BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்  Button10

 

 ~~ Tamil Story ~~ ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்  Empty
PostSubject: ~~ Tamil Story ~~ ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்    ~~ Tamil Story ~~ ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்  Icon_minitimeSat Apr 02, 2011 5:33 am

~~ Tamil Story ~~ ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்



பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின் துவக்கத்திலேயே அற்புதம் பாட்டிக்கு முழிப்பு தட்டியது. பக்கத்தில் தன் கதகதப்பிலும், வெற்றிலைச் சாறின் கார நெடியிலும் பழக்கப்பட்டு தூக்கத்திலிருந்தவனைக் கிள்ளி எழுப்பினாள். பாட்டியின் நகங்கள் அவனைத் தவிர எல்லோருக்கும் பயமூட்டக்கூடியவை. அவள், நகநுனிகளில் உலகின் பல ஜால வித்தைகளை வைத்திருந்தாள். மூன்றாவது கிள்ளலில் துடித்தெழுந்தான். இருளின் அடர்த்தியைக் குறைக்க வெளியில் ஒரு முயற்சி நடந்தேறிக் கொண்டிருக்கையில், பாட்டி தெருவில் நின்று வடக்கால் திரும்பி மலை பார்த்தாள். பனியும், தூறலும், பத்தாதென்று மேகமும் மறைந்த போதும், ஒரு சிம்னி விளக்கொளி மாதிரி தீபம் தெரிந்தது. கண்களில் தெரித்து விழுந்த ஈரத்துளிகளை வழித்துப் போட்ட கையோடு மலை நோக்கிக் கும்பிட்டாள். மறுபடி வீட்டுக்குள் நுழைந்து தயாராக மடிக்கப்பட்டிருந்த இரண்டு கொங்காணிகளை எடுத்து ஒன்றை அவனுக்குப் போட்டுவிட்டாள். ஒரு பெரிய கூடையை இடுப்பில் இடுக்கி சாக்கு போட்டு மூடினாள். அதில் ஒரு சிறு கூடை, ஒரு பித்தளை சொம்பு, அவள் வெத்திலை இடிக்கும் உரல், உலக்கை இருந்தது.

அவள் நடைக்கு அவன் ஓட வேண்டியிருந்தது. தார்ரோடு இரவெல்லாம் நனைந்த ஈரத்திலிருந்தது. செருப்பில்லாத கால்கள் ஈரத்தைத் தலை உச்சிவரை கொண்டுபோய்க் குளிரவைத்தது. அவள் உடல் நடுக்கத்திற்கு அவனை இழுத்தணைத்து நடத்தினாள்.

குறுக்கால் பிரிந்த மண்பாதையின் நுழைவிலேயே, தாறுமாறாய் வளர்ந்திருந்த சப்பாத்திக் கள்ளிகளின் நெருக்கம் யாருக்கும் தரும் லேசான பயத்தைத் தந்தவாறிருந்தது. அற்புதம் பாட்டியின் காய்ப்பேறிய கரங்களின் நெருக்கலில் அவன் இன்னும் ஒடுங்கினான். வழியெங்கும் யாரோ அளவெடுத்து நட்டு வைத்த மாதிரி வளர்ந்திருந்த பனைமரங்கள் அவர்களுக்கான பாதைக்கு வழிகாட்டிகளாய் நின்றிருந்தன. கேட்கும் மழை சத்தம், பறவைகளின் விடியற்கால ஆரவாரச் சப்தங்களை முற்றிலுமாக உறிஞ்சி விட்டிருந்தது.

நடை நின்று, நிலத்தில் ஊனியது கால்கள். சனிமூலை ‘மென‘ பிடித்தார்கள். ராத்திரி கவுண்டர் மல்லாட்டை பிடுங்க ஆள் கூப்பிடும்போதே அற்புதம் பாட்டி முடிவெடுத்தாள், மொத ஆளா நெலத்துல நின்னு, சனிமூலை மென புடிக்கணும்.
பிடித்தாள்.

கறுப்பேறி பழுத்திருந்த இலைகளும், இலை உதிர்ந்து மொட்டையாய் நின்றிருந்த காம்புகளும், காய்களின் உள்முற்றலை வெளிச்சொல்லிக் கொண்டிருந்தன. குனிந்து பத்து செடி புடுங்கியவளுக்கு, மெல்ல ஒரு பயம் தன் மீது கவிழ்வதை உணரமுடிந்தது.

அவசரப்பட்டு முன்னாலேயே வந்துட்டுமோ? நாம மட்டும் தனியா நிக்கறதைப் பாத்தா எவனும் என்ன நெனப்பான்? யோசனைகளைச் சுத்தமாய்த் துடைப்பது மாதிரி முப்பது நாப்பது ஆட்கள் தூறலில் நனைந்து கொண்டே நிலமிறங்கினார்கள்.

‘‘கெழக்கத்தி ஆளுங்களா?’’

அந்த நாளின் முதல் வார்த்தை அற்புதம் பாட்டியிடமிருந்து நடுங்காமல் கொள்ளாமல் மழை சத்தத்தை மீறிக் கேட்டது. பதிலையும் அவளே ஊகித்த மாதிரி, அதற்காகவெல்லாம் காத்திருக்காமல், இதுவே அதிகம் என்பது மாதிரி குனிந்தாள். மாரணைத்து குவிந்த செடிகளோடுதான், மீண்டும் நிமிர முடிந்தது. அவள் இருப்பை சுத்தமாக மறந்திருந்தாள்.

துவரஞ்சாலைக்குள் அடர்ந்திருந்த செடிகள், அவளின் ஆவேசமான அலசலில் வேரோடும், சேறோடும் குவிந்தன. முன்பே அறிந்ததுதான் எனினும், பாட்டியின் இந்த வேகம் அவனை நிலை குலைய வைத்தது. மேற்கு மரிச்சில் ஏறி நின்றுதான் திரும்பினாள். கெழக்கத்தி ஆட்கள் முக்கால் மெனை ஏறிவிட்டிருந்தார்கள். தூறலின் மீதே நிகழ்ந்த விடியலின் வெளிச்சம் அழகு நிரம்பியதாயிருந்தது.

புடுங்கிப் போட்டுக் குவித்திருந்த மல்லாட்டைச் செடிகள் அவனுக்கு மலைப்பாகவும், அவளுக்குச் சாயங்காலம் வரை தாங்குமா? என்றுமிருந்தது. முழங்கை பெரிசுக்கு தடித்திருந்த ஒரு துவரஞ்செடிக்கு மேல், ஒரு பழம்புடவையை விரித்தாள். மழை பெய்தால் மழைக்கு, வெய்யிலடித்தால் வெய்யிலுக்கு.

பெரிய்ய கூடையைப் பக்கத்தில் இருத்தி, சிறு கூடையில் காய்களை ஆய்ந்தாள். பாட்டியின் உக்கிரமான முறுக்கலில் செடிகள் காய்களைக் கூடைக்குள் உமிழ்ந்தன. அந்த வேகம் ஒரு இயந்திரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கக் கூடியதாயிருந்தது.

அவன், பேருக்கு ஒன்றிரண்டு காய்களைக் காம்போடு பிய்ப்பதும், கூடைக்குள் போடுவதும், பித்தளைச் சொம்பில் நிரப்புவதும், நிரம்பும் முன் பெரிய கூடைக்குள் கவிழ்ப்பதுமாக, அந்த அதிகாலையை வேடிக்கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான். பாலேறி முற்றி, பெற்ற மழையீரத்தில் முளை விடத்தயங்கிய காய்களாகப் பொறுக்கி, பாட்டி அவனிடமிருந்து பிடுங்கிய பித்தளை சொம்பில் போட்டாள்.

அவள் கைகளையே வெறித்துக் கொண்டிருந்தான். செடிகளை முறுக்கி உதிரும் காய்களில், முத்துக்களை அவள் தனியே பிரிப்பதற்கு ஒரு துளியும் தனியே முயற்சிக்காது, அது தன்னால் பிரியும் என்பது போல இயங்கினாள். சொம்பு நிரம்பியதும் ‘‘உரிச்சி துண்ணு’’ என்று அவனைப் பார்த்து சொன்னாள். அவன் அந்த ஈரமான காலையில் உற்சாகமேறியிருந்தான். முதல் காயை எடுத்து உரித்தான்.

ரோஸ்நிறப் பருப்பில் இளம் மஞ்சளாய் முளைவிட்டிருந்த இடத்திலிருந்து ஓர் உயிர் துடிப்பதை உணர்ந்தான். இவனின் அதிர்வுக்கு முன்பே ஒரு இளவரசியைப்போல மின்னும் அழகோடு அவள் இவன் முன் உட்கார்ந்திருந்தாள். பிரமிப்பும், ஆச்சர்யமும், லேசான நடுங்குதலும், நிறைய சந்தோஷமும் குழைய, குழைய அடுத்த காயை உரித்தான், இதோ இன்னொரு இளவரசி.

இரண்டு இளவரசிகளும், இவனோடு காய் உரிப்பதில் சேர்ந்து கொண்டார்கள். உரிக்க உரிக்க ரோஸ் நிறப் பெண்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் பேரழகோடு ஒளிர்ந்து இவன் கண்களைக் கூச வைத்தார்கள். இந்த விந்தைகளில் சம்மந்தமில்லாதவளாக அற்புதம் பாட்டி, சிறு கூடையை நிரப்புவதும், அதைப் பெருங்கூடையில் கொட்டுவதுமாய் இயங்கிக்கொண்டிருந்தாள்.

அவள் இவனையோ, இவள் எதிரிலும் பக்கத்திலுமாக சூழ்ந்திருக்கும் பெண்களையோ கவனிக்கும் பிரக்ஞையற்று இருந்தாள். துவரஞ் சாலைகளுக்கூடாக நீண்ட ரயில்பெட்டி மாதிரி நின்றார்கள் அச்சிறுமிகள். இவன் முதல் ஆளாக நின்றான். இவன் பின்பக்கச் சட்டையைக் கொத்தாகக் கசக்கிப் பிடித்து நின்றிருந்த பெண் ராஜாம்பாள் மாதிரியே இருந்தாள். அவள் மீதிருந்து கிளம்பிய லேசான வாசனை நிரம்பிய நாற்றம் ராஜாம்பாளிடமிருந்து ஏற்கனவே சுவாசித்தது. அவர்களின் ரயில் வண்டி சத்தமின்றி புறப்பட்டது. இந்த விந்தைகளைப் பார்க்காமலேயே அற்புதம் பாட்டியைப் போலவே கிழக்கத்தி ஆட்களும் காய் ஆய்வதில் மும்முரமாயிருந்தார்கள்.

இவர்கள் ரயில், கருவேடியப்பன் கோவில் வேப்ப மரங்களுக்கிடையே தேங்கி நின்ற இருட்டில் நின்றது. இவன் முற்றிலும் பயம் உதிர்ந்து குதூகலமாயிருந்தான். ராஜாம்பாள் உடனான நாட்களில் அவனிருந்தது போலவே இந்நாள் அவனை மாற்றியது.

‘‘இருளக் குட்டிக்கூட என்னடா வெளையாட்டு’’ என்று இவனை அறுத்துக் கொண்டு போய், டவுனில் டி.வி. ஆண்டனாவில் கட்டிப் போட்டு, தினம், தினம் வீசும் காற்றில் துடித்துக் கொண்டிருந்த நூல், இன்று அறுந்து விட்டது மாதிரியிருந்தது.

அச்சிறுமிகள் சிரிப்பதும், பேசுவதுமாயிருந்தார்கள். சிலர் லேசாக பாடக்கூடச் செய்தார்கள். எல்லாருமே, ராஜம்பாளின் முக ஜாடையை ஒத்திருந்தார்கள்.

இவர்கள் ரயில் வண்டி கருவேடியப்பனின் கோவிலில், உடைந்து சிதிலமாகிக் கிடந்த குதிரைகளில் ஏறி... அசைகிறதா? நிற்கிறதா? எனக் கணிக்கமுடியாத ஒரு நதியின் கரையில் நின்றது. நதியின் மேற்பரப்பு முழுக்க கண்ணாடியிட்டு மூடியிருந்தது மாதிரியும், எந்த விநாடியும் இது அவர்களை உள்ளே இழுத்துக்கொள்ள சித்தமாயிருப்பது மாதிரியும் இருந்தது.

ஓடி வந்த களைப்பில் நதியின் மடியில் இளைப்பாற அவர்கள் எல்லோரும் ஒரே நேரம் முடிவெடுத்தார்கள். பெரும் நாக மரங்கள் நதியின் கரையோரம் அடர்ந்திருந்தன. அது கார்த்திகை மாதமானதால் பழமோ காயோ அற்று, இலைகளால் மட்டும் அடர்ந்திருந்தது. காலை வரை நீடித்திருந்த தூறலின் மிச்சங்கள் ஒன்றிரண்டாய் சொட்டிக் கொண்டிருந்தது.

சப்தமற்று ஒருத்தி, உள்ளங்கால் மட்டும் நதியில் நனைய இறங்கி, தன் பாவாடையை ஏந்தினாள். கெண்டை மீன்கள் துள்ள, துள்ள அவள் ஓடிவந்த உற்சாகம் அங்கிருந்த எல்லோரையும் தொற்றிக் கொள்ள, ஓணான் கொடி பிடுங்கி நாக மரத்தில் ஏறி, ஊஞ்சல் கட்டினார்கள்.

மரம் முழுக்க சிறுமிகள் பூத்திருந்த பேரழகை நாக மரங்களும், களங்கமற்றிருந்த நதியும் மட்டுமே அன்று பார்த்தன. ஒவ்வொருத்தியாய் உட்கார்ந்த ஓணான்கொடி ஊஞ்சல் நதியின் கரையிலிருந்து, நதியின் நடுமுதுகுவரை அநாவசியமாகப் போய் வந்தது. அவர்கள் எல்லோருக்குமே நதியின் அக்கரைக்குப் போகும் ஆவல் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. அவன் பெரும் உற்சாகத்திலிருந்தான். ஒவ்வொருத்தியாய் ஊஞ்சலில் உட்கார்த்தி வைத்து, தள்ளிவிடும் அவனின் உந்துதல் மேலும் வலுப்பெற்றிருந்தது. அதில் நதியின் அக்கரை நோக்கிய இலக்கிருந்தது.

ஒவ்வொரு சிறுமியின் ஸ்பரிசமும், ராஜாம்பாளின் தொடுதல் களையே நினைவூட்டின. நதியின் அக்கரையில் ஒவ்வொருவரும் நனைந்த உடைகளோடு விழுந்து கொண்டும், இறங்கிக் கொண்டுமிருந்தார்கள்.

மீன் பிடித்து மடியில் தேக்கி வைத்திருந்தவள், ஊஞ்சல் போகும் போது ஒரு கையில் ஓணான் கொடி பிடித்து, இன்னொரு கையில் மீன் நிரம்பிய மடி பிடித்தும் போனது மற்ற சிறுமிகளை ஆரவாரக் கூச்சலிடவைத்தது. எல்லோரையும் போய் சேர்த்து விட்ட ஓணான் கொடி ஊஞ்சல் திரும்பி வராமல் நதியின் இடையில் நின்று கொண்டது. அதுவரை பீறிட்ட அவன் உற்சாகத்தை திடீரென வந்த நதிநீர் அடித்து போனது.

அவன் ஊஞ்சலை தன் பக்கமிழுக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தோற்றான். நாகமரத்திலிருந்து நதியில் குதித்து நீந்துவது என முடிவெடுத்த கணம், நதியின் ஆழமும், குணமும் அறியாமல் குதிப்பது குறித்த எச்சரிக்கையும், கண்ணாடி போர்த்தி உறங்கும் அதன் பேரமைதி குறித்த பயமும் அவனுக்குள் முளைத்தது. எதிர்ப்பக்கச் சிறுமிகள் ஆரவாரமாய் இவனைத் தங்கள் பக்கம் அழைத்தார்கள்.

இஞ்சின் இன்றி அவர்கள் ரயில் அறுந்து கிடந்தது. அந்த நிமிடத்தில் எது நடப்பினும் பயமற்று நதியில் குதித்தான். இவன் நினைத்த மாதிரி எதுவுமற்று, நதி ஒரு குழந்தையைச் சுமப்பது மாதிரி தன் முதுகில் சுமந்து, இவனுடைய ராஜாம்பாள்களிடம் இவனைச் சேர்ப்பித்தது.

பெரும் கானகத்தின் நுழைவாயில், நதியின் அக்கரை. பருத்திருந்த மரங்களின் திண்மைகள் இதுவரை அவன் பார்த்தறியாதது. அடிக்கடி கேட்ட விநோதமான குரல்களும், கேட்டிராத சப்தங்களும், அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருந்த பயத்தை உதிரச்செய்து முற்றிலும் பயமற்ற வெளிக்கு அழைத்து சென்றன. மரங்களுக்கிடையே படுத்திருந்த பாறைகள். நீண்ட கவனிப்புக்குப் பிறகே பாறைகள் என ஊர்ஜிதமாயின. ஒரு மரம் முழுக்க தலைகீழாய்க் காய்த்திருந்த வெளவ்வால்கள் அவர்களைத் தங்கள் மௌனம் நிரம்பிய உலகுக்கு அழைத்தன. அப்படிப் போக மனமற்று, சப்தமும், ஆராவாரமும், பெரும் கூச்சலும், பாடல்களும், பறவைகளின் கீச்சொலியும் நிரம்பிய உலகில் இருப்பதையே அவர்கள் எல்லோருமே விரும்பினார்கள்.

காய்த்து, பழுத்து இருந்த காய்களையும், பழங்களையும் பறித்து எல்லோருமே அவனுக்காக மட்டுமே தந்து கொண்டிருந்தார்கள்.
ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது.

வாழ்வு, அதுவரை தந்திராத சுவையை அவர்களுக்காக, வழங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி, மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள். அவர்கள் உற்சாகமும் விளையாட்டும் எல்லை கடந்திருந்தன.

கானக அமைதி கலைந்து, இவர்களால் குதூகலம் சூழ்ந்திருந்த, அதுவரை யாரும் யாரோடும் அறிந்திராத உலகத்தில் அவர்கள் சுற்றினார்கள். தொடர்ந்து நீண்ட விளையாட்டில், அவர்கள் களைப்புறாதவர்களாயிருந்தார்கள். நிமிடங்கள் கடக்க, கடக்க அவர்கள் புதுசாகிக் கொண்டேயிருந்தார்கள். புதுப்புது விளையாட்டு களில் மூழ்கி, எழுந்து, அடுத்ததற்குப் பயணமானார்கள்.

‘‘கண்ணாமூச்சி ஆடலாமா?’’

உடனே சம்மதித்தான். மரத்தில் முகம் புதைத்து நூறு வரை எண்ண வேண்டும். பரவியிருந்த மரங்களின் இடைவெளிகளில் அவர்கள் மறைத்தார்கள்.

மீன் நாற்றம் காட்டிக் கொடுத்துவிடுமென, செத்து, விரைத்திருந்த மீன்களை அவன் காலடியிலேயே கொட்டிவிட்டு ஓடினாள் அவள்.

ஒண்ணு... ரெண்டு... மூணு...
நூறு... நூறு...

கானகம் முழுக்கத் தேடியும் அவர்கள் யாரும் அகப்படவில்லை எல்லா மரப்பருமன்களும் அவர்களின் மறைவின்றிதான் இருந்தது. அவன் துக்கத்தின் ஆழத்திற்குப் போய்க்கொண்டேயிருந்தான்...

‘‘ராஜாம்பா... ராஜாம்பா... ராஜாம்பா...’’

அவன் குரல் சிதைந்து சுக்குநூறாகி நதியில் வீழ்ந்தது. அவர்களின் ஓணான்கொடி ஊஞ்சல் அறுந்து நதியில் மிதந்து கொண்டிருந்தது. பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்த அவன் அழுகை கொஞ்ச நேரத்திலேயே கேவலாய் மாறியது. கருவேடியப்பன் கோவில் வேப்பமர நிழலில்தான் அது நின்றது.

இருட்டிவிட கொஞ்சமே பொழுதிருந்த வேளை, அற்புதம் பாட்டி ஒவ்வொரு கிணறாய், அவனைத் தேடியலைந்து, களைத்து, அவனைக் கண்டெத்தாள். மல்லாட்டைக்குள்ளிருந்து வந்த ரோஸ் நிற ராஜாம்பாள்கள் குறித்து, எதுவும் அறியாதவளாய் அவனைத் திட்டித் தீர்த்தாள்.

அன்று ‘‘எட்டுக்கு ஒண்ணு’’ என்று அவள் ஆய்ந்த காய்கள் அளக்கப்பட்டது.

இருள் அடர்ந்து போயிருந்த போது, அவர்கள் வீட்டை அடைந்தார்கள். அவனுக்குள் அப்போதும் லேசான விசும்பல்கள் நீண்டிருந்தன. வாசலில் நின்று பாட்டி மலையைப் பார்த்தாள். தீபம் அவளுக்கு மட்டும் மினுக்கிட்டாம்பூச்சிப்போல் மின்னி மேகத்தில் மறைந்தது. அற்புதம் பாட்டி நடுவீட்டுக்குள் நின்று, தன் பின் கொசுவலத்தைத் தளர்த்தினாள். பாலேறி முற்றியிருந்த நெத்துக்களாய் மல்லாட்டைகள் உதிர்ந்தன.

அவன் அவசர அவரசமாய் ஒரு ரோஸ் நிற ராஜாம்பாளின் உயிர்ப்பின் எதிர்ப்பார்ப்போடு ஒரு காயை உரித்தான்





Back to top Go down
 
~~ Tamil Story ~~ ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ மதுக்கோப்பை நினைவுகள்
» ~~ Tamil Story ~~ நெய்தல் நினைவுகள்…!
»  ~~ Tamil Story ~~ டி.என்.ஏ
» ~~ Tamil Story ~ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
» ~~ Tamil Story ~~ மரு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: