BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~ யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்   Button10

 

 ~~ Tamil Story ~ யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~ யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்   Empty
PostSubject: ~~ Tamil Story ~ யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்    ~~ Tamil Story ~ யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்   Icon_minitimeFri Apr 01, 2011 4:18 am

~~ Tamil Story ~ யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்




முள் படுக்கையில் உறங்குவது எப்படி இருக்கும் என்று அன்று இரவுதான் அத்துப்படியானது அவனுக்கு. ஒருத்தனுக்கு கோடி காசிருக்கலாம் கொஞ்சும் குழந்தை இருக்கலாம் பிடித்தமான மனைவியோ, காதலியோ இருக்கலாம் வாழ்க்கையில் விரும்பியது கிடைக்கலாம். ஆனால் உறக்கமற்ற இரவுக்காரனுக்கு நிம்மதி இருக்காது. தலையில் புண் வந்த மிருகம்போல அவஸ்தைப்பட வேண்டியதுதான்.
படுத்த பத்தாம் வினாடி குறட்டை ஒலியால் வீட்டைப் பெயர்க்கும் வீரன் இன்றுதான் உறக்கமற்றுப் புரண்டான். அடிக்கடி பீரோவை திறந்து அந்த பத்தாயிரம் ரூபாய் இருக்கிறதா என்று பார்த்தான். மீண்டும் முள் படுக்கையில் படுத்துக்கொண்டான்.

இதை கவனித்த மனைவி தூக்கக் கலக்கத்தோடு தெளிவாகக் கேட்டாள், “தூங்காம அடிக்கடி எங்க எழுந்து போறீங்க?”

வயிறு சரியில்லை என்று காரணம் சொன்னான். சாதாரணமாக வயிறு சரியில்லை என்றால் எல்லோரும் பாத் ரூம் போவார்கள். சிலர் வயிற்றை சமாதானம் செய்வதற்காக கஷாயம் போன்ற வஸ்துவைக் குடிக்க சமயலறைக்கு கூட செல்வார்கள். படுக்கை அறையில் இருக்கும் பீரோவை அடிக்கடி திறந்து பார்த்தால் வயிறு சரியாகிவிடும் என்ற சூட்சுமத்தை அவள் இன்றுதான் கண்டாள். குழம்பிப்போனவள், ‘இது எந்த ஊர் வயித்தியம்?’ என்று கேட்கத்தான் ஆசைப்பட்டாள். ஆனாலும் திரும்பிப் படுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்காரிக்கு முடி முழுவதும் கொட்டிப்போய் விகாரமாகிவிடும் கனவை தொடர்வதில் ஆர்வம் காட்டினாள்.

மேற்படி பீரோ திறந்து பார்க்கும் முள் படுக்கை இரவினால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் மறுநாள் காலையில் கண் இரண்டுக்கும் மிளகாய்ப் பொடி கலந்த சிவப்பு பெயிண்ட்டை அடித்துக்கொண்டு எழுந்தான். வழக்கமான வேலை ஓடவில்லை. சரியா தப்பா கேள்வி தலையை சுழற்றியது. பீரோவில் இருக்கும் அந்த பத்தாயிரத்தை... நொந்துபோனான்.

விசயம் வேறு ஒன்றும் இல்லை. அவனுக்கு நேற்று சாயிந்தரம் ஒரு பெட்டிக்கடை பக்கத்தில் ரூபாய் பத்தாயிரம் மஞ்சள் பை சகிதமாய் கிடைத்துவிட்டது. மசங்கலில் பணத்தை எடுத்ததை யாரும் பார்த்திருக்க நியாயமில்லை. பணத்தை தேடியும் யாரும் வரவில்லை. இப்பொழுது சிக்கலே அந்த பணத்தை என்ன செய்வது என்பதுதான். நல்ல மனிதனாய் தொலைத்தவனை தேடி கொடுத்துவிடுவதா, இல்லை அமுக்கி விடுவதா என்று ஒரே குழப்பம். மனைவியிடம் யோசனை கேட்டிருக்கலாம் அவள் ‘பணத்தை அமுக்கு!’ என்று ஒரேயடியாக யோசனை சொல்லிவிட்டால்... அது தப்பில்லையா?

தவறிய ஒரு குழந்தையை கண்டெடுத்தால் அதை பெற்றவர்களிடம் ஒப்படிப்பது மனித குணம். சற்று வித்தியாசமாக ஒரு ஆட்டுக் குட்டியை கண்டெடுத்தால் பெற்றவர்களிடம் ஒப்படைக்க முடியாதே என்று சொல்லிக்கொண்டு உரியவர்களிடமும் தராமல் பிரியாணி செய்து சாப்பிடுவதும் மனித குணம்தான். ஆனால் பணத்தை கண்டெடுத்தால் என்ன செய்யவேண்டும்?

இதற்கு தீர்வு சொல்ல சரியான ஆள் பகவான் தாஸ்தான் என்ற முடிவோடு அவனை பார்க்கப் போனான். அங்கே பகவான் தாஸ் வாசற் படியில் உட்கார்ந்து தலை போகும் அவசரத்தில் பேப்பர் படித்தான். இவனைப் பார்த்ததும் “வா, இவனே. ஒக்காரு.” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவசரமாக படித்தான். இவனும் வாசற்படியில் உட்கார்ந்து கொண்டான்.

பகவான் தாஸ் ஒரு வினோதப் பிறவி. வாழ்க்கையின் எல்லா புள்ளிகளுக்கும் ஒரு வியாக்கியானம் - விளக்கம் வைத்திருப்பான். நாலு பேரை வார்த்தையால் மடக்க பலவும் தெரிந்து வைத்திருக்கும் பராக்கிரமன். தெரிந்த விசயம் மட்டுமல்ல செய்யும் தொழிலும் பலதுதான். ஆட்டோ வாங்கி ஓட்டுவான். ஒரே மாதத்தில் விற்றுவிட்டு சோப்புப் பவுடர் ஏஜென்சி எடுப்பான். அடுத்த மாசமே ஆட்டுக் கால் சூப் விற்றுக் கொண்டிருப்பான். நாள் முழுதும் நாயாய் உழைப்பான். சாயிந்திரத்தில் சாமி கும்பிடுவான். ராத்திரியில் குவாட்டர் குடிப்பான். குடித்த பிறகு யாராவது கிடைத்தால் நெத்தியடியாக தத்துவம் பேசுவான். வாந்தி எடுத்துவிட்டோ எடுக்காமலோ தூங்குவான்.

பேப்பரை படித்து முடித்து நன்றாக மடித்து வைத்துவிட்டு “சொல்லு இவனே... அதிசயமா என்ன பாக்க வந்திருக்கே... டீ அடிக்கிறீயா? வீட்டுல ஒய்ப் இல்ல. கடையில போயி குடிப்போம். காசு வெச்சிருக்கே இல்லே?” என்று கேட்ட பகவான் தாஸ{க்கு உச்சந் தலையெல்லாம் மேதாவித்தனம் வழுக்கியது. அடுத்தவன் பாக்கெட்டின் பத்து ரூபாயை தனக்கென வெளியே வரவைக்கும் வித்தை ஞானவானான அவனுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. வித்தியாசமாய் ஒய்ப் இல்லை என்கிறான்.

பணம் கண்டெடுத்ததை இவன் சொல்லவில்லை. சொன்னால் அவனுக்கு பொறாமை வரும். பொறாமை வந்தால் பொய்யான அறிவுறை தருவான். அதனால் பேச்சை வேறு வாக்கில் திருப்பி விசயத்திற்கு வர நினைத்தான். “பேப்பரை அத்தனை தலை பிச்சிகிட்டு படிச்சியே, புதுசா ஏஜென்ஸி எதாவது எடுக்கப் போறீயா?”

“அதெல்லாம் இல்ல. பேப்பர் மாடி வீட்டுக்காரனோடது. அவன் கீழ எறங்கி வரதுக்குள்ள ஒருவாட்டி படிச்சிடுவேன். விடிஞ்ச பிறகும் தூங்கறது தப்பும்பாங்க துப்பத்தவங்க. ஒருத்தன் ரொம்ப நேரம் தூங்கறது ரொம்ப நல்லதுன்னு மாடிவீட்டுக்காரன் இன்னமும் தூங்கற விசயத்தில தெரியுதில்லையா?” ஓசி பேப்பர் படிப்பதற்கு ‘வைகரை துயில் எழேல்’ என்று ஒரு நீதி வாக்கியம் சொல்லி சிரித்தான்.

இருவரும் சேர்ந்து டீ குடித்தார்கள். அவனின் தற்போதய தொழில், வரும்படி பற்றி பேசிவிட்டு, எதேச்சையாக போல கேட்டான், “தாஸ், உனக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் கீழ கெடைக்குதுன்னு வெச்சிக்கோ. நீ கண்டெடுத்ததை யாரும் பாக்கல, தொலைச்சவன் யாருன்னும் தெரியல. அந்த பத்தாயிரத்துல நீ மொத என்ன செலவு செய்வே? சொல்லு”

தாஸ{க்கு உடம்பெல்லாம் புல்லரித்துப் போனது. “பத்தாயிரமா, இவனே..! மொத ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டலுக்கு போயி நல் ல பாரீன் சரக்கா ஏத்திப்பேன். தினுசு தினுசா ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன். மூவாயிரம் ரூபா குளோசாயிடும்.” சொல்லும்போதே பகவான் தாஸ் கண்ணில் போதை தெரிந்தது. ஒரு பேச்சுக்கே இத்தனை போதையென்றால் பத்தாயிரம் நிஜமாக கிடைத்திருந்தால் கிடைத்த இடத்தில் குடிகாரனாய் சுருண்டு விழுந்திருப்பான் போலிருக்கிறது.

“மீதி காசை என்ன செய்வே?” இவன் மேலும் கேட்டான்.

“மீதியா? நேரா கடைவீதிக்கு போய் ஒஸ்த்தி டிரஸ் நாலு எடுப்பேன். சினிமா பாப்பேன். யாராவது ராத்தங்களுக்கு வருவாங்களான்னு பாப்பேன். எப்படியும் ஒரு ஆயிரம் ரூபாய் மீதியாகும். அதுல அஞ்சி ரூபாய் தெரிஞ்ச சின்ன வயசு பிச்சக்காரிக்கும் மீதிய அனாதை ஆசிரமத்துக்கும் தந்துடுவேன்.”

“சின்ன வயசு பிச்சக்காரிக்கு எதுக்கு காசு போடறேன்னு தெரியுது. அனாத ஆசிரமத்துக்கு ஏன் காசு தரே?” ஆச்சரியமாக கேட்டான் இவன். “அதையும் ஒரு ஒன் ஸ்டார் ஓட்டலுக்குப் போய் ஊத்திக்க வேண்டியது தானே.”

“அதெப்படி இவனே. அடுத்தவன் காசெடுத்து ஊத்தி ஏத்திகிட்ட பாவத்தை எப்படி தொலைக்க? ஆயிரத்தை ஆசிரமத்துக்கு தந்தா பாவம் கழுவிக்கும் இவனே... செய்யற தப்பை சரியா செய்யணும். பாவத்தில ஆரம்பிக்கிற வாழ்க்கை புன்னியத்தில முடியணுங்கறதுதான் பகவான்தாஸோட கொள்கை.” பகவான் தாஸ் ஒரு தந்திரமான சாத்தானைப்போல பேசினான்.

கண்டெடுத்த பணத்தை சந்தோசமாய் செலவு செய்ய இவனுக்கும் துளி ஆசைதான். ஆனாலும் தாஸின் பேச்சு குமட்டியது. என்ன ஒரு குரூரமான யோசனை. பகவான் தாஸ் மீது கோபம் வந்தது.

“சரி, தாஸ். குவாட்டர் அடிச்சி காசு மொத்தமும் செலவான பிறகு தொலைச்சவன் வந்து அந்த காசை கேட்டா நீ என்ன செய்வே?” கேட்டதும் பகவான் தாஸின் கற்பனை போதை பொசுக்கென்று இறங்கியது.

“ஆஹா... உனக்கு வேலை இல்ல. நீ லீவ்ல இருக்கியா? எனக்கு வேலை இருக்கு இவனே. பத்து வீட்டுக்கு ஊறுகாய் போடணும்.” சொல்லிவிட்டு ஓடியவனை தடுத்து நிறுத்தி கேட்டான், “ஏழை பாலையோட காசில குடிக்கிறது தப்பில்லையா, தாஸ்?”

“எது தப்பு, இவனே? பணத்தில எழுதியிருக்கா ஏழையோட பேரு. அந்த பணம் பணக்காரன் கையில இருந்திருக்கும், ஏழை கையிலையும் இருந்திருக்கும். பணம் எப்பவும் யாரோடதும் இல்ல, இவனே. தொலைச்சவன் தேம்பி ஆழுவான்னு நெனைச்சா தெம்பா குடிக்க முடியாது. இவனுங்க காசை மட்டுமா தொலைக்கிறானுங்க... வாழ்க்கைய, சந்தோசத்தை, தன்மானத்தை எல்லாம்தான் தொலைக்கிறாங்க. அத்தனையும் மீட்டுட முடியுமா? அப்படி கிடைக்காத பொருள் தொலைஞ்சதா நெனைக்கட்டும். நம்பு இவனே, யோக்கியனுக்கு என்னைக்கும் சந்தோசம் கிடைக்காது. நம்பாட்டி ஆளை விடு. நான் ஊறுகாய் விக்கப் போறேன்.” அவன் போய்விட்டான்.

பகவான் தாஸ் பேசப் பேச அவனுக்கு சாத்தான் கொம்பு முட்டி வளர்வதை கண்டான் இவன். அவன் பேச்சு அற்பத்தனமானது என்று நினைத்தான.; மேலும் இவனின் சின்ன வயசு அனுபவம் வேறு பெரும் தலைவலியாக உறுத்த ஆரம்பித்தது.

அவன் அம்மா ரேஷன் அரிசி வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தலை விறித்துப்போட்டு நடுத்தெருவில் கத்தியபொழுது இவன் பொடிசிறுவன். அன்று அம்மா கத்திய பரிதாப ஓலம் இன்றும் காதில் ஊளையிடுகிறது. அது வெறும் பத்து ரூபாய் காசு. எடுத்த எவனும் திருப்பித் தரவேயில்லை. அம்மா போல பத்தாயிரம் தொலைத்தவனும் இன்று கதறத்தானே செய்வான். ‘ஐயோ என் வாழ்க்கையே போச்சே!’ என்று அவன் தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்காமலா இருப்பான்.

அந்த பணம் பாட்டில் ரத்தம் ஏறிக்கொண்டிருக்கும் ஒரு பிள்ளை பெற்றவளின் உயிரைக் காப்பாற்ற தேவையான பணமாக இருக்கலாம். வருசமெல்லாம் உழைத்து விளைந்ததை விற்று கடனை அடைக்க ஒரு விவசாயி கொண்டு போன காசாகவும் இருக்கலாம். எப்படிப்பட்ட பணமாக இருந்தாலும் அதை செலவு செய்தால் அது பாவத்தின் பணமாகிவிடும். உள்ளே நப்பாசை நாய் வேறுவிதமாய் புத்தி சொன்னது. ஒருவேளை அது கந்து வட்டிக்காரனுடையதாகவோ, ஒரு கோடிஸ்வரனின் அற்பக் காசாகவோ இருந்தால் செலவு செய்வதில் தப்பில்லையே...!

இவன் ஒன்றும் காசுக்கு கஷ்டப்பட்டு அல்லாடுபவன் இல்லை. மாசத்திற்கு இருபதாயிரத்திற்கும் குறைவில்லாமல் சம்பாதிக்கத்தான் செய்கிறான். ஆனால் என்ன பிரயோஜனம். இவனுக்கென்று என்ன செலவு செய்கிறான். இதே பகவான் தாஸ் குடித்துவிட்டு அன்று சொன்ன ஒரு நெத்தியடி வார்த்தை இன்றும் உறுத்துகிறது.

ஒருநாள் பெரும் போதையில் உடையவிழ நடுத்தெருவில் கிடந்த தாஸை எழுப்பி “எதுக்கு தாஸ் இப்படி குடிச்சி ஒடம்பை அழிச்சிக்கிறே... ஒருத்திய கட்டிகிட்டு குடும்பம் குட்டின்னு உருப்படலாம் இல்லே” என்று யோக்கியனாக இவன் அறிவு சொன்னான்.

பகவான் தாஸ் உடை அவிழ்ந்தவனாய், நாக்கு குழறலாக பேசினாலும் மிதியடியில் அடித்ததுபோல அழுத்தமாக பேசினான். “ழே இவனே. நீ மாசம் எவ்ளோ சம்பாதிப்பே... நாப்பதாயிழமா? உன் சந்தோசத்துக்குனு எத்தன காசு செழவளிப்பே சொல்லு?”

இவன் யோசித்து “ஏழாயிரம்” என்றான்.

“போடா கிழுக்;கா.. திங்கழதும் துணி போடழதும் பொண்டாட்டி புள்ளைய வளக்கிறதும் கணக்கில வழாது. ஒழு குடி, ஒழு பீடி, ஒழு ஜோடி உண்டா உனக்கு. உன் சந்தோசத்துக்கு எழ்த்தனை காசு செலவளிப்பே, சொல்லு?

இவனுக்கு பகீர் என்றது. தன் சொந்த சந்தோசத்திற்கு எவ்வளவு செலவாகும்? பகவான் தாஸ் சொன்னது போல ‘குடி - பீடீ - ஜோடி’ பழக்கம் எதுவும் கிடையாது. எப்பொழுதாவது ஒரு ஸ்வீட் பீடா தின்பான். அது மூணு ரூபாய். அதுதானா இவனுக்கு சொர்க்கம்?

ஒரு பேச்சுக்கு “முந்நூறு ரூபாய் செலவளிப்பேன்” என்றான்.

தாஸ் வாயை கோணலாக வைத்துக்கொண்டு சிரித்தான். “அட கேனப் பயலே. உன்னோட சந்தோசம் கேவலம் முந்நூழு லூபாய்ல தானாடா இழுக்கு? இதுக்காடா மாடு மாதிழி ஒழைக்கிழே. அந்த காசை ரெண்டு நாள் பிச்சை எடுத்தா சம்பாதிக்க முடியாதாடா உன்னால? நான் ஏழு காசு சம்பாதிச்சாலும் அது எஞ் சொந்த சொர்க்கம்டா ராசா. நீ ஒரு சவம்டா தங்கம். செத்த பொணம் நீ. எனக்கு அழிவு சொல்லாத. என் வேட்டிய நானே கட்டிப்பேழ்ன். நீ போயி வாழற வழியப் பாருடா எந் தங்கம்” என்றான்.

குடித்து விழுந்து கிடந்த தாஸின் வேட்டியை கட்டிவிடப் போனான். கடைசியில் குடிக்காத இவனுக்கு வேட்டி அவிழ்ந்து கொண்டது. உண்மைதானா? தனக்கென்ற சந்தோசத்திற்கு மட்டும் சம்பாதித்தால் போதுமா? இது அபத்தமில்லையா? அற்ப சந்தோசங்கள்தான் மனிதனின் நிஜ சந்தோசமா? ஒரு கொண்டாட்டம், சந்தோசம், வேடிக்கை, சினிமா, பாட்டு என்று இவன் வாழ்வில் இவனுக்கான தனி சந்தோசமாக எதுவும் கிடையாது. தினம் ஜடம்போல சொந்த லேத்துப் பட்டரையில் இரும்போடு இரும்பாக சொந்தமாக துருவாகி உதிர்கிறான். அதற்கு ‘லேத்துப் பட்டரை ஓனர்’ என்று விசிட்டிங் கார்டு வேறு.

அன்றிலிருந்து இவனுக்கு ஒரே நமைச்சல். ஒரு நாளாவது விரும்பியதைத் தின்று பிடித்தவர்களோடு பேசி பிடித்ததை செய்து சந்தோசமாய் இருக்க வேண்டுமென்று. ஆனால் ஒரு நாள் விடுமுறை என்றாலும் லேத்துப் பட்டரை வேலை ஊத்திக்; கொள்ளும். எத்தனை காசு சம்பாதிக்கிறானோ அத்தனை காசுக்கும் சீட்டு, தவணை, வட்டி, கடன் இருக்கிறது. இப்படி தத்தேறியாய் யோசிக்கவே முடியாது, கூடாது.

ஆனால் அனாமத்தாக ஒரு பத்தாயிரம் கத்தையாக கிடைத்ததும் இவனுக்கு அந்த நமைச்சல் ஒட்டிக்கொண்டது. மனசின் சாத்தான், செய்யும் தப்புக்கு துணையாக ஒரு ஆள், ஒரு சொல், ஒரு நியாயத்தை கண்டுபிடிக்க விரும்பியது. அதற்காகத்தான் பகவான் தாஸை பார்க்க வந்தான். பகவான்தாஸ் சாதகமாய்த்தான் பேசினான் என்றாலும் அவனுக்கு உள்ளுக்குள் உறுத்தல் இருந்தது. தன் முகம் ஒரு நல்லவனின் முகமாகத்தான் ஊரில் எல்லோருக்கும் தெரியும். தன் மனைவிக்கும் கூடத்தான். பணமெடுத்து கயவனாக செலவு செய்தது தெரிந்தால் முகத்தின் கோரம் ஊரை விட்டு விலக்கி வைத்துவிடுமோ என பயந்தான். ஆளற்ற இடத்தில் பணம் கண்டெடுத்த தன் முகம் தனக்கே அந்நியமாகி ஒரு கோர சாத்தான் முகமாக தெரிந்தது. யாருமற்ற பொழுதில் மனிதர்கள் யார் போலவோ ஆகிவிடுகிறார்கள்.

பணத்தை திருப்பித் தந்துவிடும் யோக்கியம் இவனுக்கிருந்தது. ஆனால் தொலைத்தவன் மட்டுமே பணத்தைப் பெறும் யோக்கியம் உலகத்திற்கு இருக்கிறதா? வேறு ஆள் வந்து என் பணம் என்று கேட்டு வாங்கிவிட்டால். பணத்தில் அடையாளமா இருக்கிறது? பள்ளிக்கூடத்தில் நடந்த ஒரு அபத்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

ஆறாம் வகுப்பில் ஒரு முறை இவன் தன் பக்கத்துப் பையனின் அழகான பேனாவை திருடியிருக்கிறான். (அன்றைக்கே ஆள் திருடன்தானா என்று அடுத்தவர் நினைப்பார்களோ என்று அச்சப்பட்டு, அறியாப் பருவத்தில் திருடிய சிறு பேனா குறித்து யோசிக்கவும் இன்று பயந்தான்.) அடையாளம் தெரியாதபடி அந்த பேனா மூடியை விளக்கு நெருப்பில் தீய்த்து மறைத்து எடுத்துப்போய் அதில் எழுதியும் இருக்கிறான். அந்த பேனா ஒரு முறை தொலைந்துபோனது. மறுநாள் பிரேயர் நடக்கும்போது தலைமையாசிரியர் தீய்ந்த பேனாவை காட்டி மாணவர்க்ளிடம் கேட்டார் “இது யாரோட பேனா...?”

இவனுக்கு தன் பேனா என்று சொல்லி வாங்க பயம். பேனாவின் உண்மையான உரிமையுள்ள பையன் பக்கத்தில் நிற்கிறான். அவனுக்கோ களவு போன தன் சொந்த பேனாவே அடையாளம் தெரியவில்;லை. அப்படி மூடியை தீய்த்து வைத்திருந்தான். பிறகு நடந்த சங்கதிதான் வினோதமானது. “என்னோட பேனா சார்” என்று சொல்லியபடி செந்தாமரை என்ற பெண் நூறு பிள்ளைகளுக்கு மத்தியில் மிடுக்காக நடந்து போய் பேனாவோடு திரும்பினாள். யாருடையதையோ யாருக்கோ தந்த அந்த தலைமை ஆசிரியரின் அபத்த முகம் இன்று நினைவுக்கு வந்தது. அப்படி ஒரு அபத்தம் செய்வதில் விருப்பமில்லை இவனுக்கு.

பொது இடத்தில் பணம் கிடைத்தால் போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்ற அறிவிருந்தது போலவே இது கல்ல நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது. ஒரு வேளை கல்ல நோட்டாக இருந்தால் போலீசில் மாட்டிக்கொண்டு தெரியாத கல்லநோட்டுக் கும்பல் தலைவன் பெயரை சொல்ல வேண்டியிருக்குமே என்று தொடை நடுங்கினான். அதனால்தான் மொத்தக் காசையும் அல்ல, ஒரே ஒரு நூறு ரூபாய் தாள் உறுவி செலவு செய்யவும் பயந்து இருந்தான்.

அடுத்து சீத்தாராமனிடம் யோசனை கேட்டால் என்ன என்று தோன்றியது. சீத்தாராமன் ஒழுக்கமான வேலை பார்ப்பவன். கொஞ்சம் ஒல்லியாக இருப்பவன். ஜனங்களுக்கு பொதுவாக வரும் சில வியாதிகள் இருப்பவன். உலகத்தில் புது வியாதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால் தனக்கிருக்குமோ என்று டாக்டரிடம் ஓடுபவன். வியாதி இல்லை என்று சொன்னாலும் ஒரு ஊசி போட்டுக்கொள்பவன். உடம்பில்தான் கொஞ்சம் வியாதி. ஆனால் அடுத்தவனுக்கு உதவும் மனசில் தங்கம். அவனிடமும் போய் அதே கேள்வியை கேட்டான். “பத்தாயிரம் வழியில கிடைச்சா நீ மொதல்ல என்ன செலவு செய்வே... சீத்தாராமா?”

சீத்தாராமன் தீர்மானமாக சொன்னான். “அந்த காசு முழுசையும் எடுத்துகிட்டு ரங்கசாமி ஹார்ட் பவுண்டேசன் ஆஸ்பிடலுக்கு ஓடுவேன்”

இவனுக்கு சந்தோசமாகிவிட்டது. இதுதான் நல்ல ஆத்மாவின் பண்பு. புற்று நோய்க்கு தாயை பறிகொடுத்த ஒருத்தன் பணக்காரனான பிறகு தாய் நினைவாக ஒரு புற்று நோய் மருத்துவமனை ஆரம்பிப்பதில்லையா? அப்படித்தான் நோய் பல கண்ட ஒரு நல்ல மனுசன் கிடைத்த பணத்தை ஓடிப்போய் ஒரு பவுண்டேசனுக்கு தந்து மற்ற நோயாளிகளுக்கு உதவ நினைப்பான்.

“ஆறாயிரம் கொடுத்து உடம்பு முழுசும் ஒருவாட்டி தரோவா செக் பண்ணிப்பேன்” என்று சீதாராமன் முடித்ததும் இவனுக்கு மனசில் காற்று பிடிங்கிக்கொண்டது. இவனும் காசை தொலைத்தவனிடம் தருவதாய்; இல்லை. வியாதிக்கு மருத்துவம்தான் பார்ப்பானாம்.

“மீதி நாலாயிரத்தை என்ன செய்வே?” சலிப்புடன் கேட்டான்.

“அதுக்கு நல்லா ட்டிரீட்மெண்ட எடுத்துப்பேன்.”

இப்பொழுது சீத்தாராமன் மீதும் கோபம் வந்தது. அவனிடமும் ‘காசு முழுசும் செலவான பிறகு தொலைச்சவன் வந்து பணம் கேட்டா என்ன செய்வே?’ என்று கேட்கத்தான் நினைத்தான். ஆனால் அவன் ஒரு இருதய நோயாளி. பாதியில் புட்டுக்கொள்வான்.

ஒரு நல்லவனும் ஒரு கெட்டவனும் - ஆக இருவருமே கண்டெடுத்த பணத்தை உரியவனிடம் தருவது குறித்து பேசாததில் வருத்தம் இருந்தது இவனுக்கு. எதற்காக இப்படி கண்டெடுத்த பணத்தை வைத்துக்கொண்டு குமைந்து சாகிறோம் என்று குழப்பமாகவும் இருந்தது. ஒரு ஆட்டோக்காரன், ஒரு பூ விற்கும் கிழவி லெட்ச ரூபாய் கண்டெடுத்து நாணயமாய் திருப்பித் தந்ததாய் செய்தி படித்ததில்லையா இவன். அந்த காசை ஏப்பம் விட ஒரு நியாயம் தேடி கோர முகத்தோடு அழைகிறோம் என்பது மட்டும் உறைத்தது.

மனசுக்குள் தெரியும் தன் முகம் தனக்கே அறுவெருத்தது. கழுத்தில் கத்தி வைத்து வழிப்பறி செய்யும் திருடனுக்கும், நகைக்காக முகத்தில் தலையணை வைத்து கொல்லும் குரூரமானவனுக்கும் தனக்கும் என்னதான் வித்தியாசம் இருக்கிறது என்று அசிங்கப்பட்டுக்கொண்டான். தன் மனசின் பாவம் ரத்தத்தில் கலந்ததாய் நினைத்து வருத்தப்பட்டான். வாழ்வில் நிம்மதியாக இருக்க ஒரே வழி காசை உரியவனிடம் தருவதுதான் என்று முடிவெடுத்து பணம் கண்டெடுத்த பெட்டிக்கடை அருகே போனான். ஒரு வேளை அந்த பெட்டிக் கடைக்காரருக்கு தெரிந்திருக்கும். பணம் தொலைத்தவன் அங்குதான் அழுதபடி தேடியிருப்பான்.

கடைக்காரர் காய்ச்சல் வந்தவரைப்போல கடையில் உட்கார்ந்திருந்தார். வயதானவர்தான் என்றாலும் வழக்கமாக கடன் சொன்னாலும் சிரிக்கும் ஆசாமி அவர்.

“என்ன ஆச்சி கடக்கார்ரே... ஒடம்பு சரியில்லையா?”

அவர், “ப்ச்... இல்ல சார். என்ன பொழப்போ. தொட்டதெல்லாம் தொலங்கல. எல்லா காசையும் தொலைச்சி நஷ்டப்பட்டு கிடக்கேன். கடன்காரன் கழுத்துல கை வக்கிறான். ஊரை காலிபண்ணிகிட்டு போகலாமான்னு இருக்கேன்.”

இவனுக்கு சுறுக்கென்றது. “காசை தொலைச்சிட்டிங்களா... எவ்ளோ?”

“ம் தொலைச்ச மாதிரிதான். விட்ட காசு திரும்ப கிடைக்கவா போது. எவன் யோக்கியம் இந்த உலகத்தில. நஷ்டமான காசுக்கு கணக்கென்ன? வட்டியில கொஞ்சம் பொட்டியில கொஞ்சமா மொத்தமா போச்சி”

“பத்தாயிரமா?”

“ம், இருக்கும்.”

“கவலைய விடு கடக்கார்ரே. நல்லவங்கள கடவுள் சோதிக்க மாட்டான். காசு என்கிட்டதான் இருக்கு.” வீட்டுக்கு ஓடினான். ஒரு அப்பாவி பெட்டிக் கடைக்காரனின் காசை தின்னப் பார்த்தோமே என்று வருந்தினான்.

வீட்டிற்கு வந்தால் மனைவி ஒரு அழகான வாசிங் மெஷினை வாங்கி நடு வீட்டில் வைத்திருந்தாள். “ஒன்பதாயிரம் ரூபாய்ங்க... கலர் நல்லா இருக்கா?”;என்று கேட்கிறாள். இவனுக்கு மனசில் என்னவோ உறுத்தியது. பீரோவை பூட்டினோமா இல்லையா?

துக்கமும் கோபமுமாக கத்தினான், “ஏ கூறு கெட்டவளே... அடுத்தவன் காசுல வாசிங் மெஷின் வாங்கறது பாவமுன்னு தோணல? காசுன்னா ஏம் பேய் மாதிரி அலையற?”

மனைவி புதிராக கேட்டாள். “எதுக்கு இப்படி கத்தறீங்க. எது அடுத்தவன் காசு. நான் கஷ்டப்பட்டு சீட்டு சேத்த காசு. மாசக் கணக்கா கேக்கறேன் வாங்கித் தர வக்கில்லே. நானே வாங்கினா கத்துங்க.”

“உன் காசா?”

ஓடிப்போய் பீரோவை திறந்து பார்த்தான். பத்திரமாக அந்த காசு அழுக்கு மஞ்சள் பையில் இருந்தது. மெல்ல இளித்தான். மனைவியிடம் ஒரு வார்த்தை பேசாமல் கடைக்காரனிடம் வந்து பெருமிதத்தோடு காசை தந்தான். கண்டெடுத்த விதத்தைச் சொன்னான். கடைக்காரன் பணத்தை திருப்பித் திருப்பி பார்த்துவிட்டு ஒரு ஆயிரம் ரூபாயை இவன் கையில் கொடுத்தான். நாள் முழுதும் இந்த பணம் படுத்திய பாட்டில் வேலைக்கு போகாமல் ஆயிரம் நஷ்டம்தான். ஆனாலும் செய்த உதவிக்கு காசு வாங்குவது தப்பென்று “பரவாயில்ல வை, பெரியவரே. இனி ஜாக்ரதையா இருங்க.” என்றான்.

வரும் வழியெல்லாம் அவன் மனசு கணமற்று மெல்லியதாய் மிதந்து வந்தது. ஒரே நாளில் பெரும் பாவியாக ஆக இருந்தான். கைக்கெட்டும் தூரத்தில்தான் மனிதர்களைச் சுற்றி பாவங்கள் இருக்கிறது. ஒரு சின்ன சபலம் ஒருத்தனை பாவியாக்கிவிடும். நல்லவனாவதற்கும் சந்தர்ப்பங்கள் வெக அருகிலேயே இருக்கிறது. நான் நல்லவனானதற்கு நன்றி கடவுளே!

உண்மையில் அவன் ஒரு பெரும் தவறு செய்துவிட்டான். வீட்டில் அவனுக்காக கசாப்புக் கடை கத்தியோடு இரண்டு பேர் நின்றிருந்தார்கள்.

ஒருத்தன் தெரிந்த லைன்மேன். இன்னொருத்தன் புதியவன்.

“சார், நேத்து நீங்க பெட்டிக்கடை பக்கத்தல ஒரு பை எடுத்திங்களே... அது இவரோடதாம். நான் எடுக்கும்போது பாத்தேன். உங்களோடதா இருக்கும்னு நெனைச்சேன். இந்த மனுசன் பாவம் பத்தாயிரம் காணம்னு இன்னைக்கு அலையறத பாத்தேன். நீங்க நல்ல மனுசன் தந்துடுவிங்கன்னு சொல்லி கூட்டியாந்தேன்.” லைன்மேன் சொல்ல இவனுக்கு தலை கிறுகிறுத்தது.

அடப் பாவி கடக்காரா...

கடைக்காரன் எந்த கஷ்டத்துக்கோ புழம்ப நாந்தான் பணம் தொலைஞ்ச கஷ்டமுன்னு தப்பா நெனைச்சேனா? தலைதெறிக்க பெட்டிக் கடைக்கு ஓடினான். அங்கே பெட்டி மட்டும்தான் இருந்தது. ஒரு ஆட்டோவில் மொத்த சாமானையும் அள்ளிப் போட்டுக்கொண்டு சற்று முன்தான் கடைக்காரன் போனதாய் பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள்.

தெரியாத்தனமா ஆள் மாத்தி தந்துட்டேன் என்று சொன்னால் யார் நம்புவார்கள். ஆனாலும் சொன்னான். காசு தொலைத்தவனும் லைன்மேனும் பாதி நம்பினார்கள். ஆனாலும் ‘காசை எண்ணி வை.’ என்றார்கள். மறு நாள் காசை எண்ணி கொடுத்தான்.

கடைக்காரனின் மேல் இவனுக்கு கோபம் வந்தது. ஆனாலும் பணத்தை ஏப்பம் விட தானும் விரும்பியதை நினைத்துப் பார்த்தான். இவன் நினைத்தான், கடைக்காரன் செய்தான். பெரிய வித்தியாசமில்லையே! அன்று காசு கண்டெடுத்ததை யாரும் பார்க்காததற்காக சந்தோசப்பட்டான். இப்பொழுது எடுத்ததை யாராவது பார்த்திருந்தால் பரவாயில்லையே என்று வருத்தப்பட்டான்.

‘நாலு பேர் அறிய பணத்தை கண்டெடுக்கும் எல்லோருமே உலகத்தில் யோக்கியர்களாக இருக்க விதியுண்டு. ஆனால் யாரும் அறியாமல் பணத்தை கண்டெடுத்தவன் யோக்கியனாய்த்தான் இருப்பான் என்பதற்கு எந்த யோக்கியரிடத்திலாவது உத்ரவாதமுண்டா?’ என்று ஒரே தத்துவார்த்தமான குழப்பத்தோடு இரவெல்லாம் அவன் குழம்பினான்.

சூராவளிபோல வந்து ஒரு நாள் இரவு தங்கிப்போன அந்த பத்தாயிரத்தின் ஒவ்வொரு ரூபாயும் ஒரு இரவாகி முள் படுக்கையாய் குத்த ஆரம்பித்தது அதன் பிறகு. அப்படி ஒரு நாளின் இரவில் அவன் தன் மனைவியிடம் கேட்டான், “ஏஞ் செல்லம் உனக்கு ஒரு பத்தாயிரம் கீழ கெடைச்சா அந்த காசுல நீ மொத என்ன செலவு செய்வே?”

அவள் இவனை கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டு சொன்னாள், “கண்டிப்பா பீரோவுல புருசனுக்கு தெரியாம ஒளிச்சி வெச்சிட்டு ராத்திரி பூரா திறந்து திறந்து பாக்கமாட்டேன்.” அவள் கோபத்தில் நியாயமிருக்கிறது. பணம் தொலைத்தவனுக்கு அன்று எண்ணி கொடுத்த பணம் அவள் கஷ்டப்பட்டு சேர்த்த பணமாயிற்றே.








Back to top Go down
 
~~ Tamil Story ~ யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil story ~~ டி.என்.ஏ
» ~~ Tamil Story ~~ பசி
»  == Tamil Story ~~ பி ன் வா ச ல்
» Tamil story
» ~~ Tamil Story ~~ பரிச்சயக்கோணங்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: