BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~ சூரப்பன் வேட்டை   Button10

 

 ~~ Tamil Story ~ சூரப்பன் வேட்டை

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~ சூரப்பன் வேட்டை   Empty
PostSubject: ~~ Tamil Story ~ சூரப்பன் வேட்டை    ~~ Tamil Story ~ சூரப்பன் வேட்டை   Icon_minitimeFri Apr 01, 2011 4:10 am

~~ Tamil Story ~ சூரப்பன் வேட்டை



ஏமாளித் தேசம் கடும் வறட்சியில் திண்டாடியது. தேசத்தின் வயல்களெல்லாம் காய்ந்து பாளம் பாளமாக வெடித்திருந்தன. வறுமையில் மக்கள் நண்டு நத்தைகளைப் பிடித்துத் தின்றும், எலிக்கறி சாப்பிட்டும் நாளைக் கழித்தனர். பலர் பஞ்சம் பிழைக்க அண்டை நாடுகளை நோக்கிப் புறப்பட்டனர். சிலர் எந்த வழியும் புரியாமல் தற்கொலை செய்து கொண்டு மாண்டனர்.

ஏமாளித் தேசத்தின் மேற்கே ஏமாற்றுத் தேசம் இருந்தது. இந்த இரு தேசங்களையும் இணைத்து பழைமை மிகுந்த ஒரு ஆறு ஓடியது. இது ஏமாற்றுத் தேசத்தில் உற்பத்தியாகி, ஏமாளித் தேசத்துள் புகுந்து, பல்வேறு கிளைகளாகப் பிரிந்து ஏமாளித் தேசத்திற்கு வளமூட்டிக் கடலில் கலந்தது. காலம் காலமாக இரு தேசங்களும் பகிர்ந்து கொண்டு வந்த இந்த ஆற்று நீரைச் சமீபத்தில் ஏமாற்றுத் தேசம் அணைக்கட்டுகள் பல கட்டியும் நீர்த் தேக்கங்கள் பல அமைத்தும் ஏமாளித் தேசத்திற்குச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது. இந்த அநியாயத்தைப் பலமுறை கேட்டும் ஏமாற்றுத் தேசம் எதற்கும் செவிசாய்க்காத நிலையில் ஏமாளித் தேசம் சிற்றரசுகளுக்குள் ஏற்பட்ட இப்பிரச்சினையைத் தீர்க்க வஞ்சகப் பேரரசிடம் முறையிட்டது. வஞ்சகப் பேரரசு நடவடிக்கை எடுப்பதாய்க் கூறி நாளைக் கடத்தியதே தவிர ஏமாளித் தேசத்திற்குரிய நீரைப் பெற்றுத்தர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஏமாளித்தேச மக்கள் தங்களுக்குள்ள நீரைப் பெற்றுத்தரவும், முறைப்படி நிர் கிடைக்காததால் வறட்சிக்கு நிவாரணம் கோரியும், பயிர்கள் காய்ந்து கருகிப் போனதால் வாங்கிய பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யக் கோரியும் ஏமாளித்தேச அரசையும் வஞ்சகப் பேரரசையும் வலியுறுத்தி போராட்டங்கள் தொடங்கினர்.
ஏமாளித் தேச ஆட்சியாளர்களோ மக்களைப் பார்த்து, கவலைப்படாதீர்கள் சூரப்பனை விரைவில் பிடித்து விடுவோம் என்றார்கள். சூரப்பனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம், சூரப்பனை இதில் ஏன் இழுக்க வேண்டும் என்று ஏமாளித் தேச மக்களுக்குப் புரியவில்லை என்றாலும் ஆட்சியாளர்கள் அவ்வப்போது இதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஏமாளித் தேசத்தையும், ஏமாற்றுத் தேசத்தையும் இணைக்கும் எல்லைப் பகுதியில் இரண்டு தேசத்தையும் உள்ளடக்கிப் பலகாத தூரம் நீண்ட மிகப் பரந்த காடு ஒன்று இருந்தது. பத்து தப்படிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்றே தெரியாத அளவுக்கு முட்புதர்களும், செடிகொடிகளும், மரங்களும் மண்டி வளர்ந்து அடர்ந்து கிடக்கும் காடு அது. இந்த வனப்பரப்பில் தான் சூரப்பன் வாழ்ந்து வருவதாகச் சொல்லப்பட்டது.

மலைப் பகுதிகளையொட்டிய ஒரு சிறுகுக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் சூரப்பன் பிறந்திருந்தாலும் சிறு வயதிலிருந்தே அவன் வன வாழ்க்கையை மேற்கொண்டு காட்டுவாசியாகவே மாறிவிட்டதில் காட்டில் கரடி வேட்டையாடி அதன் ரோமம் பல், தோல் முதலானவற்றைக் கள்ளத் தனமாகக் கடத்தியும் காட்டு மரங்களை கண்டமேனிக்கு வெட்டி வீழ்த்தியும், சூரப்பன் வாழ்ந்து வருவதாகவும், இதற்கு இடையூறாக இருக்கும் வனச் சேவகர்களையும், காவலர்களையும் அவன் கொடூரமாகக் கொன்று போடுவதாகவும் காட்டின் இண்டு இடுக்கு, மூலை முடுக்குகளெல்லாம் அவனுக்கு நன்கு அத்துப்படியாகி விட்டதால், காட்டில் அவன் எங்கு இருப்பான், எங்கு இல்லாமலிருப்பான் என்று அறிய முடியாதபடிக்கு மாயாவிபோல் திரிந்து வருவதாகவும் அவன் அசகாய சூரன் என்றும் எந்தக் கொம்பனாலும், எப்படிப்பட்ட காவல் படையாலும் அவனைப் பிடிக்க முடியாது என்றும் இதனாலேயே யார் கையிலும் பிடிபடாமல் அவன் திரிந்து இவற்றையெல்லாம் விற்று வருவதாகவும் ஆட்சியாளர்கள் சொன்னார்கள்.

மலைவாழ்ப் பகுதி மக்கள் கூற்றோ வேறு விதமாக இருந்தது. ஆட்சியாளர்கள் சொல்லுமளவுக்கு சூரப்பன் அவ்வளவு கொடுமையானவன் இல்லை என்றும், ஆட்சியாளர்களுக்குத்தான் கொடூரமானவனே தவிர, சாதாரண மக்களுக்கு அவன் நல்லெண்ண மின்ன பரோபகாரி என்றும் சொன்னார்கள். தவிர அவன் மலைவாழ் மக்கள் பால் பாசமும் பரிவும் கொண்டவனாக, அவர்களது இல்லங்களில் நடைபெறும் நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டு உதவுவதாகவும் சொன்ன அவர்கள் சூரப்பனைப் பிடித்து எங்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. என்றாலும் ஆட்சியாளர்கள் தான் தங்களுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் சூரப்பனைப் பிடித்து விடுவதாகச் சொல்வதுடன், ஆட்சியாளர்களால் சூரப்பனைப் பிடிக்க முடியாமலிப்பதற்குக் காரணம், நாட்டிலிருந்து கொண்டே அவனுக்கு உதவும் முக்கியப் புள்ளிகள் தான், சூரப்பனை இத்தொழிலுக்கு இழுத்து விட்டு, அதில் அவனுக்கு ஆசை காட்டி அவனைக் கருவியாக வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள்தான், இவர்களே சில வனச் சேவகர்களையும், காவலர்களையும் தங்கள் கையாட்களாக்கிச் சூரப்பனுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள், இவர்கள் உதவி இருக்கும்வரை சூரப்பனைப் பிடிப்பது என்பது பகற்கனவாகவே இருக்கும் என்று சொன்னார்கள்.

என்றாலும் சூரப்பனைப் பிடிப்பது பற்றியே ஆட்சியாளர்கள் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தார்கள். சூரப்பனைப் பிடிக்க முதலில் ஏமாற்றுத் தேசமும், ஏமாளித் தேசமும் தடாலடிப் படை என்கிற ஒரு படையை அமைத்தது. தடலாடிப்படை என்பது, சாதாரணக் காவல் படைகளுக்கு உள்ளது போன்ற கட்டுப்பாடுகளோ விதிமுறைகளோ ஏதுமின்றி எதையும் தடலாடியாகச் செய்யும் ஒரு படையாக இருந்தது. இப்படையாட்கள் குதிரை மீதேறி அதன் குளம்புகள் ஒலிக்க புழுதியைக் கிளப்பியபடியே, வனப்பகுதியின் பல இடங்களில் வலம் வந்தார்கள். சந்தேகப்படும் இடங்களில் குதிரைகளை நிறுத்தி, அப்படியே கூட்டமாக இறங்கி தோளில் மாட்டிய துப்பாக்கிகளுடன் தோல் காலணிகள் சடசடக்க நாலாபுறமும் ஒடுவார்கள். பிறகு வெறுங்கையோடோ அல்லது யாரையாவது பிடித்து இழுத்துக் கொண்டோ திரும்புவார்கள்.

தடாலடிப் படைக்கு சூரப்பனைப் பிடித்ததோ இல்லையோ, மலைவாழ்ப் பகுதிமக்கள் வளர்த்து வந்த ஆடு கோழிகளைப் பிடித்தது. மலைப் பகுதித் தயாரிப்பான கள்ளச் சாராணத்தைப் பிடித்து மூச்சு முட்டக் குடித்து கோழிக் குருமாவும் ஆட்டுக்கறி வறுவலும் தின்று திளைத்தது. சரக்கு தினவெடுக்க வயது வித்தியாசமின்றி மலை வாழ்ப்பகுதிப் பெண்கள் பலரைத் தங்கள் பசிக்கு இரையாக்கியது. இது போக விசாரணை என்கிற பெயரில் இழுத்து வந்தவர்களை கொடுமையாகச் சித்ரவதை செய்தது. அல்லது ஈவு இரக்கமின்றிக் கொன்று போட்டது.

இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட தடாலடிப் படையினரை அவன் பதிலுக்குக் கொன்று போட்டான். தடாலடிப் படைப் பகுதிகளில் கண்ணி வெடி வைத்தான். இதனால் தடாலடிப் படையினரின் இம்சை மலைவாழ் மக்கள் பால் கூடுதலாகியது. தாங்காமல் சூரப்பன் நடமாட்டம் பற்றித் தங்களுக்குத் தெரிந்த தகவல்கள் சிலவற்றை மக்கள் தடாலடிப் படையினருக்குச் சொல்ல, காவலர்களுக்கு மக்கள் உளவு சொல்வதாக சூரப்பன் சந்தேகிக்க, சந்தேகப்பட்ட நபர்களைத் தன்வளையத்திற்குள் கொண்டு சென்று கொன்று போட மக்கள் என்ன செய்வது என்று புரியாமல் ‘இருதலைக் கொள்ளி’ எறும்பாய்த் தவித்தனர். தடாலடிப்படையின் அத்துமீறல் பற்றி அரசுக்கும் புகார் தெரிவித்தார்கள்.

இதற்கிடையில் ஏமாற்றுத் தேசத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவரை அவர் வீட்டிலிருந்தே சூரப்பன் கடத்தி வந்து தன் காலடியில் வைத்து பல்வேறு கோரிக்கைகளுடன் ஏமாற்றுத் தேசம் ஏமாளித் தேசத்திற்கு உரிய நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கோரியதுடன் தடாலடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என்று கோர அது இருதேச அரசுகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சந்தர்ப்பத்திலும் ஏமாளித் தேசத்தைத் சார்ந்த முக்கியப் பிரமுகர்களே சூரப்பனிடம் தூது போய் பேச்சுவார்த்தை நடத்தி அம்முக்கியப் புள்ளியை மீட்டு அவர் வீட்டில் விட்டு வந்தார்கள். சூரப்பனுக்கு ஏற்பட்டதொரு கடும் நெருக்கடி காரணமாகவே இக்கடத்தல் நடத்தப்பட்டதாகவும் பெருந்தொகை இதில் கைமாறியுள்ளதாகவும் எங்கும் பேச்சு அடிப்பட்டது.

இருதேச அரசுகளுக்குமே இது பெருந்தலைவலியாகியது. சூரப்பன் உயிரோடு இருக்கும்வரை இந்தத் தலைவலி ஒயாது என்று கருதிய இரு தேச அரசுகளுமே சூரப்பனை எப்படியாவது ஒழித்துவிட முடிவு செய்து வஞ்சகப் பேரரசின் உதவியை நாடின. சிற்றரசுகளின் கோரிக்கையை ஏற்ற பேரரசும் தன் பங்கிற்கு ஒரு சிறப்புப் படையை அனுப்ப இந்த சிறப்புப்படை எப்படியும் சூரப்பனைப் பிடித்து வரும் என்று நம்பப்பட்டது.

நவீனரகப்போர் ஆயுதங்களையும் இரவிலும் தெளிவாகக் காணத்தக்க தொலை நோக்கிகளுடனும் சூரப்பன் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் முகாமிட்ட இச்சிறப்புப்படை இரண்டு மாதங்கள் கழித்து முகாமைக் காலி செய்து வஞ்சகப் பேரரசின் தலைநகர் நோக்கித் திரும்பியது. இது பற்றிச் செய்தி திரட்டுவோர் கேட்டதற்கு சூரப்பன் எங்கிருக்கிறான் என்று எங்களுக்குச் சொன்னால் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்திப் பிடிப்பதுதான் தங்கள் வேலையே தவிர, அவன் எங்கிருக்கிறான் என்று தேடுவது தங்கள் வேலையல்ல, எனவே சூரப்பன் எங்கிருக்கிறான் என்று கண்டு பிடித்து எங்களுக்குச் சொன்னால் நாங்கள் வந்து அவனைப் பிடித்துக் கொடுப்போம் என்றும் சிறப்புப் படையின் தலைவர் தெரிவித்ததாகச் சொன்னார்கள். இதற்கு மேல் சூரப்பனைப் பிடிக்க வஞ்சகப் பேரரசு மையப் படையை அனுப்பி வைக்குமா என்று கேட்டதற்கு மையப்படை என்பது நாடுகளுக்கிடையேயான போருக்குத் தான் பயன்படுத்தப்படுமே தவிர சாதாரண ஒரு குற்றவாளியைப் பிடிக்க அதைப் பயன்படுத்த மாட்டார்கள். இதற்கெல்லாம் மையப்படையைப் பயன்படுத்துவது அதன் தரத்தை தாழ்த்துவதாகி விடும். படையதிகாரிகளும் அதற்கு ஒப்ப மாட்டார்கள் என்றார்கள்.

ஆக, பேரரசுப் படையாலும் சூரப்பனைப் பிடிக்க முடியவில்லை என்கிற நிலையில் மீண்டும் சிற்றரசுகளே சூரப்பனைப் பிடிக்கும் முயற்சியைத் தொடர்ந்தன. தடாலடிப் படையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முயற்சி மேற்கொள்ளாத நிலையில் சூரப்பனை உயிருடனோ பிணமாகவோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தடாலடிப் படையினருக்கும் சூரப்பனைக் கண்டதும் சுடவோ, சுட்டுப் பிடிக்கவோ கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு தடாலடிப் படைத் தலைவர்களையும் அரசு அவ்வப்போது புதிது புதிதாக நியமித்தது.

பொறுப்பேற்கும் ஒவ்வொரு அதிகாரியும் தாங்கள் எப்படியும் சூரப்பனைப் பிடித்து விடுவோம் என்று சூளுரைத்ததுடன் சூரப்பனை மிகவும் கிட்டத்தில் நெருங்கி விட்டதாகவும் இன்னும் இரண்டொரு தினங்களில் சூரப்பனைப் பிடித்து விடுவோம் என்றும் அறிக்கை விட்டு இதற்கான ஆதாரங்களையும் அவ்வப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

தேடுதல் வேட்டையின் போது ரம்மியமான காலைப் பகுதியில் வீசும் மெல்லிய இளம் காற்றில் இயற்கைக்கு மாறான ஏதோ ஒரு துர்நாற்றமும் கலந்து வருவதாக உணர்ந்த தடாலடிப் படைத்தலைவர் தன்னுடன் வந்த படையாட்களைப் பார்த்து யாராவது காலைக்கடன் முடிக்காமலிக்கிறீர்களா என்றார். எல்லோரும், இல்லை ஐயா முடித்து விட்டோம் என்றனர். அதிகாரி மீண்டும் தீவிர யோசனையுடன் சில தடவை மூக்கை உறிஞ்சி மோப்பம் பிடித்து இது ‘யார் விட்டதாய் இருக்கும்’ என்று சிந்தையில் ஆழ, சட்டென்று அவர் முகம் மலர்ச்சியடைந்தது. அடுத்த நாள் செய்தியேட்டில் இது பற்றிய முழுவிவரமும் வெளியாகியிருந்தது. தேடுதல் வேட்டையின் போது தடாலடிப் படைத் தலைவர் உணர்ந்த துர்நாற்றம் சாதாரண காட்டு விலங்குகள் விட்டதாகச் சொல்ல முடியாது, மனிதர்கள் விட்டதாகவே இருக்க முடியும் என்றும், அதேவேளை இது பருப்பு சாம்பார் காய்கறி உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருபவர்கள் விட்டதாகவும் தெரியவில்லை. காடை, கௌதாரி, மான், முயல், உடும்பு அயிட்டங்களாகவே தெரிகிறது என்றும், மனிதர்களிலும் நாட்டில் வாழ்பவர்கள் இதுபோன்று விட சாத்தியப்படாது, தொடர்ந்து காட்டில் வாழ்பவர்களுக்கே இது சாத்தியம் என்றும் எனவே இது சூரப்பனோ அல்லது அவனது கும்பலைச் சேர்ந்தவர்களோ விட்டதாகத்தான் இருக்க முடியும் என்றும் சொன்ன அவர் இதை உறுதி செய்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட இந்த அயிட்டத்தை ஆய்வுக்காகக் கண்ணாடிக் குப்பியில் அடைத்து வல்லுநர் குழுவுக்கு அனுப்பியுள்ளதாகவும், அது சூரப்பன் கும்பல் விட்டதுதான் என்பது உறுதியானால் இன்னும் ஆறுமாதத்திற்குள் அவனைப் பிடித்து விடுவது நிச்சயம் என்றும் அறிவித்திருந்தார்.

இவ்வாறே அடுத்தடுத்து வந்த அதிகாரிகளும் சூரப்பன் கும்பல் வெளியேற்றியதாக நம்பப்பட்ட நீர்ம, திண்மப் பொருட்களை, அஃதாவது காய்ந்த வனப் பகுதியில் திட்டுத் திட்டாகத் தெரிந்த ஈரப்பகுதியைப் பார்த்து, பிடித்து வைத்த பிள்ளையார் போல் கூம்பிய முனைகளுடன் ஆங்காங்கே இறக்கப்பட்டிருந்த சரக்குகளைப் பார்த்து இதுவும் சூரப்பன் கும்பலின் உபயமாய்த் தான் இருக்கும் என்று நம்புவதாகவும் இவை உறுதியாகும் பட்சத்தில் சூரப்பன் கும்பலைப் பிடிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இப்படியாகத் தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டிருக்க அடைமழை பெய்து கொண்டிருந்த ஒரு நாளின் நள்ளிரவில் ‘அரசு முரசம்’ அறையும் ஒலி கேட்டது. ஏதோ முக்கிய சேதி என்று மக்கள் திரள சூரப்பனும் அவனது கும்பலைச் சேர்ந்தவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்தது. மக்கள் நம்ப மாட்டாமல் வியந்தும் சந்தேகத்தோடும் கேள்விக்குறி தோன்றும் முகத்தோடும் ஒருவரை யொருவர் நோக்க தடாலடிப் படையினர் சூரப்பன் மரணத்தை உறுதிசெய்து வாணவேடிக்கைகள் நடத்தியும் பட்டாசுகள் கொளுத்தியும் சூரப்பன் மறைவையும் தங்கள் வெற்றியையும் கொண்டாடிக் காட்டினார்கள்.

தடாலடிப் படைத்தலைவர் தான் சூரப்பனைக் கொன்ற விதம்பற்றி செய்தியாளர்களுக்கு இவ்வாறு அறிக்கை தந்தார். சூரப்பன் சிலகாலமாகவே நோய் வாய்ப்பட்டிருக்க அக்கும்பலுக்குள் அடுத்து யார் தலைமைப் பொறுப்புக்கு வருவது என்று போட்டி நிலவியதாகவும், சூரப்பன் சிகிச்சைக்காக காட்டை விட்டு வெளியே வந்து மருத்துவம் பார்க்க முயன்றதாகவும், இதை உளவுப் பிரிவின் மூலம் அறியவந்த தடாலடிப் படைத்தலைவர் தம்படையாட்களை அனுப்பி அவனது நம்பிக்கையைப் பெற்று அவர்களே பல்லாக்குத் தூக்கிகளாகக் இருந்து காட்டை விட்டு அவனை வெளிக் கொண்டு வந்ததாகவும், வெளிவந்த அவனைக் சரணடையக் கேட்டபோது அவன் சரணடையாமல் தடாலடிப் படையைப் பார்த்துச் சுடமுயன்றதாகவும் தற்காப்புக்காக தடாலடிப்படையும் சுட சூரப்பனும் அவனது ஆட்களும் குண்டடி பட்டு மாண்டு போனதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

தடாலடிப்படையின் தன்னிகரற்ற சாதனையாக சூரப்பன் படுகொலையை, அரசு பாராட்டி மகிழ, செய்தியேடுகள் பலவும் ‘சூரப்பவதம்’ என்றும் ‘சூரப்ப சம்ஹாரம்’ என்றும் சித்தரித்து சூரப்பன் மறைவைக் கொண்டாடின.

ஏற்கெனவே ஆட்சி நடத்தியவர்கள், நடத்தாதவர்கள் எனப் பாகுபாடியின்றி அனைத்து முக்கியபுள்ளிகளும் சூரப்பன் மறைவிற்கு தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.

சூரப்பனால் கடத்தப்பட்டு 108 நாட்கள் பிணைக் கைதியாக இருந்து வெளிவந்த போது சூரப்பன் தன்னை மிகவும் பண்போடு நடத்தினான் எனவும் சூரப்பன் மிகச் சிறந்த மனிதாபிமானி எனவும், அப்போது பாராட்டிப் பேசிய ஏமாற்றுத் தேச முக்கியப் புள்ளி ‘அப்பாடா ஒரு மனித மிருகம் ஒழிந்தது. எனக்கு மிக மகிழ்சசி. இனி என்சொந்த வீடில் பயமின்றி வாழ்வேன்’ என அறிக்கை விட்டார்.

சூரப்பன் வேட்டையில் தனக்கு வெற்றிகிட்ட வேண்டும் என்று அம்மன் கோயிலுக்கு வேண்டுதல் செய்துகொண்டிருந்த தடாலடிப்படைத் தலைவர் தமது வேண்டுதல்படி அம்ன் கோயிலுக்குப் போய் கை நகங்களை வெட்டிக் காணிக்கை செலுத்திவிட்டு வந்தார். அத்துடன் சூரப்பன் காட்டிலிருந்து ஏமாளித் தேசத் தலைநகருக்குத் தன் படைபரிவாரங்களுடன் கால்நடையாகவே பாதயாத்திரை செல்பவராகவும் அறிவித்தார்.

சூரப்பனைச் சுட்டு வீழ்த்தி காகசம் நிகழ்த்தியமைக்காக தடாலடிப் படையினர் ஆயிரம் பேருக்கும் தலா ஆயிரம் பொற்காசுகளையும் அவர்கள் விரும்புமிடத்தில் ஒரு குடியிருப்பு மனையும் வழங்குவதாக ஏமாளித் தேச அரசு அறிவித்தது. சூரப்பன் தேடுதல் வேட்டையில் தாங்களும் பங்களிப்புச் செய்துள்ளதாகத் தெரிவித்த வனச்சேவகர்கள், எங்களுக்கும் அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க அரசு அவர்களுக்கும் பரிசு அறிவித்தது.

இதையொட்டி காவல் பிரிவுகள் பலவும் சூரப்பன் வேட்டையில்தஙகள் தங்கள் பங்களிப்பைச் சொல்லி, தங்களுக்கும் அரசு பரிசுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கத் தொடங்கின.

நாடெங்கும் அமர்க்களமாக சூரப்பன் கொலையில் பல மர்மங்கள் இருப்பதாகவும் சரணடைய விரும்பிய சூரப்பனை அநியாயமாகச் சுட்டுக் கொன்று விட்டதாகவும், அல்லது சூரப்பனை நான்கைந்து நாட்கள் முன்னதாகவே பிடித்து வைத்திருந்து சித்ரவதை செய்து கொன்று விட்டதாகவும், அல்லது காவல் படையின் பிடியில் சிக்க விரும்பாமல் தானாகவே தற்கொலை செய்து கொள்ள இறந்துபோன சூரப்பனையே தடலாடிப் படை சுட்டுக் கொன்றதாகப் பொய் கூறி பெருமை பாராட்டிக் கொள்வதாகவுமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டதுடன், தடலாடிப் படைக்கு பொற்காசுகள் பரிசளிப்பதைத் தடைசெய்யக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

ஏமாளித்தேசம் எது பற்றியும் கவலைப்படாமல் தடலாடிப்படைக்கு விழா எடுத்து பாராட்டுப் பத்திரமும் பொற்கிழியும் பரிசாக வழங்கியது. தடலாடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தங்களுக்கு வழங்கப்படாத நட்ட ஈட்டிற்காக மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட் மக்கள் இடையில் பெய்த கடும் மழையால் பாதிக்கப்பட்டு வறட்சி நிவாரண நிதியோடு வெள்ள நிவராண நிதியும் கேட்டுக் கொண்டிருந்தனர். ஏமாளித் தேச அரசு எதற்கும் செவி சாய்க்காது, காவல் படையினருக்கு பதவி உயர்வுகள் வழங்கி, படைக்குப் புதிதாக ஆள் சேர்த்துக் கொண்டிருந்தது. ஏமாளித்தேச மக்கள் நீண்ட காலம் ஏமாளிகளாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.







Back to top Go down
 
~~ Tamil Story ~ சூரப்பன் வேட்டை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ வேட்டை
» ~~ Tamil story ~~ டி.என்.ஏ
»  == Tamil Story ~~ பி ன் வா ச ல்
» ~~ Tamil Story ~~ பசி
» -- Tamil Story ~~ ஆ!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: