BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~அநாகரிகமான விவகாரம்   Button10

 

 ~~ Tamil Story ~~அநாகரிகமான விவகாரம்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~அநாகரிகமான விவகாரம்   Empty
PostSubject: ~~ Tamil Story ~~அநாகரிகமான விவகாரம்    ~~ Tamil Story ~~அநாகரிகமான விவகாரம்   Icon_minitimeSun Apr 03, 2011 6:07 am

~~ Tamil Story ~~அநாகரிகமான விவகாரம்




1 தந்தை தனது 5 வயது குழந்தையிடம்

2 கையில் பிராகரஸ் ரிப்போர்ட்

3 பயந்து போன மனநிலையில் குழந்தை கண்ணன்

4 அவன் அமர்ந்த நிலையில் ஏதோ ஒரு இயற்கை காட்சியை படமாக வரைந்து கொண்டிருந்தான்.

இயற்கை தனது அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்த தேர்ந்தெடுப்பது குழந்தைகளை, அல்லது குழந்தைகள் போல் மனநிலையில் உள்ளவர்களை மட்டுமே. தனது பொங்கிவரும் அன்பையும், கருணையையும் அது கட்டாயப்படுத்தி திணிப்பதில்லை. வெகு இயல்பாக எந்த தேர்ந்தெடுத்தலும் இல்லாமல், தன்னிச்சையாக வெளிப்படும் தனது ஆற்றலில் மூழ்கி திலைத்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் அந்த அன்பான வார்த்தை வெளிப்பட்டது.

‘கண்ணா........ சாப்டியா”

தனது மும்முரமான வேலையை சற்றும் கெடுத்துக் கொள்ள விரும்பாத கண்ணன் தலையை நிமிர்த்தாமல், (ஆனால் அதில் எந்தவிதமான மரியாதைக் குறைவோ, சங்கடமோ இல்லை) கூறினான்.

‘ம்”

அந்த அழகான இயற்கை காட்சியை உற்றுப் பார்க்கும் பொழுது மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எழுந்தது. அதை எந்த திசையில் இருந்து பார்க்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை. எந்த திசையில் இருந்து பார்த்தாலும் அது சரியாகத்தான் இருந்தது. அல்லது தவறாக. அது பார்ப்பவர்களது கண்ணோட்டத்தைப் பொருத்தது. அதை ஒரு பிக்காசோ மனநிலையில் வரையப்பட்ட ஓவியம் என்று கூறலாம். பிக்காசோ தனது சர்ரியல் தன்மையிலிருந்த ஒரு ஓவியம் படைக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என அவருக்குத்தான் தெரியும். ஒரு குழந்தைக்கு அவ்வளவு கடினமில்லை அது. என்னவொரு சிறு வருத்தமெனில் ஓவியமானது வரையப்படவேண்டிய காகிதத்தையும் மீறி தரைக்கெல்லாம் சென்று விட்டது. அவ்வளவுதான், அதை முக்கியமான விஷயமாக ஆக்குவது அவ்வளவு சரியில்லை ஆம்.

குழந்தைகளைப் பொருத்தவரை செய்யப்படும் செயல் அவ்வளவு முக்கியமில்லை. செயல்படுதல் மட்டுமே முக்கியம். பயன் கருதாத செயல் அது. கீதையில் கூறப்பட்டது போல். அந்த செயல் ஒரு வித கர்மயோகம். இது குழந்தைகளுக்கு மட்டுமே எளிதாக கிடைக்கக் கூடிய வரம். இயல்பாக கிடைத்த வரத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கி எறிபவர்களைப் பற்றி என்ன கூறுவது.

அன்பு தந்தையின் அன்பு வார்த்தைகள் ஒரு குழந்தைக்கு உற்சாகத்தை தரவில்லையெனில், மேலும், அக்குழந்தையின் ஒருமைத்தன்மையை கலைக்கவில்லையெனில், கவனிக்கப்பட வேண்டியது, அவ்வண்பு வார்த்தைகளில் தடவப்பட்ட விஷத்தைப் பற்றிதான்.

வாசலில் நுழையும் பொழுதே வத்தி வைக்கப்பட்டு விட்டது தாயால், அந்த பிராக்ரஸ் ரிப்போர்ட் பற்றி. தந்தையின் வருகையை பற்றிய ஒரு சிறு குறிப்பு கிடைத்ததும் ஓடிச் சென்று கட்டிக் கொள்ளக் கூடிய குழந்தை ‘ம்” என்று ஒற்றை வார்த்தையில் விஷயத்தை முடிக்கிறதென்றால் சூழ்நிலை அவ்வளவு சரியில்லை என்பதை புரிந்து கொண்டது என்றுதானே பொருள். இப்படிப்பட்டதொரு மோசமான சூழ்நிலையில் இன்பமாக வரைந்து கொண்டிருந்த படத்தை கட்டாயமாக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் மேலும் தொடர்வதையன்றி, எந்தவித வினையமுமற்ற ஒரு குழந்தையால் வேறு என்ன செய்ய முடியும்?

‘கண்ணா ............ சாப்டியா?”

தி டிபென்ட்டட் பெர்சன் : நம்பியிருத்தலின் மோசமான தன்மையை பற்றி ஒரு குழந்தை அநுபவிக்கும் முதல் நிமிடம் அது. அன்பையும் பாதுகாப்பையுமின்றி, மற்றெதையும் கொடுக்க தகுதியற்ற பாதுகாவலருக்கு மறுபெயர் தான் தந்தை. ஒரு குழந்தையின் மேல், அது தான் பெற்ற குழந்தையேயாயினும் தனது ஆக்கிரமிப்பான வார்த்தையை வெளிப்படுத்த சற்றும் உரிமையில்லாத ஒரு பாதுகாவலரின் மறுபெயர்தான் தந்தை. உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும்;, தன்னை காட்டிக் கொடுப்பதன் மூலம், ஒரு எட்டப்பனாக உருவெடுக்கிறாள் ஒருதாய்.

அவள் கூறுகிறாள் ‘ உங்கள் குழந்தை என்ன காரியம் செய்திருக்கிறான் பாருங்கள், நீங்கள் தான் அவனை தட்டிக் கேட்க வேண்டும். அவனை விட்டுவிடாதீர்கள். இரண்டில் ஒன்று அவனை பார்த்து விடுங்கள்”

தாயையும், தந்தையையும் அன்றி வேறு போக்கிடம் இல்லாத ஒரு குழந்தை என்னதான் செய்ய முடியும் ‘ம்” என்று சொல்வதைத் தவிர, அந்த குழந்தைக்கு அந்த வார்த்தையில் உள்ள போலித்தனம் எப்படி விளங்காமல் போய்விடும்.

‘கண்ணா......... சாப்டியா?”

என்னவொரு போலித்தனமான வார்த்தை இது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை ஒரு குழந்தையால் உணர முடியாமலா? போய்விடும். இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். பின்தான் வசவு வார்த்தைகள் வந்து விழும். அதற்காக வேறு என்ன செய்ய முடியும். வீட்டை விட்டு வெளியேறி தனியாகவா வாழ முடியும். மனம் முழுவதும் அப்பிய பயத்துடன் ‘ம்” என்று சொல்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.

ஒரு தந்தை ஆக்கிரமிப்பாளனாக மாறிப் போன நிமிடத்தில், அவர் தனது குழந்தையை பாதுகாக்கும் கௌரவமான தகுதியை இழந்து விடுகிறார். அவருக்கு இப்பூமியில் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பை தறவறிட்டு விட்டார். ஒரு குழந்தையின் மனதின் சமநிலையை கெடுத்து அதில் சகிக்கவொண்ணாத உணர்வுகளை அறிமுகப்படுத்தி வைத்து விட்ட கயவராக மாறிப் போகிறார். அப்படிப்பட்ட ஒரு தந்தைக்கு இப்படியொரு வார்தையை கூறத் தகுதியே இல்லை. எப்படிப்பட்டதொரு தகுதியற்ற மனிதரிடமிருந்து இப்படியொரு வார்த்தை வெளிப்படுகிறது.

‘கண்ணா... சாப்டியா”

உணவு............ இப்படிப்பட்டதொரு மோசமான சூழ்நிiயில், அவ்வளவு முக்கியமான விஷயமா இந்த உணவு உண்ணுதல் என்பது. எதற்காக இப்படிப்பட்டதொரு கேள்வி அந்த பெரிய மனிதரிடமிருந்து வெளிப்படுகிறது. சாப்பிட வைத்துவிட்டு திட்டுவதன் மூலம் தனது எதை நிரூபிக்க முயல்கிறார் இந்த பெரிய மனிதர். தனது குழந்தையை பசியில் ஒரு நாள் கூட தவிக்க விட்டதில்லை என்று எதிர்காலத்தில் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறாரா? இந்த பெரிய மனிதர். நிலைமை புரிந்து விட்டது. அந்த வார்த்தை ஒரு விஷம் தோய்க்கப்பட்ட அம்பு. இப்படி புறக்கடை வழியாக சுற்றி வந்து, பின்புறமாக தாக்கப் போகும், ஒரு தந்தையின் குரூரமான அந்த கேள்விக்கு நியாயமாக பதிலே கூறாமல் இருக்க வேண்டும். ஆனால், அண்டியிருத்தல் என்னும் ஒரு மோசமான சமுதாய வாழ்நிலைக்குள் சிக்கிக் கொண்ட ஒரே காரணத்துக்காக, குறைந்தபட்சம் ஒரு எழுத்தையாவது உபயோகப்படுத்த வேண்டியிருக்கிறது.



(கண்ணா......... சாப்டியா)

‘ம்”

தன் தந்தை தன்னை அசிங்கப்படுத்திவி;ட்டார், தன்னை கட்டாயப்படுத்தி ‘ம்” என்ற சொல்ல வைத்துவிட்டார். இல்லையென்றால் அவ்வாறு ‘ம்” என்று சொல்வதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை. நியாயாமாக தனக்கிருக்கும் கோபத்திற்கு அந்த குழந்தை தனது முகத்தை திருப்பிக் கொண்டு எழுந்து செல்வதற்கு முழு உரிமை உண்டு. ஆனால் அப்படிப்பட்டதொரு சுதந்திரமான செயலை, செய்துவிடாதவாறு தடுத்து நிறுத்திய விஷயம் எது தெரியுமா? அண்டியிருத்தல் என்கிற அசிங்கமான சமுதாய வாழ்முறைதான். அப்படிப்பட்டதொரு அசிங்கமான உணர்வை இன்று முதன்முறையாக அந்த பெரிய மனிதர் அந்த சிறுவனுக்கு கொடுத்து விட்டார்.

அவர் கட்டாயப்படுத்திவிட்டார். ‘எனக்கு ஒரு பதிலை நீ கொடுக்கத்தான் வேண்டும்” என்பதை. அவருக்கு கூற வேண்டியதாயிருந்தது ‘ம்” என்ற பதிலை. ஒரு போலித்தனத்துக்கு உட்படுத்தப்பட்டு விட்ட அசிங்கமான சூழ்நிலையை சமாளித்து முடிப்பதற்குள். அடுத்த கட்ட அசிங்கத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். அந்த மனிதர்.

தனது மகனின் ஸ்கூல் பேக்கில் எதையோ தேட ஆரம்பித்தார். அந்த பெரிய மனிதர். இப்படியெல்லாம் அசிங்கப்படுத்த ஒரு தந்தையால் மட்டுமே முடியும். தன்னுடைய வெற்றியை அல்லது தோல்வியை இரண்டில் எதை வெளிப்படுத்த வேண்டும் அல்லது வெளிப்படுத்த தேவையில்லை என்பதைப் பற்றி முடிவெடுக்க ஒரு குழந்தைக்கு முழு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தை யாரும் வழங்க வேண்டிய அவசியமில்லை. அது ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே வாய்கக்கப்பட்டது. அவ்வதிகாரத்தில் குறுக்கிடும் உரிமையை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்ளும் செயலை ஒரு நீக்ரோ அடிமையின் முதலாளி மட்டுமே செய்வான். வாய்ப்பு கிடைத்தால் தன் குழந்தையிடம் கூட ஒரு முதலாளியைப் போல் நடந்த கொள்ள இந்த தந்தைமார்கள் தயங்குவதில்லை.

அந்த ஸ்கூல் பேக்கிலிருந்து பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்ட் எடுக்கப்பட்டது.

படம் வரைந்து கொண்டிருந்த அந்த சிறுவன் தனது விரல்கள் நடுங்குவதை உணர்ந்தான். அவன் இன்னும் நிமிர்ந்து பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

அந்த செயல் நடக்கப் போகிறது என்பது முன்னரே தெரிந்த விஷயம் தான். அவன் நிமிர்ந்து பார்க்காவிட்டாலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என நன்றாகவே தெரிந்தது. இருப்பினும் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்க வேண்டாம். தன்னிடம் ஒரு வார்த்தையாவது கேட்டிருக்க வேண்டும் என்று விரும்பினான் அந்த சிறுவன். இது மிகப்பெரிய அவமானம். இன்னும் சில நிமிடங்களில் தன்னுடைய தோல்வி குறித்து மிக மோசமாக விமர்சனம் செய்யப் போகிறார் அந்த அநாகரிகமான மனிதர். இனி அவரது கோபத்தை எல்லாம் மிக மோசமாக கொட்டப் போகிறார் தன்னிடம். அந்த கோபம் எவ்வளவு நீண்ட நேரம் வெளிப்படப் போகிறது என்று தெரியவில்லை. தான் எவ்வளவு நேரம் தாக்குபிடிக்கப் போகிறோம் என்பதும் புரியவில்லை. அதை நினைக்கiயில் அடிவயிற்றிலிருந்து பயம் எழும்பி தொண்டையை அடைக்கிறது. அவ்வளவு சீக்கிரம் கண்ணீரை மட்டும் விட்டுவிடக் கூடாது என்கிற தனது உறுதிக்கு மரியாதை கொடுத்து, தனது கண்கள் இன்று நடந்து கொள்ளுமானால், அக்கண்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அப்படி நடக்கும் என்று தோன்றவில்லை. தனது கண் தன்னை ஏமாற்றி விடுமோ என்கிற பயம் அவ்வளவு சாதாரணமாக இல்லை. ஆம் நிச்சயமாக ஏமாற்றிதான் விடும் போல. கண்ணீரானது, கண்களைக்கட்டிக் கொண்டு லேசாக எட்டிப் பார்த்தது.

சென்ற வாரம் கசாப்புக் கடை வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பொழுது அந்த ஆடு இப்படித்தான், தன்னைப் போலவே பயத்துடன் விழித்துக் கொண்டிருந்தது. அதன் கண்களில் காணப்பட்ட மருட்சி மனதை நெருடுவதாக இருந்தது. அந்த ஆடு இன்னொரு ஆடு வெட்டப்படுவதைப் பார்த்து கொண்டிருந்தது. தன்னையும் இப்படித்தான் வெட்டப் போகிறார்கள் என்பதை அந்த ஆடு உணராமலா இருந்திருக்கும்? என ஆசிரியரிடம் ஆச்சரியமாக கேட்ட கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அந்த மருட்சியான கண்களுக்கும். தனது கண்களுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லையென்றே தோன்றியது அவனுக்கு. மருட்சி என்கிற விரும்பத்தகாத உணர்வை எந்தவித பாவமோ, பச்சாதாபமோ இல்லாமல் ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் யாரோ ஒரு வெளிஆள் இல்லை. தன்னையும், தன்னை விட முக்கியமான தனது உணர்வுகளையும், பாதுகாக்க வேண்டிய, மதிக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் ஒரு தந்தை. ஆனால் அவர் செய்து கொண்டிருப்பதோ, ஒரு மோசமான செயல், அவர் இதைப் பற்றியெல்லாம் யோசிப்பதாகவே தெரியவில்லை. அவர் எப்பொழது தனது ஆறாவது அறிவை இழந்து போனார் என்பதும் புரியவில்லை.

மதிப்பெண் பட்டியலை பார்வையிட்டுக் கொண்டிருந்தார் அந்த அநாகரிகமான தந்தை. இந்திய தந்தைகளுக்கு ரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் மிகச்சாதாரணமாக ஏற்பட்டு விடுவதற்குரிய காரணங்களை கண்டுபிடிக்க அவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது ஆக்கிரமிப்பாளர்களுக்கு கிடைக்கும் பரிசு. அவர்கள் கூச்சப்படுவதேயில்லை குழந்தையிடம் கூட தனது நோயை வளப்படுத்திக் கொள்கிறோமே என்று.

அந்த மதிப்பெண் பட்டியல் அவரது கோபம் முழுவதையும் ஒன்றுதிரட்டி அவரை தயார்படுத்தியது உண்மைதான். அந்த மதிப்பெண் பட்டியலுக்கு அவ்வளவு சக்தியிருந்தது. வைரஸ் கிருமிகளுக்கு மட்டுமல்ல மதிப்பெண் பட்டியலுக்கும் நோயை உருவாக்கும் தன்மை உண்டு என்பது ஒரு கவனிக்கப்படாத விஷயமாகவே இருக்கிறது. அவரது உடம்பில் ஓடிய ஐந்தரை லிட்டர் ரத்தத்திலும் உஷ்ணம் சிறிது கூடியது. அவர் போருக்கு தயாராகிவிட்டார் என்பது நிமிர்ந்து பார்க்காத அந்தச் சிறுவனின் தெறிநிலைக்கு தெளிவாக புரிந்து விட்டது.

அடுத்த ஒருமணி நேர சர்ச்சையின் உள்ளடக்கம்

1 அந்த சிறுவனுக்கு படிப்பதற்காக செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் எல்லாம் சுட்டிக் காட்டப்பட்டது.

2 அப்பா, அம்மா இல்லாத அநாதைச் சிறுவர்கள் தெருவில் திக்கற்றவர்களாக சுற்றித் திரிவதும், அவர்களைப் போன்ற நிலைமை அவனுக்கு இல்லாமல் போனது குறித்தும் குத்திக் காமிக்கப்பட்டது.

3 தினமும் அவன் 3 வேலை சாப்பிடுவதும் சுட்டிக் காண்பிக்கப்பட்டது.

4 அவனுக்காக வாங்கித்தரப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் மற்றும் அவனால் சென்ற மாதம் உடைக்கப்பட்ட 3 சக்கர சைக்கிள் சுட்டிக் காண்பிக்கப்பட்டது

5 பின் அவனால் உடைக்கப்பட்ட பென்சில்கள், தொலைக்கப்பட்ட டிபன்பாக்ஸ், வாட்டர்கேன். ஜாமிட்ரிபாக்ஸ் போன்றவை அனைத்தும் சுட்டிக் காண்பிக்கப்பட்டது.

6 மேலும் அவனால் பிய்த்தெறியப்பட்ட, ஸ்கூல்பேக்ஸ், நாசம் செய்யப்பட்ட ஸ்கூல் யூனிபார்ம், தொலைக்காப்பட்ட ஷ{ என அனைத்தும் சுட்டிக் காண்பிக்கப்பட்டது.

அவன் இன்னும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

அந்த கண் வேறு ஏமாற்றிவிட்டது.

உண்மையான அசிங்கம் யாருக்கு. ஒரு குழந்தையை பெற்றெடுப்பது தன்னுடைய சந்தோஷத்துக்காக, பெற்ற குழந்தையால் அதிகம் மகிழ்ச்சி அடைவதும் பெற்றவர்களே. எல்லா வகையிலும் தங்கள் சுகத்திற்காக, முழுக்க முழுக்க தங்கள் சொந்த சுயநலத்திற்காக குழந்தையை பெற்றெடுத்து விட்டு, ஏதோ அவர்களுக்காக தங்களது மொத்தத்தையும் தியாகம் செய்து விட்டதைப் போல பச்சைப் பொய் பேசும் ஒரு மனிதர் தனது ஆளுமையை ஒரு குழந்தையிடம் நிரூபிக்க முயல்கிறார் என்று குற்றம் சாட்டினால்; அது மிகையாகுமா?

திருமணமான புதிதில் ஒரு குழந்தை பிறந்து இந்த வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் உடைத்தால் தான் இந்த வீட்டுக்கே பெருமையென்று, வாயகல சிரித்தபடி தனது மனைவியிடம் அந்த மனிதர் கூறினாரே அதையெல்லாம் யார் நியாபகப்படுத்துவது இப்பொழுது. உண்மையில் யார் அசிங்கப்பட வேண்டும்.

வசதியில்லாத பல சிறுவர்கள் தெருவிளக்கில் படிக்கிறார்களாம்.... அவருக்கு புரிய வைக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், ஒரு தெருவிளக்கின் அருகில் எந்த ஒரு மோசமான தந்தையும் இருப்பதில்லை. விடிய விடிய குளைத்துக் கொண்டிருக்கும் தெருநாய் அப்படியொன்றும் பயத்தையோ, தொந்தரவையோ கொடுத்துவிடப் போவதில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். பின் அந்த தெருவிளக்கின் அடியில் சுற்றித் திரியும் கொசுவுக்கு இரண்டாவது இடம்தான், கொத்திக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சுவதில். நாம் நியாயவாதிகள் என்கிற காரணத்தால் முதலிடத்தை ஒரு ஆக்கிரமிப்புத் தன்மை மிகுந்த தந்தைக்குத் தான் கொடுக்க முடியும்.

பின் ஏன் தெரு விளக்கின் அடியில் படிக்கும் ஒரு குழந்தை நல்ல மதிப்பெண் பெறாது. அவர் இந்த புரிந்து கொள்ளுதை தனது இறந்தகாலத்தில் (5 வயதில்) பெற்றிருந்திருப்பார். எப்பொழுது மறந்தார் என்றுதான் தெரியவில்;லை. நியாயாக அவர் மறந்திருக்கக் கூடாது. ஆனால் மறந்துவிட்டார். அதன் விளைவு, இன்று அவர் கூறுகிறார். அந்த சிறுவன் படிப்பதற்கு என்று தனியறை கட்டிக் கொடுத்திருக்கிறாராம். அந்த அறையில் அனைத்துவிதமான வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறாராம். பச்சைபொய்யை, ஏன் பச்சைபொய் என்று சொல்கிறார்கள் தெரியுமா? எனக்கும் தெரியாது. ஆனால் சொல்ல வேண்டும்போல் இருக்கிறது. அவர் கூறுவது பச்சை பொய். அந்த குழந்தை பிறப்பதற்கு முன்னரே அந்த அறை கட்டப்பட்டு விட்டது. அந்த அறை பல்வேறு உபயோகங்களுக்காக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு விட்டது. இப்பொழுது அந்த குழந்தைக்கு அந்த அறை ஒதுக்கப்பட்டிருப்பதில் ஒரு வித சுயநலமும் உண்டு. கணவன், மனைவியாகிய அவர்கள் குழந்தைக்கு எதிராக செய்ய முடியாத பல விஷயங்களுக்கு அந்த குழந்தை தனியாக இருக்க வேண்டியது கட்டாயமானதாக இருந்தது.

உண்மை கசக்கும் என்பதோடு இன்னும் சில வார்த்தைகளையும் உபயோகிக்க வேண்டும், உண்மை அசிங்கமாக வேறு இருக்கும். பெற்ற குழந்தைக்காக அவர்கள் செய்யும் தியாகம் தான் என்னே.

ஒரு ஆச்சரியமான உண்மையை செவுட்டில் அறைந்தாற் போன்று சொல்லியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் சுற்றித்திரியும் அநாதைச் சிறுவர்கள், வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிறுவர்களை ஏக்கம் கொள்ளச் செய்கிறார்கள் என்பதுதான் அது. சுதந்திரமும், மாறாத சந்தோஷமும், நல்ல உணவு, உடை, இருப்பிடத்துக்கு நிகரான தேவைகள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம்.

பின் இந்த சுட்டிக் காண்பித்தலைப் பற்றி ஒரு வார்த்தை. அந்த நேரத்தில் அசிங்கப்படாதவர்கள், அசிங்கமானவர்கள். அந்நேத்தில் வந்து ஒட்டிக் கொள்ள வேண்டிய அசிங்க உணர்வு வரவில்லையென்றால், ஒட்டு மொத்த சூழ்நிலையும் அசிங்கமாகிப் போகிறது. தன் உணவுக்கு தானே பொறுப்பேற்கும் தெருவில் சுற்றித்திரியும் அநாதைச் சிறுவர்கள் கௌரமானவர்களாக தெரிகிறார்கள். அவர்கள் உண்ணும் உணவு ஒரு வேயையேயாயினும் அது அதிக கம்பீரத்துடன் காணப்படுகிறது. சுட்டிக் காண்பிப்பதற்கு ஒரு ஆள் கூட கிடையாது. ஒரு ராஜாவைப் போல் உணரப்படுகிறது அந்த உண்ணுதல். யாரும் அதிகார துஷ்பிரயோகமாக தனதுநாக்கை உபயொகப்படுத்த முடியாது. அவ்வாறு நடக்குமெனில் எதிர்வினை நிகழ்த்துவதற்கு ஒரு வாய்ப்பு கூட உள்ளது. ஆனால் ஒரு தந்தையிடம் அது இயலாது. அவர் தனது சுண்டுவிரலை உபயோகப்படுத்தி அமுக்கிவிடுவார். வீட்டு நாயைப் போன்று கழுத்தில் ஒரு சங்கிலி மட்டும் இல்லையே தவிர வித்தியாசங்கள் அவ்வளவாக இல்லை.

சென்ற வாரம் சக்கரம் உடைந்து போன அந்த 3 சக்கர சைக்கிள் பற்றி சொல்ல வேண்டும். வண்டியின் முன்னாள் இருப்பது ட்யூப்பா, டயரா என்று கேட்டால் 10க்கு 9 பேர் ட்யூப் என்றுதான் சொல்வார்கள். அந்த ஒருவனும் நிச்சயமாக பைத்தியக்காரனாகவோ அல்லது மனநிலை குழம்பியவனாகத்தான் இருக்க வேண்டும். பின் அந்த ஸ்கூட்டரை திருமணமான புதிதிலிருந்து இன்று வரை ஓட்டினால் டயர் தேயாமல் என்ன செய்யும். இருப்பினும் இது ஒரு உலக சாதனையாக மதிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதில் ஐயமேதும் இல்லை. இவ்வளவு திறமைசாலியான அத்தகையதொரு தந்தைக்கு நிகராக ஒரு தனயன் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லையே. ஏதோ ஒரு தமிழ் சினிமாவில் பார்த்த நியாபகம், மலை உச்சியிலிருந்து கார் உருண்டு விழுவதைப் போன்றகாட்சி, அதைப் போல் நிஜத்தில் செய்து பார்க்க ஆசை, அதற்காக எந்த மலையையும் தேடிச் செல்லவில்லையே. மாடியிலிருந்துதானே உருட்டி விட்டான். ஏதோ லேசாக அந்த சக்கரம் உடைந்துவிட்டது. அதற்காக இப்படியா திட்டுவது. அந்த 3 சக்கர சைக்கிள் தனக்காகத்தான் வாங்கிக்கொடுக்கப்பட்டது என்பது உண்மையானால். அதில் எந்தவித பரிசோதனையும் செய்துபார்க்க தனக்கு முழு உரிமையுண்டு என்பதை எப்படி புரிய வைப்பது இவர்களுக்கு. உடைபட்ட அந்த சைக்கிளுக்குப் பதிலாக தன் மனதை உடைக்கப் பார்க்கிறார்கள் என்றால் அப்படிப்பட்ட 3 சக்கர சைக்கிளை தான் இனி தொடப்போவதில்லை என்று முடிவு வேறு எடுத்துக் கொண்டான் அந்தச் சிறுவன்.

ஒரு சாதாரண பென்சில் உடைபட்டால் கூட திட்டுகிறார்கள். இதுவரை தன் வாழ்நாளில் ஒரு முறை கூட பென்சிலை உடைக்காமல் உபயோகப்படுத்தியவர்களை பார்க்க அவன் ஆசைப்பட்டதென்னவோ நிஜமாகத்தான் இருந்தது. நிஜத்தில் அது சாத்தியமா? என்று நிஜமாகவே யோசித்திருக்கிறான். ஆனால் மிக விரைவில் கண்டுபிடித்துவிட்டான். அது சாத்தியம் இல்லை என்று. சாத்தியமில்லாத ஒரு விஷயத்தை தன்னை சாதிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்றால் அவர்கள் இருக்க வேண்டிய இடம் சென்னையில் உள்ள கீழ்பாக்கம்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் அந்த அற்புத தந்தை கூறிய வார்த்தைகள் மறக்க முடியாதது.

‘ஒரு டிபன் பாக்சை கூட தொலைக்காம வச்சுக்கத் தெரியல நீயெல்லாம் படிச்சு என்ன பண்ண போற”

அதையேதான் அவனும் கேட்டான். ஒரு டிபன் பாக்சைக் கூட தொலைக்காமல் வைத்துக் கொள்ளத் தெரியவில்லை, இவரெல்லாம் ஒரு அலுவலகத்தில் வேலைபார்த்து எதை கிழிக்கப் போகிறார். அவரது வண்டவாளத்தையெல்லாம் சபையேற்றுவது யார். அவர் மறந்து விட்டாரா? இல்லை மறந்து விட்டதைப் போல் நடிக்கிறாரா? என்றுதான் தெரியவில்லை. இவையிரண்டும் இல்லையென்றால் அவருக்கு நிச்சயமாக அ;ம்னீஷியாதான். வேறு வழியிருக்க வாய்ப்பில்லை. ஒரு மேன்மையான மனிதர், அதுவும் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் நிச்சயமாக ஒரு சந்தர்ப்பவாதியாக மட்டும் இருக்க மாட்டார் என்பதை நாம் உறுதியாக நம்பித்தான் ஆக வேண்டும்.

பின் அந்த ஜாமிட்ரிபாக்ஸ், அது.....அது....... அதைப் பற்றி யாரும் கேட்க வேண்டாம். அதை அவன் தன் பிரியமான தோழிக்கு பரிசளித்துவிட்டான். ஒரு பரிசளிக்கும் உரிமை கூட அந்த பாவப்பட்ட சிறுவனுக்கு கிடையாதென்றால், இந்த உலகம் ஒரு மோசமான சிறைச்சாலையன்றி வேறில்லை.

பிறகு அந்த கிழிந்து தொங்கிய ஸ்கூல் பேக், ஓ........ கடவுளே அதைப்பற்றி என்னவென்று சொல்வது. அந்த பை உண்மையில் வலிமையானதுதான். இருப்பினும் 17 நோட், 8 புத்தகங்களை தாங்க வேண்டுமானால் இரும்பால் நெய்யப்பட்ட ஒரு பையை அல்லாவா, வாங்கித் தந்திருக்க வேண்டும். அவன் அம்மா பெயர் காயத்திரி என்பதும் கர்ணம் மல்லீஸ்வரி இல்லை என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஒரு காயத்ரிக்கு பிறந்த குழந்தையால் எதை தூக்க முடியுமோ அதை மட்டுமே கொடுத்திருக்க வேண்டும். அப்படியில்லாமல், மொத்தமாக 15 கிலோவை தூக்கிக்கொண்டு ராணுவப் பயிற்சிக்கு அனுப்புவதுபோல் அவனையும் அனுப்பினால், அந்த பை கிழிந்து போகாமல் என்ன செய்யும். ஓ...... கடவுளே இதையெல்லாம் அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது.

பள்ளிச் சீருடை அழுக்காவதைப் பற்றி காயத்ரியின் தினசரி புலம்பல் சகிக்க முடியாதது என்பதை சொல்லவும் வேண்டுமா? அவள் புலம்பிய புலம்பல்களுக்கெல்லாம், இரண்டு அதிசயங்கள் நடந்தேயாக வேண்டும்

1. ஒரு அழுக்காகாத சீருடை அணிந்த சிறுவன் ஒருவன் மாலை வேலையில் கண்களுக்கு புலப்படுவது.

2. அழுக்காக்க முடியாத துணியை கண்டுபிடித்த விஞ்ஞானி ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றுவது.

இத்தகைய தினசரி கொடுமைகள் குறித்து எந்தவொரு ஆத்மாவும் அவதானிப்பதே இல்லை. ஏனெனில் குழந்தைகளைப் பொருத்தவரை அவர்களது பிரச்சனை அவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை இந்த சமுதாயத்தால். அவர்கள் வாயை மூடிக்கொண்டு மௌனமாக அழ வேண்டும் அவ்வளவுதான். அதற்கு மேல் அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர்களுக்காக தட்டிக் கேட்பவர்களும் யாருமில்லை. ஏனெனில் அவர்கள் பெற்றோர்களை அண்டிவாழும் சமுதாய சூழ்நிலைக்கு கட்டாயப்படுத்தப் பட்டவர்கள்........ ......... .......... ......... ..............

ஆனால் எனக்கு சரியான கோபம். நான் அந்த சிறுவனுக்காக வக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கிறேன். அவன் பாட்டுக்கு எழுந்து சாப்பிடச் சென்று விட்டான். ஒரு பருப்பு சாதத்துக்கு ஆசைப் பட்டு தன்மானத்தை அடகு வைத்துவிட்டான் அந்த குட்டி ராஸ்கல். எனக்கும் பசிக்கத்தான் செய்கிறது. யார்தான் சாப்பிடாமல் இருக்கப் போகிறார்கள் இந்த உலகத்தில். இருப்பினும் இது சற்று அதிகம். கோபமாக இருக்க வேண்டிய நேரத்தில் குறைந்த பட்சம் அவ்வாறு நடிக்கவாவது செய்ய வேண்டும். இப்படி நடந்து கொண்டால் என்ன செய்வது. இது பெற்றோர்களின் அடக்கு முறை குணத்துக்கு இறையாவது போல் அல்லவா ஆகிவிடும். அவர்கள் திட்டுவார்கள். பின் பருப்பு சாதத்தில் நெய்யை ஊற்றி அழைப்பு விடுத்துவிடுவார்கள். நாம் அல்லவா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்ன அந்த பருப்பு சாதத்தில் நெய்யா ஊற்றப்பட்டிருக்கிறது. ஓ கடவுளே..........







Back to top Go down
 
~~ Tamil Story ~~அநாகரிகமான விவகாரம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  ~~ Tamil Story ~~ அணா பைசா விவகாரம்
» ~~ Tamil Story ~~ எனக்குப்பின்தான் நீ
»  ~~ Tamil Story ~~ டி.என்.ஏ
» ~~ Tamil Story ~ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
» ~~ Tamil Story ~~ மரு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: