BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ மழை   Button10

 

 ~~ Tamil Story ~~ மழை

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ மழை   Empty
PostSubject: ~~ Tamil Story ~~ மழை    ~~ Tamil Story ~~ மழை   Icon_minitimeSat Apr 09, 2011 4:07 am

~~ Tamil Story ~~ மழை






குளிர்ந்த நீரின் முதல் துளி உடலின் மேல் தோலை ஸ்பரிசிக்கும் சில்லென்ற முதல் உணர்வு அனுபவிக்கும் ஆசை பிறந்த முதல் பருவம் இளம் பருவம். 6 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது. மாலை நேரம் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். மணி 3.45 ஐ தொட்டது. ஆசிரியருக்குத் தெரியாமல் புத்தகங்களையெல்லாம் பைக்குள் திணித்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் 4 மணிக்கு பள்ளி விட்டுவிடும். அந்த மணி அடிக்கும் சப்தம் தேனாக காதில் ஒலிக்கும். அந்த சந்தோஷத்தை அனுபவிக்க தயராகிக் கொண்டிருந்தேன். நான் மட்டுமல்ல எல்லோரும் அப்படித்தான். 3.45க்கு மேல் பாடம் நடத்துவது வீண் என்பது ஆசிரியருக்கும் தெரியும். அவரும் அணிச்சையாக பாடம் நடத்துவதை நிறுத்தி விடுவார். எத்தனை வருட அநுபவம் அவருக்கு. மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. வெளியே அரை அடி உயரத்திற்கு நீர் தேங்கியிருந்தது. அதில் விளையாடுவதே ஒரு தனி சுகம் தான். செருப்பை தயாராக கையில் எடுத்து வைத்துக் கொண்டேன். கடவுளிடம் வேண்டிக் கொண்டேன், மழை அடுத்து ஒரு மணி நேரத்துக்கு விடாமல் பெய்ய வேண்டும் என்று.

உலகெங்கும் சுதந்திர நாட்டம் எப்பொழுது ஏற்படுகிறது தெரியுமா? அடக்கப்படும் பொழுதுதான். அடிமைத் தனம் என்பது அளவில் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். ஆனால் உணர்வைப் பொறுத்த வரை அனைத்தும் கசப்பானவைதான். நான் இன்னும் 15 நிமிடத்தில் விடுதலையடையப் போகிறேன் என்ற சந்தோஷம் எந்த விதத்திலும் குறைந்ததில்லை. என்னை வரவேற்க மழை தயாராக பொழிந்து கொண்டிருந்தது. எனக்கே எனக்காக மட்டும். மற்ற யாரும் தயாராயில்லை. அனைவரும் குடை, மழை அங்கி என தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு பள்ளியிலும் நல்ல திடகாத்திரமான விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமானால். மாலை நேரத்தில் பள்ளியின் மணி அடிக்கும் நேரத்தில் வாசலின் அருகே நின்று கொள்ள வேண்டும். அந்த மணி அடிக்கப்பட்டதும் சுதந்திரம் அடைந்துவிட்ட மகிழ்ச்சியில் தலைதெறிக்க ஓடி வருவார்கள் பார்க்க வேண்டுமே? சிறந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர்கள் எல்லாம் நமது நாட்டிற்கு அங்கு தான் கிடைப்பார்கள். வீட்டிற்கு சென்று அப்படி ஒன்றும் செய்துவிடப்போவதில்லை. இருப்பினம் பள்ளியை விட்டு வெளியேறுவதில் அப்படி ஒரு ஆவேசம் பிறக்கும். நான் இன்று விடுதலை அடையப் போகும் ஆனந்தத்துடன் காத்திருந்தேன். காரணம் மழை. அதில் நனைவது என்பது குதூகலமான விஷயம்.

மணி அடிக்க இன்னும் 2 நிமிடம் தான் நான் வாசலின் அருகே நகர்ந்து நகர்ந்து போய் உட்கார்ந்து கொண்டேன். ஆசிரியர் அதை கவனித்துவிட்டார். என்னை எச்சரித்தார். நான் அதை பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் இவ்வாறு எச்சரிப்பது முதல் முறை அல்ல. எனக்கு பழகிவிட்டது. நியாயமாக அவருக்கு அலுத்திருக்க வேண்டும். அப்படி என்ன பிடிவாதமோ.?

ஏனோ இன்று மணி அடிக்க வேண்டிய நேரத்தில் அடிக்க வில்லை? இரண்டு நிமிடம் அதிகமாகிவிட்டது. இரண்டு நிமிடத்தின் முக்கியத்துவம் தெரியாதவர்கள். திடீரென்று இன்டர்காம் ஒலித்தது. மழை அதிகமாக பெய்வதால் இன்று அரை மணி நேரம் கழித்துதான் பள்ளி விடப்படும் என்று அந்த தலைமை ஆசிரியர் அறிவித்து விட்டார். எனது ஆசையில் கிலோ கணக்கில் மண்ணை அள்ளி போட்டு விட்டார். வேறு என்ன செய்ய முடியும். வாசலின் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஏக்கத்துடன் மழை பொழிவதை பார்த்துக் கொண்டிருந்தேன். மழையின் வேகம் மேலும் அதிகரித்தது. சற்றும் குறைவதாக இல்லை. சிறுவன் என்பதால் எனக்கு கோபம் வரக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் அதை நான் வண்மையாக கண்டிக்கிறேன். என்றாவது ஒரு நாள் அநத தலைமை ஆசிரியரின் வழுக்கைத்தலையில். என்னால் எரியப்படப் போகிற அந்த வலிமையான பொருள் மோதி பெருஞ்சேதத்தை ஏற்படுத்தத்தான் போகிறது. ஏக்கமும் கோபமும் சேர்ந்து என்னை நிலை குலைத்துக் கொண்டிருந்த நேரத்தில் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை திடீரென்று மணி அடித்து விட்டார்கள். மழை லேசாக குறைந்திருந்தது. எழுந்து தலை தெறிக்க ஓடினேன். எனது பை ரெயின் ப்ரூப் பை என்பதால் புத்தகம் நனைந்து விடும் என்ற கவலை எனக்கில்லை. சந்தோஷமாக நனைய ஆரம்பித்தேன். ஒவ்வொரு மழைத்துளியும் எனது உயிர் வரை சென்றது. ரசனை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஏக்கத்தின் விளைவு. இன்று நான் நன்றி சொல்கிறேன் அந்த தலைமையாசிரியருக்கு, என்னை அந்த அளவுக்கு ஏங்க வைத்தவர் அவர் தானே? அவர் தலை தப்பித்தது இதனால் தானோ என்னவோ. அவர் செய்த தர்மம் அவர் தலையை காத்தது.

காதலியின் முதல் ஸ்பரிசத்துக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை மழையின் முதல் ஸ்பரிசம். எனது 22 ஆவது வயதில் அவளை சந்தித்தேன். பிரீத்தி. லவ் அட் பஸ்ட் சைட் என்பது எவ்வளவு உண்மை. மழைத்துளிக்கு பின் என் உள் வரை சென்ற மற்றொரு விஷயம் அவளது பார்வை. உள்ளே, உள்ளே, உள்ளே........ ஆழமாக அவளது பார்வையும். மழைத்துளியும் சந்தித்துக் கொண்டன. 22 வயதில் ஆரம்பித்தது 24 வயது எப்பொழுது ஆனது என்றே தெரியவில்லை. நான் முழுமையாக காதல் செய்தேன். நான் வாழ்க்கையில முழுமையாக செய்த ஒரே விஷயம் இது தான். காதல் என்றாலே அது முழுமைதான். அது அறைகுறையாக இருக்க முடியாது.

காலை 9 மணி ஆனால் என்னை எங்கு பார்க்க வேண்டும என்று கிட்டத்தட்ட எல்லோர்க்கும் தெரிந்து விட்டது. அது அவள் கல்லூரி செல்லும் வழியில் இருக்கும் டீ கடை. ஒரு நாள் கூட ஆப்சன்ட் கிடையாது. அதே போல் மாலை நேரமும். என்னை வெகுவாக அலைய வைத்துவிட்டாள் அவள். அவளுக்கு சிறிது கூட மனசாட்சி இல்லை ஒன்றரை ஆண்டுகளாக . ஆனால் அதன் பின் அவள் மனசாட்சி தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது. அவள் மனசாட்சியை விழிக்கச் செய்ய எவ்வளவு ரத்தம் சிந்த வேண்டியிருந்தது. ம்..... சற்று வலிக்கத்தான் செய்தது. சிந்திய ரத்தத்தை மையமாக பயன் படுத்தி அந்த கடிதத்தை எழுதி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

நான் வாழ்க்கiயில் அதிகம் எரிச்சலான சமயங்கள் என்று கணக்கெடுத்தால் அதில் இந்த சம்பவமும் இடம் பெறும். கையை காயப்படுத்தி வலிந்த ரத்தத்தில் கடிதம் எழுதிக் கொடுத்தால். அவள் அதை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு பிழை திருத்திக் கொண்டிருக்கிறாள். ஒரு மனிதனால் எவ்வளவுதான் பொருத்துக் கொள்ள முடியும். பின்னர் திருமணத்திற்கு பிறகு இது குறித்து கேட்ட பொழுது இவ்வாறு கூறினாள். அதை சிவப்பு மை என்று நினைத்துவிட்டதாக. அதன் பிறகு தான் எனக்கே இந்த ஐடியா வந்தது. சிவப்பு மையில் எழுதிவிட்டு ரத்தம் என்று பொய் சொல்லியிருக்கலாமோ என்று கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோஜனம்.

அதன் பின் பல்வேறு சாகசங்கள் செய்து அவளை மடக்கிவிட்டேன். பின் தான் தெரிந்தது குடும்பம் நடத்த வேண்டுமென்றால் வேலை என்று ஒன்று வேண்டும் என்று. எனக்கு ஆச்சரியமாக உள்ளது. எப்படி இதை நான் இந்த 2 வருடங்களில் யோசிக்கவேயில்லை என்று. பின் கடினமாக போராடி பொழைப்பை தேடிப் பிடிப்பதற்குள் செத்துப் பிழைக்க வேண்டியதாகப் போய்விட்டது. ஒரு வருடமும் ஓடிவிட்டது. விஷயம் வீட்டிற்கு தெரிந்து பெரிய பிரச்சனையாகிவிட்டது. காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்து பிரச்சனையாகாமல் இருந்தால் பூமி அல்லவா அழிந்துவிடும். நான் என்ன வேறு மாதிரியாகவா யூகிக்க முடியும். முன்பே தெரிந்தது தான். ஏற்கனவே திட்டங்கள் எல்லாம் தயாராக இருந்தன. வீட்டிலிருக்கும் வில்லன்களுக்குத் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வது தான். இது பழைய ட்ரிக் தான் என்றாலும் நல்ல பலன் கொடுக்கும் என்பதால் அதிகமாக யோசிக்கவில்லை.

அன்று மழை பெய்து கொண்டிருந்தது. நான் வேலை பார்க்கும் சென்னையிலேயே வீடு பார்த்து விட்டேன். திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டியது தான் இனி செய்ய வேண்டிய ஒரே வேலை. ஆனால் நடந்ததோ? பொன்னம்பலத்தை நினைவு படுத்தும் அவளது அப்பன். விஷயம் தெரிந்து மருந்தை குடித்துவிட்டானாம். அவளும் தந்தை பாசத்தில் மயங்கி வீட்டிலேயே இருந்து விட்டாளாம். விஷயம் நண்பன் மூலமாக எனக்கு வந்தது. எனக்கு அந்த நேரம் அந்த மழை சுகமானதாக இல்லை. உடலில் அமிலத்தை ஊற்றுவது போல் இருந்தது. என் உயிரின் ஆழம் வரை சென்ற அந்த மழை இன்று என் தோலில் படுவதே எரிச்சலைக் கொடுத்தது. என் கண்ணீருடன் மழை நீரும் கலந்து காணாமல் போனது. அன்று நான் ரயில்வே ஸ்டேசனில் மழையில் நனைந்தபடி 4 மணி நேரமாக நின்றிருந்தேன். இரயிலும் என்னை கடந்து சென்று விட்டது. வெகு நேரமாக எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு

சென்னையில் என் நண்பர்களுடன் அன்று தான் சினிமாவுக்குப் போயிருந்தேன். சினிமாவில் விஜயகாந்த் பொன்னம்பலத்தை போட்டு புரட்டி எடுத்துக் கொண்டிருந்தார். என்னால் சந்தோசப்படாமல் இருக்க முடியவில்லை. என்ன ஒரு குத்து. அந்த மூக்கிலிருந்து ரத்தம் பொல பொலவென வலிந்த பொழுது. ஆகா என் ஆத்மா சாந்தி அடைந்தது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு வீட்டிலிருந்து போன் வந்தது உடனே வீட்டிற்கு வருமாறும் காரணம் கேட்க வேண்டாம் என்றும் விஷயம் சீரியஸ் என்றும். நான் பதறியடித்துக் கொண்டு ஓடினேன். விஷயம் உண்மையிலேயே சீரியஸ்தான். அங்கு எனக்கு திருமணப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. 8 மாதங்களுக்கு முன் மருந்தைக் குடித்த பொன்னம்பலத்தான் இன்று என்னை மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கிறான். அவன் பெண்ணின் காதல் விஷயம் ஊர் முழுவதும் தெரிந்து யாரும் பெண் கேட்டு வரவில்லையாம். என் பெண்ணின் வாழ்க்கையையே கெடுத்து விட்டீர்களே என்று என் தந்தையிடம் வந்து புலம்பியிருக்கிறான். அவனை நாலு அப்பு அப்பிவிடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் மேலும் சில விஷயங்கள் அறிந்து நான் அமைதியாகிவிட்டேன். அவளும் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். அவளது கல்லூரி மேற்படிப்பும் வீணாகிப் போனது.

சில மாதங்களுக்குப் பிறகு திருமணமான புதிதில் அவளுடன் ஊட்டிக்கு சென்றிருந்தேன். சென்னை வெயிலின் அருமை அங்குதான் புரிந்தது. இனிமேல் சும்மா சும்மா சென்னை வெயிலை திட்டக் கூடாது என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதில் அப்படி என்னதான் பிரச்சனை இருக்கிறது என்று இன்றளவும் எனக்குப் புரியவில்லை. கிராமங்களில் பசுக்களை சினைக்கு அழைத்துச் செல்வார்கள். அந்த பசுவுக்கு தான் எந்த எருதுடன் சேரப்போகிறோம் என்று தெரியாது. அதற்கு 5 அறிவு என்பதால் எந்த உணர்வும் அற்று இருக்கும். ஆனால் மனிதனுக்கு ஆறு அறிவு இருந்தும். அவன் மாட்டைப் போலவே மனிதனையும் நடத்துகிறான். ஆண் பெண்ணைப் பார்க்கக் கூடாது, பெண் ஆணை பார்க்கக் கூடாது. பேசக் கூடாது, பெரியவர்களாக பார்த்து பேசி ஏற்பாடு செய்வார்கள். பெண் என்பவள் தலையை குனிந்து தாலியைக் கட்டிக் கொள்ள வேண்டும். பின் ஐயர் குறித்துக் கொடுத்த நல்ல நேரத்தில் சாந்தி முகூர்த்தத்தை முடித்துக் கொள்ள வேண்டும். முன் பின் பார்த்து பேசியறியாத ஒரு ஆணுடன், முதலிரவு அன்று தனது பாலுணர்வை தனித்துக் கொள்ள வேண்டும் என்று அனுமதி அளிக்கும் இந்த சமுதாயப் போக்கு மாட்டையும், மனிதனையும் வித்தியாசமின்றி நடத்துவதன்றி வேறு எப்படி எடுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் எனக்கும் பிரீத்திக்கும் அப்படிப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை. நாங்கள் ஒருவரையொருவர் முழுமையாக காதலித்திருந்தோம். நாங்கள் நல்ல மழைக் காலத்தில் ஊட்டிக்கு வந்து விட்டதால் எங்களால் வெளியே சுற்றிப்பார்க்க முடியவில்லை. ஊட்டியில் அந்த குளிரில் மழையில் நனைந்தால் அது என் உயிர் வரை செல்லாது. என் உயிரை எடுத்துச் சென்று விடும். அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தோம். அடுத்த மழைக்காலத்துக்குள் பிரீத்தி கருவுற்றிருந்தாள். சென்னையில் மழை பெய்தால் இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு, படகுக்கு மாறிவிட வேண்டும். அதோடு நீச்சலும் கற்றிருக்க வேண்டும். ரோட்டில் செல்லும்பொழுது ஒரு குச்சியை கையில் வைத்துக் கொள்வது நல்லது. ஆர்மியில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு கன்னிவெடியை கண்டுபிடிப்பதற்காக முன்னாள் குத்திக் கொண்டே செல்வார்கள். அது போன்று முழங்கால் வரை தேங்கி நிற்கும் தண்ணீரில் முன்னாள் குத்திக் கொண்டே செல்வது நல்லது. இல்லையென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஆங்காங்கே சாக்கடை மூடிகளை திறந்த வைத்திருப்பார்கள். அசட்டையாக இருந்துவிட்டால் சாக்கடை சமாதிதான். வாழ்க்கை எவ்வளவு ரிஸ்கானது என்பதை சென்னையில் இந்த மழைக்காலத்தின் பொழுது தான் புரிந்து கொண்டேன்.

எனது அலுவலகத்தில் என்னை அலைய விட்டுக் கொண்டிருந்தார்கள். வேளச்சேரி, தாம்பரம், வடபழனி, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை என ஒரு நாளுக்கு 50, 60 கிலோ மீட்டர்கள் பைக்கில் சுற்ற வேண்டியதிருக்கும். இந்த மழை நேரத்தில் பாவம் புண்ணியம் பார்க்காமல் அலைய விட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொருத்த வரை வேலை மட்டும் தான் முக்கியம். அன்று நான் நுங்கம்பாக்கம் சாலையில் போய்க் கொண்டிருந்தேன். வண்டியின் பாதிதான் வெளியே தெரிந்தது. பாதி தண்ணீருக்குள் மூழ்கியிருந்தது. எஞசினுக்குள் தண்ணீர் புகுந்து வண்டி உருமிக் கொண்டிருந்தது. வெகு நேர போராடடத்துக்குப் பிறகு வண்டி தன் உயிரை விட்டது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராடி பார்த்தேன். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. திடீரென செல்போன் ஒலித்தது.

செல்போனை தூக்கி எறிந்து விடலாம் போல இருந்தது. வேண்டாவெறுப்பாக எடுத்து ஆன் செய்தேன். பக்கத்து வீட்டு பார்வதியம்மாள் பேசினார். ப்ரீத்திக்கு பிரசவ வலி எடுத்துவிட்டதாகவும். அவளை வடபழனி ஹாஸ்பிட்டலில் சேர்த்திருப்பதாகவும். நான் விழுந்தடித்து ஓடினேன். அந்த வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்தினேன். அவன் கூசாமல் 400 ரூபாய் கேட்டான். இத்தனை மழையிலும் அரசு பேருந்து ஒன்று அந்த வழியாக போர் வீரனைப் போல சென்று கொண்டிருந்தது. ஓடிச் சென்று அதில் தாவிக் கொண்டேன். உயிரை விடப் போகும் வயதான கிழவனைப் போல அந்த பேருந்து தத்தி தத்தி சென்று கொண்டிருந்தது. பேருந்தின் ஓட்டுனர் குத்துமதிப்பாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். மழை காரணமாக வண்டியை பல தடங்களில் மாற்றி விட்டார்கள். எந்த ரூட் வழியாக சென்றார்கள் என்றே தெரியவில்லை. திடீரென்று வண்டி ஒரு சப்வேக்குள் சென்றது. சென்னையில் குளம் வெட்டி வைத்திருக்கிறார்கள் என்றால் அது சப்வே தான். தண்ணீர் குளம் போல் தேங்கியிருந்தது.

பேருந்து ஓட்டுநர் கப்பல் கேப்டனாகும் ஆசையில் இருந்து வேறு வழியில்லாமல் பேருந்து ஓட்டுநராக வந்து விட்டார் போல வண்டியை அந்த குளத்துக்குள் சிரித்துக் கொண்டே விட்டுவிட்டார். பேருந்து மூழ்கிவிட்டது. அந்த மழையிலும் சுற்றிநின்று வேடிக்கை பார்க்க 200 பேர் கூடிவிட்டார்கள். என்னமாக ரசித்தார்கள் தெரியுமா? ஏதோ ஒன்றிரண்டு பேர் பேருந்தில மாட்டியிருப்பாவர்களை காப்பாற்ற தண்ணீருக்குள் குதித்தார்கள். எனக்குத் தெரிந்த அரைகுறை நீச்சலை வைத்துக் கொண்டு இரண்டு குழந்தைகளோடு கரையேறினேன். தண்ணீரில் மொத்தமாக மூழ்கியதில் செல் போன் நனைந்துவிட்டது. நடந்து சென்றிருந்தால் இந்நேரம் சென்றிருக்கலாம். எதை நம்பினாலும் நம்பலாம் மழை காலத்தில் சென்னை போக்குவரத்தை மட்டும் நம்பி விடக்கூடாது.

நடந்து செல்வதே உத்தமம் என்ற நம்பிக்கiயில் நடக்க ஆரம்பித்தேன். ஓட்டமும் நடையுமாக ஹாஸ்பிட்டலை நெருங்கிவிட்டேன். என்ன அவசரத்தில் சென்றானோ அந்த ஆட்டோக்காரன் சேற்றை வாரியிரைத்துவிட்டு சென்றான்.

‘ஆட்டோக்காரன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.” மனதிற்குள்ளாக பாராட்டிவிட்டு மருத்துவமனைக்குள் சென்றேன். பார்வதியம்மாள் முகமலர்ச்சியுடன் வரவேற்றார். ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கூறி இனிப்பை வாய்க்குள் திணித்தார். மகிழ்ச்சியாக இருந்தாலும். இந்த மழை எனக்கு அவ்வளவு இனிமையாக இல்லை. அன்று ரசித்த அதே மழைதான் இன்று இவ்வளவு இம்சையை கொடுத்துவிட்டது. வாழ்வில் சின்னசின்ன விஷயங்களை ரசிக்கும் மனப்பான்மையை நான் இழந்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்ட தன்மையுடன் என்னை இழுத்தபடி சென்று கொண்டேயிருக்கிறது. நான் அதன் பின்னே ஓடிக் கொண்டேயிருக்கிறேன். நின்று நிதானிக்க நேரமில்லை. அதற்குள்ளாக ஆயிரம் கடமைகள் என்னை அழைத்தப்படி வரிசையில் காத்து கொண்டிருக்கின்றன. வேலை டென்ஷன், மாதச்சம்பள எதிர்பார்ப்பு, மனைவி, இப்பொழுது குழந்தை. இவையெல்லாம் தான் என் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. நிர்ணயிக்கப்போகின்றன. வேறு புதிதாக எதிர்பார்க்க ஒன்றுமில்லை. அவ்வப்பொழுது வேறு சில பெண்கள் மீது கவனம் செல்லும். ஆனால் என்ன செய்வது நான் வேறு நல்லவனாக பிறந்து விட்டேன்.

அதன் பிறகு வாழ்க்கை போவதே தெரியாமல் நழுவிக் கொண்டிருந்தது. விடிவதும். இரவாவதும் மட்டுமே கண்ணில் படுகிறது. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையா? எப்படி இதற்குள் தள்ளப்பட்டேன். வாழ்க்கiயில் ரிடையர்டுமென்ட் என்பது எவ்வளவு தேவையான, எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

நான் சிறு வயதில் செய்த சேட்டைகள் எல்லாம் எந்த அளவிற்கு என் தந்தையை கொடுமை படுத்தியிருக்கும் என்பது எனக்கு இப்பொழுதுதான் புரிந்தது. எனது பையனுக்கு இப்பொழுது 12 வயது. என்னை பாடாய் படுத்துகிறான். எதை செய்யக் கூடாது என்று சொல்கிறேனோ அதைத்தான் செய்வான். அவன் வீட்டில் உடைத்த பொருட்கள் போக மிஞ்சியிருக்கும் பொருட்களை பாதுகாப்பதற்கு நியாயமாக ஒரு ஆளை வேலைக்கு வைக்க வேண்டும். அதற்கு வசதியில்லாததால் என் மனைவிதான் அந்த வேலையை செய்கிறாள். எங்களுக்கு ஒரு குழந்தையே போதும் என்று உணர்த்திவிட்டான். அவன் தொல்லை பொருக்க முடியாமல் டாக்டரிடம் சென்று காட்டினால் அவர் எனக்கு இப்படி அட்வைஸ் செய்கிறார்.
‘குழந்தைன்னா அப்படித்தான் இருக்கும், சேட்டை பண்ணாதான் குழந்தை, உங்க குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதற்கு அவன் செய்கிற சேட்;டைதான் ஆதாரம்.”
அவருக்கு என்ன தெரியும் நான் படுகிற பாடு . அந்த டாக்டரையும் என் பையனையும் ஒரு அறைக்குள் இரண்டு நாட்கள் அடைத்துவிட்டாள் தெரியும் அந்த டாக்டருக்கு பைத்தியம் பிடித்துவிடும். கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்பான். பதில் சொல்லவில்லை என்றால் விட மாட்டான். அவனும் என்னைபோலத்தான் மழை நீரில் நனைவதில் அப்படி ஒரு ஆர்வம். தடுக்ககூடாது என்று நினத்தாலும் தடுத்துவிடுவேன். காரணம் அவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டால் என்னால் தாங்க முடியாது.

வாழ்க்கை எவ்வளவு குறுகியதாக இருக்கிறது என்பது குழந்தைகளின் வளர்ச்சியை பார்க்கும் பொழுதுதான் உணர முடிகிறது. என் முடியின் நிறம் வேறு சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருந்தது. அன்று தான் நிதானித்து கவனித்தேன். அவன் எனக்கு மேல் வளர்ந்து விட்டான். அவனது சேட்டைகளும் சற்று குறைந்திருந்தது. எனக்கு சற்று பதற்றமாகத்தான் இருந்தது. இந்த வயதில் தானே நானும் ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு ஓட எத்தனித்தேன். அவனும் ஏதோ ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு வந்துவிடுவானோ என்று பயந்தது உண்மைதான். இல்லையென்று சொல்வதற்கில்லை. ஏன் தந்தையான பின் இத்தகைய பயம் வருகிறது. நான் என் பையனின் எதிர் காலம் குறித்து கவலைப்படுவதால் தான். அவன் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான். ஆனால் நான் இன்று நன்றாகத்தானே இருக்கிறேன். அப்படி ஒன்றும் மோசமாகப் போய்விடவில்லையே. என்னதான் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் பயம் இருக்கத்தான் செய்தது. கடவுள் போதுமென்று நினைத்துவிட்டாரோ என்னவோ? என்னை இதற்கு மேல் சோதிக்க வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ? என் பையன் என்னைப் போல் இல்லை, அவன் நன்றாகப் படித்தான். நல்ல வேலையில் அமர்ந்தான். நான் பார்த்த பெண்ணை மனந்து கொண்டான். அவனது வாழ்க்கை மிக நேராக சென்றது.

நான் எதிர் பார்த்த ரிடையர்டுமென்ட்டும் எனக்கு கிடைத்தது. வாழ்க்கையை இனிமையாக கழிக்கலாம் என்று நினைத்தால் சலிப்பு ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் 24 மணி நேரம் போதவில்லை. இப்பொழுது 24 மணி நேரத்தை கடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. மனம் எதிலும் லயிக்க மறுக்கிறது. வாழ்க்கை வீணடிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. இத்தனை நாள் போராட்டங்கள், ஆசைகள் அனைத்தும் எதற்காக என்கிற மிகப்பெரிய கேள்வி ஆக்கிரமிக்க அதன் போக்கிலேயே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சின்ன சின்ன ஆசைகள் மேல் மனம் ஈடுபட ஆரம்பித்தது. இனிப்பு தின்பது. குட்டி குழந்தைகளுடன் விளையாடுவது, தெருவை வேடிக்கை பார்ப்பது, கார்ட்டூன் சேனல் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது, மீண்டும் மழையில் நனைவது!!!!!

எனது கடைசி நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை உணர ஆரம்பித்தேன். முன்பு போல் இல்லை. என் உடல் இவ்வளவு சோர்வடையும் என்று எதிர்பார்க்கவே இல்லை. வாழ்க்கை தோல்வியை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது என்பதை இப்பொழுது தெளிவாக உணர முடிகிறது. எதற்காக இவ்வளவு அர்த்தமில்லாத் போட்டிகள் என்று விந்தையாகவும் உள்ளது. பிறப்பின அர்த்தமும் புரியவில்லை. இப்பொழுதைய புரியாத்தனத்திலிருந்துதான் இவ்வளவுநாள் புரிதலின் முட்டாள் தனம் புரிகிறது. வாழ்க்கையின் நிலையற்ற தன்மை எதையுமே உணர்த்தப்போவதில்லை என்றாலும். நிலையற்ற வாழ்க்கையை உணராமல் சாக முடியாது. மொத்தமாக அதனிடம் சரணடையத்தான் வேண்டும். எப்பேர்பட்டவனாக இருந்;தாலும். இதில் கெஞ்ச முடியாது. மிரட்ட முடியாது, ஏமாற்ற முடியாது, தப்பிக்க வழியே இல்லை, அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.

அன்று படுக்கையில் தளர்வாய் படுத்திருந்தேன். என் நிமிடங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. ஏனோ என்னைச் சுற்றி அழுது கொண்டிருக்கும் சூழ்நிலை எனக்குப் பிடிக்க வில்லை. என்னை காற்றோட்டமாக ஜன்னலோரத்தில் கிடத்தும் படி சைகையில் கூறினேன். யாரோ என் நிலைமையை புரிந்து கொண்டு என்னை தனிமையில் விடும் படி கூறி கூட்டத்தை கலைத்தார். ஜன்னலின் வழியாக பொய்து கொண்டிருந்த மழையை ரசித்துக் கொண்டிருந்தேன். சாரல் ஜன்னல் வழியாக என்னை ஸ்பரிசித்தது. எனக்குள் இன்னும் உயிர்ப்பு இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. அந்த கடைசித்துளி என் தோலை ஸ்பரிசித்த போது என் நினைவு தப்பியது.














Back to top Go down
 
~~ Tamil Story ~~ மழை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Tamil story
» ~~ Tamil Story ~~ படுக்கையறைக்கொலை - 3
» ~~ Tamil Story ~~ எனக்குப்பின்தான் நீ
»  ~~ Tamil Story ~~ டி.என்.ஏ
» ~~ Tamil Story ~ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: