BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ கேள்விகள்  Button10

 

 ~~ Tamil Story ~~ கேள்விகள்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ கேள்விகள்  Empty
PostSubject: ~~ Tamil Story ~~ கேள்விகள்    ~~ Tamil Story ~~ கேள்விகள்  Icon_minitimeWed Mar 30, 2011 3:54 am

~~ Tamil Story ~~ கேள்விகள்




கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு...
அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு...
அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி..." என்று சொல்லிக் கொண்டே அவ வெட்டிப்போட்ட குட்டிக்குட்டி நெகத்தையெல்லாம் ஒண்ணுவிடாம பொறுக்கி வாசலில் எறிஞ்சா...
அதப்பாத்த கன்னிமயிலு "ஏம்மா நெகத்த வீதியில போடுறீயே... வீட்டுக்குள்ள நெகத்தை வெட்டிப்போட்டா வீடு வெளங்காமப் போறமாதிரி வீதியில போட்டா ஊரே வெளங்காமப் போயிறாதா...?" ன்னு பாவமா மூச்சிய வச்சிக்கிட்டே கேட்டா...
அன்னபாக்கியத்துக்கு மூஞ்சியே இருட்டடிச்சுப்போச்சு... அவளால இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியல... பேந்தப்பேந்த முழிச்சாள்...
இதையெல்லாம் பாத்துக்கிட்டிருந்த ரெண்டு வெவரந்தெரிஞ்ச பெரிசுக "கக்க...கக்க..."ன்னு சிரிச்சு அன்னபாக்கியத்தோட மானத்த வாங்கிப்புடுச்சுக வாங்கி...
இது நடந்து ஒரு ரெண்டுநாள் இருக்கும்... கன்னிமயிலு அவசோட்டுப் பொம்பளப் பிள்ளைகளோட சொட்டாங்கல்லு விளாடிக்கிட்டிருந்தா... அலுங்காம குலுங்காம கல்ல ராவிராவிப் புடிச்சா... மத்த புள்ளைகள விட இவதான் சூப்பரா விளாடிக்கிட்டிருந்தா...
அஞ்சாங்கல்லு தூக்கிப்போட்டுப் பிடிக்கும்போது ஒருத்தி இவ கையைத் தட்டிவிட... இவ கல்லைத் தவற விட.. அவுட்டு அவுட்டுன்னு மத்த பிள்ளைகளெல்லாம் கைதட்டிக்கிட்டே கத்த... கைய தட்டிவிட்டதாலதான் கல்லத் தவறவிட்டேன்னு இவ சொல்ல... வந்துச்சுங்க சண்டை.
கன்னிமயிலு கோவத்துல சொட்டாங்கல்லக் கொண்டு எறியப்போக ஒடஞ்சுச்சுங்க ஓட்டப்பல்லுக்காரி ஒருத்தியோட மண்டை. அவ மண்டையில ரத்தம் ஒழுகியதப் பாத்த கன்னிமயிலுக்கு மூஞ்சியெல்லாம் வேர்த்துப்போச்சு... "ஐயய்யோ! நான் இல்ல.. நான் இல்லல..."ன்னு வாய் ஒளறி சொல்லிக்கிட்டும் பாவாடைய தூக்கி இடுப்புல சொருகிக்கிட்டும் ஓட்டமா ஓடியாந்துட்டா வீட்டுக்கு...
வீட்டுக்கு வந்தவளுக்கு ஈரக்கொலையெல்லாம் நடுங்கிப்போச்சு...! ஏன்னா... அவ வீட்டுக்கு முன்னாடி ஊருச்சனத்துல பாதி கூடியிருந்துச்சு... "ஐயய்யோ... ஓட்டப்பல்லுக்காரியோட அம்மா, வீட்டுல வத்தி வச்சுட்டா போலருக்கே"ன்னு பயந்து பயந்து ஒரு ஒரு அடியா பூனை மாதிரி எடுத்து வச்சு வீட்டுக்கிட்டக்க வந்தா.. ஆனா இவள யாருமே கண்டுக்கிறல... நிண்டுக்கிட்டிருந்த அம்புட்டுப்பேத்தையும் பேந்தப்பேந்தா பாத்தா... அப்புறம்தான் தெரிஞ்சுச்சு விஷயம் வேறன்னு...
இவ வளத்த நாய்க்குட்டி ஒரு பச்சப்பயல கடிச்சு வச்சிருந்துச்சு...
"இதுக்கு என்ன மருத்துவம்னா... நாய்க்காரவுக வீட்டுல நீச்சத்தண்ணி வாங்கிக் குடிக்கணும்மா..."ன்னு ஏதோ ஒரு பெரிசு அந்தப்பயலோட அம்மாக்கிட்ட யோசன சொல்லிச்சாம்... அதனாலதான் தன்னோட சொந்தபந்தமெல்லாம் கூட்டிக்கிட்டு நீச்சத்தண்ணி வாங்கிக் குடிக்க வந்திருந்தா அவ.
செம்புல கொடுத்த தண்ணிய வாங்கி, "மொடக்... மொடக்..."ன்னு குடிச்சான் அந்தப் பய. பெறகு அம்புட்டுபேரும் அவஅவுக வீட்டப்பாத்து நடந்தாங்க... அவுகள்ளலாம் போறதப் பாத்துக்கிட்டே கன்னிமயிலு, பக்கத்திலிருந்த பெரிசுக்கிட்ட " ஏந்தாத்தா.. வீட்டு நாய் கடிச்சா நீச்சத்தண்ணி வீட்டில இருக்கும் வாங்கிக் குடிக்கலாம்... போலீஸ் நாய் கடிச்சா அவுங்க எங்க போவாங்க நீச்சத்தண்ணிக்கு...? அவுங்க என்ன போலீஸ் ஸ்டேசன்ல சோறா ஆக்குறாங்க...?"ன்னு கேட்டுப்புட்டா.
இந்தக்கேள்விய கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்தப் பெரிசுக்கு பொறயேறிப்போயி நாலு தும்மு சேந்தாப்புல "நச்சுநச்சு"ன்னு தும்முச்சு... பெறகு படக்குன்னு எந்திருச்சு துண்ட ஒதறி தோள்ல சொட்டுன்னு போட்டுக்கிட்டு இருமிக்கிட்டே நடயக்கட்ட ஆரம்பிச்சிருச்சு... கொஞ்ச தூரம் போயி மெதுவா திரும்பிப் பாத்திச்சு... கன்னி மயிலு குர்ன்னு தன்னையே பாத்துக்கிட்டிருந்ததைப் பாத்தபின்னே டபக்குன்னு தலயக் குனிஞ்சிக்கிட்டு இன்னும் கொஞ்சம் வேகமா நடக்க ஆரம்பிச்சிருச்சு.
----------
"பள்ளிக்கொடத்துக்கு போனவள இன்னும் காணல... இந்த மனுசனுக்கு கொஞ்சமாவது வருத்தந்தெரியுதா?"ன்னு பொரிஞ்சு தள்ளிக்கிட்டிருந்தா அன்னபாக்கியம்.
"இந்தா போறன்டி... எனக்கு மட்டும் ஆத்திரமில்லையா...?"ன்னு எரிச்சலோட சொல்லிக்கிட்டே விறுவிறுன்னு நடந்துபோனாரு கன்னிமயிலோட அப்பாகாரரு மாணிக்கம்...
கூடை நிறைய முழுநெல்லிக்காய் கொண்டு போயி மாடிப்படிக்கட்டுல கொட்டிவிட்ட மாதிரி பள்ளிக்கொடம் விட்டு பிள்ளைக குதிச்சு குதிச்சு ஓடியாந்துச்சுக... சிலேட்டும் சாப்பாட்டுத்தட்டும் வச்சிருந்த மஞ்சப்பைய்ய பாம்பு வெரல்ல மாட்டிக்கிட்டு ஆட்டிக்கிட்டே எதுத்தாப்புல வந்துக்கிட்டிருந்த கன்னிமயிலு, அப்பனக்கண்டதும் தவ்வித்தவ்வி வந்து தோள்ல ஏறிக்கிட்டா...
"ஏங்கண்ணு இவ்ள நேரம்...? உங்க ஆத்தா தன்னா..ல கத்தி குமிக்கிறா தாயி...."ன்னு ரெம்ப அனுசரணையா கேட்டாரு மாணிக்கம்.
"வீட்டுப்பாடம்லாம் எழுதீட்டு வந்தேம்ப்பா... வீட்டுல எழுத முடியலீல"ன்னு சொல்லிக்கிட்டுத்தாங்க இருந்தா... வந்தான் முறுக்கு மீசக்காரன் ஒருத்தன்.
"யோவ் நில்லுய்யா அங்கேயே... என்னய்யா இது புதுப்பழக்கம்... செருப்புக்காலோட எங்க வீதியில நடக்குறது... நீங்களெல்லாம் செருப்புக்காலோட நடந்தா அசிங்கமில்லையா எங்களுக்கு...? கழத்துய்யா மொதல்ல..." அப்படீன்னு விட்டா அடிச்சிப்புடுற மாதிரி பேசினான் அவன்...
அவன் பேசின தோரணைய பாத்த மாணிக்கத்துக்கு ஒடம்பெல்லாம் வேர்த்துப்போச்சு... அவனோட கண்ண பயத்தோட பாத்துக்கிட்டே செருப்பக் கழத்தி கக்கத்துல வச்சிக்கிட்டாரு அவரு...
ஒண்ணு ரெண்டு எட்டுத்தான் வச்சிருப்பாரு... அந்த முறுக்கு மீசக்காரன் சொன்னான், "ம்.. அப்படிப்போவே..."ன்னு தாட்டியமா.
கொஞ்சதூரம் போனபிறகு கன்னிமயிலு கொழப்பத்தோட கேட்டா... "ஏம்ப்பா.. நாம செருப்பு இல்லாம நடந்தா நமக்கு அசிங்கம் கிசிங்கம் ஒட்டும்... அதனாலதான் செருப்புப் போட்டு நடக்குறோம்... இதுல அவங்களுக்கு என்னப்பா அசிங்கம்...?"
கண்ணெல்லாம் கலங்கிப் போச்சு மாணிக்கத்துக்கு... மகளை இறுக நெஞ்சோடு அணைத்துக் கொண்டே திரும்பிய அவர், அந்த மீசைக்காரனை ஒரு மாதிரியாக பார்த்தார்.
அந்தப்பார்வை "இதுக்கு என்னங்கடா பதில் சொல்லுறீங்க...?" என்று கேட்பதுபோல் இருந்தது.







Back to top Go down
 
~~ Tamil Story ~~ கேள்விகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil story ~~ டி.என்.ஏ
»  == Tamil Story ~~ பி ன் வா ச ல்
» ~~ Tamil Story ~~ பசி
» -- Tamil Story ~~ ஆ!
» ~~ Tamil Story ~~ பரிச்சயக்கோணங்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: