BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ ஹெல்மரும் நானும் மட்டைத்தேளும் நோறாவும் ஒன்றுமேயில்லை Button10

 

 ~~ Tamil Story ~~ ஹெல்மரும் நானும் மட்டைத்தேளும் நோறாவும் ஒன்றுமேயில்லை

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ ஹெல்மரும் நானும் மட்டைத்தேளும் நோறாவும் ஒன்றுமேயில்லை Empty
PostSubject: ~~ Tamil Story ~~ ஹெல்மரும் நானும் மட்டைத்தேளும் நோறாவும் ஒன்றுமேயில்லை   ~~ Tamil Story ~~ ஹெல்மரும் நானும் மட்டைத்தேளும் நோறாவும் ஒன்றுமேயில்லை Icon_minitimeSun Mar 27, 2011 6:47 am

~~ Tamil Story ~~ ஹெல்மரும் நானும் மட்டைத்தேளும் நோறாவும் ஒன்றுமேயில்லை




விட்டுக்கொடுப்புக்கள், அர்ப்பணிப்புக்கள், தியாகங்களின் சங்கமத்தால் மலராத இல்லற வாழ்வென்ன வாழ்வு”

ஒரு பாவையின் வீடு

அங்கம் -1

“ஹென்றிக் இப்சன் நோர்வே நாட்டு நாடக ஆசிரியார். யதார்த்த நாடகத்தின் தலைமகன் எனக்கருதப்படுபவர். ‘ஒருபாவையின் வீடு’ இவரது மிகச் சிறந்த நாடகம் எனப்படும். இந்த நாடகம் யதார்த்தவாதத்தின் இயல்புகளையும் சிறப்புற வெளிப்படுத்தி நிற்கிறது. நல்லதொரு நவீன சிந்தனையின் பாற்பட்ட கரு, நினைவில் நிலைத்திடும் பாத்திரங்கள், உள்ளுரை பொருள் கொண்ட உரையாடல்கள், கவித்துவ அழகு மிக்க மொழிநடை, யதார்த்தவாதத்தின் அரங்கமொழிச்சிறப்பு என்பன இந்த நாடகத்தின் சிறப்புகள். நவீனத்துவத்தின் ஆரம்பகால புரட்சிகர சிந்தனையின், கலைத்துவ வெளிப்பாட்டின் உயர் செழுமை உலகில் உள்ளவும் இந்த நாடகம் வாழும் எனலாம்.”

‘ஒரு பாவையின் வீடு’ நாடகம் பற்றிய விமர்சனத்தை வாசிக்கக்கிடைத்ததில் அளவில்லா மகிழ்ச்சியுடன் மேலும் எனது வாசிப்புத் தீவிரமானது.

நோறா எவ்வளவு நல்லவள், யாருக்கும் தீங்கு நினையாதவள். மனதில் மற்ற பெண்களைப் போன்று எல்லா ஆசைகளும் இருந்தாலும் தன் கணவராகிய ஹெல்மரது விருப்பத்திற்கே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஒருவேளை கணவனில் தான் அதிகம் அன்பு வைத்திருக்கிறேனா?........... அல்லது அவர் தன்னை அளவுக்கதிகமாகநேசிப்பதால் கட்டுண்டு கிடக்கிறேனா?............. இப்படி மனதில் எழும் கேள்விகளுக்கு இன்னும்தான் அவளால் விடைகாண முடியவில்லை. ஒரு அழகுப்பொம்மை போன்றே ஹெல்மரால் கையாளப்படுகிறாள். தன் மனைவியினுடைய எந்த ஒரு அசைவும் தனக்காகவே இருக்க வேண்டும். “என் தேவைக்கான ஒரு நுகர் பொருளோ நோறா” இந்த விபரீத எண்ணத்துடன்தான் ஹெல்மர் வாழ்ந்து வருகிறார்.

ஒவ்வொரு வரிகளையும் நிதானத்துடனும் வியப்புடனும் வாசித்துக்கொண்டிருக்கும்போது குழப்பகரமான ஒரு சிறிய சத்தம் விட்டு விட்டுக் கேட்டபடியுள்ளது. சில வேளை தூரமாகக் கேட்கிறது. சில வேளை மிக அருகில்ணு கேட்பது போன்றுள்ளது. ஆரம்பத்தில் வாசிப்பில் இருக்கும் கவனக்குவிவு இதுபற்றி யோசிக்க விடவில்லை. ஆனால் இப்போது பிரச்சினைதான்.

சில்வண்டின் இரைச்சலில் எப்போதும் எல்லோருக்கும் இடைஞ்சல். ஆனால் அதன் உருவம் மற்றும் ஒலி பற்றியதான முற்கற்பிதங்கள் எம்மிடம் இருப்பதனால் பயமில்லை. இந்தச் சத்தம் அப்படியானதொன்றல்ல. ஒருதும்பி சீமெந்து நிலத்தில் தலை கீழாகக் கிடந்து சுற்றும்போது எப்படிக்கேட்குமோ அந்தச் சத்தத்திற்கு ஒப்பானது. ஸ்ர்ர் ...ஸ்ர்ர்.. என்று கேட்கிறது. மிக நெருக்கமாகக் கேட்கிறது. நான் திரும்பிப்பார்க்கும் போது சத்தம் நிறுத்தப்படுகிறது. என்னைச் சுற்றியுள்ள பொருட்கள், இடங்கள் அனைத்திலும் பார்வையைத் தேக்கித் தேக்கி அவதானத்துடன் தேடினேன் எதுவும் தென்படவில்லை. சிறிய ஏமாற்றத்துடன் வாசித்தலைத் தொடங்கினேன்.

‘பெண்ணென்று பிறந்து விட்டால் பெரும் பீழை இருக்கிறது.’ என்ற ஓர் வரியை மூன்று நான்கு தடைவைகன் வாசித்தேன். இது சரிதானா...? ஏன் அப்படி...?

யோசித்துப் பார்த்தேன் எனக்கு உடன்பாடில்லாமலும் பலமாற்று எண்ணச்சூழ்வும் வாசித்தலுக்கு சிறிது நேரம் இடையூறாக இருந்தது.

“பெண்ணைப் பரிவு நிலைக்கு உட்படுத்தல் அல்லது வலிந்த அனுதாபத்தைத் தேடவைத்தல் இந்த இரண்டுமே பெண்ணியத்திற்கு எதிரான செயல்” என்றே மனதுக்குப் பட்டது.

இறுதியில் “புதுமைப்பெண்ணை ஆசிரியர் உலகம் காணவைக்கிறார்” எனச் சொல்லப்படுகிறது யாரும் பெண்ணை புதுமைத்தேடல் உட்படுத்தவோ தேவையில்லை. பெண் தன் இயல்புகளோடு வாழும்போது விலகி நின்று அதை ஏற்றுக்கொள்ள முயற்சித்தல் அல்லது பகிர்ந்துகொள்ளல் இரண்டுமே சமநிலையைப் பேணும் வாழ்வில் இரகசியமானது இந்த இடர்பாடுகளைத் தாண்டி வாசிக்கிறேன். மிகவும் உற்சாகமான மனநிலையில் நோறா இருக்கிறாள். நாளை நத்தார் தினம். அதற்கு வேண்டிய பொருட்களை அவள் வாங்கி வந்திக்கிறாள். நத்தார் ஒளிநாள் மகிழ்ச்சியின் திருநாள். உலகுக்கு ஒளி தரவந்த தெய்வபாலனின் பிறப்பைக் குறிக்கும் நாள். இயேசுக்கிறிஸ்து என்றதுமே உலகின் பாவங்களை தான் சுமந்து சிலுவையில் அறையுண்டு மரித்துப் பின் உயிர்த்தெழுந்த வரலாறு நினைவை நிரப்பும்.

‘நத்தார்’ என்பது இங்கு ஆசிரியரால் குறியீடாகக் கொள்ளப்பட்டு பெண்ணினத்தின் சிலுவை சுமத்தல் அதன் மூலம் உணர்த்தப்படுகிறது. நோறா பெண்ணினத்தின் பிரதிநிதியாக அமைகிறாள். உயிர்த்தெழ வேண்டிய பெண்மையின் பிரதிநிதியாகிறாள் என நாடகம் நகர்கிறது. இங்கு வரும் நிகழ்களமோ அல்லது பேசப்படும் மாந்தர்களோ எம்மவர்கள் இல்லையென்பதால் மேலும் கருத்து முரண்பாடுகளை நீக்கி வாசிக்கலானேன்.

பிறகும் ஸ்ர்ர்...ஸ்ர்ர்...ஸ்ர்ரென்று சத்தம் கேட்கத்தொடங்கிவிட்டது. இது ஒரு வகையான இரைச்சல். உணர்வுகளின் அடி நாதங்களைச் சிதைக்கும் துன்பம்; கீழுதடுகளைப் பற்களால் மடக்கிக் கடிக்க வைக்கும் ஒரு அந்தர்ப்பு. இன்னும் கவனமாக என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளையும் உறுத்துப்பார்க்கப் பார்க்க ஒருவிதமான பயவுணர்வு என்னை நெருங்கிற்று என்றுதான் இப்போது தோன்றுகிறது. இப்போதும் அப்படித்தானாகிவிட்டது. திடீர் எனச் சத்தத்தைக் காணவில்லை. இரண்டு நிமிடம் வாசிக்கவுமில்லை. சத்தம் வந்த மையங்களை நோக்கிப் பார்வையை வைத்திருந்தேன். ம்கூம்.. ஒன்றுமேயில்லை. அண்ணாந்து பார்த்தபடி வறண்ட எச்சிலை விழுங்கினேன். மேசையில் தண்ணீர்ப் போத்திலையும் காணவில்லை. எழுந்து நின்று சாரத்தை இறுக்கிக் கட்டியவாறு யோசித்தேன். இது பாம்பாக இருக்குமோ...? சீ அப்டியயிருக்காது. பாம்பின் அசைவோ அது அசையும் போது வெளிப்படும் சத்தமோ வேறு. தும்புத்தடி கையெட்டும் தூரத்தில் தான் இருக்கிறது. எடுக்கும்போது அதற்குள் இருந்து ஏதாவது பாய்ந்து வந்தால்..?

வீட்டில் வேறு இப்போது எவரும் இல்லை... ‘சே’ “சின்ன விடயம் எந்தப் பெரிய குழப்பத்தைத் தருகிறது” எல்லாப்பிரச்சினைகளும் சிறியதாகத்தானே தொடங்குகிறது...

பயந்த மனநிலை பாதி. துணிச்சல் மிகுதி சேர்ந்து வாசித்தலை ஆரம்பித்தேன்.

அங்கம்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­-02

நத்தார் மரத்தின் அழகுக்குள் இனி வரவிருக்கும் சிலுவை சுமப்பின் தியாகமும் அவலமும் உள்ளுரையாக இருப்பது போல நோறாவின் கலகலப்புக்குள் ஆழமானதொரு அவலம் உறைந்திருக்கிறது. சுமைதூக்கி கேட்ட கூலியை இரு மடங்காகக் கொடுக்கிறாள் இந்த ஊதாரிப்பெண். இவள் ஒரு ஊதாரி என்றே கணவன் கருதுகிறான். தனது துணையில்லாது இவள் எதையுமே செய்ய மாட்டாதவள் என்பது அவனது எண்ணம்.

பெண்கள் சுயமாகச் சிந்தித்து செயலாற்ற முடியாதவர்கள் என்பது ஹெல்மரின் எண்ணம். கடன் பட்டு வாழும் குடும்பத்தில் குரூரம் நிலவும் என்பது இவரின் கருத்து. கணவர் பொருட்டு நோறா கடன்பட்டுள்ளாள் என்பது அவருக்குத் தெரியாது. அவளுக்கு நத்தார்ப் பரிசாக எது வேண்டும் எனக் ஹெல்மர் கேட்க பணம்தான் வேண்டும் எனக் கேட்டுப் பெறுகிறாள். கடனைத் தவணை முறையில் திரும்பச் செலுத்தி வரும் நோறா இவ்வாறு தன்னை ‘ஒறுப்புணர்வு’ செய்து வாழ்கிறாள்.

இப்போது நீங்களும் நோறோ பற்றியும் ஹெல்மரின் பலவீனங்கள் குறித்தும் யோசித்துக்கொண்ண்டிருப்பீர்கள். சமூகத்தில் உங்களுடன் வாழ்கின்ற மனிதர்களை இனம் கண்டிருப்பதற்கு மேற்படி பாத்திரங்களை முன்னுதாரணம் கொண்டு யோசிப்பீர்கள். இதனைத்தான் நானும் சிந்தித்தேன்; சிந்தித்துகொண்டேயிருந்தேன். கண்களை முடி மனிதர்களின் உண்மைபோன்ற ஆனால் உண்மையேயல்லாத குணங்களை எனக்குள் சேமிக்கத் தெடங்கி விட்டிருந்த கணப்பொழுதுகளை சரசரப்புச் சத்தம் சீர்குலைத்தது. ஸ்ர்ர்ர்ர்ர்..ர்ஸ்... இதை எதிர்பார்தேன் ‘நீங்கள் கூட இதற்குப் பழகியிருப்பீர்கள்.’ இம்முறை மைமம் உடைந்தது. ஜாம் மரத்தின் இலையொன்று நிலத்தில் வீழ்ந்து சருகாகி நீண்ட நாள் போலுள்ளது. நன்றாகச் சுருண்டு போய்க்கிடந்தது. அந்த இலை நான் இருக்கும் முன் விறாந்தையின் ஒரு ஓரத்தில் வெடிப்புக்களுடன் கூடிய சீமெந்து நிலத்தில் பம்பர வேகத்தில் சுற்றுகிறது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதன் உள்ளிருந்து ஒரு மடைத்தேள் வெளியில் ஓடி வந்து அங்கும் இங்கும் ஓடியது. மூலைச் சுவரில் ஏறி தலைகுப்புறக் கீழே விழுந்து என் எதிர்த்திசையில் ஓடியது. ஒரு வேளை என் பாதங்களை நோக்கி ஓடி வந்தால் என்ன செய்யலாம்...? மேசைக்கும் எனக்கும் இடைவெளியில்லாமல் நெருக்கமாய் இருந்து வாசித்துக்கொண்டிருந்தேன். தற்செயலான நிகழ்வாக நானும் கதிரையை விலக்கி எழும்ப முயற்சித்த விநாடிகளில் மடைத்தேள் என்னை நோக்கித் திரும்பி வந்தது. அந்தரப்படுதல், பயம், மனித ஆளுமை மடைத்தேளை அடித்தாயிற்று. ஆனால் மடைத்தேள் சாகவில்லை. உடம்பின் நடுப்பகுதியிலும் இன்னும் சில இடங்களிலும் அடி விழுந்து அதன் உடம்பு பல முறிவுகளாகப் பிளவுபட்டு விட்டது. சிறிய கால்கள் துடித்துத் துடித்து அடங்கின. சில விநாடிகளுக்கு முன் பூரணமாய் இருந்த ஓர் உயிர் இப்போது என் கண்முன் குற்றுயிராய்த் துடிதுடித்தது. ஆமையைப் போல நகர முயற்சிக்கிறது. எனக்கு மண்டைக்குள் கரகரப்பது போல் ஒரு நினைவு. எதற்கும் இதைத் தெரியாமல் தூர வீசிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் தும்புத்தடியால் கூட்டி ஒன்றாக்கி தூ...ரத் தள்ளினேன்; எதிர்பார்த்த தூரம் போகவில்லை. சரிபோகட்டும். எப்படியோ ஒரு சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று என நினைத்த மறுகணம் வேறு ஏதோ ஒன்று மனதில் தோன்றியது. வாழ்தலுக்கான போரிடுதலில் நீயும் மட்டைத்தேளும் வேறானவர்களல்ல; உனக்கான ஒன்றை நீ பெறுகிறாய். அதற்கான ஒன்றை அது பெறுகிறது. ஒரு உயிரை இன்னொரு உயிர் தண்டிப்பதோ வதைப்பதோ காவு கொள்வதோ நியாயப்படுத்த முடியாத ஒரு விடயமே.

இங்கு மட்டைத்தேளும் குற்றுயிர்; நீயும் குற்றுயிர். இமாலய வெளியில் திரிந்தோம் நானும் மட்டைத்தேளும் நேரம் நெடுநேரம். இந்த மன நிலைபுரிகிறதா உங்களுக்கு...? ஹெல்மரின் அதிகப்படியான கண்டிப்பு நோறாவை பல தடைவை பொய் சொல்ல வைத்து விட்டது. நோறா எப்பொழுதும் அழகுப்பொம்மை போல் அழகாக இருக்கவேண்டும் என்பதே அவரின் ஆசை. அவளது ஆசைகள் பற்றி அவருக்கு அக்கறையில்லை. “நாங்கள் ஒரு அழகிய மரத்தை உருவாக்குவோம். நீங்கள் விரும்பின எல்லாவற்றையும் நான் செய்வேன். நான் பாடி ஆடுவேன்” என்று தனக்குத்தானே கூறிக்கொள்கிறாள். தனது வாழ்வை அழகுபடுத்திக்கொள்ள அவள் எத்தகைய ஒரு தியாகத்தை எவரும் அறியாதவாறு செய்து கொண்டிருக்கிறாள்? கணவன் விரும்பிய எல்லாவற்றையும் செய்கிறாள் .தனக்குத் துன்பம்வரும்போது அவர் துணைநிற்பார். நம்புகிறாள் ஆனால் பாவம் அவள். நோறாவைப்பற்றி நிமிர்ந்திருந்து சிந்திக்கலானேன். நோறா எனது தாய் போலவும் தங்கை போலவும் எனக்குத் தோன்றினாள். என் தாய் போல் பாசம் கொண்ட வேறொருவரையும் நான் இதுவரை காணவில்லை. என் தங்கை செல்லம் காட்டும். அதை ரசிப்பதே ஒரு சுகம். எல்லோருக்கும் தனித்தனியே நோறாவோ தாய் தங்கை மனைவி மகள்கள் இருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டே திரும்பியபோது மட்டைத்தேள் பார்வையில் பட்டது.

அங்கு புதிர் ஒன்று தொடங்கியிருந்தது. மட்டைத்தேளைச் சுற்றி எறும்புகள் மொய்க்கத்தொடங்கிவிட்டன. எறும்புகளென்றால் எம்மைக்கடிக்கும் எறும்புகளல்ல. எறும்புகளிலேயே மிகவும் இலகுவானதோர் எறும்பினம்.

‘பிள்ளையார் எறும்பு’ என்று இவற்றைக் கூறுவதுமுண்டு. பலநூறு எறும்புகள் மட்டைத்தேளை இழுக்கத்தொடங்கியிருந்தன. ஆச்சரியம் என்னவென்றால் மட்டைத்தேளுக்கு முன்னரை விட இப்போது அதிக சக்தி இருப்பது போல் தெரிகிறது. அதனால் ஓரளவுக்கு ஓடமுடிகிறது.

எனக்கு இப்போது என்னை அறியாத மகிழ்ச்சி. எழுந்து அதன் அருகில் சென்றேன். சிறிய தடியொன்றை எடுத்து எறும்புகளைத் துரத்தி மட்டைத்தேளை விடுவிக்கும் எனது முயற்சி ஆரம்பமானது. நான் நினைத்தது போல் அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை அந்தச் செயல். எறும்புகள் கலைவதும் வேகமாகக் கூடுவதுமாக இருந்தன. தமது ஒன்றைத் தாம் பெறுவதற்குத் தீவிரமாக என்னோடு போராடின. சற்று விலகிநின்று வேடிக்கை பார்த்தேன். தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சுவதுபோல் மட்டைத்தேளின் செயற்பாடுகள் இருந்தன. நான் நினைத்தால் எறும்புகளிடமிருந்து மட்டைத்தேளை அகற்றிவிடலாம். அது என்னால் நிச்சயமாக என்னால் முடியும். எனக்குத் தெரியும். உங்களுக்கும் அப்படித்தானே தோன்றுகிறது...? அதன் உயிரை இனிக்காப்பது யார்..? மட்டைத்தேள் எனைநோக்கி வந்ததும் நான் மிரண்டு அதைக் குற்றுயிராக்கியதும் எனக்கும் மட்டைத்தேளுக்குமான பிரச்சனையும் பாவபுண்ணியங்களுமாகும்.

எறும்புகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை. எறும்புகள் தமது எல்லைக்குட்பட்ட வாழ்வில், தேடலின் முயற்சியால் அவற்றுக்குக் கிடைத்த ஓர் அற்புத உணவுப்பண்டம் மட்டைத்தேளாகும். எறும்புகளிடமிருந்து எனது பலத்தின் பயமுறுத்தலால் அதைப்பறிப்பதற்கு எனக்கு எந்த உரிமையுமில்லை. அதைச் செய்தால் மேலுமொரு பாவத்தை தேடியவனாவாய் என்று ஒரு குரல் உள் பேசியது. மட்டைத்தேளைக் கொன்று எறும்புகளிடம் கொடுப்போமா என்றும் யோசித்தேன்....

ஏனெனில் எறும்புகளின் போராட்டம் அவ்வளவு முயற்சியுடையதாகவும் நம்பிக்கை கொண்டதாகவும் எனக்கு அப்போதுதான் புரிந்து கொண்டிருந்தது. ஒரு வகையில் இந்த எண்ணமும் பிழையானதேதான். எறும்புகளிடமிருந்து பறிப்பதற்கு உரிமையில்லாதபோது அவற்றுக்கு இலகுபடுத்திக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லைத்தானே...

எது எப்படியோ எனக்கு இப்போது பிரச்சினை என்னவென்றால் மட்டைத்தேளைக் காப்பாற்றுவதா...? இல்லையென்றால் எறும்புகளுக்கு உதவுவதா...? இரண்டும் ஒவ்வாத முனைகளாக என்னைத் தாக்கித் தகர்த்தெறிந்தன. கதிரையில் திரும்பவும் அமர்ந்து தலையைக் குப்புற மேசையில் கவிழ்த்து கைகளால் பிடறியை இறுக்கிப் பிடித்துக்கொண்டு சற்று நேரம் படுத்துப்பார்த்தேன். “நோறா, ஹெல்மர், மட்டைத்தேள், நான் எல்லோரும் ஒரு வட்டத்தில் வேகமாகச் சுற்றி வந்தோம்.

இதில் யார் மேலே..? யார் கீழே...? என்று சொல்லத்தெரியவில்லை. குற்றவாளிகள் என்றால் எல்லோரும் குற்றவாளிகள். நிரபராதிகள் என்றால் அதுவும் அப்படித்தானே இருக்கமுடியும். இதை உங்களிடமே தீர்ப்புக்கு விடுகின்றேன்”

அங்கம்- 03

வீங்கிய முகத்துடன் நிமிர்ந்து புத்தகத்தைப் பார்த்தேன். எத்தனையாவது பத்தி என்று தெரியவில்லை. நோறாவை மிகக் கடும் சொற்களால் ஹெல்மர் திட்டிக் கொண்டிருந்தார். அவருடைய கோபம் அவளை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அவளை அவர் வெறுக்கும் முறை வினோதமாகப் படுகின்றது. “பொய்யின் சூழலில் வாழும் பிள்ளைகள் நஞ்சூட்டப்படுகின்றனர்” என்றுமே பொய்யாக அருகில் இருக்கும் போது தனக்கு நோய் ஏற்படுவதாகத்தான் உணர்வதாக ஹெல்மர் கூறும் வார்த்தைகள் நோறாவின் உள்ளத்தைச் சுடுகின்றன.

‘எனது மனம் சஞ்சலத்தில் நிழன்றாடியது.’ மட்டைத்தேள் எறும்புகளின் இழுபறி இப்போது இடம்மாறியிருந்தது. மேசைக்கு அருகில் இருந்த உயர்ந்த சீமெந்துப்பகுதியை நோக்கி மட்டைத்தேளை எறும்புகள் நகர்த்த எத்தனித்தன.

அரையடிக்கும் குறைவான சரிந்த வழுவழுப்பான சீமெந்து நிலமது. எறும்புகள் இழுத்துச் செல்வதும் திடீர் என மட்டைத்தேள் துடித்துக் கீழ் வீழ்வதும் மீண்டும் எறும்புகள் ஒன்று சேர்ந்து வால்ப்பக்கம் இழுப்பதும் அது வீழ்வதும் மாறி மாறி நிகழ்த்துகையாக என்முன் விரிந்து கிடந்தது.

பதினைந்து இருபது நிமிடங்களுக்கு மேலாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

எறும்புகளின் ஒற்றுமையும் கூட்டுழைப்பும் மனிதர்களின் வாழ்வில் எங்கும் காணமுடியாத ஓர் அற்புத நிகழ்வாக விரிந்து பாகமாடி நின்றது. ‘இதுபற்றி இன்னும் விவரிக்கமுடியும் தவிர்க்கிறேன்.’

இறுதியில் யார் வெல்வது என்பதைப்பார்க்கவேண்டும் என்ற அவா ஏனையவற்றைப் புறந்தள்ளி முன்னின்றது. போராட்டம் தொடர்ந்தது. மனசின் ஏதோ ஓர் மூலையில் எறும்புகள் வெற்றிபெற வேண்டும் என்பதுபோல் இருக்கிறது.

நோறா, ஹெல்மர் தவிர்ந்த பலபாத்திரங்கள் வருகின்றன. அவற்றைப்பற்றிய முக்கியத்துவம் வெளிப்படவில்லை. “எங்களுக்கு விமோசனம் இல்லை” என ஏங்குகிறாள் நோறா. எறும்புகள் தீவிர முயற்சியோடு மட்டைத்தேளை மேல் தளத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுகின்றன. பின்பு நீண்ட நேரம் அதே இடத்தில் நின்றன. மட்டைத்தேள் தன் சக்தியெல்லாம் திரட்டி துடிப்பது போல் அசைந்தது. வால்ப்பக்கத்தால் பின்னால் ஓடிப்பார்த்தது. ஆனால் அதற்கு முடியவில்லை. “எனக்கு நன்றாகப் பார்க்கமுடிகிறது.”

நோறா தனது குடும்பத்திற்காகச் சொன்ன பொய்யை ஹெல்மர் கடுமையாக எதிர்த்து நோறாவைப் பழிதீர்க்க அலைகிறார். ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேற முற்படும் மனைவியைத் தடுக்கிறார். “இந்த உலகில் நான் எதையும் விட உங்களை நேசித்தேன் அதனால் அதைச் செய்யத்துணிந்தேன்” என நோறா குறிப்பிடுகிறாள். நீ ஒரு ‘பொய்யள்’ ‘குற்றவாளி’ எனது சந்தோசம் முழுவதையும் அழித்துவிட்டாய். வாழ்வு சூனியமகிவிட்டது. என்றெல்லாம் ஹெல்மரின் கூச்சல் கேட்கிறது.

எறும்புகளின் பயணம் மீண்டும் தொடங்கியது. அருகில் இருந்த பூச்சாடியை ஒரு வட்டமடித்தன. பின்பு மெதுவாக வீட்டின் வாசற்சுவரை நோக்கி இழுத்துச் சென்றன. எனக்கு மறைக்கும் போலிருந்தது. நான் கதிரையை இழுத்துப் போட்டுக்கொண்டு பார்த்தேன். ஏதோ ஓர் அற்புதம் நடக்கப்போகிறது. போலவும் உள்ளுக்குள் நினைப்பு எனக்கு. எறும்புகள் ஒரு கோடு போன்று இயங்கிக்கொண்டிருந்தன. இன்னும் புதிதாயும் இணைந்திருக்கவேண்டும். தமக்குள் ஏதோ பேசிக்கொள்வதுபோல் ஒன்றை ஒன்று முகத்தோடு முகம் முட்டி நின்று பிறகு எதிரெதிராய்ப் போகின்றன.

திடீர் என்று மட்டைத்தேளை செங்குத்தான சுவரில் இழுத்து ஏற்ற எறும்புகள் முயற்சிக்கின்றன என்பது எனக்குப்பட்டது. கண்டிப்பாக இந்தமுறை எறும்புகள் தோற்றுப்போகும் என நினைத்தேன். பார்த்துக் கொண்டிருக்கும்போதே மூன்று நான்கு தடவைகள் ஏறி ஏறி விழுந்தன. நான் நினைக்கிறேன் ஐநூறு ஆயிரம் எறும்புகளை சேர்த்தால்தான் மட்டைத்தேளின் நிறை வரும். இவ்வளவு சிறிய எறும்புகளால் இன்னும் உயிரோடு இருந்து எதிர்க்கும் மட்டைத்தேளை கொண்டுபோகமுடியுமா?

ஹெல்மரை நன்கறிந்த அவளது இதயத்தின் மூளையில் ‘அற்புதமொன்று’ நிகழக்கூடுமென்ற நப்பாசை ஒன்றிருந்தது. பழியை தான் ஏற்று அவளைக்காப்பார் என்று அவள் அணுவளவு நம்பினாள். நோறாவின் முடிவை அறியாத ஹெல்மர் “நீ இங்கு எனது வீட்டில் தங்கியிருப்பாய். ஆனால் பிள்ளைகளை வளர்க்க உன்னை நான் விடமாட்டேன்” என்கிறார். இறுதியில் தன்னுடைய கடன் பட்ட பணம் கட்டத் தேவையில்லையென்றவுடன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார். எப்போதும் ஹெல்மருக்கு ‘தான்’ என்பதுதான் முக்கியம். நோறாவை மன்னித்து விட்டதாகக் கூறி ஆனந்தப்படுகிறார். அப்போதுதான் நோறாவின் அர்த்தம் நிறைந்த செயற்பாடுகள் உள்ளுறையாக வெளிப்படுகின்றன. உடைகளை மாற்றிவிட்டேன் என்கிறாள். ஹெல்மருடன் கதைப்பதற்காக நீணட இடைவெளியில் அமர்ந்திருக்கிறாள். மேசை அவர்களுக்கு இடையில் தடையாக வைக்கப்பட்டுள்ளது.

எட்டு வருட மணவாழ்க்கையில் கணவனும் மனைவியும் சேர்ந்து கதைப்பது இதுதான் முதல் தடைவை. மிகப்பெரிய துக்கமும் நோறாவின் வாழ்வில் இனிவரப்போகும் மகிழ்ச்சியும் ஒன்றாய்த் தெரிகிறது. ஹெல்மர் இடிந்து போய் கதிரை ஒன்றில் கிடக்கிறார். கதவொன்று அடித்துச் சாத்தப்படும் ஓசை கீழிருந்து வருகிறது.

நாடகம் முடிவடைகிறது.

ஓர் இறுக்கத்திலிருந்து விடுபட்டது போல் நிமிர்ந்து சுவரைப்பார்த்தேன். பத்தடி உயரத்தில் மட்டைத்தேளை எறும்புகள் இழுத்துச் சென்றுகொண்டிருந்தன.

உன்னிப்பாய்ப் பார்த்தேன். அது துடித்துக்கொண்டே இருந்தது. சுவர் ஓரிடத்தில் வெடித்து இடைவெளியொன்று காணப்பட்டது. மெதுவாக அதற்குள் மட்டைத்தேளை இழுத்தன. அது பிடிவாதம் பிடித்தது. எறும்புகள் சேர்ந்து மட்டைத்தேளை தள்ளி விழுத்தின என்றுதான் சொல்லவேண்டும். என் கண்ணிலிருந்து மட்டைத்தேள் மறைந்தது. சற்றுநேரத்தில் உள்ளே ஓடி மறைந்து விட்டன. எந்த இடத்திலும் ஒரு பிரச்சனை நடந்தது போல் தெரியவில்லை. யோசித்துப் பார்த்தேன் மட்டைத்தேளை அடித்து குற்றுயிராக்கி அந்த மன உளைச்சலிலிருந்து எப்படி விடுபடுவது என்று உழன்ற எனக்கு இறுதியில் எறும்புகளின் வெற்றி சின்ன ஆறுதல் தந்ததுபோலப்பட்டது.

முன்னது சரியென்றால் பின்னதும் சரிதான். பின்னது பிழையென்றால் முன்னதும் பிழைதான்.

“வாழ்க்கை விட்டுக்கொடுப்புக்கள், அர்ப்பணிப்புக்கள், இலட்சியங்கள், தியாகங்களாலேயே வெற்றி கொள்கிறது.”








Back to top Go down
 
~~ Tamil Story ~~ ஹெல்மரும் நானும் மட்டைத்தேளும் நோறாவும் ஒன்றுமேயில்லை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  -- Tamil Story ~~ நானும் சைக்கிளும்
»  ~~ Tamil Story ~~ டி.என்.ஏ
» ~~ Tamil Story ~ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
» ~~ Tamil Story ~~ மரு
» == Tamil Story ~~ பு ற ப் பா டு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: