BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in ~~ Tamil Story ~~ அந்த எதிர்க்கட்சிக்காரர்   Button10

 

  ~~ Tamil Story ~~ அந்த எதிர்க்கட்சிக்காரர்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

 ~~ Tamil Story ~~ அந்த எதிர்க்கட்சிக்காரர்   Empty
PostSubject: ~~ Tamil Story ~~ அந்த எதிர்க்கட்சிக்காரர்     ~~ Tamil Story ~~ அந்த எதிர்க்கட்சிக்காரர்   Icon_minitimeMon Mar 28, 2011 4:02 am

~~ Tamil Story ~~ அந்த எதிர்க்கட்சிக்காரர்


களப்பணி ஆற்றுவது குறித்த முக்கியமான 3 அடிப்படை பாலபாடம்


1. ஏழை-எளிய மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்குதல்

2. ஏழை-எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்குதல்

3. பின் குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்தல்


ஆனால் கட்டுடைத்தல் என்ற கண்றாவியை இலக்கியத்திலிருந்து அரசியலுக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டார் அந்த எதிர்கட்சிக்காரர். அரசியலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்கிற கவலை யாருக்குத்தான் இங்கு இருக்கிறது. தேர்தல் நெருங்கி விட்டால் கன்னாபின்னாவென யோசிக்கிறார்கள்.


பிறந்ததிலிருந்து மகாத்மாகாந்திக்கு சவால்விடும் விதமாக, கைகுட்டை அளவே உள்ள துணியைக் கொண்டு மானத்தை மறைக்கும் கலையை கற்றுக் கொண்டு வயல்வெளியில் உழுது கொண்டிருக்கும் ஏழை விவசாயிக்கு, வேட்டியை இலவசமாக கொடுத்தால் அதை அவன் கட்டமாட்டான் என ஏன் எனக்குத் தோன்றாமல் போய்விட்டது. அந்த இலவச வேட்டியை அவர்கள் பயன்படுத்தும் விதமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வித்தியாசமாக உள்ளது. அதை சிறுசிறு துண்டுகளாக கிழித்து தங்களது தொடையில் வைத்து உருட்டுகிறார்கள். பின் அதை விளக்குத் திரியாக பயன்படுத்துகிறார்கள். இதற்காக அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளுவதில்லை.


ஆரம்பத்தில் நான், என் வலிமையான, வெண்மையான, கால்சியம் சத்து நிரம்பிய பற்கள் தெரியும்படி சிரித்தது உண்மைதான். அந்த எதிர்க்கட்சிக்காரரின் முட்டாள்தனமான விநியோகம் தான் அதற்குக் காரணம். அவர் முட்டாள்த்தனமாக செல்போன் ரீசார்ஜ் கார்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தார் அந்த விவசாயிகளிடம். ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்தான் என் ரகசிய உளவுப்படை இந்தத் தகவலை கூறியது. ஒவ்வொரு கிராமத்தானும் குறைந்தபட்சம் 2 செல்போன்கள் வைத்திருக்கிறானாம். அதில் 4 சிம்கார்டுகளை போட்டுக் கொண்டு இருக்கிறானாம். அன்றொரு நாள் டவர் கிடைக்காத ஆடு மேய்க்கும் சிறுவன் அம்பானியை அருவருக்கத்தக்க வார்த்தைகளை உபயோகித்து திட்டியதை நேரில் பார்த்த பின்பும் என்னால் இதை நம்பாமல் இருக்க முடியவில்லை.


ஆனால் இந்தியர்கள் உணவு உண்பதைப் பற்றி எனக்கு மிக நன்றாகத் தெரியும். இந்த விஷயத்தில் ஒட்டகத்தின் குணநலனை அப்படியே பெற்றிருக்கிறார்கள் இவர்கள். இனி ஆறுமாதத்திற்கு உணவே உண்ணப் பொவதில்லை என்கிற ரீதியில், அரைமூட்டை அரிசி சோற்றை சிறு வயிற்றுக்குள் அடைக்கும் கலையில் உலக விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைக்கக்கூடிய அளவுக்கு பெர்பார்மன்ஸ் காட்டுகிறார்கள் என்றால், அந்த ஆர்வத்தைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வெற்றி என்பது மட்டும் வேண்டும் என்று வந்துவிட்டால், எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்தவர் சாதனைக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்றால் அது பெருமையான விஷயம்தானே! அதுவும் ஒரு இந்திய அரசியல்வாதியான நான், ஒரு இந்திய பாமரன் உண்ணும் விஷயத்தில் சாதனை செய்வதற்கு உறுதுணையாக இருப்பதில் சொல்லொண்ணா பெருமை அடைகிறேன் என்றால் அது மிகையில்லை. ஆனால் ஏன் அவன் உண்பதையெல்லாம் கின்னஸில் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்றுதான் புரியவில்லை.


ஆனால் அன்று அந்த சமபந்தியின் போது தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் வந்துவிடுமோ என்று நான் பயந்தது உண்மைதான். அந்தக் காட்சியை என்னால் பார்க்க முடியவில்லை. எனது தொண்டர்கள் வண்ணான் தாழியை உதாரணமாக கூறினார்கள். ஆனால் அதுகூட அவ்வளவு பெரிதாக இருக்க முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. இப்படிப்பட்ட ஒரு வேட்கையை கற்காலம் முதற்கொண்டு கண்டிருக்கவே முடியாது, இருப்பினும் சில ஓட்டுக்கள் வேண்டுமே என்பதற்காக பொறுத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது.


முன்பெல்லாம் அரிசி உணவே போதுமானதாக இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. ஆட்டுத்தொடையை அப்படியே பொறித்து வைக்காவிட்டால் கடுப்பாகி போய் ஓட்டை வேறொருவனுக்குப் போட்டுவிடுகிறான். அவர்களிடம் நான் எப்படி சொல்வது, ஒரு ஆட்டுக்கு நான்கு கால்கள் மட்டுமே இருக்கின்றனவென்பதையும், மேலும் ஆடுகள் போதுமான அளவு இங்கு இல்லையென்பதையும், இப்படியே போனால் ஆடு என்ற ஒரு இனம் கி.பி. 2010ல் இந்தியாவில் இருந்தது என எதிர்காலத்தில் அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்பதையும். இங்கே ஒரு அதிசயத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆட்டுத் தொடை எலும்பை அரவை இயந்திரத்தில் விட்டது போன்றதொரு சத்தம் வந்து கொண்டிருந்த திசையை நோக்கி மிரட்சியுடன் ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருந்த குறும்பாடு பார்த்துக் கொண்டிருந்தது. இப்படியொரு காட்சியை உலகில் வேறு எங்குமே பார்த்திருக்க முடியாது. ஒரு ஐந்தறிவுள்ள ஜீவனை பயமுறுத்த ஒரு இந்தியனால் மட்டும்தான் முடியும். ஹிட்லருக்கும், முசோலினிக்கும், இடிஅமீனுக்கும் கூட இவ்வளவு திறமை பத்தாது என என்னால் ஒரு கோடி ரூபாய் பெட் கட்ட முடியும்.


இவ்வளவு விஷயங்களை வேதனை பொங்கும் நெஞ்சத்துடன் ஏன் குறிப்பிடுகிறேன் என நன்றாக யோசிக்க வேண்டும். சிறிதும் சிந்தனையின்றி ஒரு அரசியல்வாதி கோடிகோடியாக கொள்ளையடித்து, சுரண்டி சம்பாதிக்கிறான் என்று மட்டரகமாக, நாக்குமேல் பல்லைப் போட்டு திட்டும் பொதுமக்களைப் பார்த்து நான் கேட்கிறேன். ஒருபத்து கிராமத்தானுக்கு மட்டன் பிரியானி செய்து பந்தி வைத்துப் பாருங்கள் அப்பொழுது புரியும்........... சிறிது கூட உலக அனுபவமே இல்லாமல் சிரிப்பிற்கு இடமளிக்கும் வகையில் அரசியல்வாதியை அநாகரிகமாக நிந்திக்கும் கொடிய பழக்கத்தை இந்த 21ம் நூற்றாண்டிலிருந்தாவது மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


ஒரு ஓட்டுக்கு நாங்கள் அளிக்கும் மரியாதையையும், அதைப் புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டிய பொதுமக்களின் கடமை உணர்ச்சியையும் பற்றி தொண்டை கிழிய கத்தினாலும் இந்த படித்த மேல்தட்டு மக்கள் புரிந்து கொள்வதேயில்லை. அவர்களுக்கு வரிசையில் நின்று ஓட்டளிப்பது என்றால் வேம்பாய் கசக்கிறது. சினிமா டிக்கெட் மட்டும் வரிசையில் நின்று வெட்கமில்லாமல் வாங்குகிறார்கள். வரிசையில் நின்று தங்கள் ஓட்டை பதிவு செய்வதற்கு என்ன வந்துவிட்டது இவர்களுக்கு? ஜனநாயகத்தைக் காக்கும் பொறுப்பே இல்லாமல் சுற்றித் திரியும் இவர்களால் நாட்டுக்கு என்ன நன்மை? படித்துவிட்டதால் மமதை வந்துவிடுகிறது இவர்களுக்கு. கல்வியின் இன்னொரு கோர முகத்தைப் பற்றி நான் எடுத்துக் கூறினால் இங்கு யார் புரிந்து கொள்கிறார்கள். உடனே சண்டைக்கு வந்து விடுகிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. தமிழ்நாடு கெட்டு குட்டிச் சுவராய் போய்க் கொண்டிருக்கிறது. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் இதைத்தான் செய்வேன். ஒவ்வொரு படித்தவனையும் துப்பாக்கி முனையில் ஓட்டுப்போட அழைத்து வருவேன். அவ்வாறு அழைத்து வரச் செய்வது எதிர்கட்சிக்காரன் என்ற புரளியை கிளப்பிவிடுவேன். ஐயோ ஒரு எதிர்க்கட்சிக்காரன் மட்டும் இல்லையென்றால் என் நிலைமை என்ன ஆவது, எனது அரசியல் வாழ்க்கையே ஸ்தம்பித்து போய்விடும் போல எனக்குத் தோன்றுகிறது. இதை நினைத்துப் பார்க்கும் போதே முகமெல்லாம் முத்துமுத்தாய் வேர்த்து விட்டது.


ஆனால் இவ்வாறெல்லாம் செய்தால் என்னையும் என் தொண்டர்களையும், வன்முறையைத் தூண்டிவிடுகிறேன் என்று கூறிவிடுகிறார்கள் இந்த பொறுப்பற்ற பத்திரிகைகாரர்கள். இந்த பத்திரிகைகாரர்களைப் பொருத்தவரை ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒரு அரசியல்வாதியைப் பற்றி எந்தஒரு பத்திரிகைகாரர் குற்றம் சாட்டவில்லையோ அவருக்கு சம்பளம் கிடைப்பதில்லை என்பது உலக வழக்காகப் போய்விட்டது. பின் என்ன செய்வார்கள் அவர்கள்............ ம் .......... பாவம். அவர்களும் தங்கள் தலையில் ஒரு மூலையில் உள்ள மூளையை கசக்கிப்பிழிந்து சாறெடுத்து, கன்னாபின்னாவென கண்ட கண்ட கெட்ட வார்த்தைகளுக்கு சங்கத்தமிழ் சாயம் பூசி எழுதி அல்லது வாந்தியெடுத்து கட்டுரைகளை வாரி வழங்குகிறார்கள். இவ்வளவும் எதற்கு. ஒரு மாதச் சம்பளத்திற்கு என்கிறபோது, சிறிது பரிவு பிறக்கிறது அவர்கள் மேல்.


அன்று ஒருபத்திரிகை ‘நண்பர்’ என்னைப் பார்த்து இவ்வாறு கேள்வி கேட்கிறார்.


‘ஜனநாயகம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?”


நியாயமாக எனக்கு கோபம் வந்திருக்கக் கூடாதுதான். இருப்பினும் வந்தது. ஏன் தெரியுமா. இந்த ஜனநாயகத்தைப் பற்றி பாடம் எடுக்கும் போதுதான் என் ஆறாம் வகுப்பு ஆசிரியரின் அழகான முத்து போன்ற பல்வரிசையை உடைத்தெறிந்தேன். அவர் அந்த வார்த்தைக்கு தினசரி என்னை எழுப்பி அர்த்தம் கேட்டுக் கொண்டிருந்தார் என்கிற உபரித் தகவலை அந்த பத்திரிகை ‘நண்பருக்கு” நான் எப்படி சொல்வது? நான் ஏழாம் வகுப்பை தொடர்ந்திருந்தால் ஒரு எஞ்சினியர் ஆகியிருப்பேன். ஆறாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டதால்தானே ஒரு அரசியல்வாதியாக பரிமாணம் எடுக்க முடிந்தது. ஆனால் என் தாய்நாடு இந்தியா யாரையும் கைவிடுவதேயில்லை. இங்கு எல்லோருக்கும் வாய்ப்பு உண்டு என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது என் உள்ளமெல்லாம் பூரித்துப் போய்விடுகிறது.


சோப்பு டப்பாவை கொடுத்து ஒட்டு கேட்ட பொன்னான காலங்களையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது கன்னங்கள் வழியாக, சிறு கோடு போல் வழியும் கண்ணீரை துடைக்க வேண்டியதாகப் போய்விடுகிறது. தொண்டர்கள் முன்னர் அழுதுவிடுவேனோ என்கிற பயம் எனது நெஞ்சை கவ்விக் கொள்கிறது. அது ஒரு பொற்காலம். ஹேர்பின், டப்ஸ், குங்குமப்பொட்டு, ஸ்டிக்கர்பொட்டு, டாபர் ஆம்லா ஹேர் ஆயில் அத்தோடு ஒரு முழம் மல்லிகைப் பூ இவையே போதுமானதாக இருந்தது. அக்காலத்தில் ஓட்டுப்பெட்டிகள் நிறைந்து வழிந்தன. அதுவும் அந்த டாபர் ஆம்லா ஹேர் ஆயில் இருக்கிறதே?........... வெறும் விளக்கெண்ணெய் தேய்த்து தலைவாரிக் கொண்டிருந்த கிராமத்து பெண்களுக்கு அது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது என்றால் அது மிகையில்லை. வெறும் குங்குமப்பொட்டு கொடுத்து ஒட்டு கேட்ட எதிர்கட்சிக்காரனை, ஸ்டிக்கர் பொட்டு கொடுத்து ஆட்சியை விட்டே விரட்டியடித்தோம் அக்காலத்தில். வயதான பெண்மணிகளுக்கு வெத்தலையும், வெட்டுப்பாக்கையும் கொடுத்து ஏமாற்றிய எதிர்க்கட்சிக்காரனை, வெத்தலையுடன் ரோஜாபாக்கும், வாசனை சுண்ணாம்பும் வாங்கிக் கொடுத்து வளைத்துப் போட்டோம். அந்த எதிர்க்கட்சிக்காரன் சிறப்பாய் சிந்திப்பதாய் நினைத்துக் கொண்டு, கொட்டைப்பாக்கை இடிப்பதற்கு உலக்கு விநியோகம் செய்தான். யாரை ஏமாற்றுகிறாய் என்று அந்த உலக்குகளை தூக்கி எறிந்தார்கள் அந்த பெண்மணிகள். ஆஹா ............. எப்பேர்ப்பட்ட பொற்காலங்கள் அவை.


வயதான பெரிசுகளுக்கு வாசனை சுருட்டு வாங்கிக் கொடுத்தபோது தாராளமாய் ஆளுக்கு 4 ஓட்டுக்களை நாசுக்கா குத்தினார்கள். கட்டை விரல் மட்டும் என்ன பாவம் செய்தது. அதற்கும் மை வைத்தால்தான் விடுவேன் என கட்டிப்புரண்டு சண்டை போட்ட பெரிசுகளையெல்லாம் நினைத்துப் பார்க்கையில் நெஞ்சம் எல்லாம் நெகிழ்கிறது. கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று ஒருவர் கூறியதாக, பல் உடைபடுவதற்கு முதல்நாள் எனது ஆறாம் வகுப்பு ஆசிரியர் சொன்னதாக நியாபகம் இருக்கிறது. எவ்வளவு நிஜமான வார்த்தைகள் அவை. அந்த வார்த்தைகளை கூறியவரை அழைத்து வந்து ஒரு வேலை உணவாவது கொடுத்து உபசரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, எனது ஆறாம் வகுப்பு ஆசிரியரை இன்றுவரை தேடிக் கொண்டிருக்கிறேன். அவர் இன்னும் கிடைக்கவில்லை.


அக்காலத்து என் மக்களுக்கு இட்லி சுட்டுக்கொடுத்து விருந்து வைத்தால் போதும் இந்தியாவையே என் கையில் ஒப்படைத்து விடுவார்கள். ஆனால் இப்பொழுது மட்டன் பிரியாணியை மடை கட்டி தின்றுவிட்டு மசாலா போதவில்லை என்கிறார்கள். காலம் கெட்டுப் போய்விட்டது. அரசியலில் நிலைத்திருப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.


இப்பொழுதெல்லாம் இலவசங்களை வழங்குவது குறித்து யோசனை வழங்க படித்த மனவியல் நிபுணர்களை எதிர்க்கட்சிக்காரர்கள் வேலைக்கு அமர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.


இலவச ரீஜார்ஜ் கார்டுகள்


கலர் டெலிவிஷன்


மடிக்கணினி (அதுவும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்)


இலவச கேபிள் கனெக்ஷன் (இப்பொழுதெல்லாம் கேபிள் வரவில்லையென்றால் கேவலமாகத் திட்டுகிறார்கள் மனிதாபிமானமற்ற மக்கள்)


21ம் நூற்றாண்டின் அழகிய நடிகைகளின் முழு நீலப்படங்கள் நிரம்பிய காலை-மாலை நாளிதழ்கள் (குறைந்த விலையில்)


மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சுகமாக உணர்கிறார்கள். சிறப்பான ஆட்சியின் கீழ் இருப்பதாக அவர்களுக்குத் தெரிகிறது. மேலும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறார் அந்த எதிர்க்கட்சிக்காரர்.








Back to top Go down
 
~~ Tamil Story ~~ அந்த எதிர்க்கட்சிக்காரர்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ அந்த அலறல்
» ~~ Tamil Story~~ அந்த நான்கு நாட்கள் ~~
»  ~~ Tamil Story ~~ அந்த முட்டாள் வேணு - புதுமைப்பித்தன்
» ~~ Tamil story ~~ மிருகாதிபத்தியம்
» ~~ Tamil story ~~ டி.என்.ஏ

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: