BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in ~~ Tamil Story ~~ தாகம்   Button10

 

  ~~ Tamil Story ~~ தாகம்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

 ~~ Tamil Story ~~ தாகம்   Empty
PostSubject: ~~ Tamil Story ~~ தாகம்     ~~ Tamil Story ~~ தாகம்   Icon_minitimeWed Mar 30, 2011 4:01 am

~~ Tamil Story ~~ தாகம்




“வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும் டீ, காபி சாப்புட்றவங்கள்லாம் சாப்புடலம்”

நல்ல நண்பகல் வெய்யில். இந்த நேரம் பயணிகள் டீ, காபி சாப்பிடுகிறார்களோ இல்லையோ உணவு விடுதிப் பையன் பழக்கத்துக்கு ஆட்பட்டவன் போல பேருந்தின் பக்க வாட்டுகளைத் தட்டி சன்னலோரமாக சொல்லிக் கொண்டே போனான்.

பயணிகள் அவரவர் பொருட்களையும் பத்திரப்படுத்தி வைத்தோ, பக்கத்திலிருப்பவரிடம் சொல்லியோ பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். இவன் மடியில் வைத்தருந்த ரெக்சின் பையை எடுத்து சீட்டில் வைத்து முன்பின் பக்கவாட்டு இருக்கைகளைப் பார்த்தான். எல்லாம் காலியாக இருக்க கொள்ளச் சொல்ல வாய்ப்பின்றி பையைத் தோளில் மாட்டிக் கொண்டே திரும்பியவன் இருக்கையை யாராவது பறிமுதல் செய்டுவிடுவார்களோ என கால்சட்டைப் பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து அடையாளமாக வைத்துவிட்டு கீழே இறங்கினான்.

கீழே புழுதி பறக்கும் மண்பரப்பில் ஏற்கெனவே வந்து நின்ற பேருந்துகள் எதிரும் புதிருமாக நிறுத்தப்பட்டிருந்தன. தள்ளி கீற்று வேய்ந்த தலைகீழ் ‘ப’ வடிவில் அமைக்கப்பட்ட தனியார் உணவு விடுதி. ஒரு பக்கம் தேநீர், ஒரு பக்கம் குளம்பி, ஒரு பக்கம் மரநிழலில் இளநீர் என்ற கூட்டம் தனித்தனியாக முண்டியடிக்க வியாபாரம் பரபரத்துக்கொண்டிருக்கிறது.

சுற்றிலும் வேடிக்கை பார்த்தவாறு பேருந்து ஓரமிருந்த நிழலில் நின்றபடியே என்ன சாப்பிடலாம் என்பவனைப் போல சிறிது நேரம் யோசனை செய்தான். வழக்கமாக இவன் தேநீர் தான் குடிப்பான் என்றாலும் இந்த முறை குளிர்பானங்கள் பக்கமாக இவன் கவனம் திரும்பியது.

இந்த குளிர்பான விளம்பரங்களை, பாட்டிலைத் திறந்ததும் நுரையோடு பொங்கி வழிகிற மாதிரி, நீச்சல் உடையில் கடற்கரையில் பெண்ணும் ஆணும் சுவைத்துப் பருகி கும்மாளம் அடிக்கிற மாதிரி, சோர்ந்து களைத்தவர்கள் இந்த பானத்தைக் குடித்து புத்தணர்ச்சி பெறுகிற மாதிரி தொலைக்காட்சியில், செய்தித்தாள்களில், இதழ்களில் இவன் பலமுறை பார்த்திருக்கிறான்.

அப்போதெல்லாம் ஒருமுறையாவது இதைக் குடித்துப் பார்த்து விட வேண்டும் என்று நினைத்ததுண்டு என்றாலும் வேலைவெட்டி எதுவுமில்லாமல் அவ்வப்போது எதற்காவது மனுப்போட வேண்டுமென்றாலே பெற்றோரிடம் காசு வாங்கி செலவு செய்து கொண்டிருக்கும் நிலையில் எங்கே 8 ரூபாய் 10 ரூபாய் கொடுத்து இதை வாங்கிக் குடிப்பது என்று அதுபற்றி பொருட்படுத்திக் கொள்ளாமல் கடைகளில பாட்டில்களைப் பார்ப்பதோடு பேசாமல் இருந்து விடுவான்.

ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. சொந்த கிராமத்திலிருந்து ஒரு 100மைல் தள்ளியிருந்த நகரத்தில் சொற்ப சம்பளத்தில் கொஞ்சம் சுமாரான வேலை. வீட்டிற்கு கொடுக்குமளவுக்கு இல்லை என்றாலும் வீட்டை எதிர்பார்க்காமல் வாழலாம் என்கிற நிலை. முதல் மாதம் சம்பளத்தில் அம்மா அப்பாவுக்கு புடவை, வேட்டி, தங்கச்சிக்கு சுடிதார் தினபண்டங்கள் வாங்கி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். இந்த ஒரு முறை இதன் ருசி எப்படியிருக்கிறது என்று குடித்துப் பார்க்க மட்டும் இதற்காகச் செலவு செய்வதில் தவறில்லை என்று நினைத்துக் கொண்டான்.

பாக்கெட்டிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு கிட்டே நெருங்கினான். கருப்புத் திரவம் நிரப்பியிருந்த ஒரு பாட்டிலைக் காட்டி நோட்டை வாங்கிப்போட்டு சில்லென்று ஐஸ் பெட்டியிலிருந்து பாட்டிலை எடுத்து திறந்து அதில் உறிஞ்சியைச் செறுகி நீட்டிய கடைக்காரன், கூடவே தந்த மீதி சில்லரையைப் பார்த்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நியாயமான மீதிக்கு மேலே சில்லரை கூடுதலாக இருப்பதைப் பார்த்து கடைக்காரன் எதுவும் ஞாபக மறதியாகத் தருகிறானோ என்று யோசித்தான். கடைக்காரனைக் கேட்பதா அல்லது கிடைத்த வரைக்கும் லாபம் என்று போட்டுக் கொள்வதா என்கிற ஒரு கணம் தயங்கினான். மனச்சாட்சி இடம் கொடுப்பதாயில்லை. “என்ன கூடுதலா இருக்குது” என்றான்.

அதுவா என்று சிரித்த கடைக்காரன் சலுகை விலை. “ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ்” என்று சொன்னான். இவன் திகைத்து துணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருள்களில் தான் இப்படி இருப்பைக் காலி செய்ய தள்ளுபடிவிலையில் தருவார்கள். குளிர்பானத்தில் கூடவா இந்த விலையில் என்றால் அவ்வப்போது குடிக்கலாமே என்று மகிழ்ச்சியுடன் சில்லறையை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு திரும்பினான்.

சில்லென்று கையில் உறையும் பாட்டிலுடன் கூட்டத்தை விட்டு விலகி ஓரம் ஒதுங்கியவனுக்கு ஏதோ மகத்தான வாழ்க்கை லட்சியமே நிறைவேறியது போல மனதில் ஒரு பெருமிதம் தோன்றியது. மெல்ல உறிஞ்சியில் உதட்டை வைத்து வாய் கொள்ளுமளவுக்கு இழுத்தான். வாய் முழுவதும் நிரம்பிய பானத்தில் சுவையும் கரியமில வாயுவின் இதமான நெடியும் அசாதாரண உற்சாகத்தையும், நிறைவையும் அளிக்க, அதன் சுவையை அனுபவித்தபடியே கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி அதை உள்ளே இறக்கினான். இந்த இறக்கத்தில் இவனுக்குள் ஒரு அசாதாரண குதூகலம் தோன்றியது. விளம்பரங்களில் வரும் ஆடவர்கள் போலவே இவனும் அந்தக் குளிர்பானத்தைக் குடிக்கிறான். இவன் கையிலும் இக்குளிர்பானம் இருக்கிறது. இவனும் அந்தக் குளிர்பானக் கூட்டத்தில் ஒருவனாக மாறிவிட்டான். இவனுக்கு பெருமையும் சந்தோஷமும் பிடிபடவில்லை. இந்த பூரிப்பில் அடுத்து உறிஞ்ச இவனுக்கு மனம் இடம் தரவில்லை.

கையில் குளிர்பானப் பாட்டிலோடு நிற்கும் இவனை, இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்துவைக்க இவனுக்குத் தெரிந்து அங்கு யாருமேயில்லை என்பது திடீரென்று இவனுக்கு வருத்தத்தைத் தந்தது. இவனும் இந்த குளிர்பானத்தைக் குடிக்கிறான் என்பது யாருக்குமே தெரியாமல் எந்தப் பதிவுமே இல்லாமல் போய்விடும் போலிருந்தது. இவன் இந்த குளிர்பானம் குடித்தான் என்பதற்கு எந்த சாட்சியமே இல்லாமல் போய்விடும் என்பதை நினைக்க இந்த உற்சாகமே கரைந்தது மாதிரியிருந்து. யாராவது ஊர்க்காரர்கள், தெரிந்தவர்கள், போனவர்கள், நண்பர்கள் இந்த நேரம் வந்தால் தேவலாம் என்று நினைத்தான்.

பார்க்கிறவர்கள் ஊர்போய்ச் சொன்னால் இவன் குளிர்பானம் குடித்ததற்கு ஒரு பேறு இருக்கும். இவனும் குளிர்பானம் குடித்தான் என்று ஒரு பதிவும் இருக்கும், ஊரிலும் இவன் மதிப்பு உயரும். எல்லோரும் இவனைப் பெருமையோடு பார்ப்பார்கள். ஆனால் அப்படி எந்த முக்கியத்துவம் இல்லாமல் எல்லாம் வீணாகப் போய்விடும் போல் அல்லவா இருக்கிறது.

கையில் பிடித்த பாட்டிலுடன் ஏக்கத்தோடு சுற்று முற்றும் பார்த்தான் பிறகு பாட்டிலைப் பார்த்து ஈடுபாடு இல்லாமல் மீண்டும் ஒரு மிடறு குடித்தான். அதற்கு மேல் இவனுக்கு குடிக்கப் பிடிக்கவில்லை. இருக்கிற கொஞ்சத்தையும் குடித்து பாட்டிலை காலியாக்கிவிட்டால் அப்புறம் இவன் இந்த குளிர்பானம் குடித்ததற்கு யார்தான் சாட்சி? இவனாகப் போய் தான் குளிர்பானம் குடித்ததை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? சென்னால்தான் நம்புவார்களா..? வேண்டியதை வாங்கிக் கொண்டு திரும்பும் விற்பனை மையங்களில், நெருக்கமாய் அடைத்து நிற்கும் பேருந்துகளில், புதிதாக வந்து நிற்கும் பேருந்திலிருந்து இறங்கும் மனிதர்களில் இவன் தெரிந்த முகங்களுக்காகத் தேடிக் கொண்டிருந்தான்.

காத்திருப்பதில் நேரமாகி இவன் வந்த பேருந்து கிளம்பி விடப்போகிறது என்று எச்சரிக்கையுடன் அதையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தவன் நம்பிக்கையிழந்து அடுத்து உறிஞ்சக் குனிந்தபோது “டாய் ரகு” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான்.

பன்னிரண்டாம் வகுப்புவரை கூடப் படித்த சொந்த ஊர்க்கார நண்பன் தற்போது வெளியூரில் உயர் படிப்பு படித்துக்கொண்டிருப்பவன் இவனை மாதிரியே தோளில் மாட்டிய பையும் கையில் வெட்டி சுரண்டிப் போடப்பட்ட இளநீர்வழுக்கையுமாக நின்றான்.

நண்பனைப் பார்க்க இவனுக்குள் பிடிபடாத பெருமையும் நிறைவும் பொங்கியது. பாட்டிலை சற்று நெஞ்சு உயரத்துக்கு நண்பனுக்கு நன்கு தெரிகிற மாதிரித் தூக்கிப் பிடித்தப்படியே “நீ எங்க ஏது” என்று குசல விசாரிப்பான உரையாடலின் ஊடே சட்டென்று நண்பன் குறுக்கிட்டான்.

“ஐயய்ய... இதெல்லாமா வாங்கிக் குடிக்கிற ஏற்கெனவே இதெல்லாம் கெமிக்கலு, ஒடம்புக்குக் கெடுதி, யாரும் வாங்கிக் குடிக்காதீங்கன்னு டாக்டருக்கல்லாம் சொல்ல, இப்ப சமீபத்துல போன வாரம் வேற, இந்த குளிர்பானத்துல பயிர் பாசனங்களுக்குத் தெளிக்கிற பூச்சி மருந்தெல்லாம் வேற அளவுக்கு அதிகமா இருக்குதுன்னு ஆராய்ச்சியில சொல்லியிருக்கிறான். அதப் போய் வாங்கிக் குடிக்கிற...” என்றான்.

இவனுக்கு முகம் மாறியது. இதுவரை நிலவிய பெருமிதமெல்லாம் நொறுங்கிச் சிதறிய மாதிரியிருந்தது. நண்பன் கண்ணில் படாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. என்ன செய்வது என்று புரியாது குழப்பதுடன் நிற்க நண்பன் சொன்னான்.

“குடிச்ச வரிக்கும் போதும் மொதல்ல அத கீழ ஊத்து. நம்ப ஊர் தண்ணிய எடுத்து நம்ப கிட்டயே வித்து அவன் காசாக்கறது இல்லாம பணம் குடுத்து சூனியம் வச்சிக்கிற மாதிரி நம்பளா காசு குடுத்து வாங்கி ஏன் நாம்பளா நம் ஒடம்ப கெடுத்துக்கணும்” என்று ‘இந்தா’ என்று வழுக்கையை இவன் பக்கமாக நீட்டினான்.

முன்னாடியே குடித்துத் தொலைத்திருந்தாலும் யார் கண்ணிலும் படாமலாவது போயிருக்கும் இப்போது காசையும் அழுது பானத்தையும் குடிக்க முடியாமல் கீழே ஊற்ற நேர்ந்ததாக வருத்தப்பட்டு நின்றான்.

இவன் வந்த பேருந்தின் ஒட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்து ஒலி எழுப்ப குழப்பத்துடன் “நான் வந்த வண்டி எடுக்கறான். ஊர்ல வந்து பார்ப்பம்” என்று சொல்லி புறப்பட யத்தனித்தவன் நண்பன் வற்புறுத்த கொஞ்சம் வழுக்கையை எடுத்து வாயில் போட்டபடியே பேருந்தை நோக்கி நடந்தான்.






Back to top Go down
 
~~ Tamil Story ~~ தாகம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  ~~ Tamil Story ~~ டி.என்.ஏ
» ~~ Tamil Story ~ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
» ~~ Tamil Story ~~ மரு
» == Tamil Story ~~ பு ற ப் பா டு
» ~~ Tamil story ~~ மிருகாதிபத்தியம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: