BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி  Button10

 

 விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி

Go down 
2 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி  Empty
PostSubject: விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி    விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி  Icon_minitimeWed Apr 13, 2011 3:01 pm

முற்றல் முருங்கைக்காய் வடை

தேவையானவை: முற்றிய முருங்கைக்காய் – 10, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம் – தலா அரை கப், சோம்புத்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் – 2, இஞ்சி விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், அரிசி மாவு, நறுக்கிய பூண்டு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக்காய் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியதும், சதையை வழித்தெடுத்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல், அரைக்கவும். கடலைப்பருப்பை ஊற வைத்து, மசால் வடை பதத்தில் அரைக்கவும். இதனுடன் முருங்கை விழுது, (எண்ணெய் நீங்கலாக) மற்ற எல்லாவற்றையும் கலந்து சிறு வடைகளாகத் தட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடைகளைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

வெண்டைக்காய் காம்பு தோசை

தேவையானவை: வெண்டைக்காய் காம்பு, இட்லி அரிசி – தலா 2 கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – அரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியுடன் உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவிடவும். இதனுடன் நன்றாக சுத்தம் செய்த வெண்டைக்காய் காம்புகளைச் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் அரைக்கவும். பிறகு, உப்பு போட்டுக் கலக்கி, ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயத்தை எண்ணெயில் லேசாக வதக்கி மாவில் கலந்து, தோசைகளாகச் சுட்டெடுக்கவும்.

தர்பூசணிப் பட்டை வற்றல்

தேவையானவை: தர்பூசணி மேல் தோலை நீக்கி, உட்புற வெள்ளைப் பட்டை, கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணியில் பிங்க் நிறத்தில் இருக்கும் சதைப்பகுதியை கத்தியால் வெட்டி தனியாக எடுத்து சாப்பிடவோ… ஜூஸ் செய்யவோ பயன்படுத்தலாம். வெள்ளையாக இருக்கும் சதைப் பகுதியின் மேல் தோலை நீக்கி, இரண்டு அங்குல நீளமுள்ள துண்டுகளாக நறுக்கி, கொதிநீரில் 10 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து, வெயிலில் உலர்த்தி, நன்றாகக் காய்ந்ததும் பாட்டிலில் சேமிக்கவும். தேவைப்படும்போது, எண்ணெயில் பொரித்துச் சாப்பிடலாம். மிகுந்த சுவையுடன் இருக்கும்.

தர்பூசணிப் பட்டை கூட்டு

தேவையானவை: தர்பூசணி உட்புற வெள்ளைப் பட்டை (நறுக்கியது) – ஒரு கப், சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு, நறுக்கிய வெங்காயம் – தலா அரை கப், தேங்காய் துருவல், கேரட் துண்டுகள் – தலா கால் கப், தக்காளி – 3, சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன், மாங்காய் துண்டுகள் – அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணியின் உட்புறம் வெள்ளையாக இருக்கும் சதைப் பகுதியை நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு… சாம்பார் பொடி, மாங்காய், கேரட், வெங்காயம், தக்காளி, உப்பு போட்டு, தர்பூசணி பட்டையை சேர்த்து வேகவிடவும். துவரம்பருப்பு, தேங்காய் துருவல், சோம்புத்தூள் போட்டு கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.

முள்ளங்கி இலை கூட்டு

தேவையானவை: நறுக்கிய முள்ளங்கி இலை – 2 கப், வேக வைத்த துவரம்பருப்பு, தேங்காய் துருவல் – கால் கப், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி – தலா அரை கப், கீறிய பச்சை மிளகாய் – 2, கேரட் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், வடகம், பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கி இலையைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கடாயில் போட்டுச் சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் கேரட் துருவல், உப்பு, தேங்காய் துருவல், வேக வைத்த பருப்பு எல்லாவற்றையும் போட்டுக் கலந்து, கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடகத்தைப் போட்டு பொரித்து, பெருங்காயம் சேர்த்துத் தாளித்துக் கொட்டி இறக்கவும். விருப்பப்பட்டால் கைப்பிடி வறுத்த வேர்க்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்க்கலாம். சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.

புடலங்காய் குடல் சட்னி

தேவையானவை: புடலங்காய் குடல் (விதையுடன் உள்ள நடுப்பகுதி) – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை – சிறிதளவு, வறுத்த எள் – ஒரு டேபிள்ஸ்பூன், புளி – கொட்டைப்பாக்கு அளவு, தக்காளி – 1 (நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு… காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். எள்ளை வெறும் கடாயில் பொரிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, புடலங்காய் நடுப்பகுதியை போட்டு வதக்கி, தக்காளி சேர்த்துப் புரட்டவும். பச்சை வாசனை போனதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.

எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டிக் கலக்கவும்.

பீட்ரூட் தோல் உசிலி

தேவையானவை: சிறிது சதையுடன் சீவிய பீட்ரூட் தோல் துண்டுகள் – 2 கப், கடலைப்பருப்பு – கால் கப், நறுக்கிய வெங்காயம் – அரை கப், கீறிய பச்சை மிளகாய் – 3, கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் கடலைப்பருப்பை போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்து, மிக்ஸியில் உதிர் உதிராகப் பொடிக்கவும். பீட்ரூட் தோலை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் இருபது நிமிடம் போட்டு, மறுபடி புது தண்ணீரில் நன்றாக கழுவி, உப்பு சேர்த்த தண்ணீரில் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கேரட் துருவலையும் சேர்த்து வதக்கவும். உதிர்த்த கடலைப் பருப்பைப் போட்டுக் கிளறி, வெந்த பீட்ரூட் தோல் துண்டுகளை சேர்த்துக் கிளறவும். எல்லாம் கலந்து உதிர் உதிராக வந்ததும் கொத்தமல்லித்தழை கலந்து இறக்கவும்.

சுரைக்காய் பஞ்சு, விதை துவையல்

தேவையானவை: சுரைக்காயின் விதையுடன்கூடிய நடுப்பகுதி – ஒரு கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – 1 (பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை தனித்தனியே சிவக்க வறுக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, சுரைக்காய் நடுப்பகுதியைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்துப் புரட்டவும். இதனுடன் வறுத்த பருப்புகள், காய்ந்த மிளகாய், புளி, தக்காளி, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டுத் தேவையான தண்ணீர் தெளித்து கரகரப்பாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். சட்னியாக வேண்டுமானால்… மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

சௌசௌ தோல் சட்னி

தேவையானவை: ஓரளவு சதையுடன் தடிமனாக சீவிய சௌசௌ தோல் துண்டுகள் – ஒரு கப், தேங்காய் துருவல் – 2 டேபிஸ்ஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்கு அளவு, தக்காளி – 1 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு.

செய்முறை: சௌசௌ தோலை நன்றாகச் சுத்தம் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு… காய்ந்த மிளகாய், பருப்பு வகைகளைத் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சௌசௌ தோல், கொத்தமல்லித் தழை, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி… புளி, தேங்காய் துருவல் மற்றும் வறுத்து வைத்துள்ளவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டிக் கலக்கவும்.

முருங்கைப்பூ மசாலா கிரேவி

தேவையானவை: முருங்கைப்பூ – ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் – 2, கரம் மசாலாத்தூள், சாம்பார் பொடி – தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை – கால் கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு – 2, ஃபிரெஷ் க்ரீம், புதினா, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முருங்கைப்பூவை கல், மண் நீக்கி, சுத்தமாகக் கழுவவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து… புதினா, பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, முருங்கைக்கீரை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். கரம் மசாலாத்தூள், சாம்பார் பொடி சேர்த்துக் கலந்து… முருங்கைப்பூ, உப்பு போட்டு, வெந்ததும் க்ரீம் சேர்க்கவும். தளதளவென கொதித்ததும் இறக்கவும்.

வேப்பம்பூ வற்றல்

தேவையானவை: வேப்பம்பூ – 2 கப், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், புளி பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள் – ஒரு டேபிஸ்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேப்பம்பூவை நன்றாகக் கழுவிப் பிழிந்து, மற்ற பொருட்களுடன் சேர்த்துப் பிசிறி, இரவு முழுவதும் வைத்திருக்கவும். மறுநாள் நன்றாகக் காயும் வரை வெயிலில் உலர்த்தி எடுத்து, பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். தேவைப்படும்போது, இதை ரசத்தில் சிறிது போடலாம். வறுத்துச் சாப்பிடலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

ஆரோக்கியத்துக்கு உகந்த வற்றல் இது.

மா பருப்பு புளிக்குழம்பு

தேவையானவை: மாங்கொட்டையினுள் இருக்கும் பருப்பு – 2, புளி – எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், பூண்டு பல் – 20, வெல்லத்தூள் – சிறிதளவு, எண்ணெய், வடகம், சுண்டைக்காய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பூச்சி அரிக்காத மாங்கொட்டையை உடைத்து, உள்ளே உள்ள பருப்பை நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறி வெயிலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். புளியைத் தண்ணீர் விட்டுக் கரைத்து… உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… வடகம், சுண்டைக்காய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய மா பருப்பையும் இதனுடன் சேர்த்து வதக்கி, புளிக் கரைசலை ஊற்றி, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, மூடி போட்டுக் கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியாக வந்ததும், வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.

வயிற்று உபாதைகளுக்கு மா பருப்பு நல்ல மருந்து.

வாழைக்காய் தோல் ஸ்டார் ஃப்ரை

தேவையானவை: வாழைக்காய்த் தோல் துண்டுகள் (முழு வாழைக்காயை நன்றாகக் கழுவி, முழுசாக வேக வைத்து, சிறிது சதையுடன் தோல் சீவிய துண்டுகள்) – ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு – 2. நறுக்கிய வெங்காயம் – கால் கப், மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி விழுது, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், பூண்டு பல் – 8, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேக வைத்த உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் வாழைக்காய் தோல் துண்டுகளை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி… மிளகாய்த்தூள், தனியாத்தூள், இஞ்சி விழுது, பூண்டு சேர்த்துப் புரட்டவும். பிசிறி வைத்திருக்கும் வாழைத் தோல், உருளைத் துண்டுகளை இதில் போட்டு வதக்கவும். சிறிது சிறிதாக எண்ணெய் சேர்த்து ரோஸ்ட் ஆகும்வரை வறுக்கவும். மொறுமொறுப்பாக வந்ததும், கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.

வாழைப்பூ மடல் கூட்டு

தேவையானவை: வாழை மடல் துண்டுகள் (வாழைப்பூவின் உள்ளே வெள்ளையாக உள்ள மடலை நறுக்கிய துண்டுகள்) – ஒரு கப், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, குட்டி மாங்காய் துண்டுகள் தலா – அரை கப், சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு, தேங்காய் துருவல் – தலா கால் கப், ஆம்சூர் பொடி, வெல்லத்தூள் – தலா டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, நீர் மோர் – சிறிதளவு, வடகம், பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூ மடலை நறுக்கியவுடன் நீர்மோரில் போடவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய வாழைப்பூ மடலை பிழிந்து போட்டு, உப்பு, சாம்பார் பொடி, வெங்காயம், தக்காளி, மாங்காய் சேர்த்துக் கலந்து, மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும், தேங்காய் துருவல், வேக வைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு… வடகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி… ஆம்சூர் பொடி, வெல்லத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து இறக்கவும்.

உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த கூட்டு இது.

முருங்கை காம்பு சூப்

தேவையானவை: முருங்கைக்கீரை உருவிய பிறகு உள்ள காம்பு, கறிவேப்பிலை உருவிய பிறகு உள்ள காம்பு – தலா 100 கிராம், சுண்டைக்காய் – கால் கப், நறுக்கிய சின்ன வெங்காயம் – 6, எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: காம்புகளை நன்றாகக் கழுவி துண்டுகளாக நறுக்கவும். சுண்டைக்காயைத் தட்டி, உடைத்து கடாயில் போட்டு, வெங்காயம் சேர்த்துப் புரட்டி… மஞ்சள்தூள், காம்புகளைப் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். சுண்டைக்காய் வெந்ததும் கடைந்து, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

இதைச் சாப்பிட்டால் வயிற்றில் பூச்சித் தொல்லை இருக்காது.

காய்கறி தோல் சூப்

தேவையானவை: சிறிது சதையுடன்கூடிய கேரட், பீட்ரூட், மாங்காய், உருளைக்கிழங்கின் தோல் துண்டுகள் – தலா அரை கப், காய்கள் வேக வைத்த தண்ணீர் – ஒரு கப், கீறிய பச்சை மிளகாய் – 1, சோள மாவு, எலுமிச்சைச் சாறு, ஃப்ரெஷ் க்ரீம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறி தோல்களை வெந்நீரில் நன்றாகக் கழுவி, கடாயில் போட்டு வதக்கி, தண்ணீர் விட்டு… உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வேக விடவும். இதை மிக்ஸியில் போட்டு விழுதாக்கி, காய்கள் வேக வைத்த நீரை சேர்த்துக் கொதிக்க விடவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து, கொதிக்கும் காய்கறி தோல் கலவையில் சேர்த்துக் கலக்கி, ஃப்ரெஷ் க்ரீம், மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கி இறக்கவும்.

விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த பிரெட் துண்டுகளைப் போடலாம்.

கேரட் தோல் ரொட்டி

தேவையானவை: நறுக்கிய கேரட் தோல், அரிசி மாவு – தலா ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை நன்கு சுத்தம் செய்து, தோலை சற்று தடிமனாக சீவிக் கொள்ளவும். மிக்ஸியில் போட்டு உதிர் உதிராக வரும்வரை அடிக்கவும். இதனுடன், எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லா பொருட்களையும் கலந்து, சுடுநீர் ஊற்றி, ரொட்டி தட்டுவதற்கேற்ப முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும். இதிலிருந்து சிறிது மாவை எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து, கனமான ரொட்டியாகத் தட்டி, காயும் தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு முறுகலாகச் சுட்டெடுக்கவும்.

புதினா சட்னி, தேங்காய் சட்னி இதற்கேற்ற சைட்டிஷ்!

நாரத்தங்காய் தோல் பச்சடி

தேவையானவை: நறுக்கிய நாரத்தங்காய் தோல் – 2 கப், கீறிய பச்சை மிளகாய் – 4, பொடித்த வெல்லம் – அரை கப், புளி பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நாரத்தங்காய் தோலைக் கொதி நீரில் போட்டுப் பத்து நிமிடம் மூடி வைத்தால், நிறம் மாறி கசப்புத் தன்மை போய்விடும். பிறகு, தோலை சதுரத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் மூன்று கப் தண்ணீர் விட்டு, நாரத்தங்காய் தோல், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து, மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் புளி பேஸ்ட், வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, நாரத்தங்காய் கலவையில் கொட்டி இறக்கி, ஆறியதும் பாட்டிலில் சேமித்துப் பயன்படுத்தவும்.

ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். எந்த சாதத்துக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

வாழைக்காய் தோல் சட்னி

தேவையானவை: வாழைக்காய் தோல் துண்டுகள் (சிறிது சதையுடன் இருப்பது போன்று சீவிக் கொள்ளவும்) – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்கு அளவு, உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: வாழைக்காய் தோலை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து நறுக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, உளுத்தம்பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். அதே கடாயில் வாழைக்காய் தோல் துண்டுகளையும் லேசாக வதக்கி, புளி, இஞ்சி, உப்பு, வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு, கரகரப்பாக அரைக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டிக் கலக்கி பயன்படுத்தவும்.

பீர்க்கங்காய் தோல் துவையல்

தேவையானவை: நறுக்கிய பீர்க்கங்காய் தோல் – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், புளி – கொட்டைப்பாக்கு அளவு, காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பீர்க்கங்காய் தோலை வெந்நீரில் சுத்தமாக அலசிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் பீர்க்கங்காய் தோலை போட்டு வதக்கி, மற்ற பொருட்களுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

பப்பாளித் தோல் ஜாம்

தேவையானவை: பப்பாளித் தோல் துண்டுகள் – 2 கப், பப்பாளிப் பழ விழுது – அரை கப், சர்க்கரை – ஒன்றரை கப், சிட்ரிக் ஆசிட் – ஒரு டீஸ்பூன், ராஸ்பெரிஸ் ரெட் கலர் – அரை டீஸ்பூன், பைனாப்பிள் எசன்ஸ் – 3 டீஸ்பூன்.

செய்முறை: பப்பாளித் தோலை நன்றாக சுத்தம் செய்து, பழ விழுதுடன் சேர்த்து வேக வைத்து அரைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். இந்த விழுதில் சர்க்கரை சேர்த்து, வாய் அகன்ற குழிவான கடாயில் போட்டு, கைவிடாமல் கிளறவும். ஜாம் பதம் வந்ததும் சிட்ரிக் ஆசிட் கலந்து, ஐந்து நிமிடம் கிளறவும். ஒரு தட்டில் ஜாமைப் போட்டால், தண்ணீர் பிரிந்து வராமல் இருந்தால் அது சரியான பதம். கலர், எசன்ஸ் கலந்து உடனே இறக்கவும்.

பாட்டிலை மரப் பலகையின் மேல் வைத்து ஜாமை பாட்டிலில் சேமிக்கவும். ஜாமை முழுவதும் நிரப்பக்கூடாது. ஆறியதும் மூடி வைக்கவும்.

பப்பாளித் தோல் அசோகா

தேவையானவை: சிறிது சதையோடு நறுக்கிய பப்பாளிப் பழத் தோல் துண்டுகள் – 2 கப், இனிப்பில்லாத கோவா – 2 டேபிள்ஸ்பூன், வெந்த பாசிப்பருப்பு – அரை கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு – தலா 20 கிராம்.

செய்முறை: பப்பாளிப் பழத்தோலை நன்றாக சுத்தம் செய்து, குக்கர் தட்டில் வைத்து தண்ணீர் தெளித்து, 10 நிமிடம் வேகவிடவும். இதை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை கடாயில் போட்டு, கோவா, பாசிப்பருப்பு, பாதி அளவு நெய், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கடாயில் ஒட்டாமல் சுருண்டு வந்ததும் ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதேபோல் மாம்பழத்தோலிலும் செய்யலாம்.

ஆரஞ்சுத் தோல் டூட்டி ஃப்ரூட்டி

தேவையானவை: நன்றாகக் கழுவி, மெல்லிய சிறு துண்டுகளாக்கிய ஆரஞ்சுப்பழத் தோல் – 2 கப், சர்க்கரை – கால் கப், பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற ஃபுட் கலர் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: ஒரு வாய் அகன்ற பாட்டிலில் ஒரு அடுக்கு சர்க்கரை, ஒரு அடுக்கு தோல் துண்டுகள் என மாற்றி மாற்றி போட்டு மெல்லிய வெள்ளைத் துணியால் பாட்டிலை மூடி ஒருநாள் முழுவதும் வைக்கவும். மறுநாள் காலை பஞ்சு போல் இளகியிருக்கும். சர்க்கரையும் சிரப் போல கரைந்திருக்கும். தோலை தனியே எடுத்து விட்டு, சிரப்பை அடுப்பில் கொதிக்கவிட்டு இறக்கி, பழத் தோல் துண்டுகளைச் சேர்த்துக் குலுக்கவும். ஊறியதும், மறுபடியும் துண்டுகளை தனியே எடுத்து காயவிடவும். தொடர்ந்து மூன்று நாள் இதுபோல் செய்து, சிரப் வற்றி லேசான ஈரம் இருக்கும்போதே மூன்றாகப் பிரித்து பச்சை, சிவப்பு, மஞ்சள் ஃபுட் கலரைப் போட்டுப் பிசிறி காயவிடவும். உலர்ந்தபின் பாட்டிலில் போட்டு மூடிவைத்துக் கொள்ளவும்.

கலர்ஃபுல் டூட்டி ஃப்ரூட்டி ரெடி!

எலுமிச்சம்பழத் தோல் ஊறுகாய்

தேவையானவை: எலுமிச்சைத் தோல் – 20, காய்ந்த மிளகாய் – 50 கிராம், கட்டிப் பெருங்காயம் – ஒரு துண்டு, கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், வெல்லம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முந்தைய நாளே, எலுமிச்சைத் தோலில் உப்பு, மஞ்சள் சேர்த்துப் பிசிறி மூடி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை தனித்தனியே போட்டு வாசம் வரை வறுத்துப் பொடிக்கவும். மறுநாள் ஊறிய எலுமிச்சைத் தோலை சிறு துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, எலுமிச்சைத் தோல் துண்டுகளைப் போட்டு வதக்கி, பொடித்தவற்றையும் சேர்த்துக் கிளறவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். தோல் நன்றாக வெந்து, கையால் கிள்ளுகிற பதம் வந்ததும், வெல்லம் சேர்த்து இறக்கி, ஆற வைத்து, பாட்டிலில் சேமித்து பயன்படுத்தவும்.

பரங்கி பஞ்சு லட்டு

தேவையானவை: விதைகள் நீக்கப்பட்ட பரங்கிக்காயின் பஞ்சு போன்ற நடுப்பகுதி – ஒரு கப், தேங்காய் விழுது, பாசிப்பருப்பு – தலா கால் கப், பொடித்த வெல்லம் – அரை கப், நெய், பால் பவுடர் தலா – 2 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன், வறுத்த முந்திரித் துருவல் – தேவையான அளவு, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பரங்கி பஞ்சு பகுதியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். பாசிப்பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும். கடாயில் கால் கப் தண்ணீர் விட்டு, வெல்லத்தை சேர்க்கவும். அது கரைந்ததும், பரங்கி விழுது, பாசிப்பருப்பு பொடி சேர்த்துக் கிளறவும். இவை நன்றாக சேர்ந்து வந்ததும், பால் பவுடர், தேங்காய் விழுது, நெய் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வெந்து வந்ததும், எசன்ஸ் சேர்த்து இறக்கவும். லேசாக ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி, முந்திரித் துருவலில் புரட்டி எடுக்கவும்.

பீட்ரூட் தோல் ஜாம்

தேவையானவை: நன்றாகக் கழுவி நறுக்கப்பட்ட பீட்ரூட் தோல் துண்டுகள் – 2 கப், நறுக்கிய பீட்ரூட் – கால் கப், சர்க்கரை – ஒரு கப், வறுத்த முந்திரி, திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பீட்ரூட் தோலை வெதுவெதுப்பான நீரில் போட்டு, உப்பு சேர்த்து, பதினைந்து நிமிடம் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து புதிய தண்ணீரில் நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, பீட்ரூட் சேர்த்து குக்கர் தட்டில் வைத்து, சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். மூன்று விசில் வந்ததும் இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் சர்க்கரை, உப்பு கலந்து, ஒரு கடாயில் போட்டு, அடுப்பில் வைத்து, கைபடாமல் கிளறவும். தளதளவென்று ஜாம் போல் வந்ததும், நெய், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

சப்பாத்தி, தோசை, சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். ரத்த சோகையைத் தடுக்கும்.

பரங்கி விதை பாயசம்

தேவையானவை: காய வைத்து உரித்த பரங்கி விதை – ஒரு கப், கசகசா – 3 டேபிள்ஸ்பூன், பால் – சிறிதளவு, தேங்காய்ப்பால் – 3 கப் (முழு தேங்காயை அரைத்து முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் எடுத்து தனித்தனியே 3 கப்களில் வைக்கவும்), சர்க்கரை – கால் கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு – தலா 20 கிராம், ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்.

செய்முறை: கசகசாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து, பாலில் ஊற வைத்து, விழுதாக அரைக்கவும். பரங்கி விதைகளைக் காய வைத்து உரித்து (பெரிய கடைகளில் பாலிஷ் செய்து ரெடிமேடாகவும் கிடைக்கும்), சிறிது பாலை விட்டு விழுதாக அரைக்கவும். தேங்காயின் மூன்றாம் பாலை ஒரு கடாயில் ஊற்றி… அரைத்த கசகசா, பரங்கி விதை விழுதுகளைப் போட்டுக் கை விடாமல் கலக்கி, இரண்டாம் பாலையும் சேர்க்கவும். தேவையானால் வெந்நீர் சேர்க்கலாம். நன்றாகக் கொதித்ததும், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு, முதல் பாலைச் சேர்த்து கிளறி, எசன்ஸ் போட்டு இறக்கவும். முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு ஆகியவற்றை நெய்யில் வறுத்துக் கொட்டவும்.

கேரட் தோல் கீர்

தேவையானவை: கேரட் தோல் துண்டுகள் – ஒரு கப், பால் – 2 டம்ளர், பாதாம் மிக்ஸ் – அரை கப், சர்க்கரை – கால் கப், நெய் – 2 டீஸ்பூன், முந்திரி, திராட்சை – தலா 30 கிராம்.

செய்முறை: கேரட்டை நன்றாக சுத்தம் செய்து, அதன் தோலை சீவி எடுக்கவும். உப்பு கரைத்த வெந்நீரில் அதை ஊற வைத்து, கழுவி நறுக்கவும். கடாயில் சிறிது பால் ஊற்றி, கேரட் தோலை அதில் வேக வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேறு கடாயில் மீதமுள்ள பாலை ஊற்றி, கேரட் தோல் விழுதைச் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் பாதாம் மிக்ஸை கரைத்து ஊற்றி, சர்க்கரை சேர்த்து, கொதித்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால் பாதாம் எசன்ஸ் சில சொட்டுகள் சேர்க்கலாம்.

பீட்ரூட் தோல் அல்வா

தேவையானவை: பீட்ரூட் தோல் துண்டுகள் – 2 கப், இனிப்பில்லாத கோவா – அரை கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – கால் கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், பாலில் கரைத்த குங்குமப்பூ – தலா அரை டீஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு – தலா 20 கிராம்.

செய்முறை: பீட்ரூட் தோலை வெதுவெதுப்பான நீரில் போட்டு பதினைந்து நிமிடம் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து, புதிய தண்ணீரில் நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, குக்கர் தட்டில் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். மூன்று விசில் வந்ததும், இறக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கடாயில் போட்டுக் கிளறவும். நீர் வற்றியதும், பாதி அளவு நெய் விட்டு கோவாவை உதிர்த்துச் சேர்த்துக் கிளறவும். கடாயில் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதம் வந்ததும்… ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து, பாலில் கரைத்த குங்குமப்பூவைக் கலந்து இறக்கவும். வறுத்த முந்திரி, திரட்சை, சாரைப்பருப்பை போட்டு, மீதமுள்ள நெய்யை விட்டு கலக்கவும்.

நெல்லிக்கொட்டை டீ

தேவையானவை: நெல்லிக்கொட்டை – அரை கப், புதினா, துளசி இலை – தலா 15, கருப்பட்டி – தேவையான அளவு, சுக்கு – சிறு துண்டு.

செய்முறை: நெல்லிக்கொட்டைகளை நன்றாக உடைத்துக் கொள்ளவும். கடாயில் இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி நெல்லிக்கொட்டைகளைப் போட்டு கொதிக்கவிடவும். சுக்கை தட்டிப் போட்டு, துளசி இலை, புதினா, கருப்பட்டி சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி வெதுவெதுப்பாக அருந்தவும்.

இந்த டீ, மழை காலத்தில் அருந்த சூப்பராக இருக்கும். சளி, இருமல் வராமலும் தடுக்கும்.
Back to top Go down
Thamizhan




Posts : 6
Points : 11
Join date : 2011-04-28

விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி  Empty
PostSubject: Re: விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி    விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி  Icon_minitimeThu Apr 28, 2011 9:09 pm

Ithelaam Ezhuthi podureengalay thavira.. yaarum avanga avanga ootu kaarangaluku samachu podra maathri theriyalai!!! lol
Back to top Go down
 
விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: