BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in-- Tamil Story ~~ களவு  Button10

 

 -- Tamil Story ~~ களவு

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

-- Tamil Story ~~ களவு  Empty
PostSubject: -- Tamil Story ~~ களவு    -- Tamil Story ~~ களவு  Icon_minitimeFri Apr 15, 2011 3:28 am

-- Tamil Story ~~ களவு



சுமார் பத்து ஆண்டுக்கு முன் வாடகை வீட்டில் இருந்தபோது ராசாத்தி பழக்கமானாள். பக்கத்து வீட்டுக்கு வேலை செய்ய வருவாள். தினமும் வேலைகளை முடித்துவிட்டு திரும்புகையில் எங்கள் வீட்டுக்கு வராமல் இருக்கமாட்டாள். வரும்போது நான் செய்துகொண்டிருக்கும் வேலையை அவளும் சேர்ந்து செய்வாள். இவ்வளவுக்கும் நான் ஏதும் பணம் கொடுத்தால் மறுத்து விடுவாள். நான் கொடுக்கும் சாப்பாட்டை மட்டும் ஏற்றுக்கொள்வாள். பழசாகிப்போன என்னுடைய புடவைகளை அவளுக்குக் கொடுப்பேன். அதனைப் பெற்றுக்கொள்வாள். வீட்டு வேலை செய்தது போக மிஞ்சும் நேரங்களில் அவள் அம்மி கொத்தப் போவாள்.

புதுவீடு கட்டிக்கொண்டு இங்கு வந்தபின்னர் தினமும் அவளைப் பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை திடீரென வந்து நிற்பாள். கடந்த ஒரு வருடமாக அவளைக் காணமுடியவில்லை. எங்கோ வெளியூருக்கு குடிபெயர்ந்திருக்கக் கூடுமென நினைத்துக் கொண்டேன். ஒருநாள் அழைப்பு மணி ஒளிப்பதைக் கேட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். ராசாத்தி நின்றுகொண்டிருந்தாள். கதவைத் திறந்தேன். சிரித்துக் கொண்டு வந்து வாசற்படிக்கு அருகில் உட்கார்ந்தாள்.

“என்னடீ ராஜாத்தி?... ரொம்ப நாளா ஆளைப் பாக்க முடியலே.”

“ஆமாக்கா. ஊருக்குப் போயி இருந்தேன்.” என்றாள்.

“சொல்லாமே கொள்ளாமே பொறப்பட்டு பொயிட்டியே. என்னாடீ அப்படி அவசரம்.”

“எங்க அம்மாயி செத்துப் பொச்சுன்னு சேதி வந்துச்சுக்கா. ஏன்னோட மகளையும் அழைச்சுக்கிட்டு ஊருக்குப் போனேன். அங்கேயே தங்கிட்டேன்.”

“ஒன்னோட மகள் எங்கேடீ?.... நல்லா இருக்காளா?”

“திண்டுக்கல்லே ஏதோ ஒரு கம்பேனியிலே வந்து பொம்புளெ புள்ளைங்களே வேலைக்கி அழைச்சுக் கிட்டு போனாங்க. நானும் அனுப்பிட்டேன்க்கா.”

“வயசுக்கு வந்த பொன்னாச்சே நீ பாட்டுக்கும் விட்டுப் புட்டியே பாதுகாப்பா இருப்பாளா?”

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லேன்னு சொன்னாங்கக்கா. எங்க ஊருலே இருந்து மட்டும் பத்து புள்ளைங்க போயி இருக்குக்கா.”

“சாப்பாடு தங்குற எடம் சம்பளமெல்லாம் உண்டுல்லே?” நான் கேட்டேன்.

“தங்க எடம் கொடுத்து சாப்பாடு போட்டு அஞ்சு வருஷங்கழிச்சு முப்பதஞ்சாயிரம் பணம் தர்ரதாச் சொல்லி இருக்காங்க. சும்மா இருந்தா என்னா பண்ணமுடியும்? அவளுக்கு கல்யாணம் பண்ண அந்தப் பணம் ஒதவுமில்லே.”

“ஓம் புருஷன் ஓன்னே விட்டுட்டுப் போயி பத்து வருஷம் இருக்குமா?”

“வருற வைகாசி வந்தா பன்னண்டு வருஷமாச்சுக்கா. எம்மவளுக்கு அஞ்சு வயசுலே வீட்டை விட்டு போன ஆளுதான். அப்பறம் எங்கே போனாங்க என்னா ஆனாங்கன்னு யாரு கண்டாங்க.”

“அதை விட்டுத் தள்ளு. பழசை நெனச்சு பலன் எதுவும் வரப்போவதில்லே. என்ன வேலை செஞ்சுகிட்டு இருக்குறே?”

“அம்மி கொத்துற வேலைக நாலஞ்சு வருஷமா கொஞ்சங் கொஞ்சமா கொறைஞ்சு கிட்டு வந்து இப்ப இல்லேன்னு சொல்றாப்லே ஆயிட்டு. வீட்டுவேலைகதான் பாத்து கிட்டு இருக்குறேன்.”

மிக்சி, கிரைண்டர் வருகைக்குப் பின் அம்மி கொத்தும் அவசியம் இல்லாமல் போய்விட்டதல்லவா? கிராமங்களில் கூட அம்மிகள் அப்புறப்படுத்தப்பட்டு கொல்லைப் பக்கம் குப்புறக் கிடப்பதைப் பார்க்க முடிகிறது.

“உங்க மகளுக்கு கல்யாணம் எப்பக்கா?” ராசாத்தி கேட்டாள்.

“மூணுமாசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆயிடுச்சுடீ. நீ ஊருலே இல்லாததால் ஒனக்கு தெரியாமலே போச்சுடீ.”

“அப்புடியா? நான் ஊருலே இருந்திருந்தா எனக்கு ஒரு சேலை கெடச்சிருக்குமே! எனக்கு தெரியாமே போயிடுச்சே.” ஆதங்கப்பட்டாள்.

“ராசாத்தி கவலைப்படாதே. இப்போ எடுத்துக் கொடுத்துட்டா சரியாப் போவுது.”

“நீங்க தருவீங்கங்கிறது எனக்கு நல்லாத் தெரியும். கல்யாண சமயத்துலே ஒதவியா இல்லாமே போனது எனக்கு வருத்தமா இருக்குக்கா.”

“அது முடிஞ்சு போச்சு... அதை விடு. மாதா மாதம் மொத வாரத்துலே ஒனக்கு நேரம் கெடக்கிறப்போ வீட்டுக்கு வந்துடு. தரையை தொடச்சு கழுவி விட்டுறலாம்.”

“சரிக்கா.... கட்டாயமா வந்துடுறேன்” என்றாள்.

மாதம் தவறாமல் ராசாத்தி முதல் வாரத்தில் வந்துவிடுவாள். வீட்டை தண்ணிர்விட்டு சுத்தம் செய்வாள். ஐம்பது ரூபாய் தாள் ஒன்றைத் தந்தபோது, “எதுக்குக்கா இவ்வளவு?” என்பாள். “பரவாயில்லை. வச்சுக்கோ.” என்பேன். மிகவும் மகிழ்ந்து போவாள்.

ஒரு நாள் அவள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் கோண்டு வந்திருந்த மஞ்சள் பையிலிருந்து செல்போன் மணி ஒலிப்பதைக் கேட்டேன். “ராசாத்தி ஓன்னோட பையிலே இருந்து செல்போன் அடிக்குதுடீ.” என்றேன். அவளும் பை இருந்த இடத்துக்கு வந்து செல்போனை எடுத்துப் பேசினாள். பேசி முடித்த பின்னர் கேட்டேன்,

“ஏதுடீ செல்போன்?”

“நான் வீட்டு வேலை செய்யுற மளிகைக் கடைக்காரங்க எனக்கு வாங்கி குடுத்தாங்க.”

“பரவாயில்லையே! குடு பாக்கலாம்.”

செல்போனைத் தந்தாள். வாங்கிப் பார்த்தேன். பழையசாக இருந்தது. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் வந்த மாடல் செல்போன். அந்தக் காலத்தில் வாங்கி பயன்படுத்தி விட்டு தற்சமயம் இவளிடம் கொடுத்திருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.

“அவுங்க வீட்டுலே சும்மா கெடந்ததை சிம்கார்டு போட்டு கொடுத்து இருக்காங்களா?” நான் கேட்டேன்.

“இல்லேக்கா. கடையிலே ஆயிரம் ரூபாய்க்கி வாங்கியாந்ததா சொன்னாங்க.” என்றதுடன், “எனக்கு தர்ற சம்பளத்திலே மாதம் நூறு ரூபாயை பத்து மாசத்துக்கு புடிச்சுக்கிடுறதாச் சொன்னாங்க. நானும் சரின்னுட்டேன்.”

“சரிடீ. நீ யாருகிட்டே போன் பேசப் போறே?”

“நான் யாருகிட்டே பேசுறது. நான் வேலை செய்யுற வீடுகள்ளே இருந்து, அவசரமா ஏதும் வேலை இருந்தா கூப்பிடுவாங்க. நானும் போயி செஞ்சு குடுத்துட்டு வருவேன். இப்பக் கூட போலீசுக்காரங்க வீட்டுலே இருந்துதான் கூப்பிட்டாங்க. வர்றப்போ ஒரு கிலோ வெங்காயம் வாங்கிக்கிட்டு வரச்சொன்னாங்க.” என்றாள்.

“அப்படியா!” ஆச்சரியப்பட்டேன்.

“நீங்களும் இந்த நம்பரை குறிச்சுக் கிடுங்கங்கக்கா. எதாச்சும் வேணுமுன்னா கூப்புட்டுக்கிடலாம்.” செல்போன் கிடைத்த பெருமிதத்தோடு சொன்னாள் ராசாத்தி.

“சரி. நோட் பண்ணிக்கிடுறேன்.”

ராசாத்தி போன பிறகு எனக்கு ராசாத்தியின் செல்போன் பற்றிய ஞாபகமாகவே இருந்தது. இன்றைக்கெல்லாம் இந்த மாடல் செல்போனை இனாமாகத் தந்தாலும் யாரும் வாங்கிக் கொள்ளமாட்டார்கள். ராசாத்தியின் வாழ்க்கை, வசதிகளைப் பற்றி தெரிந்திருந்தும் மனதில் எந்தவித நெருடலுமின்றி தள்ளிப்போன சரக்கை தள்ளிவிட்டுள்ளதையும், ஒட்டிக்கு ரெட்டியாய் தவணைமுறையில் வசூலித்துக் கொள்வதையும், வேண்டும் நேரத்தில் அவளைக் கூப்பிட்டுக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டதையும் நினைக்க நினைக்க வியப்பாகவும், வருத்தமாகவும் இருந்தது. இந்த மாதிரியான தந்திரங்களை ராசாத்தியால் எப்படி புரிந்து கொள்ள இயலும்! ஏதேதோ எண்ணங்களால் குழம்பிப் போனேன்

தேர்தல் காலத்தில் ஆசை காட்டுவதை அறிந்து கொள்ளாது, அப்பாவிகள் தந்திர வலைக்குள் தானே போய் விழுந்து சம்மதத்தோடு வாக்கைப் களவு கொடுப்பதைப் போலவே, தினமும் ராசாத்திகள் தங்களது உழைப்பை விருப்பத்தோடு இழந்து கொண்டே இருக்கிறார்கள்.









Back to top Go down
 
-- Tamil Story ~~ களவு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ எனக்குப்பின்தான் நீ
»  ~~ Tamil Story ~~ டி.என்.ஏ
» ~~ Tamil Story ~ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
» ~~ Tamil Story ~~ மரு
» == Tamil Story ~~ பு ற ப் பா டு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: