BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ நெருப்புக் கோழி  Button10

 

 ~~ Tamil Story ~~ நெருப்புக் கோழி

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ நெருப்புக் கோழி  Empty
PostSubject: ~~ Tamil Story ~~ நெருப்புக் கோழி    ~~ Tamil Story ~~ நெருப்புக் கோழி  Icon_minitimeMon Mar 28, 2011 4:10 am

~~ Tamil Story ~~ நெருப்புக் கோழி



நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. லயன் கரையின் மேல் நந்தியைப் போல் வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டம் நேரும்பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், அதைப்பற்றிப் பிறகு நினைக்கும் பொழுது ஒரு இனிமை தென்படுகிறது; நம்முடைய முட்டாள்தனத்தையோ துயரத்தையோ எண்ணி வியப்படைகிறேன்.

வாலிபத்தில் ஒரு ஆற்றங்கரை வழியாகப் போவது வழக்கம். லயன் கரையின் புருவத்தில் கொய்யா மரங்கள் நெடுக இருந்தன. 'கனி வர்க்கத்தில் கொய்யா அப்படி ஒன்றும் சிறந்ததல்ல' என்று இப்பொழுதுதானே தெரிகிறது? நாட்டு வைத்தியருடன் கறி, பழவகைகளின் குண தத்துவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வது நடுவயதிற்கப்பால் தானே!

பால்யத்தில் கொய்யா என்றால், அலாதி மோகம். கொய்யா மரத்தின் வழவழப்பான உடலே இந்தக் கவர்ச்சிக்குக் காரணமாய் இருக்கலாம்; அல்லது கிட்டுப்புள்ளுக்குக் கொய்யாக் கழியை விடச் சிறந்ததொன்றில்லை என்ற நினைப்பாய் இருக்கலாம். தவிர, கை எட்டக் கூடிய தூரத்தில் கொய்யா தொங்கிக் கொண்டிருந்தால், நாளைக்கு வரும் பலாக்காயை விட இன்றைக்குக் கிடைக்கும் கிளாக்காய் மேல் என்று தோன்றாதா? கருவேப்பிலைப் பழத்தைக் கூட ருசித்துச் சாப்பிடக்கூடிய வயதாயிற்றே!

ஆனால், எவ்வளவு ஆசைப்பட்டாலும் மரத்து நிழலைக் கூட மிதிக்க முடியாது. ஏனென்றால், தோட்டக் காவல்காரன் லயன் கரையின் மேல் நந்தியைப் போல் எப்பொழுதுமே உட்கார்ந்து கொண்டிருப்பான். ஆகையால், தினம் கொய்யா மரத்தின் தரிசனத்துடன் திருப்தி அடைந்தேன்.

நரி முகத்தில் விழிப்பது என்பது மெய்யாகக் கூட இருக்கலாம். இல்லாவிட்டால் நானும், என் நண்பர்களும் லயன் கரைப் பக்கம் போன பொழுது தோட்டக்காரன் இல்லாமல் இருப்பானேன்? எங்கள் கொண்டாட்டத்தை எப்படி வர்ணிப்பது! வேகமாகச் சென்று, ஆளுக்கொரு பக்கம் கொய்யாவைக் கொய்து கொண்டிருந்தோம். 'மளக்'கென்று ஏதோ குச்சி ஒடியும் சத்தம் கேட்டது. மரத்தின் மேலிருந்த நான், உஷாரடைந்து இறங்கத் துவங்கினேன். மறுபடி இலைகளில் நடப்பது போன்ற சலசலப்பின் ஓசை காதில் விழுந்தது. தொடர்ந்து புதரை விலக்கிக் கொண்டு ஒரு கையும், முண்டாசும் தெரிந்தது. தோட்டக்காரன்! அவ்வளவுதான்; என் நண்பர்கள் சிட்டாய்ப் பறந்து விட்டனர்; நான் பாதி மரத்திலிருந்து குதித்தேன். அதற்குள் தோட்டக்காரன் என்னண்டை வந்துவிட்டான். நான் அலங்கமலங்க விழித்தேன்.

"ஏம்பா கொய்யாக்காய் பறித்தாய்?"

நான் மௌனம் சாதித்தேன். வெறும் துண்டை மட்டும் நான் போட்டுக் கொண்டிருந்ததால், அவன் வெடுக்கென்று சவுக்கத்தைப் பிடுங்கிக் கொண்டான். இதுதான் சாக்கென்று நான் நடந்து செல்ல ஆரம்பித்தேன்.

"என்ன தம்பி, கொய்யாக்காயைத் திருடிவிட்டு, டம்பமாய் கம்பி நீட்டுகிறாயே?"

"திருட்டென்னப்பா? வேணுமென்றால் கொய்யாக்காய்க்குக் காசு வாங்கிக்கொண்டு போயேன். சின்னப் பையன் என்றுதானே சவுக்கத்தைப் பிடுங்கிக் கொண்டாய். அதை எடுத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டே முறைப்பாய் நின்றேன். மனதிற்குள் உதைப்புதான்.

"சவுக்கத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லுகிறாயோ... போ... போ" என்று அவன் கருவினான்.

இதுதான் சாக்கென்று நான் நடையைக் கட்டினேன்.

இந்த சம்பவம் நடந்தபொழுது என் மனம் பட்ட பாட்டைப்பற்றிப் பின்னர் எண்ணும் போது வெற்றி உணர்ச்சிதான் தலைதூக்கி நின்றது. என் வாக்கின் திறமையல்லவா வெற்றி கொண்டது. அதை மனத்திற்குள் பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. இல்லாவிட்டால் கன்னம் பழுத்திருக்காதா? இதைப் போலவேதான் மற்றொரு நிகழ்ச்சியும். எங்கள் வீட்டில் நான்கு குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் நிறையக் குழந்தைகள்! தினந்தோறும் வீட்டில் ஒரு தமாஷ்! குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடத்தை விட்டு வரும். எதுவோ வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொண்டு, பிறகு எல்லாமாகக் கொல்லைக்கட்டு திண்ணையில் வந்து கூடிவிடும். 1-ம் நம்பர் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு திண்ணையில் உட்காரும். 2, 3, 4 குடும்பத்துக் குழந்தைகள் எதிர்த்தாற்போல் வந்து நிற்கும்.
"உட்கார். வாய்மேல் கை வை" என்றதும், குழந்தைகள் உட்காரும்.

"பிரார்த்தனை கீதம்", "அருள் புரிவாய் கருணைக் கடலே" என்று குழந்தைகள் ஆளுக்கொரு ஸ்தாயில் கத்தும். காமாட்சி வந்து கை நீட்டியதும், அதில் இரண்டடி விழும். வாங்கிக்கொண்டு, தன் இடத்திற்குத் திரும்பி விடுவாள். இதற்கிடையில் வாத்தியார் பிள்ளைகளை அடித்தால், கசமுசவென்று பேசுவார்களே, அதே மாதிரி இந்தக் குழந்தைகள் பேசிக் கொண்டிருக்கும்.

"பேசாதே, அடிச்சூடுவேன்."

கப்சிப் என்ற மௌனம். இம்மாதிரி மாலைக் காட்சி ஒன்று தினம் வீட்டில் நடைபெறுகிறது. வாத்தியார் அடித்து விட்டார் என்று பள்ளிக்கூடம் போன உடனே திரும்பும் குழந்தைகளும், வாத்தியார் அடிப்பார் என்று பள்ளிக்கூடம் போக முரண்டு செய்யும் குழந்தைகளும் சேர்ந்து இந்த மாலைப் பள்ளிக்கூடத்தை நடத்துவது வியப்பல்லவா? எந்த அடியைப் பள்ளிக்கூடத்தில் வாங்க இஷ்டப்படவில்லையோ, அந்த அடியை இங்கே வாங்குவதில் அவர்கள் இன்பம் காணுகிறார்கள்! எந்தக் கட்டுப்பாடு பள்ளிக்கூடத்தில் வேம்பாக இருக்கிறதோ, அதற்கு இங்கே அளவு கடந்த மதிப்பு!

இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த துறை ஒன்றிருக்கிறது. நாடகங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள். வாழ்க்கையில் காணும் வெற்றி தோல்விகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டுவதுதானே நாடகம்? வாழ்க்கையில் தாங்க முடியாத இன்பம் ஒன்று மனத்தில் பிறக்கிறதே, அது ஏன்?

இவைகளை எல்லாம் நினைக்கும் பொழுது ஒரு இயற்கை நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. சூரியன் தினம் நம்மைப் பொசுக்குகிறான். சூரியனிடமிருந்து சக்தியைக் கடன் வாங்கும் சந்திரன், நமக்கு ஒளியையும், குளுமையையும் தான் தருகிறான். சூரியனின் வெப்பத்தைச் சந்திரன் என்ன செய்தான்?

இந்த அதிசயத்தின் ரகசியம் தான் என்ன? இப்படி இருக்கலாமோ? உண்மை என்று ஒன்றிருக்கிறது. காலம் என்று மற்றொன்றிருக்கிறது. உண்மைக்கும் நமக்கும் இடையே காலம் குறுக்கிடுகிறது. காலம் ஒரு மந்திரவாதி. நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும் பொழுதே, அவைகளுக்குப் புதிய வர்ணத்தைக் காலம் பூசிக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாகத்தான் செத்தவன் கண்போல் மனத்தில் காட்சி அளிக்கிறான். அடிபட்ட பள்ளிப் பிள்ளைகள் போலிப் பள்ளிக்கூடம் நடத்தி இன்பம் அடைகிறார்கள். ஒரு வேளைச் சோற்றுக்குத் தாளம் போடுகிறவன் நாடகத்தில் ராஜாவாக நடைபோடுகிறான். சூரியனின் கிரணம் சந்திரனை வந்து அடையும்பொழுது, காலம் கடந்துவிடவில்லையா? வெப்பத்தை மாற்றிக் குளுமை அளிப்பது காலத்தின் மாயஜாலமா?

அல்லது,

சூரிய வெப்பத்தை விழுங்கிவிட்டு அமுத ஒளி பொழியும் மாயவித்தை ஏதேனும் சந்திரனிடத்தில் இருக்குமோ? சந்திரனிலிருந்து மனம் உண்டாகிறதென்று உபநிஷதம் கூறுகிறது. ஜோதிடத்திலும் சந்திரனைக் கொண்டு மனத்தின் தன்மையை நிர்ணயிக்கிறார்கள். ஆகையால், சந்திரனுக்குள்ள மாய சக்தி மனத்திற்கும் இருக்கலாம் அல்லவா? இரும்பாணியையும், மண்ணையும் தின்னும் நெருப்புக் கோழி மென்மையான அழகிய சிறகுகளைப் போர்த்திக் கொள்கிறதல்லவா? இந்த மாதிரி அற்புத சக்தி மனத்திற்கும் இருக்குமோ? இந்த சக்தியிலிருந்து பிறப்பதுதான் கலையோ? அல்லது வினையை விளையாட்டாக்குவதுதான் கலையோ?






Back to top Go down
 
~~ Tamil Story ~~ நெருப்புக் கோழி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil story ~~ டி.என்.ஏ
»  == Tamil Story ~~ பி ன் வா ச ல்
» ~~ Tamil Story ~~ பசி
» -- Tamil Story ~~ ஆ!
» ~~ Tamil Story ~~ பரிச்சயக்கோணங்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: