BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ நண்பன்  Button10

 

 ~~ Tamil Story ~~ நண்பன்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ நண்பன்  Empty
PostSubject: ~~ Tamil Story ~~ நண்பன்    ~~ Tamil Story ~~ நண்பன்  Icon_minitimeSun Apr 03, 2011 9:37 am

~~ Tamil Story ~~ நண்பன்


வேலையில் மூழ்கிப் போனால்...., நேரம் போவதே தெரியவில்லை, அலைபேசி அதிர்வில், சுயநினைவு வந்து, யார் மிஸ்ஸுட் கால் கொடுத்ததுன்னு பார்த்தேன், கோட்டி (கோட்டீஸ்வரனின் சுருக்கமே!). தொலைபேசியை எடுத்து நம்பர் சுற்றி "ஹலோ...."

"மச்சான் எனக்கு துபாயில் வேலை செய்ய விசா வந்திருக்கு, நீ கொஞ்சம் அவரசமா வர்றீயா?"

"இல்ல கோட்டி, நா வர லேட் ஆயிடும், வேணும்னா நைட் 9 மணிக்கு மேல் வரவா?"

"சரி மச்சான், நான் என் வீட்ல வெயிட் பண்ணுறேன்"

"ஓகேடா நா நைட் 9 மணிக்கு வர்றேன்"

கோட்டி ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் எம்ராய்டரி போடும் வேலை செய்கிறான். என் பால்யகால நண்பன். ஒன்றாகவே ஒரே தெருவில் விளையாடினோம். படிப்பு ஏறாததினால் அவன் மூன்றாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டான். படிப்பில்லையே தவிர, நன்றாக எம்ராய்டரி வேலை செய்வான். அவனே படம் வரைந்து, எம்ராய்டரி போடுவான். படம் வரைவதிலே நன்கு தேர்ந்தவன்போல் இருந்தான்.

"மச்சான் நீ தனியா இங்கயே நாலு எம்ராய்டரி மெஷினப் போட்டு, நல்லா சம்பாதிக்கலாம்...." என்று சொன்னோம். ஆனால் அவன் அந்த எக்ஸ்போர்ட் கம்பெனியை விட்டு வர மாட்டேன் என்று சொன்னான். "என்னடா உன் முதலாளி விசுவாசத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சுன்னு....!" சொன்னால், "எனக்கு என்னம்மோ பிடிச்சிருக்கு மச்சி....!" என்பான். சொந்த மாமா மகளையே அமம்மா (அம்மாவின் அம்மா) வற்புறுத்தலின் பேரில் கல்யாணம் பண்ணினான். அவனுக்கு அந்த பெண் பிடிக்காது, ஏன் என்றால்....? பெண் கொஞ்சம் கறுப்பாக இருக்கும். கல்யாணம் ஆகி, அவன் அப்பாவால் தனிக் குடித்தனம் வைக்கப் பட்டான். அவன் சரிவர சம்பளம் வீட்டுக்குத் தராததினால்...., அவனுடைய அமம்மா தன் பேத்திக்கும், பேரனுக்கும் துணையாக அமர்த்தப் பட்டாள். அம்மம்மா பென்ஷனை வைத்து குடும்பம் ஓடியது.

"மச்சி.... சம்பாதிப்பதை எல்லாம் என்னடா செய்வன்னு" கேட்டால், "அப்படியே செலவாயிடுதுன்னு" சொல்லுவான். "அப்படி என்னடா உனக்கு செலவுன்னு கேட்டால்?" "என்னடா செய்யிறதுன்னு" ரொம்ப சாதரணமா பதில் சொல்லுவான். அவங்க அப்பா அவனை தனிக் குடித்தனம் வைத்ததே, அவன் ஒழுங்கா பணம் தரவில்லை என்றுதான். பின் நானும் அவன் அண்ணனும் அவனுக்கு புத்திமதி சொல்லி, வீட்டுக்கு பணம் தரச் சொன்னோம். கொஞ்ச நாள் நன்றாகப் போனது. ஒரு நாள் கூட அப்பெண்ணை அவன் வெளியில் கூட்டிக் கொண்டு செல்வதை நாங்கள் பார்த்ததில்லை. நாங்கள் நண்பர்களாகச் சேர்ந்து ஏதாவது பேமிலி பயணம் ஏற்பாடு செய்தாலும், அவன் தனியாகவே வருவது தொடர்ந்தது. கேட்டால் "அவளுக்கு உடம்பு சரியில்லை, அது இதுன்னு" ஏதாவது சாக்கு சொல்வதே வழக்கம்.

இரண்டு வருடம் கழித்து மனைவி உண்டாகி, பின் கலைந்தது, இதுபோல் மேலும் இரண்டு முறை நடந்தது, பின் நான்கு வருடம் கழித்து ஒரு ஆண் குழ்ந்தை பிறந்தது. என் வேலை விசயமாக, நான் அடிக்கடி வெளிஊர்களுக்குச் செல்வதாலும், வேலை பளு அதிகமானதாலும், சந்திப்புகள் ரொம்ப அரிதாகவே நடைபெற்றது. குழந்தை குட்டிகள் என்றானபின் நட்பென்பது இரண்டாம் பட்சமே.

கொஞ்ச நாளாகவே வெளிநாடு போக முயற்சி செய்துக் கொண்டிருந்தான் என்று கேள்விப் பட்டேன், இன்றுதான் அது உறுதியானது. வேக வேகமாக எல்லா வேலையும் பார்த்து, முடியாததை திங்கள் அன்று பார்த்துக் கொள்ளலாம், என்று எடுத்து வைத்து விட்டு கிளம்ப எத்தனித்த போது, மணி 9.30ரையை தாண்டி இருந்தது. கிளம்புமுன் கோட்டிக்கு, போன் செய்தேன்...

"மச்சி எங்கே இருக்கே?"

"நான் வீட்டிலேதான் இருக்கேன்" என்றான்.

"சரிடா நா இன்னும் அரைமணி நேரத்தில் அங்கிருப்பேன்" என்று சொல்லி என் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். அவன் வீடு தெரியும் என்றாலும், பல மாதங்கள் கழித்து போவதனால், சற்று தடுமாறி தடுமாறி வீடு கண்டுபிடித்து போனேன். வீட்டில் அவன், மனைவி, பாட்டி மற்றும் அவன் மாமா இருந்தார்கள். என்ன விசா என்று என்னிடம் பார்க்க கொடுத்தார்கள்.

"லேபர்ன்னுதான் போட்டிருக்கு, மற்றபடி வேறு விவரம் ஏதுமில்லைன்னு" சொன்னேன்.

"இது இவர் கூட வேலை செய்தவன்தான் அனுப்பினான், எம்ராய்டரி வேலை என்றுதான் சொன்னான்" என்றார் அவன் மாமனார்.

"சரி, இப்போ என்ன்ன செய்வதா உத்தேசம்?" என்றேன்.

"போகப் போகிறேன்" என்றான்

"ரொம்ப சந்தோசம், அப்ப ஆகா வேண்டிய காரியத்தை பார்க்க வேண்டியதுதானேன்னு" கேட்டேன்.

"அதான் உன்னை இங்கே கூப்பிட்டிருக்கிரோம்ன்னு" சொன்னான்.

அதற்குள் அவன் பாட்டி "இங்கே இருந்து அவன் ஒன்னும் கழட்டப் போறதில்லை. அவன் ஊருக்குப் போவதுதான் சரி, வீட்டுக்கும் சரியா பணம் தராம, சேர்வார் சகவாசம் சரி இல்லாம, ரொம்ப அட்டுழியம் பண்ணுறான். இந்த பேச்ச ஆரம்பிச்ச நாளில் இருந்து, வேலைக்குப் போவதே இல்லை. ஏற்கனவே ஒரு ஆறு மாசமாக, சரியவே வேலைக்குப் போக மாட்டான், ஒரு நாள் போனால், ரெண்டு நாள் லீவ் எடுப்பான். ஆனால் இந்த மூணு மாசமாக சுத்தமா வேலைக்கே போகவில்லை"

"நீ சும்மா இரு" இது கோட்டி.

"இல்ல... அவர் கொஞ்ச நாள் வெளி நாட்டுக்குப் போய் வருவதுதான் சரி!" என்றார் அவன் மாமனார்.

"சரி எப்போ டிக்கெட் போடப் போறே"

"இல்ல அது வந்து.... அதுக்குத்தான் உன்ன கூப்பிட்டிருக்கோம்...." என்றான் மென்று முழுங்கி.

"ஏய் இதில் என்ன தயக்கம் நான் பண உதவி பண்ணுறேன்" என்றேன்.

அவர்கள் முகத்தில் ஒரு மெல்லிய சந்தோசம் தெரிந்தது. விடை பெற்று வெளியில் வந்தோம், நங்கள் இருவரும்.

"ரொம்ப தேங்க்ஸ்டா என்றான்"

"இதில் என்னடா தேங்க்ஸ் வேண்டி கிடக்கு, நீ என் நண்பன், உனக்கு ஒரு நல்லது நடக்க நான் உதுவதில் எனக்கு ரொம்ப சந்தோசம்" என்றேன். மறுநாள் நாங்கள் இருவரும் அவனுக்கு, ஒரு டிரவெல்சில் டிக்கெட் புக் பண்ணினோம். சரியாக மூன்றாவது நாளில் பயணம். எல்லா ஏற்பாடும் பரபரப்பாக நடந்தது. அன்றிலிருந்து அவனுடைய அஃபிஷியல் ஸ்பான்சராக நான் மாறினேன். "மச்சி ஒரு பத்தாயிரம் இருந்தால்....., வீட்டுக்கு செலவுக்குக் கொடுப்பேன்" என்றான் நானும் அவன் திருந்தியத்தில், ரொம்ப புளங்காகிதம் அடைந்து, கொடுத்தேன். நேராக அவன் பாட்டியிடம் போய் அந்த பணத்தைக் கொடுத்து விட்டு வந்தான்.

"ரொம்ப சந்தோசம்டா.... நீ இப்படி பொறுப்போட இருப்பது" என்றேன் ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வர, இருவரும் அப்படியே திநகர் சென்றோம். அவனுக்கு தேவையானதை போத்தீசில் வாங்கினான். "மச்சி ஜட்டி பனியன் எடுக்கணும்டா" என்றான் "வாடா ஃபிளாட்பாமில் எடுக்கலாம்" என்று சொன்னதுக்கு, "இல்லடா ....,வெளி நாடெல்லாம் போறோம், கம்பெனி ஐட்டமே எடுக்கலாம்" என்றான்.

"அது சரி, ஒம்பணமா இருந்தால் பரவாயில்ல, இது என் பணமாச்சே....!" "எல்லாத்துக்கும் கணக்கு வச்சுக்கோ மச்சி, போனதும் ரியாலில் அனுப்பிடுறேன்னு" சொன்னான். "வக்கனையா பேச மட்டும் கத்துக்கிட்ட". புலியே புள்ளட்லதான் போகுது, ஆனால்... எலி ஏரோப்ளேன் கேட்ட கதையாக, எல்லாம் மிக உயர்ந்த ரக, பிராண்டட் பொருட்களையே வாங்கினான். இது காலுக்கு காதில (காதி க்ராப்ட்) கட்ட செருப்பு, ஆறுநூரில் வாங்கும் வரை தொடர்ந்தது. இரவு பத்து மணி ஆகிவிட்டதனால் கீதாஞ்சலி போய் சாப்பிட்டோம். எல்லா பில்லும் சேர்த்து பதினைந்தாயிரம் வந்தது சரி நண்பனுக்குத்தான்னு அவனிடம் பில்லை நீட்டினால், "எனக்கு என்ன மச்சி தெரியும், நீ எவ்வளவு சொல்றயோ, அத தரப் போறேன்னு" ரொம்ப கஸுவலாக சொன்னான்.

நட்புக்கு விலையேதுன்னு என்னை நானே தேற்றிக் கொண்டு. அவன் வீடு நோக்கி வண்டியை ஓட்டினேன். "மச்சி என்னடா உன் பாட்டி, நீ ஆறு மாசமாவே சரியா வேலைக்குப் போவதில்லைன்னு சொல்றாங்க" "அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சி, அது அப்படித்தான் நீ கண்டுக்காதேன்னு" சொல்லி என் வாயை அடைத்தான். மறுநாள் திங்கள், நான் வேலைக்குப் போக வேண்டி இருந்ததால்,

"மச்சி நான் சயந்திரம் வந்து உன்னைப் பார்க்கிறேன்னு" சொல்லி விட்டு விடை பெற்றேன். மறுநாள் அவன் பொருட்களைப் பேக் பண்ணி வைக்க, புதிதாக சாம்சோநைட் பெட்டி அவன் வீட்டில் இருந்தது. "என்ன மச்சி, ஏது இதுன்னு?" கேட்டேன். "இப்போதான் வாங்கினேன், மூவாயிரம்....!" என்றான்.

"என்னடா அங்கே நல்ல நல்ல பெட்டி எல்லாம் கிடைக்குமே, இப்போ நீ ஒரு அட்ட பெட்டியில், கட்டிக் கொண்டு போனால், ஊரில் இருந்து திரும்பி வரும் போது நல்ல பெட்டி வாங்கி வரலாமில்லன்னு..." "அட போ மச்சி, அட்ட பெட்டியெல்லாம் கெத்தா இருக்காது...". அடுத்தவன் காசுன்னா.... ஆயிரம் யானை வாங்குவாங்க, போலன்னு நினைச்சுக்கிட்டு பேக் பண்ணினோம்.

"மச்சி சொல்ல மறந்துட்டேனே, டிக்கெட் இன்னும் வரலைடா"

"என்னடா.....? இது நாளைக்கு ஃப்ளைட் வச்சுக்கிட்டு, இன்னும் டிக்கெட் வரலைன்னு" சொல்லுறன்னு அதிர்ச்சியாக் கேட்டா....

"என் ஃப்ரண்ட்தான், கலையில ஏபோர்டில் வைத்து தருவதாகச் சொன்னான்"

"என்னமோடா, எனக்கு இது சரியாப் படலைன்னு" சொல்லும்போதே அவன் பாட்டி "என்னப்பா... நீ அபசகுனமாச் சொல்லுற"

"இல்லப் பாட்டி, இது பஸ் டிக்கெட் மாதிரி இல்ல, டிக்கெட் கன்பார்ம் ஆகலைன்னா.... ஏபோர்டில் உள்ளேயே விட மாட்டாங்க"

"அதெல்லாம் அவனுக்குத் தெரியும், நீ இப்படி அபசகுனமாகப் பேசாதேன்னு" சொல்லுச்சு. சரி நம்ம நாக்குல சனின்னு நானும் கம்னு இருதுட்டேன். பேக்கிங் முடிய இரவு பதினோரு மணி ஆகிவிட்டது.

"சரி மச்சி, நான் நாளைக்கு காலையில் வரேன்னு" சொல்லிட்டு நான் என் வீடு வந்தேன். மறு நாள் அதிகாலையில் போனால் அவன் வீட்டில் எக்கச்சக்க ஜனம், முன்னூறு சதுரடி வீட்டில்... ஐம்பதருபது பேர், சரி முதல் முதல் போகிறான்னு எல்லோரும் வந்திருக்கிறாகள்ன்னு, நினைச்சுக்கிட்டு நான் வெளியிலேயே நின்னுக் கொண்டிருந்தேன். அவன் கம்பெனி நண்பர் ஒருவனும் என்னுடன் இருந்தான்.

"சார்...!டிக்கெட் கன்பார்ம் ஆகலைன்னு" சொன்னார்

"என்ன சார்....? இப்படி சொல்றீங்க, நேத்து ராத்திரி கூட கேட்டேனே, கலையில் டிக்கெட் வந்துவிடும்னு சொன்னானேன்னு"

"இது அவனுக்கு முந்தா நாளே தெரியுமேன்னு" சொன்னார்.எதோ நெருடவே....., அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், அமைதி காத்தேன். சரியாக ஐந்து மணிக்கு ரெண்டு மாஸ்தா வேன் வந்தது, கூட்டம் முண்டியடித்து ஏற, நானும் அந்த நண்பரும் என் பைக்கில் போவதாக முடிவானது. வண்டியில் ஏறும் முன்.... "மச்சி, ஒரு ஆயிரம் ரூபா இருக்குமான்னு....?" கேட்டான்

"சரி மச்சி, நான் ATMஇல் எடுத்துட்டு, ஏர்போர்டில் வந்து தருகிறேன்னு" சொன்னேன். ஏர்போர்டில் போய் தேவுடு காத்துதான் மிச்சம். அன்று அவனுக்கு இடமில்லை. திரும்பி வரும் வழியில், என் ட்ரவெல்ஸில் மருநாளுக்குண்டான டிக்கெட் புக் பண்ணி கொடுத்தேன்.

"உன்ன மாதிரி ஃப்ரண்ட் கிடைக்க, நான் கொடுத்து வைத்திருக்கனும்டா....."

"ஏய் ஃப்ரண்ட்ஷிப்பில், என்ன இது பார்மாலிடீஸ்" என்றேன்

"இல்லடா.... உனக்கு ரொம்ப பெரிய மனசுன்னு" சொன்னான்.

ஆனால் அவன் என் டிக்கெட்டை யூஸ் பண்ணாமலே, அவனுடைய பழைய டிக்கெட்டிலேயே..... மறுநாள் கன்பார்ம் பண்ணி வைத்தான்.

"அப்ப ஏண்டா....? இந்த டிக்கெட்ன்னு?" கேட்டதுக்கு "ஒரு சேஃப்டிக்கு...." என்று சொன்னான். மறுநாளும் அதே அளவு கூட்டத்தோட ஏர்போர்ட் சென்றோம். இந்த முறை விமானம், அவன் மானத்தை ஏற்றாமல், அவனை ஏற்றிச் சென்றது. மாலை ஏதும் போன் பண்ணினான்னா என்று விசாரிக்க, அவன் வீட்டுக்குச் சென்றேன். அவன் மாமனார்..... "போன் பன்னாருப்பா, நல்லபடியாப் போய் சேர்ந்ததாகச் சொல்லச் சொன்னார்" என்றார்.

"எனக்கு போன் பண்ணவில்லைன்னு...." சொன்னதுக்கு "எல்லாத்துக்கும் எதுக்கு போன் பண்ணனும்னு, நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்" என்றார். சரி நம் தேவை முடிந்தது அதனால்தான் வீசப் படுகிறோம்னு அங்கிருந்து கிளம்பிட்டேன். அடுத்தநாள் அவன் மாமனார் எனக்கு போன் பண்ணினார். "நீங்க கொஞ்சம் அவசரமா வீட்டுக்கு வர முடியுமா?"

"எதுக்கு சார்....?"

"இல்ல வீட்ல, அம்மா ரொம்ப கவலையா இருக்காங்க" என்றார் சரி என்று ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்டு போனால்..... எல்லோரும் ஒரே அழுகைக் கூட்டமாக இருந்தது. அங்கே அவன் கம்பெனி நண்பரும் இருந்தார். சரி முதல் முதல் வெளி நாட்டுப் பயணம், அதனால்தான் இப்படின்னு அமைதி காத்தேன்.

கோட்டி மாமனார் "என்னங்க இது ஏதோ பாலைவனத்தில் கொண்டுபோய் விட்டுட்டாங்களாம்...., சாப்பாடு ரொம்ப கஷ்டமாம், அதனால திரும்பி வரப் போறேன்னு சொல்றார்ன்னு" சொன்னார். "ஏங்க.... இதெல்லாம் சகஜம், வலைகுடாவே பாலைவனம்தான், கொஞ்சநாள் பழ்கிட்டுதுன்னா சரியாகிவிடும்னு" சொன்னேன்.

"இல்லங்க.... அங்கே போய் அவர் ஒன்னும் அப்படி கஷ்டப் பட வேண்டாம். நாங்களே.... அவர திரும்ப வர சொல்லி விட்டோம்" என்றார்.

"என்னங்க இது கொஞ்சங்கூட அக்கறையே இல்லாம பேசுறீங்க, அப்போ அவன் வாங்கிப் போன கடத்துகெல்லாம் யார்....? பதில் சொல்றது"

"அதுக்கு அவர அப்படி தவிக்க விட்டு, நாங்க நல்ல இருக்க வேண்டாம்" என்றார்.

"சரி உங்களுக்கு எது விருப்பமோ அதச் செய்யுங்க" என்று சொல்லி நான் கிளம்பி வந்து விட்டேன். அந்த நண்பரும் என்னுடனே கிளம்பி விட்டார்.

"எப்படியோ போய்ட்டான்னு.... பார்த்தா, இப்படி ஒரு குண்டத் தூக்கி போடுறாங்களே....! அப்ப நான் கொடுத்த பணம் என்னாகும்னு தெரியலையேன்னு" அவர் சொன்னார்.

"என்ன சார் நீங்களும் பணம் கொடுத்தீங்களா....?"

"ஆமா சார் இருபதாயிரம்" என்றார் அவர்.

"என்ன சார் நானும் ஐம்பதாயிரத்துக்கு மேல் கொடுத்திருப்பேன்" என்றேன்.

"ஐய்யையோ என்ன சார் இவ்வளவு தொகை கொடுத்திருக்கிறீங்க, ஆனா அவன் மாமனார் என்னிடம் நான்தான் அவருக்கு தேவையானப் பணத்தை புரட்டிக் கொடுத்தேன். என்று சொல்கிறாரேன்னு" அதிர்ச்சியாக் கேட்டார்.

"அவர் எப்படி சொன்னால் என்ன...? நான் அவன நம்பித்தான் பணம் கொடுத்தேன்" என்றேன்.

"இருந்தாலும்..... அவன் இப்போது திரும்பி வந்தால்.... எப்படி நமக்கு பணத்த திருப்பித் தருவான்....?" என்றார்.

"பார்க்கலாம் சார்ன்னு...." நான் ரொம்ப கவலையா வீட்டுக்கு வந்தேன். பின் நான் என் வேலையில் ரொம்ப பிஸியானதால்..... ஒரு மாதம் உலகம் சுற்றுகிறதான்னு....? கூடத் தெரியாமல் இருந்தேன். ஒரு நாள் ஏதேச்சையாய் கோட்டி நண்பரை கடைத் தெருவில் பார்த்தேன்.

"என்ன சார் எப்படி இருக்கீங்க?" என்று கேட்டதுக்கு, "நல்லா இருக்கேன் சார். கோட்டி ஊரிலிருந்து வந்துட்டான் சார்" என்றார்

"என்ன வந்துட்டானா?"

"ஆமா உங்களுக்கு தெரியாதா?"

"இல்ல சார்" என்றேன் அப்பாவியாய்.

"ஆமா சார் வந்து ஒரு வாரம் ஆகப் போகிறது."

"ஏன் சார் வந்தானாம்..." என்றேன்

"அது சார் அந்த கவிதா இல்ல?"

"எந்த கவிதா...?"

"அதான் சார்... அவன் கீப்பா வச்சிருந்தானே....! அந்த கவிதா"

"கீப்பா....? எப்போ எங்கே?"

"என்ன சார் உங்களுக்கு, விசயமே தெரியாதா...? அவன் பழைய எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்யும் போது, அவள் அவன் கூட வேலை செய்தாள், அப்படியே பழக்கமாகிப் போய், இது கள்ளத் தொடர்பா ரொம்ப வருஷம் முன்னாடி இருந்தே தொடர்ந்து வருகிறது. அவளுக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு குழ்ந்தை இருக்கு. இருந்தாலும் இவன் கூட அவ தொடர்பை வச்சுக்கிட்டா."

"என்ன சார்....! எனக்கு இது நாள் வரை தெரியாதே?"

"போங்க சார்...! நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க" என்றார்.

நேராக அவன் வீட்டுக்கு போனேன், அவன் வீட்டில் இல்லை, அவன் மனைவி மட்டும்தான் இருந்தது.

"அண்ணே உங்கள மாதிரி ஃப்ரண்ட் கிடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்ணே".










Back to top Go down
 
~~ Tamil Story ~~ நண்பன்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  ~~ Tamil Story ~~ ஆத்ம நண்பன்
»  ~~ Tamil Story ~~ யாருக்கு யார் நண்பன்?
» ~~ Tamil story ~~ டி.என்.ஏ
»  == Tamil Story ~~ பி ன் வா ச ல்
» -- Tamil Story ~~ ஆ!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: