில் அடித்த அடியை நினைக்கும் பொழுது, அதைவிட கொடுமையான தண்டனை இருக்க முடியாது என்றே நினைத்திருந்தேன். இது ஒன்றும் மிகையான நினைப்பில்லை. (நம்பிக்கையில்லையென்றால் ஒரு கட்டை அடி ஸ்கேலை எடுத்து மொழிகளில் அடித்துப் பார்த்துக் கொள்ளவும் (பலமாக)). ஆனால் அதைவிட மோசமாக இந்த ஆங்கில ஆசிரியர் நடந்து கொண்டார். அவர் உபயோகப்படுத்திய பிரம்பை, எங்கள் வீட்டின் அருகில் எருமை மாடு மேய்க்கும் சிறுவனின் கைகளில் பார்த்திருக்கிறேன். இனிமேல் என்னால் எருமை மாடுகளை மட்டும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவற்றின் துணிவு மற்றும் அவற்றின் வலி தாங்கும் திறன் அசாதாரணமானது. அந்த சிறுவனை அசாதாரணமாக எதிர்கொள்ளும். அவை அடிகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவை அடிகளை பொருட்படுத்தாமல் அந்த மாடு மேய்க்கும் சிறுவனை சிரமப்படுத்தும். அந்த சிறுவன் விசிலடிப்பான். பலவிதமான சத்தங்களை உபயோகித்து பயமுறுத்துவான். கடைசியில் தோல்வியுற்று சோர்ந்து போவான்.

அந்த ஆங்கில ஆசிரியரை, மாடு மேய்க்கும் சிறுவனோடு ஒப்பிட்டு விட்டோமே என்பதை நினைத்துப் பார்க்கையில் என் மனம் சிறிது வலிக்கத்தான் செய்கிறது. ஒரு மாடு மேய்க்கும் சிறுவனை அசிங்கப்படுத்திவிட்டதற்காக கடவுள் எனக்கு நரகத்தை கொடுக்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு கூறுவதற்கு எனக்கு நியாயமான காரணம் உண்டு.

காரணம் 1 :

எனது ஆங்கில ஆசிரியர் அடிக்கும் பொழுது அதிகமாக வலிக்க வேண்டும் என்பதற்காக அந்த பிரம்பில் சூடேற்றிய விளக்கெண்ணெய்யை தடவி ஊற வைத்திருப்பார். அந்த மாடு மேய்க்கும் சிறுவன் அவ்வாறெல்லாம் செய்வதில்லை. அவனுக்கு அவனது மாடுகள் மேல் சிறிது பரிதாபம் உண்டு.

காரணம் 2 :

எனது ஆங்கில ஆசிரியர் தனது சக ஜீவனை நிந்தனை செய்கிறார். அதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, தீர்க்கப்படாத கோபங்களாக, வாழ்நாள் முழுவதும் ஆழ்மனதை வதைத்தபடி இருக்கும். ஆனால் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன், ஒரு ஐந்தறிவுள்ள ஜீவனின் தாழ்வு மனப்பான்மையை தொந்தரவு செய்வதேயில்லை. அவன் அவ்வளவு புத்திசாலி என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

காரணம் 3 :

ஒரு மாடு வேண்டா வெறுப்பாக காலை வணக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் நான் தினசரி ஒரு மாட்டுக்கு காலை வணக்கம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த மாடு ஒரு சகஉயிரினம் அவமானப்படுத்தப்படுவதை கவனிப்பதேயில்லை. ஆகையால் தினசரி ஒரு நிஜமான எருமை மாட்டை தேடிக்கொண்டிருக்கிறேன், காலை வணக்கம் சொல்ல. ஆம் அவை கவனிக்காமல் புற்களை மேய்ந்துகொண்டிருக்கலாம், ஆனால் ஒரு எருமை மாட்டின் கவனமின்மைக்கும், ஒரு ஆங்கில ஆசிரியரின் புறக்கணிப்பிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

பிரம்பால் அடிபட்ட எனது சிவந்த கைகளின் ரேகைகளுக்கு பின்னே ரத்தம் சூடாக ஓடிக் கொண்டிருந்தது. நான் அத்தனை மாணவர்களுக்கு முன் அவமானப்படுத்தப்பட்டேன் என்பதைவிட அது அவ்வளவு சூடாக இல்லை.

7 ஆண்டுகள் சிறை தண்டனை

சித்ரவதைக் குறிப்புகள் என எங்கேனும் ஒரு புத்தகத்தை வாசிக்க நேர்ந்தால் அதில் இந்த விஷயத்தை யோசிக்காமல் கடைசிப்பக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். ஆம் மிக மோசமான பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் கூட இதை உபயோகித்துப் பார்க்கலாம். ஒருவேளை நான் ஹிட்லரை போன்றதொரு சர்வாதிகாரியானால் அடுத்தவர்கள் சிரிப்பிற்கு இடமாகுமே என யோசித்து இந்த சட்டத்தை கொண்டு வராமல் இருக்க மாட்டேன். அது என்னவெனில் "ஒருவன் ஒன்றுக்கு போவதை தடுப்பவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை"

எனது கணித ஆசிரியர் தனது கணிதத் திறமையை பயன்படுத்தி ஏழு ஆண்டுகளாக சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருப்பாரேயானால், பல மாணவர்களின் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நகைச்சுவையான விஷயமாக இருக்காது என்றே தோன்றுகிறது.

முட்டிக்கொண்டு வேதனையளித்துக் கொண்டிருக்கும் சிறுநீரின் கவனமின்றி, மிகக்கொடூரமாக பிதகோரஸ் தியரத்தை நடத்திக் கொண்டிருக்கும் கணித ஆசிரியரை சிரித்தபடி சமாளிப்பது என்பதில் உள்ள சவால் இருக்கிறதே......... அத்தகையதொரு சிரிப்பை என்.எஸ். கிருஷ்ணனால் கூட விளக்க முடியாது. அந்த சிரிப்பு முற்பிறவியில் செய்த பாவங்களுக்கு உரிய தண்டனையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

மறறொருநாள் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக பெற்றோரிடம் வாங்கிய திட்டுக்கள் அவ்வளவு வலியை கொடுக்கவில்லை. காரணம் நான் கனவில் சிறுநீர் கழித்தது என் கணித ஆசிரியரின் முடியற்ற தலைமீதல்லவா? பின் எப்படி என்னால் சோகம் கொள்ள முடியும். அது ஒரு நல்ல நிகழ்வு. கனவோ, நனவோ மகிழ்ச்சிக்கு விஷயங்கள் போதுமானதாகவே இருக்கின்றன.

நான்கு ரத்தச்சிவப்பு கோடுகளும் தமிழாசாரியும்

பேச்சுரிமையை தடை செய்யும் ஒரு மனிதரை ஜனநாயக விரோதி என்று அழைத்தால் அது தவறாகுமா? நிச்சயமாக இல்லையென்றால் நான் கூறுகிறேன். என் தமிழாசிரியர் ஒரு ஜனநாயக விரோதி. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காத, புறக்கணிக்கிற, மீறுகிற ஒரு சமுதாய விரோதிக்கு நமது அரசாங்கம் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறது என்றால், இந்த அசிங்கத்தை என்னவென்று சொல்வது. நான் எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் பொழுது குறுக்கிடுவதே அவருக்கு வேலையாகப் போய்விட்டது. பேச்சுக்கலையைப் பற்றி நூறு "அண்ணாத்துரை"கள் தோன்றி எடுத்துரைத்தாலும் இவர்களுக்கு புரியப் போவதேயில்லை. அவர்கள் வகுப்புகளில் பேசுபவர்களை தண்டிக்க புதிய யுக்திகளை உபயோகப்படுத்துகிறார்கள்.

அதில் ஒன்று நன்கு உறுதியான வளையக்கூடிய பிரம்பால் பின்புறத்தில் பளீர், பளீரென்று தாக்குவது. ஒருநாள் நான்கு ரத்த சிவப்புக் கோடுகள் விழுந்திருப்பதை தனியறையில் நான் கண்ணாடியில் பார்த்திருக்கிறேன். எனக்கு அப்பொழுது ஏற்பட்ட கோபத்தில் இந்த கேள்வி எனது ஆழ்மனதுள் ஏற்பட்டது. இந்த கேள்விக்கு அந்த தமிழாசிரியர் பதில் சொல்லியே ஆக வேண்டும். இது எனது நியாயமான கோபம்.

கடவுள் தனது இறுதி தீர்ப்பு நாளில், பொய் சொல்பவர்களின் மண்டை ஓடு சிதறிவிடும் என்கிற நிபந்தனை அமலில் இருக்கும் நேரத்தில் இந்த கேள்வி கேட்கப்பட வேண்டும். "நீ ஒரு நடிகையின் பின்புறத்தை பார்த்து ஜொள் விட்டதேயில்லையா"

இரண்டில் ஒன்று நிகழ்ந்துவிடும், ஒன்று அந்த ஆசிரியரின் மண்டையோடு வெடித்து சிதறுவது அல்லது அவர் அசிங்கப்படுவது. அது போதும் எனது நான்கு ரத்தச் சிவப்பு கோடுகளுக்கு பதிலீடாக.

நான் உறுதியாக கூறிக் கொள்வேன். ஒரு சிறுவனின் பின்புறமும் நிச்சயமாக பரிதாபத்துக்குரியது என்று. இத்தகைய தாக்குதல் ஆறு அறிவு கொண்ட உயிரினத்தை அசிங்கப்படுத்துவதும் கூட. ஒரு சிறுவனை அசிங்கப்படுத்தலாம் என உலகின் எந்த அரசாங்கமாவது சட்டமியற்றியிருக்கிறதா? அவ்வாறு இல்லையெனில் இத்தகைய தண்டனையை நிறுத்திக் கொள்வதை பற்றி யோசிக்கலாம்.

பின் ஒரு முட்டாள்தனமான செய்கையை பற்றி நான் அவரிடம் கேட்ட போது அதற்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். அன்று அவர் என் காதுகளைப் பிடித்து கிள்ளிக் கொண்டிருந்தார். சிறுவர், சிறுமிகளுக்கு காது குத்தும் ஆசாரிகள் அதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு வித ஊசியை பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த தமிழாசிரியர் தனது நகங்களையே கூர்மையான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருந்தார். குருதி வழிந்துவிட்டது என்றே தோன்றியது. நான் அவரிடம் வேதனையுடன் கேட்டேன்.

"ஐயா (தமிழாசிரியரை ஐயா என்றுதான் கூப்பிட வேண்டுமாம்) நீங்க ஆசிரியரா.... ஆசாரியா...."

அதற்கு பதில் கூறாமல் ஓட்டையை போட்டு விட்டார் அந்த அநாகரிகமான மனிதர்.

பகுபத உறுப்பிலக்கணத்தை சரியாகக் கூறாததுதான் அந்த காது ஓட்டைக்கு காரணம். அந்த ஆசிரியர் வெத்தலையை குதப்பிக்கொண்டு, சிவப்பு நிறத்தில் எச்சிலை வடிய விட்டுக் கொண்டு பகுபத உறுப்பிலக்கணம் சொல்லிக் கொடுக்கும் அழகை காணச் சகிக்காமல், நான் செய்த விஷயம் மிகச்சிறிய விஷயம். அது ஒன்றும் அவ்வளவு மோசமானதும் கூட அல்ல. திரு. கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படத்தின் கதையை நான்கு மாணவர்களுக்குக் கூறிக் கொண்டிருந்தேன். இது தவறா? யாராவது கூற முடியுமா? குணா படம் ஒரு மோசமான படம் என்று. ஒரு வெத்தலைப்பொட்டி தமிழாசிரியருக்கு எங்கே தெரியப் போகிறது குணா படத்தின் அருமைபற்றி.

எனது பேச்சுரிமையை தனது மிக மோசமான செயலால் தடுத்து நிறுத்திவிட்டார். அந்த தமிழாசாரி......

மௌனவிரதம்

விருப்பம் இல்லாத ஒருவனை மௌன விரதம் இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினால் அது மதவிரோதச்செயல் என்று நான் கூறுகிறேன். அது தவறா? மதவிரோதிகள் என்றுமே நாட்டுக்கு கேடானவர்கள். அவர்கள் நாட்டையே சீரழித்துவிடுவார்கள். அவர்கள் கவனிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் சீர்திருத்தப்பட வேண்டியவர்கள். ஆனால் பள்ளி மாணவர்களிடம், கண்மூடித்தனமாக இத்தகைய விரோதச் செயல் நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. இதை கவனிக்க யாருமேயில்லை இங்கு.

வகுப்பறையில் மாணவர்கள், மௌனவிரதம் இருக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் மௌனவிரதம் இருக்கிறார்களா? அல்லது அதை மீறுகிறார்களா? என்பதை கவனிக்க ஒரு மாணவனை தேர்ந்தெடுத்து அவனை கண்காணிக்கவிடுகிறார்கள். யார் விதிக்கப்பட்ட மௌனவிரதச் சட்டத்தை மீறுகிறார்களோ அவர்களின் பெயர்கள் கரும்பலகையில் எழுதப்படுகின்றன. கரும்பலகையில் பெயர் எழுதப்பட்டவர்களுக்கு உறுதியாக தண்டனை உண்டு. சட்டத்தை தொடர்ந்து மீறுபவர்களின் பெயர்களுக்கு பக்கத்தில் அதிகப்படியான பெருக்கல் குறிகள். யாருக்கு அதிகமான பெருக்கல் குறிகள் உண்டோ அவர்களுக்கு அதிகப்படியான தண்டனை.

இதில் சகிக்க முடியாத விஷயம், கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவனின் முன்விரோதம் தான். அவன் தனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்க ஒரு சந்தர்ப்பமாக இதைப் பயன்படுத்திக் கொள்வான்.

அன்றொரு நாள் 5 பெருக்கல் குறிகளை தாங்கி நின்ற எனது பெயரை கரும்பலகையில் பார்த்து ஆவேசமடைந்த ஆசிரியப் பெருந்தகை, அனல் பறக்கும் கோபத்துடன் தாக்க வந்த விநாடியில் நான் இதைக் கேட்டேன்.

"சார் ஒரு நிமிஷம்"

"எந்த பழிவாங்கும் உணர்ச்சியும் இல்லாத, நடுநிலைமையோடு கூடிய ஒரு மாணவனோட பேச்ச நம்பித்தான், என்னை நீங்க தாக்க வர்றீங்க, அப்படிங்ற விஷயத்துல நீங்க தெளிவா இருக்கிங்களா"

அந்த முட்டாள் ஆசிரியப் பெருந்தகைக்கு அது புரியவே இல்லை போல. அன்று ஒரு அறிவியல் உண்மை பற்றிய அனுபவம் அடைந்தேன். அது பொறி கலங்கிப் போவதை பற்றியது. இந்த விஷயம் உண்மைதான். அதாவது பளாரென ஒரு அறை உங்கள் கன்னத்தில் விழுமானால் உங்கள் தலையைச் சுற்றி பல்வேறு குட்டி நட்சத்திரங்கள் தோன்றி மறையும்.

அடிவாங்கி நிதானமடைந்த பின்தான் தோன்றியது. மூர்க்கமாக முட்டவரும் மாட்டிடம் வியாக்யானம் பேசக்கூடாது என்று, அட்லீஸ்ட் டயலாக்கின் லெங்த்தையாவது சற்று குறைத்திருக்கலாம்.

தாத்தா காப்பாற்றப்பட்டார் (அல்லது) ஃபென்டாஸ்டிக் ஃபைவ்

தூக்கம் வராமல் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் என் தாத்தாவை அழைத்துச் சென்று, ஒரு மனிதரை அவருக்கு காட்டினேன். அந்த மனிதர் எனது அறிவியல் ஆசிரியர். அவர் தனித்தன்மை வாய்ந்தவர். அவருடைய சிறப்பம்சம் பற்றி அவ்வளவு எளிதாக விளக்கிவிட முடியாது. அவருடைய ஆற்றல் அசாதாரணமானது. அமெரிக்கா போன்ற தேசத்துக்கு செல்வாரேயானால் வாழ்நாள் முழுவதற்கும் சேர்த்தாற்போல அவர் சம்பாதித்து விடலாம். அவரது தேவை அவ்வளவு முக்கியமானதாக இருக்கும் அங்கு. அவர் அங்கு ஒரு ஃபென்டாஸ்டிக் ஃபைவாக தெரிவார்.

எனது தாத்தாவிடம் நான் கூறினேன்.

"எனக்கு தினமும் இது நடக்கிறது. என்னை நீங்கள் முழுமையாக நம்பலாம். இதற்கு நான் முழுமையான உத்தரவாதம் தருகிறேன். என்னை தயவு செய்து நம்புங்கள். அது கண்டிப்பாக நடக்கும். நீங்கள் இதைச் செய்தால் மட்டும் போதும். நீங்கள் அவரை உற்றுப் பாருங்கள் அதுபோதும். பின் உங்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தான் வீடு வந்து சேரவேண்டும். ஆனால் இப்பொழுதே நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அது, என்னவெனில் நீங்கள் தூங்கியபின் கொடூரமாக குறட்டை விடக் கூடாது. என் நண்பன் எல். பிரபாகரன் இதைத்தான் சொல்கிறான். தினசரி அறிவியல் வகுப்பில் நான் தூங்கியபின் குறட்டை விடுகிறேனாம். அது அவனது தூக்கத்தை கெடுக்கிறதாம்."

ஆனால் இந்த தூக்கமாத்திரையை விஞ்சும் சக்தி அவருக்கு எப்படி வந்தது என்றுதான் தெரியவில்லை. அவரது அறிவியல் வகுப்பெடுக்கும் தன்மையோடு ஒப்பிட்டு பார்ப்போமேயானால் ஒரு தாலாட்டு எட்டு அடி தள்ளிதான் நிற்க வேண்டும். நான் குட்டித்தூக்கம் போட நினைக்கும் பொழுதெல்லாம் எனது அருமையான அறிவியல் ஆசிரியரைத்தான் நினைத்துக் கொள்வேன். அரைத்தூக்கம் முழுமையாக கலைய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு தமிழாசிரியர் முகம் மிகுந்த உதவியாக இருக்கும். அது ஒரு குட்டி பயமுறுத்தல். நான் துள்ளிக் குதித்து எழ ஏதுவான அளவுக்கு.

எனது அறிவியல் ஆசிரியர் என்னைத் தாலாட்டி சீராட்டி வளர்த்தார் என்று கூறினால் அது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம். என் தாத்தாவிற்கு உதவியாக இருக்குமேயென்று எனது ஓவிய ஆற்றலையெல்லாம் உபயோகித்து எனது அறிவியல் ஆசிரியரின் முகத்தை வரைந்து கொடுத்தேன். அதை அவர் வெகுநேரமாக வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தூங்கவே இல்லை. இது நடக்க வாய்ப்பே இல்லை. எப்படி இது, என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

குரூரமான எண்ணங்களிலிருந்து விடுபட்ட என் தாத்தா பின் இதைக் கூறினார்.

"இந்த வரைபடத்தை பார்க்கும் பொழுது, எனது தமிழாசிரியர் தான் எனக்கு நியாபகத்துக்கு வருகிறார்."

பின் நான் கூறினேன். " முதலில் அதை பெட்ரோல் ஊற்றி உருத்தெரியாமல் எரித்து விடுங்கள்"

ஒன்பது எழுத்துக்கள்

ஒரு தந்தையை சிரமப்படுத்தக் கூடாது என ஒரு தமையன் நினைப்பது எங்கேனும் தவறாகுமா? ஆனால் இதைத் தவறாகப் பார்க்கிறார்கள். நான் அவரது சிரமத்தைக் குறைக்க நினைத்தேன். அவருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். ஆயிரம் டென்ஷன்கள் இருக்கும் இரவு வீட்டுக்கு வரும் பொழுது அவரதுமனம் ஓய்வையே விரும்பும். அவருக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என்கிற இரக்க சிந்தனை என்னை ஆட்கொள்வதில் எநத தவறும் இல்லையே?

ஆனால் இந்த ஆசிரியர் அதை பூதாகரமான பிரச்னையாக்கி விட்டார். அது அப்படி ஒன்றும் பெரிய விஷயமாக இல்லை. வெறும் 9 எழுத்துக்கள் அவ்வளவே. அந்த 9 எழுத்துக்களை எனது கைகளால் எழுதியது தவறாம். அதை ஒரு கோழி கிறுக்கியதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் என் தந்தை ஒரு குத்துச் சண்டை வீரராக மாறிவிடும் தருணங்களைப் பற்றி விளக்கமாக எடுத்துரைக்க இயலாத அளவுக்கு நான் பயத்தில் உறைந்து போயுள்ளேன் என்பதை நான் எவ்வாறு அந்த ஆசிரியருக்கு புரிய வைப்பது. எனக்கு வன்முறை பிடிக்காது. இதைத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு வன்முறை சுத்தமாகப் பிடிக்காது. அத்தகைய வன்முறையான தருணங்களிலிருந்து விலகியிருக்கவே ஆசைப்படுகிறேன்.

மேலும் எனது தந்தைக்கு 40 வயது ஆகிறது. இது ரத்தக் கொதிப்பு, சுகர், உடல் நடுக்கம் போன்ற வியாதிகள் தொற்றும் நேரம். அவர் தனது கோபங்களிலிருந்து விலகியிருந்தால் மட்டுமே இதுபோன்ற வியாதிகளையெல்லாம் தள்ளிப் போட முடியும். ஆனால் அவரால் கட்டுப்படுத்தவே முடிவதில்லை. என் ப்ராகரஸ் ரிப்போர்ட் கார்டை பார்த்து விட்டால் அவ்வளவுதான். அவர் என்னை துரத்த ஆரம்பித்து விடுகிறார்.

நான் எனது ஆசிரியருக்கு விளக்கமாக எடுத்துக் கூற முடியும். அதை அவரால் புரிந்து கொள்ளவும் முடியும். ஒரு கையெழுத்து...... ஒரே ஒரு கையெழுத்து...... வெறும் ஒன்பது எழுத்துக்கள் பிரதிபலனாக பல நல்ல விஷயங்கள் நடந்தேறும்.

மூர்க்கமான எனது தந்தையின் துரத்துதல், அரசாங்கத்தால் தடை செய்யப்படாத முதுகில் குத்தும் பழக்கம், மேலும் கன்னத்தில் அறைபடுவதால் மலையாள நடிகர்களைப்போல வீங்கிவிடும் எனது அழகான முகம் இவற்றையெல்லாம் நினைத்துப்பார்க்க எனது ஆசிரியரின் இடது நெஞ்சத்தில் இதயம் என்றொரு உறுப்பு இருக்கும் என்பதில் இன்னும் நம்பிக்கையிருக்கிறது.

ஆனால் நிச்சயமாக புரிந்துகொள்ளப்பட வேண்டிய விஷயம் எனது மனநிலை வன்முறைகளிலிருந்து காக்கப்படும் பட்சத்தில், அடுத்த முறை எனது பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் நானே கையெழுத்திடும் சூழ்நிலைக்கு நான் தள்ளப்படமாட்டேன் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்படுவதேயில்லை.

கனவு தேசம்



சில சமயம் கனவுகளில் நான் அந்த தேசத்தைப் பார்ப்பதுண்டு. துரதிஷ்டவசமாக அங்கு குழந்தைகள் மதிக்கப்படுகிறார்கள். அவர்களின் தவறுகள் மதிக்கப்படுகின்றன. மிக முக்கியமாக அவர்களின் தோல்விகள் கூட அங்கு மதிக்கப்படுகின்றன. இந்த மதித்தல் என்கிற விஷயத்தில் சிறியவர், பெரியவர் என்கிற பாகுபாடே அங்கு இல்லை. சுதந்திர உணர்ச்சி என்பதை அங்குள்ள குழந்தைகளின் முகத்தில் தான் காண முடிகிறது. இதுவரை அவர்களுடைய தவறுகள் சுட்டிக்காட்டப்படாததால் அவர்களுக்கு தவறுகள் என்றால் என்ன என்றே தெரியவில்லை. அதனால் அவர்களுக்கு தவறு செய்துவிட வேண்டும் என்கிற உந்துதலோ, தவறு செய்து விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியோ, தாழ்வு மனப்பான்மையோ எதுவுமே இல்லை. அவர்கள் எளிமையாக உணரப்படுகிறார்கள். கற்றல் என்கிற விஷயம் அவர்களுக்கு அவ்வளவு கடினமாக இல்லை. இதை சிவப்பெழுத்துக்களால் குறிப்பிடவே விரும்புகிறேன். அதாவது

"இந்த கல்வி என்கிற விஷயத்தை மாணவர்களின் உடலும், மனமும் ஏற்றுக் கொள்ளவே இல்லை என்பது பற்றி சிறிது கூட வெட்கமேயில்லாமல் புரிந்துகொள்ளாமல் இருப்பது"

அவரவர்க்கு ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. பெற்றவர்களுக்கும் கூட. 50 மாணவர்கள் ஒரு ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டால் அவர் தன்னை ஒரு குட்டி சர்வாதிகாரியாக உணர்வதிலிருந்து வெளிவர முடிவதேயில்லை. அவர் தனது ஆளுமையை, தனது அடிமை மனைவியிடம் வெளிப்படுத்துவது போன்று வெறிப்பிடித்த தனமாக வெளிப்படுத்துகிறார். குழந்தைகளுக்கெதிரான மனரீதியான வன்முறை தீர்க்கப்படாமல் இருக்கிறது என்பதை விட கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது என்பதே வேதனையான விஷயம்.

அன்று என் தந்தை கூறுகிறார், ஞாயிற்றுக் கிழமையில் மதியம் ஒரு மணிக்கு தூங்கி வழியும் ஒரே ஜீவன் நான்தான் என்று. அவருக்கென்ன தெரியும் நான் கனவு தேசத்தில் சுகமாக இருக்கிறேன் என்று. ஆம் அங்கு எனக்கு தூக்கம் வரும் பொழுது தூங்குவதற்கு அனுமதி உண்டு.










Back to top Go down
 
~~ Tamil Story ~~ கனவு தேசம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ கனவு
» ~~ Tamil Story ~~ கனவு இயந்திரங்கள்
» ~~ Tamil Story ~~ உருகும் கிரிம், ஒழுகும் கனவு
» ~~ Tamil Story ~~ பரிச்சயக்கோணங்கள்
» ~~ Tamil Story ~~ பசி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: